அமெரிக்காவில் அதிபர் தேர்தல் முடிவடைந்து ஒரு மாத காலம் ஆகிவிட்டது. இன்று வரை அதிபர் ட்ரம்ப் தான் தேர்தலில் தோற்றுவிட்டதை ஒப்புக்கொள்ளவும் இல்லை, தேர்தலில் வெற்றிபெற்ற பைடனை புதிய அதிபராக அவர் அங்கீகரிக்கவும் இல்லை.
நடந்து முடிந்த தேர்தலில் ஏகப்பட்ட முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், பைடன் தரப்பினர் மோசடி செய்து வெற்றி பெற்றிருப்பதாகவும் நீதிமன்றங்களில் வழக்குகளைத் தொடுத்துக் கொண்டிருக்கிறார். போதுமான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பதால் அந்த வழக்குகள் ஒவ்வொன்றாக தள்ளுபடியாகிக் கொண்டிருக்கின்றன. எது எப்படி இருந்தாலும் தற்போதைய நிலவரங்களின் படி டொனால்டு ட்ரம்ப்பின் ஆட்சிக்காலம் ஜனவரி 20, 2021 மதியத்துடன் முடிவடைகிறது.

அமெரிக்க அரசியல் மரபுகளின் படி, தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தன் பதவிக்காலம் முடிவடையும் அதிபர், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரை வாழ்த்தி வெள்ளை மாளிகைக்கு வரவேற்று, அவரிடம் ஆட்சி மற்றும் நிர்வாக பொறுப்புகளை ஒப்படைப்பதற்கான நடைமுறைகளைப் பற்றி ஆலோசிப்பதும், அதற்கான திட்டங்களைப் பற்றி பேசுவதுதான் காலம் காலமாய் இருந்து வரும் மரபு.
ஆனால் தற்போதைய சூழலில் ட்ரம்ப் மாதிரியான ஒரு முரண்டுபிடிக்கும் முரட்டு அரசியல்வாதியிடமிருந்து அத்தனைய நயத்தகு நாகரீகத்தை எதிர்பார்க்க முடியாதுதான். இதை புரிந்து கொண்டதால்தான் என்னவோ பைடன், ட்ரம்ப்பின் அங்கீகாரம் மற்றும் அழைப்பிற்காக காத்திருக்காமல் தனது பதவியேற்புக்கான முன்னேற்பாடுகளை, நியமனங்களைச் செய்து வருகிறார். இதற்கென தனியாக ஒரு அலுவலகமும் அதன் திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை வெளியிட https://buildbackbetter.gov/ என்றொரு இணையதளமும் செயல்பட ஆரம்பித்திருக்கிறது.
பைடன் தேர்தல் பரப்புரையின் போது தனது ஆட்சிக்கான முன்னுரிமை பட்டியலில் நான்கு முக்கிய அம்சங்களை தொடர்ந்து வலியுறுத்தினார். அவை முறையே
- கொரோனா பெருந்தொற்று நோய்கட்டுப்பாடு,
- அதனால் பாதிக்கப்பட்டிருக்கும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது,
- நிற பேதமற்ற சமூக சமத்துவம் மற்றும்
- சுற்றுச்சூழல் மேம்பாடு.
தற்போது தனது புதிய அரசு இந்த நான்கு அம்சங்களில்தான் கூடுதல் கவனமும் அக்கறையும் செலுத்தப் போவதாகவும் அறிவித்திருக்கிறார். அதற்கான திட்டமிடல் மற்றும் ஆலோசனைகள் குறித்து சமூகத்தின் பல்வேறு அங்கத்தினருடன் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கிறது.
இன்னொரு பக்கம் இந்தத் துறைகளை நிர்வகிக்கப் போகும் துறைச் செயலர்களாக யாரை நியமிப்பார் என்பது குறித்த எதிர்பார்ப்புகளும், விவாதங்களும் தேர்தல் முடிவுகள் வெளிவந்த நாளில் இருந்தே ஆரம்பித்துவிட்டன. பல்வேறு நபர்கள் இந்த பதவிகளுக்குத் தகுதியானவர்களாக ஊடகங்கள் பட்டியலிட்டிருந்தன.
இந்த நிலையில் தற்போது பைடன் ஒவ்வொரு துறைக்கான நிர்வாகிகளை அறிவித்து வருகிறார். இந்த அறிவிப்புகள் இரண்டு வகையானவை. முதலாவது வகையில் முக்கியமான துறைகளை நிர்வகிக்க தகுதியானவரை பைடன் வேட்பாளராக அறிவிப்பார். அவர்கள் செனட் முன் நேரில் ஆஜராகி, தங்களை செனட் விசாரணைக்கு உட்படுத்திக் கொண்டு செனட் ஒப்புதலுடன் அந்தப் பதவிக்கு நியமிக்கப்படுவர். மற்றொரு வகையில் புதிய அதிபர் பெரும்பாலான பதவிகளுக்கு நேரடியாகவே நிர்வாகிகளை நியமிப்பார். இதற்கு செனட் ஒப்புதல் தேவையில்லை.
இனி இதுவரை அறிவிக்கப்பட்டிருக்கும் நிர்வாகிகளின் பட்டியலைப் பார்ப்போம்.

அமெரிக்காவின் கருவூலத்துறை மத்திய அரசின் அமைச்சரவைகளுள் மிகவும் முக்கியமானது. அரசாங்க செலவுகள், வரி சேகரிப்புகள், கூட்டாட்சி நிதிகளை நிர்வகித்தல், தேசிய வங்கிகளை மேற்பார்வையிடுதல், பணம் அச்சிடுதல், பொருளாதாரத்தை கணிசமாக பாதிக்கும் பொதுக் கடனை நிர்வகிக்கும் நிதிக் கொள்கைகளை வகுத்தல் உள்ளிட்ட அரசாங்கத்தை இயங்க வைக்க உதவும் முக்கியமான செயல்பாடுகளுக்கு இத்துறையே பொறுப்பாகும். உள்நாட்டு மற்றும் சர்வதேச நிதி, பொருளாதார, வர்த்தகம் மற்றும் வரிக்கொள்கைகள் தொடர்பான பரிந்துரைகளை அதிபருக்கு எடுத்துரைக்கும் முக்கியமான பணியும் கருவூலத்துறைக்கு உள்ளதால் இத்துறையின் செயலர் பதவிக்குப் பொருத்தமானவரை தேர்ந்தெடுப்பதில் அரசும் அதிக கவனம் எடுத்துக் கொள்கிறது. அமெரிக்க அரசாங்கத்தின் நிதி பிரதிநிதியாகவும் பணியாற்றுகிறார் நிதி செயலர். யு.எஸ். நாணயங்கள் மற்றும் நாணய உற்பத்தியை மேற்பார்வையிடுவதும் சந்தைகளுக்கு கிடைக்கக்கூடிய பணத்தின் அளவை நிர்வகிப்பதும் இவருடைய பொறுப்பில் தான் உள்ளது.
இத்தனை முக்கியமான இந்தப் பதவிக்கு அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக ஒரு பெண் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பது கூடுதல் சிறப்பு.

ஜேனட் யெல்லன் 2010 முதல் 2014 வரை ஃபெடரல் ரிசர்வ் துணைத் தலைவராகவும், 2014 முதல் 2018 வரை தலைவராகவும், பணியாற்றியிருக்கிறார். ஃபெடரல் ரிசர்வ் தலைவராக இருந்த முதல் பெண்மணி ஆவார். மத்திய வங்கி மற்றும் கருவூலம் ஆகிய இரண்டிற்கும் தலைமை தாங்கும் இரண்டாவது நபரான 74 வயது யெல்லன், பொருளாதார சமத்துவமின்மை, வேலையின்மையைக் குறைப்பதிலும் பல வருடங்களாக கவனம் செலுத்தி வருகிறார். வரிகளை உயர்த்தி ஓய்வூதிய செலவினங்களைக் குறைப்பதாக கூறியதில் சில முற்போக்குவாதிகளுடனும், வர்த்தகத்திற்கான தடைகளை நீக்குவது குறித்தான இவரது கொள்கைகளால் சில இடதுசாரிகளுடனும் அதிருப்தி உண்டாகலாம். மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறுத்தப்பட வேண்டும் என்று தற்போதைய கருவூலத்துறை செயலர் நுக்கின் கோரிய பல பில்லியன் டாலர் அவசர கடன் திட்டங்களை மீண்டும் செயல்படுத்த ஆவன செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறார்.
புதிய பொருளாதார நிவாரண நிதிக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் குடியரசுக் கட்சியினருடனான பேச்சுவார்த்தையில் இவருடைய பங்கு அதிகம் இருக்கும். உழைக்கும் குடும்பங்களை ஏமாற்றியதற்காக வெல்ஸ் ஃபார்கோ வங்கியை தவறுகளுக்குப் பொறுப்பேற்க வைத்து வால்ஸ்ட்ரீட் வங்கிகளின் முறைகேடுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர். ஃபெடரல் ரிசர்வ் தலைவராக தன்னுடைய கொள்கைகளால் வெற்றிகரமான நபராக வலம் வந்த ஜேனட் யெல்லன் கருவூலத்துறை செயலர் பதவிக்குச் சிறந்த தேர்வாக இருப்பார் என்ற பலத்த எதிர்பார்ப்பும் உள்ளது.
சர்வதேச அளவில் மதிக்கப்படும் பொருளாதார வல்லுனர்களில் யெல்லனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்குத் துணையாக நிதித்துறையின் துணை செயலர் பொறுப்பிற்கு முதல் முறையாக ஒரு கருப்பினத்தவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் ஒபாமாவின் பொருளாதார ஆலோசகராக இருந்தவர். தற்போது ஒபாமா ஃபௌவுண்டேஷனின் தலைவராகவும் இருக்கிறார்.

நிதிநிலை திட்டமிடல் மற்றும் நிர்வாக குழுவின் இயக்குனராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீரா டாண்டன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
பொருளாதார ஆலோசகர்களாக மூன்று பேர் கொண்ட குழு ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் தலைவராக கருப்பினத்தவரான சிசிலியா ரொஸ் செயல்படுவார். இவர் க்ளிண்டன் மற்றும் ஒபாமா நிர்வாகத்தின் பொருளாதார குழுவில் இடம்பெற்றிருந்தவர். இவருடன் ஜேரட் ப்ரென்ஸ்டீன் மற்றும் ஹீதர் பௌஷ்சே மற்ற இரு உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டிருக்கின்றனர். ப்ரென்ஸ்டீன் இடதுசாரி சிந்தனையாளர் என அறியப்படுபவர். ஹீதர் நெடுங்காலமாக பைடனின் நம்பிக்கைக்குறிய பொருளாதார ஆலோசகராக இருந்து வருபவர்.
ராணுவம், பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை சார்ந்த அனைத்து அமைப்புகளையும் கொண்ட பாதுகாப்புத்துறை மிகவும் முக்கியமானது. இந்த துறையினர்தான் அமெரிக்காவின் சர்வதேச அரசியல் நிலைப்பாடுகள், கூட்டணிகள், கொள்கை முடிவுகள் என அனைத்தையும் திட்டமிட்டு செயல்படுத்துகிறவர்கள். இந்தத் துறையின் செயலராக ஆண்ட்டனி ப்ளின்கென் என்பவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் கடந்த காலத்தில் ஒபாமா நிர்வாகத்தில் இதே துறையின் துணை செயலராக பணியாற்றிய அனுபவம் உள்ளவர். கூடுதலாக வெளியுறவுக்கான செனட் கமிட்டியில் பைடனின் ஆலோசகராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறையின் செயலராக அலென்ரோ மயோர்கஸ் என்பவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவரும் கடந்த ஒபாமா ஆட்சிக்காலத்தில் இதே துறையின் துணை செயலராக பணியாற்றிய அனுபவம் உள்ளவர். இவருடைய நியமனம் பலவகையில் முக்கியமானதாக கவனிக்கப்படுகிறது.
நாட்டின் பாதுகாப்பையும் வெளியுறவுக் கொள்கைகளையும் தீர்மானிக்கும் புலனாய்வுத்துறை அமெரிக்க அரசாங்கத்தின் மற்றுமொரு முக்கிய அங்கமாகும். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் எதிரிகளைக் கண்காணித்து அவர்களின் திட்டங்களைக் கணிக்கவும், தோற்கடிக்கவும் சர்வதேச அளவில் அமெரிக்க புலனாய்வுத்துறையின் பங்கு அதிகமானது.
தேசிய புலனாய்வுத்துறையின் இயக்குனர் (DNI , Director Of National Intelligence ) தன் கீழ் இயங்கும் 17 துறைகளுக்கும் தலைவராக துறையின் வரவு செலவுத் திட்டத்தை செயல்படுத்துவது முதல் அதிபர், தேசிய பாதுகாப்பு கவுன்சில் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு கவுன்சிலின் முதன்மை ஆலோசகராகவும் பணியாற்றுகிறார். தேசிய பாதுகாப்பு பிரச்சினைகள் மற்றும் நிகழ்வுகள் குறித்த முடிவுகளை அரசுக்குத் தெரிவித்தல் , தகவல்களைப் பகிர்தல், பாதுகாத்தல், உள்நாட்டு மற்றும் சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து செயல்படும் பணியைச் செவ்வனே செய்ய வேண்டிய பொறுப்பிலிருக்கிறார் இத்துறையின் இயக்குனர். 9-11 தாக்குதல்களுக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட இப்பதவி அமெரிக்க உளவுத்துறை அதிகாரத்துவத்தை சிறப்பாக ஒருங்கிணைக்கிறது.

தேசிய புலனாய்வுத்துறையின் இயக்குனர் பதவிக்கு அதிபர் ஒபாமாவின் கீழ் தேசிய பாதுகாப்புப் பணிகளை நிர்வகித்த ஆவ்ரில் ஹெயின்ஸ் என்பவரை ஜோ பைடன் தேர்வு செய்துள்ளார். தேசிய பாதுகாப்பு வழக்கறிஞராகவும், சிஐஏ துணை இயக்குநராகவும் பணியாற்றிய 51 வயதான ஹெயின்ஸ் டி.என்.ஐ இயக்குனராகும் முதல் பெண்மணி ஆவார்.
ஆவ்ரில் ஹெய்ன்ஸ் 2007 முதல் 2008 வரை செனட் வெளியுறவுக்குழுவின் துணை தலைமை ஆலோசகராக பைடனின் தலைமையில் பணியாற்றினார். 2008 ஆம் ஆண்டில் சட்டத்துறையில் சட்ட ஆலோசகராகவும் 2010ல்அதிபர் ஒபாமாவின் துணை உதவியாளராகவும், வெள்ளை மாளிகையில் தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான அதிபரின் துணை ஆலோசகராகவும் பொறுப்புகளை வகித்துள்ளார். 2013 முதல் 2014 வரை துணை சிஐஏ இயக்குநராக பணியாற்றிய முதல் பெண்மணியும் ஆவார். துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக 2014 இல் வெள்ளை மாளிகைக்கு மீண்டும் திரும்பினார். ஒபாமா ஆட்சிக்குப் பின் கொலம்பியா பல்கலைக்கழகம் மற்றும் ப்ரூக்கிங்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தேசிய பாதுகாப்பு ஆலோசனைகளையும் தொழில்நுட்பத்தில் பெண்களின் பங்குகளை முன்னேற்றுவது குறித்து பல்வேறு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியதாகவும் என்.பி.சி செய்தியில் ப்ளாண்டிர் நிறுவனம் பேட்டியளித்துள்ளது.
பல்வேறு உயர் பதவிகளையும் தேசிய பாதுகாப்பு பொறுப்புகளையும் வகித்த ஹெயின்ஸ் பைடன் அரசிற்கும் அமெரிக்க மக்களுக்கும் சிறந்த பாதுகாப்பையும் திறம்பட புலானய்வுத்துறையையும் நிர்வகிப்பார் என்பதில் ஐயமில்லை.
தேசிய பாதுகாப்பின் ஒரு அங்கமாக சுற்றுச்சூழல் தரம் உயர்த்தப்பட்டு அதற்கான தூதராக அனுபவம் வாய்ந்த ஜான் கெர்ரி நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் பாரிஸ் சுற்றுச்சூழல் ஒப்பந்தத்தின் சிற்பி என அறியப்படுகிறவர். நீண்ட அரசியல் அனுபவம் உடையவர்.
ஐநா சபைக்கான அமெரிக்க அதிபரின் தூதுவராக நீண்ட நெடிய அனுபவம் கொண்ட லிண்டா தாமஸ் க்ரீன்ஃபீல்ட் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இவை தவிர அதிபரின் அன்றாட நடவடிக்கைகளில் பணியாற்றும் உதவியாளர்கள் மற்றும் ஆலோசகர்களும் அறிவிக்கப்பட்டிருக்கின்றனர்.
வெள்ளை மாளிகையின் தலைமை நிர்வாகியாக பைடனின் நீண்டகால சகாவான ரோன் க்ள்ய்ன்னும்,அவருக்கு துணையாக ஜென் ஓ மெய்லி தில்லான் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். அதிபரின் முதுநிலை ஆலோசகராக மைக் டோன்லியான், தனி ஆலோசகராக ஸ்டீவ் ரிட்சி, தேசிய பாதுகாப்புக்கான அலோசகராக ஜேக் சல்லிவான், தேசிய வர்த்தக கவுன்சிலின் இயக்குனராக ப்ரெய்ன் டீஸ், பொது நிர்வாகத்துறையின் இயக்குனராக செட்ரெக் ரிட்ச்மாண்ட், வெள்ளை மாளிகையையும் அரசு நிர்வாகத்தையும் இணைக்கும் அலுவலகங்களின் இயக்குனராக ஜூலி செவாஸ் ரோட்ரிக்ஸ், சட்ட விவகார அலுவலகத்தின் இயக்குனராக லூயிஸா டெர்ரல் என பட்டியல் நீள்கிறது.
மேலும் சில முக்கியமான பதவிகளுக்கான அறிவிப்புகள் வரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பைடன் தனது நிர்வாகத்தில் தற்போது இணைத்துக் கொண்டிருக்கும் பெரும்பாலானவர்கள் அவருடன் நீண்ட நெடுங்காலமாக பணியாற்றிய அனுபவம் உள்ளவர்கள். அவரின் நம்பிக்கைக்கு உரியவர்கள். எனவே எந்தவித ஆரம்பத் தடங்கலும் இல்லாமல் பரஸ்பர புரிதலுடன் பைடன் நிர்வாகம் முதல் நாளில் இருந்தே செயலில் இறங்கும் என பெரும்பாலான அரசியல் நோக்கர்களும், வல்லுனர்களும் எதிர்பார்க்கின்றனர். அமெரிக்கா மட்டுமின்றி சர்வதேசமும் இதைத்தான் அவர்களிடம் எதிர்பார்க்கிறது. அனைவரின் நம்பிக்கையையும் மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்துடன் பைடனின் குழுவினர் தங்கள் பணிகளை ஜனவரியில் துவக்க இருக்கின்றனர்.
40 ஆண்டுகளில் ட்ரம்ப்ன் அமைச்சரவையில் தான் அதிக அளவில் வெள்ளை அமெரிக்கர்கள் மற்றும் ஆண்கள் உயர்பதவி வகித்திருக்கிறார்கள். பைடனின் அமைச்சரவையில் பெண்களும் சிறுபான்மையினரும் அதிக அளவில் பங்கேற்பதும் வரலாற்றுச் சாதனையாக இருக்கும். அமைச்சரவைப் பதவிகளுக்கு அத்துறையில் அனுபவமிக்க மக்களை நியமிப்பதன் மூலம் அடுத்த நான்கு ஆண்டுகளில் உலக அரங்கில் இழந்து நின்ற மதிப்பை அமெரிக்கா பெற்று விடும் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளார் புதிய அதிபர் பைடன்.
ஆட்சி என்பது நிர்வாகம். நிர்வாகம் என்பது மேலாண்மை. மேலாண்மை என்பது சிக்கலான, சவாலான இலக்குகளை சாதுர்யமாய் வென்றெடுக்கத் தகுந்த திறமையான ஆட்களைத் தேர்வு செய்வதில் துவங்கி அவர்களை ஒருங்கிணைத்து செயல்பட வைப்பதன் மூலம் நாட்டில் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும், அமைதியையும், நல்லிணக்கத்தையும் உருவாக்குவது. இந்த வகையில் பைடன் திறமையானவர்களை, குறிப்பாக நிறைய பெண்களை முக்கியமான பதவியில் அமர்த்தியிருக்கிறார்.
நம்பிக்கையான துவக்கம். புதியவர்களுக்கு நம் வாழ்த்துக்களையும் இணைத்துக் கொள்வோம்.
அமெரிக்கா தன் சிறப்புகளை வென்றெடுக்கட்டும்.