யோகாப்பியாசம் இந்துக்களுடையதா?

கலிஃபோர்னியா மாநிலத்திலுள்ள சாண்டியாகோ நகரின் ஒரு மாவட்ட நீதிபதி, யோகம் மதம் சார்ந்ததன்று என்று தீர்ப்பளித்துள்ளார். (Washington Post July 2, 2013.) இது , சாண்டியாகோவிலுள்ள ஒரு பள்ளி மாவட்டப் பெற்றோர்கள் முன்வைத்த, “யோகாப்பியாசம் இந்து மதத்திலிருந்து இணை பிரிக்கமுடியாத ஒன்றாயிருப்பதால் இதைப் பள்ளிக்கூடங்களில் கற்றுக்கொடுப்பது பொது நிறுவனங்கள் மதச்சார்பற்றவை என்ற அரசியல் சட்டத்திற்கு முரணானது” எனும் வாதத்திற்கு அளிக்கப்பட்ட தீர்ப்பாகும். இக்கிருத்துவப் பெற்றோர்களுக்காக, மத மரபுகளை உடைப்பவர்கள் (Cult Busters) எனும் பெயருடைய சிறந்த வழக்கறிஞர்கள், “அமெரிக்கர்களுக்கு யோகம் கற்றுக்கொடுக்கும் இந்து குருக்கள் இந்து மத மரபுகளை விலைக்கு விற்பவர்கள்” என வாதிட்டனர் . இத்தீர்ப்பின் முடிவு, “இப்பெற்றோர்களின் முடிவு தவறானது; யோகப் பயிற்சி இந்து மதத்தின் உரிமையன்று; எனவே பள்ளிகளில் இதைக் கற்பிப்பது தவறன்று” என்பதாகும்.

யோகத்தின் பல பகுதிகள் இந்து மதத்தை சார்ந்தவையாக இருந்தாலும் சில பகுதிகள் கற்பதற்கும் கற்பிப்பதற்கும் தகுதியுள்ளவையாயும் உடலுறுதி, உடல் வளைவு, நரம்புகளைத் தளர்த்தல் போன்ற பலன்களையும் சக மாணவர்களைத் தாக்குதல், பயமுறுத்தல் போன்ற வன்முறைகளைக் குறைக்கவும் வழிசெய்கிறது. சிகிச்சையாளர்களும் தங்கள் சிகிச்சைகளுக்கு இப்பகுதிகளைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். தீவிர யோகப் பயிற்சியாளர்கள், உடல் நலம் வாய்ந்தவர்கள் பொறுமை, தியானம், மனத் தளைகளிருந்தும், சம்சாரத் தளைகளிருந்தும் விடுபடுதல் போன்றவைகளை யோகத்தின் மூலம் அடையலாம் என்கின்றனர். ஆனால் இவர்கள் யாருமே ஹிந்து யோகிகளைப்போல் சிவனையோ விநாயகரையோ மற்றெந்த கடவுளையோ ஆரம்பத்தில் வழிபடுவதில்லை; வழிபடவும் சொல்வதில்லை.

யோகம் உள்ளபடியே இந்துக்களுடையதுதான் எனும் வாதம்:

மேற்சொன்ன தீர்ப்பு, யோகத்தின் தொடக்கத்தையும் அதன் தன்மையையும் பற்றிய நீண்ட சர்ச்சையின் ஓர் அறிகுறிதான். சில கிருத்துவர்கள் யோகம் இந்து மதத்தைச் சேர்ந்ததாயிருப்பதனால் அதன் மூலம் பலகடவுள் வழிபாட்டிற்கும் இந்து சமூகத்திற்கே உரித்தான சாதி வேறுபாடு, பெற்றோர்கள் முடிவெடுத்த திருமணம், விதவையெரிப்பு போன்றவைகளையும் உள்நுழைக்கும் வழியாகக் கருதுகின்றனர். இதையெல்லாம் எல்லாக் கிருத்துவர்களும் ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும் இந்துக் கடவுள் வழிபாடு கிருத்துவ மதத்திலிருந்து வேறுபட்டது என்பதை யாருமே மறுப்பதில்லை. இதே கிருத்துவர்கள்தான் புலனுக்கப்பாற்பட்ட தியானத்தையும் அறிவியலுக்கு உகந்ததன்றென்று எதிர்த்தனர். இவர்களுடன், சில இந்துக்களும் சேர்ந்துகொண்டு யோகம் இந்துக்களுடையதுதான் என்றும் உருத்திராட்ச மாலை உருட்டுதல், வரவேற்புச் சைகைகள், கடவுள் வணக்கம் போன்றவைகளிருந்து பிரிக்க முடியாததொன்றாகும் என வாதிடுகின்றனர். யோகத்தைப் பயிலும் அமெரிக்கர்களும் இப்பள்ளி ஆசிரியர்களும் யோகத்தை இந்துக் கலாசார வேரிலிருந்து களைந்தபோர் உடற்பயிற்சித் திட்டமாகச் சுருக்கிவிட்டனர் என்றும் குறைகூறுகின்றனர்.

யோகத்தை யார் வேண்டுமானாலும் அள்ளலாம் எனும் வாதம்:

இந்த இந்துக்களுக்கெதிராக, மற்ற இந்துக்கள் யோகம் அறிவியலுக்குட்பட்டது, எனவே உலகனைத்திற்கும் பொதுவானது என்கின்றனர். ஊர்தி ஜெர்மனியின் கண்டுபிடிப்பென்றாலும் ஜப்பானில் செய்யப்பட்ட ஊர்திகளை ஓட்டுபவர்கள் அதை நினைப்பதில்லை. விமானம் அமெரிக்கக் கண்டுபிடிப்பு என்பதால் அமெரிக்கா மட்டும் சொந்தம் கொண்டாடமுடியாது. சீனர்கள் தங்கள் விமானங்களிலெல்லாம் அமெரிக்கக் கண்டுபிடிப்பு என்று எழுதி ஓட்டுவதோ, அதற்காக அமெரிக்காவிற்கு உரிமைத் தொகையோ அளிப்பதில்லை. நாமெல்லோருமே ரைட் சகோதரர்கள் விமானத்தைக் கண்டுபிடித்தார்கள் என்று இரண்டு வரிகளைப் புத்தகத்தில் படிப்பதோடு சரி. மராத்திய இனத் தலைவர் பால் தாக்கரேகூட, “சுதேசிக் கொள்கையை முழுவதும் அமுலாக்கினால் மின்விளக்கை நம்மால் உபயோகிக்க முடியாது” என்றார். இந்துக்கள், அமெரிக்கர்கள் யோகாப்பியாசம் செய்வதைக் கண்டு மகிழவேண்டும்; மூலம் முக்கியமானதன்று. இந்தியாவும் இந்து மதமும் ஒரு பொருட்டல்ல என்பதே இந்து நடுநிலையாளர்களின் கண்ணோட்டம். சில யோக முறைகளை, அதன் இந்து மூலத்தை மறைத்துத் தம் சொந்த கண்டுபிடிப்பென்று கூறிக்கொண்டு பணம் பண்ணும் தீபக் சோப்ரா போன்ற நபர்கள் இந்த நடுநிலையாளர்களிடமிருந்து பிரித்தறியப்பட வேண்டியவர்கள். அசீம் ஷுக்லா இவரை “இந்து சிததாந்தத்தை பிரித்தவிழ்த்துப் பின்னர் வேறு விதமாக அதை மூட்டை கட்டி இந்து என்ற பெயரிடாமல் விற்பதில் முதலாமவராகத் திகழ்பவர் என்கிறார். சோப்ரா அவர்களோ இவ்வாறு அவரைக் குறைகூறுபவர்களைக் கோகோ கோலாவை கண்டுபிடித்தவர் தனது உரிமையை நிலை நாட்டாததுடன் ஒப்பிடுகிறார். இந்துக்களின் பாரம்பரியத்தை அமெரிக்க மக்களுக்கு விற்பதால் அமெரிக்க விற்பனை முறையீட்டையே பயன்படுத்துகிறார் போலும்! இந்துக்களாலும் மேற்கத்தியர்களாலும் நடத்தப்படும் சில யோகக்கூடங்கள் யோக முறைகளுக்குத் தனிப் பெயரிட்டுக் காப்புரிமை செய்துள்ளதினால் யாருமே இம்முறைகளை இந்துக்களின் பாரம்பரியம் என்று இனிமேல் கூறமுடியாது.

சில ஹிந்து மத நிறுவனங்களும் ஹிந்து மத அடையாளத்தையே மறுக்கின்றன. உதாரணமாக ஹிந்துக் கடவுள் கிருஷ்ணரை மட்டுமே வழிபடும் ஹரே கிருஷ்ணா இயக்கம் தாங்கள் ஹிந்துக்கள் அல்லர்; எங்கள் சித்தாந்தம் உலகளாவியது என்கின்றனர். 19ம் நூற்றாண்டின் இறுதியில் ““ஹிந்துக்களென்று பெருமையுடன் பறைசாற்றுகிறோம் “ என்ற இலட்சிய நோக்குடன் தொடங்கப்பட்ட ராமகிருஷ்ணா மிஷனும் எங்கள் கொள்கைகள் குறுகிய இந்துக் கொள்கைகள் அல்ல; உலகம் முழுவதற்கும் சொந்தமானவை என்கிறது. (Ramakrishna Mission: In search of a New Identity by Ram Swarup 1986.) கிருத்துவ மத ஓரத்தில் நிற்பவர்களும் புதுயுக முன்னாள் கிருத்துவர்களும் இவர்களைப்போலவே, யோகத்தைச் சார்பற்றதாகவும் உடற்பயிற்சித் திட்டமாகவும்தான் பார்க்கின்றனர். அமெரிக்க யோகிகளும் யோகத்தின் மூலஸ்தானத்தைப் பற்றி நினைத்துப் பார்ப்பதுகூட இல்லை. மேலும் இவர்கள் யோகப்பயிற்சிகளின் சம்ஸ்க்ருத பெயர்களை மாற்றிப் புதுப் பெயர்களிட்டு அழைப்பதால், பிற்கால யோகிகளுக்கு, யோகம் ஒரு காலத்தில் இந்துக்களுடையதாக இருந்தது என்ற விவரம்கூடத் தெரியாமல் போகலாம். கிருத்துவ மதப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களோ, யோகத்தையே கிருத்துவ மதத்திற்கு எடுத்துச் சென்றுவிட்டனர். இவர்கள், யோகம் ஆரம்பத்தில் இந்து மதத்தைச் சார்ந்ததாக இருந்தாலும் அதை அம்மதத்திலிருந்து கழட்டித் தங்கள் மதத்துடன் இணைத்துக்கொள்வதில் ஒரு தவறுமில்லை என நினைப்பதால் அதற்குக் கிருத்துவ யோகம் என்ற பெயரிட்டுக் கிருத்துவ நிலையங்களிலும் பல பள்ளிகளிலும் நடைமுறைக்குக் கொண்டுவந்துள்ளனர்.

யோகத்தின் வேர் இந்து மதம்தான்:

சாண்டியாகோ தீர்ப்பு, பெயரில் மட்டும் இந்துக்களாகவும் கிருத்துவர்களாகவும் இருப்போருக்கு வெற்றியாகவும், மதக் கொள்கைகளில் பற்றுள்ள இந்துக்களுக்கும் கிருத்துவர்களுக்கும் தோல்வியாகவும் முடிந்துள்ளது. ஆனால் ஆசிரியர் இதைப்பற்றி என்ன சொல்லவருகிறார்?

முதலாவதாக, யோகம் இந்துக்களை சேர்ந்ததுதான். ஹிந்து மதம் என்பது இந்தியாவில் உள்ள, உருவ வழிப்பாட்டை அடிப்படையாகக்கொண்ட மத மரபுகள் அனைத்தும் சேர்ந்ததாகும். தொன்றுதொட்ட காலமாக இருந்துவரும் மரபுகளும் இதில் அடங்கும். எனவே, யோகம் இந்து மதத்தைவிடப் பழமையானது எனும் தீபக் சோப்ராவின் கூற்று வேடிக்கையான ஒன்று. நாம் இங்கு சிந்திக்கவேண்டிய விஷயம் யோகம் இந்து மதத்திலிருந்து தனிப்படுத்தக்கூடியதா? மற்ற மதங்களுடன் கிருத்துவ யோகம் என்பதைப்போல் சேர்க்கக்கூடியதா? என்பதே. யோகம் உடற்பயிற்சித் திட்டமாக மட்டும் இருந்தால் அது அனைத்துக் கலாசாரங்களுக்கும் பொருந்தும். ஸ்வேதஸ்வதார உபநிஷத்தும் பின்வந்த பல ஹதயோக நூல்களும் யோகம் பயில்பவர்கள் உறுதியான பளபளப்பான உடலை அடைகிறார்கள் என்கிறது. நவயுக யோகிகள் எதிர்ப்பாலினரைக் கவருவதற்கு ஹதயோகம் உதவுகிறது போன்ற சொற்றொடர்களால் அமெரிக்கர்களை ஈர்க்கின்றனர். விமானம், மின்சார விளக்குபோல் உடல் வலிமைத் திட்டமும் அதனுடைய மூலஇடத்திலிருந்து பெயர்க்கப்பட்டு வேறொரு சமூகத்திற்குள் புகுத்தப்படமுடியும் என்றாலும் ஹதயோகமும் இந்து மதத்தின் வேரிலிருந்து களையப்பட்டதுதான் என்பதை இந்துக்கள் வலியுறுத்துவது இன்றியமையாததாகும். இந்த உண்மையைத்தான் மற்றவர்கள் எதிர்க்கிறார்கள். சில கல்வியாளர்கள், நெய்டன் என்னும் சீன இரசவாதம் இந்தியாவின் கடற்கரைப் பகுதி வழியாக நுழைந்து சித்தயோகம், வைத்தியம் போன்றவைகளில் மாறுதல்களை ஏற்படுத்தியுள்ளன என்கின்றனர். சில ஹதயோகப் பயிற்சிகள் சீனாவின் டாவோயிஸ்ட் பயிற்சிகள்போல் இருக்கின்றன என்றாலும் காலந்தொட்டு விளங்கிவரும் பாரம்பரியத்தில் அவை சிறிய மாறுதல்களை உண்டு பண்ணியிருக்கலாம் என்றே ஒப்புக்கொண்டாலும் அதற்குப் போதிய ஆதாரங்கள் இல்லை. வேதத்தில் கூறப்படும் முனிகளோ, அறிவின் எல்லைக்குத் திறவுகோலாகவும் சுயகட்டுப்பாட்டிற்கு இன்றியமையாததாகவும் உள்ள உபநிடதங்கள் போற்றும் பிராணன் என்னும் மூச்சுக் காற்றோ, பதஞ்சலியின் யோக சாஸ்திரமோ வெளிநாட்டினரால் அறியப்பட்டதாகவோ, புகுத்தப்பட்டதாகவோ தெரியவில்லை.

சமீபத்தில், அமெரிக்க ஊடகங்கள் ஹதயோகம் சமீப காலத்தியது; இங்கிலாந்து காலனி ஆதிக்கத்தில் இந்துக்களுக்கு அவர்களித்த பரிசு என்ற கேலிக்கூத்தான கொள்கையை முன்வைக்க ஆரம்பித்துள்ளார்கள். பிராணாயாமம் எனப்படும் மூச்சுப் பயிற்சியை எந்தவொரு ஆங்கிலேய தேகப்பயிற்சியிலும் காணமுடியாது. சில யோக தோரணைகளை ஆங்கிலேயப் படைவீரர்களின் பயிற்சிகளிலும் மேற்கத்திய தேகப்பயிற்சிகளிலும் காணலாம் என்கின்றனர். முதலாவதாக, இப்பயிற்சிகளெல்லாம் உடலையோ அங்கங்களையோ விடாமல் தொடர்ந்து அசைப்பதை அடிப்படையாகக்கொண்டவை. ஆனால் யோகமோ உடலை ஒரு நிலையில் நிறுத்துவதன்மூலம் தசைகளைத் தளர்த்துவதற்கான பயிற்சி, மேலும் யோகத்தில் கிட்டத்தட்ட எல்லா பயிற்சிகளுமே தரையிலமர்ந்து செய்யப்பட வேண்டியவை. குளிர் பிரதேசமான இங்கிலாந்தில் தரையில் அமர்வது என்பதே எண்ணிப்பார்க்க முடியாத ஒன்று. அவ்வாறிருக்கும்போது, ஹதயோகப் பயிற்சிகள் இந்துக்களுக்கு ஆங்கிலேயரின் அன்பளிப்பு எனக்கூறுவது நகைப்பிற்கிடமானதாகும். நின்று செய்யும் ஹதயோகப் பயிற்சிகளில் .ஆங்கில சாயல் உள்ளது என்று சிலர் கூறினாலும் அது தொன்றுதொட்டு வழங்கிவரும் இந்துப் பாரம்பரியமான யோகத்தின் வெளித்தோலைத் தொடுவதற்கு ஒப்பாகும்.

ஹதயோகமும்கூட, இப்பயிற்சிகளை எல்லாம் முக்தியை முடிவில் அடைவதற்கான வழியாகவே பார்க்கிறது. பதஞ்சலியின் யோக சூத்திரம் இதற்குச் சான்று. பதஞ்சலியின் கைவல்யம் என்பது மனம் வெளிநாட்டமின்றி தனக்குள்ளேயே ஒடுங்குவதாகும். மறுபிறப்பு, சுவர்க்கம், நரகம் போன்ற நம்பிக்கைகளுக்கும் இதற்கும் சம்பந்தமேயில்லை. இப்பொழுதே நாம் நமக்குள்ளே அடங்குவதேயாகும். இமந்த முக்திநிலை கிருத்துவர்களின் முக்தியிலிருந்து வேறுபட்டது மட்டுமன்று, அதனோடு ஒத்துவராத ஒன்றாகும்.

மேல்நாட்டு யோகக் கல்விமுறைகள் இந்த இலக்கைத் தேடித் போவதில்லை. அக்கல்வியாளர்களின் நோக்கமெல்லாம் பாடகர்களை மேலும் சிறந்த பாடகர்களாக்கவது, பணியாளர்களை ஊக்குவிப்பது போன்ற காரியங்களுக்கேயாகும்.. இதுவொன்றும் புதியதன்று. சீனர்கள், புத்த பிட்சுக்களிடம் கற்ற தியான முறைகளைத் தங்கள் சமூகத்தைச் சீர்படுத்த உபயோகப்படுத்திக்கொண்டார்களே தவிர, அதன் முடிவு நிலையான முக்தியையும் துறவையும் ஏற்றுக் கொள்ளவில்லை. யோகப்பயிற்சிகளை எவர் வேண்டுமானாலும் கற்கலாம். ஆனால் அது முழுமையான யோகமாகாது. மேலும் உடல், மனோ வியாதிகளுக்காக உபயோகப்படுத்தப்படும் யோகசிகிச்சை முறைகளெல்லாம் குறையுள்ள மனிதர்களைச் சரிசெய்வதாகும். ஆனால் இந்துக்களின் யோகமோ சாதாரண மனிதர்களை முக்தி நிலைக்கு உயர்த்துவதற்குப் பயன்படுவதாகும். எனவே அமெரிக்கர்கள் யோகத்தை ஒரு விலைப்பொருளாக மாற்றியமைக்கும்போது, அவர்கள் ஏதோ ஒன்றை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்கிறார்கள். ஆனால் அது நிச்சயமாக முழுப் பொருளன்று, உதிரிகள்தாம் என்பதில் சந்தேகமேயில்லை.

Series Navigation<< இந்துக்கள் கோழைகளா?ராமகிருஷ்ணர் முகம்மதியரா அல்லது கிருத்துவரா? >>

One Reply to “யோகாப்பியாசம் இந்துக்களுடையதா?”

  1. உங்களுடைய சுருக்கமான மொழிபெயர்ப்புக்கு நன்றி. இன்று தமிழில் இவ்விஷயங்களைப் பற்றி பேசுவது தேவையாகிறது. இந்து மரபின் மீது வரலாற்று ரீதியாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் இழிவும் திரிபு வேலைகளும் இன்று அறிவுத் தளத்தில் முக்கியத்துவம் பெற்று பேசப்பட்டு வருகிறது. ஆங்கிலத்தில் நடைபெறும் இவ்விவாதங்களை தமிழில் கொண்டுவருவது அவசியமாகிறது. தொடர்ந்து இதுபோன்ற சுருக்க மொழிபெயர்ப்பை தாங்கள் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக ராஜிவ் மல்ஹோத்ராவின் ‘உடையும் இந்தியா’ மட்டுமே தமிழில் உள்ளது. பிற நூல்களையும் தமிழுக்கு மொழிபெயர்க்க வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.