
கொரொனாவின் பாதிப்பு உலகிலேயே அமெரிக்காவில்தான் மிக அதிகம் என்பது உலகறிந்த உண்மை. அதற்குக் காரணம் சொல்வதைக் கேட்காத பொதுமக்களா அல்லது சொதப்பிக்கொண்டிருக்கும் அரசாங்கமா என்பது சாலமன் பாப்பையாவை வைத்துப் பட்டிமன்றம் நடத்தத் தகுந்த தலைப்பு! இந்தக் கட்டுரையை எழுதும் சமயம் வரை உலக அளவில் கொரொனா தொற்றியது 7 கோடி பேரை. அதிலிருந்து மரணமடைந்தோர் 16 லட்சம் பேர். இந்தக் கணக்கில் அமெரிக்காவின் பங்களிப்பு மட்டும் 1.6 கோடி கேஸ்கள். மரண எண்ணிக்கை 3 லட்சத்தை தொடவிருக்கிறது! உலக மக்கள் தொகையில் அமெரிக்கர்கள் வெறும் ஐந்து சதவீதம்தான் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளும்போது இந்த எண்களில் ஒளிந்திருக்கும் விபரீதம் நமக்கு நன்கு உறைக்கலாம்.
நிலைமை இவ்வளவு மோசமாக இருந்தும் பல்வேறு அரசியல், கொள்கை, அலுப்பு, சந்தேகம் சம்மந்தப்பட்ட காரணங்களால், விரைவில் வரவிருக்கும் தடுப்பூசியை போட்டுக்கொள்ள மாட்டோம் என்று அமெரிக்காவில் மட்டுமில்லாமல் இந்தியாவிலும் பலர் கிளம்பி இருக்கிறார்கள். அத்தகைய தயக்கம் சரியா, தவறா? அப்படி பயப்படுபவர்கள் என்னென்ன வதந்திகளைப் பல்வேறு ஊடகங்கள், WA வழியாகவெல்லாம் கேட்டுக் குழம்புகிறார்கள் என்று அலச வேண்டியது அவசரத் தேவையாகிறது.
கடந்த நூறு வருடங்களில் தடுப்பூசிகளால் நமது வாழ்வின் தரம் கணிசமாக உயர்ந்திருக்கிறது என்பதில் ஏதும் சந்தேகமிருக்க வாய்ப்பில்லை. போலியோ, பெரியம்மையிலிருந்து ஆரம்பித்து, பல்வேறு வியாதிகளை நாம் இப்போதெல்லாம் வெறும் சரித்திரப் புத்தகங்களில் மட்டுமே சந்திக்கும் நிலைக்கு முக்கியமான காரணம் இத்துறை கண்டுள்ள முன்னேற்றம்தான். நமக்கு மிகவும் தெரிந்த தடுப்பூசி மருந்துகள் எல்லாம் இறந்த அல்லது செயலிழந்த தொற்றுண்ணிகளைச் சிறிய அளவில் மனித உடலுக்குள் எடுத்துச் செல்பவை. அந்த மருந்து தயாரிப்பின்போதே குறிப்பிட்ட தொற்றுண்ணி கொல்லப்பட்டுவிடுவதால், அல்லது செயலிழக்கப்பட்டு விடுவதால், அவை நம் உடலுக்குள் முழு வியாதியைக் கொண்டுவருவதில்லை. ஆனால் அந்தத் தொற்றுண்ணியின் முகம் நமது உடலின் நோயெதிர்ப்பு சக்திகளை விழித்தெழவைத்து நம்மை அந்த நோயை எதிர்க்க தயார் செய்கிறது. இந்த நோயெதிர்ப்பு விளைவுகளால் (immune response), ஃப்ளு காய்ச்சலுக்கான தடுப்பூசி போட்டுக்கொண்டால், கொஞ்சம் ஃப்ளு ஜுரம் வந்திருப்பதுபோல் உடல் வலி, காய்ச்சல் நமக்குத் தோன்றுவது இயற்கை. உள்ளே வந்திருப்பதென்னவோ செயலிழந்த வைரஸ்தான் என்பதால், அதற்கு மேல் பெரிதாக ஒன்றும் ஆகாமல் உடல் ஓரிரு நாள்களில் சகஜ நிலைக்குத் திரும்பி விடுகிறது. ஆனால் அந்த வைரஸ்ஸைத் தெரிந்து கொண்டுவிட்டதால், நிஜ வைரஸ் எப்போதாவது உள்ளே வந்து தொலைத்தால், தயாராக இருக்கும் நமது உடல், வெகு விரைவில் வைரஸ்ஸுடன் சண்டையிட்டு அதை அழித்தொழித்து நம்மைக் காப்பாற்றுகிறது. இந்த முறையில் இயங்கும் தடுப்பூசி வகைகளை “Wanted” போஸ்டரை நமக்குள் கொண்டுவந்து ஒட்டி வைக்கும் பொதுநலவாதியாகப் பார்க்கலாம். உள்ளே கொண்டுவரப்பட்டது வெறும் சுவரொட்டிதான், நிஜமான தீவிரவாதி இல்லை என்பதால், நமக்குத் தீவிரவாதியின் முகம் தெரிய வருகிறதேயொழிய பாதகம் ஏதும் ஏற்படுவதில்லை. ஓரிரண்டு நாள்களுக்கு வந்து போகும் காய்ச்சல், உடம்பு வலியை புதுப் போஸ்டர் ஒட்டப்பட்டவுடன், “அட! இவந்தானா அது? வந்தா ஒழித்து விடுவேன்!” என்று ஊரில் நாலு பேர் புஜம் தட்டுவதற்கு இணையாகக் கொள்ளலாம்.
அந்த மாதிரியான தடுப்பூசிகளைத் தயாரித்து உலகெங்கும் கொண்டுகொடுப்பது, லட்சக்கணக்கில் தீவிரவாதியின் படத்தை அடித்து உலகெங்கும் விநியோகிப்பதற்குச் சமம். இது நன்கு தெரிந்த புரிந்த முறை. ஆனால் கோடிக்கணக்கில் படம் அடித்து விநியோகிக்க நிறைய நேரமாகும். உதாரணமாகப் ஃப்ளு தடுப்பூசிக்கான வைரஸ்ஸை வேண்டிய அளவு உயிரியல் செயல்முறைகளின்படி தயாரிக்க, இப்போதும் கோழி முட்டைகளில் வைரஸ் பண்ணைகளை வருடா வருடம் ஆறு மாதங்களுக்கு நடத்த வேண்டியிருக்கிறது. அதற்கு பதிலாக எல்லா ஊருக்கும் மின்னஞ்சல் வழியாகத் தீவிரவாதியின் உருவத்தை எப்படி அச்சடிப்பது என்ற குறிப்பை மட்டும் அனுப்பி நீங்களே பிரிண்ட் போட்டுக் கொள்ளுங்கள் என்று சொல்ல முடிந்தால்? இந்த முறையைப் பின்பற்றுவதுதான் mRNA (Messenger Ribonucleic Acid) அல்லது தூதுவ ரிபோ நியுக்கிளியிக் அமிலத் தடுப்பூசி முறை. இந்த முறை பத்து இருபது வருடங்களுக்கு முன்பே பேசப்பட்டதுதான் என்றாலும் கொரொனா தடுப்பூசிதான் இவ்வளவு பெரிய அளவில் இதைச் செயல்படுத்த முயன்று கொண்டிருக்கிறது.

வாராந்திர தமிழ் பத்திரிக்கைகளில் பிரசுரிக்கப்படும் தொடர்கதைகளுக்கு, கதாசிரியரின் குறிப்புக்களை வைத்துக் கொண்டு, ஜெயராஜும், மணியம் செல்வமும் கச்சிதமாகப் படங்கள் வரைந்து வந்தது நமக்கெல்லாம் நன்கு பரிச்சயமான விஷயம். அதேபோல் மனித உடலின் உறுப்புக்களான காது, மூக்கு என்று ஒவ்வொன்றையும் எப்படி உருவாக்க வேண்டும் என்ற விளக்கங்களெல்லாம் DNA என்ற பெரிய தொடர்கதையில் இருந்து கிடைக்கும் mRNA குறிப்புகள் மூலமாகத்தான் நமது உடலுக்குள்ளிருக்கும் ஓவியருக்குத் தெரிய வருகிறது. ஓவியர்களால் வெறும் ஆண்/பெண் மட்டுமின்றி, கதாசிரியரின் குறிப்புக்களின்படி நாய், பூனை, வைரஸ், விண்கலம் என்று எதை வேண்டுமானாலும் வரைய முடிவதைப்போல், சரியான mRNA குறிப்புகள் கிடைத்தால், நமது உடலால் தொற்றுண்ணியின் முகத்தைக் கூட உடலுக்குள்ளேயே உருவாக்க முடியும். எனவே, இந்த தடுப்பூசி தயாரிப்பின் முதல் கட்டமாக, கோவிட்-19 ஜாதகத்தை (வேறென்ன? வைரஸ்ஸின் ஜீனோம்தான்) அலசி ஆராய்ந்து, சுவரொட்டியில் போடவேண்டிய அதன் முகம் எந்தப் பகுதி என்று முடிவு செய்கிறார்கள். பின்பு அந்த ஒரு சிறுபகுதியை மட்டும் உருவாக்கத் தேவையான mRNA குறிப்புக்களை ஒரு கம்ப்யூட்டர் கோப்பு போல் தயாரித்து, தடுப்பூசிக்குள் போட்டு நம் உடலில் செலுத்தி விடுவதுதான் பிளான். இது மின்னஞ்சலில் எல்லா ஊருக்கும் தீவிரவாதியின் படத்தை அனுப்பி உள்ளூரிலேயே அச்சடித்துக் கொள்ள சொல்வது போல் என்று வைத்துக் கொள்ளலாம். mRNA குறிப்புகள் உதவியுடன் மூக்கு, காதுகளை உருவாக்குவதுபோலவே, தடுப்பூசி தரும் குறிப்புக்களைக் கொண்டு நமது உடல் வைரஸ்ஸையும் நமது உடலுக்குள்ளேயே தயாரித்துவிடும். ஆனால் mRNA செய்திகளில் வைரஸ்ஸை முழுவதுமாக உருவாக்கத் தேவையான விவரங்களைக் கொடுக்காமல், வெறும் முகம் பற்றிய விவரங்களை மட்டுமே கொடுப்பதால், தயாரிப்பு நிஜ உயிருள்ள முப்பரிமாண வைரஸ்ஸுக்கு பதில் Wanted போஸ்டரில் காணப்படும் முக ஓவியமாவதோடு நின்றுவிடுகிறது. அதற்கப்புறம் பழைய கதையேதான். படத்தைப் பார்த்த ஊர்க்காரர்கள் புஜம் தட்டியெழ, கொஞ்சம் அமர்க்களங்கள் (அதாவது சின்னதாய்க் காய்சல், உடல்வலி) நடந்தபின், எப்போது தீவிரவாதி நிஜமாகவே ஊருக்குள் வந்தாலும் துரத்தியடிக்க ஊர் தயாராகிவிடும். பாரம்பரிய தடுப்பு மருந்துகளைப்போல், இந்த வகை தடுப்பூசிகளையும் பொதுவாக இரண்டு முறை, நடுவே சிலவார இடைவெளியுடன், கொடுக்க வேண்டியதிருக்கிறது. ஒரு முறை ஊரில் சுவரொட்டிகளை ஒட்டியபின் ஒருமாதம் கழித்துத் திரும்பவந்து, படத்தைப் புதுப்பித்து ஊர்க்காரர்களை, “இந்தத் தீவிரவாதியை மறந்துவிடாதீர்கள். எல்லாரும் ரெடிதானே?” என்று தயார்ப்படுத்துவதுபோல் என்று புரிந்துகொள்ளலாம். திரும்பச் சொல்லாவிட்டால் பலர் வேறு வேலைகளில் மும்முரமாகி விஷயத்தின் முக்கியத்துவத்தை மறந்துவிடக்கூடுமல்லவா?

இந்த mRNA தடுப்பூசித் தயாரிப்பில் கோழி முட்டைகளை ஆறு மாதங்கள் உரம் போட்டு, அடை காத்து வைரஸ்ஸை வளர்க்கும் தேவைகள் எதுவும் கிடையாது. தடுப்பூசி வழியே நாம் உடலுக்குள் அனுப்பவது வைரஸ்ஸின் முகத்தை மட்டும் நமது உடலே தயாரித்துக் கொள்வதற்கான குறிப்புகள்தான் என்பதால் அந்தக் குறிப்புகள் கொண்ட ரசாயனச் சங்கதிகளை எளிதில், விரைவில் எக்கச்சக்கமாகத் தயாரித்துவிட முடியும். பிரச்சினை என்னவென்றால் தயாரித்த பின்னும் இந்த mRNA குறிப்புகள் மிக எளிதில் உருக்குலைந்து சிதைந்து விடக்கூடியவையாகவே எப்போதும் இருப்பதுதான். சுவரொட்டிகளை வேண்டுமானால் சைக்கிளின் பின்னால் கேரியரில் கட்டி எடுத்துக்கொண்டுபோய் ஊரில் ஆங்காங்கே சாதாரண மாவுப்பசை போட்டு ஒட்டிவிடலாம். கணினி கோப்புக்களைக் கொஞ்சம் மரியாதையுடன்தானே கையாள வேண்டியிருக்கிறது? இல்லையென்றால் ஃபைல் கரப்ஷன் என்று ஒன்றுக்கும் உதவாமல் போய்விடும். அதேபோல் இந்த mRNA தடுப்பூசிகளை ஆழ்ந்த உறைநிலையில் வைத்தபடி ஊரூராய் அனுப்ப வேண்டியிருக்கிறது. இல்லாவிட்டால் பிய்ந்து சிதைந்து செயலிழந்துவிடுவேன் என்று பயமுறுத்துகிறது!

இப்போது இறுதி நிலையை அடைந்து லாரிகளிலும் விமானங்களிலும் ஏறிக் கொண்டிருக்கும் கோவிட்-19 தடுப்பூசிகள் மூன்று நிறுவனங்களில் இருந்து அறிமுகப்படுத்தப் பட்டிருக்கின்றன. ஃபைசர் (Pfizer) நிறுவனத்தின் மருந்து -70 டிகிரி செல்ஷியஸ் உறைநிலையிலும் மாடெர்னா நிறுவனத்தின் மருந்து -20 டிகிரி செல்ஷியஸ் உறைநிலையிலும் தொடர்ந்து பாதுகாக்கப்படவேண்டும். -20 டிகிரி வேண்டுமானால் நம்ம வீட்டு ஃபிரிஜ் லெவல்தான் என்று சொல்லலாம். ஆனால் -70 டிகிரி செல்ஷியஸ் என்பது அண்டார்டிகா உறைபனியின் வெப்ப நிலையைவிடக் கம்மி. அந்த அளவு தாழ்ந்த வெப்பநிலையை விடாமல் பராமரிக்கும் இயந்திரங்கள் உலகெங்கும் எளிதில் கிடைக்குமா என்பது அவிழ்க்கப்பட வேண்டிய பெரிய முடிச்சு. அதற்கப்புறம், ஃபிரிஜ்ஜைத் திறந்து மருந்தை வெளியே எடுத்துவிட்டால் எவ்வளவு சீக்கிரம் மனிதர்களின் கைகளுக்குள் ஏற்றியாக வேண்டும், ஓரிரண்டு நாள்களுக்குப் ஃப்ரீஸரிலிருந்து எடுத்து வெறும் குளிர் பதனப்பெட்டியில் வைத்துக்கொள்ளலாமா போன்ற கேள்விகளுக்கு, மருந்து புதிதாகையால், இப்போதுதான் விடைகளைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஃப்ரீஸருக்குள்ளேயே இருந்தால் ஆறு மாதங்களுக்கும், வெளியே எடுத்துப் ஃபிரிஜ்ஜில் வைத்தபின் நாலைந்து நாள்களுக்கும் மருந்தின் வீரியம் கெடாமல் இருக்கும் என்பது இப்போதைய புரிதல். இந்தத் தடுப்பூசி மருந்துகளைச் சாதாரணப் மருந்துக் கடைகளை நம்பி விநியோகம் செய்யமுடியாது என்பதால், ஃபைசர் நிறுவனத்தினர், ஆயிரம் புட்டிகளைக் கொண்ட பெட்டிகளாக தடுப்பூசி மருந்தைப் பேக் செய்து, உறைநிலையைப் பராமரிக்கும் ஃப்ரீஸர்களைத் தயாரித்து, டன் டன்னாக அதன் தலையில் ட்ரை ஐஸ்ஸைக் கொட்டி விமானங்களில் ஏற்றி, மருந்து கை மாறும் இடங்களில் எல்லாம் அந்தக் குளிர் சங்கிலியை உடையாமல் பார்த்துக்கொள்ளத் திட்டம் வகுத்திருக்கிறார்கள்.
தலையை நுழைத்துப் பார்த்தால், வேறு சில பிரச்சினைகள் கூடக் கண்களில்படும். உதாரணமாக, வீட்டில் நாம் A/Cயை 22 டிகிரியில் வைத்தோமானால், அறையின் வெப்பநிலை மிகச் சரியாக 22 டிகிரியிலேயே இருக்காது. வெப்பம் ஒரு 25 டிகிரியைத் தொடும்போது இயந்திரம் ஓட ஆரம்பித்து, வெப்பம் 19 டிகிரியை அடையும்போது நிற்கும். இப்படித் திரும்பத் திரும்ப A/C ஓடி நிற்கும்போது, தோராயமாக அறையின் வெப்பநிலை 22 டிகிரிக்கு அருகே இருக்கும் என்பது நமக்குத் தெரியும். அந்த 19 – 25 டிகிரி வேறுபாட்டை Hysteresis என்று சொல்வார்கள். நமது வீட்டிலிருக்கும் குளிர்பதனப் பெட்டியிலிருந்து தொடங்கி மருத்துவமனைகளில் இருக்கும் ஃப்ரீஸர்கள் வரை பெரும்பாலான குளிர்சாதன இயந்திரங்கள் இந்த முறையில்தான் இயங்குகின்றன. இந்த mRNA தடுப்பூசி பெரிய VIP போல் கண்ணும் கருத்துமாக உபசரிக்கப்பட வேண்டியிருப்பதால், இப்படி மேலும் கீழும் போய்வராமல், மிகச் சரியாக ஒரே வெப்பநிலையைப் பராமரிக்கும் சாதனங்களின் தேவை அதிகரிக்கலாம். இந்த உறைநிலைத் தேவை மருந்தின் விலையை ஏற்றுவதோடு உலகெங்கிலும் விநியோகிப்பதில் நாம் விற்பன்னர்களாகும்வரை சவால்களையும் தொடர்ந்து முன்வைக்கும். அதோடில்லாமல், மருந்தை வெளியே எடுத்தபின் எத்தனை நேரம் அது மனிதர்களின் உடலுக்குள் செலுத்தும் வெப்பநிலைக்கு வருவதற்காகப் பொறுத்திருக்க வேண்டும் (Equilibration) என்பதை மருத்துவ நிறுவனங்கள் தடுப்பூசியைக் கையாளும் அத்தனை பேருக்கும் சொல்லிக் கொடுக்கவேண்டும். வெவ்வேறு கம்பனித் தடுப்பூசிகளுக்கு இந்தக் கையாளும் முறைகள் வெவ்வேறாக இருக்கும். தேவையான நேரம் வரை பொறுத்திருக்காமல், சட் சட்டென்று ஊசியைப் போட்டுக்கொண்டு போனால், குளிர்ந்த ஊசி மருந்து நிறைய தசை வலியை தேவை இல்லாமல் தந்து தொல்லையளிக்கும் வாய்ப்பிருக்கிறது.

அஸ்ட்ர-ஜெனகா என்ற நிறுவனம் ஆக்ஸ்போர்ட் பல்கலையின் உதவியுடன் தயாரித்திருக்கும் தடுப்பூசி நாம் முதலில் பார்த்த பழைய மாடல் முறையைக் கொஞ்சம் மாற்றி இன்னொரு விதமாய் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த முறையில், மேலே இருக்கும் படத்தில் காட்டியிருப்பது போல, சிம்பன்ஸி குரங்கினத்தில் காணப்படும் அடினோ வைரஸ் என்றழைக்கப்படும் ஒரு வைரஸ்ஸைப் பிடித்து, அந்த வைரஸ்சின் உடலில் கோவிட்-19 வைரஸ்ஸின் முகத்தைப் பதித்து, அந்த பதப்படுத்தப்பட்ட வைரஸ்ஸைத் தடுப்பூசியில் போட்டுக் கொடுக்கிறார்கள். அந்த ஒரிஜினல் அடினோ வைரஸ் சிம்பன்ஸி குரங்கினத்திற்கு மட்டும் லேசான ஜலதோஷத்தைக் கொடுக்கும் கொஞ்சம் சாதுவான வைரஸ். அது மனித இனத்தைக் கண்டுகொள்வதே இல்லை. எனவே, அதை ஒரு செயலிழந்த வைரஸ்ஸுக்குச் சமமாகக் கருதலாம். அதற்குள் கோவிட் முகத்தை வைத்துவிடுவதால், தடுப்பூசி வழியே உள்ளே வந்துசேரும் அந்தத் தீவிரவாதி முகத்தைப் பார்த்ததும் நம் உடல், புஜம் தட்டித் தயாராகி நமக்குக் கொரொனா எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக் கொடுத்துவிடும்.

இந்தத் தடுப்பூசி mRNA முறையை உபயோகிக்காமல் செயலிழந்த வைரஸ்ஸை உபயோகிப்பதால், ஆழ்ந்த உறைநிலை ஏதும் இதற்குத் தேவையில்லை. ரஷ்யா பெரிதாக மார்தட்டிக் கொண்டு அறிவித்திருக்கும் ஸ்புட்னிக்-5 தடுப்பூசியும், சைனா உருவாக்கியிருக்கும் தடுப்பூசிகளும் இந்த அடினோ வைரஸ் மாடலைத்தான் பின்பற்றுகின்றன. எனவே இவை தயாரிப்பு மற்றும் விநியோகச் செலவில் mRNA மருந்துகளை எளிதில் தோற்கடிக்க வாய்ப்பிருக்கிறது. இவற்றில் ஸ்புட்னிக்-5 தடுப்பூசி பற்றிய பரிசோதனைத் தரவுகள், விவரங்கள் அதிகம் கிடைக்காததால், பூட்டின் கொஞ்சம் கதை விட்டுக்கொண்டிருக்கிறாரோ என்று பலரும் சந்தேகத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். சமீபத்திய மேற்கத்திய செய்திகள் ஸ்புட்னிக்-5 தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மோசமான பக்கவிளைவுகளைத் தடுக்க, இரண்டு மாதங்களுக்கு எந்தவித மதுபானங்களும் அருந்தக் கூடாது, அதிபர் பூட்டின் அந்தத் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளவில்லை என்றெல்லாம் தெரிவிக்கின்றன. அவை தவறாக இருந்து, மருந்து நன்கு வேலை செய்தால் ரஷ்யாவுடன் சேர்த்து வேறு பல நாடுகளுக்கும் நல்லதுதான்.

தடுப்பூசிகள் ஒழுங்காக வேலை செய்கின்றன, பக்க விளைவுகள் ஏதும் பெரிதாக இல்லை என்று நிரூபிப்பதற்காக ஏகப்பட்ட நெறிமுறைகளும், விதிகளும் இருக்கின்றன. முதல், இரண்டாம், மூன்றாம் கட்டப் பரிசோதனைகளில் முறையே சில, பல, ஆயிரக்கணக்கான பேர்களுக்கு ஊசி போட்டுப் பல வாரங்களுக்கு அவர்களைக் கூர்ந்து கவனித்து வரவேண்டும். இத்தகைய மேற்கத்திய சோதனை முறைகளில், இரட்டைக் குருட்டு ஆய்வு (Double Blind Study) என்பதுதான் பெரிதளவில் நம்பப்படும் ஆய்வு முறை. இதன்படி ஆயிரம் பேர் ஒரு மருந்துப் பரிசோதனையில் பங்கேற்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அதில் பாதிப் பேருக்கு, அதாவது ஐநூறு பேருக்கு, பரிசோதிக்கப்படும் மருந்தும் மற்ற ஐநூறு பேருக்கு மருந்துபோலவே தோன்றும் வெறும் போலித் தண்ணீரும் (Placebo) கொடுக்கப்படும். யாருக்கு ஆய்வில் இருக்கும் நிஜ மருந்து கொடுக்கப்படுகிறது, யார் வெறும் போலி மருந்தைப் பெறுகிறார்கள் என்பது பங்கேற்கும் ஆயிரம் பேருக்கும் தெரியாது. அதேபோல் அந்த தடுப்பூசியைப் போடும் நர்ஸ், டாக்டர் யாருக்கும் எது மருந்து, எது தண்ணீர் என்று தெரியாது. இப்படித் திரட்டப்படும் தரவுகள் எந்தப் பக்கமும் சாயாத, தூய, சார்பில்லாத் தரவுகளாக இருக்கும். மருந்து தயாரிப்பு, விநியோகம் இதிலெதிலும் சம்பந்தப்படாத இன்னொரு குழுவினர், வெறும் எண்களாய்க் காணக்கிடைக்கும் நிஜ/போலி மருந்து, பங்கேற்பாளர்கள், நோயுற்றோர் பற்றிய தரவுகளைக் கொண்டு நிஜ மருந்தைப் பெற்றவர்கள் தண்ணீரைப் பெற்றவர்களுடன் ஒப்பிடும்போது நிஜமாகவே நோயிலிருந்து தப்பித்திருக்கிறார்களா என்று அலசுகிறார்கள்.
புற்றுநோய்க்கான புதிய மருந்து என்றால், அந்த குறிப்பிட்ட புற்றுநோயால் அவதிப்படும் நோயாளிகளில் பலரைத் தேர்ந்தெடுத்து, பாதிப் பேருக்கு அந்தப் புதிய மருந்து கொடுத்தும், மற்ற பாதிப் பேருக்கு போலித்தண்ணீரைக் கொடுத்தும் சோதனை நடத்தி, புதிய மருந்தின் செயல்திறனைக் (Efficacy) கணக்கிடுவார்கள். அங்கே ஆய்வில் பங்கேற்கும் அத்தனை பேருக்கும் அந்த நோய் நிச்சயம் இருக்கும். ஆனால் இது தடுப்பூசி என்பதால், கொரொனாவால் ஏற்கெனவே அவதிப்படும் நோயாளிகளைப் பிடித்துப் பரிசோதிக்க முடியாது. எனவே, மூன்றாம் கட்டத் தேர்வுகளில் நூறு இருநூறு பேர்களுடன் நின்று விடாமல், பல்லாயிரக் கணக்கான பொதுமக்களைத் தேர்ந்தெடுத்து, பாதிப் பேருக்கு நிஜத் தடுப்பூசியும், பாதிப் பேருக்குத் தண்ணீர் ஊசியும்போட்டு, அடுத்த சில வாரங்களில் எத்தனை பேருக்குக் கொரொனா தொற்று வந்திருக்கிறது என்று சோதிக்கிறார்கள். தடுப்பூசியின் செயல் திறனை இவ்வாறுதான் ஆய்ந்தரிய முடியும். ஆய்வில் ஈடுபடுத்தப் படுவோரில் 99 சதவீதம் பேருக்கு இயற்கையிலேயே தொற்று வராது. எனவே மருந்து கொடுக்கப்படுவோரின் எண்ணிக்கை மிகவும் பெரிதாக இருந்தால்தால், தொற்று இயற்கையாக வரும் 1% மக்களில் இருந்து வீரியத்தை சரியாக அளவிட முடியும். உதாரணமாகப் ஃபைசர் நிறுவனம் நடத்திய சோதனையில் 44,000 பேர் பங்கேற்றனர். 22,000 பேருக்கு நிஜ ஊசியும், 22,000 பேருக்கு போலித் தண்ணீரும் கொடுத்துச் சில வாரங்கள் கவனித்ததில், மொத்தத்தில் 94 பேருக்கு தொற்று ஏற்பட்டிருக்கிறது. தரவுகளைப் ஃபைசர் நிறுவனத்தைச் சேர்ந்தவர்களோ, மருந்து கொடுத்த நர்ஸ், டாக்டர்களோ இல்லாத வேறு ஒரு குழு ஆராய்ந்தபோது, தடுப்பூசியின் செயல்திறன் 90 சதவீதத்திற்கும் மேல் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். அதை இப்படிப் புரிந்து கொள்ளலாம். அந்த 94 பேர்களில் 47 பேர் இங்கே, 47 பேர் அங்கே என்று இருந்திருந்தால், மருந்தினால் ஒரு பயனும் இல்லை என்று முடிவாகி இருக்கும். அதற்கு பதிலாக ஒருவர்கூட நிஜ தடுப்பூசி பெற்ற கூட்டத்தில் நோயுறவில்லை என்றால், மருந்து இந்த ஆய்வில் பங்கேற்ற சாம்பிள் மக்களைப் பொறுத்தவரை 100% பயனுள்ளது என்று முடிவாகியிருக்கும். உண்மையில் போலி மருந்து பெற்றவர்களிடையே ஏறக்குறைய 90 பேரும், நிஜ மருந்து பெற்றவரகளிடையே 3, 4 பேரும் நோயுற்றதால், மருந்தின் செயல்திறன் 90 சதவீதத்திற்கும் மேல் என்று கணித்திருக்கிறார்கள்.
இந்தத் தடுப்பூசி மருந்துகளைச் சந்தேகிப்பவர்கள் முன்வைக்கும் கேள்விகளை அல்லது அவர்களின் குழப்பங்களை 8 வகைப் படுத்தலாம். அவையாவன + நமது இப்போதைய புரிதல்கள், பிராக்கெட்டுக்குள்:
- இது ஏதோ புது மாதிரியான தடுப்பூசி. இதனால் நமது DNA எல்லாம் மாறி விடுவதால், நமது சந்ததியர்கள் எல்லோருக்கும் இது உலை வைக்கும். [மேலே நீளமாக விவாதித்ததுபோல், இந்த புதிய தடுப்பூசி முறை நம்மையும் நமது சந்ததியரையும் DNAயை மாற்றி உருக்குலைப்பதெல்லாம் அதீதக் கற்பனை. அப்படியெல்லாம் பயப்படத் தேவையில்லை. வழக்கமாகப் புழக்கத்திலிருக்கும் தடுப்பூசிகள் செயலிழந்த தொற்றுண்ணிகளை உடலுக்குள் அனுப்புகின்றன என்று பார்த்தோம். புதிய mRNA தடுப்பூசிகள் வெறும் தொற்றுண்ணி முகத்தை மட்டும் தயாரிக்கும் குறிப்புகளைத்தான் உள்ளே செலுத்துகின்றன என்பதால், காலப்போக்கில் இந்த முறை இன்னும்கூடப் பாதுகாப்பானது என்று கருதப்படலாம். 1960களில் போலியோ தடுப்பூசி வந்த புதிதில், தயாரிப்பின்போது நிகழ்ந்த ஒரு தவறால், உயிருள்ள வைரஸ்கொண்ட மருந்தைத் தடுப்பூசி என்று நினைத்துப் பலருக்குக் கொடுத்து, அவர்களுக்கெல்லாம் போலியோ வந்த ஒரு பரிதாப வரலாறு இருக்கிறது. அது ஒரே ஒருமுறை 1960களில், இந்த தடுப்பூசித் தொழில்நுட்பமே புதிதாய் இருந்த சமயத்தில் நிகழ்ந்த ஒரு தவறு என்றாலும், mRNA தடுப்பூசிகளில் அந்தத் தவறு நடக்க வாய்ப்பே இல்லை. ]
- பொருளாதாரம் வீழ்கிறது என்பதால் பேருக்குப் பரிசோதனை செய்துவிட்டு, எல்லோரும் போட்டுக்கொள்ள தடுப்பூசி தயார் என்று கதை விடுகிறார்கள். சாதாரணமாக ஒரு தடுப்பூசி தயாரித்து வெளிக்கொணர ஆறு வருடங்கள் பிடிக்கும் என்கிறார்கள். ஆனால் கொரொனா தடுப்பூசி மட்டும் ஆறே மாதங்களில் தயாரித்து விட்டார்களே?! [மற்ற பாரம்பரியத் தடுப்பூசிகளுடன் ஒப்பிடும்போது இந்தத் தடுப்பூசி மிக விரைவாக சந்தைக்கு வருகிறது என்பது உண்மைதான். ஆனால் பரிசோதனைகள் பற்றிய தரவுகள் எளிதாக எல்லோருக்கும் கிடைக்கும்படி பிரசுரிக்கப்பட்டிருக்கும்போது, நாம் தேவை இல்லாமல் கவலைப்பட வேண்டாம். உலகமே கொரொனாவால் ஒரு வருடமாக ஒடுங்கிக் கிடக்கும்போது தடுப்பூசி தயாரிப்பு கிடுகிடுவென நடந்து முடிவதுதானே நியாயம்? பழைய முறைப்படி மெதுவாக சோதனைகள் செய்துமுடிக்க 5, 10 வருடங்கள் ஆகும் என்றால், அதுவரை உலகுக்கு பூட்டுப்போட்டு மூடிவைப்பது முட்டாள்தனமில்லையோ? ஆகவே தயாரிப்பைத் துரிதப்படுத்தப் பல செய்முறைகளை (எக்கச்சக்க செலவில்) கையாண்டிருக்கிறார்கள். இதன்படி அரசாங்கங்களின் அனுமதி கிடைக்கும் முன்பே, கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையுடன், பெரிய அளவில் தொழிற்சாலைகளில் மருந்துத் தயாரிப்பைத் துவங்கிவிட்டார்கள். அனுமதி கிடைக்காவிட்டாலோ, கடைசியில் மருந்து சரியில்லை என்று தெரியவந்தாலோ, பல கோடி ரூபாய் பெறுமானமுள்ள அத்தனை மருந்தையும் குப்பையில் கொட்ட வேண்டியதுதான். பிற சமயங்களில் இப்படிச் செய்தால், நஷ்டம் முழுதும் மருந்துக் கம்பனியின் தலையில் விழுந்து கம்பனி திவாலாகும் நிலைவரும். எனவே, அனுமதி கிடைக்கும்வரை உற்பத்தியைத் தொடங்கமாட்டார்கள். அரசாங்கங்கள் இந்தமுறை நஷ்டத்தை ஏற்றுக்கொள்ள முன்வந்திருப்பதால், இப்படித் தயாரிப்பை ரிஸ்க் எடுத்துக்கொண்டு துரிதப்படுத்த முடிந்திருக்கிறது.]
- இந்தப் புதிய மருந்துகளைப் பற்றி யாரும் எந்தக் கேள்வியும் கேட்கக்கூடாதா? எல்லா விஷயங்களும் தெளிவாகிவிட்டதா? தடுப்பூசி தயாரிப்பை இவ்வளவு விரைவாக செய்ய முடியும் என்றால், 1980களில் இருந்து உலகைப் படுத்திவரும் எய்ட்ஸ் நோய்க்கு ஏன் இன்னும் தடுப்பு மருந்தெதுவும் உருவாகவில்லை? [மருந்தின் செயல்திறன் எவ்வளவு நாளைக்கு நிலைக்கும், கோவிட் – 19 உருமாறி புதிய கோவிட்-20 ஆகத் தலையெடுத்தால் மருந்து அதிலிருந்தும் நம்மைக் காக்குமா என்பவை எல்லாம் சரியான, கேட்கப்பட வேண்டிய கேள்விகள்தாம். இந்தக் கேள்விகளுக்கு விடை கிடைக்க இன்னும் சில வருடங்கள் ஆகும். அதில் தவறேதுமில்லை. கோவிட்-19 உடன் ஒப்பிட்டால் எய்ட்ஸ் வைரஸ் இன்னும் பொல்லாதது, சாமர்த்தியமானது. எக்கச்சக்க மரபணுப் பிறழ்வுகளால் (Genetic Mutation) எய்ட்ஸ் வைரஸ் பல அவதாரங்களில் உலவுகிறது. அதற்கு கிட்டத்தட்ட நூறு வித வடிவங்கள் இருப்பதால், தடுப்பு மருந்து உருவாக்க முடியாமல் இன்னும் தடுமாறிக் கொண்டிருக்கிறோம். அத்துடன், அதனால் மனித செல்களுக்குள் ஒளிந்து கொண்டு மருந்துகளில் இருந்து தப்பிக்கவும் முடிவது மருந்து தயாரிப்பை மிகவும் கடினமாக்குகிறது. கோவிட்-19 கேசில் இதுவரை ஒரே ஒரு ஜீனோம்தான். அது அப்படியே இருக்க வேண்டும் என்று நாம் நமது இஷ்ட தெய்வங்களை வேண்டிக் கொள்வது நல்லது.]
- இந்தியாவில் யாரோ ஒருவருக்கு இந்தத் தடுப்பூசி கொடுத்ததில் உடல்நிலை மிகவும் மோசமாகி, கோர்ட்டில் கேஸ் போட்டிருக்கிறாராமே? [உயிரியல் தத்துவங்களின்படி ஒவ்வொரு ஆணும் பெண்ணும் தனித்தனிப் பிறவிகள். எந்த ஒரு மருந்தும் உலகில் உள்ள எல்லோர் உடலிலும் ஒரே மாதிரியாக செயலாற்றுவதில்லை. மூன்றாம் கட்டத் தேர்வுகளில் 40,000 பேருக்குத் தடுப்பூசி போடப்படும்போது, ஓரிவருக்குத் தவறான விளைவுகள் ஏற்படுவது சாத்தியம். இதைக் கூர்ந்து கவனித்து மருந்தைத் திருத்தி அமைப்பதும், கொடுக்கப்படும் மருந்தின் அளவைக் கூட்டிக் குறைப்பதும் மருந்து நிறுவனங்கள், விஞ்ஞானிகள் மற்றும் அரசாங்கங்களின் வேலை. நிறையப் பேருக்கு மோசமான பக்கவிளைவுகள் ஏற்பட்டால், பரிசோதனைகளை நிறுத்தி விடுவார்கள். சமீபத்திய ஒரு செய்தி ஆஸ்த்ரேலியா பரிசோதித்த ஒரு மருந்தின் பக்கவிளைவுகள் அதிகமாக இருந்ததால், அந்த மருந்தை அவர்கள் கைவிட்டுவிடப் போவதாக தெரிவிக்கிறது. சாதாரண தலைவலி மாத்திரையான ஆஸ்ப்ரின் உலகெங்கிலும் பலரால் தினமும் பல கோடி முறை 40 வருடங்களாய் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. இருந்தாலும் இப்போதும் கூட அதன் எதிர் விளைவுகளால் மிகமிக அரிதாக ஒருவருக்கு மரணம்கூட நிகழலாம். அதற்காக ஆஸ்ப்ரின் உபயோகத்தை முற்றிலும் தடைசெய்தால் அதனால் கிடைக்கும் நல்ல விளைவுகள் அனைத்தையும் நாம் இழக்க நேரும். அதேபோல் இங்கேயும் மருந்தை எப்படி மேம்படுத்தலாம் என்று யோசிப்பதும் குறிப்பிட்ட கோளாறுகள் உள்ள சிலருக்கு இந்தத் தடுப்பூசியைக் கொடுக்கவேண்டாம் என்று முடிவெடுப்பதும் சரி. உதாரணமாக இங்கிலாந்தில் ஃபைசர் தடுப்பூசி இப்போது பொதுமக்களுக்கு பரவலாக கொடுக்கபட்டு வருகிறது. போட்டுக்கொண்டவர்களில் அதீத ஒவ்வாமை (Extreme Allergies) உபாதை உள்ள ஓரிருவருக்கு பக்கவிளைவுகள் அதிகமாக இருந்திருக்கின்றன. முறையான சிகிசைகளுக்குப் பின் அவர்கள் குணமாகி விட்டார்கள் என்றாலும், இப்போதைக்கு அதீத ஒவ்வாமை உள்ள பொதுமக்கள் ஊசியைப் போட்டுக் கொள்ளவேண்டாம் என்று பரிந்துரைத்திருக்கிறார்கள். இத்தகைய முடிவுகள் சரியானவை. ஆனால், அந்த ஓரிரு எதிர்மறை விளைவுகளால் யாருமே தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல், எத்தனை பேர் மரணமடைந்தாலும் சரி என்று இருப்பது நிச்சயம் சரியான அணுகுமுறை இல்லை.]
- இது சைனா / டிரம்ப் / பில் கேட்ஸ் / பூட்டின் / மருந்துக் கம்பனிகள் எல்லாம் சேர்ந்தோ, தனித்தனியாகவோ உலகைத் தம் கட்டுக்குள் கொண்டுவர அல்லது பணம் செய்யச் செய்திருக்கும் சதி. [யோசித்தால் இந்தப் பழிகள் ஏதும் உண்மையானவையாகத் தெரியவில்லை. பல அரசாங்கங்கள் தடுப்பூசியை இலவசமாக மக்களுக்கு வழங்கத் தயாராகிக் கொண்டிருக்கின்றன. மருந்துக் கம்பனிகள் அதிகமான பணம் பண்ணக்கூடாது என்று பல அரசாங்கங்களும் NGOக்களும் கூறி /கவனித்துவருகின்றன. டிரம்ப் / பில் கேட்ஸ் போன்றவர்கள் இதிலிருந்து பயனடைந்திருப்பதுபோல் தோன்றவில்லை. சைனா தன் மக்களைப் பாதுகாப்பதில் முனைந்திருக்கிறதே தவிர, பெரிதாக உலகிற்கு மருந்து விற்றுப் பணம் பண்ணுவதாய்த் தெரியவில்லை. வெகு விரைவில் வெளிவரவிருக்கும் அத்தனை தடுப்பூசிகளும் ஜனவரி 2020ல் சைனா விஞ்ஞானிகள் அதிரடியாக ஆய்ந்தரிந்து எழுதிக்கொடுத்த கோவிட்-19 மரபணு விவர வரிசைகளை உபயோகித்துதான் சர்வதேச ஒத்துழைப்புடன் உருவாக்கப் பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.]
- இவவளவு பேசுகிறாயே, தடுப்பூசி கிடைத்ததும் தைரியமாக நீ போட்டுக் கொள்வாயா? [நானும் என் மனைவி குழந்தைகளும் போட்டுக் கொள்வதாகத்தான் இருக்கிறோம்.]
- அப்படியானால், எந்த மருந்து சிறந்தது? எப்படி நான் வரிசையில் முதலிடம் பிடிப்பது? [தரவுகள் கிடைக்கையில், எண்கள் மருந்தின் செயல்திறன் 90%க்கு மேல் என்று துல்லியமாக நிரூபித்தால், அந்த ஊசியைப் போட்டுக்கொள்ளலாம். சாதாரண ஃப்ளு தடுப்பூசி சுமார் 60% மட்டுமே பயனுள்ளது என்பதால், பலகோடிப் பேருக்கு போடும்போது இந்தத் தடுப்பூசிகளின் செயல்திறனும் இறுதியில் கொஞ்சம் கீழே வர வாய்ப்பிருக்கிறது. ஆனாலும் மக்கள் தொகையில் சுமார் 70% பேர் ஒரு குறிப்பிட்ட நோய்க்கான தடுப்பூசியைப் போட்டுக்கொண்டு, நோய்க்கான எதிர்ப்பு சக்தியைப் பெற்றிருந்தால்தான் Herd Immunity என்று சொல்லப்படும் சமூகம் தழுவிய நோயெதிர்ப்பு நிலைத்து நிற்கும். அதாவது ஒருவருக்குத் தொற்று ஏற்பட்டாலும், அது அடுத்தடுத்து மற்றவர்களுக்குப் பரவாமல் அப்போதுதான் சமூக அரணால் தடுத்து நிறுத்த முடியும். இந்த வைரஸ் மிக எளிதில் பரவுகிறது என்பதால், ஆரம்பத்தில் மருத்துவப் பணியாளர்கள், வயதானவர்கள் போன்றவர்களுக்கு முன்னுரிமை கொடுத்துவிட்டு அவரவர் முறை வரும்போது தடுப்பூசி போட்டுக்கொள்வது நல்ல குடிமக்களாக நாம் நமது சமுதாயத்திற்குச் செய்யவேண்டிய கடமை.]
- சரி, எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. மற்றவர்களின் குழப்பங்கள் தீர நான் என்ன செய்யவேண்டும்? [முதலில் WA அல்லது மின்னஞ்சலில் வரும் தத்துப்பித்து விஷயங்களை எல்லோருக்கும் ஃபார்வார்டு செய்யாதீர்கள். Forwarded as Received என்று போட்டுவிட்டால் உங்கள் பொறுப்பு முடிந்ததாகாது. தயவுசெய்து, வரும் செய்திகளில் உண்மை இருக்கிறதா என்று நீங்களே நாலு இடங்களில் தேடிப்பாருங்கள். இந்தத் தடுப்பூசி விஷயத்தில் மட்டுமின்றி எல்லாச் சமயங்களிலும் நாம் பொறுப்புடன் நடந்துகொண்டால் நாம் போகும் வழிக்குப் புண்ணியம் வந்து சேரும். பணம் பண்ணும் அல்லது ஏதாவது ஒரு அரசியல் கொள்கையைப் பிரபலப் படுத்தும் எண்ணங்கள் ஏதுமின்றி விஞ்ஞானம் சார்ந்த உண்மைகளைச் சொல்ல முயலும் செய்திக் கட்டுரைகளை உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு சுட்டிக் காட்டி விளக்கம் தர முயலுங்கள்.]

சமீபத்திய தொலைக்காட்சிச் செய்திப்படி, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிகள் ஒபாமா, புஷ், கிளிண்டன் மூவரும் முன்னுரிமை ஏதும் கோராமல் வரிசைப்படி அவர்களுக்குக் கிடைக்கும்போது, எல்லோரும் பார்க்கும்படி, தொலைக்காட்சிக் காமிராக்களுக்கு முன்பு இந்தத் தடுப்பூசியைப் போட்டுக் கொள்வோம் என்று அறிவித்திருக்கிறார்கள். 1960-களில் போலியோ தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் பயந்தபோது, எல்விஸ் ப்ரெஸ்லி ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஊசி போட்டுக்கொண்டது பொதுமக்களின் பயத்தைப் போக்க மிகவும் உதவியது.

இந்தியாவில் ரஜினிகாந்தும், அமிதாப்பச்சனும் எப்போது TVயில் ஊசி போட்டுக்கொள்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரிய வந்தால் நாலு பேருக்குத் தெரியப்படுத்துங்கள். WA மெசேஜ் ஆகப் ஃபார்வார்டு செய்தீர்களானும் கூடப் பரவாயில்லை. அப்போதுதான் அடுத்த பொங்கலுக்காவது “அதிகம் சொதப்பியது யார்?” தலைப்புகளுக்கு பதில், இந்தத் தொற்றுண்ணியைப் புறமுதுகிட்டு ஓட வைத்து “கொரொனா கொண்டான்” பட்டம் பெற்றது என்று கொண்டாடப்பட வேண்டியது அடினோவைரஸ் தடுப்பூசியா, mRNA தடுப்பூசியா? என்று சாலமன் பாப்பையாவால் பட்டிமன்றம் நடத்த முடியும். உலகம் உங்களுக்கும் சேர்த்துக் கைதட்டும்.
மிக நீண்ட அலசல். வருவதற்கு முன்னரே பல சந்தேகங்களை எழுப்பாமல் விவரங்களை புரிந்துகொள்ள முயற்சிக்கலாம். காலத்திற்கேற்ற சிறப்பான கட்டுரை.
Thanks for the Superb article. Cleared all my doubts except one, Ex pfizer vp/chief scientist said covid is already over and no need for vaccine. We see less number of cases only reported recently and the drs I interacted also said that the viral load is very less, so the mortality.
Thanks for the feedback. Situation, particularly in the US, is quite dire. Infection rate is surging now as we enter the winter months (when people tend to remain indoor and congregate with family & friends around the holidays) that does not bode well. Daily death rate is topping 3000, while some states have already declared that they are officially out of ICU beds. Perhaps situation elsewhere, including India, might be comparatively better. But I certainly don’t get the sense that the worldwide pandemic is over.
சிறப்பான கட்டுரை. vaccines and vaccinations குறித்து கொரோனாவுக்கு முன்புமே மக்களுக்கு ஏரளமான சந்தேகங்கள் இருந்தன. இப்போது கொரொனாவினால் பெரும் குழப்பம் நிலவுகின்ற நிலையில் விரிவான இக்கட்டுரை தமிழில் வந்தது நன்று. ஒரு ஆசிரியையாக immunology கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இந்த கட்டுரையை பரிந்துரைத்திருக்கிறேன். எனக்கு வைரஸின் முகத்தை பதிப்பது என்னும் சொற்பிரயோகமும் , நுண்கிருமிகளை தீவிரவாதிகளுடன் ஒப்பிட்டதும் மிகவும் பிடித்திருந்தது. தடுப்பு மருந்து சோதனைகளை எளிதில் அனைவரும் புரிந்துகொள்ளும் படி விவரித்திருததும் நன்று. அறிவியல் தளத்தில் கொஞ்சமும் பரிச்சயமற்றவ்ர்களும் எளிதில் புரிந்துகொள்ளும்படியான விளக்கங்கள்.கொரோனாவைக்குறித்த எல்லா விதமான அலசலும் செய்யப்பட்டிருக்கும் கட்டுரை, நன்றி
சரியான சமயத்தில் மிகச் சரியான விவரங்களுடன் மிக சுலபமாக புரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது. பாராட்டுக்கள்
My brother in law works in AstraZeneca, so he explained me about ‘Adino virus – technology’ they are using. This article explains the new mRNA to the simplest possible level.
But Adino virus technique might lead the race because of its easy storage and cost effective design.
Thanks for the info. We will fwd this in WA!
கட்டுரை மிகவும் கவனமாக அனைவரும் புரிந்து கொள்ளும்படி எழுதப்பட்டுள்ளது முக்கியமாக நமக்கு தெரியவேண்டிய விபரங்களை விரிவாக சொல்லப்பட்டுள்ளது பாராட்டுக்குள்ளது.
நல்ல கட்டுரை. விளக்கமாக உள்ளது. வாட்ஸாப்பில் வதந்திகள் வந்தால் இந்த கட்டுரையின் சுட்டியை பதிலாக அனுப்பி பிராயச்சித்தம் செய்து கொள்ளுங்கள்.
Nicely written. Hats off.
தற்போதய சூழ்நிலையில் மிகவும் தேவையான சிறந்த விழிப்புணர்வு தரும் கட்டுரை. வாழ்த்துக்கள்.
Very nicely written. Clear and simple to understand. the language is also very apt for the subject. good worlk keep it up.
D.Krishnamurthy
A real eye opener. Well researched and written in a lucid way.But still I have a doubt.mRNA is the one that transfers the genetic code of the DNA of the cell nucleus to a ribosome in the cytoplasm.this decides the order in which amino acids of a protein bind and act. In such a scenario, whether it would result in genetic modification? The article says clearly that only the face of the virus would be read by the vaccine and that itself would not lead to any genetic modifications. Still if you could elucidate on this , I shall be very grateful
Thank you for the positive feedback. I interpreted your question as related to modification of human genome. For that to occur, the new gene has to become part of the germ line or nucleus and should continue to divide with the human cell as it goes through replication. This is not possible. Alternately if the question is about virus genome modification, viruses are quite capable of amazing mutations but just the use of a spike protein in human cell, that is produced using its own template, doesn’t have a path to modify the virus genome. So, the mRNA technique used to develop required antibodies appear safe. I checked with a pharma researcher friend of mine, just to be sure.
ஹெல்த்கேர் மாத இதழில் இக்கட்டுரையை வெளியிடலாமா?
தாராளமாக வெளியிடுங்கள். சொல்வனம் வழியாக சொல்லவந்ததை இன்னும் நிறையப் பேருக்கு தெரியப்படுத்துவது நல்லதுதான். நன்றி.
You can find an English translation of this article at
http://sundarvedantham.blogspot.com/2020/12/corona-vaccine.html
for your friends that can’t read Tamil.
Thanks, Sir. This specifically addressed my doubt and cleared the same well. Thanks again