“கலையின் மாயத்தைப் பற்றி எழுதுகிறேன்”

ரா கிரிதரன் பேட்டி

ரா. கிரிதரனின் அம்மா ஊர் திண்டிவனம். அப்பாவுக்கு புதுச்சேரி. புதுச்சேரி பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பட்டப்படிப்பு. அதன்பின் தகவல் தொழில்நுட்பத்தில் எம்.டெக். படிப்பு. சென்னை, பெங்களூர், பூனா போன்ற நகரங்களில் வேலை செய்தபின் 2006 ஆண்டு முதல் இங்கிலாந்து வாசம். லண்டனில் வசித்து வருகிறார். கைப்பிரதியாக எழுதி வைத்திருந்த கதைகளையும் மொழிபெயர்ப்புகளையும் தட்டச்சு செய்து தன் வலைப்பக்கத்தில் பதிந்திருக்கிறார். புனைவு வாசிப்பிலும் எழுதுவதிலும் தொடர்ந்து ஈடுபட்டு இயங்கி வருகிறார். தமிழ்ச் சிறுபத்திரிகையான ‘வார்த்தை’ இதழில் தொடங்கி வலைதளத்திலும், சொல்வனம், அரூ, பதாகை, ஆம்னிபஸ், வலசை, பண்புடன், திண்ணை, தமிழினி போன்ற மின்னிதழ்களிலும் தொடர்ந்து எழுதுகிறார். எழுத்தாளர் பாவண்ணனின் படைப்புகளைத் தாங்கிய பதாகை இணைய இதழின் சிறப்பிதழுக்குப் பொறுப்பாசிரியர். மரபிலக்கியத்திலும் நவீன இலக்கியத்திலும் உலகப் புனைவு இலக்கிய வாசிப்பிலும் விமர்சனங்களிலும் மிகுந்த ஆர்வமுள்ளவர். நவீன அறிவியல் மற்றும் அறிவியல் புனைவுகளை விரும்பிப் படித்து வருகிறார். கர்னாடக சங்கீதம் – ஓர் எளிய அறிமுகம் எனும் நூலைத் தமிழாக்கம் செய்துள்ளார். ரா.கிரிதரனின் ‘காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை‘ தொகுப்பு தமிழினி வெளியீடாக இந்த ஆண்டின் துவக்கத்தில் வெளியானது. இசைக் கட்டுரைகளின் தொகுப்பாகக் “காற்றோவியம்” நூல் அழிசி வெளியீடாகக் கிண்டிலில் கிடைக்கிறது.

https://aroo.space/author/giritharanra/

1. தற்போது நடக்கும் அமளி துமளிகளுக்கு நடுவே உங்களின் வாசிப்பு எவ்வாறு பாதிப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது? அன்றாடக் குழப்பங்களின் தாக்கத்தினால் படிப்பது மாறியிருக்கிறதா?

தீவிரமாக வாசித்துக்கொண்டிருந்த நாட்களில் அதற்கென குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கிக்கொண்டிருந்தேன். இரவு நேரங்கள் உற்சாகமான வாசிப்புக்கு வழிவகுத்த காலங்கள் உண்டு. சில வருடங்களுக்கு முன்னர் தொடர்ச்சியாக இரவில் எழுதுவதும் படிப்பதும் அதிகமானபோது கண் மற்றும் தலைவலியால் பிற வேலைகள் தடைபட்டன. அலுவலகம் செல்லும்போது ரயிலிலும் அதிகாலை நேரங்களிலும் படிப்பதை ஒதுக்கிக்கொண்டபின் பிற குழப்பங்களால் பாதிப்புக் குறைந்தது.  முன்னர் அலுவலகம் செல்லும் ரயிலில் அதிகம் படிப்பதும் எழுதுவதும் நடக்கும். கொரோனா காலம் முழுவதும் வீட்டிலிருந்து வேலை செய்வதால் குடும்பத்துக்கு அதிகமான நேரம் ஒதுக்க வேண்டியதாக உள்ளது. வாசிப்பதும் எழுதுவதும் இரவு மற்றும் அதிகாலையில் மட்டுமே.

2. தாங்கள் இசை குறித்க்ச் சொல்வனத்தில் நிறைய எழுதி இருக்கிறீர்கள். “காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை” புத்தகம் சமீபத்தில் வெளியானது. இப்போது யாரெல்லாம் இசை குறித்து எழுதுகிறார்கள்? சங்கீதம் குறித்த எழுத்துகளிலும் இசை விமர்சகர்களிலும் எவருடைய பத்திகளை விரும்பி வாசிக்கிறீர்கள்?

இசை மட்டுமல்லாது பொதுவாக நுண்கலைகள் மீதும் புனைவு மீதும் சம அளவிலான ஆர்வம் இருப்பதால் இரண்டைப்பற்றியும் அதிகமாக எழுதுகிறேன். இசை மற்றும் பிற கலைகளின் தகவல்கள், கலைஞர்களின் களஞ்சியம் எனத் தகவல் சார்ந்து எழுதாமல் கலையின் மாயத்தைப் பற்றி எழுதுவதில் அதிகம் ஆர்வம் உண்டு. ஏதோ ஓர் இடத்தில் கலை கலைஞனையும் மீறிப்போகிறது. அந்தக் கணங்களை அவரது வாழ்க்கை வழியாகவும் அவர் தேடிய கலை வழியாகவும் சென்றுசேர்ந்து, இட்டுநிரப்பி நெருங்கப் பார்க்கிறேன்.

பலரும் இசை பற்றி எழுதுகிறார்கள். எனக்கு முதன்மையானவர் லலிதா ராம். அவரது ரசனை மீதும் தேடல் மீதும் பெரும் மதிப்பும் பிரமிப்பும் உண்டு. இயல்பாகவே அவருக்குள் இருக்கும் மொழி மீதான கட்டுப்பாடும் என்னை ஆச்சர்யப்படுத்தும் ஒன்று. அவரது எழுத்திலிருந்தும் பரிவாதினி போன்ற தொடர் இயக்கங்கள் வழியும் நிறையக் கற்றுக்கொள்கிறேன். சில வருடங்கள்முன் அவருடன் கழித்த சில நாட்கள் இன்றும் சந்தோஷமான நினைவுகள்.

ராகா சுரேஷ், அருண் நரசிம்மன், சுகா, நாஞ்சில் நாடன், தி.ஜா என பெரிய வரிசை உண்டு. கலைஞர்கள் வாழ்க்கை வரலாற்றை மட்டும் சொல்லிச்செல்லும் கட்டுரைகள்மீது எனக்கு அதிக ஆர்வமில்லை. சில வருடங்களுக்கு முன்னர் தமிழிசை வரலாறு பற்றி எழுதிய பக்கிரிசாமி பாரதி, நா.மும்மது, சிலப்பதிகாரத்தில இசைச் செல்வங்கள் எழுதிய சேலம் எஸ்.செயலட்சுமி போன்றவர்கள்மீது ஆர்வம் இருந்தது.

ஆங்கிலத்தில் இத்துறையின் ஜாம்பவான்கள் பலர் இருக்கின்றனர். அலெக்ஸ் ராஸ், வாக்னரின் ஆன்மா எனச் சொல்லக்கூடிய எர்னெஸ்ட் நியூமேன் (Wagner’s night), ஐயன் போஸ்டிரிட்ஜ் (Schubert’s winter journey), Unanswered Question – லியனார்ட் பெர்ன்ஸ்டைன் (Leonard Bernstein) போன்றோர் உடனடியாக நினைவுக்கு வருகிறார்கள். இசை ஒருங்கிணைப்பாளராகவும் ஆசிரியராகவும் இருந்த அமெரிக்கக் கலைஞர் ஆரன் கோப்லாண்ட் (What to listen to in Music, Music & Imagination – Aaron Copland) எழுத்துகள் மிகவும் பிடிக்கும். 

3. இசை குறித்த கட்டுரைத் தொகுப்புகளில் குறிப்பிடத் தகுந்தவையாக, தங்களைப் பாதித்தவையாக எந்த நூல்களைச் சொல்வீர்கள்?

தமிழில் லலிதா ராம் எழுதிய துருவ நட்சத்திரம், ஜி.என்.பி புத்தகங்கள், ஸ்ருதி இசை இதழ்கள், எர்னெஸ்ட் நியூமேனின் வாக்னரின் இரவுகள், அலெக்ஸ் ராஸ் எழுதிய The Rest is Noise போன்றவை உடனடியாக நினைவுக்கு வரக்கூடியவை.  நுண்கலைகளைத் தகவல்களாக மட்டுமே சொல்லிச் செல்லும் எழுத்தைவிட என் கற்பனையைத் தூண்டிவிடக்கூடிய, மனிதர்களுக்குள் இருக்கும் உணர்ச்சிகளையும் இடைவெளிகளையும் காட்டக்கூடிய, வரலாற்றின்மீது வெளிச்சம் காட்டக்கூடிய எழுத்துமீது மிகப்பெரிய ஆர்வம் உண்டு.

4. சிறந்த கட்டுரையாளர்களாக, அபுனைவு எழுத்தாளர்களாக எவரை எல்லாம் பட்டியல் இடுவீர்கள்? தமிழுக்கு மட்டும் அல்லாமல் ஆங்கிலத்தையும் வைத்துக் கொள்ளுங்கள். வியாசம் என்றால் “ஒரு விஷயத்தைப்பற்றி யெழுதுங் கட்டுரை” என்கிறது அகராதி. உங்களின் வியாசர்கள் யார் யார்?

முதன்மையான கட்டுரையாளர் என்றால் பாரதியிடமிருந்து தொடங்கவேண்டும். அவருக்கு இருந்த சொற்ப வழிகள் அனைத்திலிருந்தும் செய்திகளைப் பெற்று தெளிவான கட்டுரைகளாக்கி இருப்பது இன்றும் பிரமிக்க வைக்கிறது.

அடுத்து வெங்கட் சாமிநாதன், சுந்தர ராமசாமி, ஜெயமோகன், அ. முத்துலிங்கம் போன்றோரைச் சொல்லத் தோன்றுகிறது. சமீப காலங்களில் நம்பி கிருஷ்ணன், கே.என்.செந்தில், சுனில் கிருஷ்ணன், சொல்வனத்தில் அறிவியல் கட்டுரைகள் எழுதும் ரவி நடராஜன் போன்றோரின் எழுத்துகளிலிருந்து தொடர்ந்து கற்றுக்கொள்கிறேன். பத்தி எழுத்தின் ஒரு முக்கியமான ஆரம்பம் எனச் சாரு நிவேதிதாவின் கோணல் பக்கங்களை நினைக்கிறேன். அதன் மிகத் தீவிரமான வடிவமாக கவிஞர் ராஜசுந்தரராஜனின் நாடோடித்தடம் தொகுப்பைப் பார்க்கிறேன். தொடர்ந்து அது போன்ற வடிவங்களை யாரும் முன்னெடுத்துச் செல்லாதது ஒரு குறைதான்.

ஜார்ஜ் ஆர்வெல், ரிஸாட் கபுஸ்கின் (Ryszard Kapuscin), பெர்னண்டோ பெஸாவோ (Fernando Pessao) போன்றோரின் எழுத்தில் இருக்கும் கற்பனை, புதுமை, தெளிவு ஆகியவற்றை மிகவும் ரசித்திருக்கிறேன்.

5. உங்களுக்குப் பிடித்த புனைவு எழுத்துக்கள் எவை? எவர்களின் நாவல்கள் உங்களைக் கவர்கிறது? யாரின் கதைகளை ரசித்து வாசித்திருக்கிறீர்கள்?

மாய (மயக்கு) மொழியில் கற்பனையையும் ரசனையையும் கூட்டும் புனைவுகளை நான் மிகவும் ரசித்துப் படிப்பேன். அதனாலேயே என்னால் மினிமலிஸ்டிக் எழுத்து முறையைக் கொண்டிருக்கும் பல நவீன அமெரிக்க எழுத்துகளை ரசிக்க முடியவில்லை. எதிர்காலத்தில் அது மாறலாம். இது கட்டாயம் என் போதாமையே. வில்லியம் ஃபாக்னர் ஒரு சிறந்த உதாரணம். ஐரோப்பிய எழுத்துகளில் ஒரு தீவிரத்தன்மைகூடிய மாயம் இருப்பதாக நான் நினைப்பது என் வாசிப்பு எல்லையாகக்கூட இருக்கலாம். தஸ்தாவெய்ஸ்கி, ஸ்டீபான் ஜ்ஸ்வேய்க் (Stephan Zweig), செபால்ட் (W.G.Sebald), மர்செல் ப்ரூஸ்ட் (Marcel Proust), தாமஸ் மன் (Thomas Mann), Alejo Carpentier (The Lost steps, Explosion in a Cathedral), ஓரான் பாமுக், டெட் சியாங்(Ted Chiang) , நீல் ஸ்டீவன்சன்(Neal Stephenson) போன்றோர் எனக்கு விருப்பமானவர்கள்.

தமிழில் கு. அழகிரிசாமி, புதுமைப்பித்தன், அ. முத்துலிங்கம், தி. ஜா, ஜெயமோகன், கோபி கிருஷ்ணன், வண்ணதாசன், யுவன் சந்திரசேகர், சுரேஷ் பிரதீப் போன்றோரின் கதைகளில் அது போன்ற மொழி அனுபவம் எனக்குக் கிடைக்கிறது. 

பிரான்சிஸ் கிருபாவின் கன்னி, ஜெயமோகனின் காடு, பின் தொடரும் நிழலின் குரல், நீலம், சுந்தர ராமசாமியின் ஜே.ஜே. சில குறிப்புகள்,  கோபி கிருஷ்ணனின் உள்ளிருந்து சில குரல்கள், யூமா வாசுகியின் மஞ்சள் வெயில் போன்றவை மனதுக்கு நெருக்கமான நாவல்கள்.

6. இந்த வருடத்தில் வாசித்த புத்தகங்களில் எது உங்களை ஈர்த்தது? எந்த நூலை (நூற்களை எல்லாம்) குறிப்பிடத்தகுந்ததாகச் சொல்வீர்கள்?

லீ சிக்ஸனின் Three body problem, ஸ்டான்ஸ்லா லெம் – Mortal Engines தொகுப்பு, கார்த்திகைப் பாண்டியன் மொழியாக்கம் செய்த  ‘கற்பனையான உயிரிகளின் புத்தகம்’ (போர்ஹெஸ்), தீராப்பகல் – எம் யுவனின் கவிதைத் தொகுப்பு, கண்டராதித்தன் (திருச்சாழல்) மற்றும் நா. பெரியசாமி (மதுவாகினி) கவிதைகள், ஆனந்தரங்கப் பிள்ளையின் நாட்குறிப்பு – இவையெல்லாம் இந்த வருடம் படித்ததில் கவர்ந்தவை.

கடந்த சில வருடங்களாக நண்பர்களுடன் தொடர் வாசிப்பில் இருக்கும் கம்ப ராமாயாணம் மற்றும் ஆழ்வார் பாசுரங்கள் என்றும் ஈர்க்கும் நூல்களாக இருக்கும் என நினைக்கிறேன். 

7. உங்களுக்கு இசையில் எவ்வாறு ஆர்வம் வந்தது? நீங்கள் முறையாகச் சங்கீதம் பயின்றீர்களா?

என் குடும்பத்தில் பலரும் இசையைக் கற்றுக்கொண்டு வந்துள்ளனர். அம்மா, பெரியம்மா, அக்காக்கள், என் அண்ணன் என கர்நாடக இசை பற்றிய பேச்சு எப்போதும் குடும்பத்தில் இருக்கும். பெரும்பாலும் கர்நாடக சங்கீதக்காரர்கள் பற்றியும் பாட்டுப் பற்றியுமாக இருந்த உரையாடல்கள் என் அண்ணன் வழியாக வாத்தியக்கருவி இசைமீது திரும்பியது. பள்ளி நாட்களில் வயலின் கற்றுக்கொண்டோம். பள்ளியில் சில மேடைக் கச்சேரிகளில் சினிமா பாடல்களைக் குழுவினரோடு இசைக்கும்போது ஆர்க்கெஸ்ட்ரா பற்றிய நேரடி அனுபவம் கிடைத்தது. பள்ளி இசையாசிரியர் புல்லாங்குழலில் முக்ச் சினிமாப் பாடல்களை வாசித்ததைக் கேட்டதும் இசைக்கருவிகள் மீதான ஆர்வத்தை அதிகரித்தது. என் அண்ணனின் டேப் ரெக்கார்டரில் இளையராஜாவின் பாடல்கள், பின்னணி இசை, ஹிந்திப் படப் பாடல்களின் கருவி இசைப்பகுதிகள் கேட்பது  எனத் தொடர்ந்து அதில் ஆர்வம் அதிகரித்தது.  ஹிந்துஸ்தானி இசை அறிமுகம் மிகத் தாமதமாக வந்தது. கீபோர்ட், கிதார் என அவ்வப்போது கருவிகளை இசைக்கக் கற்றுக்கொண்டேன். லண்டன் வந்ததும் நேரடியாக இசைக்குழுக்களின் மேடை க்கச்சேரிகள்மீது முழுக் கவனம் செலுத்தினேன். வாரமொரு முறை ஆர்கெஸ்டிராக்களின் கச்சேரியைக் கேட்பதற்காகப் பல தேவாலயங்களுக்குச் சென்றுள்ளேன். (அந்த அனுபவக்கட்டுரைகள் ‘காற்றோவியம்’ எனும் நூலில் உள்ளது.) சங்கீதப் பயிற்சியை முழுமையாகத் தொடர முடியாமல் போய்விட்டது.

8. உங்களுக்கு வாசிப்பில் எப்போது ஆர்வம் வந்தது? வலைப்பதிவில் எழுதுவது எப்படித் துவங்கியது?

பலரைப் போலவே சிறு வயதில் பள்ளிப் புத்தகங்களைத் தவிரப் பிற காமிக்ஸ், பாக்கெட் நாவல்கள், பாரதி கவிதைகள் என வாசிப்பு தொடங்கியது. பள்ளியில் நடக்கும் கட்டுரைப் போட்டிகளுக்காகப் பாரதிதாசன், அரவிந்தர், காந்தி எனத் தனித்தனிப் புத்தகங்களாகப் புதுவை ரோமாண்ட் ரோலந்து நூலகத்திலிருந்து எடுத்து வாசித்தது நினைவுள்ளது. எல்லா வாரயிறுதிகளையும் அந்த நூலகத்தில் செலவு செய்வேன். பள்ளியில் படித்தது ஆங்கிலவழி என்றாலும் ஏனோ நூலகத்தில் எடுத்துப் படித்தவற்றில் பெரும்பாலும் தமிழ்ப் புத்தகங்களே. அறிவியல் துறையில் இருந்த ஆர்வத்தால் பல ஆய்வாளர்களின் வரலாறுகளைத் தேடிப்படித்தேன். விண்வெளித் துறையைப் பற்றித் தேவைக்கு அதிகமாகவே தெரிந்து வைத்திருந்தேன் என நினைக்கிறேன். குவாண்டம் இயற்பியல், ஐன்ஸ்டீனின் சார்புக் கொள்கை (ரஷ்யத் தமிழாக்கம்) எனப் பலவற்றைக் கலவையாகக் கற்றேன். ஒருவிதத்தில் இவற்றைப் பற்றியெல்லாம் எழுதலாம் எனத் தோன்றியபோதே புனைவில் எழுதவேண்டும் என முடிவு செய்திருந்தேன்.

2009ஆம் ஆண்டு வலைப்பதிவு ஒன்று உருவாக்கி (வலைப்பூ!!) அதில் சிறுகதைகளும் கலை பற்றிய கட்டுரைகளும் (தமிழிசை, ஐரோப்பிய ஓவிய வரலாறு) எழுதத்தொடங்கினேன். வார்த்தை, திண்ணை என இசைக் கட்டுரைகள் எழுதியபோது சொல்வனம் இணைய இதழில் எழுதக்கேட்டு சேதுபதி அருணாச்சலம் மடல் அனுப்பியதிலிருந்து இணையப் பத்திரிக்கையில் எழுதத்தொடங்கினேன்.

9. குடும்பச் சூழலில் உங்களிடம் கிடைத்த புத்தகங்கள் என்னென்ன? பள்ளிப் பருவத்தில் எதெல்லாம் வாசிக்கக் கிடைத்தது?

அதிகம் தமிழ் காமிக்ஸ் புத்தகங்களும் (இரும்புக்கை மாயாவி, லக்கிலுக்), டின்டின், ஆஸ்டெரிக்ஸ் போன்ற ஆங்கில காமிக்ஸ்களும் தொடக்கம். பின்னர் நடமாடும் நூலக வண்டி வந்தபோது பாக்கெட் நாவல்கள் அறிமுகமாயின. ஆவி உலகம் சந்தாதாரராக இருந்த என் பெரியம்மா மகள் தந்த மாத இதழ்கள் மூலம் தமிழ் பேசும் ஆவிகள் அறிமுகமாயின. ராஜேஷ்குமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர், சுஜாதா எனத் தொடங்கியது பள்ளி நாட்களில். அறிவியலில் ஆர்வம் அதிகமாக இருந்ததால் விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாறு, அறிவியல் கட்டுரைகள் படிப்பதும் தொடர்ந்தது. வாசிப்பதற்கு வீட்டில் எப்போது தடை இருந்ததில்லை. பள்ளிப் புத்தகங்களை மட்டுமே படிக்க வேண்டும் என யாரும் கட்டாயப்படுத்தவில்லை. பத்தாம் வகுப்பு விடுமுறை நாட்களில் என் அப்பாவின் புத்தகச் சேகரிப்பில் காந்தியின் சத்தியசோதனை கிடைத்தது. அப்பா வங்கி நிர்வாகம், வர்த்தகத் துறை போன்றவற்றைத் தமிழில் எழுதி வந்தவர். (கிராமிய வங்கியியல் என அவர் எழுதிய Agrarian Banking இன்றும் நினைவில் இருக்கும் புத்தகம்.) ஆங்கில வழிக்கல்வி படித்தாலும் தமிழில் எழுதுவதையும் படிப்பதையும் என்றும் தடையாக நினைக்காததற்கு என் அப்பாவின் தமிழார்வமும் ஒரு காரணம் என நினைக்கிறேன். ஆங்கில வாசிப்பு மட்டுமே சிறந்தது எனும் பொதுப்புத்தி சார்ந்த முன்முடிவுகள் எதுவும் இல்லாத இளமைக் காலம் நல்லதொரு அடித்தளமாக அமைந்தது என  நினைக்கிறேன். என் மாமாவும் அத்தையும் தமிழ் சிறுகதைகள் பல எழுதி குமுதம், விகடன் போன்ற பத்திரிகைகளில் வெளியிட்டுள்ளார்கள்.

10. அலுவல்களும் குழந்தைகளும் உங்களின் நேரத்தை ஆக்கிரமித்துள்ள இன்றையச் சூழலில், உங்களின் வாசிப்பு எவ்வாறு மாறி இருக்கிறது? எப்பொழுது வாசிக்கிறீர்கள்? எதில் படிக்கிறோம் அல்லது கேட்கிறோம் என்று பழக்கங்கள் இருத்திருந்திருக்கிறதா?

கொரொனாவுக்குமுன் தினமும் சராசரியாக இரண்டரை மணி நேரம் ரயிலில் பயணம் செய்து அலுவலகம் சென்று வந்தவன். போன வருடம் வரை எழுதுவதும் படிப்பதும் ரயிலில் மட்டுமே இருந்தது. குறுநாவல்கள் எழுதுவது முதல் நாவல் முயற்சிகள் வரை எல்லாமே ரயிலில்தான். கொரானாவுக்குப்பின் குடும்பத்துடன் நேரம் செலவு செய்வது அதிகரித்திருந்தாலும் மேலும் மேலும் அது பஞ்சுபோல அத்தனையையும் உறிஞ்சிக்கொள்வதினால் பாதிப்பு இருக்கத்தான் செய்கிறது. அலுவலக வேலையும் ஒரு நாளில் 8 – 10 மணி நேரங்களுக்கு மேலாக எடுத்துக்கொள்கிறது. இதற்கிடையே எனக்கான நேரத்தை நான் இரவு நேரங்களிலும் அதிகாலையிலும் மட்டுமே எடுத்துக்கொள்ள முடியும். கவிதைகளும் சிற்றிலக்கியக் கட்டுரைகளும் வாசிப்பதினால்  படைப்பு சார்த்த மனநிலைக்குள் வேகமாக நுழையமுடிகிறது.

கனமான புத்தகங்களைக் கிண்டிலில் மட்டுமே படிக்க முயல்கிறேன். இன்னும் முழுமையாகக் கிண்டில் பழக்கம் வரவில்லை என்றாலும் புது புத்தகச் சேகரிப்புக்குக் கிண்டில் புத்தகங்களை மட்டுமே நாடுகிறேன். ஒலிப் புத்தகங்களில் என்னால் ஒன்ற முடியவில்லை. இதுவரை ஒரு புத்தகம்கூட ஒலிப் புத்தகமாகக் கேட்டதில்லை.

வாசிப்புப் பழக்கம் அதிகம் மாறவில்லை. ஆனால் பொது இடங்களில் எழுதிக்கொண்டிருந்தபோது மனம் கொள்ளும் குவியத்தை என்னால் என் அறைக்குள் அடைய முடியவில்லை எனும் விந்தையை உண்ர்கிறேன். பயணம் செய்யும்போது தடையில்லாமல் 4 அல்லது 5 பக்கங்கள் எழுத முடியும். சிறுகதைகளைக்கூட அப்படியே ஒரே அமர்வில் எழுதியுள்ளேன். வீட்டில் வந்து சில மாற்றங்களை மட்டும் செய்வேன். ஆனால் முழுவதாக என் அறைக்குள் இருந்தபடி எழுதும்போது வேகமும் மட்டுப்பட்டுள்ளது. அதற்கானத் தீர்வை இன்னும் அடையவில்லை. 

11. எதற்காக இலக்கியத்திலும் வாசிப்பிலும் நேரம் செலவிடுகிறீர்கள்? உங்களுக்கு அது எதை வழங்குகிறது?

எழுதும்போது நான் வேறெதையும் சிந்திப்பதில்லை. பல நேரங்களில் முற்றிலும் தொடர்பற்ற இரண்டு விஷயங்களைக்கொண்டு ஏதேனும் புதியதை என்னால் எழுதிவிட முடிகிறது. எழுதும்போது இருக்கும் சந்தோஷம் படைப்பு வெளியாகும்போதுகூடக் கிடைப்பதில்லை. தடையில்லாமல் ஒரு விஷயத்தைப் பற்றி எழுத முடியும்போது அதை மேலும் பல படிகள் அதிகமாகவும் ஆழமாகவும் புரிந்துகொள்கிறேன். கற்றது கைமண் அளவு என்பதற்கு ஒரு புது அர்த்தம் உருவாவதுபோலத் தோன்றும். அதனாலேயே வாசிப்பதைவிட எழுதுவது அதிக சந்தோஷத்தைத் தருவதாக இருக்கிறது.

மேலும்:

இசை மேதைகளின் வாழ்க்கை வரலாறு, இசையில் புரட்சி, இசை வெளியீடுகளின் விமர்சனம், நேரில் கண்ட கச்சேரிகளின் விமர்சனம், இசை பற்றிய புத்தகங்களின் விமர்சனம் என்று பலதரப்பட்ட கட்டுரைகளால் நிறைந்தது இந்த தொகுப்பு. மொழி மீது கிரிக்கு நல்ல ஆளுமை உள்ளதால் பல சிக்கலான இசை நுணுக்கங்களை அவரால் எளிய மொழியில் விளக்க முடிகிறது. இசை, மொழிக்கு அவ்வளவு எளிதில் வசப்படாது. இருப்பினும் இசை பற்றி எழுதுவது கிரிக்கு வசப்பட்டிருக்கிறது. இந்த தொகுப்பில் பல விஷயங்கள் பேசப்பட்டாலும், கிரி முக்கியமாக இரு விஷயங்களைப் பற்றிப் பேசுகிறார். ஒன்று, இசைக்கலைஞனுக்கும் வரலாற்றுக்குமான தொடர்பு. மற்றொன்று fusion வகை இசை பற்றி அவரது பார்வை.

”காற்றோவியம்” நூலின் முன்னுரையில் ராகா சுரேஷ்
  1. ஜெயமோகன்.இன் அறிமுகம் / பேட்டி: பத்து ஆசிரியர்கள்-9, கிரிதரன் ராஜகோபாலன்
  2. திண்ணை தளத்தில் ரா கிரிதரனின் ஆக்கங்களும் படைப்புகளும்
  3. பதாகை எழுத்துக்களும் ஆக்கங்களும்: ரா. கிரிதரன்
  4. தமிழினி தளத்தில் கிரிதரன் ஆக்கங்கள்
  5. அரூ அறிவியல் சிறுகதை
  6. கிரிதரனின் அசைச்சொல் வலைப்பதிவு
  7. வார்த்தைகளின் விளிம்பில் வலைப்பதிவு
  8. சிறுகதைகள்.காம் தளத்தில் புனைவுகள்
  9. பெர்லின் சுவர் – பின் தொடரும் நிழலின் குரல் புத்தகம்
  10. சுநீல் கிருஷ்ணன் – அம்புப் படுக்கை விமர்சனம்
  11. ரா. கிரிதரனின் காற்றோவியம் நூல் குறித்து பானுமதி
  12. ரா.கிரிதரனின் காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை சிறுகதைத் தொகுப்பு குறித்து வை.மணிகண்டன்

வளர்ப்பு நாயைப் போல நாளின் கடமைகள் விலகியதும் வாசல் வந்து வரவேற்று, சோம்பித் திரிந்த நேரத்தில் என் மீது கால்போட்டு, வாலாட்டி, உந்தித்தள்ளி வலுக்கட்டாயமாக எழுத வைத்த கதைகளும் கதைமாந்தர்களும் இத்தொகுப்பில் உள்ளனர். தொகுப்பில் சேர்ந்த கதைகள் அப்படி எழுதக் கோரியவையே என்பது என்னில் பெரும் ஆசுவாசத்தைத் தந்துள்ளது.

காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை – கிரிதரன் ராஜகோபாலன் முன்னுரை

One Reply to ““கலையின் மாயத்தைப் பற்றி எழுதுகிறேன்””

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.