
உன் கணவரின் உடலை அறுப்பதற்கு நீயும் உன் மகளும் தயாராகிறீர்கள்; முன்னே நீண்ட, மௌனம் நிரம்பிய நாள் ஒன்று காத்திருக்கிறது. நீ தசைகளிலிருந்து உறுப்புகளையும் எலும்புகளிலிருந்து தசைகளையும் தசை நாண்களிலிருந்து எலும்புகளையும் பிரிக்கிறாய் – எல்லாம் நீ தயாரிக்கவேண்டிய அப்பத்துக்கு வேண்டிய பொருட்கள், மரணத்துக்குப் பிறகான வாழ்வில் நுழைய அனுமதி பெறுவதற்காக உன் கடவுள்களுக்கு நீ கொடுக்க வேண்டிய பளுமிகு விலை அது; அனைத்து நிலப்பரப்புகளிலும் நடந்த போர்வீரர்களிலேயே, ஆகச் சிறந்தவருக்குக் கொடுக்கப்பட வேண்டிய, பொருத்தமான கௌரவமுள்ள வழியனுப்பல் அது.
வேக வைக்கும் உலையிருக்கும் அறை, இரண்டு நபர்கள் உள்ளே இருந்தாலே சிறியதாகத் தெரிகிறது, இத்தனைக்கும் நீ உன் பெண்ணோடு, அவளுடைய பயிற்சிக் காலத்தின்போது, ஒரு மாதத்தைக் கழித்திருக்கிறாய். இந்த முக்கியமான தருணத்தை அவளோடு பகிர்வதில் உனக்கு எரிச்சல் ஏற்படுகிறது, ஆனால் இது உன் பெண்ணுக்கு ஒரு பெரும் நாள். நீ அவளை நோக்கி ஒரு துரிதப் பார்வையை வீசுகிறாய். சந்திர கிரஹணக் காலத்து நிலவைப் போன்ற சிவந்த நிறமுடைய அவளுடைய ரேமி நார்ப் பட்டாடைகளில் எத்தனை கம்பீரமாக இருக்கிறாள் அவள், பதிலியான மாய சிசுவின் தோலால் செய்யப்பட்டு மேலங்கியாக அணிந்த ஆடை அவளுக்கு எத்தனை எடுப்பாக இருக்கிறது.
சடங்குகளின் நியதிப்படி, நீங்கள் மௌனமாக வேலை செய்கிறீர்கள். கடலின் நீல நிறத்தில் இருக்கும் சுத்திகரிப்புக் கடாயின் மேல் மூடியைத் திருகிக் கழற்றும்போது நீங்கள் இருவரும் விடும் மூச்சு இரைப்பாகக் கேட்கிறது. அந்த அடர்த்தியான, ஆனால் ஒளி ஊடுருவும் வகையிலிருக்கும் பல வகை நீர்களின் மேல்ப்பகுதியில் உன் கணவர் மிதக்கிறார், அமைதியாக, கனிவான தோற்றத்தோடு. நீ உன் மூச்சைப் பிடித்துக் கொண்டிருக்கிறாய், விளிம்பின்மீது சாய்ந்து அவரை இன்னொரு முறை முத்தமிட எழுகிற தூண்டுதலை வலியாக உணர்கிறாய் – ஆனால் அது தடைசெய்யப்பட்டிருக்கிறது. அவருடைய உடல் இப்போது புனிதமாகிவிட்ட ஒன்று, நீ அப்படியானவள் இல்லை. அவர் உறங்கும்போது, சக்தி மிக்க அவரது மார்பு எழுவதையும், இறங்குவதையும் பார்த்திருக்கிறாய். சுத்தி செய்யும் முழுக்கு அவரை மேலே இழுத்து, மேஜையில் கிடத்துவதைச் சுலபமாக்கி இருக்கிறது. அங்கே துளிர்விடும் விடிகாலை, மேல் கூரையின் கண்ணாடி ஜன்னல் வழியே அவருடைய தோற்றத்தின் பெரும் மாற்றத்தை, அவருடைய ஏற்றத்தை, ஒளிகூட்டிக் காட்டுகிறது. அவருடைய தோல் செழித்த மாதுளை நிறமாகி இருக்கிறது. தலைமுடி வெறிச்சிட்ட மலைமுடியின் வெண்மையாயுள்ளது.
தலையை உயர்த்தி, தந்தையின் ஈமச் சடங்குக்குப் பிறகு இப்போதே அவள் பார்க்கிற அவரது தோற்றத்தால் உன் மகள் எப்படிப் பாதிக்கப்படுகிறாள் என்று சோதிக்கிறாய். அவளுடைய முகத்தை உற்று நோக்குகிறாய். இலையடிப் பழச்செடிகளில் விளைந்த மூலிகை நெல்லிகளைi, மனிதர் மூழ்கி இறந்த சதுப்புகளில் விளைந்து உலர வைக்கப்பட்ட நீர்ப் புதினாவோடு சேர்த்து அரைத்துப் புளிக்க வைக்கப்பட்ட களிம்புப் பூச்சைச் சன்னமான முகமூடியாக அணிந்திருக்கிறாளே அதில், ஏதாவது தசை சற்றுத் துடித்து, ஏதும் விரிசல் ஏற்படுத்துமோ என்ற சந்தேகத்தோடு பார்க்கிறாய். அது மரியாதை காட்டவென அணியப்படும் களிம்பு, நீ யாருக்குச் சேவை செய்கிறாயோ அவர்களிடமிருந்து உன்னைக் காக்கவும் பயன்படும். அவள் கண்களில் கண்ணீர் இருக்கிறதா என்று சோதிக்கிறாய், அவளுடைய தலைமுடியை, கண் புருவங்களை அவை மெழுகு பூசிப் படியவைக்கப்பட்டிருந்தாலும், அவற்றில் ஏதும் சீர் குலைவிருக்கிறதா என்று அவதானிக்கிறாய்.
உடலின் சுத்தம் மிகவும் முக்கியமானது. ஒரு சிறு கண்ணீர்ச் சொட்டு அந்தப் படையலைக் கெடுக்கக்கூடும். ஒற்றை முடிகூட கடவுள்களுக்கு அர்ப்பணிக்கப்படும் அந்த ஆத்மாவைக் குலைக்கக்கூடும்.… அவர்களுக்குத்தான் என்னவொரு நாசூக்கான சுவைப்புத் தேவையாக இருக்கிறது. ஆனால் உன் மகளின் முகம் கல் போன்றிருக்கிறது. கண்கள் ஒளி மங்கியிருக்கின்றன; உடலோ உலகத்திலேயே இதுதான் மிகச் சுலபமான வேலை என்பதுபோலத் தயார் நிலையில் இருக்கிறது. நீயே வடிவமைத்து, வனை உலையில் சுட்டுப் பீங்கானால் செய்த கத்தி, அவள் கையில் அதன் இயல்பான நீட்சிபோல அமர்ந்திருக்கிறது.
உன் தாயாரை ஓர் அப்பமாக ஆக்கி வேகவைக்க உனக்கு எத்தனை வேலை இருந்தது என்பது நினைவு வைத்திருக்கிறாய். அவளுடைய வழிகாட்டலின்கீழ் எத்தனை முறை அந்தச் சடங்கை நீ செய்திருந்தாலும் அவளுடைய உடலை மேஜையின்மீது பார்க்கும் அந்தத் தருணத்துக்குத் தக்கவனாக எதுவும் உன்னை ஆக்கவில்லை. ஒருக்கால் உன் கலையை நேசிப்பவளாக உன் மகளை ஆக்க உன்னால் முடியலாம். உனக்கு எந்த உதவியும் தேவையில்லை என்பதில் நீ பெருமை கொண்டிருந்தாலும் ஒருவேளை அவள் உன்னோடு சேர்ந்து அப்பம் தயாரிப்பவளாக இருக்கத் தகுந்தவளாக இருக்கலாம். இப்படி உனக்கு உதவியாளாக இருக்க அவள் ஒத்துக்கொண்டது, அவளது துயரம் காரணமாக இல்லையோ என்னவோ. ஒருக்கால், ஒருக்கால்….
நிலவின் அளவால் ஒரே மாதத்தில், இத்தனை தேர்ச்சி பெற்றவளாக ஆகிவிட்ட அவளைப் பார்க்க உன் இதயம் விம்முகிறது. உன்னில் ஒரு பாகம், அந்த பாகத்தைப் பற்றி நீ பெருமைப்படவில்லை, அது அவள் தன் பரீட்சைகளில் திண்டாடி இருக்கவேண்டும் என்று விரும்புகிறது, திண்டாடி, கண்களால் உன்னிடம் உதவி கேட்டுக் கெஞ்சும் நிலைக்கு அவள் வந்திருக்கவேண்டும் என்று நினைக்கிறது. அவளுடைய இயலாமைக்காக அவளை நீ அப்போது மன்னித்திருக்கலாம், அவள் சிறுமியாக இருந்தபோது நீ எப்படி அவளை மன்னித்தாயோ அதைப்போலவே இப்போதும். எப்படி அவள் உன் கணவரை எத்தனையோ வருடங்களாக நாடி இருந்தாளோ அதேபோல உன்னையும் அவள் நாடி இருக்கவேண்டும் என விரும்புகிறாய்.
வேண்டாம். அவரையும் மற்ற எவரையும் போலவே நடத்து. உன் திறமை உன்னை வழி நடத்தட்டும். நீ உன் கத்தியை எடுக்கிறாய், உன் கணவரின் இடது கை முடியை மிக மிருதுவாகத் தொட்டு மழிக்கிறாய்.
அவருடைய உடலிலிருந்து ஒரு முடிகூட விடாமல் அகற்றுகிறாய், அவருடைய எலும்புகளை உலர்த்தத் தேவையான நெருப்பை மூட்ட அவை சுள்ளிகளாக உதவும். அவற்றில் மிக நீண்ட முடிகளில் ஒரு சிறு பிடியளவை மட்டும் பிரித்து வைக்கிறாய், அவை அலங்கரிப்புக்கு உதவும். பிறகு அவரது சுண்டு விரலில் ஒரு சிறு வெட்டு வைத்துத் தோலைத் தசையிலிருந்து பிரிக்க வழி செய்கிறாய்.
மறுபுறத்தில் உன் மகள் உன் செய்கைகளையே தானும் செய்கிறாள். அவளுக்கும்கூட, கத்திகளின் மொழி சரளமாகப் புழங்க வருகிறது.
உள்ளங்கைகளும் உள்ளங்கால்களுமே தோலை உரிப்பதற்குக் கடினமானவை. தான் சேதமேதும் அடையாமல், இந்த உலகில் நீடிக்கப் போராடுவதுபோல அந்த உடல் தோன்றுகிறது. நீ முதலில் சிரமப்படுகிறாய், ஆனால் பிறகு கத்தியைக் கஷ்டப்படாமல் கையாள்கிறாய். மென்மையாக நீளும் தசையை உரிக்கும்போது, அவருடைய வாழ்நாள் கடப்பின் நிறுத்தல் குறிகளைப்போல ஆங்காங்கே இருக்கும் தழும்புகளைப் பார்க்கிறாய் – அவரது கைகளிலும் தோள்களிலும் எண்ணிறந்த வெட்டுத் தழும்புகள் நெடுக இருக்கின்றன, அவை ஈனானின் கத்தி நடனக்காரர்களுக்கு அவர் சவால் விட்டபோது கிட்டியவை; காசுகளின் வடிவம் கொண்ட தழும்புகள், மஞ்சு சூழ்ந்த வட திசையில் இருக்கும் வறண்ட கூம்புகள் நிறைந்த நிலத்தூடே அவர்கள் பயணித்தபோது அம்பு முனைகள் அவரது நெஞ்சைத் துளைத்ததால் கிட்டியவை; இடது இடுப்பில் காணும் எரிப்புத் தழும்புகள் நெருப்புக் காவலனான டைடன் ஹ்ராகுரியின் கால் முடிகளிலிருந்து வந்தவை. இந்த உலகில் மறக்கப்பட்ட நிலங்களில் நீ பயணித்தபோது நீயும் பல தழும்புகளைச் சம்பாதித்திருக்கிறாய்; உனது அந்தத் தழும்புகள் இந்த இழப்பால் தூண்டப்பட்டு இப்போது வலிக்கின்றன.
உன் கணவரின் தோலை ஒரு விசேஷ அவெஞ்சுரின் கிண்ணத்தில் வைக்கிறாய், பிறகு தசைகளை எடுக்கிறாய்- போரின்போது அவர் அருகே இருந்தபடி நீ சாபங்களையும் வசிய மந்திரங்களையும் பாடுகையில், அவர் வீசுகையில் நடனமாடும் அந்தக் கோடரியின் பெரும் வீச்சுகளால் நகர்ந்து, சுருங்கி விரிந்துகொடுக்கும் அந்தக் கீர்த்தி வாய்ந்த அதே தசைத்திரள்கள் அவை. இப்படித் திறக்கப்பட்ட நிலையில் அவரது செந்நிறமும் நினைவுகளால் வளம் பெற்ற ஒன்று; அவருடைய வலுவை உரித்து எடுக்கும்போது மூச்சுத் திணறாமல் இருக்க உன் சக்தி முழுதும் செலுத்தி அரும்பாடு படுகிறாய். இந்த வலுவைத்தான் உன் மகள் வேறெதையும்விடப் பெரிதும் மதித்தாள், ஒரு கட்டத்தில் உன் வசிய மந்திரங்களும் போதனைகளும் அவளுக்குப் போதாதவையாக ஆகிவிட்டபடியால், அந்த வலுவைத்தான் தனக்கும் வேண்டும் எனப் பல வருடங்கள் முன்பு மிகவும் நாடினாள்; போரின் பங்கெடுப்பிலிருந்து உன் மந்திரக் கோலை நீ நீக்கியபோது, உன் தாயின் தொழிலையே நீயும் தேர்ந்தெடுத்து, இறந்தோரைக் கடப்பிற்குத் தயார் செய்வதை நீ மேற்கொண்டபோது, இந்த வலுதான் உனக்கு இல்லை என்று உன்னைச் சாடினாள்.
திராணி இல்லாதவர். குற்றம் சாட்டி அவள் சொன்ன அந்தச் சொல் இன்னும் கசக்கிறது. நீங்கள் எப்படி அவரைவிட்டு நீங்கலாம்? எங்களை விட்டுப்போக உங்களுக்கு எப்படி முடிந்தது? நீங்கள் ஒரு சுயநலக்காரர், சிறு மனிதர்.
நீ வேலை செய்யும்போது அவளைக் கவனித்தபடி இருக்கிறாய், ஒரு கட்டத்தில் சுத்தமாக அனைத்தும் நீக்கப்பட்டு எலும்புகள் மட்டுமே எஞ்சி இருக்கின்றன, எல்லா உறுப்புகளும் அவற்றுக்கான கிண்ணங்களிலும் ஜாடிகளிலும் சேர்க்கப்பட்டுவிட்டன. உன் அருகே வேலை செய்யும்போது, அந்தச் சொற்களுக்காக இப்போது அவள் வருந்துகிறாளா? உன் பாரத்தை அவள் இப்போது கண்டுகொண்டாளா? உன் தேர்வு என்னவென்று புரிந்து கொண்டாளா? நீ மரித்துக் கடக்கும்போது உன் உடலைக் கையாள்வது அவளாக இருக்குமா?
அவளுடைய முகத்திலிருந்து இவற்றுக்கு விடைகளை ஊகிக்க நீ முயல்கிறாய், ஆனால் உனக்கு ஏதும் தேறுதல் கிட்டவில்லை, ஒரு விடையும் கிட்டுவதில்லை. உன் கணவனின் தோலிலிருந்து கொழுப்பை உரிக்கும்போதோ, அவருடைய சதையையும் தசையையும் கொத்திக் குறுக்கும்போதோ, அவருடைய உறுப்புகளைக் கடைந்து கூழாக்கும்போதோ, அவருடைய குடல் குழாய்களைச் சிறு துண்டுகளாக வெட்டி, உலர வைக்கும்போதோ, ஒருபோதிலும் விடை இல்லை. உன் மகள் இந்தத் தயாரிப்பு வேலையைச் சிறப்பாகச் செய்கிறாள் – அவளுடைய கத்தி துரிதமாகவும் கருக்காகவும் மென்மையாகவும் செயல்படுகிறது.
ஆனால் அவள் வேறெப்படி இருப்பாள்? அவளோ கடவுளர்களின் பரிசு. இரு காதலர்களுக்குத் தாம் ஒருபோதும் தம்முடைய குழந்தையைப் பெற்றுக்கொள்ள முடியாது என்று நினைத்த இருவருக்கு, கடவுள்களின் கொடை அது. ஓர் அற்புதம். உன்னுடைய இளமை முடிந்தபின் நீ தேடிய பூரணமாதல் அது; தேனாக இனித்து உன்னைக் கதகதப்பாக உணரச்செய்த பேரின்பம். ஆனால் எல்லா நற்பலன்களையும்போல, பிடித்தவர்கள் என்று எல்லாக் குழந்தைகளுக்கும் ஒரு தேர்வு உண்டு என்பது புரிந்தவுடன், உன் பேரின்ப உணர்வு தேய்ந்தது, மங்கியது.
…
அவருடைய எலும்புகளை ஓர் உலோகத் தகட்டில் பரப்புகிறாய், அந்தத் தகடு பசியோடு இருக்கும் உலைக்குள் போகவேண்டும். அவருடைய மண்டை ஓட்டைக் கையில் பிடித்துக்கொண்டு, அவருடைய காதுகள் இருந்த இடத்தைக் கைகளால் தடவுகிறாய். நீ அவற்றுள் பார்க்கும்போது உன்னைத் திரும்பி நோக்கிய அடர்ந்த பழுப்புக் கண்கள் இருந்த குழிகளுக்குள் உற்று நோக்குகிறாய்.
அவருடைய கழுத்துப் பட்டை எலும்பை உன் கைகள் கடக்கின்றன. அவருடைய தோள்கள்மீது நீ இட்ட முத்தங்களின் நினைவு உனக்கு இருக்கிறது. நீ அவருடைய மார்க்கூட்டைச் சரியாக அமர்த்துகிறாய், அவருடைய இதயத் துடிப்பை – சூனியக்காரர்களின் படையெடுப்புத் தாக்குதலிலிருந்து எப்படியோ உயிர் தப்பிய பிறகு, நீங்கள் இருவரும் சேர்ந்து படுத்துக்கொண்டு இணையானபோது, அது உயிர் வாழ்க்கையைக் கொண்டாடியதாக இருந்தது, அந்த நேரத்தின் அவருடைய நெஞ்சின் தடதடப்பை – உன்னால் இன்னமும் கேட்கமுடிகிறது. இளம் ஆண்களான உங்கள் இருவரின் வாலிப வயதில், உங்கள் உடலில் இன்னும் உத்வேகம் இருந்ததால் விடிகாலைவரை இருவரும் விழித்திருக்கையில், உன் இதயம் ஓடிய மாதிரியே, அந்த இதயம் துடிதுடித்து ஓடியது உனக்கு நினைவிருக்கிறது. அவருடைய பிந்தைய வருடங்களில் உங்கள் இருவரின் உடல்கள் கச்சிதமாக ஒன்றோடொன்று பிணைந்தன, அப்போது அவரது இதயம் அமைதியாகத் துடித்ததும் உனக்கு நினைவிருக்கிறது- உடல் சதைகளின் அந்த ரசவாதத்தை நீ இப்போது இழந்துவிட்டாய்.
அவருடைய எலும்புகளில் பகிரப்பட்ட உன் எல்லா நினைவுகளையும் நீ கொட்டுகிறாய், பிறகு அந்தத் தகட்டை உலையில் ஏற்றுகிறாய், அதன் உலோகக் கதவை மூடுகிறாய்.
உன் பின்னே உன் மகள் நிழல்போல நிற்கிறாள், தொழில் பயில்பவளுக்கான தன் உடுப்பில் துல்லியமாக இருக்கிறாள். அவளுடைய கால்சராய், மேலங்கி இவற்றின் வடிவ விளிம்புகளை ஒரு கசங்கல்கூடக் குலைக்கவில்லை. ஒரு கறைகூட அவளுடைய மேல்காப்புத் துணியில் பட்டிருக்கவில்லை.
அவள் உன்னை உற்று நோக்குகிறாள். உன்னை எடை போடுகிறாள்.
அவள் பழுதற்ற நிறைவு.
அவளை விட்டுவிட்டு, உன் கணவருடன் அந்த உலைக்குள் தவழ்ந்து நுழைந்துவிடலாமே என்று எண்ணுகிறாய்.
…
சதையும் ரத்தமும் குருத்தெலும்புகளும் ஓர் அப்பத்தைச் செய்ய எளிதில் உதவாதவை, ஆனால் அப்பம் தயாரிப்பவர் இந்த அடிப்படைப் பொருட்களைத்தான் கையாளவேண்டும். ஒரு சிறு பிசகும் தோல்விக்கு இட்டுச்செல்லும், அதனால் நீ உன் மகளின் பரீட்சையின்போது கூர்மையாகக் கவனிக்கிறாய், ஆனால் அவள் ஒவ்வொரு பணியையும் சிரமப்படாது பாங்குடன் முடிக்கிறாள்.
உன் கணவரின் எலும்புகளை மன உறுதியுடன் பொடிக்கிறாள்.
உன் மகள் ரத்தம், கொழுப்பு, எலும்பு மாவு ஆகியவற்றைக் குழைத்து அப்பத்துக்கான தயாரிப்பு மாவு மொத்தையைத் தயாரிக்கிறாள், நீ அவளுக்கு உதவுகிறாய். அந்தக் கடினமான மாவு மொத்தையை நசுக்கிப் பிசையும்போது உன் முட்டிகளும் விரல்களும் ஒலியோடு சொடுக்குகின்றன, ஆனால் அவளுடையவை ஒலியேதுமில்லாது செயல்படுகின்றன – வேகமாகவும் சுறுசுறுப்பாகவும் அவை வட்ட அப்பங்களை உருவமைக்கின்றன.
உன் மகள் சதைகளையும் உறுப்புகளையும் சிதைத்துப் பிசைவதில் உனக்குத் தெரிவதெல்லாம், மெல்லிய இரும்பு வாடையோடுகூடிய இலேசான சிவப்புப் பசைதான். நீ அதேநேரம் இறுகிய தேன் கட்டிகளைப் பொடிசெய்கிறாய், அவை, கடவுள்கள் அந்த ஆத்மாவை உண்டு ஜீரணிக்க வழி செய்யும். இதை அவள் செய்வதே, தான் உன்னைவிட மேலான திறனுள்ளவள் என்று நிரூபிக்கவோ என்று உனக்கு ஓர் ஐயம் எழுகிறது – இறந்தவர்களோடு தன்னைப் பூட்டிக்கொண்டு ஓர் அடுமனையில் வேலை செய்வது எத்தனை சுலபம் என்று உனக்குக் காட்ட இதையெல்லாம் செய்கிறாளா? உன் கணவரைப்போல நீ அத்தனை ஒளிர்வுடன் ஒருபோதும் எரியவில்லை, உனக்குப் புகழ்ச்சி தேடும் சாகசங்களைத் தேடிப் போர்க்களங்களுக்குள் பாய்ந்து செல்லவேண்டிய அவசியம் இருக்கவில்லை என்று எப்படி விளக்குவது என்று வியக்கிறாய்.
அவள்தான் உன்னுடைய மகத்தான சாகசச் செயல், உன்னிடம் எஞ்சி இருந்த மாயத் திறன்களில் பெரும்பான்மையை அவளிடம் நீ கொடுத்துவிட்டாய் என்று அவளிடம் எப்படிச் சொல்வது என்று நீ வியக்கிறாய்.
…
அடுக்கடுக்காக உன் கணவர் ஓர் அப்பமாக உருமாற்றப்பட்டுவிட்டார். அவரின் ஒரு சிறு துணுக்குகூட இழக்கப்படவில்லை. மேலே உள்ள தோலை நீ இழுத்து அகற்றுகிறாய். எல்லாத் துண்டுகளையும் அவருடைய முடிகளால் ஆன நூலால் இணைக்கிறாய். சூரியன் லாவெண்டரின், காலெண்டுலாவின் அடர்ந்த நிறங்கள் கொண்டதாக மாறுகிறது.
சுத்திகரிக்கும் தொட்டியில் உடலை இடுவதற்குமுன் அதிலிருந்து எடுத்த காய்ந்த ரத்தத்தின் துளிகளால், ஒளி ஊடுருவும் அந்தத் தோலை மூடி, ஊநீரால் மேல் பூச்சிடுகிறாய். இனி செய்ய மீதம் இருப்பதெல்லாம் உன் கணவரின் கதையைச் சொல்வதுதான், அதை அப்பம் தயாரிப்பவர்கள் எல்லோருக்கும் தெரிந்த மொழியில் சொல்ல வேண்டும் – இப்போது அதை நீ உன் மகளுக்கும் சொல்லிக்கொடுத்திருக்கிறாய்.
அவளிடம் அவருடைய சாவைப் பற்றிய செய்தியை நீ தெரிவித்தபோது, முன்பு அவள் செய்த மாதிரியே – மறுபடியும் எழுத்து மூலம் உன் கணவரின் சாவுக்கு உன்னை அவள் பழிசாட்டுவாளா என யோசிக்கிறாய்.
நீங்கள் நகராமல் இருந்தது அவரைக் கொன்றது. அவரை ஓரிடத்தில் தங்கி இருக்கும்படி, அவருடைய கோடரியைக் கைவிடும்படி வற்புறுத்தினீர்கள். இப்போது அவர் தூங்கும்போது இறந்துபோனார். அவரை முழுதும் உங்களுக்கு மட்டுமே ஆனவராக வைத்துக்கொள்வதுதான் நீங்கள் விரும்பியதா? அவரைப் பயணத்தில் சாகவிடாமல் தடுத்தீர்கள்.
ஆ, அவள் அன்று எப்படி அலறினாள் – அவள் குரல் மன்னிக்காத இடிபோல இருந்தது. அவளுடைய அலறல் இன்னும் உன்னுள்ளே ரீங்கரிக்கிறது. கடவுள்களிடம் அவள் என்ன சொல்லப்போகிறாள் என்று உனக்கு அச்சம் இருக்கிறது.
நீங்கள் இருவரும் எழுதுகிறீர்கள். நீ உலர்ந்த குடல் குழல் துண்டுகளை வெட்டி, வளைத்து மந்திரச் சொற்களாக ஆக்குகிறாய், அவற்றை மெல்லத் தள்ளி ஊநீர்ப் பூச்சால் மெழுகப்பட்ட தோலுக்குள் இறங்கி அங்கே பிடித்துக்கொள்ளும்படி ஆக்குகிறாய்.
நீ அவருடைய துவக்க காலக் கதையை எழுதுகிறாய். அவருடைய குழந்தைப் பருவம், இளம்பிராயத்தில் அவரது சாதனைகள், உங்கள் காதல் வாழ்வைப் பற்றிய கட்டுக் கதைகள் ஆகியவை. நீ எப்படி உன் மகளை அடைந்தாய் என்பதை. அவள், உன் கணவரின் மற்ற பாதி வாழ்வு பற்றிய பழங்கதையை எழுதுகிறாள் – அவளை எப்படி அவர் மனிதருக்குத் தெரிந்த அனைத்து ஆயுதங்களிலும் பயிற்சி அளித்தார், கடவுள்களுக்கு மரியாதை செய்யவென்று எப்படி அவர்கள் சேர்ந்து உலகம் முழுதும் பயணம் செய்தார்கள் என்பதை.
அவள் எழுதியது உன்னைப் பற்றிய எதையும் சொல்லவில்லை.
…
நீ உன் விரல்களுக்கு ஓய்வு தருகிறாய், உன் தொடர்ந்த வேலைகளால் அவற்றில் வலி மின்னலாய்த் தெறிக்கிறது. நீ உன் கணவரின் கதையில் கடைசிப் பாகத்தைப் பூர்த்தி செய்துவிட்டாய். மாமிசத்தாலும் எலும்புகளாலும் ஆன மொழியில் எழுதிக் கடவுள்களின் பசியைத் திருப்தி செய்துவிட்டாய். அவர்களின் நாக்குகள் சமைக்கப்பட்ட சதைகளின்மீது சுழன்று உன் வாக்கியங்களையும் உன் வாழ்வுக்கு அவற்றோடு உள்ள தொடர்பையும் அவர்கள் விழுங்கும்போது தம் தலைகளை ஆட்டி அவர்கள் மெச்சுவார்கள் என்று நீ நம்புகிறாய்.
மேஜைக்கு எதிர்ப்புறம் தன் இடத்துக்கு அவள் வரும்போது உன் மகள் நீந்தி வருபவளைப்போல உன் கண் பார்வைக்குத் தெரியவருகிறாள், உன் கணவர் இடையில் இருக்கிறார்; அவள் இந்த மந்திர உச்சாடனத்தில் சேர்ந்துகொள்கிறாள். சாவில்கூட உன்னால் தாண்டமுடியாத தடையாக அவர் இருக்கிறார். நீ பேசத் துவங்கும்போது, அவளுடைய குரலும் உன் குரலோடு சேர்ந்துகொள்வதைக் கேட்டு நீ சற்று அதிர்கிறாய். நீ உச்சாடனங்களை முணுமுணுக்கிறாய், அவளுடைய உதடுகள் உன்னைப் பிரதிபலிக்கின்றன, ஆனால் நீயோ வார்த்தைகளை வருடிக்கொடுக்கிறாய், நயமாகப் பேசி அவற்றின் மாயத்தை உயிருள்ளதாக்க முனைகிறாய், அவள் அவற்றை வெட்டி நிஜத்திற்கு இழுக்கிறாள், எனவே அந்த அப்பத்தைச் சுற்றி நீ உன் மன உரத்தால் கொணரும் திரை உன் புறத்தில் பட்டுத் துணிபோல விழுகிறது, அவள் புறத்தில் பொருக்குகளாக ஆகிறது. அந்த இரண்டு பாதிகளும் நீலமான அமானுஷ ஒளியில் மின்னுகின்றன, ஒன்றோடொன்று பின்னிப் பிணைகின்றன, அந்தக் கிரியை முடிந்துவிட்டது.
நீ உன் பிரியாவிடையைப் பேசி முடித்துவிட்டாய், இறந்தவரை முதல் தடவை பார்த்தபோது செய்ததைவிட இப்போது மேலாகச் செய்தாய். உன்னுள்ளிருந்த ஏதோ ஓர் அணையொன்று உடைகிறது. ஓய்ச்சல் உன் வலுவை அழிக்கிறது, நீ உன் வயதை இப்போது உணர்கிறாய், முதலில் உன் கரங்கள் நடுங்குகின்றன, பிறகு வெளியேபோக நீ திரும்பி உன் முதுகைக் காட்டிக்கொண்டு – இளம் பனிக்கால இமம் மெல்லப் பின்வாங்குவதுபோல – காற்றுகூட அங்கு நலுங்காமல் உன் காலடிகளை அளந்து வைக்கும்போது உன் கால் முட்டிகள் கிறீச்சிடுகின்றன.
அடுமனையகத்திற்கு வெளியே, உன் மூச்சுத் திணறுகிறது. உன் கதறல் உயிருள்ள ஒரு ஜீவனைப்போல உன் தொண்டையில் புரண்டு, உன் நுரையீரல்களின் இண்டு இடுக்குகளில்கூடப் புகுந்து கொத்துகிறது. பெருகும் உன் கண்ணீர் முகமூடியாகப் பூசப்பட்டவற்றை உன் கன்னங்களிலிருந்து கரைக்கிறது.
பகிரப்படும் இழப்புகளிலேயே பிறப்பதும் பேசத் தேவையில்லாததுமான புரிதலோடு, உன் மகள் உன் கைகளை மென்மையாகப் பற்றித் தம் கரங்களில் எடுத்துக்கொள்கிறாள், நீ அவளுடைய நோக்கில் எதையோ தேடுகிறாய். ஆன்மாவைத் தன் கனத்தால் கீழ்நோக்கி அழுத்தும் அந்த மழுங்கிய, தட்டையான புரிதலைத் தேடுகிறாய். உன்னையே அவளது கண்களில் தேடுகிறாய், ஆனால் உனக்குப் பார்க்கக் கிட்டுவதெல்லாம் உன் கணவர்தான் – உன்னுடைய எல்லா அங்கங்களையும் எரித்துவிட்ட அந்தக் காட்டுத் தீயைத்தான். தான் அறிந்த ஒரே வாழ்வை இழந்துவிட்டதால் வலியுற்ற, அதனால் சீற்றமுற்ற ஒரு நபராகத்தான் உன்னை அவள் பார்க்கிறாள், நீ அவளுடைய கையை மெல்லத் தட்டுகிறாய், அவளுடைய மேல்நெற்றியை முத்தமிடுகிறாய், அவளுடைய தோல் உன் உதடுகளைத் தீய்க்கிறது. குழப்பம் அவளுடைய முகத்தை ஒன்று சேர்க்கிறது, அவளுடைய முகத்தைக் காக்கப் பூசப்பட்ட பூச்சின் விரிசல்கள் அவளுடைய முகத்தின் பல அம்சங்களோடு பொருந்திப்போகத் துவங்குகின்றன, அப்போது நீ உன் தலையை மறுப்பாக அசைக்கிறாய்.
“கடவுள்கள் உன் திறமையையும் உத்திகளையும் மெச்சுகிறார்கள். உன்னுடைய நிலையான கையையும் அதன் கருக்கையும் பாராட்டுகிறார்கள், ஆனால் இந்த அடுமனையில் உன் திறமைகள் தேவை என்று அவர்கள் கருதவில்லை.” அந்தச் சொற்கள் துன்பத்துடன் உருண்டு வெளிவருகின்றன – ஒரு முள் கொடியால் உன்னை நீயே கிழித்துப் பிளப்பதுபோல உணர்கிறாய், உன் மகளை நீ இப்படி விலக்கும்போது. ஆமாம், அவள் தன் பாதையைத் தொடரலாம், ஆனால் அது என்ன நல்லதைக் கொணரப்போகிறது?
“நீங்கள் என்னைப் பெரிதும் கௌரவிக்கிறீர்கள்.” அவளுடைய பதிலில் கோபம் தோய்ந்திருக்கிறது, ஆனால் இப்படிப்பட்ட புனிதத் தலங்களில் சச்சரவுகள் கெட்ட விளைவைத்தான் கொணரும், அதனால் அவளுடைய குரல் மிதமாகச் சீராக இருக்கிறது. அவளுடைய சீற்றத்தில் உண்மையான உணர்வைக்கண்டு, உன் தொழில் பாதைக்குத் தன்னை நேர்ந்துகொடுக்க அவள் விரும்புவது அவள் குரலில் தெரிவது உனக்கு ஆறுதல் பிறப்பிக்கிறது.
அவளை இங்கேயே தக்கவைக்க உனக்கு ஆசைதான், (தங்கினால்) அவள் இங்கிருந்து போகமாட்டாள். உனக்கு இயல்கிற எல்லாப் பொய்களையும், உன்னுடையதல்லாத கடவுள்களிடமிருந்து நீ கற்றுள்ள வசிய உச்சாடனங்களையும் பயன்படுத்தி, அவளை இயலாதவளாக ஆக்கி, அவளைப் பிடித்து வைத்துக்கொள்ளும் அந்த முயற்சி உன் சாவில்தான் முடியும் என்றாலும் அவற்றைச் சொல்லி அவளை இங்கேயே கட்டிப்போட உன் நாவு துடிக்கிறது. ஆனால் நீ மறுபடியும் அதைப் பரிசீலிக்கிறாய், மாறாக உண்மையான பிரதிபலிப்பாக அவளை அரவணைக்கிறாய். உனக்காகிற வயதுக்கு, உன் உள்ளெண்ணமேகூடப் போதுமானதாக இருக்கும்.
“நம் குழந்தையின் ஆழ்ந்த விருப்பத்துக்குப் பதில் சொல்வது தக்க மரியாதையாக இராது.” நீ உன் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்கிறாய், மரபுக்குள் வழுவாமல் இருக்கிறாய், ஆனால் பாறைகளைப்போல உன்மேல் கட்டப்பட்டிருக்கிற அந்தச் சாவின் அத்தனை கனத்தோடும் அவளை நோக்கிச் சாய்ந்து ரகசியக் குரலில் சொல்கிறாய். “மற்ற பலரின் கதைகளைப்போலவே, உன் தந்தையின் கதையையும் ரத்தத்தாலும் குருத்தெலும்பாலும் நான் சொல்லிவிட்டேன். என்னால் எத்தனை சிறப்பாகச் செய்யமுடியுமோ அத்தனை சிறப்பாக மற்றவர்களுக்கும் இதை நான் செய்வேன், நானே இன்னோர் அப்பம் தயாரிப்பவர் கையில் முடியும்வரை இதைச் செய்யப்போகிறேன். ஆனால் நீ உன் தந்தையின் கதையை இந்த வணக்கத் தலத்துக்கு வெளியே தொடர்வாயாக, அங்கே உன் கத்திகளின் வீச்சுகளுக்கு அர்த்தம் இருக்கிறது.”
“ஓடு. மலைகளையும், ஆறுகளையும் நோக்கி, ஒரு கையில் கத்தியுடனும் உன் முதுகில் ஒரு வில்லோடும் விரைந்தோடு. வாழ்வை நோக்கி ஓடு. அங்கேதான் உன் தந்தையை நீ காண்பாய்.”
இப்போது அவள்தான் அழுகிறாள். நீ அவளைத் தழுவிக் கொள்கிறாய், அவளுடைய குழந்தைப் பருவத்தில் அப்படி அணைத்தது உன் எலும்புகளில் இன்னமும் இருக்கிறது, அவள் ஒரு குழந்தையைப்போல, (அணைப்பிற்கு) மிகவும் தேவையுள்ளவளாக, காயப்படக்கூடியவளாக, உன்னை அணைத்துக் கொள்கிறாள். ஆனால் இனிமேலும் அவள் குழந்தையல்லள் – அவளுடைய மேலங்கிக்குள் அவளது தசைத்திரள்கள் நதி ஒன்றின் வலுவோடு உருள்கின்றன – எனவே நீ என்றோ பண்டமாற்றாகக் கொடுத்துவிட்ட வாழ்வைநோக்கி அவளை வழியனுப்புகிறாய்.
சிறு படிக ஜாடிகளிலிருந்து முகப்பூச்சை நீ மறுபடி உன் முகத்தில் பூசிக்கொள்கையில், அவளுடைய காலடிகள் அடுமனைக்கு வெளியில் உள்ள விரிந்த அறையில் எதிரொலிக்கின்றன. நீ உன்னையே பார்த்துக்கொள்கிறாய்: சாம்பல் நிறத்தில், களைத்துப்போன ஓர் ஆண்மகன், தன் கணவனைத் தொட்டதைவிடச் சாவைக் கூடுதலான தடவைகள் தொட்டவனைக் காண்கிறாய்.
உன் கடைசிப் பணி அந்த அப்பத்தை அதற்காகக் காத்திருக்கும் வாயை நோக்கிக் கொணர்வதுதான், அந்த வாய் அதன் கொடிகளோடும் கிளைகளோடும் ஆடியபடி, மினுமினுப்புடன் ஒளிர்ந்து காணப்படுகிறது. அங்கே கடவுள்கள் தம் நீண்ட கரங்களால் உன் படையலைச் சூழ்ந்து பற்றுவார்கள், உறிஞ்சி உள்ளிழுத்து, மூடுவார்கள், ஜீரணிப்பார்கள். உன்னுள் பெருத்த தேறுதல் உணர்வு பரவி உன்னை மூழ்கடிக்கிறது, நீ பெருமூச்சு விடுகிறாய்.
ஆமாம், நீயும் உன் மகளும் உன் கணவரின் உடலை அறுக்க ஆரம்பித்ததில் துவங்கியது, ஒரு நீண்ட நாளாகிவிட்டது, நீ அடுமனை அறைக்குள் மறுபடி நுழைகிறாய், அந்த அப்பத்தை ஒரு தள்ளு வண்டியில் ஏற்றுகிறாய்.
இந்தக் கதையின் இங்கிலிஷ் மூலம் Worlds Seen in passing: Ten Years of Tor.com Short Fiction என்கிற தொகுப்புப் புத்தகத்திலிருந்து பெறப்பட்டது. ‘The Language of Knives’ என்ற கதை. இதை கீழ்க்கண்ட தளத்திலும் பெறலாம்.
இதைத் தமிழாக்கம் செய்தவர்: மைத்ரேயன் (நவம்பர், 2020)
ஹாரலாம்பி மார்கோவின் பேட்டி ஒன்றைக் காண இங்கே செல்க: https://www.thebooksmugglers.com/2016/03/sff-in-conversation-talking-novels-with-haralambi-markov-sunil-patel-and-s-l-huang.html
ஹாரலாம்பி மார்கோவ் பல்கேரிய நாட்டு விமர்சகர், பதிப்பாசிரியர், வினோதமானவற்றையும் அசாதாரணமானவற்றையும் பற்றி எழுதுபவர். தேவதைக் கதைகளையும் பழங்கதைகளின் ராட்சதர்களையும் பற்றிப் படிக்க விரும்புபவர், சாவுக்கான சடங்குகளைப் புதிதாகத் தோற்றுவிப்பவர் (தன் கதைகளுக்காகத்தான், அண்டை வீட்டுக்காரர்களுக்கென்று இல்லை… பெரும்பாலும்.) டோர்.காம் என்ற தளத்தில் இந்யூமரபில் வாய்ஸஸ் என்ற பத்தியை நடத்துகிறார். இதில் சிறுகதை எழுத்தாளர்களின் பெருவிரல் நகச்சித்திரங்கள் கிட்டும். இவருடைய கதைகள், வியர்ட் ஃபிக்ஷன் ரிவ்யூ,எலெக்ட்ரிக் வெலாஸிபீட்,டோர்.காம், ஸ்டோரீஸ் ஃபார் சிப்: எ ட்ரிப்யூட் டு சாமுவெல் டிலானி, த ஏபெக்ஸ் புக் ஆஃப் வோர்ல்ட் எஸ் எஃப் மற்றும் அன்கேனி மாகஸீன் ஆகிய இடங்களில் பிரசுரமாகியுள்ளன.
i Butcher Broom Berries – இலையடி பழச்செடி (Ruscus aculeatus, butcher’s-broom[1] என்றும் அறியப்படும்) இது ஒரு பசுமை மாறா யுரேசிய புதர்ச்செடியாகும்.
அமானுஷ்யம். கச்சிதமான விவரணைகள் பயம் கலந்த ஆர்வத்தைத் தூண்டின. உயிரற்ற உடலிலிருந்து செய்யப்படும் அப்பம், அதில் ஈடுபடும் இருவர்,அவர்களின் செயல்பாடுகள், மற்றும் அன்னையான ஆணின் எண்ண ஓட்டங்கள், அபாரம், சார்.திறமையாக மொழிபெயர்ப்பு செய்துள்ளீர்கள். இரு முறை படித்து அனுபவித்தேன். வீரமும், விவேகமும் கத்தியின் இரு பக்க ‘ப்ளேடுகள்’ போல எனவும் தோன்றுகிறது.