ஒரு போராட்டத்தின் கதை

தமிழக முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் மார்ச் 21, 2015 அன்று வீட்டில் இல்லை. அன்று சனிக்கிழமை – அலுவலகமும் கிடையாது. எங்கே போயிருந்தாரோ – ஆனால் அவர் இல்லாதது நல்லதாகப் போயிற்று.

கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவர் வீட்டு வாசலில் இரண்டு, மூன்று போலீசார் மட்டுமே. போயஸ் கார்டனின் கெடுபிடிக்கு ஒப்பாக இங்கே யாரும் இல்லை. 

காலை  பதினொரு   மணிக்கு தலையில் ஆம் ஆத்மி கட்சியின் வெள்ளை தொப்பி அணிந்த ஒரு கூட்டம் மெதுவாகச் சேரலாயிற்று. ஐம்பது அறுபது பேர் சேர்ந்த பின்னர், கோஷம் போடத் தொடங்கினார்கள். முதலமைச்சர் வீட்டுக் கதவு சாத்தி இருந்தது. ஆனால் பக்கத்தில் ஒரு சிறு கதவை மூட யாரோ மறந்து விட்டார்கள். 

இதற்கு சில மாதங்களுக்கு முன்னால் முத்துக்குமாரசுவாமி என்னும் விவசாயத் துறையைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டிருந்தார். அந்தத் தற்கொலைக்கு விவசாயத் துறை அமைச்சரான “அக்ரி” கிருஷ்ணமூர்த்தி காரணம் என்று வதந்திகள் உலவ, அவர் ராஜினாமா செய்திருந்தார். 

தமிழக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்கள், திரு.கிருஷ்ணமூர்த்தி மேல் சி.பி.ஐ விசாரணை நடக்க வேண்டும் என்றும் அவர் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்னும் கோரிக்கைகளுடன் அந்தச் சனிக்கிழமை மத்தியானம் முதல்வர் வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தார்கள். 

திறந்திருந்த சிறு கதவைத் தாண்டிச் சிலர் உள்ளே போக, மற்றவர்களும் தொடர, முதல்வரின் வீட்டு வாசலில், நேராகக் கார் வந்து நிற்கும் இடத்தில் அவ்வளவு பேரும் வந்து சேர்ந்தார்கள். அங்கிருந்த ஓரிரு காவல் துறையினர் உதவி கேட்கும் நிலை வந்தது. திறந்திருந்த கதவு சாத்தப்பட்டது. 

*

2015-ம் வருடம் நான் மறுபடி எழுத்தாளனாகலாம் என்று யோசித்து வந்த நேரம். ஒரு வருடத்திற்கு முன்னால் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் சின்னமான துடைப்பக்கட்டையைத் தூக்கிக் கொண்டு ஏப்ரல் மாத வெயிலில் நடுத்தெருவில் ஓடியிருந்தேன். ஆனால் தில்லியில் பிப்ரவரி 2015-ல் நடந்த தேர்தலில் கெஜ்ரிவால் வென்ற பின் கட்சி இரண்டாகப் பிளந்திருந்தது. 

தமிழகத்தில் எங்கள் யாருக்கும் இந்தப் பிளவு புரியவில்லை. 

“அக்ரி” கிருஷ்ணமூர்த்தி விஷயத்தில் திமுக கொஞ்சம் அடக்கி வாசித்ததாக ஆம் ஆத்மி கட்சியில் சிலர் நினைத்தனர். தில்லியில் பெரும் ஊழல் போராட்டங்கள் நடந்தது போல தமிழகத்திலும் நடத்தும் எண்ணத்தில் ஓ.பி.எஸ் வீட்டில் போராட்டம் திட்டமிடப்பட்டிருக்க வேண்டும். 

நான் இந்தப் போராட்டத்தைத் தவிர்த்து வீட்டில் அமர்ந்து என்னுடைய அடுத்த கட்ட நடவடிக்கைகளைக் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டிருந்த நேரம் செல்போன் அடித்தது.

முதல்வர் வீட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட ஐம்பது பேர், பதினைந்து நாட்களுக்கு புழல் சிறையில் ரிமாண்ட் செய்யப்பட்டதாக என்னிடம் தெரிவித்தனர். அவர்களில் நான்கு பெண்கள். சிலர் அன்றாடம் காய்ச்சிகள்.

முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு போதுமான மரியாதை இல்லை என்றும் ஜெயலலிதாவின் கைப்பாவை அவர் என்று எல்லோரும் நினைக்கிறார்கள் என்று அவர் வட்டத்தில் ஒரு எண்ணம் இருந்தது. ஜெயலலிதா வீட்டின் உள்ளே போய் இப்படி ஒரு போராட்டம் நடந்திருக்கவே முடியாது என்பது தெளிவு. அதோடு உளவுத் துறைக்கு  இந்தப் போராட்டத்தைப் பற்றிய எந்த ஞானமும் இல்லை. எனவே போராடியவர்கள் மேல்  எந்தக் கருணையும் காட்டப்படவில்லை.

*

இந்த நேரத்தில் தமிழக ஆம் ஆத்மி கட்சி குறித்து ஒரு குறிப்பு. 2014-ல் ரெனால்ட் நிஸ்ஸான் கார் நிறுவனம் சில பணியாளர்களை பணிநீக்கம் செய்தது குறித்து நாங்கள் அந்த கம்பெனி அலுவலகத்தில் சில போராட்டங்கள் செய்திருந்தோம். அந்த நிறுவனம் உடனே வக்கீல் நோட்டீஸ் ஒன்றை எங்களுக்கு அனுப்பியது. அந்த நோட்டீஸில், “உங்கள் கட்சியின் தமிழகத் தலைவர் யார் என்று அறிய நாங்கள் மிகவும் பிரயத்தனம் செய்தோம். ஆனால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே இந்தச் செய்தியை உங்கள் தலைவருக்கு கொண்டு போய்ச் சேர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்,” என்று எழுதியிருந்தார்கள்.

உண்மையில் எங்கள் யாருக்குமே தலைவர் யார் என்று தெரியாத நிலை இருந்தது – கட்சிக்குள் கடுமையான கோஷ்டிப் பூசல். தலைக்குத் தலை தாம் தான் தலைவர் என்று சொல்லிக் கொண்டு கெஜ்ரிவாலுக்கு தூது அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.

இந்த நிலையில், ஐம்பது பேர் கைதானதில், சில தலைவர்கள் உள்ளே மாட்டி இருந்தார்கள். 

*

சிறைக்குச் செல்லும் போராளிகளுக்கு வெளியே இருந்து உதவ நினைப்பவர்களுக்கு ஒரு முக்கியமான அறிவுரை: முதலில் நீங்கள் செய்ய வேண்டியது உள்ளே இருப்பவர்களுக்கு உணவு டோக்கன்களை அனுப்பி வைப்பதே. வக்கீலைப் பிடிக்கும்  முன்னால் நீங்கள் இந்த வேலையைச் செய்ய வேண்டும். சிறை உணவு மிக மோசமாக இருப்பதால் போராளிகள் விரைவாகத்  தம் தீவிரத்தைக் கை  விடும் அபாயம் உண்டு. 

சிறைக்குள் நல்ல உணவு கிடைக்க வசதிகள் உண்டு – ஆனால் அதற்கு வெளியே இருப்பவர்கள் டோக்கன் வாங்கி உள்ளே அனுப்ப வேண்டும். ஞாயிற்றுக் கிழமை அன்று சிறை விடுமுறை என்பதால் அன்று டோக்கன் வாங்க முடியாது – எனவே நீங்கள் சனிக்கிழமை போராட்டங்களில் ஈடுபடாமல் இருப்பது நலம்.

நான் நண்பர்கள் சிலருடன் அந்த ஞாயிற்றுக் கிழமை புழல் சென்றிருந்தேன். வெளியே இருந்து பார்த்தோம். மறு நாள் உள்ளே போக முடிவு செய்து விட்டு, தி.நகர் கட்சி அலுவலகம் அருகில் இருந்த சரவண பவனுக்குச் சாப்பிட வந்தோம். சாப்பிட்டு முடித்து  விச்ராந்தியாக அமர்ந்திருக்கையில் கட்சி வக்கீல் குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்னைத் தனியாக அழைத்தார். ஒரு பெரிய பேப்பர் கட்டு கையில் வைத்திருந்தார்.

“அம்பது பேரோட போன் நம்பர், எந்த செக்ஷன் எல்லாம் இதுல இருக்கு,” என்றார். “இதை வச்சு தான் நீங்க வேலையை ஆரம்பிக்கணும்.”

எனக்கு ஒன்றும் புரியவில்லை.

“என்ன பண்ணனும்?” என்றேன்.

“குடும்பங்களை நம்ப கட்சி சார்பா காண்டாக்ட் செய்யணும். செயில்ல அவங்க பாக்க வரும் போது ஒண்ணா கூட்டிப் போகணும். வக்கீல்கள்  நாங்க சாமீன்லாம் பாத்துக்குறோம். வெளிய அரசுக்கு அழுத்தம் கொடுக்கணும். நிதி வேணும்,” என்று சொல்லிக் கொண்டே போனார்.

நான் தலையைத் தலையை ஆட்டினேன். 

சற்று நேரத்தில் பரபரப்பான செய்தி வந்தது – அதிமுக தொண்டர்கள் வெறியில் இருப்பதாகவும், கட்சி அலுவலகத்தை அடித்து உடைக்க ஆறு மணிக்கு வருவதாகவும் பேசிக் கொண்டார்கள். 

சரவண பவனில் உடனே எங்களுக்குள் சச்சரவு தொடங்கியது. சிலர், அலுவலகத்தில் தான் கூட வேண்டும் என்கிற அவசியம் இல்லை என்றும்; சரவண பவனிலேயே கூடினால் என்ன தப்பு என்றும் கேட்டார்கள். பிறர் கட்டாயம் அலுவலகம் போய் அதிமுகவிடம் அடி வாங்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்கள். முதல் தரப்பு தமக்கு பயம் எதுவும் இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்தார்கள். 

இந்த நேரத்தில்   வேறு ஒரு தனி விவாதமும் போய்க் கொண்டிருந்தது – உள்ளே இருந்த தலைவர்கள் அவசரப்பட்டு இதில் இறங்கியதாக ஒரு பேச்சு இருந்தது. 

ஒரு தனிப் புரட்சியாளர், சாமீன் என்பதே அமைப்புக்கு நாம் தலைவணங்குவதைக் குறிக்கும் என்றும்; போராளிகளை சிறையில் வாட விடுவதே அவர்களுக்கு நாம் செய்யும் மரியாதை என்றும் அந்தச் சரவண பவன் சந்திப்பில் பிரச்சாரம் செய்தார்.

ஏழு மணி வரை அங்கிருந்து விட்டு அதிமுக ஆட்கள் வரவில்லை என்று தெரிந்த பின்னர் கட்சி அலுவலகம் சென்றோம். அங்கே அடுத்த நடவடிக்கைகள் குறித்துப் பேச அமர்ந்தார்கள். 

முதலில் தலைவர் ஒருவர் பேசி விட்டு, “இப்போது நாளை சிறையில் செய்ய வேண்டியது குறித்து ராமையா பேசுவார்,” என்றார்.

அந்த நொடியில் தான் நான் அந்தக் கட்சியில் இருக்கும் வரையில் எழுத்தாளனாகவே முடியாது என்று உணர்ந்து கொண்டேன்.

எழுந்து நின்று, சற்று நேரம் உணவு டோக்கன்களின்  அவசியம் குறித்துப் பேசினேன். பிறகு, சிறைப்பட்டவர்களின் குடும்பங்களை தொடர்பு கொண்டு நடப்பவை குறித்து பேச ஒரு குழு அமைக்க வேண்டும் என்று சொன்னேன். நாலைந்து பேர் அந்தக் குழுவில் சேரக் கை தூக்கினார்கள்.

இரவு ஒன்பது மணிக்கு இந்தக் குழுவுடன் நான் அமர்ந்தேன். எங்கள் பட்டியலில் இருந்த ஐம்பது பேர்களில் பலர் சுத்தமாக யாரென்று தெரியவில்லை. கட்சி அழைத்ததே என்று வந்திருந்தார்கள், பாவம். மொத்தம் ஒரு பத்துப் பேரின் குடும்ப தொலைபேசி  எண்கள் மட்டுமே இருந்தன. 

ஆனால் எங்களிடம் ஒரு துருப்புச் சீட்டு இருந்தது: ரிமாண்ட் செய்கையில், காவல் துறையினர் எல்லோருடைய தொடர்பு எண்களையும் கேட்டிருந்தார்கள். கைதானவர்களின் கைப்பட எழுதிய இந்த எண்களின் பட்டியல் எங்களிடம் இருந்தது. உற்சாகத்துடன் ஒவ்வொரு எண்ணாக அடிக்கத் தொடங்கினோம். 

ஒரு எண் கூட யாரும் எடுக்கவில்லை. அழைப்பு போய்க் கொண்டே இருந்தது.

ஆச்சரியத்துடன் எண்களைச் சரி பார்க்கும் போது தான் எங்களுக்குப் புரிந்தது: காவல் துறையினர் கைதானவர்களிடம் “தொடர்பு எண்” என்று கேட்ட போது அவர்கள் குடும்பத்தாரின் எண்களை கேட்டுள்ளார்கள். ஆனால் எங்கள் கட்சியின் போராளிகளோ, தம்முடைய சொந்த தொலைபேசி எண்களை கொடுத்திருந்தனர்!

செயிலுக்கு போகும் ஆர்வம் உள்ளவர்கள் யாரேனும் இதைப் படித்து வந்தால், இதைப் புரிந்து கொள்வது அவசியம். 

இரவு பத்து மணிக்கு மிகச் சில குடும்பங்களையே தொடர்பு கொண்டிருந்தோம். கைதானதில் ஒருவர்  மென்பொருள் துறையில் வேலை பார்ப்பவர். அவருக்கும் மனைவிக்கும் சற்று மனஸ்தாபம் போல. அவர் மனைவியை அழைத்து நான் கணவர் சிறையில் இருக்கிறார் என்று சொன்ன போது, “Awesome,” என்றார். மற்றொருவர் மனைவி கிரீச் என்று கத்தி விட்டு போனை வைத்து விட்டார்.

*

புழல் சிறையில் வார நாட்கள் கோலாகலமாக இருக்கும். காலை ஐந்து, ஆறு மணிக்கே கைதிகளைப் பார்க்க விரும்புவோர் வந்து குமிந்து விடுவார்கள். சிறையில் நீங்கள் யாரையாவது பார்க்க வேண்டுமானால் ஒன்று அவரது வக்கீலாக இருக்க வேண்டும். அல்லது உறவினராக இருக்க வேண்டும். மற்றவர்கள் அண்ணன், தம்பி என்று ஏதாவது சொல்லி உள்ளே போவது வழக்கம். 

சிறைக்கு வெளியே வரும் கூட்டத்தைக் கருத்தில் கொண்டு ஒரு சிறு கடை உண்டு. வெள்ளை உடுப்பு அணிந்த ஆயுள் தண்டனைக் கைதிகள் இங்கு சிப்பந்திகளாக இருப்பார்கள். எங்கள் வக்கீல்கள், இவர்கள் மற்றும் சிறையில் யாருடனும் அதிகம் பேசாமல் இருப்பது நலம் என்று வலியுறுத்தி இருந்தார்கள். சிறையில் உள்ளவர்கள் சிலர் சைக்கோப்பாத்துகளாக இருக்க வாய்ப்பு உண்டு என்பதனால் இந்த அறிவுரை சொல்லப்பட்டது. கவர்ச்சியாகப் பேசும் திறன் கொண்டவர்கள்.

எனக்கு இடப்பட்ட கட்டளைகள்:

  • வரும் குடும்பத்தினர் எல்லோரையும் சேர்த்து வைத்து உள்ளே ஒரே குழுவாக அழைத்துச் செல்ல வேண்டும் 
  • அவர்கள் அனைவரும் சென்ற பின் தான் நாங்கள் உள்ளே செல்லலாம் 
  • உள்ளே இருந்த தலைவர்களுடன் பேசி அவர்கள் நிலையைக் கண்டறிய வேண்டும்.

நான் கையில் ஒரு பட்டியலுடன், வந்த குடும்பத்தினரை ஒன்றாக உள்ளே செல்லச் செய்ய முயன்று வந்தேன். அவர்களில் பலர் அரசியலுக்கும் இது போன்ற கைதுகளுக்கும் புதிது. மிக கலவரப்பட்டிருந்தார்கள். அவர்களுக்கு இந்தக் கட்சியின் முயற்சிகளில் எந்த ஆர்வமும் இல்லை.

எனக்கு இன்னும் ஒரு முக்கிய வேலையும் இருந்தது – சாமீன் கிடைத்தால் பிணையம் (surety) தேவைப்படும். ஒரு கைதிக்கு இரண்டு பிணையம் தேவை என்று நீதிபதி சொன்னால் நூறு பேரை நீதிமன்றத்தில் கொண்டு இறக்க வேண்டும். அவர்கள் அனைவரும் சரியான பத்திரங்கள் வைத்திருக்க வேண்டும். இதற்குத் தேவையான முயற்சிகளை அன்று அந்தக் குடும்பங்களுடன் செய்ய வேண்டிய அவசியம் இருந்தது.

நல்ல வெயில். வந்ததில் வயதானவர்கள் சிலர் உள்ளே போகத் துடித்தார்கள். 

ஒரு அம்மையார், தம் மகன் கைதானது இன்னும் அவன் தந்தைக்குத் தெரியாது என்றார். பையன் வேறு எங்கோ போயிருக்கிறான் என்று கணவரிடம் சொல்லி விட்டு இவர் புழலுக்கு வந்திருந்தார். 

“ஐம்பது பேரை மட்டும் வச்சிட்டு இந்த மாதிரி போராட்டமெல்லாம் நடத்தக் கூடாதுப்பா,” என்றார். “பெரிய கட்சியா இருந்தா பரவாயில்லை.”

அவருடன் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தேன். அவர்கள் அனைவரும் அதிமுக ஆதரவு என்றார். 

என்னிடம், “நீங்க எப்பிடி தம்பி போராட்டத்துக்குப் போகலை? ஊர்ல இல்லையா?” என்றார். 

அவருக்கு தம் மகனைச் சில பேராகச் சேர்ந்து மாட்டி விட்டதாகச் சந்தேகம் வந்திருந்தது போலும்.

“நான் ஆபீஸ் வேலையா இருந்தேன்,” என்றேன்.

“எங்க வேலை பாக்குறீங்க? அன்னைக்குச் சனிக்கிழமையாச்சே?” 

“இதோ வந்திட்டேன்,” என்று கழண்டு கொண்டேன். 

நான் முன்னமே சொன்ன உணவு டோக்கன்கள் போய்ச் சேர்ந்து விட்டன. சமோசாக்களும், எலுமிச்சை சோறும் கிடைக்கும் என்று செய்தி வந்த பின் தான் எங்களுக்கு ஆறுதல் ஏற்பட்டது. 

சிறைக்கு உள்ளே நீங்கள் போகும் போது கடும் சோதனைகள் உண்டு – பாக்கெட்டில் எந்தப் பொருளும் (பணம், செல்போன்) இருக்கக் கூடாது. எனவே வெளியே ஒருவரை நிறுத்தி விட்டு அவர்களிடம் உங்கள் பொருள்களைக் கொடுத்து விட்டுப் போக வேண்டும். 

நாங்கள் கடைசியாக உள்ளே சென்ற போது இரண்டு மணி இருக்கும் என்று நினைக்கிறேன். வலைக்கம்பி போட்ட ஒரு சுவர். அதற்கு நடுவே காவலர் நடக்க இடம். மறுபுறம் மற்றொரு வலைக் கம்பி போட்ட சுவர் – அதற்கும் மறுபுறம் கைதான சில போராளிகள். 

அவர்களுள் ஒருவரான் ஜெயராம் என்னிடம், “போராட்டத்தை தொடர என்ன செய்யப் போகிறீர்கள்? இன்னும் பெரிய மறியல்கள் நடத்த வேண்டும். எங்களை வெளியே கொண்டு வருவது முக்கியமல்ல,” என்றார்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை – இங்கே இவர்கள் போனதற்கே நாக்கு தள்ளி விட்டது. அதோடு, என்னிடம் இதைச் சொல்லி என்ன பயன்? நான் இப்போது தலைவர்களில் ஒருவனா?

அதே சமயம் அவரிடம் உண்மை நிலையை எப்படிச் சொல்வது என்றும் தெரியவில்லை. உளவுத் துறையினர், மேலே சொன்ன ரெனால்ட் நிறுவனத்தின் வக்கீல்களைப் போலவே, இந்தப் போராட்டத்தின் தலைவர் யார் என்று கண்டுபிடிக்க முயற்சி செய்து வந்தார்கள். இந்த முறையும் அவர்கள் முயற்சி தோல்வியுற்றது. அதே சமயம் வெளியே குடும்பத்தினர் மத்தியில் பெரும் குழப்பத்தை சிலர் தூண்டி வந்தார்கள். கைதானவர் ஒருவர் வீட்டில் ஒரு தலைவர் போய், “உன் கணவனுக்கு இந்த நிலை வரக் காரணம் பிற தலைவர்கள் தான்,” என்று சொல்லி இருந்ததாகக் கேள்விப்பட்டோம்.

அதோடு எனக்கு குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பது பெரும் தலைவலியாக இருந்தது. அவர்களிடம் உண்மை நிலையைச் சொல்ல வேண்டும் என்று நான் முயன்றேன் – உண்மை நிலை என்ன? அரசு இவர்கள் வெளியே வருவதைக் கடுமையாக எதிர்க்க போகிறது. நீதிபதிகள் அரசு சொல்படி கேட்பார்கள் என்கிற எண்ணம் வக்கீல்களுக்கே இருந்தது. எனவே, “நாளை வந்து விடுவார்கள்,” என்று சொல்வதில் என்ன பயன்? 

“கீரீச்,” என்று ஒருவர் மனைவி கத்தினார் என்று சொன்னேனே, அவருடன் பேசுவது பெரிய சவாலாக இருந்தது. 

“எப்போ வருவாருங்க?”

“சாமீன் கேட்டிருக்கோம்மா.”

“அய்யோ!”

சிறு அமைதி. பிறகு,

“நாளைக்கு வருவாரா?”

“இல்லம்மா, அப்படிச் சொல்ல முடியாது.”

“அய்யய்யோ..என்னங்க சொல்றீங்க!”

இப்படி ஒவ்வொரு நாளும் அவருடன் அரை மணி நேரம் பேச வேண்டி இருந்தது.

*

சாமீன் கீழ் நீதிமன்றத்தில் கொடுக்கப்படவில்லை. எல்லா குடும்பங்களையும் அழைத்து இதைத் தெரிவித்தோம். சிலர் திட்டினார்கள். சிலர் வேறு வக்கீல்கள் பார்க்கப் போவதாகச் சொன்னார்கள். 

ஒரு பெரிய சந்திப்பு எல்லா குடும்பங்களையும் சேர்த்து ஒரு கல்யாண மண்டபத்தில் நடத்தினார்கள். நான் போகவில்லை. நல்லதாகப் போயிற்று.

“யாருய்யா அவன் ராமையா? அவனை வரச் சொல்லு! எதைக் கேட்டாலும் தெரியாதுன்றான்? அதுக்கு அவன் எதுக்கு?” என்று ஒரு குடும்பம் மிரட்டியதாகக் கேள்விப்பட்டேன். 

“கேஜரிவால் என்ன பண்றார்?” என்றும் ஒரு கேள்வி எழுந்தது. என்னை ஒரு நாள் அழைத்து மறு நாள் தில்லி போய் கேஜ்ரிவாலை பார்த்து ஒரு அறிக்கை விடும்படி கேட்க வேண்டும் என்று சொன்னார்கள். எனக்கு பறக்கப் பிடிக்காது. இதைச் சொன்னால் கட்சிக்காக தியாகம் பண்ணச் சொல்வார்கள் என்று எதுவும் சொல்லவில்லை. கடைசியில் டிக்கட் விலையைப் பார்த்து போக வேண்டாம் என்று விட்டார்கள்.

பிரசாந்த் பூஷண் ஒரு அறிக்கை விட்டார். தேசியத் தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் பத்திரிகைகள் ஐம்பது பேரின் நிலையைக் குறித்து எழுதின. ஆட்டோக்காரர் தம் ஆட்டோவை இழந்தார். சிலர் வேலையை இழந்தனர். ஒரு பெண் போராளியின் மகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடந்து வந்தன. ஜெயராம் அமெரிக்காவில் இருந்து இங்கு விவசாயம் செய்ய வந்து சிறையில் வாடுகிறார் என்பதையும் டைம்ஸ் போன்ற பத்திரிகைகள் அறிவித்தன.

சமூக வலைத் தளங்களில் பெரும் பிரசாரம் செய்தோம் – ஆனால் அதற்கு எவ்வளவு தூரம் பலன் இருந்ததோ தெரியவில்லை.

ஆனால் தமிழகப் பத்திரிகைகள் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

பத்து நாட்கள் சென்ற பின்னர் சாமீன் கிடைத்தது. முந்திய நாள் வக்கீல் குமார் என்னிடம் பேசினார்.

“ஐம்பது பேருக்கும் surety கேட்டா நூறு பேர் அங்க இருக்கணும். இல்லைன்னா சில பேர் உள்ள இருப்பாங்க. நாளைக்கு சாயந்திரத்துக்குள்ள வெளிய எடுக்கணும்னா, மூணு மணிக்கு நூறு பேரைக் கொண்டு வரணும்,” என்றார்.

எனக்கு பயங்கரமான ஒரு surreal உணர்வு தோன்றியது – இவர்கள் உண்மையில் இவ்வளவு பேருடைய வாழ்க்கையை என் போன்றவன் கையில் விடுகிறார்களா? “கிரீச்” பெண் தம் துணைக்கு மே பதினேழு இயக்கத்தில் இருந்து இருவரை அழைத்து வந்திருந்தார். அவர்கள் எந்த ஆவணங்களைக் கொண்டு வருவது என்பது குறித்து என்னுடன் சண்டையிட்டனர். என் பேச்சை யாரும் கேட்கப் போவதில்லை. எங்கிருந்து நூறு பேரைக் கூட்டி வருவது?

சைதாபேட்டை நீதிமன்ற வளாகத்தில் மதியம் இரண்டு மணிக்கு சாமீன் கிடைத்து விட்டது என்று தெரிந்தது. நானும் நண்பர்களும் கட்டித் தழுவிக் கொண்டோம். பிணையம் ஒருவர் கொடுத்தால் போதும் என்றும் கனம் நீதிபதி கருணை கூர்ந்து அருளியிருந்தார்.

கோர்ட்டின் உள்ளே ஒரு குழு உட்கார்ந்து எல்லோருடைய ஆவணங்களையும் சரி பார்த்தார்கள். சரியாக ஐம்பது பேருக்கும் ஆள் இருக்கிறது என்று தெரிந்த பின் சற்று அமைதியடைந்தோம்.

மாலை ஆறு மணிக்குள் புழல் செல்ல வேண்டும் – எல்லோரும் அரக்கப் பரக்க ஓடினார்கள். நான் போகும் போது தொலைக்காட்சி கேமிராக்கள் வந்து இறங்கி இருந்தார்கள். ஐம்பது பேரும் வெளி வந்த பின் ஒரே கூச்சலும் குழப்பமுமாக இருந்தது. எல்லோரும் சேர்ந்து தேசபக்திப் பாடல்கள் பாடினார்கள்.

தந்தைக்குத் தெரியாமல் சிறை போய் வந்த அந்தப் பையன் அவருக்குத் தெரியாமலே வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தான். 

இந்த வழக்கிலும் ஐந்து வருடங்கள் சென்ற பின்னும் குற்றப் பத்திரிகை தாக்கலே  செய்யப்படவில்லை. வெறுமே பாடம் புகட்டும் ஒரு செயலாக இந்தச் சிறைத் தண்டனை அமைந்தது. 

ஆச்சரியப்படும் விதமாக வெளி வந்தவர்களில் பாதிக்கு மேல் அரசியல் வேலையைத் தொடர்ந்தார்கள். சிலர் ஒன்று சேர்ந்து ஆம் ஆத்மி கட்சியை விட்டு விலகி வேறு சில நிறுவனங்கள் அமைத்தார்கள். 

நான் அன்று இரவு வீட்டிற்கு வந்து கட்சி பக்கம் போக மாட்டேன் என்று உறுதி செய்து கொண்டேன். ஒரு வேலையில் சேர்ந்து உருப்படலாம் என்று தோன்றியது.

இவ்வளவுக்கும் காரணமான “அக்ரி” கிருஷ்ணமூர்த்தி 2018-ல் விசாரணைகளில் நிரபராதி என்று முடிவாகி வந்தார்.

நான் இன்னும் அதே நாவலை எழுத முயன்று வருகிறேன். 

Reference:

Indian Express Article – https://indianexpress.com/article/india/politics/long-way-from-delhi-aap-unit-in-tamil-nadu-makes-itself-count/

**************************************************

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.