ஷெரின்

அது ஒரு டிசம்பர் மாதக் காலைப்பொழுது. பனியை மெதுவாக விலக்கிச் சூரியஒளி பூமியை சூடேற்றிக்கொண்டிருந்தது. வெயிலில் நிற்பது இதமாக இருந்தது. அது  எங்களுடைய  பதினொன்றாம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு விடுமுறைக் காலம். நானும் என்னுடைய  தோழி சத்யாவும் அவளுடைய  வீட்டிற்குமுன்பு இறகுப் பந்து விளையாடிக்கொண்டிருந்தோம். நேரம் காலம் இல்லாமல் விளையாடியபடி இருக்கையில்தான் எங்கிருந்தோ மிதந்து வந்தது அந்த இசை, அதிகாலை வேளையின்  பனிப்புகை அறையினுள் நுழைவதுபோல மெல்ல நுழைந்து மனதை  ஆக்கிரமிக்கத் தொடங்கியது அந்த இசை.

சற்று நேரத்திற்கெல்லாம்  லேசாக மழை  தூறவே வீட்டினுள் சென்று கார்ட்ஸ் விளையாட ஆரம்பித்தோம்.  சத்யாவுடைய வீடு ஒரு ரோ ஹவுசஸ் போன்ற அமைப்புடன் இடைவெளியின்றி கட்டப்பட்ட வீடுகளில் முதல் வீடு.  சத்தமாகப் பேசினாலே அடுத்த வீட்டுக்கு நன்றாக கேட்கும். அடுத்தடுத்த வீடுகளின் வாசல்களுக்குப் பெரிதாகத் தடுப்புகள் இருக்காது. செடிகள் வளர்த்து எல்லை பிரித்து வைத்திருப்பார்கள். அவளுடைய வீட்டிற்குப் பக்கத்து வீட்டில் ஓர் ஆங்கிலப் பேராசிரியை தனியாக வசித்துவந்தார். அவர் பெயர் ஷெரின். ஷெரின் மேம் பெரிதாக யாருடனும் பேசியோ சிரித்தோ நான் பார்த்ததில்லை. அவருண்டு வேலையுண்டு என்று இருப்பார். அவரைப் பார்ப்பதே அரிதுதான். வருடக்கணக்கில் அவர் பக்கத்து வீட்டில் இருக்கும் சத்யாவுக்கே அவரைப் பற்றிப் பெரிதாக ஒன்றும் தெரியாது. அவர் பாண்டிச்சேரியை பூர்விகமாகக் கொண்டவர் .எப்போதாவது அவரைப் பார்க்க வயதான தம்பதியினர்  வருகிறார்கள்,  அது அவரின் பெற்றோராக இருக்கக்கூடும் என்பதே அவளின்  யூகம்தான். தனியாக வசிப்பது பயமாக இல்லையா என்று எப்போதாவது அவரைப் பார்க்கும்போது மட்டும் தோன்றும்.

ஷெரின் மேம்க்கும்  அப்போது கல்லூரி விடுமுறைக் காலம் என்பதால் அவரும் வீட்டிலிருந்தார். அவர்  வீட்டுத் தொலைக்காட்சியில் ஏதோ  ஒரு திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. தமிழ்ப் படம்  இல்லை என்று தெளிவாகத் தெரிந்தது. ஆங்கிலம் போலவும் தெரியவில்லை. அந்தப் படத்தின் பின்னணி இசைதான் காலை முதல் தெளிவாகக் கேட்டுக்கொண்டிருந்தது. அந்த இசையில் ஓர் ஈர்ப்பு இருந்தது. அந்த இசை, நம்மை அனைத்தையும் மறக்கவைக்க அல்லது ஏதோ ஒன்றை நினைவுக்குக் கொண்டுவந்து நிறுத்த வல்லதாய் இருந்தது. 

மறுநாள் நாங்கள்  விளையாடும்போதும் அவர் வீட்டுத் தொலைக்காட்சியின் ஒலி கேட்டபடியே இருந்தது. அன்று நான் வீட்டிற்குச் சென்றபிறகு அந்த இசை செவிகளைவிட்டு விலகினாலும் மனதைவிட்டு அகலாமல் இருந்தது.

மூன்றாம் நாள்தான் கவனித்தேன் இந்த மூன்று நாள்களும் அதே பிஜிஎம்தான் கேட்கிறது. என்ன வசனம் என்று புரியாவிட்டாலும் அதே குரல்கள் பேசியபடி இருந்தன.

” சத்யா, இவங்க மூனு  நாளா   ஒரே படம் பாக்குறாங்க போல.” .

“அட… அந்தப் படம் வருஷக் கணக்கா ஓடுது. தினமும் இந்த படத்தோட சத்தம் கேட்கும். எங்களுக்குப் பழகிருச்சு” என்றாள்.

“வருஷக்கணக்காவா? அப்படி  என்ன படம்?” ஆச்சரியம் மேலிடக் கேட்டேன்.

 “அது  என்ன பாஷைனே புரியல. ஆனா தினமும் ஓடும். மியூசிக் நல்லா இருக்கும்.அவங்க காலேஜ் போற நாள்ல நைட் ஓடும். இப்போ லீவ்னால மார்னிங் ஷோ ஓடுது. ஆனா எப்படித்தான் சளைக்காம பாக்குறாங்களோ?”

அதுவரை நான் ஷெரின் மேம் பற்றிச் சில நொடிகள்கூடச் சிந்தித்தது கிடையாது. அவர் வாழ்க்கையைப் பற்றி எல்லாம் யோசித்ததுமில்லை, பேசியதுமில்லை. ஆனால் இப்போது அவர் ஏன் தனியாக இருக்கிறார்? அந்த படத்துக்கும் அவருக்கும் என்ன  தொடர்பு? நிச்சயம் அந்தப் படத்தில் அவர் வாழ்க்கையின் தாக்கம் இருக்கிறது. இல்லையேல் ஒரே படத்தை யாரேனும் வருஷக் கணக்கில் பார்க்க முடியுமா? என்றெல்லாம்  மனம் சிந்திக்க ஆரம்பித்தது.

ஏனோ, ஷெரின் மேம் என் மனதிற்கு நெருக்கமானவராகத் தோன்றினார். அதனாலேயே அவரின் அகத்தை அவரறியாமல் அறிய விழைகிறோம் என்ற எண்ணம்  எனக்குத் தோன்றவில்லை. ஒரு சிலந்தியைப்போல வலையைப் பின்னிக்கொண்டு அதை பற்றியபடி அவர் வாழ்ந்துகொண்டிருப்பதாகத் தோன்றியது. தானே ஏற்படுத்திக்கொண்ட வலையாகையால் அதிலிருந்து விடுபடவும் அவருக்கு விருப்பமில்லைபோல.

அதன் பிறகு அவரைப் பார்க்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் நான் அவரைக் கவனிக்க ஆரம்பித்தேன்.

அவரின் வயது முப்பதுகளின் இறுதியில் இருக்கலாம். நான் ஒரு பெண்ணைப் பார்த்ததும் முதலில்  கூந்தலைத்தான் கவனிப்பேன்.  லேயர் கட் செய்த அவரின்  கம்பி போன்ற முடியின் அடிப்பகுதி மட்டும் லேசாகச் சுருண்டிருந்தது. அலை அலையான கூந்தலை தூக்கி ஸ்டைலாக  ஒரு போனி டெய்ல் போட்டிருப்பார். அழகழகான நிறச் சேர்க்கைகளுடன் காட்டன் புடவைகள்  அதிகம் உடுத்துவார். அவரை பார்க்கும்போதெல்லாம், “அதெப்படி இந்த ஆங்கிலம் படிக்கும் பெண்கள் மட்டும் நுனி நாக்கில் மொழியையும் கண்களில் காந்தமும் நடையில் ஒரு மிடுக்கும்கொண்டு வலம் வருகிறார்கள்? அவர்கள் பிறவியிலேயே அப்படிதானா  இல்லை ஆங்கிலம் கற்றதனாலேயே அவர்களுக்கு  இதெல்லாம் வந்து சேர்ந்துவிடுகின்றதா?” என்று தோன்றும். ஷெரின் மேம் ஒரு பேரழகியா என்று எனக்குச் சொல்லத்தெரியவில்லை. ஆனால் அவரிடம் ஒரு வசீகரம் இருந்தது.

தினசரிக் காட்சியாகத் திரைப்படம் தவறாமல் ஓடிக்கொண்டிருந்தது. அந்தப் பின்னணி இசையின் ஈர்ப்பும் அப்படி என்ன இருக்கிறது அந்த படத்தில் என்று அறிந்துகொள்ளும் ஆர்வமும் நாளுக்கு நாள் அதிகரிக்கவே நான் அந்த படத்தின் ஒலிகளைக் கவனிக்க ஆரம்பித்தேன்.

முதல் முறையிலேயே அந்த  இசையை முழுதாக அனுபவித்து முடித்துவிட முடியவில்லை. அந்தப் படத்தில் ஓர் ஆணும் பெண்ணும் பேசிக்கொள்ளும் உரையாடல்தான்  அதிகமாக இருந்தது. ஒரு திரில்லர் அல்லது ஆக்ஷன் படத்துக்கான பிஜிஎம் அந்த படத்தில் சுத்தமாக இல்லை. மென்மையான ஒலிகளே  நிரம்பியிருந்தன. இது ஒரு காதல் கதையாக இருக்கும் சாத்தியக்கூறுகள்தான் அதிகம் என்று நினைத்துக்கொண்டேன்.

ஆரம்பக் காட்சியில் ஓர் ஆணின் குரல் பிரதானமாக கேட்டது. ,அவனைச் சுற்றி இருப்பவர்களின் குரல்கள் ஒலித்தன. அவன் யாரிடமோ வாக்குவாதம் செய்தான். அவனை ஜியார்ஜ் என்று அழைத்தார்கள். சிறிது நேரத்தில் ஒரு மென்மையான இசை தவழ்ந்து வந்து செவிகளை எட்டியது. கண்கள் மூடி அதைக் கேட்கையில் இசை என்மேல் படர்ந்து கொள்வதுபோல உணரமுடிந்தது. அதனூடே கேட்ட குழந்தைகளின் அரவம், அது ஒரு பள்ளியாக இருக்கலாம் என எண்ணச்செய்தது. சட்டென்று ஒரு பெண்ணின் குரல். அவள் ஜியார்ஜ் என்று அழைத்து அதைத் தொடர்ந்து ஏதோ பேசியபடி இருந்தாள்.

இருவரின் உரையாடலில் அவளின் பெயர் ரீனா என்று புரிந்தது. அவர்கள்  உற்சாகமாகப் பேசினார்கள், சிரித்தார்கள். ஒரு மென்மையான வயலின் இசை பின்னணியில் வழிந்துகொண்டே இருந்தது. 

அந்த இசையின் அலைகள் தொட்டுச் செல்கின்றன, சூழ்ந்து கொள்கின்றன, அதன் சுழற்சியில் நான் விரும்பியே சிக்கித் திளைக்கிறேன்.

படம் நிதானமாக நகர்ந்தது. இருவரின் உரையாடல்களே படத்தில் பிரதானமாக வந்துகொண்டிருந்த வேளையில் ஒரு துப்பாக்கிச் சூடு நடக்கிறது. அதனைத் தொடர்ந்து பேரிரைச்சல். மக்கள் பீதியில் அலறுகிறார்கள். வண்டிகளின் சைரன் ஒலி  கேட்கிறது. பரபரப்பான  காட்சிகள்  அரங்கேறுவதை வயலின் இசை கடத்திக் கொண்டிருந்தது.

வயலினின் நரம்புகளில்  இருந்து தெறித்துவந்து இசை எனது  நரம்புகளை  நிறைக்கிறது. அந்த மரத்தாலான கருவிக்கு உயிருள்ளது என்று அதன்மேல் குறுக்காகச் செலுத்தப்படும் வில் ஒவ்வொரு முறையும் என் இதயத்தை ஊடுருவிச் சொல்லிவிட்டுச் செல்கிறது.

அதைத் தொடர்ந்து ஒரு நீண்ட அமைதி. இசையைக்கொண்டு என் மனம் காட்சிகளைக் கோர்த்துக் கொண்டும் உணர்வுகள் தானாக வந்து பின்னிக்கொண்டும் இருந்த வேளையில் அந்தப் பேரமைதி  இப்போது பாரமாக என்மேல் அமர்ந்திருக்கிறது.

சில நொடிகளிலேயே ஒரு துள்ளல் இசை, ஒரு மகிழ்ச்சியான சூழலுக்கு உயிரோட்டம் தரும் ஒன்றாய் வெளிப்பட்டது.  கிட்டாரில் இருந்து வெளிப்பட்ட அந்த ஓசை அடி வயிற்றில் அதிர்வுகளை ஏற்படுத்தியது.

பின், ஒரு விமானம் கிளம்பும் ஒலி கேட்டது. இருவரின் உரையாடல். அதைத் தொடர்ந்து ஒரு தேவாலயத்தின் மணியோசை மற்றும் ஓரு கோரஸ் பாடல் கேட்டது.

இது முடிந்தபின் ஒரு குழந்தையின் குரல். ஆனால் அது உண்மையில் குழந்தைக் குரல்தானா என்று அறுதியிட்டுக் கூறமுடியாமல் இருந்தது. அதன்பின் வந்த ஒலி அதிர்வுகள் வளியில் கலந்து பெரும் வலியை ஏற்படுத்தவல்லதாக இருந்தன.

ஒரு கார் கிரீச்சிட்டுக் கிளம்பும் ஒலியுடன் தொலைக்காட்சி நிறுத்தப்பட்டது. தினமும் ஒரு மணி நேரம் மட்டுமே அந்தப் படம் ஓடுகிறது. அந்தப் படம் முற்றுப்பெறும் முன்பே நிறுத்தப்பட்டு விடுகிறதா? தினமும் அந்தக் கார் கிரீச்சிடும் ஒலியில்  சரியாக நிறுத்தப்படுகிறது எனில் அதற்குப் பின்பான காட்சியை அவர் பார்க்க விரும்பவில்லையா என்பது போன்ற பல கேள்விகளுடன் நிறைவுபெற்றது அந்த இசை. பெரிதாக உண்மைகள் எதுவும் பிடிபடாது போனாலும் ஒரு குழப்பமான இசை விளையாட்டிற்கு நான் உடன்பட்டிருந்தேன். அறியாக் கேள்விகளுடன் நாள்கள் நகர்ந்துகொண்டிருந்தன.

அன்று நாங்கள்  விளையாண்டு கொண்டிருந்தபோது பந்து ஷெரின் மேம் வீட்டு வராண்டாவில் விழுந்துவிட்டது. அதை எடுப்பதற்காக காலிங் பெல் அழுத்தவும் கதவைத் திறந்தவர் என்னை எதிர்பார்க்காத முகம் காட்டி, “ஹாய் பேபி ” என்றார்.

பந்தை எடுத்துத்தரக் கேட்டுவிட்டு அப்படியே, “உங்களிடம் இருக்கும் புத்தகம் ஒன்றை எனக்கு தருகிறீர்களா?” என்று கேட்டுவிட்டேன்.

நான் எதிர்பார்த்ததைப்போல உள்ளே அழைத்தவர், “நீயே உனக்குத் தேவையானதை எடுத்துக்கோ” என்று புத்தக ஷெல்ஃபைக்  காட்டினார்.

“இல்லை நீங்களே எனக்கு ஏற்ற புத்தகத்தைத் தாருங்கள்” என்று கூறிவிட்டுச் சுவரில் மாட்டப்பட்டிருந்த ஓவியங்களைப் பார்க்க ஆரம்பித்தேன்.

“இது எல்லாம் நீங்க வரைந்ததா?”

“எஸ் பேபி. “

நான் ஒவ்வொன்றாகப் பார்த்துக்கொண்டிருந்தேன். முதலில் கிளியோபாட்ரா போன்ற ஜாடையுடன் இருந்த ஒரு பெண்ணின் ஓவியம், ஓர் அழகான பூங்கா, ஒரு பழமையான கட்டடம் அனைத்தையும் வண்ணங்களின்றி வெறும் பென்சில் ஓவியமாகத் தீட்டியிருந்தார்.

ஷோ-கேசில் அவர் அதுவரை முப்பது முறை ரத்த தானம் செய்ததற்கான ஒரு சான்றிதழும் அருகே கண் தானம் செய்ததற்கான சான்றிதழும் வைக்கப்பட்டிருந்தன.

அடுத்த  ஷெல்ப்பில், மார்பளவு வரையப்பட்ட  ஓர் ஆணின் ஓவியம், அதற்கு அருகே ஒரு குழந்தையின் புகைப்படம் ஃப்ரேம் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. அந்த போட்டோவுக்குச் சிறிய வெண்முத்து மாலை அணிவிக்கப்பட்டிருந்தது.

“பேபி இது பாரு, இந்த புக் பிடிச்சா எடுத்துக்கோ” என்று கூறி அவர் தந்த ஒரு புத்தகத்தை வாங்கிக்கொண்டேன்.

அப்போதுதான் அந்தத் திரைப்படத்தைக் கவனிப்பதுபோல தொலைக்காட்சியை பார்த்து, “என்ன படம் மேம் இது? பாஷைகூட புரியவில்லையே” என்றேன். அவர் பதில் ஏதும் கூறவில்லை.

அந்த கேள்வியைக் கேட்டிருக்க வேண்டாமோ என்று தோன்றிய நொடி, “சரி மேம்  நான் கிளம்புறேன், தேங்க்ஸ்” என்று வாசலுக்கு வந்து என் காலணிகளை அணிந்து திரும்புகையில், “அது லா லூயி” என்கிற ஃபிரெஞ்சுப் படம் என்றார்.

சரி என்பதுபோலப் புன்னகைத்துத் தலையாட்டிவிட்டுச் சத்யா வீட்டுக்கு வந்தேன்.

ஆங்கிலப் படம் என்றால்கூடப் பரவாயில்லை. எப்படியோ தேடிப் பெற்றுவிடலாம். ஃபிரெஞ்சு எல்லாம் வாய்ப்பே இல்லை. இப்போதைக்கு அந்தப் படம் பார்க்கும் வாய்ப்பில்லை என்று மட்டும் தெளிவாகத் தெரிந்தது.

அதன்பிறகு, அந்தப் புத்தகத்தைத் திரும்பிக் கொடுப்பதற்காக அவர் வீட்டிற்கு ஒருமுறை சென்றேன். பிறகு அவரை பார்க்க நேரிடும்போது ஒரு ஹாய் அல்லது பை என்ற அளவில் மட்டுமே பேசமுடிந்தது.

அதன்பிறகு, எனக்குப் பனிரெண்டாம் வகுப்புப் படிப்பு, பிறகு ஹாஸ்டல் வாழ்க்கை என்று காலப்போக்கில் நான் ஷெரின் மேம் பற்றி மறந்தே போனேன். ஒரு ஐந்து ஆண்டுகள் கழித்து  நான் பணியில் சேர்ந்தபோது எனக்குப் ஃபிரெஞ்சு மொழி, மூன்று நிலைகள் கண்டிப்பாகப் படித்து முடிக்கவேண்டிய பாடமாக இருந்தது. ஃபிரென்ச் என்றதும்  எனக்கு ஷெரின் மேமும் லா லூயி படமும்  நினைவுக்கு வந்தன. இந்த ஐந்து ஆண்டுகளில் இணையம் அடைந்த அசுர வளர்ச்சியில்  அந்தப் படத்தை எளிதில்  தேடிக் கண்டிபிடித்துவிட்டேன்.

படம் ஒரு குதூகலமான இசையுடன் தொடங்கியது. நான் சில ஆண்டுகளுக்குமுன் கேட்ட இந்த இசை என் நினைவடுக்குகளை மீட்டி , நான் கேட்டு ரசித்த காலக்கட்டத்துக்கே என்னை இட்டுச்செல்லும் ஒரு கால இயந்திரமாக மாறியிருந்தது.

ஒரு கோர்ட் வளாகம்தான் முதல் காட்சி. ஜியார்ஜ் வக்கீலாக இருக்கிறான். ஒரு வழக்கில் வாதாடிவிட்டு வெளியே வருகிறான். ரீனாவின் அண்ணன்  ஜியார்ஜின்  நண்பனாக இருக்கிறான். படம் அறிமுகம் முதலே ரீனாவும் ஜியார்ஜும்  காதலர்களாகக் காட்டப்படுகிறார்கள்.

ஜியார்ஜ்  ஒரு மீசையில்லாத வீரன்போல் இருந்தான். ரீனா ஒரு பள்ளி ஆசிரியையாக இருந்தாள். அவள் டயானா சாயலில் அதே ஹேர்கட்டில் படு ஸ்டைலாக இருந்தாள்.

ஒரு பூங்காவில் தினமும் இருவரும் சந்திக்கிறார்கள். அவனோடு பேசவும் பழகவும் அவளுக்கு அவ்வளவு பிடித்திருந்தது. அவனை பார்க்கும்போதெல்லாம் முகபாவங்களில் அத்தனை பரவசம்காட்டி அவள் காதலித்தாள் .

காதலில் எப்போதும் ஏதோ மிச்சம் இருப்பதுபோலவே இருக்கும். அப்படி மிச்சம் இருக்கும் வரையில்தான் காதலும் இருக்கும்.

அவளின் நாள்காட்டி அவனைக் காட்டியபடியே நகர்கிறது. இயல்பாக நகர்ந்துகொண்டிருந்த கதையில் திடீரென அந்த ஊரின்  கோர்ட் வளாகத்திற்கு அருகே குண்டு வெடிப்புச் சம்பவம் நிகழ்கிறது. அதை கேள்விப்பட்டவுடன் அவனைப் பார்க்கப் புறப்பட்டுச் சாலையில் அவள் பதட்டத்துடன் ஓடுகிறாள். தான் பத்திரமாக இருப்பதைத் தெரிவிக்க அவன் அவளின் பள்ளிக்கு ஓடிவருகிறான். இருவரும் ஒருவரை ஒருவர் காணாமல் தவிக்கிறார்கள். அவளுடைய வீட்டிற்குச் சென்ற அவன் அங்கேயும் அவள் இல்லாததால் ஒரு காகிதத்தில் பாதி இதயம் மட்டும் வரைந்து அவள் வீட்டுக் கதவில் சொருகிவைத்துவிட்டு பூங்காவிற்கு வருகிறான். அவன் எப்படியும் பூங்காவிற்கு வருவான் என்று அவனுக்கு முன்பே வந்து  அவள் காத்திருக்கிறாள். இருவரும் சந்தித்தவுடன் அத்தனை நெகிழ்ச்சியுடன் கட்டியணைத்துக் கொள்கிறார்கள்.

அந்தத் தவிப்பு ஏற்படுத்திய தாக்கத்தையும் பார்த்துக்கொண்டதில் ஏற்பட்ட மகிழ்ச்சியையும் அவர்களின் அந்த அணைப்பு வெளிப்படுத்துகிறது. இறுக்க பற்றிக்கொண்டு காதலில் கறைகிறார்கள். பிரிந்து செல்லவேண்டிய நேரம் வருகிறது. அவளை அணைத்திருந்த கைகளை லேசாக விலக்கித் தோளிலிருந்து முழங்கைக்கும் முழங்கையிலிருந்து மணிக்கட்டுக்கும் மணிக்கட்டிலிருந்து விரல்களுக்கும் விரல்களிலிருந்து விரல் நுனிக்கும் வந்து அவன் விடுபடும் வேளையில் விரலைக் கொக்கிபோல் வளைத்து அவளை இழுத்து மீண்டும் கட்டிக்கொள்கிறான். பின் அவளைத் தூக்கிக்கொண்டு சாலையில் நடந்து அவள் வீடு வரைக்கும் சென்று விட்டுவிட்டு மனமில்லாமல் விடைபெறுகிறான்.

மறுநாள் அவன் பணியின் பொருட்டு விமானத்தில் வெளியூருக்குப் புறப்பட்டுச் செல்கிறான். அப்போதும் அவள் அந்தப் பூங்காவிற்கு வந்து அமைதியாக அமர்ந்திருக்கிறாள். அவன் திரும்பி வந்ததும் இருவரும் பேசித் திருமணம் செய்ய முடிவெடுக்கிறார்கள். தேவாலயத்தில் அவர்களின் திருமணம் நடக்கிறது.

உலகமே தங்களுக்காகத் திறந்திருப்பதுபோல அவர்கள் சாலைகளில் சுற்றித் திரிகிறார்கள். காதல் எனும் நூற்றுக்கணக்கான கனவுக் குமிழ்கள் சூழ்வெளியில் அவர்கள் மிதக்கிறார்கள். ஒரே காற்றைத்தான் இருவரும் சுவாசிகிறார்கள். காட்சியெங்கும் காதலின் பிரவாகம் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது.

இப்பொழுது அவள் கருவுற்றிருக்கிறாள். அவளைப்  பின்னிருந்து  அணைத்தபடி அவன்  நின்றிருந்தான். அவளின் காதோரம் இருந்த கூந்தலை விலக்கியபடி பேசுகிறான். அவள் தன் கையால் அவன் கன்னத்தை வருடியபடி பதில் சொல்கிறாள். ஏதோ தோன்றியவளாக அவன்புறம் திரும்பி ஒன்றைச் சொல்ல உடனே அவன் அவளைக் கைகளில் ஏந்திக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே வந்து வீதியில் நடக்கிறான். அவளைச் சுமந்தவாறே அந்தப் பூங்காவிற்குச் செல்கிறான். அவர்கள் பல நாள்கள் கழித்து அங்கே செல்கிறார்கள்.

திருமணத்திற்குப் பின்பும் அவர்களின் உறவில் உமியளவேனும்  பிறழ்வு இல்லை.

அவள் கதைக்கக் கதைக்க அவன் கேட்கிறான். அவன் கேட்கக் கேட்க அவள் கதைக்கிறாள்.

அவள் ஓர் அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். அவனுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கிறது. அவளுடன் அதிக நேரம் செலவிடமுடியாமல் போகிறது. ஒரு விடுமுறைப் பொழுதில்  மூவரும் தங்கள் வாகனத்தில் வெளியூர் கிளம்புகிறார்கள். கார் ஒரு க்ரீச் ஒலியுடன் சாலையில் பாய்ந்து சென்றுகொண்டிருக்கிறது.

ஷெரின் மேம் வழக்கமாகப் பார்க்கும் காட்சிகள் நிறைவடைந்துவிட்டன. இந்த க்ரீச் ஒலியில்தான் அவர் சரியாக நிறுத்துவார். சில நொடிகள் படத்தை நிறுத்திப்பின் இயக்கினேன். அடுத்து அவர் பார்க்க விரும்பாத, அவரைப் பாதித்த ஒரு காட்சி வர இருக்கிறது. அது  என்னவாக இருக்கும் என்று ஒருவித பரபரப்பு தொற்றிக்கொண்டது .ஏதும் விபரீதமாக இருந்துவிடுமோ என்று நினைக்கையிலேயே கார்  ஒரு லாரியில் மோதிக் கட்டுப்பாடிழந்து சாலையில் உருண்டு விபத்துக்குள்ளானது. அந்த இடத்திலேயே  குழந்தையும் ஜியார்ஜூம் இறந்துவிடுகிறார்கள். ரீனா பலமான காயங்களுடன் பிழைத்துக்கொள்கிறாள். இருவரையும் இழந்தபின்  தான் மட்டும்  பிழைத்துவிட்டதற்காகக் கதறி அழுகிறாள். அவளை அவளது அண்ணன்தான் உடனிருந்து தேற்றுகிறான். சில காலம் கழித்து வேறு ஊருக்கு  மாறுதல் வாங்கித் தருகிறான். அவள் அங்கே  தனியாக ஒரு வீட்டில் வசித்தபடி டீச்சராக பணிபுரிந்துகொண்டு வாழ்க்கையை தொடர்கிறாள். இப்படியாகப் படம் நகர்ந்துகொண்டிருந்தது.

மனதுக்கு நெருக்கமானவர்களுக்கு ஏற்பட்ட துக்கம் ஒன்றை ஏற்க முடியாத பாரம் என்னை அழுத்தியது. தான் வாழ்ந்த வாழ்க்கையை ஒரு திரைப்படத்தின் வாயிலாக தினமும் மீட்டெடுத்தபடியே ஷெரின் மேம்   இருந்திருக்கிறாரா? நிஜத்தில் தொலைத்துவிட்ட வாழ்க்கையைப்  படத்தில் தேடியிருக்கிறார். காட்சிகளுடன் தானும்  வாழ்ந்திருக்கிறார். அதற்கு அடுத்து வந்த விடுமுறையில் ஊருக்குச் சென்று முதல் வேலையாக அவரைப் பார்க்கப் புறப்பட்டேன். சத்யா வீட்டிற்குக்கூட செல்லாமல் நேராக மேம் வீட்டிற்கு சென்றேன். வீடு பூட்டியிருந்தது. அவர் வேறு ஊருக்குப் பணியை மாற்றிகொண்டு சென்றுவிட்டதாக அறிந்தேன்.

அதன் பிறகு சில வருடங்கள் கழித்து ஒரு புத்தகக் கண்காட்சியில் ஒரு ட்ராலி நிறைய புத்தகங்களைத் தள்ளியபடியே ஓர் ஆணுடன் சிரித்துப் பேசியபடியே சென்றுகொண்டிருந்த பெண்  ஷெரின் மேமை நினைவுபடுத்த அருகே தொடர்ந்துசென்று பார்த்தேன். அவரேதான். ஒரு மூன்று வயது மதிக்கத்தக்க பெண் குழந்தையைப் பிடித்தபடியே அதே மிடுக்குடன்கூடிய நடையில், போனி டெய்ல் பின் கழுத்தில் புரள அவரேதான். முகத்தின் மலர்ச்சியும் சிரிப்பும்தான் புதிது. அவரை அத்தனை உற்சாகத்துடனும் சிரித்த முகத்துடனும் நான் அதுவரை பார்த்ததில்லை. ஏனோ எனக்கு அவரிடம் சென்று பேசவேண்டும் எனத் தோன்றவில்லை. அவரின்  மகிழ்சியைப்  பார்த்ததே எனக்குப் போதுமானதாக இருந்தது.  ஒரு துள்ளலான  இசை என்னைச் சூழ்ந்துகொண்டு மனதை நிறைத்தது.

2 Replies to “ஷெரின்”

  1. நித்யஹரி யின் சிறுகதை ‘ஷெரின்’ பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் வாழ்வியலை படத்தின் மூலம் வெளிப்படுத்தும் வகையில் புதுமையான கதை களன்.அருமை.
    -தஞ்சிகுமார், வேலூர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.