ச. அர்ஜுன்ராச்
ராகுவின் பூனை
பாற்கடல் நக்கிக்குடிக்கிறது
பரமாத்மாவின் நீலத்தில்
உலாத்துகிறது
ஆதிசேஷனைப் பார்த்து
மாமிச மோப்பம் பிடிக்கிறது
தன் ‘டங்ஸ்டன்’ கண்களால்
எம லோகத்தின்
இருளைப் புணர்கிறது
கைலாயத்தில் சக்தியின்
சிங்கத்தை தன் மொழியில் முழங்கி
பகடி செய்கிறது
இந்திரலோகத்தில்
வெள்ளையானையை
பாலின் ஏடென எண்ணி
நகத்தால் சுரண்டிப்பார்கிறது
நாரதனின் நாபிக்கமலத்திலிருந்து
‘மியாவ் மியாவ்’ வென சுருதி
எடுத்துக்கொடுக்கிறது
எல்லோரும் அமைதியாக இருக்கிறார்கள்
யாரின் வாகனமிது என்று
யாருக்கும் நினைவில்லை
யாரும் தனதில்லை என்று
கைவிரிக்கிறார்கள்
சேஷ்டைகள் அதிகமாக அதிகமாக
அண்ட சராசரத்தின் குறுக்கும் நெடுக்குமாக பாய்ந்து பாய்ந்து
விளையாடுகிறது
விண்ணுலகத்தினர் விரட்டவும் இல்லை
சகுணங்கள் பற்றி சட்டை செய்யவுமில்லை
நிலவரமேதுமறியாத
பூலோகத்தினர்
எல்லாம் வகுத்தறிந்தமையால்
ராகுகாலம் முடிய
பொறுமைசாலிகளாக
காத்திருந்து புறப்படுகிறார்கள்
வெளியே
ஓடி மறைகிறது சிற்றது
பின்
நேரம் கடத்தி புறப்பட்டவர்களில்
ஒருவரான தயாரிப்பாளரின்
பெரும் பொருட்செலவு சினிமா படத்தின்
முதல் காட்சியில் ஒளிர்கிறது
எல்லா பழமைவாதிகளுக்குமான
ஒரு சுருக்கமான பொய்
” இத்திரைப்படத்தில்
எந்த மிருகமும்
துன்புறுத்தப்படவில்லை”
என்று.
◆◆◆◆◆◆
2)
வீடும் சித்தார்த்தரும்
திடீரென்று ஒருநாள்
வீட்டிலேயே இருந்தேன்
வீட்டில் யாருமே இல்லை
வீடு மட்டும் இருந்தது
வீடு மாதிரியே நானுமிருந்தேன்
வீடு அதன் மாதிரியே இருந்தது
அந்தி நெருங்க நெருங்க
குடும்பத்தில் எல்லோரும்
வந்தனர்.
வந்ததும்.
ஒரு பேச்சுக்கு
‘நீங்கள் இல்லாமல்
வீடு வீடாகவே இல்லை’ என்றேன்.
வீட்டின் சொர்ப்ப தும்பு தூசிகளை
துடைத்துக்கொண்டே சொல்கிறாள்
வீடா இது?
வீடு. வீடா. வா.. இருக்கு?
என்று
அப்போதும்
வீடு அதன் மாதிரியே இருந்தது.
அப்போது கண்களுயர்த்தி
அண்ணாந்து பார்த்து
முணங்கிக்கொள்ள வேண்டும் போல் தோன்றியது.
‘ போதி மரத்திற்கு முன்பு
தனியே ஒருநாள்
வீட்டிலமர்ந்திருந்து பார்த்திருக்கலாம்
சித்தார்த்தர் நீங்கள்’.
◆◆◆◆◆●●