வளர்ந்து வரும் பத்து சிறந்த தொழில் நுட்பங்கள் – 2020

உலகப் பொருளாதார அமைப்பு, ஒரு சிறப்புக் கட்டுரையை ‘மாற்ற முன்னோடிகளின் மாநாட்டில்’ 10 தொழில் நுட்பங்களை முன்னிறுத்தி நவம்பர் 10, 2020 அன்று வெளியிட்டது. அதிலிருந்து நாம் இந்தக் கட்டுரையைத் தொடங்குவோம்.

மனிதன் பல உயிரினங்களிலிருந்து மாறுபடுவது அவனது சிந்திக்கும் திறனால்தான். உண்ணும் உணவினுக்காய், உலகத்தின் பூபரப்பை, செந்நெல் கழனிகளாய், செங்கரும்புத் தோட்டங்களாய் மாற்றிய வேளாண்மை நாகரிகத்திலிருந்து, கைத்தொழில்களை இயந்திர மயமாக்கியதும் இயந்திரப் புரட்சியிலிருந்து தொழில்நுட்பப் புரட்சிக்கு முன்னேகியதும் அவன் அறிவின் வீச்சிற்குச் சான்று. இவை அனைத்தும் மனித சமுதாயத்திலும் தொழிற்சாலைகளிலும் நல்ல மாற்றங்களைக் கொண்டுவந்தன, மேலும் சில எதிர்மறை விளைவுகளையும்; இன்று வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள் எத்தகைய சந்தர்ப்பங்களைக் கொண்டுவரும், எத்தகைய அழிவுகளுக்கு இடம்தரும் என்பது பற்றி இக்கட்டுரை பேசுகிறது.

மாற்றம் ஒன்றே நிலையானது என்பதை நாம் அறிவோம். நம் திசுக்களின் வளர்சிதை மாற்றம், பருவ நிலை மாற்றம் என்பதைப் போலவே தொழில்நுட்ப மாற்றமும் நம் வாழ்வியல் முறைகளுக்குக் காரணியாக அமைகின்றது. ‘காசி நகர்ப்புறத்து பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி’ செய்யச் சொன்னாரே பாரதி!

கடந்த இருபது ஆண்டுகளாக, முன்னுதாரணங்கள் சொல்ல இயலாத வகையில், தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் கணினியில், செயற்கை நுண்ணறிவியலில், உயிரியல் சார்ந்த துறைகளில் காட்டும் வேகம் அளப்பரியது. உலகளாவிய சவால்களை எதிர்கொண்டு ஏற்புடைய தீர்வுகளை அளிக்கும் சாத்தியங்கள் உள்ள இந்த நுட்பங்கள், தவறாகப் பயன்படுத்தப்படுமாயின் என்ன கேட்டினைக் கொண்டுவருமென்றும் சிந்திக்க வேண்டும்.

உலகப் பொருளாதார அமைப்பு, ‘மாற்றங்களின் முன்னோடிகள் கூட்டமைப்பு’ வாயிலாக உலகின் தலைசிறந்த அறிவாளர்களை ஒருங்கிணைத்து அவர்களின் கருத்துக்களைப் பொதுமக்களும் ஆள்வோரும் அறியும்வண்ணம் வெளியிடுகிறது. எண்ணம், அதன் விளைவு, அது நன்மையா, தீமையா என்பதைப் பற்றி அலசி ஆராய்ந்து வெளியாகும் கட்டுரைகள், அது எழுப்பும் கேள்விகளுக்கு மேலாகக்கூட ஆர்வங்களை எழுப்பி வேறு வகைமைகளிலும் சிந்திக்கச் செய்கிறது.

உலகில் பல பிரச்னைகள் இருந்தாலும் 2020-ல் சுகாதாரமும் சூழல் சிதைவுகளும் குறிப்பிட்டுச் சொல்லத் தகுந்தவை – உடனடித் தீர்வைக் கோருபவை. இவற்றைப் பற்றியே பல தீர்வுகளும் முன்வைக்கப்பட்டன.

‘நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல்’ என்பது வள்ளுவர் வாக்கு. நோயை அறிந்து, அதைக் குணப்படுத்துவதில் நம்முடைய திறன் கருவிகள் குறிப்பிடத்தகுந்த வழியில் செயல்படுகின்றன – அல்சைமர், பார்கின்சன்ஸ் போன்றவைகளை முன்கூட்டியே அறிய முடியக்கூடிய திறன் கருவிகள் நோயாளிகளின் இடர்நீக்கும் அருஞ்சாதனங்கள். நிஜ உறுப்புகளுக்கு மாற்றாக மெய்நிகர் உறுப்புகள்கொண்டு நோய்களைக் கண்டறிவது, இலக்க முறையில், நுண் கிருமிகள் அல்லது நுண்ணுயிர்களின் மரபுசார் செய்திகளைப் பதிவது, பின்னர் அவற்றை உடல் ரீதியாக உற்பத்திசெய்து கையாள்வது போன்றவை செய்திறன் மேன்மையைக் காட்டுகின்றன. மருத்துவ உபகரணங்களில் மேம்படுத்தப்பட்ட ஆய்வுகளின் விளைவான நுண் ஊசிகள், உலகளாவிய முறையில் தடுப்பூசிகளை எடுத்துச் செல்வதற்கு மட்டுமல்லாது, நோய்ப் பரவலை குறைக்கவும் உதவும்.

சூழல் கேடுகளைக் குறைப்பதற்காக, முக்கியமாக, கரிப் பதிவுகளால் ஏற்படும் மாசினைக் குறைக்க, சூர்ய சக்தியின் மூலம் கார்பன்-டை-ஆக்சைடை மதிப்பு மிக்கப் பொருளாக மாற்றும் தொழில்நுட்பத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன; சிமென்ட் தயாரிப்பில் கார்பன் வெளியேற்றம் குறைந்துள்ளது; தொல்லெச்ச எரி பொருட்களைப் பயன்படுத்தாமல், ஆனால் அதிக மின்சாரம்கொண்டு, ஹைட்ரஜனை உற்பவிக்கிறோம்; வான் பயணங்களில், மின் இயந்திரங்களை விமானத்துறை பயன்படுத்துவதன்மூலம் எரிபொருள் செலவீனங்களைக் கட்டுப்படுத்தியிருக்கிறார்கள் – கரியுமிழ்வையும்.

இலக்கமுறை தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள ஆர்வத்தைத் தூண்டும் செயற்பாடுகள், தொழிற்சாலைகளிலும் நம் அன்றாடத்திலும் நேர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. மிகை யதார்த்தங்களும் மெய் நிகர் உண்மைகளும் நம் வாழ்விலும் தொழிலிலும் தங்கள் இடத்தைப் பெற்றுள்ளன. இடஞ்சார் கணினி இதை இன்னமும் முன்னேற்றும் – மேகத்தில் இணையும் உருவப் பொருட்களை இலக்கமாக மாற்றவும், நம் திறன் கருவிகளின் மூலம் புறவய உலகில் தாக்கம் ஏற்படுத்தவும் ‘ஸ்பேஷியல் கம்ப்யூடிங்’ உதவும். மேலும், புது வகை உணரிகள் (க்வாண்டம் சென்சார்ஸ்) பற்பல செயல்களை ஆற்றுகின்றன – எரிமலைச் செயற்பாடுகள், நில நடுக்கம் பற்றிய முன்னறிவிப்புகள் போன்றவை தொடங்கி நிகழ் நேரத்தில் மூளை இயக்கங்கள் வரை.

ஆர்வத்தைத் தூண்டும் இவ்வகையான தொழில்நுட்பங்கள் ஆய்வகங்களிலிருந்து வெளிவந்துவிட்டன; பெரும் சிக்கல்களை எதிர்கொள்ளும் இன்றைய உலகில், சரியான முதலீடும் சட்ட வரையறைகளும் அறிவான பயன்பாடும் நம் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.

1) நுண் ஊசி உபகரணங்கள் தொற்றுப் பரவலைக் குறைக்கும்; மேலும் மருத்துவ வசதிகள் அற்ற இடங்கள் அல்லது மருத்துவர்கள் செல்ல இயலாத இடங்களில் மனித நலத்தினைப் பரிசோதிக்கவும் தேவையெனில் அதற்கான தீர்வினை அளிக்கவும் இவை பெரிதும் பயன்படும்.

2) நோயினைக் கண்டறிய அந்த நோயாளியின் உடலிலேயே ஆபத்துத் தரக் கூடிய கருவிகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, மெய்நிகர் உறுப்புகளைப் பயன்படுத்தி, நோய் எது, அதைத் தீர்ப்பது எப்படி எனக் கண்டறியலாம்.

3) திறன் பேசிகளைப் பயன்படுத்தி, சுவாசக் கோளாறுகள், மனச்சிதைவு, பார்கின்சன்ஸ், அல்சைமர், ஆடிஸம் போன்ற பல நோய்களைக் கண்டறியலாம்

4) விமானங்களில் மின் இயந்திரத்தைப் பயன்படுதுவதால், கரி உமிழ்வு கட்டுப்படுத்தப்படுகிறது – மேலும் 90% வரை எரி பொருள் சிக்கனம், 50% வரை பராமரிப்பு, கிட்டத்தட்ட 70% சத்தக் குறைப்பு சாத்தியமாகிறது.

5) வளர்ந்து வரும் மரபணு வரைவியல் நம்முடைய மரபணுவில் இருக்கும் குறைபாடுகளை நீக்கி, நம்மைப் பெரும்பாலும் நலமுடன் வாழவைக்க மருத்துவருக்கு உதவும்.

நன்மைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனவா?

இந்தத் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் தொழிற்சாலைகளிலும் சமூகத்திலும் சாதகமான மாற்றங்களைக் கொண்டுவரும் என்ற போதிலும் தன்னளவில் மாற்ற முகவர்களாகச் செயல்படப் போதுமானவைதாமா என்பதையும் நல்லது செய்வதற்கு மட்டுமே பயனாகுமா என்பதையும் சிந்திக்க வேண்டும்.

நம்முடைய தொழில்களிலும் சமூகத்திலும் அவற்றை இயல்பாகப் பொருத்துவதற்கும் அதைப் பரவலாக்குவதற்கும் எளிய செயல்பாடுகளின் மூலமாக அவற்றை நிரந்தரப் பயன்பாட்டில் இலாபகரமாக இணைப்பதற்கும் பெருமளவில் நிதி தேவைப்படும் என்பது ஒருபுறம். ஒரு தனி நிறுவனமோ, அரசாங்கமோ இதைத் தனியே செய்ய இயலாது. வட்டார அளவிலும், உலகளவிலும், பொது – தனியார் கூட்டமைப்புகள், வளங்களையும், தரவுத் தகவல்களையும் ஒன்றிணைத்து இதைச் சாத்தியப்படுத்த வேண்டும். இதன் வழியாக இந்தத் தொழில்நுட்பங்களின் பயன்கள் முடிந்த அளவு விரைவாக சமுதாயத்தைச் சென்றடைய முடியும்.

இந்தத் தொழில் நுட்பங்களுடன் கூடவே வரும் முக்கியக் கேடுகளைக் களையும் தீர்வுகளை, கொள்கை அமைப்பாளர்கள் விரைந்து செயல்பட்டுக் கண்டடைய வேண்டும். உதாரணமாக, நோயைக் கண்டறியும் திறன் கருவி, மிகச் சரியாகத்தான் குறிப்பிட்ட நோயைக் கண்டறிந்துள்ளதா, அது உள்நாட்டு மற்றும் அயல்நாட்டின் நலத் துறை நிபுணர்களால் அலசப்பட்டு பரிந்துரைக்கப்பட்ட ஒன்றா, யார் அதைக் கையாள்வது, யாரிடம் அதற்கான உரிமை உள்ளது, தகவல் திருடப்பட்டால் சட்டப்படி அதற்கு யார் பொறுப்பாளர்கள் போன்றவை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

மரபணு வரிசைகளைக் கையாண்டு, இலக்க முறையில் புறவயமாக அதைக்கொண்டு உடற்கூறுகள் அமைப்பதில், கடும் கொடும் செயல்களுக்கு அவற்றைப் பயன்படுத்தும் ஆபத்துக்கள் இருக்கின்றன. இந்தத் தொழில் நுட்பம் விடுக்கும் சவால்கள், இதை அழிவிற்காகப் பயன்படுத்தும் சாத்தியங்கள் பற்றிக் கவனித்து அதைப் போக்கும் வழிகளைச் சொல்வது அறிவியலாளர்களின் முக்கியப் பொறுப்பு என்பது ஒருபுறம்; மறுபுறம், இந்த நுட்பங்கள் தேச எல்லைகளுக்கு உட்பட்டவை அல்ல என்பதால் அரசுகளும் பன்னாட்டு நிறுவனங்களும் இணைந்து உலகம் முழுமைக்கும் பொதுவான நெறிகளை வடிவமைக்க வேண்டும்.

கொள்கை மற்றும் தொழிலிலளவில் இணைந்து எடுக்கப்படும் முன்திட்ட நடவடிக்கைகள், இந்தத் தொழில் நுட்பங்களிலிருந்து நன்மைகளையும் இவற்றில் சில தவறாகப் பயன்படுத்தப்படுமெனின் வரும் தீமைகளைக் குறைக்கவும் பெருமளவில் உதவும். இடர்களை விரைவாகப் போக்கவேண்டிய அவசரத்தில் இருக்கிறோம் நாம் இன்று; இந்தத் தொழில்நுட்பத்தில் பல அவற்றை எதிர்கொள்ளும் ஆற்றல் கொண்டவை; இதில் சிலவற்றில் ஆபத்துக்களும் பொதிந்துள்ளன; முடிவுசெய்யும் இடத்தில் இருப்போர், சீர் தூக்கிச் செயல்படும் சமயமிது என்பதை உணரவேண்டும்.

சந்தர்ப்பங்களைத் தவறவிடலாமா?

இந்த உலகை இவ்வாறு கற்பனை செய்வோமா?

பசுமை ஹைட்ரஜனில் ஓடும் சிற்றுந்துகள், மின் இயந்திரங்களில் இயங்கும் விமானங்கள் இவற்றினால் குறையக்கூடிய கரியுமிழ்வு மாசு; மரபணு நோய்களை நீக்கி, வரவிருக்கும் நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து அதைத் திறமையான மருத்துவ வழிகளில் போக்குவது; இலக்க உலகில் வாழும் நம்மைப் புற பௌதீக உலகுடன் இணைத்து அனுபவத்தை மேம்படுத்துவது – நன்றாக இருக்கிறதல்லவா? இது தொழில்நுட்பரீதியாக நடக்கக்கூடிய ஒன்று. அதை உண்மையெனச் செய்வது நம் கரங்களிலும் ஆள்வோரின் கரங்களிலும் இருக்கிறது. வளர்ந்துவரும் சிறந்த 10 தொழில் நுட்பங்கள் 2020 பற்றிய இக் கட்டுரை ஆர்வமூட்டும்.

சாத்தியங்களை அடைவதற்கு உதவும்.

அந்தத் தொழில்நுட்பங்கள் என்னென்ன?

  1. வலியற்ற நுண் ஊசிகள்
  2. சூர்ய சக்தி வேதியியல்
  3. மெய்நிகர் நோயாளிகள்
  4. இடவெளிக் கணினி
  5. இலக்கமுறை நலஆய்வும் மருந்தும்
  6. மின் வான்வெளிப் பயணம்
  7. சிமென்ட் தயாரிப்பில் குறைந்த கரிப்பதிவு
  8. குவாண்டம் உணரிகள்
  9. பசுமை ஹைட்ரஜன்
  10. முழு மரபணு வரிசை

இவற்றைப் பற்றி விரிவாகத் தொடர்ந்து பார்ப்போம்.

Series Navigationவலிதரா நுண் ஊசிகள் >>

2 Replies to “வளர்ந்து வரும் பத்து சிறந்த தொழில் நுட்பங்கள் – 2020”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.