
மெளனித்துக் கிடந்த
கரையின் மேல்
வந்து மோதுகின்றன
அலைகள்
அளப்பற்ற ஆற்றலுடன்.
ஒவ்வொரு மணற்துகள்களின்
ஊடாகவும்
தம் மூச்சினைச் செலுத்தி
கர்ஜிக்கின்றன வலிமையுடன்.
ஆக்ரோஷம் அடங்கி மீண்டும்
கடலை நோக்கிப்
பின் வாங்குகையில்
ஆதுரமாகத் தழுவி
விடை பெறுகின்றன.
அமைதிக்கும் ஆர்ப்பரிப்புக்கும்
இடையே
முடிவின்றித் தொடருகின்ற
உறவுக்கு சாட்சியாக
தம் தூய
வெண்சிறகுகளை விரித்து
உயரப் பறக்கின்றன
கருமேகங்களைத் தாண்டி
கடற்பறவைகள்.
அடித்து வீசும் காற்றோடு
கசிந்து மெலிந்தாலும்
மயக்குகிறது இசையாக
ஓயாத அலையோசை.
அடக்க முடியாத சக்தியும்
அளக்க முடியாத அமைதியும்
எழுதிக் கொண்டேயிருக்கின்றன
நாளும் பொழுதும்
புதுப்புது அத்தியாயங்களை.
வேண்டுகோள் விடுக்கின்றன
ஆழ்கடல் உயிரினங்கள்
யாரும் அவசரப்பட்டு
கடைசிப் பக்கத்தை
தேட வேண்டாமென்று.
அருமை …
கடல் எப்போதுமே படித்துத் தீராத காவியம் ….