மத்தளம் கொட்ட

அலுவலக நேரம் கடந்து கடகடவென்று நேரம் ஓடிக்கொண்டிருந்ததை உணர்ந்தும் சரண்யா தன் இருக்கையில் அமர்ந்திருந்தாள். எழுந்து வெளியேறவேண்டும் என்ற எண்ணமும் இல்லாமல் இல்லை. அலுவலக நேரம் முடிந்தவுடன் ஒரு மாதமாக இந்த வேதாளம் கழுத்தில் அமர்ந்துகொண்டு கனக்கிறது. யாரிடம் சொல்வது என்று தெரியவில்லை. மதில் ஏறி வழிகண்டு குதிப்பதைப்போல இருக்கிறது.

காதில் கேட்காத முணுமுணுப்புப்போல மெல்லிய இருள் படர்ந்திருக்கும் அரசு அலுவலகம் மனதைத் துணுக்குறச் செய்கிறது. முன்கட்டட வாயிலில் சார்நிலைக் கருவூலத்திற்குரிய ஓயாத சந்தடி காதில் கேட்கிறது.

அம்மாவின் முகம் மனதில் வந்தது. அதைத் தவிர்க்க முயன்றால் அம்மாவின் சிரிப்பு, அழுத்தம் திருத்தமான பேச்சு என்று சூழ்ந்துகொண்டாள். எதிர்ப்பக்கச் சுவரையே பார்த்தபடி இருந்ததால் கண்கள் எரிந்தன. கைக்குட்டையைத் தண்ணீரில் நனைத்து கண்களின்மீது வைத்துக்கொண்டாள். கிருபாகரனின் முகம் தெளிவில்லாமல் வந்தது. கைக்குட்டையை எடுத்துவிட்டு நிமிர்ந்து அமர்ந்தாள்.

இந்நேரம்வரை தெரியவில்லை. தனியே அமர்வது ஒவ்வொன்றையும் துல்லியமாக்கிறது . இதைப் பக்கத்து இருக்கை சுஜியிடம் சொன்னால் கல்யாணம் செய்து பிள்ளைக்குட்டி வந்தால் நமக்கு என்ன நடக்கிறது என்பதே நமக்கு தெரியாது என்பாள்.

முப்பத்தைந்து ஆண்டுகளாக, எந்தப் பயல் இவளுக்குன்னு பிறந்திருக்கானோ? எவனைக் கட்டிக்கிட்டு என்ன பாடுபடப்போறீயோ? எவன் தலையில மொளகா அறைக்கப்போறியோ? யார் நீ, கண்ணில் பட்டுத்தொலையேன்? என்று யாரோவாக இருந்தது இந்தமுகம்தானா? இல்லை இதுவும் இல்லையா? என்று தோன்றியதும் அலைபேசியை எடுத்தாள்.

சித்தப்பாவை அழைத்து அனைத்தையும் சொல்லிவிட்டால் என்ன? பதினைந்து ஆண்டுகளுக்குமுன் என்னைப் படிக்கவைக்க வேண்டாம் என்றார். ஆயிரத்திற்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற பிள்ளையை எப்படிப் படிக்க வைக்காமலிருப்பது என்று கேட்ட அப்பாவிடம், பொதுச் செலவில் பெண் பிள்ளைகள் படிப்புச் செலவு சேராது. குடும்பத்தின் வரவு செலவு குழறும், தனிக்குடித்தனம் பண்ணிக்கலாம் என்றவர் முகத்தில் குரலில் அப்போது இருந்த கறார் தன்மை மனதில் உறைந்து நிற்கிறது. அது கனவில் நினைவில் உடன்வந்து துரத்திக்கொண்டே இருக்கிறது.

மார்பில் மடியில் தோளில் படுத்துறங்க வைத்தவர். எப்பொழுதும் அவர் பக்கத்தில் சாய்ந்தே அமர்ந்திருந்த நினைவு. உண்ணும்போதும் அவரின் பக்கம்தான். வேண்டாம் என்பதை எடுத்து அவர் தட்டில் போடவும் பிடித்ததைக் கேட்காமல் எடுத்துக்கொள்ளவும் வசதி. கணக்கு வழக்கு பேசும் இவர் யார்? அனைத்தையும் கணக்காகவே பார்ப்பதால் என்ன செய்துவிடப்போகிறார்.

அம்மாவிற்கு என்ன ஆகியது? தம்பிக்குத் திருமணம் நடந்தபிறகுதான் அம்மா என் அம்மாவாக இல்லாமல் ஆனாள். அறுபது பவுன் நகையுடன் வந்த மருமகளிடம் என்னத்தைக் கண்டாள். சரண்யா படிப்பிற்காகக் குடும்பம் பிரிந்தால் என்ன? என்னால் பார்த்துக்கொள்ள முடியும் என்று சொல்லிய அம்மா.

”பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா” என்று சிவனை நினைத்துப் பாடி வியாபாரம் செய்யும் அப்பாவைத் தனித்துவிட முடியாமல் கோபப்பட்ட சித்தப்பா. இத்தனைகளுக்குப் பிறகு படிப்பும் வேலையும் வாய்த்தது. இந்த வேலையை அம்மாவே இன்று பொருட்படுத்தவில்லை.

அலைபேசி அழைத்தது. நிஷாந்தினிதான். இவளிடமாவது கேட்கவேண்டும்.

“இன்னும் ஆஃபீஸ்லயா இருக்க?”

“ஆமா?”

“ஹாஸ்ட்டல் போயிட்டு கூப்பிடுறியா?”

“பரவாயில்லை…”

“கிருபாகரன் கிட்ட பேசினியா?”

“ச்… இல்ல.”

“என்னடி கல்யாணத்துக்கு முன்னாடிதான் கொஞ்சமாச்சும் நல்லா பேசுவாங்க…”

“கல்யாணமே நடக்குமான்னு தோணுது.”

“உறுதி பண்ணின பின்னாடி இப்படிப் பேசக்கூடாது… என்னாச்சு?”

“அம்மாதான்… என்ன நடக்குதுன்னு புரியல நிஷா. தம்பி கல்யாணத்துக்கு என்னோட சம்பளப் பணத்திலருந்து மூணு லட்சம் எடுத்தோம். இப்ப என் கல்யாணத்துக்கு வீட்டுப் பத்திரத்தை அடகு வைக்கணுன்னு அம்மாவுக்குக் கோபம் வருது. மாப்பிள்ளைய மேட்ரிமோனில பாத்துச் சொன்னப்ப இருந்தே அம்மாவுக்குப் பிடிக்கல. மாப்பிள்ளை சாதாரண வேலை, குடும்பம்ன்னு சொல்லிட்டே இருந்தாங்க. இப்ப ஆறு மாசம் தள்ளிக் கல்யாணம் வச்சுக்கலான்னு கிருபா சொல்றார். பேசி ஒரு வாரமாச்சு…அப்படியே நிக்குது.”

“அம்மாவுக்கு என்னாச்சு?”

“இந்த மாதிரி வீட்ல நீ கல்யாணம் பண்ணிக்கிட்டா கதிர் பொண்டாட்டி எப்படி மதிப்பான்னு கேக்கறாங்க? கிருபா வீட்டுகாரங்கக்கிட்ட பேசும்போது அம்மா அதிகாரமா பேசறாங்க…அம்மாவான்னு இருக்கு.”

“என்மேல கோபப்படாம கேக்கனும்… கதிருக்குக் கல்யாணம் பண்றப்ப நீங்க இதுக்கும் கீழதானே இருந்தீங்க. அவங்க செஞ்ச சீர்ல கல்லாவும் வீடும் நெறஞ்சபிறகு ஹை கிளாஸ் ஆயாச்சு. சரி விடு… நீதானே மேட்ரிமோனில மாப்பிள்ளை பார்த்துச் சொன்ன. நீயே யாருக்கிட்ட பேசினா காரியம் ஆகுமோ பேசிடு… சொல்றது புரியுதா? இப்பவே பேசு. கிருபகாரன்கிட்டையும் பேசு. நான் ராத்திரி பேசறேன்.”

நேரம் கடந்துகொண்டிப்பதை முன்னால் சுவரில் கடிகாரம் டிக் டிக் என்று சொல்லிக்கொண்டிருந்தது.

பள்ளிக்கூடம் படிக்கும்போதும் கல்லூரியிலும் பணிக்கான தேர்வுகளுக்கான ஆண்டுகளிலும் வேலைக்குச் சேர்ந்த பிறகும் மனதிற்குள் ஒரு தந்திரம், சரியாகச் சொல்லவேண்டும் என்றால் இரக்கமின்மை இருந்தது. யாருக்காக? அப்பாவிற்காக.

அம்மாதான் சொன்னாள். படிக்கனும் வேலைக்குப் போகணும், நிமிர்ந்து நிற்கணும். காதல் ஒரு மன விளையாட்டு. கரும்பை மெல்லும்போதே சுவை குறைந்து சக்கையாவதைப்போல என்று சொல்வாள். அவளுக்குள் ஒரு தீவிரம். கூட்டுக் குடும்பத்தில் ஆண்களின்கீழ் இருக்கமுடியாத அவஸ்தை அவளுடையது. அம்மா ஆண்களில்லாத வீட்டில் வளர்ந்தவள். இன்றும் அவளை மாற்றிக்கொள்ள முடியவில்லை. அது கிருபாகரனிடம் பேசும் விதத்தில் தெரிகிறது.

அப்பாவை உணர இத்தனை ஆண்டுகளா! எத்தனை தோழிகளிடம் அம்மாவும் எனக்கு தோழிதான் என்று சொல்லியிருக்கிறேன். ஒருபோதும் அம்மா தோழியாக முடியாது. அது ஒரு பாவனை. அது ஒரு கண்காணிப்பு. கிருபாவிடம் பேசு என்று நிஷா எத்தனை கரிசனமாகச் சொல்கிறாள். அம்மா ஏன்?

கதிருக்குத் திருமணமானவுடன் அம்மாவின் பாரம் இறங்கிவிட்டதா? வீட்டில் ஒரு விசேசமாவது வைத்துவிட்டோம் என்ற நிறைவில் நிம்மதியாய் அமர்ந்துவிட்டாளா? எதுவுமே நல்லது நடக்காத இந்த பத்தாண்டுகளில் அப்பாவையும் குடும்பத்தையும் சுமந்த வலி குறைந்து ஆசுவாசமாக இருக்கிறாளா?

உடனே அலைபேசியில் சித்தப்பாவின் எண்ணை எடுத்தாள். சித்தப்பா பரபரக்கும் குரலில், “தேதி சொல்றதா சொன்னாங்களே…ஒண்ணும் தெரியல…” என்றார்.

“சித்தப்பா… அவங்க பேசி ஒருவாரமாகப் போகுது.”

“என்னாச்சு… கல்யாணத்தைத் தை மாசம் வைக்கலான்னு சொன்னாங்களே…”

“அம்மாதான்….”

“என்ன?”

சித்தப்பாவின் குரல் கடுமையாகியது.

“மண்டபத்துக்கு மூணு தேதி சொன்னாங்கப்பா. நமக்கு ஆறு ரூம் இருக்காம்… அம்மா பத்து ரூம் வேணுன்னு சொன்னாங்களாம். அதில்லாம பட்டுப் புடவைக்கு அவங்க சொல்ற ரேட்டுக்குப் பிடிகுடுக்காம பேசறாங்களாம். கிருபாகரன் மே மாசம் வைச்சிக்கலாமான்னு கேட்டார்… அப்புறம் பேசல…”

“வீட்ல பையன் கல்யாணமாகி வளைய வரான். என்னத்தச் சொல்றது? நான் பேசறேன். அவரை ஃபோன் பண்ணச் சொல்றேன். சகஜமா பேசு. இன்னிக்கே இதை முடிச்சுவிடனும்.”

சித்தப்பாவிடம் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வளவு நெருக்கமாகப் பேசுவேன் என்று நினைக்கக்கூட இல்லை. திருமணம் முடிவுசெய்ய சபையில் அமர்ந்து எத்தனைக் கறாராகப் பேசினார். வேலைக்குபோற பிள்ளை. நிறைய பவுன் எதிர்பார்க்காதீங்க. பிள்ளை பையனுக்குச் சரியா சம்பாதிக்குது. கொடுக்கல் வாங்கல்ல நியாயம் இருக்கணும் என்று கறாராகச் சொன்னார். அப்பா அவர் தம்பி பக்கத்தில் சிவனே என்று அமர்ந்திருந்தார். நாற்காலியிலிருந்து நிமிர்ந்து பார்த்தாள். சன்னல் வழியே திருவரங்கத்தின் கோபுரங்கள் நிமிர்ந்து நின்றன.

இத்தனையும் அப்பாவிற்காக மட்டும்தான். அந்த முகத்தை நினைத்துக்கொண்டால் எந்த வயதிலும் எந்த முகமும் மனதைத் தொந்தரவு செய்யாது.

ஜெயா காலிங்..

“சொல்லும்மா…”

“என்ன புதுசா அம்மான்னு கூப்பிடற… ஜெயான்னு கூப்பிடாம?”

“…”

“பெண்ணழைப்புக்கு மோதிரம் போடுவாங்கதானே?”

“ம்மா… தாலிச் செயின் போடறாங்க. அவங்களுக்கும் செலவிருக்குல்ல. நம்மள மாதிரிதானே?”

“இங்க பாரு நம்மள மாதிரின்னு சொல்லாத…”

“ நீ கட் பண்ணும்மா.”

“இரு சரண்யா… உன் தம்பிக்கிட்ட பெண்ணழைப்புக்கு மண்டபத்துக்குப் பஸ் பேசறதப் பத்திச் சொல்லு.”

“நீ சொல்லமாட்டியா?”

“நான் சொல்லி ரெண்டு நாளாச்சி… நீ சொல்லனுமாம்.”

“வைக்கறேன்…”

பேப்பர் வெயிட்டை எடுத்தாள். கண்ணாடி முட்டையினுள் நீல மஞ்சள் வண்ணம் சிதறியிருந்தது. மனம் துணுக்குற மேசை அடித்திறப்பைத் திறந்து உள்ளே வைத்தாள். எட்டித் திறந்ததால் சென்ற மாதம் வண்டி சறுக்கியதில் அடிப்பட்ட எலும்பு வலி காட்டியது.

திருமணப் பேச்சு துவங்கியதிலிருந்து இதே சள்ளைதான். தோள்ப்பட்டை வலி கைகளில் பரவியது. கைகளை விரித்து மூடி விரித்தாள். அம்மா வைத்துவிட்ட மருதாணி வெளிறியிருந்தது. கைப்பையை எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள். தழைந்த வெயிலை முகத்தில் உணர நடந்தாள். ராமப் பொட்டுவைத்த சிறுமி கடந்துசென்றாள். கோணக் கொண்டை போட்டிருந்தால் இன்னும் அம்சமாக இருந்திருப்பாள்.

அன்று அவளுக்கு என்ன சிக்கலோ உருகிப் பாடிக் காதலித்து இங்கு வந்து மரித்துப்போனாள். எத்தனை தடைகளோ மனிதனைச் சென்றடைய. காலகாலமாய் அவள் மனதின் உருக்கமும் ஏக்கமும் கண்ணீரும்… கேட்டிலையோ வெண்சங்கின் பேரரவம் என ஒலித்துக் கொண்டிருக்கும் அரங்கம்.

திரும்பிக் கிழக்கு வாசல் வழியாகக் கோவிலினுள் நுழைந்தாள். ஆயிரங்கால் மண்டபம் ஒரு பக்கமும், தசாவதார மண்டபம் ஒரு பக்கமும் அமைதியில் மூழ்கியிருந்தன. மெல்லிய இருள் கடந்து வெளிச்சுற்றில் மணலில் கால்பதிய நடந்தாள். அங்கிருந்த நம்மாழ்வார் நாலுகால் மண்டபத்தில் அமர்ந்தாள். சுற்றி மணல் விரிந்துகிடந்தது. ஆயிரம் ஆயிரம் காலடித் தடங்கள்.

முழுமதி வதனமும் துளசிமாலையும்
காவிரிகரையில் அனந்தசயனமும்
கண்டேன் அழகிய மணவாளா…

வெட்டுகள் நிறைந்த வயோதிகக் குரலில் பாடலுக்கும் பேச்சிற்கும் இடையில் அரங்கனைத் தவிக்கவிட்டபடி மிளகாய்ப்பழச் சிவப்பு மடிசாரில் பாட்டி ஒருத்தி அமர்ந்திருந்தாள். அவளுக்குச் சுற்றியிருக்கும் எதைப்பற்றியும் கவனமில்லை. பார்வைகூட எதிலும் நிலைத்ததாகத் தெரியவில்லை. இவள் அண்ணாந்து பார்த்தாள். உள்சுற்று மதிலில் கருடனின் தோளில் புறா ஒன்று அமர்ந்து தத்தித்தது. பார்வைக்கே எத்தனை மென்மை.

அடர் பச்சைக் கைத்தறி சேலையில் வந்த அந்த மாமி புன்னகையுடன் பித்தளைக் கூடையில் இருந்த வாழைப் பழத்தில் இரண்டைச் சரண்யாவிடம் கொடுத்துவிட்டுப் பாட்டியைக் கைப்பிடித்து அழைத்துச் சென்றாள். பழங்களைப் பார்த்ததும் வயிறு தவிக்கத் தொடங்கியது.

மறுமுறை சித்தப்பா அழைத்தார்.

“கணக்கா பேசிட்டேன். இனிமே மாற மாட்டாங்க. உங்கம்மாவ இந்தக் கணக்கு வழக்குல தலையிட வேணான்னு சொல்லு…”

தூணில் சாய்ந்து கால்களைத் தளர்வாக்கி அமர்ந்தாள். தோள்பட்டையைப் பிடித்துவிட்டபடி கிருபாகரனின் எண்ணைத் தொட்டாள்.

“ஹலோ கிருபா… எப்படியிருக்கீங்க?”

“ம்…”

“சித்தப்பா பேசினாரா…”

“உங்க வீட்ல அவர்தான் சரியாப் பேசறார். பட்டுப் புடவை எடுக்க சாரதாஸ் போணுன்னு அம்மா சொல்றாங்க… உங்கம்மா போத்தீஸ்னு சொல்றாங்களாம்… நம்மதான் பேசணும்.”

“ம்… அப்பறம் நீங்க…” என்பதற்குள் அவன் பேச்சை மீண்டும் தொடங்கினான். மறந்துவிடக்கூடாத அவசரம். பக்கத்தில் லிஸ்ட் இருந்தாலும் இருக்கும்.

“பத்திரிகை எத்தனை வேணும்ன்னு சரியாச் சொல்லுங்க. உங்க தம்பி ஒரு கணக்கு. அம்மா வேற கணக்குன்னு இருக்கக்கூடாது…பேசாம உங்க சித்தப்பாக்கிட்ட கேட்டுக்கறேன்…”

அவன் பேசிக்கொண்டிருந்தான். அண்ணாந்து பார்ந்தாள். மதிலில் அமர்ந்திருந்த புறா எப்பொழுதோ பறந்து சென்றிருந்தது. நேரம் கடந்துகொண்டிருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.