ஜிகா வைரஸ்

(குறிப்புகள்: கோரா)

கொசு என்றதும் ஞாபகத்துக்கு வருவது கும்பகோணத்துக் கொசுக்கடி. இது என் சொந்த அனுபவமன்று. 1993-ல் சாகித்திய அகாடெமி பரிசு பெற்ற எம். வி. வெங்கட்ராம் (1920-2000) ‘பைத்தியக்காரப் பிள்ளை‘ என்ற தன் சிறுகதையில் கும்பகோணம் கொசுக்கடி பற்றிக் குறிப்பிடுகிறார். கொசுவைக் குறிக்கும் கொதுகு மற்றும் நுளம்பு ஆகிய சொற்கள் பழந்தமிழ் இலக்கியத்தில் இடம்பெறவில்லை என்றாலும் தமிழ் நிகண்டுகளில் குறிப்பிடப்படுகின்றன.

கொசுக்கள் தோன்றி 226 மில்லியன் ஆண்டுகள் ஆண்டுகள் கடந்து விட்டதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஐயமின்றி சொல்லலாம் முன் தோன்றி மூத்த குடி கொசுதான் என்று. அவை மனிதர்களின் பிரதான ஓய்வான தூக்கத்தைக் கெடுப்பதற்கு மற்றும் மருத்துவத் துறைக்கே சவால்விட்டுப் பல கொடிய நோய்களைப் பரப்ப அயராது பாடுபட்டு வருவதற்கென்றே படைக்கப்பட்ட ஒரு பூச்சியினம் என்று சொல்லி நாம் தப்பிவிட முடியாது. மனித இனம் தோன்றியதே 5-6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்புதான்.

மலேரியா பாதிக்கப்பட்டவரின் ரத்தம்தான் மலேரியா பரவலுக்கு மூல காரணி. மலேரியாவால் அவதிப்படுவோரின் ரத்தத்தில் பிளாஸ்மோடியம் ஒட்டுண்ணி கலந்திருக்கும். அனோபீல்ஸ் என்னும் பெண் கொசு மலேரியாவால் பாதிக்கப்பட்ட மனிதனின் ரத்தத்தை உறிஞ்சும்போது பிளாஸ்மோடியம் ரத்தத்துடன் வெளியேறும். அதே கொசு வேறொருவரைக் கடிக்கும்போது அவருடைய ரத்தத்தில் பிளாஸ்மோடியம் கலந்து, கல்லீரலில் பன்மடங்காகப் பெருகி ரத்தச் சிவப்பணுக்களை அழிக்கின்றன. பின்னர் சில வாரங்களில் அவருக்கு மலேரியா அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கின்றன. தன் இனப்பெருக்கம் அல்லாமல் வேறு உள்நோக்கமின்றி மனித இலவச ரத்த வங்கிகளில் ரத்தம் குடித்த பாவப்பட்ட பெண் கொசு பழியேற்று நிற்கிறது.

ஆண்டு தோறும் 10 லட்சம் பேர் கொசுக்கடியால் நோய்வாய்ப்பட்டு உயிரிழக்கிறார்கள். மலேரியா, யானைக்கால் வியாதி, மஞ்சள் காமாலை, டெங்கு, மூளை அழற்சி, சிக்குன் குனியா, ஜிகா போன்ற பல்வேறு நோய் பாதிப்புகளைக் கொசுக்கள் ஏற்படுத்துகின்றன. இவற்றில் மலேரியா, யானைக்கால் வியாதிகள் ஆகிய இரு நோய்களும் கிட்டத்தட்ட ஒழிக்கப்பட்டுவிட்டன.

கொசுக்களின் குடும்பம் anophelinae, cilicinae என்னும் இரு துணைக் குடும்பங்களைக் கொண்டுள்ளது. Aedes, anopheles, Culex போன்ற 40 பேரினங்களும் அவற்றுக்குக் கீழ் 3500 கொசுவகைகளும் கண்டறியப்பட்டு வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் சில நூறு கொசுவகைகள் மட்டுமே மனிதர்களைக் கடிக்கின்றன. Anopheles எனப்படும் கொசு இனத்தில் சுமார் 430 கொசு வகைகள் உள்ளன. இதில் சுமார் 100 வகைகள் மலேரியா ஏந்திகளாக அடையாளம் காட்டப்பட்டுள்ளன. இதில் 40 வகைகள் மட்டுமே மனிதர்களுக்கு மலேரியாவைக் கடத்துகின்றன.

ஏடிஸ் ஏஜிப்டி (Aedes aegypti ) வகைக் கொசுக்கள் டெங்கு, சிக்குன்குனியா, மஞ்சள் காய்ச்சல் மற்றும் ஜிகா வைரஸ் நோய் பரப்பிகளாக உள்ளன. மேலே குறிப்பிடப்பட்ட 3,500 கொசு வகைகளில், Aedes aegypti இனங்களின் சில கொசு வகைகள் மனிதரைக் கடிப்பவை. அவற்றில் எவை ஜிகா வைரஸ் ஏந்திகள், எவை மனிதர்களுக்கு ஜிகா வைரஸ் கடத்திகள் என அடையாளம் கண்டுவிடப்பட்டுவிட்டனவா என்று தெரியவில்லை. ஆயினும் கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டிகளின்படி, ஆப்பிரிக்காவில் பிறந்த ஜிகா வைரஸின் பாதிப்பு 2015-ல் மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் மிக அதிகமாக இருந்ததையும் அதே சமயம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் வைரஸ் பரவல் மந்தமாக இருந்ததையும் ஆய்ந்துள்ளார்கள். ஆய்வில் கண்டுபிடித்தவை: Aedes aegypti வகை கொசுக்களில் சில மனித ரத்தம் விரும்பிகள். மற்றவை விரும்புவது அணில், எலி போன்ற கொறிப்பன மற்றும் மான் போன்ற பாலூட்டிகளின் ரத்தம். மனித விரும்பிக் கொசுக்கள் திறமை மிக்க வைரஸ் ஏந்திகளாகவும், வைரஸ் கடத்திகளாகவும் லத்தீன் அமெரிக்காவில் செயல்படுவதால், ஜிகா வைரஸ் அங்கே அதிவேகமாகப் பரவியது.

NPR: Why Zika Never Exploded In Africa: New Study : Goats and Soda.
https://www.npr.org/sections/goatsandsoda/2020/11/20/936649934/why-does-a-virus-cause-problems-in-one-region-but-not-another-a-study-offers-ins?ft=nprml&f=1007

Why does a disease hit some countries or regions hard and largely spares others?

மருந்து, தடுப்பூசி என்று அலையாமல், கொசுக்களைக் கொண்டே டெங்கு பரவலை ஒழித்த Townsville (Queensland ) நகரின் வெற்றிக் கதையைக் கீழே தந்துள்ளேன். அந்த நகரம் முழுவதிலும் டெங்கு காய்ச்சலைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டனர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள். இயற்கையாகவே தொற்றும் பாக்டீரியாக்களைக் கொண்ட கொசுக்களை ஆய்வகங்களில் வளர்த்து டௌன்ஸ்வைல் நகரத்தின் பொது வெளியில் பறந்து போகவிட்டனர். அவை உள்ளூர் கொசுக்களுடன் உறவு கொண்டன. இதன் மூலம் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கும வோல்பாச்சியா (Wolbachia ) என்னும் பாக்டீரியா அந்நகர் எங்கும் பரவியது. இதனால் 2014ஆம் ஆண்டு முதல் டௌன்ஸ்வைல் நகரத்தில் டெங்கு தொற்று யாருக்கும் ஏற்படவில்லை.

சுட்டி: https://www.bbc.com/tamil/global-45046143.amp

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.