குப்பை

‘இக்கடிதத்தின் மூலம் அறிவிக்கப்படுவது என்னவென்றால், நம் நிறுவனத்தின் அதிசிறந்த ஐ.க்யூ (IQ) கொண்டவனும், உலகிலேயே அதி சிறந்த மூளைக்காரன் என்று பெயர் வாங்கியவனுமான பதினாறு வயது எப்பி, நேற்று ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருக்கிறார்.

அது, நாம் இதுகாறும் ஒரு நட்சத்திரத்தின் பிறப்பு குறித்த அவதானத்தை அப்படியே தலைகீழாகப் புரட்டிப்போடுவதாக அமைந்திருக்கிறது. இங்கே ஒரு நட்சத்திரம் எப்படிப் பிறக்கிறது என்பது குறித்த நம் அவதானத்தைப் பகிர்வது பொருத்தமாக இருக்குமென்று நினைக்கிறேன்.

பிரபஞ்ச வெளியில் விரவிக்கிடக்கும் வாயுக்கள், தங்களுக்குள் வினை புரிந்து ஒன்றோடொன்று எதிர்த்து, அதன் கூட்டு விளைவால், விலகிச் சென்றிட முயலும் போது, அவற்றினிடையே இருக்கும் ஈர்ப்பு விசையானது அவற்றை விலகிச்செல்ல விடாமல் தடுக்கிறது. இவைகள் ஒரு கட்டத்தில் ஹைட்ரஜன்-ஹீலியம் வாயுக்களாக உயிர்பெற்று ஒரு தொடர் ஃப்யூஷன்-ஃபிஷன் (fusion-fission) ரியாக்ஷனுக்குள்ளாகி நட்சத்திரங்களாகின்றன. இது நடக்க பல்லாயிரக்கணக்கான வருடங்களாகும்.

இதுதான் இதுகாறுமான நம் புரிதல். ஆனால், எப்பி சென்ற வாரம், நிறுவனத்தின் சக்தி வாய்ந்த தொலை நோக்கிகள் மூலம், 24 மணி நேர இடைவெளியில், ஏதுமற்ற வெற்றிடமொன்றில் திடீரென ஒரு நட்சத்திரம் உருவாகியிருக்கக் கண்ணுற்றிருக்கிறார். எப்பி உருவாக்கியிருக்கும் செயற்கை நூண்ணறிவானது அந்தத் தகவல்களை சீர்தூக்கிப் பார்த்துவிட்டு, அது ஒரு நட்சத்திரம் தான் என்றறிவிக்கிறது. இந்தக் கண்டுபிடிப்பிற்காய் நிறுவனம் எப்பியைப் பாராட்டுவதோடு நில்லாமல், அந்தப் புதிய நட்சத்திரத்திற்கு ‘எப்பி’ என்றே பெயர் வைக்கிறது’

இப்படி இருந்த கடிதத்தை வாசித்துவிட்டு, பெருமூச்சு விட்டான் சால் என்கிற சால்வடோர்.

“பிறந்தால் அவனைப்போல் பிறக்கவேண்டும், டினோ. என்ன ஒரு வாழ்க்கை பாரேன் இந்த எப்பிக்கு. வயது பதினாறு தான் ஆகிறது. உலகிலேயே தலைசிறந்த ஐ.க்யூ அவனுக்கு. தலைசிறந்த விண்வெளி ஆய்வுக்கூடத்தில் வேலை. கோடிக்கணக்கான ரூபாய் சம்பளம். தினம் தினம் அவன் வீட்டுக்கு இரவுகளில் புதிது புதிதாக பெண்கள் வந்து செல்கிறார்களாம்.” என்றான் சால்.

“அவன் சொல்லிவிட்டால் ஆச்சா? அவன் தவறாகக்கூட இருக்கலாம் அல்லவா?” என்றேன் நான்.

“ஆங்… என்னிடம் சொன்னதைப்போல் வேறு யாரிடமும் சொல்லிவிடாதே.”

“ஏன்?”

“எப்பி சற்று மண்டை கர்வம் பிடித்தவன். நீ இவ்விதம் நினைப்பது தெரிந்தால்……..”

“தெரிந்தால்?”

“‘நான் கண்டுபிடித்ததை தவறென்று நிரூபித்துக்காட்டு’ என்று சவால் விடுவான். அவன் எதையெல்லாம் வைத்து அந்த நட்சத்திரம் 24 மணி நேரத்தில் உருவானது என்று கணித்தானோ? எவனுக்குத் தெரியும். அவன் சவால் விடும் பட்சத்தில், அவனைத்தாண்டி நீ ஏதேனும் கண்டுபிடித்தாகவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவாய். கண்டுபிடிக்க முடியவில்லை எனில் அதுவே நிறுவனத்தில் உன் தகுதி என்ன என்பதைப் பறைசாற்றுவாதாய் முடியலாம். இது வேலை போக கூட காரணமாகிவிடலாம்” என்றான் சால்.

“அதற்காக? எப்பிக்கு நம்மை விட சுமார் இருபது வயது குறைவாகத்தான் இருக்கும். அவனை விடவும் நமக்கு அனுபவம் அதிகம். ஆயினும் அவனுடைய ஐ.க்யூ எண் நம்மை விடவும் அதிகமாய் இருப்பதாலேயே அவன் சொல்லும் அத்தனையையும் ஏற்றுக்கொள்ள வேண்டுமா என்ன?” என்றேன் நான்.

“டினோ, நம்மைப்போலத்தான் அவனும் இந்த நாட்டுக்கு படிப்பதற்கு வந்தான். ஆனால், மிகக்குறுகிய காலத்தில் மெத்தப்படித்துவிட்டு மிக இளம் வயதிலேயே ஆராய்ச்சிக்கு தகுதியாகிவிட்டான். இந்த நாட்டின் பார்வையில், அவனுக்கு இன்னும் 42 வருடங்கள் இருக்கிறது. நமக்கு 23 வருடங்கள் தான். நாட்டின் கணக்குப்படி, நம்மை விட எப்பி இந்த நாட்டின் வளர்ச்சிக்கு அதிகம் பயன்படுவான் என்று நினைக்கிறது. அதனால், அவன் மீது தன் முதலீடுகளைத் திணிக்கிறது. இது எல்லா நாடுகளிலும் நடப்பதுதானே டினோ” என்றான் சால்.

“ஆனால், நாம் எல்லோரும் உள்ளங்கை ரேகைகள் போலல்லவா, சால்? நம் எல்லோருக்கும் வெவ்வேறு விதமான வாழ்வனுபவம் இருக்கிறது. அதன் மூலம் தரிசனங்களும், விழித்திறப்புகளும் இருக்கின்றன. உன் பார்வைகள் என்னிடம் இல்லை. என் பார்வைகள் உன்னிடம் இல்லை. இப்படி இருக்க, பதினாறே வயதான ஒருவனுக்கு எத்தனை விஸ்தீரணமான வாழ்வனுபவம் இருந்திருக்க முடியும்? அதன் மூலம் அவன் மானுட இனத்தை சரியான திசையில் தான் வழி நடத்திச்செல்கிறான் என்று எப்படி எடுத்துக்கொள்ள முடியும்?” என்றேன் நான் குரலில் சற்றே கையாலாகாதத்தனத்துடன்.

“அவன் மானுட இனத்தை வழி நடத்திச்செல்கிறானா?”

“இல்லையா பின்னே? அவன் என்ன சொல்ல வருகிறான்? மிக மிகக் குறுகிய காலகட்டத்திலும் ஒரு நட்சத்திரம் உருவாகக்கூடும் என்கிறான். நாளை அதை பகுதி பகுதியாக ஆராய்ந்து, அதி விரைவாக ஒரு சூரியனை உருவாக்க ஒரு செயல்முறையைக் கண்டுபிடிப்பான். நட்சத்திரத்தையே உருவாக்குபவனுக்கு கிரகம் உருவாக்குவதா சிக்கலாக இருக்கும்? அவனாக ஒரு கிரகத்தை சிருஷ்டித்து அங்கே செல்ல முனைவான். இப்படித்தான் நடக்கும் என்று சொல்ல முடியாவிட்டாலும், இந்த ரீதியில் தான் ஏதோ செய்ய இருக்கிறான் என்று சொல்ல முடிகிறதல்லவா? இது மானுட இனத்தை வழி நடத்திச்செல்வது இல்லையா?”

“நம் அங்கலாய்ப்புகள் எதற்காகும், டினோ. அவன் கண்டுபிடித்ததில் என்ன குறை? அவன் எதை கவனிக்கத் தவறிவிட்டான் என்பதை நாம் கண்டுபிடித்தாலொழிய, நடக்கப்போகும் எதையும் நம்மால் தடுக்க இயலாது. அது உன்னால் முடியுமா? அவனுக்கு ஐ.கியூ அதிகம். அந்த ஐ,க்யூ நம் கண்களுக்குத் தெரியாத ஏதோ ஒன்றை அவன் கண்களுக்குக் காட்டியிருக்கிறது. அதை நாம் எப்படி, அவனது உள்ளீடு இல்லாமல், கண்டுபிடிக்க முடியும் என்பதுதான் கேள்வி. நம்மால் முடியாதென்றால், வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டியதுதான் நம் கதி” என்றான் சால்.

குரலில், அவனும் சற்று உடைந்தே இருப்பது தென்பட்டது.

ஆயாசம்.

அதிர்ச்சி.

கையாலாகாதத்தனம்.

இயலாமை.

எப்படி வேண்டுமானாலும் அந்த உணர்வை அடையாளப்படுத்திக்கொள்ளலாம். எப்பி வயதில் சிறியவன். எங்களுக்குப் பிறகு தொழிலுக்கு வந்தவன். இன்னும் சொல்லப்போனால், அவனது துவக்க காலத்தில், தொழில் ரீதியிலான நுணுக்கங்கள் சிலவற்றை நாங்களும் கற்றுத்தந்திருக்கிறோம். நாங்கள் தெரிந்துகொண்டவைகளையே மிகவும் இளம் வயதில் தெரிந்துகொண்டவன், நாங்கள் கண்டுகொள்ளாத எதையோ கண்டுபிடித்துவிட்டான். இதன் பொருள் என்ன? இதனை எவ்விதம் வகைப்படுத்துவது? எவ்விதம் பகுப்பது? நாங்கள் எங்கள் வேலையைச் சரியாகச் செய்யவில்லை என்று கொள்வதா? அவன் எங்களை விடவும் திறமைசாலி என்று கொள்வதா? எங்கள் கண்களுக்குத் தெரியாத ஏதோ ஒன்று அவனுக்கு தெரிந்துவிட்டதை எங்களால் ஜீரணிக்கவே முடியவில்லை.

இந்தக் கேள்விகளுடன் நாங்கள் வீடு வந்து சோபாவில் விழுந்தோம். அதீத சந்தோஷம், சோர்வு, வேலை பளு என்று ஒருங்கே சூழல்களில் திளைக்கையில், அவரவர் வீடுகளுக்குச் சென்று திரும்புவதான கால இடைவெளி வாய்க்காமல் போகையில் சால்வடோர் அவ்வப்போது என் அறையில் தங்கிச்செல்வது வழமை. அன்று மனதளவில் சோர்வாக உணர்ந்திருந்தோம். ‘ நாமெல்லாம் பிழைத்திருப்பதே வீண்’ என்றுத் திரும்பத்திரும்பத் தோன்றியபடியே இருந்தது. சாலின் நிலைமையும் அதுவாகத்தான் இருக்குமென்றும் தோன்றியது.

கொஞ்சம் கவனத்தை திசை திருப்பினால் தேவலை என்று தோன்றி, இருவருக்குமென சூடாக தேனீர் தயாரித்தேன். இருவருமாக, ஆளுக்கொரு கோப்பையுடன் பால்கனி வந்த அமர்ந்தோம். வெளியே மங்கிய மாலையை இரவு, எலும்புத்துண்டைக் கவ்வும் நாய்க்குட்டி போல கவ்விக்கொண்டிருந்தது. ஆள் நடமாட்டம் குறைந்துகொண்டிருந்தது. காய்ந்த சருகுகள் ஒரு கம்பளம் போல் சாலையெங்கும் விழுந்து கிடைந்தன. தெருவிளக்குகள் ஒளிர்ந்துகொண்டிருந்தன. தெருவிளக்கின் ஒளியைச் சுற்றி பூச்சிகள் ரீங்கரித்துக்கொண்டிருந்தன. நான் அந்தத் தெருவிளக்குகளையே பார்த்துக்கொண்டிருந்தேன். ஒளிரும் தெருவிளக்கு ஒரு சூரியனைப்போலவும், அதனைச் சுற்றிலும் பூச்சிகள் கிரகங்களைப் போலவும் தோற்றமளித்தன. எனக்கு எதுவோ புரிந்தது போலிருந்தது.

“அவன் எப்படி அப்படியான ஒரு முடிவுக்கு வந்திருக்க முடியும்?” என்றான் சால் திடீரென்று.

“எப்படியான?”

“ஒரு நட்சத்திரம் ஒரே நாளில் உருவாகிவிட்டது என்கிற முடிவுக்கு…”

எனக்குள்ளும் அதே யோசனை இருந்தது.

“ஒரு வேளை மிகக்குறுகிய வயதில் ஆராய்ச்சியாளனாகிவிட்டதால், தன்னைப்போலவே பிரபஞ்சத்திலுமொன்று இயங்கக்கூடுமென்று நினைத்திருப்பானோ” என்றேன் நான் லேசான புன்னகையுடன். சும்மா விளையாட்டுக்குத்தான் அப்படிச் சொன்னேன். சாலை சகஜ நிலைக்கு கொண்டுவரும் முயற்சியாகத்தான் சொன்னேன். ஆனால் அவன் முகம் மாறவே இல்லை. முன்பை விடவும் தீவிரமாகியிருந்தான்.

“நீ சொல்வதிலும் ஒரு பாயிண்ட் இருக்கிறது” என்றான்.

நான் மடிக்கணிணியில் எப்பியின் கண்டுபிடிப்பு குறித்த தகவல்களை வருவித்துப் பார்த்தேன். அவனது கண்டுபிடிப்புக்கான கட்டுரையில் அவனது கண்டுபிடிப்பு தெளிவாகத் தரப்பட்டிருந்தது.

“24 மணி நேரத்தில் விண்வெளியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் புதியதாகப் பிரகாசமாக ஒரு நட்சத்திரம் திடீரெனத் தோன்றியிருக்கிறது. அந்த நட்சத்திரம் பூமியிலிருந்து சுமார் நூற்றி மூன்று ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கிறது” என்றது குறிப்பு.

நான் எப்பி சேகரித்த இதர தகவல்களைப் பார்த்தேன். அந்த நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்ட இடம் எவ்வாறு முதலில் கரும் பிரதேசமாய்க் காட்சியளித்து, பிற்பாடு ஒளிர் நட்சத்திரமானது என்பது குறித்த புகைப்படங்களும், இன்ஃப்ரா ரெட் பதிவுகளும் இருந்தன. அவற்றை, சரிபார்த்துக்கொண்டிருந்தபோது தான் எனக்கு ஒன்று புலப்பட்டது. அது புரிந்தபோது நான் சிரித்துவிட்டேன். நான் சிரிப்பதைப் பார்த்துவிட்டு, சால் துணுக்குற்றபடி,

“என்ன, சிரிக்கிறாய்? என்னானது?” என்றான்.

“நம் நிறுவனம் வேற்றுகிரக வாசிகள் குறித்த தேடலையும் செய்கிறது அல்லவா?” என்றேன் நான்.

“ஆமாம். அது வேறொரு பிரிவு. நம் பிரிவு புதிய நட்சத்திரங்களைக் கண்டுபிடிப்பது. இரண்டும் வெவ்வேறு பிரிவுகள். அதற்கென்ன?”

“எப்பி கடந்த 24 மணி நேரத்தில் திடீரெனத் தோன்றிய ஒரு நட்சத்திரத்தை கண்டுபிடித்திருக்கிறான் என்பது உண்மை தான். ஆனால், அந்தப்பிரிவு ஆயிரம் ஒளி ஆண்டுகள் சுற்றளவில் வேற்று கிரக வாசிகள் இல்லை என்று பதிவு செய்திருக்கிறது. “

“அதனால்? என்ன சொல்ல வருகிறாய்?”

“எப்பியின் கண்டுபிடிப்பு, வேற்று கிரக வாசிகள் குறித்த கண்டுபிடிப்பை உள்வாங்கிக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதுதான் பிழையாகிவிட்டிருக்கிறது”

“புரிகிறார்ப்போல் பேசவே மாட்டாயா , டினோ?” என்றான் சால் பரிதாபமாக.

“எப்பி தன் தொலை நோக்கிகளின் மூலம் 24 மணி நேரத்தில் புதிதாகத் தோன்றிய நட்சத்திரத்தைக் கண்ணுற்றிருக்கிறான். என் அவதானத்தில் அந்த நட்சத்திரம் வெகு காலமாகவே அதே இடத்தில் இருந்திருக்க வேண்டும்.”

“அப்படியானால், இதுகாறும் நம் தொலை நோக்கிகளின் கண்களில் படாமல் எப்படி இருந்திருக்கும்?”

“சாத்தியம். அந்த நட்சத்திரத்தை ஒரு டைசன் ஸ்பியர் (DYSON SPHERE) முழுமையாக மூடியிருக்குமானால் சாத்தியம் தான்.”

“ஆனால், டைசன் ஸ்பியர் தான் இதுகாறும் மூடியிருந்ததென்று எப்படிச் சொல்கிறாய்? என்ன நிரூபனம்?”

“நல்ல கேள்வி. ஒரு டைசன் ஸ்பியர் ஒரு நட்சத்திரத்தின் சக்தியை மொத்தமாக உரிஞ்சுமாயின், அந்த ட்பியர் கட்டுமானம், அந்த சக்தியின் ஒரு சிறிய பகுதியை உள்வாங்காமல் இருக்காது. அப்படி உள்வாங்கப்படும் சிறிய அளவிலான சக்தியை அது ஸ்பியருக்கு வெளியே வெளியிடும். அந்த சக்தி வெளியீட்டை நாம் அவதானிக்கலாம். அது எப்பியின் பதிவுகளில் மிக மிக சன்னமாக இருக்கிறது. வேற்று கிரக வாசிகள் குறித்த தேடலில் இருக்கும் பிரிவினர், பூமி போன்ற கிரகங்களைத் தேட வைத்திருக்கும் தர்க்கத்தில் ஒரு பிரகாசமான நட்சத்திரத்தின் கோல்டிலாக் ஸொனில் (Goldilock Zone) அமையப்பெற்ற கிரகங்களை மட்டுமே தேடுவதால் அவர்கள் இதைக் கவனிக்காமல் விட்டிருக்கலாம் என்று கணிக்கிறேன். அவர்கள் இதை தவற விட்டதால், அதன் அடிப்படையில் எப்பி, தன் கண்டுபிடிப்பைப் பொறுத்திப் பார்த்துவிட்டு 24 மணி நேரத்தில் ஒரு நட்சத்திரம் முளைத்துவிட்டதாகப் புரிந்துகொண்டுவிட்டான்” என்றறிவித்தேன் நான்.

“அப்படியானால்?”

“அப்படியானால், நம்மை விடவும் கர்தஷேவ் அளவீட்டின்படி (Kardashev Scale)ன் படி, அதி நவீனமான வேற்று கிரக வாசிகள், அந்த நட்சத்திரத்தின் சக்தியை முழுமையாக உள்வாங்கிக்கொண்டே இத்தனை காலமும் இருந்திருக்கிறார்கள். அதனால் அந்த நட்சத்திரம் நம் பார்வையிலிருந்து முழுமையாக மறைக்கப்பட்டிருந்திருக்கிறது.”

“அப்படியானால், இப்போது எப்படி தெரிந்தது?”

“அதுதான் புதிர். அந்த டைசன் ஸ்பியர் இப்போது அங்கு இல்லை. நூற்றி மூன்று ஆண்டுகளுக்கு முன்பே, அவர்கள் ஏதோ காரணத்திற்காய் வேறிடம் பெயர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த நட்சத்திரத்தின் சக்தி தேவையற்று போயிருக்கலாம் என்பது என் ஊகம். இத்தனை அருகாமையில் வந்தும், நம்மைச் சந்திக்கவோ, நம்முடன் அளவளாவவோ அவர்கள் முயற்சிக்கவில்லை என்பது தான் என்னை ஆச்சர்யப்பட வைக்கிறது.”

“அப்படியானால்?”

“நீ இந்த உலகின் குப்பை என்று வருணிக்கப்படும் ஓர் இடத்திற்கு செல்ல விருப்பப்படுவாயா? சென்றிருக்கிறாயா?”

“இல்லை. அப்படி ஓர் இடத்திற்குச் செல்ல எனக்குக் கிறுக்கா பிடித்திருக்கிறது?”

“அப்படியிருக்க, அந்த குப்பை உலகிலிருந்து ஒருவன் உன்னைச் சந்திக்க கடிதம் எழுதினால் என்ன செய்வாய்?”

“கிழித்துக் குப்பையில் வீசுவேன்.”

“அதே தான். நம் பூமி, அதில் மானிடர் உலகம் குறித்து அந்த வேற்று கிரகவாசிகளுக்கு இருக்கும் பிரஞை அத்தனை நல்ல விதமாய் இருப்பதாய்த் தெரியவில்லை.. அதுதானோ என்னவோ, நம் உலகை மிக அருகாமையில் கடக்க நேர்ந்தும் அவர்கள் யாரும் நம்மைச் சந்திக்க முயற்சிக்கவே இல்லை. ஆனால், நாமோ நம்மைச் சந்திக்க மறுக்கும் அந்த வேற்று கிரக வாசிகளைச் சந்திக்க வாயேஜர் விண்களன்களை அனுப்பிக்கொண்டிருக்கிறோம். ஏதாவது பதில் வருமா என்று விண்ணையே பார்த்திருக்கிறோம். என் ஊகம் சரியானால், நம் விண்களன்களை அவர்கள் கண்ணுற்றும், நம்முடன் தொடர்பு கொள்ள விருப்பமின்றி அவர்கள் அதை மேற்கொண்டு தொலைந்து போகவே விட்டிருக்க அதிகம் வாய்ப்பிருக்கிறது சால். இந்தப் பின்னணியில், நம் வேற்றுலக ஆராய்ச்சிகள் எதற்காகிறது? மிக அதிக ஐ.க்யூ வாய்க்கப்பட்ட எப்பி எதற்காவான்? ஒரு குப்பை உலகின், ஆகச்சிறந்த குப்பையாக இருப்பதன்றி” என்றேன் நான்.

என் வாதங்களை ஆழ்ந்து உள்வாங்கிவிட்டு, சற்று நேர மெளனத்துக்குப் பிறகு,

“அதுவும் சரிதான்” என்றான் சால்.

அதற்கு மேல் எங்களிடம் பகிர்ந்துகொள்ள எந்த வார்த்தையும் எஞ்சியிருக்கவில்லை. தேனீரைச் சுவைத்தபடி மங்கிக்கொண்டிருந்த பின் மாலை வானத்தையும், கரைந்தபடி பறக்கும் காகங்களையும், சிட்டுக்குருவிகளையும் வேடிக்கை பார்க்கத்துவங்கினோம்.

One Reply to “குப்பை”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.