பூ கர்ப்பம்

வானில் தெரிவதற்கெல்லாம் பால்வெளிதான் வீடு என்று நினைத்திருந்தோம். நியூட்டனின் ஈர்ப்பு விதிகளின்படி அகிலம் மாறுதலற்றது, தொடர்வது, எப்போதுமே நிலை பெற்றிருக்கக்கூடும் என எண்ணினோம். ஐன்ஸ்டீனின் பொதுச் சார்பியல் கோட்பாடு காலவெளி நெசவைச் சொன்னது. அவரது கண்டுபிடிப்பு, பேரண்டம் மாறுதலுக்கு உட்பட்டது என்பதைச் சொன்னதோடு நில்லாது கருந்துளைகளை அனுமானித்தது. தற்போதைய அறிவியல் யூகித்துச் சொல்வது என்னவென்றால் இந்தப் புவனம் கருந்துளையில் இருந்து பிறந்துள்ளது என்பதே; இந்தக் கருதுகோள் புறக்கணிக்கக்கூடிய ஒன்றன்று. கருந்துளையின் தொடுவான நிகழ்ச்சி (Blackhole Event Horizon) இதைச் சுட்டுகிறது; கருந்துளையின் உள்ளிருக்கும் பொருளிற்கும் வெளியிலுள்ள பொருளிற்குமான கதை என இதை விவரிக்கலாம். கருந்துளையின் ‘நிகழ்வுத் தொடுவானின்’ வெளியே ஒரு பொருள், ஈர்ப்பு விசையை உணர்ந்தாலும், ‘வெளி’ வளைவதால் அது தப்பும் சாத்தியங்கள் உள்ளன. உதாரணமாக அப்பொருள் வேகமாக இயங்கினால், சரியான திசையில் சென்றால் அது கருந்துளையில் விழாது.

ஆனால் நிகழ்வுவானின் மறுபுறம், அதாவது, உள்ளே செல்லும் பொருள் கருந்துளையின் மைய ஒருமையைச் சென்று சேர்ந்துவிடும். ஒரு கருந்துளையின் உள்ளே காலவெளி எவ்வளவு அதிகமாக வளைந்துள்ளதோ அதை ஒத்து, இந்தப் பொருள், ஒருமையைச் சென்றடையும். இந்த நிகழ்வில் கருந்துளையின் எடையும் ஏறும். 

இதற்கும் நம் பேருலகத்திற்கும் என்ன தொடர்பு?

காணக்கூடிய உலகின் (Observable Universe) பருப்பொருள் மற்றும் கதிரியக்கம் பற்றி அறியக் கீழ்க்கண்டவற்றின் கூட்டுத் தொகையை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

1) சாதாரணப் பொருள் – ஃபோடான், நுயுட்ரான், எலெக்ட்ரான்

2) ந்யூட்ரினோக்கள், அடிப்படைத் துகள்கள் இவற்றிற்கும் சாதாரணப் பொருட்களுக்கும் இடையே அரிதாக நிகழும் உட்செயல்பாடுகள்.

3) கரும் பொருள் – உலகின் எடையில் பெரும் பங்கு இதற்குத்தானிருக்கிறது-ஆனால், ஏற்கக்கூடிய நேரான கண்டுபிடிப்பு இன்றுவரை நிகழவில்லை.

4) ஃபோடான்கள், ஒவ்வொரு மின்காந்த நிகழ்வுகளிலும் சக்தியைச் சுமக்கும் இவற்றின் எடை.

5) ஈர்ப்பு அலைகள்- ஓர் எடை அசைந்து விரைகையில் வளைந்த காலவெளி நெசவில் உற்பத்தியாகுபவை.

இப்போதிருக்கும் நம் கருவிகளின் திறன்கொண்டு, 46 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில், அனைத்துத் திசைகளிலும் இருப்பனவற்றை ஒருக்கால் காணலாம். இத்தகைய வகைமைகளிலிருந்து காணக்கூடிய அனைத்து அகிலத்தின் எடையை E=MC2 ன்படி அடையலாம்.

இந்த உலகை ஒரு புள்ளியெனக் குறுக்கினால் என்ன ஆகும்? அது ஒரு கருந்துளை ஆகும். ஐன்ஸ்டீனின் தேற்றத்தின்படி, இந்த எடை அல்லது சக்தி, மின் சக்தியின் இடையூடற்று இருந்தால், அது சுழலவோ, சுத்தவோ, அதாவது கோண உந்துதல் (Angular Momentum) இல்லாத நிலையில் மொத்த எடை மட்டுமே ஒரு கருந்துளை பெரிதாவதை நிர்ணயிக்கிறது. இதை வான் இயற்பியலாளர்கள் ‘ஸ்வார்ஸ்ஸ்சைல்ட் ஆரம்’ (Schwarzschild Radius) என்கிறார்கள்.

இந்த ஆரமானது, ஆச்சர்யமாக, பார்க்கும் உலகத்தின் அளவில் அனேகமாக இருக்கிறது. இந்த அதிசயத் தன்னிகழ்வு ஒரு கருந்துளையிலிருந்து பேரண்டம் பிறந்ததோ எனக் கேள்வி எழுப்புகிறது. 1960 களில்,வானில்  குறை-சக்தி கதிரியக்கத்தைப் பார்த்தார்கள்; அது வானின் அனைத்து இடங்களிலும் ஏற்பட்டு சீரான வெப்ப நிலையில் (சூன்யத்திற்குச் சற்றே அதிகம்) கரு வண்ணப் பட்டியெனத் தெரிந்தது. இந்தக் கதிரியக்கம், அண்டத்தின் பின்னணி நுண்ணலைகள் வாயிலாகப் பேரண்டம் விரிவடைகிறது, குளிர்ந்து வருகிறது என்றும் முன்னர் இதுவே அதிக வெப்பமுடனும் அடர்த்தியாகவும் இருந்தது என்றும் காட்டியது. சற்றுப் பின்சென்று ஆராய்கையில் கருந்துளைகளின் உள் நடுவில் காணப்படும் ஒருமையை ஒத்தே, பெரு வெடிப்பு நிகழ்ந்துள்ளது என அறிவியலாளர்கள் சொன்னார்கள். இயற்பியலின் விதிகள் செல்லுபடியாகாத அளவில் அடர்த்தியும் வெப்பமும் சக்தியும் மிகுந்தவை அந்த ஒருமை.

கருந்துளையின் நிகழ்வுத்தொடுவானைவிட்டு நீங்கள் விலகி விலகி நெடுந்தூரம் செல்கையில், முன்னர் நாம் குறிப்பிட்ட ஆரத்திலிருந்து முடிவிலித் தொலைவு சென்றிருப்போம்; ஆச்சரியமாகக் கருந்துளையின் நிகழ்வுத்தொடுவானின் உள்ளே அதன் மைய ஒருமையை நோக்கிச் சென்றடைகையில் அந்த ஆரத்திலிருந்து நாம் கடந்த தூரம் பூஜ்யம் என இருக்கும். இவ்விரண்டுமே ஒவ்வொரு புள்ளியிலும் ஒரே மாதிரியாக இருக்கும்.

பேரண்டம் பிறந்ததைப் பற்றிய நம் எண்ணங்கள் இரு முக்கியக் கோட்பாடுகளால் வடிவு கொள்கின்றன. 

ஒன்று, அண்ட வீக்கம் (Cosmic Inflation): அதிவேகமான, நிலைத்த, வெளிவிரிவு பெரு வெடிப்பிற்குமுன் நிகழ்ந்திருக்க வேண்டும்; வெளியில் ஒரு சக்திப்புலம் இருந்து அது அண்ட வீக்கத்திற்கு இட்டுச் சென்றிருக்கக்கூடும். அந்த அண்ட வீக்கம் முடிவுற்றபோது பெரு வெடிப்பு ஏற்பட்டது.

இரண்டாவது கரும் சக்தி. இதுவும் வெளியின் புலச் சக்தியைப் பற்றிச் சொல்கிறது. பேரண்டம் விரிவடைகையில், மற்ற விண்மீன் மண்டலங்கள் நம்மைவிட்டு வெகு தொலைவிற்குச் செல்கின்றன.

இந்த இரு கருதுகோள்களையும் கருந்துளை சரியான விதத்தில் பிணைக்கிறது. உள்ளே விழும் பொருள் கருந்துளைகளின் எடையைக் கூட்டுகிறது; அவை சிதைவுறும்போது கருந்துளையின் எடை குறைகிறது.(ஹாகிங்க் கதிரியக்கம்) நிகழ்வுத்தொடுவானின் அளவு மாறுகையில், அதன் உள்ளே இருப்பவருக்கு, ‘வெளி’யின் சக்தி மாறுபாடல்கள் தெரிய வருகிறதா? மிகப்பெரும் எடைகொண்ட கருந்துளையிலிருந்து, அண்ட வீக்கத்தின் மூலம் இந்தப் பேரண்டம் உருவாகியிருக்கக்கூடுமோ? குழந்தைப் பேரண்டங்கள் இருக்குமோ?

இயற்பியல், கணித மாதிரிகள் அறுதியான நிரூபணத்தைத் தரவில்லை. ரோஜர் ‘பென்ரோசின்’ (Roger Penrose) ‘பொது வடிவச் சுழற்சி அண்டவியல் (Conformal Cyclic Cosmology-CCC) இந்தக் கதிரியக்கத்தை மாறுபட்ட ‘மாதிரி’ மூலமாக அணுகியிருக்கிறது. ஆனால், தரவுகளின் மூலம் இதை மெய்ப்பிப்பது கடினம். எனவே, கருந்துளை அண்டத்தின் தாய் என அறுதியாகச் சொல்வதற்கு பல ஆய்வுகள், அதற்கேற்ற கணிதம் மற்றும் இயற்பியல் தேவை.

https://www.forbes.com/sites/startswithabang/2020/11/03/did-a-black-hole-give-birth-to-our-universe/?sh=70ed0d0e50da

(03/11/2020  அன்று ஃபோர்ப்ஸ் வெளியிட்ட ஈதன் சைகலின் கட்டுரையை ஒட்டி எழுதப்பட்டது.)

இந்து மதம் சிவ சக்தி என்றே கரும்பொருளையும், கரும் சக்தியையும் சொல்கிறது. வெளியின் புலனசைவை நடராஜப் பெருமானின் நடன அசைவுகளாகக் கொள்கிறது. முக்குணச் சலனங்களால் ஏற்பட்ட உற்பத்தியில் பேரண்டம் எழுந்தது எனவும் நம் மெய்ஞானம் சொல்கிறது. 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.