தீபாவளி சிறப்பிதழ் – வாசகர் மறுவினை

சொல்வனத்திற்கு  வணக்கம்

ராமையா எழுதிய அடைக்கும் தாழ் சிறுகதை  படித்தேன். கதை பின்னோக்கு உத்தியில் சொல்லப்பட்டுள்ளது. பேசாமலே இருந்த ப்ரியா மறதி நோய் உள்ள பாட்டியின் மூலம்  அவர்கள் வீட்டிற்குச் சென்று மாமாவின் அன்பால் பேசத் தொடங்குகிறாள். ஆனால் தன் குழந்தைக்குப் பிராமண பாஷை வந்துவிடுமோ என எண்ணிய சரவணன் ப்ரியாவை அங்கு அனுப்ப மறுத்துவிடுகிறான். ஆனாலும் ப்ரியாவின் அன்பை அடைக்கும் தாழில்லை. மாமாவின் அன்பையும் அடைக்கும் தாழும் இல்லை. கல்சர் வேற என்று மொழியும் சரவணனுக்கு பிராமணர்கள்மீது  அவ்வளவு வெறுப்பு வரக் காரணம் கதைக்குள் வலுவாக இல்லாதது பெருங்குறைதான்.

பாவண்ணனின் இனிய நினைவு முக்கியமான ஒன்று. எல். பைரப்பாவின் பருவம் [இதுதான் பாவண்ணனுக்குச் மொழிபெயர்ப்புக்காகச் சாகித்ய அகாதமி விருது பெற்றுத்தந்தது] ஒரு குடும்பம் சிதைகிறது ஆகியவற்றைப் பற்றி நன்கு எழுதி உள்ளார். மேலும் வம்ச விருட்சம், வெட்ட வெளியில் மோதும் உடுக்கை ஒலி போன்றவற்றையும் அவசியம் வாசகர்களை வாசிக்கத் தூண்டும் விதத்தில் சுருக்கமாக அறிமுகம் செய்திருக்கிறார்.


யுவன் சந்திரசேகரின் “பொம்மை விளையாட்டு” ஒரு மாயா யதார்த்தவாதக்கதை.

தன்னால் அடிக்க முடியாததால் டெய்லர் பொம்மையை வைத்து மாயம் செய்கிறான். ஆனால் அவனே அதற்கு ஆளாகிறான். இது மாதிரி செய்பவர்கள் வீட்டில் ஒரு குறை இருக்கும். அதுதான் அவன் மனைவி. இறுதியில் சின்னக்காளையும் அதேபோல மாண்டு போகிறான். எல்லாமே மாயம்தான். ஆனால் நம்பும்படி எழுதி உள்ளதுதான் யதார்த்தம். வருணனைகள் அபாரம். இடையில் வினோதினியும் அவனும் விளையாடும் பொம்மை விளையாட்டு வாசகனுக்குச் சுவாரசியம் ஊட்டுகிறது. பாதித்தேர்வில் விடைத்தாளைப் பிடுங்கியது என்ற உவமை அற்புதம்.

மணிமாலா மதியழகனின் மனுசி இக்காலச் சூழலைப் பிரதிபலிக்கிறது. முழுவதும் எளிமையான படிக்கச் சலிப்பில்லாத கிராமத்து மொழி நடை. முன்பின் தெரியாத அஞ்சலை என்பவள் தெவ்வானைக்கு உதவுவதுதான் மனுசி யார் என்பதைக் காட்டுகிறது. அந்த நேரத்திலும் அவள் நொண்டி நாய்க்குச் சோறு வைப்பது அவள் உண்மையான மனுசி என்பதைக் காட்டுகிறது, அரசு மருத்துவமனைக்கே உள்ள வீணான கெடுபிடி, கிராமத்தாள்களிடம் காட்டும் அலட்சியம் கதையில் நன்கு காட்டப்பட்டுள்ளன. இறுதிக் கட்டம் ஒரே குழப்பம். அஞ்சலையின் கணவனும் சாக, தெவ்வானை புருசனும் சாக, தெவ்வானையும் சாக என்று எண்ணத் தோன்றுகிறது. கடைசியில் கொஞ்சம் தெளிவாக எழுதி இருக்கலாம்.

நா, வேங்கடராகவனின் “குரங்காட்டம்” கொரானா காலத்துக் கதை. இன்றைய சூழலை நன்கு படம் பிடித்துள்ளார். குரங்குகள் பெண்களைத்தாம் அதிகம் பயமுறுத்துகின்றன என்று வாசிக்கையில் குரங்கே ஒரு குறியீடுதான் என்று நினைத்தேன். அதிகார இச்சையைத் தீர்த்துக் கொள்ளுதல், காணொளிக் காட்சிகளின் அவலம், நகரம் விட்டுக் கிராமம் செல்லுதல் என்று பல்வேறு கால மாற்றங்களை விவரிக்கிறார். விவசாயி மற்றும் ஸ்மோட்டா விறபனையாளர்தாம் இப்பொழுது வீடுவிட்டு வெளியில் வேலை பார்ப்பவர் என்று படிக்கும்போது வேதனைதான் வந்தது. குரங்கு என்பது கொரானாதான். அது இப்பொழுது ஆடிக்கொண்டுள்ளது. மறைந்து ஓயும் என நினைக்கிறோம். ஆனால் கதையில் மீண்டு வருவதுபோல அது வராமல் இருக்க நாம்தான் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். இல்லையேல் குரங்கு மீண்டும் வந்துவிடும்.


Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.