காதல்

“பூமியையொத்த கிரகங்கள் நான்கு கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொன்றையும் சென்றடைந்து ஆராய, தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. உங்களுடையது நான்காவது குழு. இரண்டே பேர்தான். திறன்களின் அடிப்படையில், முதலில் தேர்வானது காமினி. மற்றொருவர் யார் என்பதைக் காமினியே தேர்வு செய்து கொள்ளலாம். உடனே கிளம்பியாகவேண்டும். நம்மிடம் நேரம் அதிகம் இல்லை,” என்றார் குழு ஒருங்கிணைப்பாளர் ப்ரகாஷ்.

“நான் ரோவானைத் தேர்வு செய்கிறேன்” என்றாள் காமினி.

ப்ரகாஷ் தன் கையிலிருந்த பட்டியலை எடுத்து ஒரு முறை மேலிருந்து கீழாகப் பார்த்தார். அதில் ரோவானின் இடம் 8 என்றிருந்தது.

“காமினி, ராங்க் (Rank) பட்டியலில் உன் இடம் ஒன்று. ரோவான் எட்டாம் இடம். இடையில் ஆறு பேர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரை…..” என்று இழுக்க,

“என்னுடன் பயணிப்பவர் யார் என நான் தேர்வு செய்து கொள்ளமுடியும் என்று நீங்கள்தானே சொன்னீர்கள்” என்றாள் காமினி.

“ஆமாம்” என்றார் ப்ரகாஷ்.

“என் தேர்வு ரோவான்தான்” என்றாள் காமினி மீண்டும் அழுத்தம் திருத்தமாக.

“இது விண்வெளியில் ஒரு தேடல், காமினி. விண்வெளிப் பயணம் எத்தனை ஆபத்தானது என்பதை நான் சொல்லி நீ புரிந்துகொள்ள வேண்டுமென்பதில்லை. இந்த விதமான பயணங்கள் சவாலானது. சிக்கல்கள் நிறைந்தது. இங்கே தகுதியைப் பார்ப்பதுதான் சரியான தேர்வாக இருக்கும். அதை விட்டுவிட்டு….” என்ற ப்ரகாஷ், தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு.

“ரோவானின் இடம் 8. அவனை விட தகுதியான ஆறு பேர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரை நீ தேர்வு செய்யலாமே?” என்றார் ப்ரகாஷ்.

“மிஸ்டர் ப்ரகாஷ், நாங்கள் செல்ல வேண்டிய கிரகம் எத்தனை தூரத்தில் இருக்கிறது?”

“சுமார் முப்பது ஒளி ஆண்டுகள்”

“ஒரு வேளை, அந்தக் கிரகம் மனிதப் பிழைப்புக்கு ஏற்றதாய் இருந்தால், நாங்கள் உங்களுக்குத் தகவல் சொல்லி நீங்கள் அங்கே வர சுமார் தொண்ணூறு ஆண்டுகாலம் ஆகும்தானே?”

“ஆம்”

“கிட்டத்தட்ட நூறாண்டு காலத்தை நான் ஏன் வீணடிக்க வேண்டும்? பூமியிலேயே இருப்பின், யாரையோ திருமணம் செய்து பிள்ளை குட்டி பெற்றெடுத்து வளர்த்து ஒரு நாள் மரணித்து என் பெயர் சொல்ல, என் வாரிசுகளை விட்டுச்சென்றிருப்பேன். விண்வெளிப் பயணத்தால் இதையெல்லாம் நான் ஏன் தவற விடவேண்டும்? நான் மணம் செய்துகொண்டால் யாரை மணம் செய்வேனோ அவரே அங்கு இருந்துவிட்டால் நான் என் வாழ்க்கைப் பயணத்தையும் அங்கேயே அப்படியே தொடரலாம்தானே?”

“ஆம். இதை நான் பேசலாமா என்பது தெரியவில்லை. ரோவான் என்னால் பயிற்சி அளிக்கப்பட்டு உருவாக்கப்பட்டவன். ஆகையால் அவன் பொருட்டு பேசும் உரிமை எனக்கும் உள்ளது. ஆகையால் பேசுவது சரியாக இருக்குமென்று நம்புகிறேன். நீ ரோவானைக் காதலிப்பது நிறுவனத்தில் உள்ள எல்லோருக்கும் தெரியும். ஆனால், ரோவான் எப்போதுமே உன்னைக் காதலிப்பதாக இதுவரையிலும் சொல்லவில்லை. “

“தெரியும். அவன் வேறு எந்தப் பெண்ணையுமே காதலிக்கவில்லை. அவனுடன் கடந்த மூன்று வருடங்களாக நானும் வேலை செய்திருக்கிறேன். இந்த மூன்றாண்டுகளில் அவனுடன் ஒரு நெருக்கமான உறவை உருவாக்கிக்கொள்ள அனேகம் முறை முயன்றிருக்கிறேன். இதுகாறும் அவன் தன் எல்லைகளைத் தாண்டியதில்லை. சராசரி ஆண் பயன்படுத்திக் கொண்டிருக்கக்கூடிய எத்தனையோ தருணங்களை அவன் வெறும் புன்னகையால் கடந்திருக்கிறான். அதனால்தான் அவனை நான் தேர்வு செய்கிறேன். இந்த முப்பது வருட காலமும் அவன் என்னுடன் பழக நேர்ந்தால் அவனுக்கும் வேறு வழி இல்லாது போகும். என்னை அவனுக்கு நிச்சயம் பிடித்துவிடும். அவனே என்னைக் காதலிப்பான். அதைத்தான் நானும் எதிர்பார்க்கிறேன். என்னுடன் பயணிக்க, அவன்தான் என் தேர்வு,” என்றாள் காமினி.

ப்ரகாஷ் காமினியைப் பார்த்த பார்வையில், இமைகள் இமைக்க மறந்தன.

‘உனக்கு அவனைப்பற்றித் தெரியாது. அவன் ஒரு……’ என்று சொல்ல நினைத்த ப்ரகாஷ்,

“அவன் திமிர் பிடித்தவன். உனக்கு வாழ்த்துகள்” என்று மட்டும் சொன்னபோது, காமினி ப்ரகாஷை நிச்சயமில்லாமல் ஊர்ஜிதமில்லாமல் பார்த்தாள்.


அடுத்து வந்த சில வாரங்களில் டார்க் (DARK) என்று பெயரிடப்பட்ட விண்வெளிக் கப்பல் ஒன்று காமினியையும் ரோவானையும் இவர்களுக்கு உதவவென்றே தயாரிக்கப்பட்ட ஆன்ட்ராய்டு மாடல் (TARS) டார்ஸையும் சுமந்துகொண்டு விண்வெளியின் அடர் இருளில் வழுக்கிச்சென்றது.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஒருவர் மாற்றி ஒருவராக உறங்கினார்கள். அளவாக உணவருந்தினார்கள். விண்வெளிக் கப்பலின் ஜிம்மில் உடற்பயிற்சி செய்தார்கள். பொத்தலான கருப்புக் குடையினூடே தெரியும் வெளிச்சப் புள்ளிகள் போன்ற விண்வெளியை வெறித்துப் பார்த்தபடியே தேனீர் அருந்தினார்கள். அந்தப் பயணத்தில் ரோவானை எப்படியேனும் ஈர்த்து, அவன் வாயாலேயே அந்த மூன்று வார்த்தைகளை வரவழைத்துவிடத் தீவிரமான திட்டமொன்றைத் தயாரித்திருந்தாள் காமினி.

அதன் பிரகாரம், ரோவானின் அறைக்கு இன்டர்காமில் அழைப்பு வர, ரோவான் அதை எடுத்தான்.

“ரோவான், எனக்குக் கொஞ்சம் உன் உதவி வேண்டும். என் அறைக்கு வருகிறாயா?” என்றாள் காமினி.

“ஏன்? என்ன விஷயம்?”

“இந்தக் கப்பலில் உள்ள ஆடைகள் எனக்குப் பிடிக்கவில்லை. எல்லாமும் சாயம் போய், நிறங்களே இல்லாமல் வெறுப்பாக இருக்கிறது. ஆகையால், எனக்கே எனக்கென்று ஆடைகள் செய்துகொள்ள இருக்கிறேன். அதற்கு கொஞ்சம் உதவி வேண்டும்.”

“என்ன உதவி?”

“கேள்விகள் மட்டும் கேட்டுக்கொண்டே இருப்பாயா? அல்லது உதவியும் செய்வாயா?”

ரோவான் அழைப்பைத் துண்டித்துவிட்டு காமினியின் அறைக்கதவின் முன் நின்றான். சன்னமாகத் தட்டினான். காமினி கதவு திறந்தாள். டிஷர்டும், முட்டிவரை வருவதான ஸ்கர்டும் அணிந்திருந்தாள்.

“உனக்கு ஆடைகள் தைக்கவெல்லாம் தெரியுமா?” என்றான் ரோவான்.

“என்ன அப்படிக் கேட்டுவிட்டாய்? நான் ஓர் ஆடை வடிவமைப்பாளரும்கூட” என்றவள், அளவெடுக்கும் நாடா ஒன்றை எடுத்து, ரோவானிடம் கொடுத்துவிட்டு,

“என் மார்பளவை அளக்க உதவி செய்” என்றவாறே, தன் இரு கைகளால், கூந்தலைத் தலைக்கு மேல் உயர்த்தி, ரோவான் முன் மார்பை விடைத்து நிமிர்த்தி நின்றாள்.

“அதானே பார்த்தேன்” என்றான் ரோவான்.

“வேறு ஏதாவது எதிர்பார்த்தாயா?”

“ஆம். வெள்ளைத் துணி. மார்பின் குறுக்கே….”

“அது பழைய சீன். அதுபோல் நிறைய திரைப்படங்களில் பார்த்தாகிவிட்டது. அதுதான் புதியதாக முயற்சித்தேன்…”

ரோவான், அளவெடுக்க உதவும் நாடாவை அவளிடமே திருப்பித் தந்துவிட்டு, வாசலை நோக்கி நடக்க முயல,

“நில்!!” என்று கூவினாள் காமினி.

ரோவான் என்ன என்பதாய்த் திரும்பிப் பார்க்க,

“ஆர் யூ கே? (Are you gay?)” என்றாள் காமினி.

ரோவான் சரேலென அவளை அண்மித்து இரு கைகளால் பூப்போல் தூக்கிப் படுக்கையில் வீசினான். அந்தப் பஞ்சு மெத்தை அவளை தூக்கிப்போட்டு காட்ச் பிடித்துக்கொண்டது. பின் அவள்மீது விழுந்தான். படர்ந்தான். மெல்ல அவள் இதழ்களில் முத்தமிட்டான்.

“இப்போது நம்புகிறாயா? நான் கே இல்லை என்று?”

“இல்லை. இக்காலத்தில் முத்தமெல்லாம் ஒரு பொருட்டே இல்லை” என்றாள் காமினி. இதழ்களில் ஒரு விஷமப் புன்னகை.

“இருப்பினும், நீ என்னை அதிகம் அறிந்தவளில்லை. அதற்குள் இத்தனை நெருக்கம், ஒரு ஆணுடன்….” என்று ரோவான் இழுக்க,

“நான் ஒரு Sapio-Sexual. என் சராசரி வேகத்துக்கு இதுவே தாமதம்தான். உன்னைப் பற்றி நிறுவனத்தில் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பது தெரியும்.”

“என்ன பேசுகிறார்கள்?”

“நீ ஒரு அதி புத்திசாலி என்று.”

ரோவான் மெல்லச் சிரித்தான்.

“திமிர் பிடித்தவன் என்று”

“இதை யார் சொன்னார்கள்?”

“அது அனாவசியம்.”

“சரி. ஆனால், என் திமிர்த்தனம், என்னை உனக்குப் பிடிக்காமல் செய்ய வைக்கத்தானே வேண்டும்?”

“அப்படி இல்லை. திமிர்த்தனம் மீதான என் பார்வை வேறு. அறிவு இருக்கும் இடத்தில் செருக்கு இருக்கும். ஆனால், இந்தச் செருக்குதான் ஒரு கடிவாளம்போலச் செயல்படும். உன் விஷயத்திலும் அதுதான் நடந்திருக்கிறது. நீ இத்தனை காலமும் கைபடாத ரோஜாவாக இருக்கிறாயெனில் அதற்குக் காரணம் அந்தக் கடிவாளம்தான். எனக்கு விர்ஜின் பயல்களைப் பிடிக்கும். தவிரவும், உன் போன்ற அதிபுத்திசாலிகளைக் கண்டால் இப்படியெல்லாம் நடந்துகொள்ளும் அளவிற்குப் பிடிக்கும். விளைவுகளைப் பற்றி கிஞ்சித்தும் கவலை இல்லை. தவிரவும் இன்னும் முப்பது வருடம் நாம் ஒன்றாகப் பயணிக்க இருக்கிறோம். உனக்கும் என்னைவிட்டால் வேறு மார்க்கமில்லை. பேசாமல் காதலிக்கலாமே?” என்றாள் காமினி தொடர்ந்து.

ரோவான் தன் விரல்களை அவளின் டிஷர்டுக்குள் செலுத்தி மார்புக் கச்சையை துவளச் செய்தான். ஒரு டென்னிஸ் பந்துபோல் அவள் மார்பு குலுங்கிச் சரிவது டிஷர்டின் ஊடே தெரிந்தது.

“இப்போதாவது நான் gay இல்லை என்று….” என்று ரோவான் கேள்வியாய் இழுக்க,

“வாய்ப்பே இல்லை… நேரத்தை வீணடிக்காதே ரோவான்” என்றாள் காமினி.

இதற்கு மேல் கண்ணியமாவது, கருமாந்திரமாவது என்கிற ஸ்திதியில் ரோவான் தன் நரம்புகளை ஆட்கொண்ட உணர்வுகளுக்கு தன்னையே ஒப்புக்கொடுக்க, காமினி அந்த மெத்தையில் முழுவதுமாக கலைந்தாள்.


விண்வெளிக்கப்பல் பால்வெளி மண்டலத்தின் இருளில் மெல்ல வழுக்கிச் சென்றுகொண்டிருந்தது. அண்டவெளியில், எவ்விதப் பிடிமாணமும் இல்லாமல், விசைகளைச் சமன் செய்வதன் மூலமே பயணிக்கும் கப்பலை, TARS செலுத்திக்கொண்டிருப்பதை மேற்பார்வை பார்த்துக்கொண்டிருந்தான் ரோவான்.

“ஒரு பெரிய கிரகத்தை அண்மிக்க இருக்கிறோம். நம் பயணத்தின் நோக்கத்திற்கென இந்த விண்கப்பல் அந்தக் கிரகத்தை ஸ்லிங்ஷாட் (Slingshot) செய்ய இருக்கிறது. இந்த கிரகத்தை ஸ்லிங்ஷாட் செய்து கடந்தால் மட்டுமே நாம் செல்ல வேண்டிய கிரகத்திற்கு நேர் கோட்டில் வருவோம். அதன் பிறகு ஒளியின் வேகத்துக்கு விண்கப்பலின் வேகத்தை மாற்றிக்கொள்ளலாம். ஸ்லிங்ஷாட்டின்போது கிரகம் மிக அருகாமையில் பார்க்கக் கிடைக்கும்,” என்று TARS உரத்து அறிவிக்க, இருவரும் திரும்பி ஜன்னலைப் பார்த்தார்கள்.

“இந்த விண்கப்பல் E45 கிரகத்தைச் சுற்றி slingshot அடிக்க இருக்கிறது” என்றான் ரோவான்.

“நாம் ஒன்று செய்யலாம். Slingshot அவகாசம் 48 மணி நேரங்கள் இருக்கிறது. இந்த இரண்டு நாட்களுக்குள் E45 கிரகத்திற்கு ஒரு visit போகலாமா? இந்த விண்வெளி ஓடத்தையே பார்த்துக்கொண்டிருக்கச் சற்று வெறுப்பாக இருக்கிறது. இத்தனை தூரம் வந்துவிட்டோம். மேலும் Slingshot நடக்கையில் சும்மா வெட்டியாக விண்கப்பலிலேயே சூரியக் குளியல் எடுப்பானேன்? இறங்கித்தான் பார்க்கலாமே. பார்த்ததும் விண்கப்பலுக்கே திரும்பிவிடலாம்,” என்றாள் காமினி.

ரோவான் மறுக்கும் தொணியில் எதையோ சொல்ல வாயெடுக்க,

“மறுக்காதே ரோவான். இந்த உலோகக் கூட்டுக்குள் எத்தனை காலம் அடைந்தே கிடப்பது. ப்ளீஸ்” என்றாள் காமினி கெஞ்சும் தொணியில்.

லேசாகச் சிரித்துவிட்டு ரோவான் ஆமோதிப்பாய்த் தலையசைக்க உற்சாகமாய்க் கூவினாள் காமினி.

விண்கப்பல் பாதையிலிருந்து விலகி, E45 கிரகத்தை நோக்கிப் பாய்ந்தது.

E45 கிரகத்தில் பூமியைப்போல் ஈர்ப்பு விசை என்ற ஒன்று ஓரளவிற்கு இருந்தது. கிரகத்திற்கென ஒரு வளிமண்டலத்துடன் அவ்வளிமண்டலத்தில் ஆக்ஸிஜன், ஹைட்ரஜன், நைட்ரஜன், சிலிக்கானுடன் கார்பனும் இருந்தது. கிரகத்திற்கென நிலவென்று ஏதும் இருக்கவில்லை. ஒரு நாள் என்பது சுமார் 12 மணி நேரமாக இருப்பதாக TARS அறிவித்தது.

விண்கப்பல் மெல்ல E45 கிரகத்தில் தரையிறங்கியது.

“விண்கல உடை கட்டாயம். ” என்றான் ரோவான்.

முகம் முழுவதும் புன்னகையாய், கண்களில் காதலுடன், காமினி தன்னை Space suitற்குள் திணித்துக்கொண்டு, ரோவானைத் தொடர்ந்து கிரகத்தில் இறங்கினாள்.

சூரியனின் வெளிச்சம் முகக்கவசத்தில் அடித்து refract ஆனதில் கண்கள் கூசின. E45 கிரகத்தில் கண்ணுக்கெட்டிய தொலைவுவரை பச்சை, மஞ்சள், நீலம், சிவப்பு என விதம் விதமான நிறங்கள் நிலப்பரப்பெங்கும் விரவிக் கிடப்பதாகத் தோற்றமளித்தது.

“வாவ்!! அழகழகான நிறங்கள்!.. இப்படி ஒரு கிரகத்தை எப்படி கெப்ளர் தவற விட்டிருக்கும்?” ஆச்சர்யத்தில் கூவியபடியே காமினி அந்த நிறங்களடர்ந்த நிலப்பரப்பை அண்டினாள். அவளைத் தொடர்ந்து சிவபாலனும் ரோவானும் அந்த இடத்தை அண்டினார்கள்.

“திசை! எந்தத் திசையில் பூமியைப் போன்ற கிரகங்களைத் தேடுவது என்று ஒன்று இருக்கிறதல்லவா” என்றபடியே நடந்தான் ரோவான்.

அங்கிருந்த செடிகளை, ஃபைபர் கையுறைகளால் அவர்கள் ஆர்வமுடனும் வாஞ்சையுடனும் தீண்டிப் பார்த்தார்கள். வேறொரு கிரகத்தில் முளைத்த செடிகள்!!

செடிகளூடே தெரிந்த சின்னஞ்சிறிய விலங்குகள், அவற்றின் தோற்றம் ஆச்சர்யமூட்டின.

ஒரு தவளை முதலில் தவளையாகத் தோன்றியபடியே மெல்ல மெல்ல வழுவழுப்பான சர்ப்பமாக உருவெடுப்பதை ஆச்சரியமுடன் அவர்கள் மூவரும் கண்ணுற்றார்கள். பின் சற்றைக்கெல்லாம் அதுவே மெல்ல மெல்ல ஒரு முதலையாகியது. பின் மெல்ல மெல்ல, அந்த முதலையின் வால்பகுதியிலிருந்து ஒரு சிறுத்தை உருவாகி அது, முதலையின் கழுத்தைக் கவ்வித் தன் உணவாக்க முயல்வதைப் பார்க்க வேடிக்கையாகவும் , வினோதமாகவும் இருந்தது. பின் மெல்ல மெல்ல சிறுத்தை முதலையை உண்ண, அதுவே பின் மாறுபாடடைந்து மிகப்பெரிய ஓணாணாகி மரமொன்றில் ஏறிக்கொள்ள, அந்த மரம் மெல்ல மெல்ல ஒரு பெரிய கொடியாகி துவண்டு சரிந்து மண்ணுக்குள் ஊடுறுவத் துவங்கியது.

துவக்கத்தில் அவர்கள் முகத்திலிருந்து ஆச்சர்யம், பூரிப்பு, நேரம் செல்லச்செல்ல வடிந்து, மெல்ல மெல்ல இறுகியது.

“இது மக்னோலியா (Magnolia) தானே?” என்று ஒரு செடியைக் கையிலெந்தியபடி, காமினி சந்தேகமாய்க் கேட்க,

“அது மக்னோலியா (Magnolia) தான். ஆனால், அதன் இன்னொரு பகுதியைப் பார்” என்றான் ரோவான் ஒரு குறிப்பிட்ட செடியை, அதன் தண்டை, இலைகளை ஆராய்ந்தபடி. தன்னிடமிருந்த ஒரு சிறிய கருவியினுள் அந்தச் செடியின் இலையை செலுத்தி சில சோதனைகளைச் செய்துவிட்டு

“ஒரு பக்கம் ஹை மாஸ், லோ டென்சிட்டி(high mass per area and low vein density). அதே செடியின் இன்னொரு பக்கம் லோ மாஸ்,ஹை டென்சிட்டி (low mass per area and high vein density)” என்றறிவித்தான் ரோவான்.

“அதனால்?”

“தாவரங்களின் இலை நரம்புகள் லோ டென்சிட்டியிலிருந்து ஹை டென்சிட்டிக்கு வர ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகும்”

“இங்கே பிராணவாயு இருக்கிறது ரோவான். சுவாசிக்கலாம் என்றுதான் தோன்றுகிறது. விண்வெளி கவசத்தை கழற்றி விடட்டுமா?”

“வேண்டாம்.”

“ஏன்?”

“பூமியில் சுமார் நானூற்றைம்பது கோடி ஆண்டுகளுக்கு முன் இருந்த செடிகள் மிகவும் மெதுவாக வளர்கிற செடிகளாக இருந்தது. விண்கல் ஒன்று விழுந்து டினோசார்கள் அழிந்த பிறகு அப்படியே பரிணாம வளர்ச்சி கண்டு மிகவும் வேகமாக வளர்கிற செடிகள், மரங்களாயிற்று. ஆனால், நாம் இங்கே பார்க்கிற செடிகளில் இவ்விரண்டு தன்மைகளுமே ஒரே செடியின் இரண்டு வெவ்வேறு இயல்பாக இருக்கின்றன. இப்படி இருக்க ஒரே ஒரு சாத்தியம்தான் இருக்கிறது” என்ற ரோவான்,

“இங்கே எல்லாமுமே ஒரு தொடர்ச்சியான (continuous-mutation) பிறழ்வில் சிக்குண்டிருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு நொடியும் வேறொன்றாகிக்கொண்டே இருக்கிறது. புரியும்படியாகச் சொல்ல வேண்டுமானால், ஒரு செல் உயிரி, வால் முளைத்துச் சர்ப்பமாகி, செதில்கள் முளைத்து மீனாகி, கால்கள் முளைத்து முதலையாகி, மரங்களில் தாவும் குரங்காகித் தளர்ந்து விழுந்தால் எப்படி இருக்கும்? அதுபோல” என்றான் தொடர்ந்து.

“ஆராய்ச்சிக்கு சாம்பிள் எடுக்கப் பயன்படும் குடுவைகள் எடுக்க மறந்துவிட்டேன். நான் போய் விண்வெளிக் கப்பலிலிலிருந்து எடுத்து வருகிறேன்” என்றாள் காமினி.

“இல்லை. நீ இருக்க வேண்டும். நீதானே காதல் குறித்துப் பேசினாய்” என்றான் ரோவான்.

காமினி புரியாமல் ரோவானை ஏறிட்டாள்.

“மனித உணர்வுகளுள் தலையாயது அன்பும் அதனால் உண்டாகும் காதலும். இவற்றுக்கு என்ன அடிப்படை என்று நினைக்கிறாய்?” என்றான் ரோவான்.

“ஈர்ப்பு”

“இல்லை. (Time lapse between subsequent mutational changes). அதாவது பிறழ்வு மாற்றங்களுக்காகும் கால அவகாசம். உதாரணமாக நீ நேற்று பிறந்து, இன்று வயதுக்கு வந்து, நாளை கிழவனாகி இறக்க நேர்ந்தால் உன் வாழ்க்கை எப்படி இருக்கும். அதில் காதல் என்ற ஒன்று இருக்குமா? இருந்தால் எத்தனை நேரம் இருக்கும்? எத்தனை நொடிகளுக்கு இருக்கும்?”

“கிராவிட்டியை (Gravity) ஐன்ஸ்டைனின் சார்பியல் கோட்பாட்டை (Theory of Relativity) வைத்து விளக்கியதைப் போலிருக்கிறது நீ சொன்னது. குழந்தையாகி, குமரியாகி, வயோதிகம் எய்திட வெறும் மூன்றே நாட்களா? குழந்தைப் பருவம் என்னவென்று புரியும் முன்பே குமரியாகி, குமரப் பருவம் எத்தகையது என்பது விளங்கும் முன்பே வயோதிகமாகி ,அது என்னதென்று தெரியும் முன்பே மரணமா?”

காமினியின் கண்கள் இடமும் வலமுமாய் அசைந்தபடியே இருந்தன.

“ஆம். அன்பு நொடிப்பொழுதில் உருவாவது. காதல் என்பது அன்பு தொடர்ந்து ஒருவர்மீது செலுத்தப்படுவது. அப்படி என்றால் என்ன? பார்வைக் கோணங்கள் பலவற்றின் தொகுமான விளைவாக ஒருவர்மீது ஒரு நல்ல அபிப்ராயம் உருவாவது, அது அர்த்தமுள்ளதாவது, அது நாளடைவில் பிடித்துப்போவது, அதனுடன் நெருக்கம் உருவாக்கிக்கொள்ள முனைவது. இது எல்லாமும் கால அவகாசம் கோருபவை காமினி. காலம் ஒரு மிக முக்கியமான மேனிஃபெஸ்டேஷன்(manifestation). இந்தக் கால அவகாசமே கிடைக்காவிட்டால் என்னவாகும்?”

காமினி மெளனமானாள்.

“மனிதர்களின் நினைவடுக்கு என்பது தொடர்ச்சியாக, படிப்படியாக, ஒவ்வொரு புள்ளியாகச் சேர்த்து இணைக்கப்பட்ட ஒரு நேர்க்கோடு. மொழியின் மூலமாக, ஓலைச்சுவடிகளின் வாயிலாக, காகிதங்களின் வாயிலாக, கல்வெட்டுக்களின் வாயிலாகப் பரிணாம வளர்ச்சி கண்டுவிட்ட ஒரு வெறும் கருவி. ஆயுள் நீடிக்க நீடிக்கப் பற்பல இயக்கங்களில் நாம் நம்மை ஈடுபடுத்திக்கொள்ள முடிகிறது. அதன் மூலம் எண்ணிலடங்கா நினைவுகளைச் சேமித்துக்கொள்கிறோம். இந்த நினைவுகளின் பக்கவிளைவாக உருவாகும் பலவற்றில் காதலும் ஒன்று. ஆக, காதலுக்கு அடித்தளம், கால நீட்டிப்பு என்றாகிறது. ஆனால், அது மனிதர்களாகப் பார்த்து உருவாக்கிக்கொண்ட ஒரு சாத்தியம்தானே, Just another possibility!!” என்றான் ரோவான்.

“ஒரு ஈசலை எடுத்துக்கொள். அதன் மொத்த வாழ்நாள் 24 மணி நேரங்களுக்கும் குறைவே. இந்த 24 மணி நேரத்துக்குள் அதனால், எப்படிப்பட்ட அனுபவங்களைப் பெற்றிட முடியும்? இரை தேடுவதிலும், புணர்வதிலுமே அதன் காலம் கழிந்துவிடும். அதற்கு காதலென்றால் என்னவென்று தெரியுமா? இல்லை. நாம் ஆதிவாசிகளாக இருந்த காலகட்டத்தை எடுத்துக்கொள். மருத்துவமின்மையால், கருவிகளின்மையால் நம் சராசரி ஆயுள் இருபது ஆண்டுகளுக்கும் குறைவாக இருந்தது. இப்படியொரு குறுகிய கால இடைவெளி காதல் என்கிற உன்னத உணர்வை எத்தனை ஆழம் வளர்க்க உதவியிருக்கும்? இவை எல்லாவற்றையும் வைத்துப் பார்க்கும்போது, காதல், ஒரு பூமத்திய உணர்வு நிலைப்பாடாக மட்டுமே இருக்க முடியும் என்றே நான் கணிக்கிறேன்” என்றான் ரோவான் தொடர்ந்து.

“அப்படியானால், interstellarல் காதலே எல்லாவற்றையும் இணைக்கும் சக்தி என்று சொன்னாரே Christopher Nolan? அது பொய்யா?” என்றாள் காமினி.

“மனித இனம் பிழைக்கும் கிரகங்களை மட்டும் கணக்கில்கொண்டு அப்படிச் சொல்லியிருந்தால் மட்டுமே அவரின் அந்தக் கருத்துக்கு நான் உடன்படுகிறேன். மற்றபடி, பிறழ்வுகளுக்கிடையிலான கால இடைவெளி மிக மிகக் குறைவாக இருக்கும் கிரகங்களில் இது சாத்தியமில்லை என்றே நினைக்கிறேன்” என்றான் ரோவான்.

“இந்தக் கிரகம் மிக அழகாக இருக்கிறது. நாம் இங்கே ஒரு நாள் தங்கினால்தான் என்ன? ஒளியின் வேகத்தில் முப்பதாண்டுகள் பயணித்து நாம் சென்று சேர வேண்டிய இலக்கை அடைகையில் இந்த ஒரு நாள் நமக்கு ஒரு பெரும் பொருட்டாக இருக்கப்போவதில்லை அல்லவா?” என்றாள் காமினி.

ரோவானின் மன ஒப்புதலுடன் அவர்கள் இருவரும் அந்தக் கிரகத்தில் ஒரு நாள் தங்குவதென்று ஒப்பந்தம் ஆனது. கிரகத்தில் நிலை நிறுத்தப்பட்டிருந்த விண்கப்பலின் எல்லா இயக்கங்களையும் சரிபார்த்துவிட்டு, எல்லாம் சரியாகத்தான் செல்கிறது என்பதனை ஊர்ஜிதம் செய்துவிட்டு, ஓய்வெடுக்கும் பொருட்டு ரோவான் தன் அறைக்குள் நுழையவும் காமினி அவன் அறையை அண்மிக்கவும் சரியாக இருந்தது. ரோவானின் அறைக் கதவுகளைத் தட்டினாள் காமினி. ரோவான் கதவு திறந்தான்.

“என்ன?” என்றான்.

காமினி மயக்கமாக ரோவானை பார்த்தபடி அவன் மார்பில் சரிந்து விழ, ரோவான் சட்டென அவளைத் தாங்கி இரு கைகளில் ஏந்தி தன் படுக்கையில் கிடத்தினான். காமினியின் முகத்தை இடமும் வலமுமாக உலுக்கினான். காமினி எழாது இருக்க, படுக்கைக்கு அருகிலிருந்த கூஜாவிலிருந்து நீரை உள்ளங்கையில் ஏந்தி காமினியில் முகத்தில் தெளிக்க, காமினி கண் விழித்தாள்.

“மறுபடியும் நடிப்பா? சென்ற முறை என்னை கே (gay) என்று விளித்து உசுப்பேற்றி உன் காரியத்தைச் சாதித்துக்கொண்டாய். இந்த முறை என்ன சொல்லப்போகிறாய்? நான் மனித ஜென்மமே இல்லை என்று சொல்லப்போகிறாயா?” என்றான் ரோவான் வேடிக்கையாக.

காமினி புரியாது விழிக்க, TARS காமினியின் படுக்கைத் துணியை தன் இயந்திரக்கரங்களில் ஏந்தியவாறு வந்து,

“காமினி கர்ப்பமாக இருக்கிறாள். இரண்டு மாதக் கரு. வேடிக்கை என்னவென்றால், பத்து மணி நேரங்களுக்கு முன் E45 கிரகத்தில் தரையிறங்கும் முன்னான காமினியின் பயோ-சூட் (Bio-suit) சோதனையில் அவள் கர்ப்பமாய் இருக்கவில்லை” என்றது.

காமினியும், ரோவானும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

“சில மணி நேரத்தில் இரண்டு மாதக் கருவா?!” என்று வாய் பிளந்த காமினி ரோவானிடம் திரும்பி,

“இந்த கிரகத்தில் தரையிறங்கி மிகப்பெரும் தவறைச் செய்துவிட்டோம்” என்றவளின் முகத்தில் அதிர்ச்சியும் மிரட்சியும் பதட்டமும் மிகையாகப் பரவி இருந்தது.

– ராம்பிரசாத்

4 Replies to “காதல்”

  1. //அன்பு நொடிப்பொழுதில் உருவாவது. காதல் என்பது அன்பு தொடர்ந்து ஒருவர் மீது செலுத்தப்படுவது. அப்படி என்றால் என்ன? பார்வைக்கோணங்கள் பலவற்றின் தொகுமான விளைவாக ஒருவர் மீது ஒரு நல்ல அபிப்ராயம் உருவாவது, அது அர்த்தமுள்ளதாவது, அது நாளடைவில் பிடித்துப்போவது, அதனுடன் நெருக்கம் உருவாக்கிக்கொள்ள முனைவது. இது எல்லாமும் கால அவகாசம் கோருபவை காமினி. காலம் ஒரு மிக முக்கியமான மேனிஃபெஸ்டேஷன்(manifestation).//

    அருமை.. வாழ்த்துக்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.