சி.எஸ். லக்ஷ்மியுடன் நேர்காணல்; தமிழாக்கம்: இலா
Maya Dodd and Nidhi Kalra, Ed., Exploring Digital Humanities in India: Pedagogies, Practices and Institutional Possibilities (Routledge, 2021) நூலில் உள்ள நேர்காணல். (பக்கம்:141-154)
நேர்காணல் தேதி: 11 ஃபிப்ரவரி 2018
*** *** ***

The Sound & Picture Archives for Research on Women அல்லது SPARROW என்ற பெயர் கொண்ட ஆவணக்காப்பகம், மகளிர் பயில்வுகள் துறையின் மதிப்பிற்குரிய பாட்டிமார்கள் என்று அறியப்படும் டாக்டர் நீரா தேசாய், டாக்டர் மைத்ரேயி கிருஷ்ணராஜ், டாக்டர் வீணா மஜும்தார் இந்த மூவரில் முதல் இருவருடன் இணைந்து சி. எஸ் லக்ஷ்மி மும்பாயில் 1988ல் ஆரம்பித்த நிறுவனம். சுதந்திரப் போராட்டம், முற்போக்கு இயக்கங்கள், பெண்ணிய இயக்கம், அம்பேத்கர் இயக்கம், தலித் பெண்களின் வாழ்க்கை அனுபவங்கள், சுற்றுச் சூழல் இயக்கம், முன்னோடி அறிவியல் பயில்வுகள், வனவாசிகளின் வாழ்க்கையும் போராட்டங்களும், பண்டைய மருத்துவ முறைகள், மரபு சார்ந்த முறைகளில் சிகிச்சை அளிப்பவர்களும் பாரம்பரிய மருத்துவர்களும், இனவாதம், வன்முறை மற்றும் மனித உரிமைகள், இலக்கியம், கலை, கல்வி மற்றும் பண்பாடு இவ்வாறு சரித்திரத்தின் பல களங்களில் உள்ள பெண்களின் சரித்திரத்தையும் செயல்பாடுகளையும் ஆவணப்படுத்தும் அரிய முயற்சி இது. பலதரப்பட்ட ஊடக வடிவங்களில் ஸ்பாரோவின் ஆவணங்கள் உள்ளன. ஆராய்ச்சி ஆதாரத்துடன் ஸ்பாரோ ஆவணப்படங்களைத் தயாரித்திருக்கிறது. பல மொழிகளில் புத்தகங்களை வெளியிட்டும் மாணவர்களுக்காகப் பயிலரங்குகளை நடத்தியும் வருகிறது.
ஹ்யூமன்ஸ்கேப் (Humanscape, February 2004, pp.24-25) என்ற பத்திரிகையில் சி.எஸ். லக்ஷ்மி மேம்பாட்டுத் தறுவாயில், இத்தகைய பெண்கள் ஆவணக்காப்பகத்தை நிறுவுவதில் உள்ள சவால்கள் குறித்துப் பேசியிருக்கிறார். பெண்களுக்குச் சக்தியூட்டுதல் என்ற செயல்பாட்டின் அனைத்து முயற்சிகளும் விதவைகளுக்குத் தையல் இயந்திரங்களைத் தருவது, வீட்டில் காய்கறித் தோட்டம் போடுவது என்ற முறையிலேயே பார்க்கப்படுகிறது என்று அவர் கூறியிருக்கிறார். “மேம்பாட்டுக் காலத்தில் ஆவணப்படுத்துதல்” என்ற இந்தக் கட்டுரை ஸ்பாரோ எப்படிக் கற்பனை செய்யப்பட்டு உருவாக்கப்பட்டது என்பதை விவரமாகக் கூறுகிறது. அந்தக் கட்டுரையிலிருந்து ஒரு சிறு பகுதி, ஸ்பாரோ நிறுவப்பட்டு முப்பது வருடங்களுக்குப்பின் வரும் இந்த நேர்காணலுக்குச் சரியான பின்னணியாக அமையும்.
“ஸ்பாரோவை நிறுவும் எண்ணம் 1988ம் ஆண்டில் வேர்விட்டது. அதற்குமுன் தற்போது அறங்காவலர்களாக இருப்பவர்கள் பலமுறை சந்தித்து வித்தியாசமான பெண்கள் ஆவணக்காப்பகம் ஒன்றை நிறுவுவதன் சாத்தியக்கூறுகள் குறித்துப் பேசியிருந்தனர். இத்தகைய விசேஷமான ஆவணக்காப்பகத்தின் தேவையை மகளிர் பயில்வுகள் துறையில் அவர்கள் சொந்த ஆராய்ச்சியே அவர்களுக்கு உணர்த்தியிருந்தது. எல்லாவற்றையும் சேர்த்து ஓர் மைய இடத்தில் வைக்கும் பெண்கள் ஆவணக்காப்பகம் அன்று அவர்கள் மனத்தில் இருந்தது, மாறாகத் துடிப்புடன் இயங்கும் தொடர்பை ஏற்படுத்தும் ஆவணக்காப்பகம். பலரையும் இணைக்கும் பிரக்ஞையூட்டும் செயலியாகப் பெண்கள் ஆவணக்காப்பகம் உருக்கொண்டது. பொதுவாகப் பெண்கள் தங்கள் வாழ்க்கையையும் செயல்பாடுகளையும் எழுதிப் பதிவுசெய்வதில்லை என்பது உண்மையான ஒன்று. பேரக் குழந்தைகளைத் தன்னைச் சுற்றித் திண்ணையில் இருத்திக்கொண்டு நட்சத்திரங்கள் பார்த்துக்கொண்டிருக்க தன் வாழ்க்கைக் கதையையும் அனுபவங்களையும் கூறும் பாட்டியிலிருந்து (அது அவள் ஒருத்தியின் கதையாக இல்லாமல் பலரின் கதையாக உருவெடுக்கும்) பெண்களின் கதைகள் வாய்ச் சொற்களாகவே இருந்திருக்கின்றன. அன்றாட வாழ்க்கையின் அரசியலைக் கூறும் இந்தக் கதைகளைச் சேர்த்து அவற்றை ஆவணப்படுத்தி வரலாற்றின் ஒரு பகுதியாக மாற்ற எண்ணியது ஸ்பாரோ. “சாதனையாளர்கள்” அல்லது “பலியாடுகள்” இவர்களைத் தேடிச்சென்று வாழ்க்கையின் சம்பவக்கோவைகளாக ஆவணக்காப்பகம் ஒன்றை உருவாக்குவது அன்று நோக்கம். இதைவிட ஒருபடி மேலே சென்று வாய்வழி வரலாற்றை, மீண்டும் வரலாற்றை எழுதுவதற்கான சரியான முறைகளில் ஒன்றாக ஆக்குவது எங்கள் திட்டமாக இருந்தது. வாய்வழி வரலாற்றுடன் வாழ்க்கையின் பிரதிபலிப்பான படங்கள், செயல்பாடுகள், தொழில், ஊடக பிம்பங்கள், மக்கள் கதைகள், காணொலி ஆவணப் பதிவுகளாக நீளும் காட்சிப் பதிவுகள், மாணவர்களுடன் பயிலரங்குகள், திரைப்பட விழாக்கள், புகைப்பட கண்காட்சிகள் இவைகளை இணைத்து முடிவில் இவையெல்லாம் கூடிய அருங்காட்சியகம் ஒன்றை உருவாக்குதல் – இத்தகைய எண்ணங்களுடன்தான் ஸ்பாரோ மனத்தில் உருப்பெற்றது.
ஆரம்ப நான்கு ஆண்டுகளில் பல புகைப்படங்களும் மற்றவையும் சேகரிக்கப்பட்டன. இவை நண்பர்களிடமிருந்தும் ஆதரவாளர்களிடமிருந்தும் கிடைத்த நன்கொடைகளின் உதவியுடன் செய்யப்பட்டன. இத்தகைய செயல்பாடுகளுடன் நிதி நல்கும் நிறுவனங்களுக்கு நிதி உதவி கேட்டுக் கடிதங்கள் அனுப்பும் வேலையும் நடந்துகொண்டிருந்தது. கிட்டத்தட்ட எல்லா நிதியுதவி நிறுவனங்களும் உற்சாகமாகப் பதிலளித்து எங்களை ஊக்குவித்தன. ஆனால் ஆவணக்காப்பகத் திட்டம் அவர்கள் நிதிநல்கும் திட்டத்தின் வரையறைக்குள் வரவில்லை என்று கூறின. மூன்றாவது உலகம் என்று கூறப்படும் உலகத்தின் நாடுகள் குடிசைப் பகுதிகள், சுற்றுச் சூழல், பெண்களுக்குச் சட்டரீதியான உதவி, சுகாதாரப் பராமரிப்பு, கிராமப்புற மேம்பாடு போன்றவைகளைப் பற்றித்தான் யோசிக்கவேண்டும் என்ற வெளிப்படையாகக் கூறாத எதிர்பார்ப்பு இருந்தது. பெண்கள் ஆவணக்காப்பகம் ஒன்றை நிறுவுவது இந்தியாவிலோ வெளிநாட்டிலோ எந்தத் திட்டத்திலும் இருக்கவில்லை. அரசு நிர்வாகத்தில் இருந்த பலரைச் சென்று பார்த்தோம். ஒருவர் வாய்வழி வரலாறு என்றால் என்னவென்று கேட்டார். விளக்கியதும், “என்னது பெண்கள் வம்பு வரலாறா?” என்று வியந்துபோனார்.
இதுபோன்ற சராசரித்தனமான விமர்சனங்களுடன் கல்வியாளர்கள் பலர் ஆவணப்படுத்துவது என்பது சற்றே மிகைப்படுத்தப்பட்ட வாசகசாலை வேலைதான் என்று நினைத்தனர். நுண்ணிய நோக்குடைய உண்மையான ஆராய்ச்சியாளர் பொதுக் கருத்துகளையும் அவற்றைக் கோட்பாட்டுக்கு உட்படுத்தல் பற்றியும் சிந்திப்பாரேயல்லாமல் வரலாற்றை இவ்வாறு பார்க்கமாட்டார் என்ற எண்ணம் இருந்தது அனைவருக்கும். ஆவணப்படுத்தல் — ஆவணங்களை உருவாக்கும் விதம், அவற்றைச் சேகரித்து ஆராய்ச்சிக்காக அவற்றை ஆவணப்படுத்துதல் — என்பதும் ஆராய்ச்சியை உள்ளடக்கியதுதான் என்பது ஏற்கப்படவில்லை. நாங்கள் செய்வது கல்விப் புலமை சார்ந்தது இல்லை என்று நினைக்கப்பட்டாலும் ஆராய்ச்சிக்கான சம்பிரதாய ஆவணங்களிலிருந்து மாறுபட்ட ஆவணங்களை எங்கள் அமைப்பு தொடர்ந்து சேகரித்து வந்தது. ஏனென்றால் ஆராய்ச்சிக்காக உபயோகிக்கப்படும் இத்தகைய ஆவணங்கள் ஆராய்ச்சியின் நோக்கும் விதத்தையும் முறைகளையும் மொழியையும் மாற்றும் என்று உறுதியாக நம்பினோம்.
நாங்கள் முறிக்க விரும்பிய இன்னொரு செயல்பாட்டு முறை நாடு மாநிலம் என்று பிரிக்கும் கருத்துகளைத்தாம். நாடளாவிய ஒன்று டெல்லியில் இருக்கவேண்டும் என்றும் மற்றவை எல்லாம் பிரதேசங்களைச் சேரும் என்று பொதுவாக ஒரு கருத்து இருந்தது. ஸ்பாரோவை பெண்களுடன் இணைந்த நாட்டின் வரலாற்றை ஆவணப்படுத்தும் நிறுவனமாக மும்பாயில் நிறுவியது நாட்டை ஒட்டி நடக்கும் செயல்பாடுகளை மையத்திலிருந்து விலக்கும் முயற்சி என்று கூறலாம்…”
இந்த நேர்காணல் FLAME (Foundation for Liberal and Management Education) பல்கலைக்கழகத்தில் இலக்கியம் மற்றும் பண்பாட்டுப் பயில்வுகள் துறையின் மாணவர்களுக்காக எல்லோரும் அன்புடன் லக்ஷ்மி என்றழைக்கும் லக்ஷ்மி உரையாற்றியபின் எடுத்தது. தமிழ்ப் பெண்களின் கவிதை பற்றியும் அதில் உடல் எவ்வாறு இயற்கையுடன் ஒன்றி வருகிறது என்பதைக் குறித்தும் உரை அமைந்திருந்தது. இந்த நேர்காணலில் ஸ்பாரோ உருவானது பற்றியும் எண்மமாக்கல் (digitalization) மூலம் எல்லோரும் தங்குதடையின்றி அணுகத்தக்க ஆவணக்காப்பகம் பற்றியும் அதனால் உண்டாகும் நெறிமுறைகள் சார்ந்த பிரச்சனைகள் குறித்தும் பேசுகிறார்.
***

கேள்வி: முப்பதாண்டுகளுக்கும் மேலாக ஆவணப்படுத்தும் செயல்பாட்டில் இருக்கிறீர்கள். அந்த அனுபவத்தின் மூலம் பார்க்கும்போது ஆவணக்காப்பகங்களை எண்மப்படுத்துவது குறித்து உங்கள் கருத்து என்ன?
பதில்: ஆவணப்படுத்தல், எண்மமாக்கல், அனைவரும் திறக்க முடிகிற விதமாக ஆவணப்படுத்தல் என்று கூறப்படுவது இவை குறித்து இரண்டொரு விஷயங்களைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். என்ன நடக்கிறது என்றால் முற்றும் திறந்த ஆவணப்படுத்தலுக்கான தேவையை முன்வைப்பது மேற்கு நாடுகள்தாம். இந்தத் திறந்த ஆவணப்படுத்தலை நான் ஆதரிக்கவில்லை. இது எதனால் என்று சொல்கிறேன். உதாரணமாக, தன் வாழ்க்கை பற்றி — தனிப்பட்ட வாழ்வு, அதன் பாலியல் கூறுகள் என்று எல்லாவற்றையும் — என்னிடம் கூறும் இந்தியாவில் உள்ள ஒரு பெண் தொழிலாளியை நான் நேர்காணல் செய்திருக்கிறேன் என்று வைத்துக்கொள்வோம். அது ஆவணக்காப்பகத்தில் இருக்கிறது. அதைக் கணினி மூலம் படிக்கக்கூடிய விதத்தில் எண்மப்படுத்தியுமிருக்கிறோம். இது சாத்தியம்தான். இதன் சில பகுதிகளை ஆராய்ச்சிக்காகத் தருவது முடியும்; ஆனால் முழு நேர்காணலையும் இயங்கலையில் கிடைக்கும்படி செய்ய முடியாது. ஏனென்றால் நான் அதை வலையில் பதிவிட்டால் லட்சக்கணக்கானவர்கள் அதை எந்தவிதக் குறிப்பிட்ட காரணமின்றியும் படிக்க நேரலாம். பெண்ணின் வாழ்க்கை குறித்த நயமற்ற ஆர்வம் எப்போதும் பலருக்கு இருக்கும். அதனால்தான் அவள் வாழ்க்கையை அனைவருக்கும் கிடைக்கும்படி செய்து அதை ஒரு நுகர்பொருளாக மாற்ற நான் விரும்பவில்லை. அப்படிச் செய்ய எனக்கு எந்த உரிமையும் இல்லை என்றே நினைக்கிறேன். ஏனென்றால் நாங்கள் நேர்காணல் செய்யும் பெண்களிடமிருந்து இதை ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட தரவாக உபயோகிக்கவே நாங்கள் அனுமதி வாங்கியிருக்கிறோம்.
அதை நான் இயங்கலையில்[1] முழுதுமாகப் போடும்போது — அதாவது அவள் கூறியதனைத்தையும் — அதைச் சரியான ஆராய்ச்சிக்காக உபயோகிக்க முடியும். அதே சமயம் அது பரபரப்பூட்டுவதற்காகவும் ஒளிந்திருந்து மற்றவர் வாழ்க்கையைப் பார்க்கும் அனுபவத்திற்காகவும் பயன்படுத்தலாம். அதாவது மூக்கொழுகலோடு, கண்களில் கண்ணீருடன் இருக்கும் குழந்தைகளின் புகைப்படங்களை ஐக்கிய நாட்டு நிறுவனம் வெளியிடுவதுபோல அத்தகைய பெண்களின் பிம்பங்களாக இந்த நேர்காணல்கள் மாற்றப்படலாம். அத்தகைய பிம்பங்களை நான் உருவாக்க விரும்பவில்லை; அத்தகைய பிம்பங்களை மற்றவர்கள் உருவாக்குவதற்கு உடன்போகவும் விரும்பவில்லை. நாங்கள் ஒரு வலைப்பதிவு உருவாக்கி நேர்காணல்களிலிருந்து சில பகுதிகளை அதில் போடலாம். ஆனால் அவற்றைத் தரவிறக்கம் செய்ய முடியாது. எல்லோரும் அதைப் படிக்க முடியும். ஆனால் அதுவும் சரியான முறையில் உள்நுழைந்து, பதிவு செய்துகொண்டு அந்தத் தரவைப் படிப்பதற்காக ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணங்களைக் கூறுபவர்களுக்குத்தான்.
இயங்கலையில் நான் போட விரும்பாததற்கு இன்னொரு காரணம் என்னவென்றால் ஆராய்ச்சி என்பது மிகவும் எளிதான ஒன்று என்று நோக்கப்பட்டு, வாசகசாலைகளுக்கும் ஆவணக்காப்பகங்களுக்கும் யாருமே போகவேண்டிய தேவையே இல்லை என்றாகிவிடுகிறது. எல்லாமே வலைத்தளத்தில் கிடைத்துவிடுகிறது; அவை சரியான தரவுகளா என்பதை உறுதிசெய்துகொள்வதுகூட இல்லை. வேறு யாரோ ஆராய்ச்சி செய்துவிட்டு, இன்னொருவர் அதைத் தன் ஆராய்ச்சிக்குப் பயன்படுத்துவது நேர்கிறது.
இவ்வாறு நேர்வதற்குப் பல்கலைக்கழக மானியக் குழுவும் ஒரு வகையில் காரணமாகிறது. விரிவுரையாளர்களும் மற்றவர்களும் தங்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிடுவதற்கான சில விதிகளை அது நிர்ணயித்துள்ளது. அவ்விதிகளின்படி மாநில மொழியில் கட்டுரை வெளியிட்டால் 20 புள்ளிகள், இந்தியாவிலிருந்து வெளிவரும் ஆங்கில வெளியீட்டில் வெளியிட்டால் 25 புள்ளிகள் என்றிருக்கிறது. வெளிநாட்டு ஆராய்ச்சிப் பத்திரிகைகளில் வெளியிட்டால் 50 புள்ளிகள். இந்த மதிப்பெண்கள் வேலை உயர்வுக்குத் தேர்வு செய்வதில் பயன்படுகின்றன. என்னைப் பொருத்தவரை இது அபத்தமான ஒன்று. இத்தகைய வேலை உயர்வதற்கான மதிப்பெண்களைப் பெறுவதற்கானக் கட்டுரைகளை எளிதாக எழுத என் ஆவணக்காப்பகம் பயன்படுவது எனக்கு ஏற்பு இல்லை.
இன்னொன்றும் உண்டு. ஆவணக்காப்பகத்தைப் பயன்படுத்த நினைப்பவர்கள் எங்களுக்குக் கடிதம் எழுதும்போது… ‘உழைக்கும் பெண்களைப் பற்றிய ஆராய்ச்சி’, ‘உருது மொழி எழுத்தாளர்களைப் பற்றிய ஆராய்ச்சி’ அல்லது இதுபோல் வேறு ஏதாவது என்று குறிப்பிட்டு முன்கூட்டியே எழுதும்போது எங்களிடம் இருக்கும் தரவுகளை… அவை நேர்காணல்களாக இருக்கலாம் அல்லது வேறுவகைத் தரவுகளாக இருக்கலாம்… அவற்றை நாங்கள் எடுத்து வைத்திருப்போம். ஆவணக்காப்பகத்திற்கு வந்து அவற்றைப் பார்க்கலாம். ஆனால் வந்து பார்க்கவேண்டும். அதைக்கூடத் தவிர்க்க நினைக்கிறார்கள்.
நாங்கள் நேர்காணல்களைக் காட்டும்போது முழுவதையும் காட்டுவோம். குறிப்பெடுத்துக்கொள்ளலாம். ஆனால் நகலெடுக்க 25 சதவிகிதம்தான் அனுமதிக்கப்படும். அனைத்து ஆவணக்காப்பகங்களிலும் இந்த நியதி உண்டு. நேரு நினைவக அருங்காட்சியகம் மற்றும் வாசகசாலையிலும் நேர்காணல்களை முற்றுமாகத் தருவதில்லை. நாங்கள் 25 சதவிகிதம் தருவதற்கு அவர்கள் 100 சதவிகிதம் படிக்க வேண்டும். இந்தச் செயல்முறையையே தவிர்க்கப் பார்க்கிறார்கள் பலர். பலமுறை எங்களுக்கு வேண்டுகோள்கள் வரும்: நீங்களே 25% தேர்ந்தெடுத்து அனுப்பிவிடுங்கள் என்று. அவர்களுக்காக நான் ஆராய்ச்சி செய்து எவ்வளவு தேவை என்று தீர்மானிக்க வேண்டும்.
சில சமயம் வெளிநாட்டில் உள்ள பெரிய, நன்றாக நிறுவப்பட்ட நிறுவனங்கள் அவர்கள் வலைப் பதிவுகளில் அல்லது இணையதளங்களில் பதிவிட உருவப்படங்களைக் கேட்பார்கள். பலரையும் எட்டுவதற்காக என்று காரணம் கூறி, அவற்றைத் தரவிறக்க முடியாது என்றும், அவர்களுடனான உடன்படிக்கையை எப்போது வேண்டுமானாலும் முறித்துக்கொள்ளலாம் என்றும் உறுதியளிப்பார்கள். இத்தகைய வேண்டுகோள்கள் எங்களுடன் முன்பு நட்பிலிருந்து இப்போது வெளிநாட்டு நிறுவனங்களில் இத்தகைய திட்டங்களுக்குப் பொறுப்பேற்றுள்ளவர்களிடமிருந்து வரும்.
அவர்களிடம் நான் கேட்பேன்: யார் இதைப் பயன்படுத்துவார்கள் என்று சொல்லுங்கள்; யார் இந்தப் புகைப்படங்களைப் பயன்படுத்துவார்கள் என்று எனக்குத் தெரிய வேண்டும். காரணம் நாங்கள் பெண்களை நேர்காணல் செய்யும்போது அவர்கள் குடும்பச் செருகேடுகளில் (inserts) உள்ள புகைப்படங்களைக் கேட்போம். அவர்கள் புகைப்படங்களைத் தந்து விவரங்களையும் தருவார்கள். அவற்றை எவ்வாறு உபயோகப்படுத்துவது என்று எங்களுக்குத் தெரியும். இவற்றை எப்படிப் பயன்படுத்துவது, எப்படி முனைவர் ஆராய்ச்சி நூல்கள், வெளியீடுகள் அல்லது வேறு பயன்பாடுகள் இவற்றுக்குப் பயன்படுத்தத் தருவது இவற்றுக்கான விதிமுறைகள் எங்களிடம் உண்டு. நாங்கள் நேர்காணல் செய்த பெண்கள் இவ்வாறு அவை பயன்படுத்தப்படுவதை ஏற்கிறார்கள். ஆனால் சில வகைப் புகைப்படங்களைத் தருவதை நான் விரும்புவதில்லை. உதாரணமாகத் திருமண ஏற்பாடு செய்ய பிள்ளை வீட்டாருக்கு அனுப்பப்படும் புகைப்படங்கள் போன்றவை. அவர்கள் அவற்றை எனக்குத் தரக்கூடும். அவை ஒரு வகையில் வரலாற்றுக் குறிப்பிடலுக்கானவைதாம். ஆனால் அவை பயன்படுத்தப்படுவதை அவர்கள் விரும்பாமலிருக்கலாம். ஏனென்றால் தரும்போது அவர்கள் சொல்வார்கள், ‘சரியான வகையில் பயன்படுத்தப்படுவதை உங்கள் பொறுப்பில் விடுகிறேன்,’ என்று. இப்போது நான் என் விவேக உணர்வைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறேன். என் வாழ்நாளுக்குப்பின் ஆவணக்காப்பகத்துக்கு அவற்றைப் பயன்படுத்தும் முறைகள் தெரியாமல் போகலாம். அதனால் விதிமுறைகளைச் செய்திருக்கிறோம்.
கே: ஆவணக்காப்பகச் செயல்பாட்டுக்கு வேறு ஏதாவது வழிமுறைகள் அல்லது விதிகள் உண்டா?
ப: ஆமாம். எல்லா வழிமுறைகளும் உள்ளன. வாய்வழி வரலாறு பதிவு செய்வதற்கான கையேடும் உண்டு. எங்களிடம் பயிற்சிபெற வருபவர்களிடம் இந்தக் கையேட்டைத் தந்து எப்படி நேர்காணல்கள் செய்வது என்பதைக் கற்பிப்பதற்காகப் படிக்கச் சொல்வோம். அனுமதி பெறுவதற்கான படிவங்களையும் காட்டுவோம், எப்படி அனுமதி பெற வேண்டும் என்பதைக் கற்றுத் தர. எழுத்தாளர் ஒருவரை நேர்காணல் செய்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். அவர் திருமண உறவில் ஏற்பட்ட வன்புணர்வு பற்றிப் பேசியிருக்கலாம். அவர் என்னிடம் வெளிப்படையாகப் பேசியிருக்கலாம். ஆனால் அனுமதி தரும்போது என்னிடம், ‘இந்த நேர்காணல் பயன்படுத்தப்படும்போது இந்தத் திருமண உறவில் ஏற்பட்ட வன்புணர்வைக் குறிப்பிடாவிட்டால் நலம்,’ என்று கூறுவார். ஆகவே அவர் கேட்டுக்கொண்டபடி அதைப் பயன்படுத்தும்போது அந்த வன்புணர்வு நிகழ்வைக் குறிப்பிடுவதைத் தவிர்ப்பேன். காரணம் அந்த எழுத்தாளரின் கணவர் உயிருடன் இருக்கலாம். அவர் தன் கணவரை விட்டுப் பிரிந்திருந்தாலும் இது பல வித பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். ஆகவே பெண்களின் வாழ்க்கையின் சில அந்தரங்கமான விஷயங்களைப் பகிரங்கமாக்காமல் பாதுகாக்க இவ்வாறு பலவகைகளில் நாங்கள் செயல்படுகிறோம். இது நெறிமுறை ரீதியாக மட்டுமன்று, ஒரு பெண் இன்னொரு பெண்ணை விட்டுக்கொடுக்கக் கூடாது என்ற ரீதியிலும்தான்.
கே: ஆமாம். மிகச் சரிதான். ஆவணக்காப்பகம் என்று கூறும்போது உணர்வில்லாத, புறநிலையில் வைத்துப் பார்க்கப்படும் ஒன்றாகவே அது மனத்தில் உருவாகிறது. இது எவ்வளவு தூரம் பெண்களின் அந்தரங்கங்களையும் அவர்களுக்கே ஆனதையும் ஆவணப்படுத்தும் உங்கள் ஆவணக்காப்பகத்துக்குப் பொருந்தும்?
ப: பெண்களின் ஆவணக்காப்பகம் அப்படி இருக்க முடியாது. நாங்கள் இதை நிறுவும்போது இந்தக் கேள்விகளையெல்லாம் எழுப்பினோம். ‘எப்படிச் செய்வது?’, ‘எவ்வகையில் அனுமதி பெறுவது/’ ‘எப்படிப் பயன்படுத்துவது?’ ‘யார் பயன்படுத்துவது?’ போன்ற கேள்விகள்.
நீங்கள் ஒரு எண்ம ஆவணக்காப்பகம் தொடங்கலாம். நாம் தரவுகள் பகிர்ந்துகொள்வது பற்றி உடன்படிக்கை செய்துகொள்ளலாம். அது வேறு வகைப்பட்டது. ஏனென்றால் எங்கள் விதிகளுக்கேற்பத்தான் நாங்கள் பகிர்ந்துகொள்வோம். நாங்கள் மகாராஷ்டிரத்துப் பெண்களை நேர்காணல்கள் செய்திருக்கலாம். அவற்றில் சிலவற்றை நீங்கள் உங்கள் ஆவணக்காப்பகத்தில் வைக்க விரும்பலாம். அது வேறு விஷயம். ஆனால் பகிர்வதற்கான சரியான உடன்படிக்கை செய்துகொள்ள வேண்டும்; அப்படி அது மற்றவர்களிடம் பகிரப்படும், எப்படி பயன்படுத்தப்படும் போன்றவை தீர்மானிக்கப்பட வேண்டும். ஆவணக்காப்பகம் என்பது பயன்படுத்தப்படவேண்டும். கதவுகளை அடைத்த ஆவணக்காப்பகமாக அது இருக்க முடியாது. எங்கள் ஆவணக்காப்பகம் திறந்த ஒன்றுதான். யார் வேண்டுமானாலும் வந்து பயன்படுத்தலாம். எண்ம ஆவணக்காப்பகம் ஒன்றை நிறுவ நான் பலருக்குப் பயிற்சி தர முடியும். அது குறித்து எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் நான் தரும் பயிற்சி நான் கூறியவற்றை எல்லாம் உள்ளடக்கியதாக இருக்கும். மூத்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள் — ஏனென்றால் இளைய தலமுறையினரையும் நேர்காணல்கள் செய்திருப்பதால் நாங்கள் ஆவணப்படுத்தும் எல்லோரும் என்றும் சொல்லலாம் — வாழ்ந்த அவர்களுக்கான வாழ்க்கை என்று ஒன்று இருக்கிறது என்பதை இளைய தலைமுறையினர் மறக்கக்கூடாது. அந்த வாழ்க்கையை நாம் மதிக்க வேண்டும். அதை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. ஸ்பாரோ, ‘இந்திய வரலாறு மற்றும் பண்பாட்டில் பெண்கள்’ என்பது குறித்துப் பயிலரங்குகள் நடத்துகிறது. சில பல்கலைக்கழகங்களில் இதைச் செய்திருக்கிறோம். இத்தகைய பயிலரங்குகளும் ஆவணக்காப்பகத்தைப் பகிர்ந்துகொள்ளும் முயற்சிதான்.
கே: ஸ்பாரோ நிறுவப்பட்டபோது ஆவணக்காப்பகம் செயல்படுத்தும் முறைகள் குறித்த உங்கள் எண்ணங்கள் யாவை? அவை தற்போது உள்ள எண்மமாக்கல் முயற்சிகளின்போது எவ்வாறு மாறியுள்ளன?
ப: நான் The Face Behind the Mask என்றொரு புத்தகம் எழுதினேன். அதற்காகப் பல எழுத்தாளர்களைப் பேட்டி கண்டேன்; பல தரவுகளைப் படித்தேன். எந்த மாநில ஆவணக்காப்பகத்துக்கு நான் போனாலும் ஆங்கிலத்தில் ‘W’ என்ற எழுத்தின் கீழ் தேடுவேன் ‘women’ என்ற பொருளின் கீழ் தரவுகள் உள்ளனவா என்று. அப்படி எதுவும் இருக்காது. அப்படிப்பட்ட வாசகசாலை சார்ந்த வகைமையே இருக்காது. ஆனால் ‘கல்வி’ என்ற பொருள் குறித்துத் தேடினால் பெண்கள் கல்வி பற்றிய தரவுகள் இருக்கும். ‘விதவை’ என்ற பொருள் வகைமையும் இருக்காது. அது சமூக சீர்திருத்தம் என்ற வகைமையுடன் இணைக்கப்பட்டிருக்கும். நாமேதான் ஆவணக்காப்பகம் ஒன்றை உருவாக்கவேண்டும் என்று தோன்றியது. ஆராய்ச்சியில் சாதாரணமாக முதன்மைத் தரவுகள், துணைத் தரவுகள் என்றுண்டு. நூல்கள் துணைத் தரவுகளாகக் கொள்ளப்படுகின்றன. முதன்மைத் தரவுகள் என்பவை அரசாங்கத் தரவுகள், அரசு சார்ந்த அரசாங்கப் பதிவுகள் போன்றவை. நான் பெண் எழுத்தாளர்களைப் பற்றி ஆராய்ச்சி செய்தபோது என் முதன்மைத் தரவுகள் அவர்கள் எழுத்தாகத்தான் இருக்க முடியும். ஆனால் பல ஆராய்ச்சியாளர்கள் என்னிடம் நூல்கள் எப்படி முதன்மைத் தரவுகளாக முடியும் என்று கேட்டார்கள். நான் பெண் எழுத்தாளர்களைப் பற்றி எழுதும்போது அவர்கள் எழுதுவதுதானே என் முதன்மைத் தரவுகளாக இருக்க முடியும் என்று நான் கேட்டேன். அவர்கள் பெண்கள் குறித்த ஆராய்ச்சியைப் பார்த்தது அபத்தமாக இருந்தது. அந்தச் சமயத்தில் என்னால் அவர்கள் என்னிடம் பேசியதை ஒலிப்பேழைப் பதிவியில் பதிய முடியவில்லை. அதற்கான வசதி இருக்கவில்லை. நான் குறிப்பிடும் ஆண்டு 1974. எனக்குக் கிடைத்த நல்கையும் குறைந்த தொகைதான். ஒரு மாதத்துக்கு ஆயிரம் ரூபாய். ஒலிப்பேழை வாங்கப் பணம் இருக்கவில்லை. அதனால் ஒலிப்பேழையில் பதியாமல் குறிப்புகள் மட்டும் எடுத்துக்கொண்டேன். ஆனால் அந்த ஆராய்ச்சியின்போது நிறையப் புகைப்படங்களையும் மற்றவையையும் சேகரித்திருந்தேன். அதன் பிறகு ‘சித்திரிப்புகளுடன் தமிழ் நாட்டுப் பெண்களின் சமூக சரித்திரம்’ என்ற ஆராய்ச்சியைச் செய்தபோது பல விதத் தரவுகளைச் சேகரித்திருந்தேன். புகைப்படங்கள், வாய்வழி வரலாறு, நேர்காணல்கள், கதைகள், மேடைப் பேச்சுகள், டயரிக் குறிப்புகள், கடிதங்கள் இப்படிப்பட்டவைகளால் சித்திரிக்கப்பட்ட சமூக சரித்திரம். இவற்றைச் சேகரிக்கும்போது நான் பெண்களிடம் செய்த நேர்காணல்களை ஒலிப்பேழையில் பதிவு செய்தேன். என் நெருங்கிய தோழி ஒருத்தி, டாக்டர் ஜெரால்டின் ஃபோர்ப்ஸ் என்றிருக்கிறார். அவரும் அமெரிக்காவிலிருந்து இந்தியப் பெண்களைக் குறித்து இத்தகைய ஆராய்ச்சி செய்து வருகிறார். அவரை நான் 1972 வாக்கில் சந்தித்தேன். இந்தத் தரவுகளை எப்படி ஒழுங்குபடுத்துவது, எங்கே வைப்பது என்பது பற்றிப் பேச ஆரம்பித்தோம். வாய்வழி வரலாற்றின் முக்கியத்துவம் எங்களுக்குத் தெரிந்திருந்தது. எப்படி இதை மேலே எடுத்துச் செல்வது என்று யோசித்தோம். இதைச் செய்யக்கூடிய ஒரே வழி பெண்கள் ஆவணக்காப்பகம் ஒன்றை ஆரம்பிப்பதுதான்.
இந்தியாவில் பெண்களுக்கான ஆவணக்காப்பகம் ஒன்று கிடையாது. நான் முன்பு கூறியதுபோல் நாடளாவிய ஒன்று — நாங்கள் மகாராஷ்டிரத்திலிருந்து மட்டுமல்ல அனைத்திந்தியாவிலிருந்தும் தரவுகளைச் சேகரிக்க விரும்பினோம் — டெல்லியில்தான் இருக்கவேண்டும் என்ற பொது நோக்கு இருந்தது. ஆனால் நாங்கள் இதை மையத்திலிருந்து விலக்கி டெல்லியிலிருந்து வெளியே கொண்டுவர நினைத்தோம். எல்லாம் ஏன் டெல்லியில் இருக்கவேண்டும்? [சிரிக்கிறார்]
ஆகாவே அதை மும்பாயில் நிறுவ நினைத்தோம். பேராசிரியர் நீரா தேசாய், எஸ்.என்.டி.டி. (ஸ்ரீமதி நாதிபாய் தாமோதர் தாக்கர்ஸே) பல்கலைக்கழகத்தில் மகளிர் பயில்வுகள் துறையின் தலவராக இருந்தார். அவரை அணுகி இதில் அவருக்கு ஆர்வம் உண்டா என்று விசாரித்தேன். நான் நிறுவனம் சாராத ஆராய்ச்சியாளராக இருந்தேன். என்னுடன் இணைய விருப்பமா, மகளிர் பயில்வுகள் துறையின் விஸ்தீகரிக்கப்பட்ட அங்கமாக ஆவணக்காப்பகத்தை நிறுவ முடியுமா என்று கேட்டேன். நான் வடிவமைக்கும் ஆவணக்காப்பகத்துக்குப் புரவலராக அவர்கள் இருக்க முடியுமா என்று கேட்டேன். அதுவரை மகளிர் பயில்வுகள் துறைகள் அதிகப்படியாக மதிப்பாய்வுகளும் வேறு சில வேலைகளுமே செய்துவந்தன. அவருக்கு என் ஆவணக்காப்பகம் பற்றிய எண்ணம் பிடித்திருந்தது. பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரைச் சென்று பார்க்கும்படி கூறினார்.
துணை வேந்தருடனான சந்திப்பு சரியாகப் போகவில்லை. இதற்கு முன் “Reaching Out” என்ற பெயரில் ஒரு சிறு குழுவை நடத்திக்கொண்டிருந்தோம். பெண்ணிய நாள்காட்டிகளும், டயரிகளும் வெளியிட்டிருந்தோம். பல அலுவலகங்களுக்குப் போய் அதற்காகப் பணம் சேர்த்திருந்தேன். அதில் ஒரு ஐயாயிரம் மீதம் இருந்தது. நீரா தேசாயிடமும் மகளிர் பயில்வுகளில் மிகச் சிறந்த கல்வியாளரான டாக்டர் மைத்ரேயி கிருஷ்ணராஜிடமும் — அவர் கணவர் கிருஷ்ணராஜ், EPW (Economic and Political Weekly) பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார். நான் அதில் அவ்வப்போது எழுதினேன் — நாம் மூவரும் அறக்கட்டளை ஒன்று ஆரம்பிக்கலாம் இதை வைத்து என்று கூறினேன். அவர்கள் ஒப்புக்கொண்டதும் அறக்கட்டளையை உருவாக்கி முகவரி எழுதிய அஞ்சல் தாள்களை அச்சிட்டோம். ஆவணக்காப்பகத்தை எப்படி நிறுவ வேண்டும் என்பதற்கான செயல்திட்டம் ஒன்று என் மனத்தில் இருந்தது. மேலும் தரவுகளைப் பாதுகாத்தல், ஆவணப்படுத்தல் குறித்து லண்டனின் வெல்கம் நிறுவனத்தின் டோனி பிஷ், சென்னையில் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் நடத்திய பயிலரங்கில் நான் பங்குபெற்றிருந்தேன்.
ஆவணக்காப்பகம் ஆரம்பித்துவிட்டோம். ஆரம்பத்தில் நாங்கள் சேகரித்தத் தரவுகள் என் வீட்டில் படுக்கையறையில் இரண்டு அலமாரிகளில் இருந்தன. மெல்ல மெல்ல எங்கள் சேகரிப்புகள் பெருக ஆரம்பித்தன. என் வீடு மிகச் சிறியது. சீக்கிரமே நாம் வெளியே படுத்துக்கொள்ள நேரிடலாம், என்று என் கணவன் கூறவே ஏதாவது செய்ய வேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டது.
ஆகவே 1992ல் ஓவியக் கண்காட்சி ஒன்று நடத்தினோம். அதில் கிடைத்த பணத்தில் ஒரு சிறு அறையை வாடகைக்கு எடுத்தோம். அங்கு ஓராண்டு இருந்தோம். பிறகு வண்டிக் கொட்டில் ஒன்றில் ஓராண்டு ஸ்பாரோ மூடிக் கிடந்தது. அதன் பிறகு ஹாலந்து நாட்டின் மனிதநேயக் குழுவான HIVOS எங்களுக்குப் 10 ஆண்டுகள் நிதியுதவி செய்தது. அதை நாங்கள் ஏற்ற காரணம் அவர்கள் எந்த வகையிலும் எங்கள் வேலையில் குறுக்கிடவில்லை. மறைமுகமான எதிர்பார்ப்புகள் தொக்கி நிற்கும் நிதியுதவிகளை ஏற்பதை நாங்கள் தவிர்க்கிறோம். எந்தவித மூடுமறைப்பும் இல்லாத வெளிப்படையான நிதியுதவியாக அது இருந்தது. அவை அற்புதமான ஆண்டுகளாக அமைந்தன. அதன் முடிவில் HIVOS ஆவணக்காப்பகத்தை இருத்துவதற்கான இடத்தை வாங்கவும் உதவி செய்தது.
ஆவணப்படுத்துதல் கடினமான ஒன்றாக இருப்பதற்கான காரணம் அது மேம்பாட்டின் அங்கமாக இல்லாமல் இருப்பதுதான். மேம்பாட்டுத் திட்டங்கள் முற்றிலும் வேறானவை. எல்லோரும் எண்ணிக்கை அளவில் பேசும்போது ஆவணப்படுத்தல் பற்றி நினைப்பது எவ்வளவு கடினம் என்பதை “எண்ம காலத்தில் ஆவணப்படுத்தல்” என்ற என் கட்டுரையில் எழுதியிருக்கிறேன். நாங்கள் செய்யும் வேலை, எண்ணிக்கைப்படுத்த முடியாத தரங்களை, பண்பு வகைகளைச் சார்ந்தது.நான் எப்போதும் கூறுவதுபோல மேம்பாடு என்பதில் ஒரு செயல்பாட்டை எண்ணிக்கைப்படுத்தும்போது 100 விதவைகளுக்குத் தையல் இயந்திரம் என்றுதான் கணக்குப் போடமுடியும். அதை எண்ணிக்கைக்கு உட்படுத்த முடியும். ஆனால் ஆவணக்காப்பக வேலை எண்ணிக்கைக்கு உட்படுத்தக்கூடியது இல்லை. ஆனால் ஆவணப்படுத்தல் எனும் செயல்பாடு மேம்பாட்டின் மிக முக்கியமான ஓர் அங்கம் என்று நான் நினைக்கிறேன். இதை இப்படிப் பார்க்காததால்தான் நம் கல்வித் திட்டங்கள் சரியான பாதையில் செல்லவில்லை என்று நான் நினைக்கிறேன். எல்லோருக்கும் பொதுவான கல்வி நம் நாட்டில் இல்லை.

கே: ஆவணப்படுத்தலையும் மேம்பாட்டையும் குறித்து மேலும் பேசலாம். 1988ல் ஆரம்பித்ததிலிருந்து இன்று பார்க்கும்போது ஓர் ஆவணக்காப்பகம் எப்படிச் செயல்படவேண்டும் என்பது மாறியுள்ளதா?
ப: இல்லை. ஆவணக்காப்பகம் செயல்படும் முறை மாறவில்லை. பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்புக்கான (Corporate Social Responsibility) நிதி இருக்கிறது. இதில் எங்களுக்கு எதுவுமே வரவில்லை. அவர்கள் களங்களில் நடைபெறும் மேம்பாட்டுத் திட்ட வேலைகளுக்கு — நீர்ப் பாதுகாப்பு, ஆற்றல் பாதுகாப்பு, சுற்றுச் சூழல் போன்றவை — உதவுகிறார்கள். வேறு வகையில் மேம்பாட்டை நோக்குவதோ அர்த்தப்படுத்திக்கொள்வதோ கிடையாது. பெண்களுக்கு கணினிப் பயிற்சி வகுப்புகள் அல்லது கீழ்த்தங்கியவர்களுக்கு வகுப்புகள் போன்றவையும் உண்டு. நாங்களும் கீழ்மட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு வாசகசாலை ஒன்று அமைக்க விரும்புகிறோம். ஆனால் அது இத்தகைய செயல்பாடுகளிலிருந்தும் சற்று வேறுபட்டதாகவே பார்க்கப்படும். இவ்வாறாக மிகவும் இறுக்கமான விதங்களில் மேம்பாட்டுத் திட்டங்கள் அமைகின்றன. இவை அமலாக்கப்படும் முறையும் ஊழலுக்கு இடமளிக்கிறது.
என் குழுவுக்கு எதை ஏற்பது, எதை ஏற்கக்கூடாது, எது நிறுவனத்தின் வழிமுறைக் கொள்கைகளுக்குள் அடங்குகிறது என்பது குறித்துப் பல வகைகளில் கற்பித்தபடி இருக்கவேண்டியிருக்கிறது. நிதியுதவியை ஏற்றோ நிராகரித்தோ கடிதம் எழுதும்போது அது குழுவில் உள்ள அனைத்து மூத்த மேல்மட்டப் பணியாளர்களுக்கும் அனுப்பப்படும். எதுவும் ரகசியமாக நடப்பதில்லை. அவர்கள் உங்களைப்போல இளையவர்கள்தான்; ஆனால் ஆவணக்காப்பகம் எப்படிச் செயல்படுகிறது என்பதை அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அதிகாரம் ஓரே நபரிடம் இருப்பது கூடாது. அவர்களும் சில தீர்மானங்களைச் செய்து தவறுகளையும் செய்ய வேண்டும். திருத்திக்கொள்ளவும் வேண்டும். இப்படி எல்லாம் செய்வது சாத்தியம்தான். ஜனநாயக முறையில் ஆவணக்காப்பகத்தை நடத்தாவிட்டால் அது தொடர்ந்து செயல்படுவது சாத்தியமில்லை. என் குழுவில் உள்ள மூத்த பணியாளரான நூலகர் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர். ஆங்கிலத்தைவிட மராட்டியில் நன்றாகப் பேசக்கூடியவர். ஆகவே சில கல்லூரிகளில் அங்குள்ள மாணவர்களுக்கு மராட்டியில் பயில்வது எளிதாக இருப்பதால் அவர் பயிலரங்குகளை நடத்துகிறார்.
கே: ஆவணக்காப்பகத்தின் தரவுகளை எப்படிப் பாதுகாப்பாக வைக்கிறீர்கள்? ஆவணக்காப்பகத்துக்கு நிறைய இடம் தேவை இல்லையா? தவிர பல தரப்பட்ட தொழில்நுட்பங்களும் தேவைப்படுகின்றன. ஆரம்ப காலத்திலிருந்து இது எப்படி மாறியிருக்கிறது?
ப: மகளிர் பயில்வுகள் துறையில் அந்தப் பயில்வுகளின் கோட்பாடு சம்பந்தப்பட்ட புத்தகங்கள் இருக்கும். அத்தகைய புத்தகங்களை நாங்கள் வாங்குவது இல்லை. அதே வகையான புத்தகங்களை நாங்களும் வாங்க வேண்டிய அவசியமில்லை இல்லையா? நாங்கள் சுய சரிதைகள், வாழ்க்கைச் சரித்திரங்கள், கள வேலை ஆய்வுகள், புனை கதைகள் இவற்றுடன் நாங்கள் காட்சி வடிவங்களுக்குமான ஆவணப்படுத்தலும் செய்வதால் கலை சம்பந்தப்பட்டப் புத்தகங்களை – மட்டுமே வாங்குகிறோம். எட்டு மொழிகளிலுள்ள பத்திரிகைகளிலிருந்து கட்டுரைகளைச் சேகரிக்கிறோம். புகைப்படங்களையும் சேகரிக்கிறோம். புகைப்படங்களை அலகிட்டு வைத்தாலும் மூலப் படங்களைத் தந்திருந்தால் அவற்றை ஆவணப்படுத்தி வைக்கிறோம். அனுமதி இல்லாவிட்டால் திருப்பித் தந்துவிடுகிறோம். அலகிட்டபின் கணிசமான அளவு சேர்ந்ததும் அவற்றை ஒரு நிலைவட்டில் இட்டு அதை ஆவணக்காப்பகத்தின் 24 மணிநேரமும் குளிரூட்டப்பட்ட பத்திரக்கிடங்கில் வைத்துவிடுகிறோம். எங்கள் ஒலிவகைப் பதிவுகள் அனைத்தும் எளிதாக ஆவணப்படுத்தும் வகையில் ஒலிக்கோப்புகளாக மாற்றப்படுகின்றன. ஒலிப்பேழை வடிவத்தில் இருந்தால் அவற்றையும் சேமிக்கிறோம். இல்லாவிட்டால் குறுவட்டாக வைத்துக்கொள்கிறோம்.
நாம் சேகரிக்கும் தரவுகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம், மற்றவர்கள் செய்யும் வேலையை மீண்டும் செய்யாமல் இருப்பதன் மூலம், இடத்தைச் சரியாகப் பயன்படுத்த முடியும். உதாரணமாக, ஒரு வாசகசாலையில் தொழில் சம்பந்தப்பட்ட தரவுகள் மட்டுமே இருக்கலாம். அதையே நாங்களும் செய்ய மாட்டோம். சில தொழிலாளர்களை நேர்காணல் செய்யலாம்; அதில் தவறில்லை. ஆனால் அந்த வாசகசாலை செய்யும் வேலையை நாங்களும் செய்வதில் என்ன பயன்? இரண்டு நிறுவனங்களும் ஒரே வேலையைச் செய்யும். நோக்கும் விதத்தில் வேறுபாடு இருக்கலாம். சில சமயம் ஒரே நபரை இரு நிறுவனங்கள் நேர்காணல் செய்யலாம். எடுத்துக்காட்டாக காப்டன் லக்ஷ்மி ஸைகல் சுயசரிதை எழுதியுள்ளார்; ஆனால் அவரை நாங்கள் நேர்காணல் செய்திருக்கிறோம். இன்னும் பலரும் செய்திருக்கிறார்கள். வேறு வகையான பார்வைக்காக அப்படிச் சில நேர்காணல்கள் செய்யலாம். ஆனால் பலவற்றைத் தவிர்த்துவிடுவோம்.
நாங்கள் சுமார் இரண்டு மணி நேரம் ஓடும் நேர்காணல் வகை ஆவணப்படங்களையும் எடுத்திருக்கிறோம்.
கே: நேர்காணல் திட்டப்பணி செய்யும்போது யாருடைய வாய்வழி வரலாற்றை முன்வைப்பது என்பதை எப்படித் தீர்மானிக்கிறீர்கள்?
ப: யார் யாரை நேர்காணல் செய்யவேண்டும் என்று எங்களிடம் ஒரு பட்டியல் இருக்கிறது. சுதந்திரப் போராட்டப் போராளிகள், தற்காலப் பெண் போராளிகள், இடதுசாரி இயக்கத்தில் உள்ள பெண்கள், காந்தியவாதிகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், பெண்ணிய நிலைப்பாட்டை எடுக்கும் எந்த நிறுவனத்தையும் சாராத பெண்ணியவாதிகள் போன்ற பலரை நேர்காணல் செய்ய முயல்கிறோம். பெண்ணியம் என்பது குறித்த குறுகலான நோக்கை வைத்துக்கொள்ள விரும்பவில்லை. உதாரணம் ஒன்று சொல்கிறேன். ஒரு முறை ஒரு குடும்பத்தினர் எங்களை அணுகி அவர்கள் பாட்டியார் இரண்டாம் உலக யுத்தத்தின்போது பர்மாவிலிருந்து நடந்து வந்தார் என்றும் அதைப் பதிவு செய்ய விரும்புகிறார் என்றும் அவருக்கு அதிக வயதாகிவிட்டதால் பதிவு செய்வதில் எங்களுக்கு விருப்பம் இருக்குமா என்றும் கேட்டார்கள். ஒப்புக்கொண்டு அவர் வீட்டுக்குச் சென்று ஓலிப்பேழையில் பதிவு செய்தோம்.
என் பெண்ணியத் தோழிகள் சிலர் பர்மாவிலிருந்து நடந்து வருவது எப்படிப் பெண்ணியச் செயல்பாடு ஆகும் என்று கேட்டார்கள். பர்மாவிலிருந்து நடந்து வருவது பெண்ணியம் இல்லாமல் போகலாம், ஆனால் அதைப் பதிவு செய்ய விரும்புவது ஒரு பெண்ணியச் செயல்பாடு; பெண்ணியம் பற்றிய உங்கள் எண்ணம் மிகவும் குறுகியது என்று அவர்களிடம் கூறினேன். என்னைப் பொருத்தவரை பெண்ணியம் என்பது எந்த வகையிலும் இழிவுபடுத்தப்படாத வாழ்க்கையை வாழ்வதுதான். பெண்ணியம் என்றால் என்னவென்று தெரியாத பல பெண்கள் — நான் கல்வி கற்பதற்கு உதவிய என் அம்மா ஒரு பெண்ணியவாதி என்று நான் நினைக்கிறேன். இப்படிப்பட்ட பல அம்மாக்களை எனக்குத் தெரியும் — பெண்ணியத் தீர்மானங்களை எடுக்க முடியும் இவர்கள் அனைவரும் பெண்ணியவாதிகள் என்றே நினைக்கிறேன். எல்லாவற்றையும் பரந்த நோக்கில் பார்க்கவேண்டும்; இன்றைய தறுவாயில் மட்டும் இருத்திப் பார்க்கக்கூடாது என்று நினைக்கிறேன். என்னைப் பொருத்தவரை இத்தகைய ஆவணக்காப்பகம் என் நோக்கை விரிவுபடுத்தியுள்ளதாகவே நினைக்கிறேன். இந்த விரிவு ஏற்பட்ட விதம் பெண்கள் வரலாற்றில் எவ்வாறு செயல்பட்டிருக்கிறார்கள், அவர்கள் அன்றாட வாழ்க்கையின் அரசியலை எவ்வாறு கையாண்டார்கள் என்பது குறித்த நம் புரிதல் எவ்வளவு குறைவானது என்றுணரும் அடக்கத்தை எனக்குத் தந்திருக்கிறது.

கே: ஸ்பாரோவை நடத்திய இந்த முப்பது ஆண்டுகளில் பெண்கள் தங்களைப் பற்றியும் தங்கள் வாழ்க்கையைப் பற்றியும் பேசும் விதத்தில் ஏதாவது மாறுதல் தெரிகிறதா? நாம் பெண்மையை எப்படிப் பார்த்துவருகிறோம் என்பதை இந்த ஆவணக்காப்பகத்தின் பதிவுகளின் மூலம் கண்டெடுக்க முடியுமா?
ப: பெண்ணிய நிறுவனங்கள் தீவிரமாக இயங்கியிருப்பதால் நிச்சயமாக மாறியிருக்கிறது. தெருவில் ஊர்வலம் எல்லாம் போய் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறோம். ஆனால் இது தாக்கும் எதிர்வினைகளையும் உண்டாக்கியிருக்கிறது. எண்பதுகளில் தெருவில் இறங்கி எவ்வளவோ செய்தோம். இப்போது எல்லாமே சமூக ஊடகங்களில் செய்யப்படுகிறது. இது எது பெண்ணியம் என்று நோக்கப்படவேண்டும் என்பதில் ஒரு பெரிய பிளவை உண்டாக்கியிருக்கிறது… தற்போது பல வகைகளில் தன்னைத் தானே முன்னால் இருத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. பெண்ணியவாதியாக இருப்பது மட்டுமன்று அதற்கான அங்கீகாரத்தையும் இப்போதே பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பும் இருக்கிறது. சகோதரித்துவம் என்றெல்லாம் பேசிய எழுபது, எண்பதுகளின் அந்தப் பழைய நாள்கள் இப்போது இல்லை என்றே நினைக்கிறேன்.
இது எனக்குத் தெரியும். குஜராத் நிகழ்வு நடந்தபோது நாங்கள் அனைவரும் ஃப்ளோரா ஃபவுன்டன் பகுதியில் குழுமியிருந்தோம். சிலர் உண்ணாவிரதம் இருக்க விரும்பினார்கள். ஆனால் போலீஸ் அனுமதிக்கவில்லை. இது இதற்கு முன்பு நடக்காத ஒன்று. ஊர்வலம் போகும்போது போலீஸார் எங்களுடன் நடந்து வருவார்கள் ஏனென்றால் அனுமதி வாங்கி ஊர்வலம் போவோம். உண்ணாவிரதம் இருப்பதானால் எதற்கு என்று கூறாமல் உண்ணாவிரதம் இருக்கலாம் என்றார்கள். அதுவும் சரிதான் போகிறது என்று விட்டுவிடலாம். எண்பதுகளின் ஆரம்பத்தில் போராடிய நாங்கள் அனைவரும் அங்கு இருந்தோம். ஆனால் இளையரில் ஒருவர்கூட அன்று அங்கிருக்கவில்லை அவர்கள் அனைவருமே பெருநிறுவனங்களில் கலந்துபோயிருந்தனர். அந்தக் குழுவில் இன்னும் சிலவற்றை நிறுவ முயற்சித்துக்கொண்டிருந்த நாங்களும் இருந்தோம். சோகமான ஒன்று அது. அன்று எங்களில் பலர் வீட்டுக்குத் திரும்பியதும் அழுதோம். ஏனென்றால் எத்தனையோ காலமாக அப்படிப் போராடிய நாங்கள் அங்கே ஒருவரையொருவர் பார்த்தபடி அமர்ந்திருந்தோம். இளைய வயதினர் ஒருவர்கூட இருக்கவில்லை. என் தோழிகளின் பெண்கள்கூட அங்கிருக்கவில்லை. அவர்கள் வெளிநாட்டில் படித்துக்கொண்டிருந்தார்கள் அல்லது பெருநிறுவனங்களில் இருந்தார்கள். இத்தகைய போராட்டங்களில் பங்கெடுப்பது அவர்களுக்குப் பொருட்டாகவே இருக்கவில்லை. பல்கலைக்கழகம், கல்லூரி என்று எடுத்துக்கொண்டால் முனைவர் பட்டம் போன்றவற்றுக்காக இத்தகைய ஆராய்ச்சி நடக்கலாம். தவிர, மாணவர்களைப் பொருத்தவரை அரசியல் கட்சிகளால் பெரிதும் அரசியல்படுத்தப்பட்டிருந்தார்கள். மிகவும் இறுக்கமான குழுக்களில் இறுக்கமான கருத்துகளுடன் இருந்தார்கள்.
கே: ஆவணக்காப்பகம் என்பது அரசியல் கருவியாக இயங்க முடியுமா?
ப: எங்கள் ஆவணக்காப்பகம் போராடும் எல்லாப் பெண்களையும் ஏற்றுக்கொள்வது என்ற வகையில் அரசியல் ரீதியாகச் செயல்படும் என்றே நினைக்கிறேன். அவர்களின் அரசியல் என்ன என்பதை நாங்கள் தெளிவாகச் சுட்டிக் காட்டுகிறோம். இந்த அரசியலுக்கு வெளியேயும் இயங்கியவர்கள் உண்டு. அவர்களையும் பதிவு செய்திருக்கிறோம். இடதுசாரி இயக்கத்திலிருந்த பெண்களை நேர்காணல் செய்து அவர்கள் விருப்பப்படி பேச வைத்திருக்கிறோம். இதை இப்படி ஏன் செய்தீர்கள் என்று குறுக்கிட்டுக் கேட்பதில்லை. ஒரு காலத்தில் அப்படி அவர்கள் உணர்ந்திருக்கக்கூடும். அதை நாங்கள் பதிவு செய்கிறோம்; அப்படிப் பதிவு செய்யவும் வேண்டும்.
பெண்களும் இறையுணர்வும் என்பது குறித்து ஒரு பரந்துபட்ட திட்டப்பணி செய்ய விரும்புகிறோம். ஏனென்றால் பெண்ணிய இயக்கத்தின் ஆரம்பக் கட்டங்களில் பெண்ணியவாதிகள் நாத்திகவாதிகளாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் பொதுவாக நிலவியது. இதில் என்ன பிரச்சனை என்றால் பல பெண்களை இறையுணர்வு ஆற்றுப்படுத்தியது. அவர்கள் அதை மற்றவர்கள் மேல் திணிக்காமல், யாரையும் புண்படுத்தாமல், யாரையும் அவர்கள் செய்யும் சடங்குகளைச் செய்யச் சொல்லாமல் இருக்கும்வரை அது சரிதான் என்றே நினைக்கிறேன். பெண்கள் சமயம் குறித்து என்ன நினைக்கிறார்கள், அதை எப்படி நோக்குகிறார்கள் – அது சரியாகப் பதிவு செய்யப்படவில்லை. ஏனென்றால் ஒரு பெண் ஆமாம், நான் பூஜை செய்கிறேன், மாலையில் விளக்கேற்றுகிறேன் அல்லது வேறு எதையோ செய்கிறேன் என்பதைச் சொல்லாமல் இருக்கும்படி ஒருவித குற்றவுணர்வு இருக்கிறது. அவள் செய்வது தவறு என்று உணரவைக்கிறார்கள்: நீ பெண்ணியவாதியானால் நீ அப்படிச் செய்யக்கூடாது.
பெண்ணியவாதத்தை இவ்வாறு குறுக்குவது சிக்கலானது என்று நான் நினைக்கிறேன். எங்கள் செய்தி மடலில் இது குறித்துப் பல கட்டுரைகள் எழுதி வருகிறோம். முதல் கட்டுரை பஞ்சாபிலிருந்து பீர் என்ற துறவிக்கவிஞர் பற்றியது. அக்கமஹாதேவி, ஆண்டாள் மற்றும் பக்தி இயக்கத்தில் இருந்தவர்களைப் பற்றியும் எல்லாச் சமயங்களிலும் உள்ள பெண்களைப் பற்றியும் எழுத நினைக்கிறோம். துறவிகள் என்று கருதப்படும் மாதா அம்ருதானந்தமயி போன்றவர்களையும் கிறித்துவ மடங்களில் உள்ள மூத்த கன்யாஸ்திரீகள், துறவு வாழ்க்கையை ஏற்கும் ஜைனப் பெண்களையும்கூட நேர்காணல் செய்ய விரும்புகிறோம். அனைத்து வகைப் பெண்களையும் நேர்காணல் செய்து சமயம் குறித்த அவர்கள் கருத்துகளை அறிய விரும்புகிறோம்.

கே: திருநங்கைகளுடன் ஸ்பாரோவுக்கு எத்தகைய தொடர்பு இருக்கிறது?
ப: மிகச் சரியான கேள்வி. திருநங்கைகள் குறித்த பல தரவுகளை ஸ்பாரோ சேகரித்திருக்கிறது. ஐந்து திருநங்கைகளின் வாழ்க்கையை “தேகம்” என்ற இரண்டு மணி நேர ஆவணப் படமாக எடுத்திருக்கிறது. திருநங்கைகள், இணைந்த ஓரினச் சேர்க்கையாளர்கள், இருபால் சேர்க்கையாளர்கள் (LGBT) இவர்களின் பிரச்சனைகள் மற்றும் எல்லாவித பாலியல் சம்பந்தப்பட்டப் பிரச்சனைகளும் மிக முக்கியமானவை என்று நினைக்கிறோம். ஓரினச் சேர்க்கையாளர்களின் பிரச்சனைகளையும் நாங்கள் ஒதுக்க விரும்பவில்லை; ஆனால் திருநங்கைகளின் பிரச்சனைகள் மீது அதிகக் கவனம் செலுத்துகிறோம். எல்லாவற்றையும் ஆவணப்படுத்துவது கடினமான வேலையாகிவிடும். அவர்களைக் குறித்த ஆவணக்காப்பகம் அமைக்க பெங்களூரில் உள்ள சங்கமா போன்ற மற்ற நிறுவனங்கள் உள்ளன. கணிசமான தரவுகளை அவர்கள் சேகரித்திருக்கிறார்கள்.
கே: உள்ளே வெளியே என்று வெளிகள் குறித்துப் பேசியிருக்கிறீர்கள்; பெண்களாக எவ்வாறு நாம் இந்த உள் – வெளி, அந்தரங்கம் – பொது என்ற முரண்பட்ட இருமைகள் உள்ள பாதையில் நடக்கிறோம் என்பதைப் பற்றிப் பேசியிருப்பதைச் சொல்கிறேன். பெண்கள் வாழ்ந்த வாழ்க்கையின் இந்தச் சிக்கலான பரிமாணத்தை ஸ்பாரோ செய்யும் நேர்காணல்களில் எவ்வாறு அணுகுகிறீர்கள்? பொதுவெளி சார்ந்த விஷயங்களா, தனிப்பட்ட வாழ்க்கையா, எதில் உங்கள் கவனம் செலுத்தப்படுகிறது? ஒன்றில் மட்டும் கவனம் செலுத்துகிறீர்களா அல்லது ஒவ்வொரு நேர்காணலையும் பொருத்து அது அமைகிறதா?
ப: இது ஒரு முக்கியமான கேள்வி. ஆரம்பத்திலேயே நான் கருத்தில்கொண்ட முக்கியமான விஷயங்களில் இது ஒன்று — காரணம் உள்ளே – வெளியே என்ற இரு தனி உலகங்களை நான் ஏற்கவில்லை. இவை ஒன்றோடொன்று இணைந்து வருபவை — பொது வெளி – அந்தரங்க வெளி என்ற இருமைகள் நாம் இப்போது உருவாக்கியிருப்பவை. பெண்கள் சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் கலந்துகொண்டதை வீட்டைவிட்டு வெளியேவரும் செயலாகப் பலர் நோக்குகின்றனர். அதனால்தான் அவர்களைத் திரும்ப வீட்டுக்குள் போகச் சொல்கிறார்கள். ஆனால் நான் பெண்களை நேர்காணல் செய்யும்போது என்னுடைய இந்த நோக்கிலிருந்து கேள்விகளை எழுப்பமாட்டேன். கோட்பாட்டு ரீதியாக அதற்கு அவர்கள் பதில் கூறமுடியாமல் போகலாம். ஆனால் ‘நீங்கள் காந்திஜியைப் பார்க்க சபர்மதி ஆசிரமம் போக விரும்பியபோது உங்கள் குடும்பம் அதை எவ்வாறு எதிர்கொண்டது?’ என்று கேட்பேன். சபர்மதி ஆசிரமத்துக்குப் போன பல பெண்கள் இருக்கிறார்கள். குடும்பத்திடமிருந்து அனுமதி வாங்கித்தான் வர வேண்டும் என்ற எண்ணம் காந்திஜிக்கு இருந்தது. குடும்பம் அதை விரும்பாமல், பெண்கள் உண்ணாவிரதம் இருந்து சத்தியாகிரகம் செய்து சபர்மதி ஆசிரமத்துக்குச் சென்ற நிகழ்வுகளும் உண்டு. பெண்கள் சிறை சென்றிருக்கிறார்கள். தெருவில் ஊர்வலம் போயிருக்கிறார்கள். பட்டுத் துணிகளையும் வெளிநாட்டுத் துணிகளையும் வீதியில் எரித்திருக்கிறார்கள். இதையெல்லாம் வெளியே வருவது என்று கருதிக்கொண்டு செய்ததாகத் தெரியவில்லை. ஆனால் சில பெண்கள் தங்கள் கதைகளில் “நாட்டை வீடாக நினையுங்கள்” என்று எழுதியிருக்கிறார்கள். அவர்களுக்கும் அந்தப் புற வெளி அந்தரங்க வெளி என்ற எண்ணம் இருந்திருக்கலாம். ஆனால் பல பெண்களுக்குக் குடும்பம், குடும்பத்தின் புறத்தே உள்ள உலகம் இரண்டும் தெளிவாக வரையறுக்கப்பட்டவை என்ற எண்ணம் இருந்ததாகத் தெரியவில்லை.
மேலும், பெண்கள் உள்ளே இருந்தார்கள் ஆண்கள் வெளியே இயங்கினார்கள் என்று கூறும்போது, பெண்கள் சமயம் சார்ந்த பல புனிதப் பயணங்கள் சென்றிருக்கிறார்கள்; யாத்திரைகளுக்குப் போயிருக்கிறார்கள், அவை நடந்தது வெளி உலகத்திலேதானே? எப்படிப் போனார்கள் அவர்கள்? பண்ணைகளிலும் வயல்களிலும் வேலை செய்தார்கள். அவை வீட்டினுள் இருந்தனவா, வெளியிலா? ஆண்கள் வீட்டுக்கு வெளியிலே உள்ள உலகத்தில் இயங்கினார்கள் என்று கூறும்போது குறிப்பிட்ட சில பெண்களைப் பற்றித்தான் இது கூறப்படுகிறது. தொழிற்சாலைகளில் வேலை செய்த பெண்களை இது கருத்தில் கொள்வதில்லை. இவையெல்லாம் வீட்டின் வெளியேதானே உள்ளன? இத்தகைய குறுகலான பாகுபாடுகளை வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டக் கோட்பாட்டுச் சட்டகங்களில் விவரங்களை அடக்குவதற்காகச் செய்யலாம். ஆனால் இந்தச் சட்டகங்களிலிருந்து வெளிவந்து பெண்களின் வாழ்க்கைகளே கூற வேண்டியதைக் கூற வேண்டும் என்பதுதான் என் முயற்சியாக இருக்கிறது.
ஒருவரை நேர்காணல் செய்யும் முன்னரே கோட்பாட்டில் சிக்கிக்கொள்ள வேண்டாம் — அந்தப் பெண்ணின் வாழ்க்கை எதையாவது கற்றுத் தரட்டும்; இதுதான் நான் கற்றுக்கொள்ளும் விதம். இந்த நேர்காணல்களிலிருந்து நான் கற்றுக்கொண்டது அதிகம். நமக்குச் சொல்ல அதிகம் இல்லை; இந்தப் பெண்கள் கூறத் தொடங்கி, இவ்வளவுதான் என்றில்லாமல் பல பல விஷயங்களைக் கூறுவார்கள்.
அமெரிக்க ஆராய்ச்சியாளர் ஒருவர் சுவையான விஷயம் ஒன்றை எழுதியுள்ளார். தொழிற்சங்க இயக்கத்திலிருந்த பெண்களை அவர் நேர்காணல் செய்து கொண்டிருந்தார் ஒரு கேள்விப் பட்டியலுடன். இந்தக் கேள்விப்பட்டியல் முறையை நான் ஏற்பதில்லை என்பதைச் சொல்லிக்கொள்கிறேன். அவர் கேள்விகள் ‘தொழிற்சங்கக் கூட்டங்களில் எவ்வளவு முறை பங்கெடுத்தீர்கள்?’ போன்ற வகையில் இருந்தன. ஒரு பெண்ணிடம் கேட்டதும் அந்தப் பெண் தான் பங்கெடுக்கவில்லை என்று கூறி அதற்கான காரணங்களைக் கூறுவார். ‘சரிதான்; நீங்கள் பங்கெடுககவில்லை’ என்று ஆராய்ச்சியாளர் குறித்துக்கொள்வார். பிறகுதான் அந்தப் பெண் கூறவந்தது என்ன என்பது அவருக்குப் புரிந்தது. அவள் கூறவந்தது என்னவென்றால் நான் குழந்தைகளைக் கவனித்துக்கொண்டிருந்ததால் பங்கெடுக்க முடியவில்லை அல்லது வீட்டைக் கவனித்துக்கொண்டிருந்ததால் பங்கெடுக்க முடியவில்லை; என் கணவர் தொழிற்சங்க உறுப்பினராக இருந்ததால் பங்கெடுத்தார் என்பதுதான். ஆராய்ச்சியாளர் இது குறித்து , ‘அதை நான் கணிப்பில் எடுத்துக்கொள்ளவில்லை காரணம் அது என் முனைவர் ஆராய்ச்சி நூல் அல்லது ஆராய்ச்சிக்குள் வரவில்லை. எத்தனை பெண்கள் தொழிற்சங்கக் கூட்டங்களில் பங்கெடுத்தனர் என்பதை அறிவதுதான் என் குறிக்கோளாய் இருந்தது,’ என்று எழுதினார்.
உணர்ச்சிகளும் உணர்வுகளும் கொண்ட அம்சங்களிலும் மற்றவைகளிலும் ஆராய்ச்சியாளருக்கு ஆர்வம் இருக்கவில்லை. ஊர்மிளா பவார் “நாங்களும் வரலாறு படைத்தோம்” புத்தகத்தை எழுதியபோது அம்பேத்கர் இயக்கத்திலிருந்த பெண்களைக் கண்டு நேர்காணல் செய்ய விரும்பினார். அந்தப் பெண்களைத் தேடியபோது பல தலித் ஆண்கள் அவரிடம், ‘என்ன சொல்கிறீர்கள்? கூட்டங்களில் கலந்துகொண்ட பெண்கள் யார்? எந்தப் பெண்கள் அவர்கள்? அவர்கள் இயக்கத்திலேயே இருக்கவில்லை’ என்றார்கள். ஆனால் அவர் அந்தப் பெண்களைத் தேடிக் கண்டுபிடித்தார். அவர்களிடம் கூட்டங்களுக்குப் போனீர்களா என்று கேட்டபோது, ‘நாங்கள் கூட்டங்களுக்குப் போகவில்லை. ஏனென்றால் வயல்களில் வேலை செய்ய வேண்டியிருந்தது’ என்றார்கள். ஆனால் அம்பேத்கரின் இயக்கத்துக்கு வேறு பலவகைகளில் அவர்கள் பங்களித்தார்கள் என்பதை அவர் கூறியிருக்கிறார். அம்பேத்கரிடம் நேரடியாகப் பேசிய பெண்கள் உண்டு. அவர்கள் அவரிடம் அப்படிப் பேச முடியும், அவர் கேட்கவும் செய்வார். ஒவ்வொரு கூட்டத்திலும் அம்பேத்கர், உங்கள் மனைவிமார்களை அழைத்து வாருங்கள் என்று கூறுவார். ஊர்மிளா பவாரிடம் பேசிய ஒரு பெண்மணி, அவர்களைக் கூட்டத்துக்கோ வேறு ஏதாவது வேலைக்கோ அழைக்கச் சிலர் வரும்போது, கணவர் இயக்கத்தில் இல்லாதவர் என்றால், ‘போ, போ, உன் காதலர்கள் வந்திருக்காங்க” என்று இடக்காகப் பேசுவார் என்று கூறியிருக்கிறார். வெளியே போகும் பெண் நடத்தை கெட்டவள் என்றே கருதப்படுகிறாள். இதையெல்லாம் பெண்கள் எதிர்கொள்ள நேர்ந்தது.
கே: நான் சரியாகப் புரிந்துகொண்டிருக்கிறேன் என்றால், அந்தரங்க வெளி, பொது வெளி இவற்றை இணைந்த ஒன்றாக நீங்கள் பேசுவது ஸ்பாரோ வேலையும் உங்கள் எழுத்தும் ஒன்றோடொன்று கலந்திருப்பதை ஒத்திருக்கிறது. இதை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்? அது பிரக்ஞைபூர்வமாகச் செய்த தீர்மானம்தானா?
ப: ஆமாம்; அது அப்படித்தான் இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். அது எப்போதும் நம்மைக் கைவிடாது. நாம் எப்படி நம்மைச் சுற்றியுள்ளதை நோக்குகிறோம் என்பதில் அது இருக்க வேண்டும். ஓர் எழுத்தாளரிடம் எப்படி வீட்டையும் கவனித்துக்கொண்டு எழுதவும் செய்தீர்கள் என்று நான் கேட்க மாட்டேன்; அவராகச் சொல்ல விரும்பினால் சரி, அல்லது அது குறிப்பிட்ட தருவாய்க்குத் தேவையென்றால் மட்டுமே. எந்த நேரத்தை எழுதத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்று கேட்பேன், எப்படி எழுதினீர்கள் என்று கேட்பேன். அல்லது ஆண் ஒருவரைப் பேட்டி காணும்போது அவரையும் கேட்பேன், குடும்பத்தையும் வைத்துக்கொண்டு எப்படி எழுதினீர்கள் என்று. சில சமயம் பெண்களே அது குறித்துப் பேசுவார்கள். ஊர்மிளா பவார் இரவில்தான் எழுதுவார். யாருக்கும் விளக்கைப் போட்டால் பிடிக்காது என்று மெழுகுவத்தி ஒளியிலோ டார்ச் வைத்துக்கொண்டோ எழுதுவாராம். திருமணம் பல மாற்றங்களை எழுத்து வாழ்வில் கொண்டுவருகிறது; நான் இப்படியெல்லாம் எழுதினேன் என்பது பற்றி எல்லாம் அவரே கூறுவார்.
அநுத்தமா என்ற எழுத்தாளர் வெளி முற்றத்தில் உட்கார்ந்து கொண்டு எழுதும் அழகான புகைப்படம் ஒன்று இருக்கிறது என்னிடம். பழைய தமிழ்ப் பத்திரிகைகளில் ஆண் எழுத்தாளர்கள் மேசை அருகே அமர்ந்து எழுதுவதுபோல் ‘’போஸ்” கொடுத்துப் புகைப்படங்கள் வெளியாகும். பெண் எழுத்தாளர்களின் அப்படிப்பட்டப் புகைப்படம் ஒன்று கூடக் கிடையாது! அதையெல்லாம் எடுக்கவேயில்லை. (சிரிக்கிறார்) எனக்குக்கூட எழுத ஒரு மேசை கிடையாது. வீட்டில் மேசை இருந்தாலும் ஒரு பலகையை மடியில் வைத்துக்கொண்டு கீழே உட்கார்ந்து எழுதுவதுதான் பிடிக்கும். முதலில் கையால் எழுதி பிறகுதான் கணினியில் ஏற்றுகிறேன். இப்போது கடந்த பிறந்த நாளுக்கு மடக்கு மேசை ஒன்றை என் குடும்பம் பரிசாகத் தந்தது. அந்தக் காலத்தில் கணக்கர்கள் வைத்துக்கொள்வது போன்ற மேசை. இப்போது அதை உபயோகிக்கிறேன். ஆனால் அது ஒன்றும் எனக்குப் பிரச்சனையாக இருக்கவில்லை. மேசைமேல் எழுதுவது எனக்குக் கஷ்டமாக இருக்கிறது. உட்கார்ந்து எழுதுவது சௌகரியமாக இருக்கிறது. இப்போதும் அப்படித்தான் எழுதுகிறேன்.
கே: புனைகதைகள் எழுதுபவராக இருக்க ஸ்பாரோ ஆவணக்காப்பகம் உங்களுக்கு எவ்வாறு உதவுகிறது?
ப: நாங்கள் சேகரித்திருக்கும் நேர்காணல்களிலிருந்து என் எழுத்தில் கொண்டுவருவது கிடையாது. ஒரு பெண்ணின் வாழ்க்கையைக் கதையாக எழுதினால்கூட அதைச் செய்வது நெறிமுறையன்று. அதை நான் செய்வது இல்லை. நான் எழுதும் கதாபாத்திரங்கள் என் சொந்த அனுபவங்களினூடே சந்தித்தவர்கள்தாம். ஸ்பாரோ ஆவணக்காப்பகத்தில் உள்ள குறிப்பிட்ட ஒரு பெண்ணைப் பற்றி நான் கதை எழுதினால் அது சரியில்லை; காரணம் ஆராய்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்று அவர்களிடம் கூறியிருக்கிறோம்.
பெண்களைப் பற்றிப் பொதுவாகத்தான் எழுதியிருக்கிறேன். “அணில்” கதையில் ஆராய்ச்சி மூலம் நான் அறிந்த, பொது வெளியில் இருந்த பல பெண்களைப் பற்றிக் கூறுவேன். அதைப் பற்றி எழுதலாம். ஒரு குறிப்பிட்ட பெண்ணின் வாழ்க்கையைப் புனைகதையாக்க மாட்டேன் என்று சொல்லவருகிறேன். பொது வெளியில் பல தகவல்கள் உள்ளன. அதைப் பயன்படுத்திக் கொள்வேன்.
கே: மற்ற நிறுவனங்களுடன் இணைந்து வேலை செய்த முக்கியமான சிறப்புமிக்க அனுபவங்கள் உண்டா? அது குறித்துப் பேச விரும்புகிறீர்களா?
ப: இதுவரை யாருடனும் இணைந்து வேலை செய்ததில்லை. மிஷிகன் பல்கலைக் கழகத்துடன் “உலகளவில் பெண்ணியங்கள்” என்ற திட்டப்பணியில் வேலை செய்தோம். நாங்கள் தேர்வு செய்த பத்துப் பெண்கள் பற்றிய ஆவணப்படங்கள் எடுத்தோம். நாங்கள் இது பற்றி பேச்சுவார்த்தை ஆரம்பித்தபோது அவர்கள் குறிப்பிட்ட பாதீட்டைவிடச் சற்று அதிகமாகக் கேட்டபோது ஒப்புக்கொண்டார்கள். ஆனால் சில நிபந்தனைகள் உண்டு என்றேன். என்ன நிபந்தனைகள் என்று கேட்டார்கள். காரணம் அமெரிக்கா, சீனா, போலந்து, இந்தியா என்று நான்கு நாடுகள் பங்குகொண்ட திட்டப்பணி அது. அமெரிக்கா தரப்பிலிருந்து பங்குபெற்ற மிஷிகன் பல்கலைக்கழகம் நிதியைத் தந்தது. நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் எங்கள் நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. முடிவில் நாங்கள் செய்த படங்கள் மிகச் சிறப்பானவை என்று ஏற்றுக்கொள்ளப்பட்டன.
கே: நிதியுதவி, தொழில்நுட்பம் இவற்றைப் பொருத்தவரை பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும் நிலையில் ஸ்பாரோவின் எதிர்காலம் எப்படி இருக்குமென்று நினைக்கிறீர்கள்?
ப: தொழில்நுட்பத்தைப் பொருத்தவரை எனக்குக் கவலை கிடையாது. ஏனென்றால் எண்மமாக்கல் எங்களுக்கு மிகப் பிடித்த வேலை. ஸ்பாரோவின் எண்ம ஆவணக்காப்பகத்தை ஆரம்பித்து எனக்குத் தெரிந்த முறையில் இயங்கலையில் அதை வைக்க எங்களுக்கு விருப்பம். நேர்காணல்களிலிருந்து பகுதிகள், தரவிறக்கம் செய்ய முடியாதபடி வடிவங்கள், உள் நுழைந்து, பதிவுசெய்துகொண்டு படிக்கக்கூடிய குறிப்பிட்ட பொருள்களைக் குறித்த கட்டுரைகள் இவ்வாறு அமைக்கலாம். இந்தக் கட்டுரைகள் பொது வெளியில் ஏற்கெனவே உள்ளவைதாம். எங்கள் ஆவணப்படங்களை தரவிறக்கம் செய்யமுடியாதபடி பதிவேற்றம் செய்யலாம். யூட்யூபில், ஸ்பாரோவின் ஆறு அல்லது ஏழு உரையாடல்கள் உள்ளன. நாங்கள் ஏற்கனவே எண்மமாக்கியவை உள்ளன. தொழில்நுட்பம் என்னைப் பயமுறுத்தும் ஒன்றாக இல்லை.
என்னைப் பயமுறுத்துவது நிதியுதவிதான். ஒரு பெரிய நிறுவனத்தின் ஓர் அங்கமாக நாங்கள் இல்லை. அது குறித்து மகிழ்ச்சிதான். காரணம் ஒரு பெரிய நிறுவனத்தின் அங்கமாக இருந்திருந்தால் ஆவணக்காப்பகத்தை விருப்பம்போல் கொண்டுசென்றிருக்க முடியாது. இது எங்களுக்கு அதிக சுதந்திரத்தை அளித்துள்ளது. ஆனால் நான் செய்ய விரும்புவது வைப்பு நிதியை உருவாக்குவதுதான். திட்டப்பணிகளுக்கு வரும் நிதியுடன் வைப்பு நிதியின் வட்டியிலிருந்து ஸ்பாரோவை நடத்த முடியும். கடந்த ஆண்டு எனக்கு 73 வயதாயிற்று. 75 வயதாகும் முன்பு வைப்பு நிதியை உருவாக்க நினைக்கிறேன்.
ஆவணக்காப்பகத்துக்கு நான் தினமும் போகிறேன். இணைந்து வேலை செய்கிறோம் எல்லோரும். இணை நிறுவனர் ஒருவரும் உண்டு. மற்றவர்களும் உண்டு. இன்னொரு நபரைப் பயிற்றுவிக்க விரும்புகிறேன். ஏனென்றால் இணை நிறுவனர் என்னிடத்தை எடுத்துக்கொண்டால் அவர் இடத்தை நிரப்ப அர்ப்பணிப்பு உணர்வு உள்ள ஒருவர் தேவைப்படுவார். அவர்களுக்கு நான் வேலை செய்த முறைகளில் பயிற்சி தர வேண்டும். அடுத்த இரண்டொரு ஆண்டுகளில் இதுதான் நான் செய்யவேண்டியது என்று நினைக்கிறேன். நிதி உதவிதான் மிகக் கடினமான ஒன்றாகத் தோன்றுகிறது.
பல தனியார் பல்கலைக்கழகங்களை அணுகியிருக்கிறேன். ஆனால் நிதியுதவி பெறுவது எளிதாக இல்லை. பெருநிறுவனங்களிலிருந்து நிதியுதவி பெறுவது அதை விடக் கடினம். ஒவ்வோர் ஆண்டும் எழுதிக் கேட்க வேண்டும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கான பெரிய கண்காட்சிகளுக்குப் போயிருக்கிறோம். நம்மிடம் வந்து சிறப்பான வேலை என்பார்கள் ஆனால் நிதியுதவி செய்யத் தயாராக இருக்கமாட்டார்கள். பெரிய நிறுவனங்கள் இதில் வந்துள்ளன. அவர்களுக்குத் தங்கள் சொந்தத் தொண்டு நிறுவனங்கள் உண்டு. அதில் அவர்கள் பணம் போடுவார்களே ஒழிய நமக்குத் தர மாட்டார்கள். கஷ்டம்தான். HIVOS ஆதரவு இருந்தபோது பெரிய குழு இருந்தது வேலை செய்ய. பிறகு அதைக் குறைக்கவேண்டி வந்தது. மற்றவர்கள் எங்களை எவ்வாறு நோக்குகிறார்கள் என்பதையும் அது பொருத்தது. தோரப்ஜி டாட்டா அறக்கட்டளை மூன்றாண்டு காலம் எங்களை ஆதரித்தது.
பெண்ணியவாதிகள் குறித்த பயமும் இருக்கிறது. எனக்கு நினைவிருக்கிறது. நாங்கள் கண்காட்சி ஒன்று நடத்தியபோது ஒரு சிறிய தொகைக்காக அறக்கட்டளை ஒன்றை அணுகியிருந்தோம். காசோலையைப் பெற்றுக்கொள்ள நான் சென்றிருந்தேன். அதன் நிறுவனரே காசோலையை அளிக்க வந்தார். அப்போது கூறினார்: அந்தப் பெண்ணியவாதிகளில் ஒருவர் நீங்கள் இல்லை என்று நம்புகிறேன். ஏன் என்று கேட்டேன். காசோலையை நான் வாங்கிக்கொண்டாகிவிட்டது. பெண்ணியவாதிகள் குடும்பங்களைக் குலைப்பவர்கள் என்றார். அப்படியா என்றுவிட்டு வெளியே வந்துவிட்டேன். எப்படியும் என் கையில் காசோலை இருந்தது. இப்படிப்பட்ட அவமதிப்புகளையும் எதிர்கொள்ளவேண்டும்.
பெண்கள் அமைப்புகளையும் அணுகுகிறேன் ஆதரவு தேடி. சில குழுக்கள் மார்ச் மாதம் 8ந் தேதி ஏதாவது படம் காட்டும்படி எங்களைக் கேட்கும். அவர்கள் தேர்வு செய்யும் படம். படத்தைத் திரையிட ஆயிரம் ரூபாய் கேட்போம். தருவார்கள். அப்போது சொல்வோம்: நவராத்திரிக்கு எவ்வளவோ பணம் செலவழிக்கிறீர்கள். ஒவ்வொருவரும் துணிமணிக்குச் செலவு செய்கிறீர்கள். உங்கள் குழுவில் 80 உறுப்பினர்கள் உண்டு; ஒவ்வொரு நவராத்திரிக்கும் ஒவ்வொருவரும் ஆயிரம் ரூபாய் போட்டு ஸ்பாரோவுக்குத் தாருங்கள். ஆனால் எல்லோரிடமும் இப்படிச் சொல்ல மாட்டோம். எங்கள் குடும்பத்தில் யாருக்கு வேலை கிடைத்தாலும் முதல் சம்பளம் வந்தவுடனேயே நான் போய் ஸ்பாரோவுக்காக நிதி கேட்பேன். எல்லோரும் என்னைக் கண்டதும் ஓடுவார்கள்! யாரையும் விடமாட்டேன். ஆனால் என் நண்பர்கள் சிலர் மிகவும் நல்லவர்கள். திருமண ஆண்டு விழாவுக்கு ஸ்பாரோவுக்கு பத்தாயிரம் அனுப்புவார்கள். இப்படி நண்பர்கள் ஆதரவு உண்டு.
[1] இயங்கலை- Online