“உலக இலக்கியத்தின் பரந்த பின்புலத்தில் தமிழ் இலக்கியத்தை வைத்துப் பார்க்கிறேன்”

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் நம்பி கிருஷ்ணன் நேர்காணலின் சுருக்க வடிவம் தமிழ் இந்து தீபாவளி மலர் 2020-இல் வெளியானது. நன்றி, தமிழ் இந்து.

சொல்வனம் இணைய இதழில் வெளியான தமிழ் மொழிபெயர்ப்பு ஒன்றின் மூலம் எழுத்துலகில் நுழைந்தவர் நம்பி கிருஷ்ணன். கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் என அவ்விதழுக்குத் தொடர் பங்களிப்பாளராகப் பரிணமித்த அவரது உலக இலக்கியம் குறித்த விமர்சனக் கட்டுரைகள் ‘பாண்டியாட்டம்’ என்ற பெயரில் (யாவரும் பதிப்பக வெளியீடு) நூலாக வெளியாகியிருக்கிறது. நகுல்வசன் என்ற பெயரில் தமிழ்ப் புனைவுகளையும், Nakul Vāc என்ற பெயரில் ஆங்கில மொழியாக்கங்களையும் இவர் மேற்கொண்டுவருகிறார். “தீவிர வாசிப்பும், செறிவான புரிதலும், அந்தப் புரிதலை நூறு சதவீதம் தமிழில் வெளிப்படுத்தும் மொழித்திறனும், சிறந்த மொழியாக்கமும் கொண்ட ஒருவர்,” என்று இவரை எஸ். ராமகிருஷ்ணன் மதிப்பிடுகிறார். அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் வசித்துவரும் நம்பி கிருஷ்ணனுடன் மின்னஞ்சல் வழி மேற்கொண்ட உரையாடலில் இருந்து:

உங்கள் வாசிப்பின் தொடக்கம், வளர்ச்சி ஆகியவை குறித்துப் பகிர்ந்துகொள்ள முடியுமா?

என் ‘வாசிப்பு வாழ்க்கையை’ நினைத்துப் பார்க்கும்போது, இன்னும் சீக்கிரமே ஏன் தீவிர இலக்கியம் வாசிக்கவில்லை என்பதுதான் என் மிகப் பெரிய வருத்தமாக இருக்கிறது. காமிக்ஸ்களில் இருந்துதான் என்னுடைய வாசிப்பு தொடங்கியது; பத்தாம் வகுப்புவரை காமிக்ஸ்களைத்தான் வாசித்தேன். Asterix, Tintin, Amar Chitra Katha, Phantom, Mandrake, Richie Rich போன்ற ஆங்கில காமிக்ஸ்களைத் திரும்பத் திரும்பப் படித்திருக்கிறேன். அதுபோகத் தமிழ்ப் பத்திரிகைகளில், அதிலும் குறிப்பாகக் குமுதத்தில் வரும் கிளுகிளுப்பான விஷயங்களில் கவனம் செலுத்தியிருக்கிறேன். அப்பா மேகசின் அலவன்ஸ் தயவால் வாராவாரம் வந்து கொண்டிருந்த இதழ்களையும் அம்மாவும் பாட்டியும் படித்த இந்துமதி, வாஸந்தி ஆகியோரின் புத்தகங்களையும் அவ்வப்போது புரட்டியதாக நினைவு. சுஜாதாவின் சில கதைகளைப் படித்தேன் என்று நினைக்கிறேன்; நிச்சயம் கணேஷ் வசந்த் நாவல்களாகத்தான் இருந்திருக்க வேண்டும். கமலா சடகோபனின் கதவு படித்தது மிக நன்றாக நினைவிருக்கிறது. எப்போதாவது சிட்னி ஷெல்டன், இர்விங் வாலஸ், ஹரால்ட் ராபினஸ் வாசித்தது உண்டு. அவற்றையும்கூட அவற்றின் மிக முக்கியமான, காம உணர்வுகளை விவரிக்கும் இடங்களுக்காகத்தான்.

ஆனால், குழந்தைப் பருவத்தில் என் தாத்தாவிடம் கதை கேட்டது என்னுடைய அதிர்ஷ்டங்களுள் ஒன்று; அவர் நல்ல கதைசொல்லி. பல இரவுகள் கதை கேட்டுவிட்டு அவருடனேயே தூங்கிவிடுவேன். எப்போதும் அவர் மகாபாரதக் கதைகள் சொல்வார். அபிமன்யு, கடோத்கஜன், ஏகலைவன், அர்ஜுனன், பீமன் பற்றிய கதைகள் எனக்குப் பிடிக்கும் என்பதால் அவற்றைச் சொல்லச் சொல்லி அவரைத் தொல்லை செய்தது நினைவிருக்கிறது. அதுபோக, அவர் ஷேக்ஸ்பியர் நாடகங்களையும் கதைகளாய்ச் சொல்வதுண்டு. அந்த வயதிலேயே Merchant of Venice, Hamlet, Macbeth கதைகளையும் சொல்லச் சொல்லி கேட்டுக்கொண்டிருப்பேன்.

இந்தப் பின்னணியில் இலக்கிய வாசிப்பு அறிமுகமானது எப்போது?

என் மாமா ஏராளமாய் வாசிப்பவர். இராயப்பேட்டையில், அந்தச் சாதாரணமான கட்டிடத்தின் முதல் மாடியில் இருந்த அந்த மிகச் சிறிய புத்தகக் கடைக்கு சென்னையின் சுட்டெரிக்கும் வெயிலில் அவரோடு சென்றது நினைவிருக்கிறது. அங்குதான் வரலாற்றுச் சிறப்புமிக்க க்ரியா இருந்தது. மிகச் சிறிய இடத்தில் எழுத்தாளர் திலீப் குமாரும் ராமகிருஷ்ணனும் சிகரெட் புகைசூழ வேலை செய்துகொண்டிருப்பார்கள், நானும் என் மாமாவும் அடுத்த அறையில் புத்தகங்களை மேய்ந்துகொண்டிருப்போம். க்ரியா ஒரு கண் திறப்பு அனுபவமாய் இருந்தது. அங்குதான் நான் சுந்தர ராமசாமியின் புத்தகங்களையும் ஸ்ரீராமின் மொழியாக்கங்களையும் அறிந்துகொண்டேன். தார்கோவ்ஸ்கியின் Sculpting in Time என்ற புத்தகத்தின் தமிழாக்கமும் அங்கேதான் கிடைத்தது.

புத்தகப் பதிப்புக்கு ஊக்குவிப்பு அளிக்காத, புத்தக வாசிப்புக்கு மதிப்புக் கொடுக்காத நம் சூழலில் க்ரியா போன்ற ஒரு முயற்சி இருந்தது என்பதே இப்போது பார்க்கும்போது திகைக்கச் செய்கிறது, அது இப்போதும் தொடர்வது ஒரு அதிசயம்தான். எழுத்தாளனாக இருக்கட்டும், இல்லை வாசகனாக இருக்கட்டும், கோட்பாட்டு நம்பிக்கைகள் எவை என்பது ஒரு பொருட்டல்ல. இங்கு அடிப்படையில் அவையிரண்டும் நன்நம்பிக்கை கொண்ட கற்பனை சார்ந்த இயக்கம். என்னளவில் அத்தகைய கற்பனையின் உச்சமாகக் க்ரியா இருந்தது.

அந்தச் சமயத்தில்தான் ஆங்கிலத்திலும் வாசிக்கத் தொடங்கினீர்களா?

களக்காட்டில் இருந்த எங்கள் உறவினர் ஒருவர் மூலமாகத்தான் என்னுடைய வாசிப்பில் திருப்புமுனை ஏற்பட்டது. அவர் அப்போது திருச்சியில் படித்துக் கொண்டிருந்தார். சென்னை வரும்போதெல்லாம் எங்கள் வீட்டில்தான் தங்குவார். அவர்தான் “தீவிர இலக்கியம்,” என்று சொல்லப்படுவதை எனக்கு அறிமுகப்படுத்தினார். இப்போதும் என்னால் அந்த வேட்டி கட்டிய உருவத்தைப் பார்க்க முடிகிறது, டைனிங் டேபிள் சேர்கள் ஒன்றில் அமர்ந்திருப்பார், கையில் கம்யு-வின் (Camus) Rebel நூலின் பெங்குவின் பதிப்பு, ஆழ்ந்த கவனத்துடன் வாசிக்கும்போது அவரது கால் ஆடிக்கொண்டே இருக்கும். அவர்தான் The Myth of Sisyphus நூலை எனக்கு வாசிக்கக் கொடுத்தார். அவருக்கு வேலை கிடைத்ததற்குப் பரிசாக எனக்குச் சார்த்தின் (Sartre) Roads to Freedom trilogy நாவல்களில் ஒன்றைக் கொடுத்தார். ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறங்கள் கொண்ட அந்தப் பெங்குவின் பதிப்புகளின் முன்னட்டையை Juan Gris வரைந்த கியூபிச ஓவியங்கள் அலங்கரித்தன என்று நினைக்கிறேன். இருத்தலியல் இலக்கியத்திலிருந்து இலக்கிய வாசிப்பைத் தொடங்கியது ஒரு பிரதிகூலமாகவே இப்போது தோன்றுகிறது. ஆனால் ஏதோ பெரிய புரட்சிகரமான அத்துமீறலைச் செய்துகொண்டிருப்பதுபோல் பாவனை செய்வதற்கும் ஒரு விதமான மேட்டிமைத்தனத்தில் என்னை இருத்திக்கொள்வதற்கும் தேவையான ஆணவத்தை அவை எனக்களித்தன என்பதில் சந்தேகமில்லை.

வாசிப்பின் நினைவுப் பாதைகள் சுகமான வகையில் கிளை பிரிகின்றன, அதன் வெவ்வேறு கூறுகள் விரைந்து வந்து கூடுகின்றன. எனக்கு மட்டுமே அர்த்தமுள்ளதாக இருக்கும் நினைவுகளைத் தொடர்ந்து சென்றால் பேசி முடியாது. ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் சொல்லிவிட வேண்டும். நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் லாண்ட்மார்க் புத்தகக் கடையின் மதிப்பைக் குறைத்துப் பேச முடியாது. அது ஓர் இலக்கியக் கல்வி, ஆனால் அதுதான் எவ்வளவு அற்புதமாக இருந்தது. அந்நிய தேசத்துப் பெயர்களை ஒலிக்கும் அத்தனை அருமையான பிகாடோர் பதிப்புகள் — Canetti, Broch, Kundera, Klima, Marquez, Llosa, இன்னும் எத்தனை பேர்! அந்நாள்களில் இலக்கிய போதையில் இருந்த என் மனதில் அவை உச்சாடனம் செய்யத் தகுந்த பெயர்களாகவே இருந்தன.

கிட்டத்தட்ட ஒவ்வொரு வாரமும் நான் ஐஐடி விடுதியில் இருந்து லாண்ட்மார்க் செல்வதை வழக்கமாக வைத்திருந்தேன். என் விடுதி உணவுச் செலவுகளுக்காக அப்பா அனுப்பும் பணத்தில் மிச்சப்படுத்தியது தவணை முறையில் லாண்ட்மார்க்கில்தான் செலவானது. ஐரோப்பிய இலக்கியம், அறிவியல், கணிதப் புத்தகங்கள் என வரைமுறை இல்லாமல் வாசித்தேன். இது போதாதென்று வகுப்புக்கு மட்டம் போட்டுவிட்டு ஐஐடி மைய நூலகத்தில் சயிண்டிபிக் அமெரிக்கன் பத்திரிக்கையின் பழைய பிரதிகளை வாசித்துக் கொண்டிருப்பேன். மார்டின் கார்ட்னர், டக்ளஸ் ஹாஃப்ஸ்டேட்டர் ஆகியவர்கள் எல்லாம் எழுதிய அருமையான பத்திகளைத் தேடி வாசிப்பேன். எனக்கும் அப்போது என் சக மாணவனாக இருந்த நண்பர் அரவிந்துக்கும் அது ஒரு விருப்பப் பொழுதுபோக்காக இருந்தது.

இத்தகைய நெடிய வாசிப்புப் பின்புலத்தைக் கொண்டிருக்கும் நீங்கள், வாசிப்பில் இன்று வந்தடைந்திருக்கும் இடமாகக் கருதுவது எதை?

அப்போதெல்லாம் நான் தீவிர நவீனத்துவவாதியாக இருந்தேன்; அல்லது, அப்படி நினைத்துக் கொண்டிருந்தேன். இருபதாம் நூற்றாண்டுக்கு முன் எழுதிய எதையும் படிக்க வேண்டிய அவசியமில்லை என்று நினைத்தேன். அமெரிக்க, பிரிட்டிஷ் எழுத்தாளர்களைத் தாண்டி இலக்கியம் வெகு தொலைவு வந்துவிட்டது என்றும் நம்பினேன். வெகு காலம் கழித்து, மணமானபின் இலக்கிய விமரிசனம் எல்லாம் வாசிக்கும் பழக்கம் ஏற்பட்டபின்தான் இப்போது இலக்கிய மூலநூல்கள் (canon) என்று சொல்கிறோமில்லையா, படைப்பிலக்கியத்தின் ஆதிப் பிரதிகள், அதிலும் குறிப்பாக பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க ஆதிப்பிரதிகளை வாசிக்கத் துவங்கினேன் — சாஸர் மற்றும் ஷேக்ஸ்பியரில் துவங்கும் மகத்தான நாடக, கவிதை இலக்கிய மரபில் ஆரம்பித்து ரொமாண்டிக்குகள்வரை, அதன்பின் அமெரிக்கப் பக்கத்தில் விட்மன் எமர்சன் மற்றும் மெல்வில் ஹாதோர்னில் தொடங்கி அவர்களது இருபதாம் நூற்றாண்டு சிஷ்யர்கள் என்று இந்த ஆதிப் பிரதிகளின் எண்ணிக்கையே மலைக்க வைப்பது.

எனக்கென்று நான் தனிப்பட்ட மூலநூல் தொகையைச் சேகரித்துக்கொள்ளத் துவங்கியபோதுதான்—வாழ்நாள் நெடுக வாசிப்பதற்கென்று ஒரு நூற்பட்டியல், இறப்பதற்குள் படித்தேயாக வேண்டிய புத்தகங்களின் விருப்பப் பட்டியல் என்று வைத்துக்கொள்ளலாம் — தமிழ் மூலநூல் பட்டியலின் சில புத்தகங்களை நோக்கி அடியெடுத்து வைத்தேன். ஒரு காலத்தில் தமிழ் அகராதியின் துணையுடன் குறுந்தொகை முழுவதையும் படிக்க முயற்சி செய்தேன். அப்போதுதான் என் தாய் வழித் தாத்தாவிடம் தமிழ் செவ்விலக்கியம் கற்றுக் கொள்ளவில்லையே என்று வருத்தப்பட்டேன். அவர் ஒரு சிறந்த கம்பராமாயண, வைணவ பக்தி இலக்கிய அறிஞர்.

குறுந்தொகையை அகராதியின் துணையோடு படிக்க முயன்றதை இப்போது திரும்பிப் பார்க்கும்போது படுமுட்டாள்தனம் என்று தோன்றுகிறது. ஆனால் நியாயமாகப் பார்த்தால், எல்லாம் விரல் நுனிக்கு வரும் கூகுள் காலத்துக்கு முன்செய்த முயற்சி இது. துறவின் மகோன்னதத்தின் சாயல்கூட இதில் இருக்கலாம் என்று எனக்கே ஆறுதல் சொல்லிக் கொள்கிறேன், அத்தனை முன்யோசனையில்லாமல் இறங்க எத்தனை ஆர்வம் இருக்கவேண்டும், இல்லையா? ஆனால் ஒரு விஷயத்தை ஆழ்ந்து படித்து, இலக்கியம் என்று சொல்லப்படுவதில் கிட்டும் கடினமான, ஆனால் நிலைத்த இன்பத்தைச் சுவைப்பது என்றால் அதற்கு ஒரு சிறிதளவாவது கிறுக்குத்தனம் இருக்க வேண்டும். இந்த இன்பத்தை நபக்கோவ் மிகத் துல்லியமாக, ‘முதுகெலும்பின் உச்சி நுனியில் அனுபவப்படும் சிலிர்ப்பு’ என்று அடையாளப்படுத்தினார். அந்த இன்பம் மட்டுமே இலக்கியத்தில் பிரதானம். கற்பனை நவிற்சி உணர்வுகொண்டு அதன்மீது நாம் ஏற்றும் அத்தனை மகத்தான சங்கதிகளும் உண்மையில் அவை என்றேனும் ஒரு நாள் அடையப்பட்டாலும்கூட, மதிப்புக் கூட்டப்பட்ட இலவச இணைப்பு மட்டுமே.

வாசிப்பில் இன்று வந்தடைந்திருக்கும் இடம் என்று சொன்னீர்கள் இல்லையா, எல்லாவற்றையும் ஒரு பருந்துப் பார்வையில் மதிப்பீடு செய்யக்கூடிய ஏதோ ஓர் உயர்ந்த படிநிலையை அடைந்துவிட்டது போன்றதோர் உணர்வு, வந்தடைந்திருக்கும் இடம் என்று சொல்லும்படியாக எதுவும் இல்லை. என் இளம் வயதில் ஒரு வகை இலக்கியம் வாசித்தேன். அப்போது நான் மேம்பட வேண்டும், இந்த உலகை நான் மேம்படுத்த வேண்டும் என்ற கனவுகள் எனக்கு இருந்திருக்கலாம், அது ஒரு பேதமை உணர்வுடன்கூடிய உத்வேகமும் அளித்திருக்கலாம். இப்போது வயதாகிவிட்டதால் நான் வெறும் வாசிப்பின்பத்துக்கு மட்டுமே படிக்கிறேன்.

நான் படிப்பதைப் பற்றி எழுதுவது என் வாசிப்புப் பழக்கத்தை மாற்றியிருக்கிறது. ஒரே எழுத்தாளரின் பல படைப்புகளைத் தொடர்ந்து வாசிக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துகிறது. இதனால் தவிர்க்கவே முடியாமல் என் வாசிப்பு கவனம் குவிந்ததாய் மாறியிருக்கிறது . முன்பு அவ்வப்போது வெவ்வேறு படைப்புகளை வாசிக்கும்போது தவறவிட்டிருக்கக்கூடிய பல பொதுச் சரடுகளை, குறிப்பிட்ட ஓர் எழுத்தாளரின் தொகை நூல்களை, வாசிக்கும்போது உணரும் வாய்ப்பு இயல்பாய் அமைந்துவிடுகிறது.

இதைச் சொல்லும்போது இப்போது நான் கம்யு-வின் Everyman’s Library editionஐ மீண்டும் வாசித்துக் கொண்டிருப்பதையும் சொல்ல வேண்டும். சிறப்பிதழ் ஒன்றைத் தொகுப்பதற்கான ஆயத்தப்பணியாய் இந்த வாசிப்பு தொடர்கிறது. அப்படிப் பார்த்தால் நான் ஒரு முழுவட்டம் சுற்றிவிட்டேன். வாசிப்பின் வேறொரு வடிவம்தான் எழுத்து என்பதை இது சுட்டுவது போலிருக்கிறது. என்னளவில், வாழ்க்கையின் மிகப் பெரிய அங்கம் வாசிப்புதான் என்பதால் வாழ்வை இப்படியும் வாசித்துப் பார்ப்பது மகிழ்வூட்டுவதாக இருக்கிறது.

‘இணையத்தில் எழுதுவது ஒருபோதும் மீறல் உணர்வு அளித்ததில்லை,’ என்று பாண்டியாட்டம் நூலின் முன்னுரையில் எழுதியிருக்கிறீர்கள். ஆனால், இணையத்தில் எழுதுவது எந்தக் கட்டுப்பாடுகளும் இன்றி சுதந்திரமாக இயங்கச் செய்கிறது என்பது இணையத்தில் எழுதும் பெரும்பாலானோரின் கருத்து. உங்களுக்கு அப்படித் தோன்றியது ஏன்?

நம்மைச் சுற்றி இணையம் நீக்கமற நிறைந்திருக்கிறது. சமூக ஊடகத்தைத் தப்பமுடியாது. நம் எழுத்தின் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் பாராட்டும் ஒரு சிறு கூட்டத்தை நம்மால் சேகரித்துக் கொள்ளமுடிகிறது என்பதால் நாம் எல்லாரும் எழுத்தாளர்களாகிவிட்டோம். ஒரு வகையில் இது வரவேற்கத்தக்க விஷயம். இணைய இதழ்களில் எழுதுவதில் பெரும் தயக்கங்கள் இருந்ததாகத் தெரியவில்லை என்று இதை மனதில் வைத்துதான் கூறினேன். (ஆனால் தமிழில் எழுதுவதில் சில தயக்கங்கள் இருந்தன.) ஆனால் இணையத்தில் எழுதுவதிலிருந்து நேரடியாக அச்சுப் புத்தகத்துக்குப் போய் நம் பெயர் ஒரு புத்தகத்தின் அட்டையில் இடம்பெறுவதைப் பார்ப்பது ஒரு மீறல் உணர்வைத் தருகிறது.

ஒரு படைப்புக் குறித்து நீங்கள் எழுதும்போது, அது அந்தப் படைப்பின் மீதான உங்கள் வாசிப்பில் தாக்கம் செலுத்துகிறதா? அதாவது வாசிப்பில் நீங்கள் கண்டடைந்த விஷயங்களை, எழுத்து இடையீடு செய்து அவை சார்ந்த எண்ணங்கள்/ கருத்துகளை மறுபரிசீலனைக்கு உட்படுத்துகிறதா? சுருக்கமாக, எழுத்து உங்கள் வாசிப்புக்கு எப்படி உதவுகிறது?

எழுதுவதற்காகப் படிப்பது என்பது கவனம் குவித்துச் செய்யவேண்டிய பயிற்சியாக இருக்கிறது. நாம் நம்மை முறைப்படுத்திக் கொள்கிறோம், குறிப்பெடுக்கிறோம், மீண்டும் வாசிக்க வேண்டிய பகுதிகளை அடிக்கோடு இடுகிறோம், பிற ஆக்கங்களுடன் இங்குள்ள விஷயங்களுக்குத் தொடர்பிருக்கலாம் என்பதை அனுமானிக்கிறோம். நீங்கள் எழுதப்போகும் கட்டுரை யாரைப் பற்றி இருக்கப் போகிறதோ, அவரது புத்தகங்களில் நான்கைந்தையாவது படிப்பது என்று வைத்துக்கொண்டால், நாம் ஒன்றிலிருந்து மூன்று மாதங்கள்வரை அவருடன்தான் இருக்கப் போகிறோம். அந்தச் சமயத்தில் நம் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொன்றும் அந்த ஒரு லென்ஸில் புகுந்து வருகிறது, அப்படி முறிவுற்ற ஒளி நாம் எழுதிக் கொண்டிருக்கும் கட்டுரையிலும் பிரதிபலிக்கிறது. இதை எல்லாம் திட்டமிட்டுச் செய்வதில்லை.

பெல்லோ (Saul Bellow) கட்டுரையின் இறுதிப் பகுதி இதற்கு ஒரு நல்ல உதாரணம். அப்போது, 2016 அமெரிக்கத் தேர்தல் முடிவுகளின் காயம் அந்தக் கட்டுரைக்குள் புகுவதைத் தவிர்க்க முடியவில்லை. அது ஏதோ தரையில் ஊறும் தண்ணீர்போலச் சத்தமில்லாமல் இருப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதுவரை ஒரு துதிக்கட்டுரையாக இருந்து வந்ததன் தொனியை மாற்றுவதாக அமைந்துவிட்டது அந்தத் தேர்தல் அனுபவம். இறுதியில் இடம்பெறும் கோடா என்று தலைப்பிடப்பட்டிருக்கும் பகுதி பெல்லோமீதும் அவர் உருவாகிவந்த அமெரிக்க சமுதாயத்தின்மீதும் வைக்கப்பட்ட விமரிசனம் மட்டுமன்று, என் முந்தைய வாசிப்புகளின்மீதான விமரிசனமும்கூடத்தான். இந்தக் கட்டுரை விஷயத்தில் நிச்சயம் நான் அதை எழுதிக் கொண்டிருந்தேன் என்பது எப்படிப் படிக்கிறேன் என்பதன்மீது தாக்கம் செலுத்தியது.

அதேபோல், பெரெக் (Georges Perec) கட்டுரையை எப்படித் துவக்குவது என்பதற்கு ஒரு சரியான நடையைத் தேர்ந்தெடுக்கும்போதுதான் அவரது சாதனை எவ்வளவு கடினமானது என்பதை உணர்ந்தேன். பாத்ரூம் பண்டப் பட்டியல் என்று விளையாட்டாய்ச் சொல்லிக்கொள்கிறேன், ஆனால் அதில் ஒரு கவிதை இருக்கிறது. நமக்கு வெளிப்படையாய்த் தெரிவதில்லை, ஆனால் எழுதுவதற்கும் வாசிப்பதற்கும் மிகவும் நெருக்கமான தொடர்பு இருக்கிறது. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. நாம் எழுதும்போதும் வாசிக்கும்போதும் நாம் வாழ்வையும் அது எதன் அங்கமாய் இருக்கிறதோ, அந்த உலகையும், அர்த்தப்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறோம். எனவே ஒன்றன் நிழல் மற்றதன்மீது சாயவே செய்யும்.

ஒரு விஷயத்தில் எழுத்து என் வாசிப்பில் ஒரு முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தியது. பிரதிகளைத் தொடர்புபடுத்தி வாசிக்கும் திறன் எழுதுவதால் சற்று கூர்தீட்டப்பட்டது. தமிழில் எழுதுவது இந்த ஊடுபிரதி வாசிப்பின் எல்லையை மேலும் விரிவு படுத்தியது. வாலஸ் ஸ்டீவன்ஸ் (Wallace Stevens) கட்டுரையின் பாரதி பகுதி இதற்கு நல்லதோர் உதாரணம். அந்தக் கட்டுரை திருப்தியான வகையில் முடிவதாய்த் தெரியவில்லை. தமிழ்க் கவிதைக்குத் திரும்பி அது பற்றிச் சிறிது யோசிக்க நேர்ந்ததன் முடிவுகள் எனக்கே ஆச்சரியமாய் அமைந்தன. அது குருட்டு யோசனையாகவே இருந்துவிட்டுப் போகட்டும், எனக்கு எது முக்கியமாக இருந்தது என்றால், அந்த ஒரு திருப்பம்தான், வெளியிருந்து தமிழுக்குள் புகுவது. ஒரு வகையில் இந்தக் கட்டுரைகளைத் தமிழில் எழுதுவதன் நோக்கங்களில் அதுவும் ஒன்று என்று சொல்லலாம். உலக இலக்கியத்தின் பரந்த பின்புலத்தில் தமிழ் இலக்கியத்தை வைத்துப் பார்ப்பது.

எழுதுவது கஷ்டமாக இருக்கிறது எனபதைத் தான்சுற்றி வளைத்துக் கூறுவதாகத் தோன்றுகிறது. ஆனால் அதற்கென்று வாசிப்பதும் அது எதிர்பாராத திசைகளில் திரும்பிச் சென்றதும் மிகவும் சுகமான அனுபவங்களாக இருந்தன. எனவே, எழுதுவதும் ஒரு வகையான ‘கடின இன்பம்’ என்பதுடன் நிறுத்திக் கொள்கிறேன்.

உங்கள் எழுத்துமுறையை எப்படிக் கைகொண்டீர்கள்? உங்களுடைய நீண்டகால வாசிப்பில் யாரிடம் இருந்தெல்லாம் எழுத்துக்கான ஊக்கத்தைப் பெற்றிருப்பதாக நினைக்கிறீர்கள்?

எழுத்தில் அப்படியெல்லாம் எதுவும் கைவசப்பட்டதாய் நினைக்கவில்லை. சொல்வனத்தில் எழுதுவதற்குமுன் நான் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் தமிழில் எதுவும் எழுதியிருக்கவில்லை. சொல்வனம் இதழுக்கு ஒரு வார இறுதியில் முயற்சிசெய்த தமிழாக்கம் பற்றி இன்னும் நினைவிருக்கிறது. அது மூன்று பக்கக் கதைதான். ஆனால் மலையேறுவதுபோல் கடினமாக இருந்தது. என் தாய்மொழியில் என்னிடம் எஞ்சியிருந்த கொஞ்சநஞ்ச எழுத்தாற்றலை மீட்டுக்கொள்ளும் பயிற்சியாகவே சொல்வனம் மொழிபெயர்ப்பை எடுத்துக்கொண்டேன்.

தொடர்ந்து தமிழாக்கங்களை முயற்சி செய்தேன், மேலும் மேலும் கடினமான கதைகள் கட்டுரைகளை எடுத்துக்கொண்டேன். ஆங்கிலத்தில் நீண்ட வாக்கியங்களில் ஓர் இசை அமைந்திருக்கிறது. தேர்ந்த எழுத்தாளர்கள் இது குறித்த பிரக்ஞையுடன்தான் இப்படிப்பட்ட நீண்ட வாக்கியங்களை எழுதுகிறார்கள். ஆனால் தமிழாக்கம் செய்யும்போது எளிதில் புரியவேண்டும் என்பதற்காக அதைச் சிறுசிறு வாக்கியங்களாய்த் துண்டிப்பதை வழக்கமாய் வைத்துக்கொண்டிருக்கிறோம். இதில் அதன் இசையை இழந்துவிடுகிறோம் என்பதால் அப்படிச் செய்யக்கூடாது என்று ஓர் எண்ணம் எனக்கு இருந்தது. அந்தப் பார்வை தமிழில் எழுதும்போது, நீண்டு விரியும் வாக்கியங்களின் ஓசையில் தொடர்ந்து சிந்திப்பது அல்லது ஒரு சிந்தனையைத் தொடர்ந்து செல்வது இவற்றின் போக்கை உள்ளபடியே எழுத்தில் பிரதிபலிக்க வேண்டும் என்ற விழைவுக்கு இடம் தந்தது.

இது என்ன மாதிரியான பலன்களைத் தந்தது?

நான் அமெரிக்காவில் வசிக்கிறேன். வீட்டுக்கு வெளியே நான் புழங்குவது ஆங்கில மொழியில்தான். ஆங்கிலத்தில் subordinate clause, coordinate clause என்று சொல்வார்கள் இல்லையா, அது எனக்கு இயல்பாய் வருவது. நான் தமிழில் எழுதும்போதும் இதுபோல் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. நீங்கள் புத்தகத்தில் உள்ள கட்டுரைகள் ஒவ்வொன்றிலும் இதை ஏராளமாய்ப் பார்க்கலாம்.

இதன் விளைவுகள் எப்போதும் அழகாக இருக்கும் என்று சொல்ல முடியாது, ஆனால் வாக்கியங்கள் சரியாய் அமைந்துவிடும்போது நாம் மேற்கொண்ட முயற்சி வீண் வேலையன்று, புதிதாய் ஒன்றைச் செய்திருக்கிறோம் என்ற திருப்தி கிடைக்கிறது. இதில் இன்னொரு விஷயம் இருக்கிறது. யாரைப் பற்றி எழுதுகிறேனோ அவர்களை ஒட்டிய நடை என்பது இயல்பாய் அமைந்து விடுகிறது. ஸீபால்டு (W. G. Sebald) கட்டுரையில் உள்ளது போன்ற சுற்றித் திரியும் நடையாக இருக்கட்டும், எனார் (Mathias Énard) கட்டுரையின் துவக்கத்தில் உள்ள அந்த மூச்சுவிடக்கூடத் தாமதிக்காத ஒற்றை வாக்கியமாகட்டும், இதை ஓர் அதிர்ஷ்ட விபத்து என்றுதான் சொல்லவேண்டும்.

இலக்கிய அனுபவத்தில் நடை எனக்கு மிக முக்கியமாக இருக்கிறது. இலக்கிய அனுபவம் என்பது எனக்கு மொழியனுபவத்தால் கட்டமைக்கப்படுவது. வடிவத்துக்கும் உள்ளடக்கத்துக்கும் உள்ள இயைபில் அது தோன்றுகிறது. நவீன தமிழ் இலக்கிய விமரிசனம் தற்காலத்தில் உள்ளடக்கம் சார்ந்தே மேற்கொள்ளப்படுகிறது. நினைவில் நிற்கும் பாத்திரங்கள், காட்சிகளைப் பேசுகிறதே தவிர சிறப்பான வாக்கியங்களை விவாதிக்க எடுத்துக்கொள்வதில்லை. நான் சொல்வது தவறாகவும் இருக்கலாம், தமிழில் இது போன்ற விமரிசனங்கள் செய்யப்படுவதை அறியாமல் நான் இதைச் சொல்கிறேன் என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் நடையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவே செய்வேன், அதை எவ்வளவு பேசினாலும் அதிகமில்லை. நடை என்பது வெற்றிடத்தில் நிலவும் ஒற்றைப் பாறையன்று. உள்ளடக்கம் எதுவோ அதுவே நடையைத் தீர்மானிக்கிறது. எனவே துல்லியமாய்ச் சொன்னால், நடைக்கும் உள்ளடக்கத்துக்கும் இடையில் நிகழும் சவ்வூடு பரவலை நாம் பேசவேண்டிய தேவை இருக்கிறது.

லா.ச.ரா.வை எடுத்துக்கொள்வோம். பொதுவாக அவர் அலங்கார நடையின் அழகோடு இணைத்துப் பேசப்படுகிறார். (அவரே, “நான் ஒரு சௌந்தர்ய உபாசகன்,” என்று சொல்லியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.) “சக்கு இப்போது எப்படி இருப்பாள்…” போன்ற புகழ்பெற்ற கிம்மிக்குகளோ அபிதாவின் முதல் பக்கத்தின் ரயில் பெட்டிகள்போல் தொடரும் வாக்கியமோ அல்ல, “எந்தச் சமயம் கனவு கலைந்து எப்போ நனவில் விழிப்போ எனக் கனவு கலையும் சமயத்திற்கஞ்சி நனவை நானே எதிர்கொள்ளக் கண்ணைக் கசக்கிக் கொள்கிறேன்,” போன்ற சாதாரணமாய் ஒலிக்கும் அசாதாரண வாக்கியங்கள்தான். எ, க, ந, ன, ண என்ற ஒலிகள் அடுத்தடுத்து இரட்டித்து ஓர் ஓசையின்மீது மற்றொன்று தடுக்கி விழுவது உறக்கத்துக்கும் விழிப்புக்கும் இடையிலுள்ள மயக்க நிலையை எதிரொலிக்கிறது. அல்லது, இந்த விவரணையின் அழகைப் பாருங்கள்:

“வாழை இலையில் வட்டித்த சாதத்தின்மேல் நெய் ஊற்றிய இடம் லாந்தர் வெளிச்சத்தில் பளபளத்து என்னைப் பார்த்துச் சிரித்தது.”

கவனமாய் வாசிக்கும் வாசகன் இந்த வாக்கியத்தை நிறுத்தி நிறுத்தி வாசிக்கிறான். இந்த இடைவெளிகளில்தான் இலக்கியம் நிகழ்கிறது.

நடையைப் பேசுவது அவ்வளவு சுலபமன்று. ஹென்ரி ஜேம்ஸ் (Henry James) அல்லது பிரூஸ்ட் (Marcel Proust) போல் நீண்டு வளைந்து செல்லும் வாக்கியங்களின் இசை தேவைப்படும் கட்டத்தில் ஹெமிங்க்வேயின் (Ernest Hemingway) உடைந்த வாக்கியங்கள் பொருத்தமாக இருக்காது, அதேபோல் ஹெமிங்க்வே பாணி தேவைப்படும் இடத்தில் ஜேம்ஸ் நடை அலுப்பூட்டுவதாக இருக்கும். நடை, உள்ளடக்கம் என்று பேசும்போது தி.ஜானகிராமனை மறந்தால் அது ஒரு பெரும் பிழையாக இருக்கும். அவரது நடை உள்ளடக்கத்துடன் அவ்வளவு இயல்பாக இழைந்து வருகிறது. அவர் என்ன எழுதினாலும் சரி அதில் ஓர் அற்புதமான உடனடித் தன்மை இருக்கிறது, அதையே நான் மிகவும் போற்றுதற்குரியதாக நினைக்கிறேன். சுந்தர ராமசாமியின் பகடி, ஜெயமோகன் நகைச்சுவைக்காகக் கையாளும் நடை, திலீப் குமார் போன்ற ஒருவரின் அசாதாரணமான கட்டுப்பாடு இவையெல்லாம் என் விருப்பத்துக்குரியவை.

இது ஒரு முடிவே இல்லாத விவாதம். சூழலைப் பொருத்து அவற்றிற்கிடையே ஒரு சமனை நிலவ ஒன்றைக் காட்டிலும் மற்றொன்றை உயர்த்தியோ தாழ்த்தியோ பேசவேண்டியிருக்கிறது. பி.ஏ.கிருஷ்ணன் கட்டுரைத் தொகுப்பிற்கான முன்னுரையில் இதைப் பற்றிச் சற்று பேசியிருக்கிறேன்.

“உலகம் புத்தகமாவதற்காகவே இருக்கிறது” என்று மலார்மி (Stéphane Mallarmé) ஒரு முறை சொன்னார். இது ரொம்பவே பிரெஞ்சுத்தனமாக இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. இதில் எழுத்தாளருக்குச் சாதகமான ஓரவஞ்சனை தென்படுகிறது. எனவே, “உலகம் புத்தகத்தில் படிக்கப்படுவதற்காகவே இருக்கிறது” என்று கூடுதலாக ஒரு வாக்கியம் சேர்த்துக்கொள்ளலாம். ஆசிரியர், வாசகர் – இருவரையுமே மனதில் வைத்துக்கொண்டால் நடையையும் உள்ளடக்கத்தையும் பற்றிய அர்த்தமில்லாத பேச்சைத் தவிர்க்கலாம்.

எவருடைய பாணியையும் நகலிக்க முயலுவதில்லை. ஆனால் ஒரு ஜூலியன் பார்ன்ஸ் (Julian Barnes) அல்லது ஒரு கை டாவன்போர்ட் (Guy Davenport) போல எழுதமுடிந்தால் அதை ஒரு வெற்றியாகத்தான் கொண்டாடுவேன் என்பதில் சந்தேகமில்லை.

“. . . நேசித்த பியானோ இணைப்பிணைப்பு ஸீபால்ட் கட்டுரையின் அமைப்புக்கு ஒளிகூட்டும் வகையிலும் அதன் கருப்பொருட்களுடன் ஒத்திசையும் வகையிலும் தன்னை அதனுள் புகுத்திக் கொண்டது” என்று முன்னுரையில் எழுதியிருக்கிறீர்கள். வாசிப்பைத் தாண்டி உங்கள் எழுத்துக்குப் பங்களிக்கும் விஷயங்கள் என்னென்ன? ஒரு கட்டுரைக்கு என்னென்ன தயாரிப்புகளை மேற்கொள்வீர்கள்?

யாரைப் பற்றி எழுதுகிறேனோ அவர் எழுதியதில் கணிசமான ஆக்கங்களை வாசித்திருக்கவேண்டும் என்று ஒரு கொள்கை வைத்திருக்கிறேன். அந்த எழுத்தாளரின் சரிதை அல்லது அவரைப் பற்றிய சுவையான விமரிசனங்கள் இருந்தால் அவற்றையும் வாசிக்கிறேன். ஆனால் இது எல்லாமே வழக்கம்தான். நல்ல கட்டுரையாளர்கள் யாராக இருந்தாலும் இத்தகைய முயற்சியை மேற்கொள்வார்கள் என்று நினைக்கிறேன். ஆங்கிலத்தில் கட்டுரையை essay என்று சொல்கிறார்கள், அதற்கு ஒரு பொருள், ‘முயற்சி செய்வது’, ‘மேற்கொள்வது’. கட்டுரை என்பது ஒரு தேடல் என்பதையே இந்த வேர்ச்சொல் விரிவாக்கம் சுட்டுகிறது.

கட்டுரையின் இறுதி வடிவம் எப்படி இருக்கப் போகிறது என்பது அதைத் துவங்கும்போது தெரியாது. சில சமயம் அதன் முடிவு எழுதத் துவங்குவதற்குக் காரணமாக அமையலாம். இப்படி முடியவேண்டும் என்று ஒரு எண்ணம் இருக்கும், அதன் பின் கட்டுரையை அங்கே கொண்டுசெல்வதற்குப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சில சமயம் கட்டுரையின் வெவ்வேறு பகுதிகள் மனதில் தோன்றுகின்றன. அவற்றை அவ்வப்போது அப்படியே எழுதி வைத்துக் கொள்கிறேன். அதன்பின் அவற்றைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்கும்போது இணைக்கும் பகுதிகள் தோன்றுகின்றன.

எது எப்படியாக இருந்தாலும் ஒவ்வொரு கட்டுரைக்கும் ஒரு ரிதம் இருக்கிறது. அந்த ரிதம் கிடைக்கும்வரை எழுதுவது கொஞ்சம் சிரமமாக இருக்கிறது, அதை நோக்கி என்னையறியாமல் வெவ்வேறு முயற்சிகள் செய்கிறேன். அதில் திருப்தி ஏற்படும்வரை திரும்பத் திரும்ப எழுதிப் பார்க்கிறேன். இதற்கு ஒரு மிகத் தீவிர உதாரணம் நீங்கள் சொல்லும் ஸீபால்ட் கட்டுரை. இந்தப் பகுதிகள் எல்லாமே என் மனதில் எப்படி ஒருமையடைகின்றன என்பதையும்கூட நான் கட்டுரையிலேயே எழுதிவிடுகிறேன் என்று நினைக்கிறேன். அதில் உள்ள இசைச் சட்டகம் திட்டமிட்டுச் செய்தது அன்று. அது தானாக அமைந்தது.

பொதுவாக என் கட்டுரைகள் அந்தரங்கத்தன்மை கொண்டவை. வாசிப்பும் எழுத்தும் ஒரு பருண்ம அனுபவமாக அமைவது, அதில் குறுக்கிடும் வாழ்க்கை அனுபவங்கள், நினைவுறுத்தல்கள் இவற்றை எழுதுவது என்பதில் ஒரு குறைந்தபட்ச அந்தரங்க வெளிப்பாடு வந்துவிடுகிறது. இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருந்தபோது ஆர்ச்ட்யூக் ட்ரையோ (Piano Trio, Op. 97 Trio by Ludwig van Beethoven) கேட்டுக்கொண்டிருந்தேன், என் மகன் மேற்படிப்பு படிக்க ஊரைவிட்டுப் போயிருந்தான், அந்த இழப்பையும் வலிமையாய் உணர்ந்தேன். இதெல்லாமும் கட்டுரைக்குள் புக விழைந்தன. இரண்டாம் பகுதியில்தான் அவற்றை ஒன்றிணைக்க முடிந்தது. முதல் பகுதியின் முன்னுரையை மூன்றாம் பகுதியில் வரும் ஸீபால்ட்டின் வெர்டிகோவின் (Vertigo) எடுத்துரைப்புடன் இணைப்பது என்பது எப்படியோ சரியாக வந்து சேர்ந்துகொண்டது. அந்தப் பகுதியின் இசை உள்ளடக்கம் என்பது இயல்பாகவே இடையிசை என்ற தலைப்புக்குக் காரணமானது, அங்கிருந்து அத்தனை பகுதிகளும் தாமாகவே ஓர் இசைச் சாயம் பூசிக்கொண்டன.

தூக்கத்தில் அல்லது துல்லியமாகச் சொல்லவேண்டுமானால் தூக்கத்திற்கும் விழிப்பிற்குமிடையே ததும்பும் கலக்கமான நிலையில் கட்டுரையின் குறிப்பிட்ட பகுதிகள் உருக்கொண்ட தருணங்களும் இருந்திருக்கின்றன. அந்த மங்கலான கனவு நிலையில் அனைத்துமே கைகூடிவிட்டதுபோல் இருந்தாலும் மறுநாள் அவற்றை முழுவதுமாக நினைவில் மீட்டெடுக்க முடிவதில்லை. கனவின் உவர்ச்சியை ஓரளவிற்கேனும் மீட்டெடுக்கும் வரையில் அப்பகுதியை மீண்டும் மீண்டும் விதவிதமாக மீளுருவாக்கம் செய்வேன். வில்லியம் காஸின் (William H. Gass) ஐம்பது தூண்கள் மொழிபெயர்ப்பிற்கு முன் வரும் இரங்கலுரைப் பத்திகள் இதற்கான நல்ல உதாரணம். பெரும்பாலும் அப்பத்திகள் ஒரு கனவின் படியெடுப்பே. இதெற்கெல்லாம் திட்டவட்டமான சூத்திரமேதும் இல்லை. கட்டுரை கோரும் உழைப்பை அளித்துவிட்டு விதி சாதகமாகக் குறுக்கிடும் என்று நம்புவதைத்தவிர நம்மால் செய்வதற்கேதுமில்லை. சில சமயங்களில் கூடிவந்தாலும் பல சமயங்களில் கூடிவருவதில்லை என்பதே உண்மை. கிடைத்தவரை லாபம் என்றுதான் தேற்றிக்கொள்கிறேன்.

நகுல்வசன் என்ற பெயரில் புனைவெழுத்தில் ஈடுபட்டுள்ளீர்கள். பின் உண்மைகளின் காலத்தில் (Post-truth) புனைவு என்பது என்ன? புனைவு குறித்த உங்கள் பார்வை/கருத்தைப் பகிர்ந்துகொள்ள முடியுமா?

ஒரு சில கதைகள் எழுதியிருக்கிறேனே தவிர, நான் புனைவில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. மிக முக்கியமான காரணம், எனக்கு அது கடினமாக இருக்கிறது, குறிப்பாகப் பேச்சுமொழியை எழுதுவது. கடவுளும் கேண்டியும் புனைவைப் பொருத்தவரை புதுமைப்பித்தன் ஏற்கெனவே பாதை போட்டிருந்தார், அதையொட்டி எழுதுவது ஒரு விஷயமில்லை. அந்தக் கதையின் சட்டகத்தினுள் செயற்கை அறிவு/ அறிவியல் புனைவுக் கூறுகளைச் சேர்த்தால் போதுமாக இருந்தது, புதுமைப்பித்தன் கதையில் இருந்த நகைச்சுவை கெடாமல் இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டால் போதும். நான் இதுவரை எழுதிய கதைகள் எல்லாமே புனைவாவதற்குமுன் நிஜ உலகில் வாழப்பட்டவை. முதல் கதை காந்தியின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சம்பவங்களை அடிப்படையாய்க் கொண்டது, இரண்டாம் கதை வானொலியில் ஒலிபரப்பப்பட்ட உண்மைச் சம்பவம், மூன்றாவதற்குக் கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் இருந்தது. எனவே, எனக்கு எது கடினமாக இருக்கிறது என்று பார்த்தால் அது கற்பனையாற்றலின் போதாமைதான். என்னால் புனைவுப் பாத்திரங்களுக்கு உயிரூட்டி ஒரு புனைவுலகில் அவற்றுக்குச் சம்பவிக்கும் மாற்றங்களை நினைத்துப் பார்க்கமுடியவில்லை. ஒருவேளை, எழுத எழுத புனைவுக் கலை கைவரக்கூடும். ஆனால் வாழ்வின் இந்தக் கட்டத்தில் அதற்குரிய நேரம் செலவுசெய்யத் தயக்கமாக இருக்கிறது. இதெல்லாம் தானாக வரவேண்டும் என்று நினைக்கிறேன், சரியான உந்துதல் வந்தால் ஒருவேளை நான் இந்த கடினமான முயற்சியில் இறங்கக்கூடும். ஆனால் அதற்காக சிரமப்படத் தேவையில்லை என்று தோன்றுகிறது.

மனிதர்களாய் நம் நிலை என்ன, நாம் இருக்கும் உலகோடு நமக்கு என்ன உறவு போன்ற கேள்விகளுக்கு விடைதேட பல கருவிகள் உள்ளன. அவற்றில் மிகவும் சுவாரசியமானது புனைவுதான் என்று நினைக்கிறேன். அடிப்படையில் நம் அனைவருக்கும் புனைவு சாத்தியப்படும் என்பதும் உண்மை. எனவேதான், Joan Didion தன் கட்டுரைத் தொகுப்பிற்கு, கதை சொல்லி வாழ்கிறோம் (சரியாகச் சொல்லவேண்டுமானால் வாழ்வதற்காகவே கதை சொல்கிறோம்) என்று தலைப்பு வைத்தார். நாம் அணிந்துகொள்ளும் புனைவுகள் குறித்து நமக்குச் சிறிதும் உணர்வு இல்லை என்பது ஒரு வகையில் வரமாகவே அமைகிறது. இல்லையென்றால் வாழ்வு தாளமுடியாததாகப் போய்விடும். வாழ்வைத் தொடர நாம் நம்மையறியாமல் மேற்கொள்ளும் புனைவுகளை உற்று நோக்கினால் கறைபட்டவையாய் இருக்கும், ஏதோ ஓர் அவசர தேவைக்கு உருவாக்கிக்கொண்டிருப்போம்.

வசதிக்கேற்ப புனைபடும் பொய்களை வெளிப்படக் காட்டுவது கற்பனையாற்றல்கொண்ட எழுத்தாளனின் கடமை என்று நம்புகிறேன். அதற்கெல்லாம் அவசியமில்லாமல் நாம் அர்த்தமுள்ள வாழ்க்கை நடத்த சாத்தியமுண்டா என்று விசாரிக்க அவன் உதவவேண்டும். இதில் ஒரு முரண்பாடு இருக்கிறது. நாம் மெய்மைக்குப் பிந்தைய காலகட்டத்தில் வாழ்கிறோம், எழுத்தாளனின் இன்றைய கடமை நம்மை மெய்மையிடம் கொண்டு சேர்ப்பதாகத்தானே இருக்க முடியும்? நம் சுகவீனத்தைதான் மெய்மைக்குப் பிந்தைய உலகம் என்று பெயரிட்டு அழைக்கிறோம். அதற்காக இந்த உலகில் உண்மையே இல்லாமல் போய்விடாது. நாமெல்லாம் உண்மைக்கு எதிராகக் கவசம் தரித்துக்கொண்டு தேவைப்படும் பொய்களைக் கைகொள்கிறோம், நமக்கு வழங்கப்படும் கருத்துகள், எண்ணங்களை உண்மை என்று மதிக்கிறோம்.

நம் எல்லோருக்குள்ளும் எது உண்மை என்பதை உணர்ந்த ஒருவன் இருக்கிறான் என்கிறார் பெல்லோ. தன்மீது சுமத்தப்பட்ட கோட்பாடுகள், நடைமுறை அமைப்புகளின் வசீகரச் சுமையில் நசுக்கப்படுகிறான் அவன். ஒரு நல்ல புனைவெழுத்தாளன் இன்றும் கைமாற்றி அளிக்கப்பட்ட கருத்துக்களை உடைத்து, எங்கோ இருப்பதுபோல் தெரியும், ஆனால் நமக்கு மிக அருகில் இருக்கும், ‘உள்ளிருக்கும் ஒருவனை’ அடைந்துவிட முடியும். அந்த வகையில் மெய்ம்மைக்குப் பிந்தைய உலகில் எழுதப்படும் புனைவின் முதன்மைக் கடமை நம் புனைவுகளைச் சுத்திகரிப்பு செய்வதுதான். ஆனால் இதைக் கற்பனைகொண்டும் சுவாரசியமான வகையிலும் செய்யமுடியுமா, அது முழுக்க முழுக்க வேறொரு கேள்வி.

மொழிபெயர்ப்பு சார்ந்த உங்கள் கோட்பாடு என்ன? மொழிபெயர்ப்பின் சாத்தியங்களாகவும் எல்லையாகவும் நீங்கள் கருதுபவை எவை?

மொழிபெயர்ப்புத் துறையில் நான் இன்னமும் ஒரு கத்துக்குட்டி என்பதால் பெரிதாகக் கோட்பாடு என்றெல்லாம் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால் மொழிபெயர்ப்பே நிகழாத ஓர் உலகை சற்றுக் கற்பனை செய்துபாருங்கள். ருஷ்ய, பிரெஞ்சு, லதீன் அமெரிக்க மொழிபெயர்ப்புகளின் தாக்கம் இல்லாமல் நவீன தமிழ் இலக்கிய வளர்ச்சி எவ்வாறு இருந்திருக்கும்? மொழியாக்கம் இல்லாத உலகம் சுவாரஸ்யமற்றதாவே இருக்கும் என்பதே உண்மை. தனிப்பட்ட முறையில், உலக இலக்கியத்தின் ஆங்கில மொழிபெயர்ப்புகளை எதிர்கொண்டிராவிட்டால் இலக்கியத்தின் பக்கமே நான் போயிருக்க மாட்டேன் என்பது உறுதி. மொழிபெயர்ப்பு மிக அனுகூலமானதென்பதை நாம் எல்லோருமே ஏற்றுக்கொள்வோம் என்று நினைக்கிறேன். ‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும் – கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர், திறமான புலமையெனில் வெளி நாட்டோர் அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்’ என்பதிலெல்லாம் கருத்து வேறுபாடேதும் இல்லை.

மகத்தான விழைவுகளெல்லாம் சரி, ஆனால் அவற்றிற்கப்பால் நம் நவீன விமர்சன மரபைச் சற்றுக் கறாராக நோக்கினால் நாம் இன்னமும் கிணற்றுத் தவளைகளாகவே இருக்கிறோமா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. இந்திய இலக்கியம், உலக இலக்கியம் என்ற அதைக்காட்டிலும் பெரிய சட்டகங்களுக்குள் பொருத்தி அதை விமர்சிக்கும் மரபு நமக்கின்னும் பழக்கப்படவில்லை. பல விஷயங்களில் முன்னோடியாக இருந்த பாரதி, ‘மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை’ என்று சரியாகவே சொன்னான். எப்போதாவது இதைச் செய்கையில்கூட, ‘நம் உள்ளூர் ஆசாமி உலகின் மாபெரும் ஆளுமைகளைக் காட்டிலும் பல மடங்கு மேல்,’ என்பது போன்ற டிவிட்டருக்கே உரித்தான எளிமையான அதிரடி அவதானிப்புகளில் புளங்காகிதம் கொள்வதோடு நிறுத்திக் கொள்கிறோம்.

இவற்றைக் களைய என்ன மாதிரியான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

நம் கிணற்றுத் தவளைத்தனம் மொழியின் வளர்ச்சிக்குப் பாதகமாக இருந்திருக்கிறது என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். புழக்கத்திலுள்ள தமிழ்ச் சொற்கள் சமூக ஊடகங்களின் தற்காலிகமான கேளிக்கைகளுக்குப் போதுமானதாக இருக்கலாம், ஆனால் கடினமான, ஆழமான விஷயங்களைச் சாமான்யமாகப் பேசுவதற்கு அவை சற்றும் போதவில்லை என்பதே நிதர்சனம். பல துறைகளைச் சார்ந்த அடிப்படைக் கருத்துகளை அன்றாடப் பேச்சுவழக்கில் விவாதிப்பதற்குத் தேவையான அனைவருக்கும் பரிச்சயமான பொது சொற்றொகுதியை நாம் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. இவை அனைத்தையும் மீறி ஒருவர் இம்மாதிரியான விஷயங்களைத் தமிழில் எழுத முற்படுகையில் அது கனமாகவும் அந்நியப்படுத்துவதாகவும் அமைந்துவிடுகிறது. மொழிபெயர்ப்பு இயல்பாகவே இச்சிடுக்குளை வெளிப்படுத்துகிறது. வேற்றுமொழியில் சொல்லப்பட்டதை அதன் பொருளுக்கும் தொனிக்கும் பாதகம் விளைவிக்காது தமிழில் கூற முற்படுகையில்தான் அவ்விரு மொழிகளின் தனிப்பட்ட வளங்களும் குறைகளும் நமக்குத் தெளிவாகப் புலப்படுகின்றன. தாமதித்திருந்தாலும், இவற்றை எல்லாம் நாம் இனம் கண்டுவிட்டோம் என்றே நினைக்கிறேன். கடந்த பத்தாண்டுகளில் பதிப்பிக்கப்பட்டிருக்கும் மொழிபெயர்ப்புகளே இதற்குச் சாட்சி. அம்மொழிபெயர்ப்புகளின் தரத்தை விட்டுவிடுவோம், அவற்றின் எண்ணிக்கை நம்பிக்கையளிக்கிறது. அவற்றை மேலும் ஊக்குவிக்கும் வகையில் அரசாங்க நிதியுதவி இம்மாதிரியான பணிகளுக்கு அளிக்கப்பட வேண்டும்.

என்னைப் பொருத்தவரையில் என் தமிழை மீட்டெடுப்பதற்கான ஒரு வழியாகத்தான் மொழிபெயர்ப்பில் கால் வைத்தேன். முதல் சில வருடங்கள் மிகக் கடினமாகவே இருந்தன. ஆனால் அதிலுள்ள சவால்களையும் அவற்றை எதிர்கொள்வதற்கான முறைமைகளைக் கண்டறிவதற்காகவே மேலும் மேலும் கடினமான படைப்புகளை மொழியாக்கம் செய்யத் தொடங்கினேன். வாக்கிய அமைப்பில் தமிழும் ஆங்கிலமும் நேரெதிர் வரிசைகளைக் கொண்டிருக்கின்றன. மொழிபெயர்ப்பாளரைப் பொருத்து, அவன் மொழிபெயர்ப்பில் எதை முக்கியமெனக் கருதுகிறான் என்பதைப் பொருத்து, இந்நேரெதிர்மை பலவிதமான சிக்கல்களை ஏற்படுத்துகிறது. உரைநடையின் பரந்த “வெளி”யைக் கொண்டு இவற்றை ஓரளவிற்கேனும் நம்மால் ஈடுகட்ட முடிகிறது. ஆனால் கவிதையின் சிக்கனமான வடிவம் இவற்றைப் பூதாகாரமாக்குகிறது. வாசகன் மனதில் படைப்பு எவ்வாறு காட்சி ரீதியாக உருவெடுக்கிறது என்பது முக்கியமாக இருக்கும்பட்சத்தில் ஒலி நயத்தை நசிக்காமல் மூலத்தின் காட்சிவரிசையை அளிக்கும் வாக்கிய அமைப்பைத் தேர்வு செய்வது சிக்கலாக இருக்கிறது. எனினும் படைப்பின் உந்துவிசையில் அக்காட்சி வரிசைக்கும் பங்கிருக்கலாம் என்று அவதானித்தால் காட்சி வரிசைக்கு ஏற்றவாறு வார்த்தை வரிசையையை வளைக்க முற்படுவேன். ஆனால் இம்மாதிரியான வளைத்தல்களுக்கு ஓர் எல்லை இருக்கிறது. பழக்கப்படாத ஓசை நயமாக இருப்பினும் அவை தமிழ்ச் செவிகளுக்கு நாராசமாக ஒலிப்பதைத் தவிர்ப்பதும் மொழிபெயர்ப்பாளருக்கு அவசியமாக இருக்கிறது. வளையலாம் ஆனால் முறியக்கூடாது.

அதேபோல் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழியாக்கம் செய்வது அதற்கே உரித்தான சிடுக்குகளை உடனழைத்து வருகிறது. சில சமயம் ஆங்கிலத்திலிருந்து நேருக்கு நேர் ரீதியான மொழிபெயர்ப்பைச் செய்யும்போது அவ்வாக்கிய அமைப்பை ஆங்கிலச் செவிகள் மிகச் சாதாரணமானதாக உணரலாம். இதற்கு நேர்மாறாக மூலத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டிருக்கும் தொனியை மொழிபெயர்ப்பு அளித்துவிடும் அபாயத்தையும் நாம் கணக்கில் கொள்ளவேண்டும். கதையின் ஒரே பத்தியை இவ்விரு வழிகளில் மொழிபெயர்த்து ஆசிரியர்களையே தேர்வு செய்யும்படி கேட்டுக்கொண்ட தருணங்களும் உண்டு. அவர்கள் தேர்வுகளும் என்னைச் சில சமயங்களில் வியப்பில் ஆழ்த்தியிருக்கின்றன. வட்டார மொழி மற்றொரு வகையான பிரச்சனை. பெரும்பாலும் அதற்குத் தீர்வில்லை என்பதே என் கருத்து. மூலத்தின் உணர்வையும் தொனியையும் தோராயமாக அளிக்கக்கூடிய பேச்சுவழக்குகளைக்கொண்டு ஒப்பேற்றுவதைத் தவிர செய்வதற்கொன்றுமில்லை.

இணையம் நம்மெல்லோரையுமே மொழிபெயர்ப்பாளர்களாக மாற்றிவிட்டதோ என்ற சந்தேகம் எனக்கு அவ்வப்போது வருவதுண்டு. தமிழில் ஓரளவிற்கு நன்றாக எழுத வருவதாலேயே ஒருவருக்கு மொழிபெயர்ப்பாளராகும் உரிமை இருக்கிறது என்ற தவறான எண்ணமும் பரவலாக இருப்பதாகப்படுகிறது. மொழிபெயர்ப்பிற்கான காரணத்தையே அடியறுக்கும் வழியில் அமைந்திருக்கும் பல மோசமான மொழியாக்கங்கள் பதிப்பிக்கப் படுவதற்கான உந்துவிசையாகவும் இப்பிழையான எண்ணம் இருந்திருக்கிறது. ஆம், அந்நியக் குழந்தையைப் படியெடுப்பு செய்துவிட்டோம், ஆனால் உயிரணுக்களில் நாம் செய்திருக்கும் குளறுபடியால் அது உருக்குலைந்த குழந்தையாகப் பிறந்திருக்கிறது. அறுதியாக இது செவிக்கும் நுண்மை, இரு மொழிகளிலும் நுண்மையாகச் செவித்து வாக்கியங்களின் இசையால் சிலிர்ப்புறும் திறன் ஆகியவற்றைச் சார்ந்திருக்கிறது. இந்த அடிப்படைத் திறமை இல்லாமல் ஒருவரால் சுமாரான மொழிபெயர்ப்புகளைக்கூடச் செய்ய முடியாது என்று தோன்றுகிறது. ஆனால் மொழிபெயர்ப்பும் அதன் முறைமை கோரும் பல திருத்தப் பிரதிகளுக்குத் தேவையான கடுமையான உழைப்பை அளிப்பதற்குப் பல திறமையான இளைஞர்கள் தயாராக இருக்கிறார்கள் என்பது உற்சாகமளிக்கிறது. சொல்வனத்தின் பொலான்யோ (Roberto Bolaño) சிறப்பிதழின் சிறப்புப் பதிப்பாசிரியராகப் பணியாற்றியபோது இதைக் கண்கூடாக அறிந்துகோண்டேன். மொழிபெயர்ப்பின் வருங்காலம் செழிப்பாகவே இருக்கலாம் என்ற நம்பிக்கை அப்போது துளிர்ந்தது.

🔾

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.