இந்துக்கள் கோழைகளா?

கடலூர் வாசு

“இந்து ஒரு கோழை; முகம்மதியர் இந்துக்களை அச்சுறுத்துபவர்கள்.” இதை 29 மே 1924 இளைய பாரதம் இதழில் எழுதியவர் அஹிம்சாவாதி மகாத்மா காந்தி. இந்துக்களைத் தட்டி எழுப்பச் சொல்லப்பட்டதா அல்லது முகம்மதியர்களை மேலும் ஊக்கமூட்டுவதற்கா என்று தெரியவில்லை. ஆனால் ஆசிரியர் இந்துக்களின் பலவீனங்களில் கோழைத்தனம் ஒன்றல்ல என்கிறார். இதற்கான சான்றுகளையும் எடுத்துரைக்கிறார்.

சமீப காலத்தில், 1971ல், வங்காளதேச பிரிவினைப் போராட்டத்தில் பங்கேற்க இந்திய ராணுவம் நுழைந்தவுடன் பாகிஸ்தான் ராணுவத்தினர் பின்வாங்கினர் அல்லது சரணடைந்தனர். 1999ல் கார்கில் போரில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லையைத் தாண்டி உள்ளே சென்று கார்கில் மலைப்பிரதேசத்தை மீட்டது.

இந்துக்களின் வீரத்தைப் பறைசாற்றும் வரலாற்றுச் சான்றுகளைப் பார்ப்போம். வேதங்களும் புராணங்களும் வீரத் தன்மையை மிக உயர்த்திப் பேசுகின்றன. பகவத் கீதையில் கிருஷ்ணர் அருச்சுனனிடம் வீரத்தையும் இந்துக்கள் நம்பும் மறுபிறப்பினையும் சேர்த்தே உபதேசிக்கிறார். சிசரோவும் சீஸரும்கூட காலிக் வீரர்களின் போர் வலிமைக்கு அவர்களுடைய மறுபிறவி நம்பிக்கைதான் காரணம் என்று கூறியுள்ளனர் என்கிறார் ஆசிரியர். மேலும், உலகிலேயே தலை சிறந்த வீரராக இன்றுவரை கருதப்படும் அலெக்ஸாண்டர், இந்தியாவின் இரானிய எல்லையில்தான் இந்துக்களால் தடுத்து நிறுத்தப்பட்டுத் தன் நாட்டிற்குத் திரும்பினார் என்கிறார் ஆசிரியர். ஷாகா, குஷானா, ஹுவான் ஆகிய பிரிவினரும் இந்துக்களால் வடமேற்குப் பகுதியில் தோற்கடிக்கப்பட்டு பிறகு இந்துக்களுடன் கலந்துவிட்டனர்.

முகம்மதியர்களின் முதல் படையெடுப்பு, கடல் வழியாக மும்பையின் வடபகுதியில், மத நிறுவனர் முகம்மது இறந்த சில வருடங்களுக்குள் நடந்தது. அதில் தோல்வியுற்றுத் திரும்பினர். அடுத்த 50 வருடங்களுக்கு மெசபொடோமியா வழியாக சிந்து பிரதேசத்தைக் கைப்பற்ற நடந்த பல படையெடுப்புகளும் தோல்வியைத் தழுவின. வட ஆப்பிரிக்கா முழுவதையும் சுலபமாகக் கபளீகரம் செய்த முகம்மதியப் படை இந்துக்களிடம் பல உயிர்களை இழந்தது. கி.பி. 712ல் முகம்மது பின் காசிம் இறுதியில் சிந்துவைக் கைப்பற்றினான். இவனுக்குப்பின் வந்தவன் மீண்டும் இந்துக்களால் தோற்கடிக்கப்பட்டான். இதன் மத்தியில், முகம்மதியப் படை மத்திய ஆசியாவை ஆக்கிரமித்தபின், மீண்டும் ஆபிகானிஸ்தான் கைபர் பாஸ் வழியாக இந்தியாவைத் தாக்கியது. அச்சமயம் அப்பகுதியை ஆண்ட இந்து ஷஹியா அரச மரபு சுமார் 300 வருடங்களுக்கு அவர்களை புறமுதுகு காட்டவைத்தது. இறுதியில் கிபி. 1000-ஆவது ஆண்டில் முகம்மது கஸ்னாவி ஆப்கானிஸ்தான் வழியாக இந்தியாவிற்குள் புகுந்தான். ஷஹியா அரசர் தன் குடிமக்களைக் காப்பாற்ற இயலாமல் தற்கொலை செய்துகொண்டார்.

முகம்மதியர்களை பல நூற்றாண்டுகள் இந்தியாவில் நுழையவிடாமல் தடுத்த இந்துக்கள் எவ்வாறு இந்தியா முழுவதையும் அவர்களது ஆதிக்கத்தில் வர அனுமதித்தனர் என்ற கேள்விக்கு ஆசிரியரின் பதில் இந்துக்களின் தாராள மனப்பான்மையும் முகமதியர்களின் நோக்கத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளாததும்தான் என்கிறார். காஷ்மீரின் அப்போதைய இந்து அரசர் முகம்மதியர்களை நம்பிக்கையான, அதிகாரம் மிகுந்த பதவிகளில் அமர்த்தினார். இதை இவ்வதிகாரிகள் தங்கள் மதத்தைப் பரப்பப் பயன்படுத்திக்கொண்டனர். அப்பொழுது ஆரம்பித்த அதே முறைதான் துரதிருஷ்டவசமாக இன்றும் தொடர்கிறது. விஜயநகர இந்து அரசர்களும் முகம்மதியர்களைத் தங்கள் படைகளில் சேர்த்துக்கொண்டனர். தாலிக்கோட்டாவில் நடந்த சண்டையில் இந்த முகம்மதிய வீரர்கள் இந்துக்களின் படையைக் கைவிட்டு முகம்மதியர்கள் படையுடன் சேர்ந்து விஜயநகர சாம்ராஜ்யத்தைக் கவிழ்த்தனர். அதன்பிறகு இந்தியாவின் தென்பகுதி முழுவதும் இஸ்லாமியரின் ஆதிக்கத்திற்கு வந்தது. இதை நம்பாதவர்கள், நீலகண்ட சாஸ்திரியின் தென்னிந்தியச் சரித்திரம் என்ற புத்தகத்தில் இந்த விவரத்தைப் பார்க்கலாம் இதே சமயம், கஸ்னாவியின் மருமகன் கங்கை வடிநிலத்தைத் தன்வசப்படுத்திக் கொண்டான். ஆனால் இந்து அரசர்கள் போஜ ராஜன் உட்பட, ராஜா சுக்தேவ் தலைமையில் ஒன்றுசேர்ந்து அயோத்தியா நகரின் அருகிலுள்ள பாஹ்ரைச்சில் 1033ல் நடந்த போரில் அவனைத் தோற்கடித்தனர். இதையறியாத இந்துக்கள் தங்கள் அண்டைவீட்டு முகம்மதியர்களுடன் சேர்ந்து இவனுடைய சமாதியில் வழிபடுவதை நினைத்தால் இவர்களுடைய வரலாற்றறிவை என்னவென்று சொல்வது? இப்போர் முடிந்தபின் 150 வருடங்கள், இஸ்லாமியப் படையெடுப்பு முடிந்துபோன ஒன்றாகும் என இந்துக்கள் நினைத்தனர். மீண்டும் வந்த இஸ்லாமியப் படையெடுப்பு வெற்றி பெற்றதற்கும் காரணம், முன்சொன்னதுபோல் இந்து அரசர்களின் கோழைத்தனம் அன்று; அவர்களது தாராள மனப்பான்மைதான் என்கிறார் ஆசிரியர். முகம்மது கோரி முதல் தடவை பிருதிவிராஜினால் தோற்கடிக்கப்பட்டுப் பின் விடுதலை செய்யப்பட்டான். அடுத்த முறை, பிருதிவிராஜைத் தோற்கடித்து அவனது கண்களைக் கட்டிச் சிரச்சேதம் செய்தான் கோரி. இதன் பிறகு இந்தியா முழுவதும் இஸ்லாமியர்களின் ஆட்சிக்குட்பட்டது. மேற்கு ஆசியா, வட ஆப்பிரிக்கா, ஸ்பெயின் ஆகிய மூன்றையும் 80 வருடங்களில் வசப்படுத்திய இஸ்லாமியர்கள் 550 வருடங்கள் மீண்டும் மீண்டும் படையெடுத்தே இந்தியாவை தன்வசப்படுத்தினர் என்றறிய வரும்போது இந்துக்கள் கோழைகள் எனும் காந்தியின் வார்த்தைகள் அர்த்தமற்றதாகவுள்ளன.

இஸ்லாமியர்களின் ஆதிக்கத்தில் வந்தபிறகும் இந்துக்களின் எதிர்ப்பு நின்றபாடில்லை. விவேகம் மிகுந்த இஸ்லாமிய அரசர்கள் இந்துக்களுடன் சமரசம் செய்துகொண்டனர். போர்புரிய விழைந்த மன்னர்களின் இஸ்லாமிய படைகளெல்லாம் அப்போர்களினால் சுருங்கியது. இவர்களுடைய போரில் மேற்கு ஆசியாவிலிருந்து வந்தவர்களும் வட ஆப்பிரிக்காவிலிருந்து கொண்டுவப்பட்ட அடிமை வீரர்களும் டில்லி சுல்தான் படையில் சேர்ந்துகொண்டனர். இந்து மன்னர்களால் இஸ்லாமிய அரசுகள் சதா காலமும் போர் புரிவதில் ஆர்வம் காட்டுவதைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. ஆனால் அவர்களுக்குள்ளேயே ஏற்படும் சச்சரவுகளைப் பயன்படுத்திக்கொண்டு இந்துப் படைகள் ஒருவரோடொருவர் சேர்ந்துகொண்டு போரிடுவதில் ஈடுபட்டன. சில இந்து மன்னர்கள் தங்களது சுதந்திரத்தையும் நாட்டையும் கையில் இருத்திக்கொள்ளப் போரிடாமலேயே சரணடைந்தார்கள். இவர்களும் கலகக்காரர்களுக்கு இடமளித்தும் சமயம் கிடைக்கும்போது கலகம் செய்தும் இஸ்லாமிய அரசுகளுக்கு தொந்தரவு கொடுத்துக்கொண்டே இருந்தனர். அக்பர், இந்து மன்னர் ஹீமுவைத் தோற்கடித்துத் தன் ஆட்சியை நிலைநிறுத்திக்கொண்டபின் தன் படையில் ஹிந்துக்களைச் சேர்த்துக்கொண்டு இந்து மன்னர்களையும் இஸ்லாமிய மன்னர்களையும் தோற்கடித்தார். இந்து மன்னர் ராணா பிரதாப்பை எதிர்த்து போராடிய இஸ்லாமியப் படையை முன்னின்று நடத்தியவர் இந்துவான மான்சிங். இஸ்லாமிய அரசர்கள் இந்துக்களின் வீரத்தை அறிந்திருந்ததனால் அவர்களைத் தங்கள் படைகளில் சேர்த்துக்கொள்ளத் தயங்கவில்லை. முடிவாக, 17ஆம் நூற்றாண்டில் சிவாஜியையும் அவரது மராட்டிய படையின் உக்கிரகத்தையும் தாங்கும் சக்தியில்லாமல் இஸ்லாமிய அரசின் ஆதிக்கம் மிகப் பலவீனமடைந்தது.

1817ல், மராத்தியக் கூட்டாட்சியை நிர்வகித்துவந்த பேஷ்வாக்கள் ஆங்கிலேயர்களால் முறியடிக்கப்பட்டனர். இதற்கும் காரணம், வெள்ளையனைக் கண்டவுடன் இந்துக்களின் வீர உணர்ச்சி ஓடி ஒளிந்து கொண்டுவிட்டது என்பதில்லை. பேஷ்வாக்களின் இந்துப் படைகளுக்கெதிராக ஆங்கிலேயர்களுக்காகப் போரிட்ட இந்துப் படைகள்தான் காரணம். ஆங்கிலேயர்கள் போரில் அதிகமாகக் கலந்துகொள்ளாமலேயே இந்துக்களைப் போரில் வீழ்த்தியதற்கு இதுதான் காரணம். பேஷ்வாக்களையும் மராத்தியர்களையும் குறைகூற வேண்டுமென்றால், சிவாஜியைப்போல் இந்துக்களை அயல்நாட்டினரின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கவேண்டும் என்ற கொள்கையிலிருந்து பிறழ்ந்துதான். இதுவே, அவர்கள் பிற இந்து மக்களிடம் போரிட்டதற்கும் மராட்டியத் தலைவன், மஹதி சிந்தியா 1771ல் பல்லில்லாத மொகலாய மன்னரின் காலில் வீழ்ந்து வணங்கியதற்கும் 1857ல் நடந்த சிப்பாய்க் கலகத்தில் மொகலாயர்களுடன் கூட்டுச் சேர்ந்துகொண்டதற்கும் காரணம்.

இந்துக்கள் வீரத்தில் மற்றவர்களுக்கு எந்த விதத்திலும் குறைவற்றவர்களாக இருந்தபோதும் 800 ஆண்டுகளுக்குமேல் அன்னியர்களின் ஆதிக்கத்தில் உழன்றதிற்கு நூலிழைபோல் ஊடுருவும் காரணங்கள் எவை? போரிடும் திறனிருந்தாலும் போர்முறைகளை எதிரியின் வெற்றிகளை அலசி புதுப்பித்துக் கொள்ளாதது ஒன்று. இரண்டாவது, போர்வீரர்கள் தங்கள் தலைவனிடம் வைத்திருக்கும் உணர்ச்சிவயமான நம்பிக்கையினால் அவன் போர்க்களத்தில் இறந்துபோனால் மற்றொரு தலைவனைத் தேர்தெடுக்க இயலாததும் போரைத் தொடர முடியாததுமாகும்.

இதே தவறுகளைத்தான் தற்காலத்திய இந்து அரசியல்வாதிகளிடமும் இணையதளத்தில் சண்டையிடும் இந்துக்களிடமும் காண்கிறோம். மேலும், எதிராளிகளின் கொள்கைகளையும் அதன் விளைவுகளையும் தகர்ப்பதைவிட்டு எதிராளிகளையே குறிவைப்பதும் மற்றொரு காரணம். உதாரணமாக, சோனியா காந்தியையும் அவரது குடும்பத்தைப் பற்றியுமே குறை சொல்லிக்கொண்டு பிரதமர் இந்திரா காந்தியாலும் பிரதமர் நேருவாலும் நிறுவப்பட்டதும் மதச்சார்பற்றவர்கள் என்ற குடையின்கீழ் இந்து மதத்தைச் சாடும் நபர்கள் நிறைந்ததுமாயுள்ள நிறுவனங்களை எவ்வாறு மாற்றி அமைக்க முடியும் என்பதைப் பற்றியே எண்ணாமலிருப்பதைச் சொல்லலாம்.

மற்றொன்று, முன் சொன்னதுபோல் பிரிட்டிஷ் அரசாங்கம் தங்கள் கொடியை உயர்த்திப் பிடிக்கவும், அக்பர் தன் இஸ்லாமிய வாளை இந்துக்களுக்கெதிராகப் பிரயோகிக்கவும் இந்துக்களையே உபயோகித்துக் கொண்டதுபோல், தற்போது இந்து மதத்தை எதிர்ப்பதற்கு, மதவேற்றுமை பாராதவர்கள் என்ற போலி உடுப்புடன் பிற மதத்தினரும், பிற நாட்டவரும் இந்துக்களையே உபயோகப்படுத்திக் கொள்வதுதான்.

(Published on Hindu Human Rights 23, October 2012.)

(தொடரும்)

Series Navigation<< கோன்ராட் எல்ஸ்ட்டின் ‘இந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும்’யோகாப்பியாசம் இந்துக்களுடையதா? >>

One Reply to “இந்துக்கள் கோழைகளா?”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.