தூர்தர்சனில் மந்திரா பேடி விரித்த கூந்தலுடன் நடித்த சாந்தி நெடுந்தொடரின் தமிழாக்கத்தைப் பார்த்துக் கொண்டிருந்த சங்கர், தன் பெயர் அழைக்கப்படுவதை உணர்ந்து திரும்பிப் பார்த்தான்.
மெஸ்ஸில் தன் வேலைகளை முடித்துவிட்டு சற்றுமுன்தான் தளர்ந்து அமர்ந்திருந்தான். வெளியே வீட்டுக்காரரின் பேத்தி செண்பகம் நின்றுகொண்டிருந்தாள்.
“அண்ணே, உங்களுக்குப் போன். ரமேஷ்னு ஒருத்தர் பேசறாரு. காலையிலேயே ரெண்டுதரம் போன் வந்துச்சு. அப்பாதான் எடுத்தாரு. கூப்புட முடியாதுன்னு கோபமா வச்சிட்டாரு” என்று சற்று வருத்தம் தொணிக்கும் குரலில் கூறினாள். சங்கர், தன் பெயரில் தொலைபேசி இணைப்புக்கு பதிவு செய்து ஒரு வருடம் ஆகிறது. இன்னும் இணைப்பு கிடைக்கவில்லை. வீட்டுக்காரரின் மூத்த மகன் சுந்தர் வீட்டு எண்ணைத்தான், ஏதாவது அவசரம் என்றால் மட்டும் அழைப்பதற்காக நண்பர்களிடம் கொடுத்திருக்கிறான். எப்போதும் எதன் மீதாவது வெறுப்போடேயே இருக்கும் சுந்தர், வீட்டில் இல்லாத பொழுதுகளில் மட்டும் அவர் மனைவியோ பிள்ளைகளோ வந்து சொல்வார்கள்.
சங்கர் வேகமாக எழுந்து சென்று ஜன்னல் வழியாக கொடுக்கப்பட்ட ரிசீவரை காதில் வைத்தான்.
“டேய் ரமேஷ் சொல்லுடா”
“சங்கரா, நம்ம கிருஷ்ணனோட தங்கச்சி ரமா இறந்துடுச்சுடா”
ஒருகணம் சங்கரின் மூளைச் செல்கள் திகைத்தன. கேட்டதை நம்பாமல், நினைவில் இருந்ததை மீண்டும் ஓட்டிப் பார்த்து, கேட்டது உண்மைதான் என்று உறுதியானபின் கேட்டான்
“என்னடா சொல்ற… எப்படா… எப்டிடா”
“காலையில டைப்பிங் கிளாசுக்காக சைக்கிள்ல போறப்ப பின்னாடி வந்த லாரிக்காரனுக்கு வழிவிடுறதுக்கு ஒதுங்கியிருக்கா. அங்கேயிருந்த பள்ளத்துல சைக்கிள் இறங்கிடுச்சாம். கீழே விழுந்தவ தலை தெருவிளக்கு கம்பத்துல மோதிடுச்சாம். அங்கேயே போயிடுச்சு”
அவன் குரலும் கம்மலாகவே ஒலித்தது.
“எத்தனை மணிக்கு எடுக்கறாங்க”
“நாலு மணிக்காம். ரெண்டு தடவை போன் பண்ணினேன்டா” என்று தொடர்ந்தவனை , இடையில் மறித்து “சரிவிடு, நான் உடனே வர்றேன். நீ கிருஷ்ணனோடவே இரு” என்று ரிசீவரை உள்ளே நின்று கொண்டிருந்த செண்பகத்திடம் நீட்டி நன்றி சொல்லிவிட்டு வீட்டிற்கு விரைந்தான்.
அம்மாவிடம் விரைவாகச் சொல்லிவிட்டு அவர்களின் முகத்திலிருந்த அதிர்ச்சி விலகுமுன்பே கிளம்பினான். பேருந்து நிலையம் சென்று 48-ஆம் எண் பேருந்திலேறி அமர்ந்தான். மகாகவி பாரதி நகர் செல்லவேண்டும். நேரடிப் பேருந்து இல்லாததால் மூலக் கொத்தளத்தில் இறங்கி மற்றொரு பேருந்தேறித்தான் சென்றடைய முடியும்.
ரமாவின் மீது நண்பனின் தங்கை என்பது தவிர பெரிய பற்றெதுவும் சங்கருக்கு இல்லை. திரைப்படங்கள் பல உறவுகளை சிக்கலாக்கி விடுகின்றன. பாதிப்படங்கள் நண்பனின் தங்கையை காதலியாகவும் மீதப் படங்கள் தங்கையாகவும் இரு எல்லைகளாக வகுத்துவிடுகின்றன. இது, இரண்டுமில்லாது இருப்பவர்களை பெரும் சங்கடத்தில் தள்ளுகின்றது. சங்கர் கிருஷ்ணனைக் காணச் செல்லும்போது எப்போதாவது எதிர் கொள்வதையன்றி அவளுடன் எந்த தனிப்பட்ட உரையாடலும் நடந்ததில்லை. நண்பனுக்கு ஏற்பட்ட இழப்பே சங்கருக்கு பெரும் துயரை உண்டாக்கியது.

காலியாகயிருந்த இருக்கையில் சாய்ந்து அமர்ந்தான். பேருந்தில் ஓட்டுநரின் இருக்கையின் பின்பக்கம் “வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு” என்ற திருக்குறள் எழுதப்பட்டிருந்தது. அதை வாசித்தவுடன் சங்கரின் நினைவுகள் இரண்டாண்டுகளுக்கு முன் பாரதியாரின் கவிதையை படித்த பொழுதிற்குச் சென்றது.
தேடிச் சோறு நிதம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித் துன்பம் மிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையென பின் மாயும்
பல வேடிக்கை மனிதர்கள் போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ
என்று பராசக்தியிடம் வரங்கேட்கும் பகுதியின் நடுவில் இவ்வாறு கேட்கிறார் பாரதியார். இதனை பதினெட்டு வயதில் சங்கர் வாசித்தபோது, அவன் மனதில் பெரும் கிளர்ச்சி உண்டானது. எத்தனை கோடி மக்கள் வேடிக்கை மனிதரென வீணே மடிகிறார்கள். தானும் அவ்வாறு மடியக் கூடாது என்ற வேட்கையும் எழுந்தது.
தன்னுடன் பொறியியல் பட்டயம் படித்துவிட்டு அதற்கு தொடர்பேயில்லாத வெவ்வேறு பணிகளை செய்து கொண்டிருந்த நான்கு நண்பர்களிடம் பேசினான். எல்லோருக்குள்ளும் துடித்தபடியிருக்கும் “நான் மற்றவர் போல அல்ல. தனித்துவமானவன். புத்தர், சங்கரர், விவேகானந்தர், காந்தியைப் போன்று செயலாற்றக் கூடியவன்” என்ற உணர்வை லேசாக சுண்டினான். நால்வரும் ஒப்புக் கொண்டனர்.
“எத்தனையோ வார இதழ்கள் வெளிவருகின்றன. அனைத்திலும் திரைப்பட, அரசியல் செய்திகளைக் குறைவாகவும் அவை பற்றிய யூகங்களை மிகுதியாகவும் நிறைத்து உண்மையாகவே மக்களுக்கு தேவையான செய்திகளை மிகக் குறைவாகவே வெளியிடுகின்றன” என்று சங்கர் கூறியதை நால்வரும் ஆமோதித்தார்கள். இவற்றில் மக்களிடம் சென்று சேரவேண்டிய செய்திகளை மட்டும் எடுத்து தொகுத்து இதழாக வெளியிடலாம் என்று ஒரு மாதிரியாக ஒருமனதாக முடிவு செய்தார்கள்.
அச்சு இதழாக வெளியிட, இந்த ஐவர் குழுவில் எவருடைய பெற்றோரிடமும் பெருஞ்செல்வம் இல்லாததால் கையெழுத்துப் பிரதியாகவே கொண்டுவரலாம் என்ற முடிவுக்கு வந்தார்கள்.
சனிக்கிழமை இரவு எட்டு மணிக்கு மேல், திருமணமாகாத சகோதரிகளில்லாத சங்கரின் மெஸ்ஸிற்கு மேலிருக்கும் மொட்டை மாடியில் கூடினார்கள். விடியும் வரையில் தொகுப்புப் பணி நடைபெற்றது. இருவர் எழுத, ஒருவர் வரைய மற்றொருவர் வடிவமைக்க எல்லோரையும் சங்கர் வழி நடத்தினான்.
“அன்பு சேகரம்” எனப் பெயரிடப்பட்ட இக்கையெழுத்துப் பிரதி பத்து பிரதிகளாக நகலாக்கம் செய்யப்பட்டு வில்லிவாக்கத்திலிருந்து வியாசர்பாடி வரை பத்து அரசு நூலகங்களில் நூலகரிடம் அனுமதி பெற்று வார இதழ்களோடு வைத்தார்கள். ஒவ்வொரு பிரதியின் கடைசித் தாளிலும் சங்கரின் முகவரி எழுதப்பட்ட ஐந்து தபால் அட்டைகளை இணைத்திருந்ததால் சில வாசகர் கருத்துகளும் வந்தன. இவர்கள் மனதில் சிறு நிறைவை உணர்ந்தார்கள்.
ஐந்து மாதம் “அன்பு சேகரம்” வெளிவந்தபின் ஐவரிடமும் லேசாக சோர்வு தோன்றியது. இப்பத்திரிக்கை பணி மூலமாக தன்னிகரற்றவன் என்ற பெயரை எப்படி ஈட்டமுடியும். வேறு ஏதாவது செய்ய வேண்டுமென்ற எண்ணம் ஐவரிடமும் தோன்றியது. அந்த நேரத்தில் கிருஷ்ணன், வார இதழ் ஒன்றில் வெளியான “வாழும் கண்கள்” என்ற கட்டுரையை நண்பர்களிடம் காட்டினான். கண்தானம் செய்யவேண்டியதன் அவசியம் மற்றும் தேவையைக் கூறி, அதற்காக தாங்கள் ஆற்றும் பணியைப் பற்றி ஒரு தனியார் மருத்துவமனை மருத்துவர் விவரித்திருந்தார்.
மறுநாள் மாலை நான்கு மணிக்கு ஐவரும் சென்று அந்த மருத்துவரை நேரில் சந்திக்கலாம் என முடிவு செய்து, ஐந்து மணிக்கு சங்கர், கிருஷ்ணன் உள்ளிட்ட நால்வர் திருவொற்றியூர் பேருந்து நிலையத்தில் இணைந்தனர். பளிங்குக் கற்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த தனியார் மருத்துவமனைக்குள் சென்று விமலா என்ற பெயர் கொண்டவரின் பிரமாண்ட அறைக்குள் நுழைந்தனர். உள் அமைப்பெல்லாம் திரைப்படங்களில் மட்டுமே கண்ட பெரிய மாளிகையை நினைவுபடுத்தியது. அறைக்குள் மருத்துவமனையின் நிறுவனரின் பெரிய புகைப்படம் இருந்தது. கருணையை பாவனை செய்தது அப்பட்டமாக தெரிந்த அம்முகம் லேசாக ஒவ்வாமையை உருவாக்கியது. ஓரமாக கண்ணப்ப நாயனாரின் சிறிய படமும் இருந்தது.
இவர்களை வரவேற்று அமரவைத்தவரின் உடல்மொழி தன் கீழ் பணியாற்றுபவர்களை நடத்துவது போலவே இருந்தது. கண்தானம் என்றால் “கார்னியா” என அழைக்கப்படும் மெல்லிய கண்ணாடி போன்ற ஒன்றை மாற்றுவதுதான் என்றும், இந்தியாவில் கண்தானத்திற்காக காத்திருப்பவர்களின் எண்ணிக்கை, ஒரு வருடத்தில் இறப்பவர்களின் அளவுதான் என்றும், மக்களிடம் மனமாற்றம் உண்டானால் பெரும்பாலும் பார்வையற்றவர்கள் இல்லாத இந்தியாவை உருவாக்கிடலாம் என்றும் கூறினார். அவருடய பேச்சின் தொணி சற்று விலக்கத்தை அளித்தபோதும் அவர் கூறிய செய்தி தங்களால் ஏதேனும் இயற்ற முடியுமென்ற உத்வேகத்தை இவர்களுக்கு அளித்தது.
இந்தப் பணியில் தீவிரமாக ஈடுபடுவதன் மூலம் தங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்கமுடியும் என்று உணர்ந்தார்கள். முதலில், சிறு பிரசுரங்கள் மூலம் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் என முடிவு செய்தார்கள். ஆனால் சாலைகளில் கொடுக்கப்படும் பிரசுரங்கள் எல்லாமே மதப்பிரச்சாரமாகவோ அல்லது விளம்பரமாகவோதான் இருக்கும். இவர்களே, அவற்றை வாங்கி படிக்காமல் அப்படியே கசக்கி எறியும் பழக்கத்தை கொண்டவர்கள் என்பதால், சற்று தயக்கம் இருந்தது. பின், யோசித்து பிரசுரத்தை மூன்றாக மடித்து மேல்பக்கம் “இது மதப் பிரச்சாரமோ விளம்பரமோ அல்ல!! வாழும் கண்கள்!!!” என்று எடுப்பான வண்ணத்தில் இருக்குமாறு அச்சடித்தனர். கீழ்ப் பகுதிகளில் கண்தானத்தின் அவசியத்தைப் பற்றி விவரித்தனர். பிரசுரத்தின் அடிப்பகுதியை எளிதாக கிழிக்கும் வண்ணம் மெல்லிய துளைகளிட்டனர். அதில் மருத்துவமனையின் தொலைபேசி எண்களைக் குறிப்பிட்டதுடன் அதனை கிழித்து வாசிப்பவரின் இல்லக் கதவில் ஒட்டுமாறு கேட்டுக் கொண்டார்கள். ஐவரில், சம்பத்தின் அண்ணன் அச்சகம் வைத்திருந்ததால் இது சாத்தியமானது.
இவர்களின் பணி நேரத்தை சனி இரவு என்பதை ஞாயிறு பகலுக்கு மாற்றிக் கொண்டார்கள். காலை பத்து மணிக்கு கூடுவதென முடிவெடுத்து பதினோரு மணிக்கு கூடினார்கள். முதலில் ரயில் நிலைய முகப்புகளில் விரைபவர்களிடமும் சந்தைகளுக்கு வந்து காலி பைகளை நிறைத்துச் செல்பவர்களிடமும் பிரசுரங்களைக் கொடுத்தார்கள். வாங்கிய பெரும்பாலானவர்கள் கசக்கி கீழே போட்டனர். சிலர் கொடுப்பவரின் முகத்தினைப் பார்த்து தங்களின் பைகளில் திணித்துச் சென்றனர்.
இவர்களின் பணி மக்களிடம் எம்மாதிரியான தாக்கத்தை உண்டாக்கியுள்ளது என்பது பற்றி எதையும் அறியமுடியவில்லை. எனவே, இரண்டு மாதங்களுக்குப் பிறகு தங்களின் செயல் பற்றி தீவிரமாக விவாதித்தார்கள். “மக்களை அவர்கள் வரும் இடங்களில் அணுகுவதைவிட அவர்களின் இல்லங்களில் சென்று சந்திக்கலாம்” என்று கிருஷ்ணன் கூறினான். பொது இடங்களில் மக்களின் மனதில் ஒருவித அலுப்பு இருக்கும். வீட்டில் இருக்கும்போது சற்று ஆசுவாசமாக இருப்பார்களென கிருஷ்ணன் உறுதியாகக் கூறியதால் இத்திட்டத்திற்கு மற்றவர்களும் ஒப்புக் கொண்டார்கள்.
தனி வீடுகளுக்குச் சென்று ஓரிருவரை சந்திப்பதை விட மக்கள் நெருக்கமுள்ள குடியிருப்புகளுக்குச் சென்றால் பெருவாரியான மக்களை அணுகலாம் என்று முடிவு செய்தார்கள். முதலில் வியாசர்பாடியில் இருக்கும் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் ஆரம்பித்தார்கள்.
மூன்று தளங்களில் ஒவ்வொரு வீடும் முன்னூற்றைம்பது சதுர அடியில் கட்டப்பட்ட நெருக்கமான குடியிருப்பு. இப்படி மக்கள் நெருக்கடியுடன் வாழும் பகுதியை சங்கர் முதல் முறையாகப் பார்த்தான். முதலில், மனதில் ஒருவித அசூசை தோன்றினாலும் அங்கு விளையாடிய பிள்ளைகளின் முகத்தில் தெறித்த மகிழ்ச்சி இவனிடம் ஒரு ஈர்ப்பை உண்டாக்கியது. இவர்கள் சென்றது ஞாயிற்றுக் கிழமை என்பதால் பெரும்பாலான வீடுகளில் அசைவ உணவின் மணம் எழுந்து மனதை நிறைத்தது.
இவர்கள் ஐந்து பேர்களாக சென்றதால் பெரியவர்கள் என்னவென்று நெருங்கிக் கேட்டார்கள். கண்தானம் என்பது பற்றிக் கூறி அந்தப் பிரசுரத்தின் கீழ்பகுதியை கிழித்து காலண்டர் அட்டையிலோ கதவிலோ ஒட்டி வைத்துக் கொண்டால் ஏதாவது இறப்பு நேரும்போது தொடர்பு கொள்ளலாம் என்று கிருஷ்ணன் கூறினான். அவன் கூறியதை கவனித்தவர்கள் “அதற்கென்ன வீணாப் போறது யாருக்காச்சும் பயன்பட்டா நல்லதுதானே” என்று பிரசுரத்தை வாங்கிக் கொண்டார்கள். இப்போதைய பணி பயனளிக்கும் என்று இவர்கள் மனதில் ஒரு நம்பிக்கை ஏற்பட்டது.
கிருஷ்ணின் வீடு அருகிலிருந்ததால் மதிய உணவை அங்கேயே உண்ணலாம் என அவன் கூறியதை மற்றவர்களும் ஏற்றார்கள். கிருஷ்ணனின் தந்தை மத்திய அரசுப் பணியில் இருந்தார். அவன் அறையில் பாட புத்தகங்களைவிட அதிகமாக ஆன்மீக நூல்களும் தத்துவ நூல்களும் இருந்தன. சாப்பிட்டு முடித்து அவன் அறையில் சற்று ஓய்வெடுத்தபோது சங்கர் கிருஷ்ணனிடம் “அந்தக் குடியிருப்புல இருக்குற பசங்களெல்லாம் எப்டிடா அவ்ளோ சந்தோசமா இருக்காங்க. நானெல்லாம் அப்படி இருந்ததா நினைவேயில்ல” என்று கேட்டான்.
அதற்கு கிருஷணன்
“நாமெல்லாம் எவ்வளவு இருந்தாலும் இல்லாத ஒன்ன, கெடைக்காத ஒன்ன நெனச்சு ஏங்கிக்கிட்டு இருப்போம். ஆனா அவங்க தங்கக்கிட்ட என்ன இருக்கோ அத நெனச்சு சந்தோசமா இருக்காங்க” என்றான்.
“அங்க இருக்கிற பெரியவங்க முகத்திலேயும் வெறுப்பு இல்லாம ஒரு நிறைவு தெரியுதுல்ல”
“நம்ம வீட்ல இருக்கிறவங்க சம்பாதிக்கிறத எல்லாம் நாளைக்கு வேணும்னு வச்சுக்கிட்டு இன்னைக்கி கம்மியா செலவு பண்ணுவாங்க. இன்னைக்கி வருமானம் வந்தாலும் நாளைக்கு வருமா வராதுன்னு கவலைப்பட்டுக்கிட்டே இருப்பாங்க. ஒரு அதிருப்தி அப்படியே முகத்திலே படிஞ்சிருக்கும்”
“ஆனா அவங்க அன்னன்னிக்கி வர்ற வருமானத்துல சந்தோசமா வாழ்றாங்க. ஞாயித்துக் கெழம மட்டுமில்லாம என்னிக்கி வருமானம் வந்தாலும் அன்னக்கி அசைவம் சமைச்சிடுவாங்க” என்றான் கிருஷ்ணன்.
“நம்ம மாதிரி நடுத்தரக்காரங்க நாளையைப் பத்தி நெனச்சு சேமிக்கிறது தப்புங்கிறியா” என்று ரமேஷ் கேட்டான்.
“சேமிக்கிறது தப்பில்ல. அத நெனச்சு எப்பவுமே ஒருவித பதட்டமா இருக்கிறதுதான் சரியில்லைன்னு தோனுது” என்றான் கிருஷ்ணன்.
அப்போது உள்ளே வந்த கிருஷ்ணனின் அம்மா கிண்ணிகளில் வைத்துக் கொண்டுவந்த கேசரியைக் ஆளுக்கொன்றாகக் கொடுத்து “இன்னைக்கி ரமாவுக்கு பிறந்தநாள். அவ ரொம்ப நாளைக்கி சந்தோசமா இருக்கனும்னு வேண்டிக்கங்கப்பா” என்று கூறினார்.
சங்கர் தன் கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டபோது இரண்டு மாதங்களுக்கு முன் அவர்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அனுப்பிய வாழ்த்து அட்டையை நினைத்துக் கொண்டான்.
சங்கர் வருடாவருடம் உறவினர்க்கெல்லாம் தன் கையாலேயே எழுதிய பொங்கல் வாழ்த்து அட்டைகளை அனுப்புவான். அவர்கள் யாரும் ஒருபோதும் அனுப்பாதபோதும். இம்முறை வேறுமாதிரி அனுப்பலாமென முடிவு செய்தார்கள். அட்டையின் முதல் பக்கத்தில் பாரதியாரின் வரங்கேட்கும் கவிதையைப் போட்டு, கடைசி வரியான “வேடிக்கை மனிதரென வீழ்வேனென்று நினைத்தாயோ?” என்ற வரிக்குப் பதிலாக “வேடிக்கை மனிதரென வீழாமல் வாழ… அடுத்த பக்கம் பாருங்கள்” என ஒரு அம்புக்குறி இடப்பட்டது.
அடுத்த பக்கத்தில் கவிஞர் வைரமுத்து, வாசுதேவ் நிர்மல் எழுதிய கவிதையை சிந்தி மொழியிலிருந்து மொழிபெயர்த்து அவரது “எல்லா நதியிலும் என் ஓடம்” நூலில் இடம் பெற்ற
“நான்
இப்படித்தான்
உயில் எழுத விரும்புகிறேன்
நான் இறந்தவுடன்
என் கண்கள்
பார்வையற்ற ஒருவன் கண்களில்
பதிக்கப்பட வேண்டும்
இந்தத்
தங்க உலகத்தை அவன் தரிசிக்க வேண்டும்!
ஆடும் அலைகள்
கலர்ப் பறவைகள்
அப்பாவி வண்ணத்துப்பூச்சிகள்
மினுமினுக்கும் நட்சத்திரங்கள்
வானவில்லைப் பிரசவிக்கும் மேகங்கள்
அத்தனை அதிசயங்களையும்
அவன் தரிசிக்கவேண்டும்
அவன் மரணமடைந்தால்
அதே கண்களை
பார்வையற்ற இன்னொருவனுக்குப்
பதிக்கவேண்டும்
இப்படியாக
என் கண்கள்
ஊழியின் எல்லைவரை
யுகங்கடந்து வாழவேண்டும்
என் கண்கள்
என் மரணத்தை
வெல்ல வேண்டும்”
என்ற கவிதையை வைத்தார்கள்.
கீழே… என்றென்றும் வாழ “கண்தானம் செய்வோம்”
என்ற வாசகம் இடம் பெற்றது.
இந்த வாழ்த்து அட்டையை அனுப்பிவிட்டு யாராவது ஏதாவது சொல்வார்கள் என எதிர் பார்த்தான் சங்கர். நல்ல பணி அதற்கு என்ன செய்யவேண்டுமென்ற விசாரிப்புகள்தான் வரவில்லை, ஏன் இந்த வீண் வேலை என்றும்கூட யாரிடமிருந்தும் கேள்வியெழவில்லை. தன் உறவினர்களைப் பற்றி நினைத்ததும் லேசான வறட்டுப் புன்னகை அவன் உதட்டில் விரிந்தபோதே ரமா என்றென்றும் வாழ்வாள் என்ற எண்ணமெழுந்து மனதில் மெல்லிய நிறைவு தோன்றியது.
மூலக்கொத்தளத்தில் இறங்கி 2ஏ பேருந்தேறி மகாகவி பாரதிநகர் பேருந்து நிலையத்தில் இறங்கிய சங்கர், ஒரே மாதிரி திட்டமிட்ட நேர்த் தெருக்களில் நடந்து கிருஷ்ணனின் வீட்டை அடைந்தான். வானம் லேசாகத் தூறிக் கொண்டிருந்தது.
எப்போதும் தூறலை ரசிக்கும் சங்கர் இப்போது சற்று எரிச்சலடைந்தான். கிருஷ்ணனின் வீட்டிற்கு முன்னால் சாமியானாவில் பந்தல் அமைக்கப்பட்டு இருபது பேர் அளவிற்கு அமர்ந்திருந்தார்கள். சங்கரைப் பார்த்ததும் கிருஷ்ணனின் அருகில் இருந்த ரமேஷ் எழுந்துவந்து இவன் தோளில் கை வைத்து லேசாக அணைத்தான். இருவரும் அருகில் சென்றபோது எழுந்து நின்ற கிருஷ்ணனை எப்படி வந்ததென்று தெரியாத விம்மலுடன் அணைத்துக் கொண்டான் சங்கர். சிவந்து வீங்கியிருந்த கிருஷ்ணனின் கண்கள் சங்கரை நிமிர்ந்து பார்க்கையில் தயங்கித் தடுமாறியது.
சங்கர் வீட்டிற்குள் செல்லும்போது ரமேஷும் உடன் வந்தான். வாசலோரமாக கிருஷ்ணனின் அப்பாவின் முதுகை லேசாகத் தட்டி, ஒரு பெரியவர் ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார். கூடத்தில் கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரமாவின் உடலை, பெண்கள் சூழ அமர்ந்திருந்த, அவள் அம்மா நிலைத்த விழிகளுடன் நோக்கிக் கொண்டிருந்தார். சங்கர், ரமாவின் வெளுத்த கன்னங்களையும் இயல்பாக மூடியிருந்த இமைகளையும் உற்றுப் பார்த்தபடி, பாதத்தின் பக்கமாக கைகளை வைத்து வணங்கியபின் ரமேஷின் முகத்தை நோக்கினான். ரமேஷ் தன் பார்வையை, இயல்பாகத் திரும்புவது போல வேறுபக்கம் பார்த்தான்.
சங்கரின் மனதில் தோன்றிய குழப்பம் முகத்தில் வெளிப்படையாகத் தெரிந்தது. ஆட்கள் ஒவ்வொருவராக வந்து கொண்டிருந்ததால் ரமேஷிடம் கூட கேட்க முடியவில்லை. வெளியே போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தான். நகரத்திற்கு வந்து பல ஆண்டுகளுக்குப் பிறகும் நீங்காத, கிராமத்தானின் இயல்பு என நண்பர்களால் கூறப்பட்ட பழக்கத்துடன், எந்த விசயத்தையும் இடம் பொருள் பார்க்காமல் கேட்டு “அவசரக் குடுக்கை” என்று பெயர் வாங்கிய சங்கருக்கு, தற்போது தன்னுடைய நா, புதைமணலில் சிக்கிய ஆட்டைப் போல பேச எத்தனிக்கும் போது கீழன்னத்தில் ஒட்டிக் கொண்டு எழாமல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியாக இருந்தது.
கருமேகம்போல துயர் படர்ந்திருக்கும் இந்த இடத்தில் எப்படிக் கேட்க முடியும் என்று “கேள்! கேள்!” மனதிற்குள் துடித்த குரலிடம் மன்றாடினான். ரமேஷிடமே கேட்க முடியாத போது கிருஷ்ணனிடமோ, அவன் தாய், தந்தையிடமோ எப்படிக் கேட்க முடியும். ஆறுமணி நேரத்திற்குமேல் ஆகிவிட்டதே, இனி யாரிடம் கேட்டு என்ன?.
உடலை எடுக்கும்வரை மனதிற்குள் குமைந்தபடி அமர்ந்திருந்தான் சங்கர். கிருஷ்ணனின் அம்மாவின் ஓலம் நீடித்துக் கொண்டிருந்தது. உடலின் பின் செல்லாமல் பேருந்து நிலையம் நோக்கி நடந்தான்.
தெருவில், மஞ்சளும் சிவப்புமாக உதிர்ந்து கிடந்த வாதாம் இலைகளுக்கிடையே கிடந்த கருத்த வாதாங் கொட்டையொன்றை வாயில் கௌவியபடி மரத்தில் ஏறிய அணில், கிளையில் வாகாக அமர்ந்து, கைகளில் பிடித்துக் கொண்டு கொறிக்க ஆரம்பித்தது. நடந்தபடி அதைப் பார்த்த சங்கருக்கு ஒரு கோணத்தில் அது குரங்கைப் போலத் தோன்றியது. திகைத்தவன் ஓரடி பின்னால் எடுத்து வைத்து கூர்ந்து நோக்கினான். முதுகிலிருந்த கோடுகள் தெரிந்தது. இந்தச் சிறிய உருவத்தைப் பார்த்து எப்படி பெரிய குரங்கென மயங்கினோம் என வியந்த கணத்திலேயே தன் மீதே பெரும் கசப்பு தோன்ற காலை ஒருமுறை வேகமாக சாலையில் உதைத்தான். ஈர மண்ணின் மேல் காலணி பட்டதால் எழுந்த ஓசை கேட்டவுடன், நிதானமடைந்து சுற்றிலும் திரும்பிப் பார்த்தான். யாரும் தன்னைப் கவனிக்காததில் சற்று திருப்தியடைந்தவன், இனி ஞாயிற்றுக் கிழமைகளில் என்ன செய்வது என்று யோசித்தபடியே நடக்க ஆரம்பித்தான்.
கா. சிவா
ஒரு எதிர் பார்ப்புடன் நகர்ந்த து