ராம் என்றொரு நண்பன்

எழுபதுகளில் இலக்கிய உலகில் இருந்த அனைவரும் வெங்கட் சாமினாதன் மூலம்தான் எனக்கு அறிமுகம். ராமும் அப்படித்தான். கசடதபற பத்திரிகையில் நான் எழுதிய “அம்மா ஒரு கொலை செய்தாள்” கதை வெளிவந்தபின் நான் சென்னை வந்தபோதெல்லாம் அலைந்து திரிந்து வருபவர்களுக்கு தன் வீட்டைத் திறந்து வைத்திருந்தார்கள் ராமும் அவர் தோழி ஜெயாவும். ராம் எழுதிய சில கதைகளை வெங்கட் சாமினாதன் தந்திருந்தார் படிக்க. ஆனால் சென்னையில் நான் சந்தித்த ராம் பதிப்பக உலகத்தில் காலடி வைத்திருந்தார். அதற்கு உறுதுணையாகவும் பக்க பலமாகவும் இருந்து ஜெயா ஆற்றிய உதவியையும் பொழிந்த அன்பையும் ராமின் விடாமுயற்சியையும் அவர்களுடன் சில மாதங்கள் தங்கிய நான் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. எஸ்.வி.ராஜதுரையின் ‘அந்நியமாதல்,’ அவரது இன்னொரு புத்தகமான ‘எக்சிஸ்டென்ஷியலிசம் – ஓர் அறிமுகம்,’ தியடோர் பாஸ்கரனின் ‘The Message Bearers‘ போன்ற புத்தகங்களைப் பதிப்பிக்கும்போது சலித்துக்கொள்ளாமல் அவர் செய்த படிகள் திருத்தும் வேலைகளை நோக்கியபடி நான் அவர் வீட்டில்தான் இருந்தேன். தாய்மொழி தெலுங்காக இருந்தாலும் தமிழிலும் தற்காலத் தமிழ் இலக்கியத்திலும் தமிழை எங்கும் கொண்டுபோக வேண்டும், அதற்குப் பன்னாட்டுப் பன்மொழி இலக்கியங்களைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதிலும் வெகு ஆர்வமாக இருந்தவர். அதைப் பற்றி ஓயாமல் பேசியபடி இருந்ததோடல்லாமல் செய்தும் காட்டியவர். க்ரியா அகராதியின் முதல் பதிப்பு வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது பலமுறை க்ரியா அலுவலகத்துக்குப் போனபோது புத்தகங்களைக் காட்டிப் பதிப்பு வேலையின் நுணுக்கங்களைக் குறித்துப் பேசுவார். Tamil Lexicon நூலின் 7 பாகங்களையும் நான் கட்டாயம் வாங்க வேண்டும் என்று வலியுறுத்தி வாங்கவைத்தார். அப்போது க்ரியாவில் அவருடன் இணைந்து வேலை செய்த பா. ரா. சுப்பிரமணியமும் தற்போது ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் நிறுவனராக இருக்கும் சுந்தரும் இன்றும் என் நட்பு வட்டத்தில் இருக்கிறார்கள்.

அப்துல் கரீம் கான் இசையை முதலில் கேட்டதும் அவர் வீட்டில்தான். இசையார்வம் அவருக்கும் ஜெயாவுக்கும் அதிகம் இருந்தது. ஒரு கதையில் சம்பூர்ண ராமாயணம் படத்தில் ராவணனாக வரும் டி.கே பகவதி பாடும் “இன்று போய் நாளை வாராய்” பாடல் குறித்து என் “திக்கு” கதையில் சதங்கை பத்திரிகைக்கு 1996ல் எழுதியபோது இசை தெரிந்த என் உறவினர் ஒருவர் கூறியிருந்தபடி அது சாவித்ரி ராகம் என்று எழுதியிருந்தேன். தொகுப்பாகக் கொண்டுவரலாம் என்று யோசித்தபோது அதற்கான கதைகளில் “திக்கு” கதையும் இருந்தது. படிகளைத் திருத்தியபோது அது திலங்க் ராகம் என்று சரியாகத் திருத்தினார் ராம்.

படிகளை வெகு கவனமாகத் திருத்துவார் ராம். அவர் திருத்தியிருக்கும் பகுதிகளை ஒத்துக்கொண்டும் மறுத்தும் விவாதம் செய்வேன் க்ரியாவின் ராயப்பேட்டை அலுவலகத்தில் சேர்ந்து அமர்ந்து வேலை செய்யும்போது. ஓர் இடத்தில் அவர் குறித்திருந்ததைப் பார்த்து “சரியாகத் திருத்துகிறது சனியன்” என்று நான் கூறியதும் அதற்கு வாய்விட்டுச் சிரித்தார். ராமுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதா என்றால் கட்டாயம் ஏற்பட்டது. வேறுபாடு மட்டும் இல்லை. கருத்து மோதல்களும் ஏற்பட்டபடிதான் இருந்தன. சில சமயம் அவற்றைச் சிரித்துக் கடந்தோம். சிலசமயம் எப்போதும் வாளுறைகளில் உறங்கிக் கிடந்த கருத்துக் கத்திகளை வெளியே எடுத்து வீசிக்கொள்வோம். அவர் வெளியிடாத என் புத்தகங்களையும் நான் இயங்கிவரும் ஆவணக்காப்பகமான ஸ்பாரோ வெளியிடும் புத்தகங்களையும் அவருக்கு அனுப்பியபடிதான் இருந்தேன். க்ரியா அகராதியின் இரண்டாம் பதிப்பில் ஸ்பாரோவுக்கும் எனக்கும் நன்றி கூறியிருந்தார். காட்டில் ஒரு மான் தொகுப்பு முழுவதும் படி திருத்தியபின் க்ரியா அதை வெளியிடாமல் போனபின்னும் தான் திருத்திய படிகளைக் கேட்டு வாங்கி வைத்துக்கொண்டார். அதில் அவர் பங்கை நான் மறந்துவிடுவேனோ என்று பயம்! ஒரு புத்தகம் வெளி வருவதற்காக அவர் செய்யும் கடின உழைப்புக்கான அங்கீகாரம் பலர் தரவில்லை என்று குறைபட்டுக்கொள்வார். வீட்டின் மூலையில் ஒரு சமையலறை தொகுப்புக்குப் படிகள் திருத்தும்போது “இந்தக் கதைகளை எல்லாம் வேற யாரும் போடமாட்டாங்க. நான்தாம்மா போடுவேன்” என்று இடக்காகச் சொல்லுவார்; என்னிடமிருந்து மண்டையில் குட்டும் வாங்குவார்.

ஐராவதம் மகாதேவனின் Early Tamil Epigraphy நூலிலிருந்து பிறகு அவர் பதிப்பித்த மொழிபெயர்ப்புகள், கவிதைகள், இமையத்தின் எழுத்துகள் வரை புத்தகம் பதிப்பிப்பதில், அதன் உருவாக்கத்தில் தன் முத்திரையை ஆழமாகப் பதித்தார். பதிப்புத் துறையில் நேரும் மாற்றங்களைக் கவனமாக நோக்கியபடியும் அந்த மாற்றங்களை தமிழ்ப் பதிப்புத் துறைக்குக் கொண்டுவருவதில் விடாமல் கவனம் செலுத்தியபடியும் இருந்தார். மணற்கேணி மூன்றாம் இதழில் (டிசம்பர் – ஜனவரி 2011) அவர் எழுதிய “எண்வயத் தொழில்நுட்பமும் தமிழ்ப் பதிப்புத் துறையும்” இதற்குச் சான்று. தனக்குத் தெரிந்த எழுத்தாளர்கள் எழுதியபடி இருக்கவேண்டும் என்றே நினைத்தார். ஒவ்வொரு முறை சந்திக்கும்போதோ தொலைபேசியில் பேசிக்கொள்ளும்போதோ “என்ன எழுதறே?” என்று கேட்கத் தவறமாட்டார்.

நாற்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளின் நட்பில் அன்பு, கோபம். முரண்பாடு, விமர்சனம் எல்லாம் கலந்துதான் இருக்கும். நட்பு என்பது அப்படிப்பட்டதுதான். அது சீரான பாதை இல்லை. மேடு பள்ளங்களையும் அங்கங்கே புதைகுழிகளையும் கொண்டது நட்பு. அவற்றையும் மீறி என்னுடன் அந்தப் பாதையில் வந்த ஒருவர் இன்றில்லை. நவம்பர் 17 தேதியில் என் 76ம் பிறந்த நாளன்று அதிகாலையில் என் வயதேயான ராம் இல்லாமல் போனார்.

2 Replies to “ராம் என்றொரு நண்பன்”

  1. மனசைத் தொடும் நினைவு அஞ்சலி அம்பை. இந்த நினைவுகளின் ஊடாக நட்பின் இயல்பையும் பயணத்தையும் ராம் என்ற மனிதனின் பதிப்புத்துறை தனித்துவத்தையும் பேசி இருப்பது சிறப்பு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.