கல்வியும் தமிழ் பிராமணர்களும் – பத்தொன்பதாம் நூற்றாண்டு

தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் திராவிடப் பேரறிஞர்களால் சொல்லப்படுவது இது: இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தமிழன் கல்வியறிவு பெற்று உலகம் முழுவதற்கும் பாடம் எடுக்கும் திறன் பெற்றிருந்தான். தமிழ்நாட்டில் பிராமணர்கள் நுழைந்து தமிழர் கல்வித் திறனைச் சீர் குலைத்தனர். பிராமணர் அல்லாதாரை படிக்கவிடாமல் தடுத்தனர். இன்றும் பல்வகைச் சூழ்ச்சிகளைச் செய்து தடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

பொய்யே மூலதனம்

இது அப்பட்டமான கோயபல்ஸ் வகைப் பொய் என்று தெரிந்தும் இது திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. தமிழகத்தின் அறிவுஜீவிகள் என்று கருதப்படுபவர்களும் எந்த நேர்மையும் இன்றி இப்பொய்யைத் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் அறிவுச் சூரியனாக அறியப்படும் திரு ஆ. ராசா அவர்கள் சில நாட்களுக்கு முன்னால் இந்தப் பொய்யை எந்தத் தயக்கமும் இன்றிக் கூறினார். உண்மை என்ன என்பதை விளக்கவே இக்கட்டுரை.

1916ல் வந்த Non-Brhamin Manifesto ( பிராமணர் அல்லாதார் அறிக்கை) ஆவணம் சொல்வது இது: In the matter of education itself, the advantage is not on the side of the Brahmin castes. Though rather late in the field, the non-Brahmin communities have begun to move. They now represent various stages of progress. Some of them like Chetty, the Komati, the Mudaliar, the Naidu, the Nayar have been making rapid progress. Even the least advanced… are manifestly exerting themselves to come up the standards of the new times. Among some non-Brahmin communities the development is more harmonious and less one-sided than among Brahmins.

We appeal to the enlightened members of the non-Brahmin communities to be up and doing, Their future is in their own hands. They have in the first place educate their boys and girls in much greater number than they have yet done.

பிராமணர் அல்லாதாரும் கல்வி அறிவு பெற்று வருகிறார்கள், பிராமணர்களை விட உயர்வாகவே சில கோணங்களில் பார்த்தால் கருதக் கூடிய வகையில் இருக்கிறார்கள் என்று அறிக்கை தெளிவாக கூறுகிறது. பிராமணர்களை கடுமையாக விமரித்தாலும் கல்வி பெறுவது உங்கள் கைகளில்தான் இருக்கிறது என்றும் அது சொல்கிறது. பெரியாரின் வருகைக்குப் பிறகுதான் இந்த நிலைப்பாடு திரிக்கப்பட்டு, பிராமணர்கள் மற்றவர்கள் கல்வி கற்பதை, எழுத்தறிவு பெறுவதைத் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற பொய் உருவாகி திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டது. திராவிட இயக்கத்த்தின் ஹிட்லரிய இனவெறி நோக்கோடு இது ஒத்துப் போவதால் இன்றும் தொடர்ந்து சொல்லப்படுகிறது. இதை மிகப் பெரிய வரலாற்றுப் புரட்டு என்றுதான் சொல்ல முடியும். தமிழகத்தின் நேர்மையற்ற அறிஞர்களும் திராவிட இயக்கமும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் அபாயகரமான புரட்டு.

பிராமணர்கள் மட்டுமா படித்தார்கள்?

தமிழகத்தில் என்றுமே பிராமணர்கள் ஆட்சியில் இருந்ததில்லை. 1947க்கு முன் குறைந்தது நானூறு ஆண்டுகளாகத் தமிழகத்தின் பெரும்பகுதிகளில் ஆட்சி செய்து கொண்டிருந்தவர்கள் ஆங்கிலேயர் அல்லது இஸ்லாமியர். இவர்கள் பிராமணர்களோடு சேர்ந்து மற்றவர்களைத் தடுத்தார்களா? பார்க்கப்போனால், இருமொழிகளில் புலமை பெற்று துபாஷிகளாக வேலைபார்த்தவர்களில் பலர் பிராமணர்கள் அல்லர். மாறாக வெள்ளாளர்கள். வேதங்களை முதல் மூன்று வர்ணத்தவர்கள் மட்டுமே படிக்கலாம் என்று சொல்லப்பட்டாலும், உபநிடதங்கள் 17ம் நூற்றாண்டிலேயே மொழிபெயர்க்கப் பட்டுவிட்டன. மொழிபெயர்ப்புகள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழிலும் வரத் துவங்கி விட்டன. உதாரணமாக 1898ல் ஒரு புத்தகம் (இரண்டாம் பதிப்பு 1906ல்) வெளிவந்தது. அதன் பெயர் ‘இந்து பைபில் என்னும் ஆரியர் சத்தியவேதம் (பழைய ஏற்பாடு – உபநிஷத்துகள்). இதைத் தொகுத்தவர் சேலம் பகடால நரசிம்மலு நாயடு; பார்வையிட்டவர் தில்லையம்பூர் வெங்கடராம ஐயங்கார்! சி வை தாமோதரம் பிள்ளை தன் வாழ்த்துக்களை அனுப்பியிருக்கிறார்.

இன்னொரு முக்கியமான கேள்வியை திராவிட இயக்கத்தினர் கேட்க மறந்து விடுகிறார்கள். இஸ்லாமியருக்குப் படிக்க எந்தத் தடையும் இல்லை. எல்லோரும் படிக்கலாம். ஆனால் இஸ்லாமியர்களில் படிப்பறிவு இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் மிகவும் குறைவாக இருந்த்து. ஏன், இன்று கூட இந்திய அளவில் இஸ்லாமியரில் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் அதிகம் இருக்கிறார்கள். யார் அவர்களைத் தடுத்தார்கள்? பிராமணர்களா?

காரணம் எளிமையானது.

படிப்பறிவின்மையின் காரணம் என்ன?

இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் எழுத்து என்பதைப் பார்ப்பதே பலருக்கு அரிதாக இருந்திருக்கும். இப்போது போல புத்தகங்கள் கிடையாது. தொலைக்காட்சி கிடையாது. விளம்பரப் பலகைகள் கிடையாது. பேனா, பென்சில் கிடையாது. எழுத வேண்டுமென்றால் புழுதியில் விரலால், அல்லது குச்சியால் எழுத வேண்டும். அல்லது ஏட்டில் எழுதுகோலால் எழுதவேண்டும். கல்வெட்டுகள், தாமிரப் பட்டயங்கள் போன்றவை எளியவர்களுக்காக என்றுமே இருந்த்தில்லை. நிலவுடைமையாளரோ, நிலத்தில் பாடுபடுகின்றவரோ, மற்றைய தொழில்களைச் செய்கின்றவர்களோ எழுத்தறிவு பெற வேண்டும், பரவலான கல்வியறிவு வேண்டும் என்ற தேவையே இல்லாமல் இருந்தார்கள் என்பதுதான் உண்மை. பொருளாதார ரீதியாக எழுத்தறிவோ, பரவலான கல்வியறிவோ அவர்களுக்கு எந்தப் பயனையும் தந்திருக்காது. கல்வி என்றால் அறிவியல் கல்வி அல்ல. அன்று எழுத்தளவில் அறிவியல் கல்வி அனேகமாக கிடையாது. அறிவியல் கல்வி சாதி ரீதியாகப் வாய்வழியில், நடைமுறையில் பயிற்றுவிக்கப் கொண்டிருந்தது. உதாரணமாக பொற்கொல்லர்கள் பொன் நகைகளைச் செய்யும் திறனை தங்கள் குலவழியில் பெற்றுக் கொண்டிருந்தார்கள். அதற்கு எழுதப் படிக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்ததில்லை. இதே நிலைமைதான் மற்றைய தொழில்களுக்கும். இலக்கியத்தைக் கூட மனதால் கற்றுக் கொள்ள முடியும். பிராமணர்கள் காலம் காலமாக வேதங்களை எழுதாமல்தான் கற்றுக் கொண்டிருந்தார்கள். கூட்டல் கழித்தல் போன்றவற்றை எழுத்தறிவு இல்லாமலே கற்றுக் கொள்ள முடியும். இன்று கூட நம்மில் பலருக்கு 8×5 = 40 என்று தெரியும். ஆனால் அதை தமிழ் எண்ணில் எழுதினால் படிக்க முடியாது.

ஆனால் எழுத்து தரும் நன்மைகளும் பிராமணர்களுக்கு பிடிபடத் துவங்கின. ஓலைகள் மனிதர்களை விட அதிக காலம் இருக்கும் என்ற உண்மை உரைத்த பிறகு, எழுத்து புழக்கத்திற்கு வந்தது. வேதங்கள் கூட ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே ஓலைகளில் எழுதப்பட்டு விட்டன. பௌத்தர்களும் சமணர்களும் எழுத்தறிவு பெற்றிருந்தார்கள். அவர்களுக்கு ஈடு கொடுக்க வேண்டுமானால் எழுதப்படிக்க வேண்டிய கட்டாயம் பிராமணர்களுக்கு ஏற்பட்டது. பிராமணர்களுக்கு மெல்ல மெல்ல எழுத்தறிவு பொருளாதாரத் தேவையாக மாறியது. மந்திரங்களும் வேதங்களும் எழுதப்படத் துவங்கின. மனப்பாடம் செய்வதன் கூட எழுதிப் படிக்கும் வழக்கமும் ஏற்பட்டது. காலப்போக்கில் எழுத்து முதன்மை பெற்று அதுவே ஆதாரமாகியது. காதால் கேட்டுப் படிப்பதின் மதிப்பு பிராமணர்கள் மத்தியில் குறைந்து கொண்டே போனது. எழுதப் படிக்கத் தெரியாத பிராமணன் எள்ளல் செய்யப்பட்டான். முக்கியமாக ஜோதிடத்திற்கு எழுத்தறிவும் கணக்கறிவும் தேவையாக இருந்தது. இல்லாவிட்டால் ஜாதங்களைக் கணிக்க முடியாது.

இதே போன்று பிராமணர் அல்லாத சில சாதிகளுக்கும் படிப்பு வாழ்வாதாரமாக மாறியது. உதாரணமாக கணக்குப் பிள்ளைகள் என்று அழைக்கப்பட்ட கிராம அதிகாரிகளுக்கும் எண்ணும் எழுத்தும் வாழ்வாதாரம். அவர்கள் பிராமணர்கள் அல்லர். உடலுழைப்பைச் சார்ந்திராத மற்றைய பிராமணர் அல்லாதாரும் எழுத்தறிவு பெற்றிருந்தனர். அவர்களில் பலர் இறவா இலக்கியங்களையும் படைத்தனர்.

தொழிற்புரட்சியும் பரவலான படிப்பறிவும்

படிப்பின்மைக்கும் ஏழ்மைக்கும் நிச்சயம் தொடர்பு காலம் காலமாக இருந்திருக்கிறது. ஆனால் படித்தால் ஏழ்மையிலிருந்து விடுதலை பெற முடியும், படிப்பு எல்லோருக்கும் முக்கியமான பொருளாதாரத் தேவை என்ற நிலைமையை தொழிற்புரட்சிதான் உலகெங்கும் உருவாக்கியது. இந்தியாவில் தொழிற்புரட்சியின் தாக்கம் மிகவும் பின்னால்தான் ஏற்பட்டது. உதாரணமாக அச்சிட்ட புத்தகங்களை நாம் பயன்படுத்தத் துவங்கியது பத்தொன்பதாம் நூற்றாண்டில் – மேலை நாடுகளில் புத்தங்கள் புழங்கத் துவங்கி மூன்னூறு ஆண்டுகளுக்குப் பின்னால். படிப்பின் முக்கியத்துவம் நமக்குப் புரியத் துவங்கியதும் பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான். பரவலான எழுத்தறிவின் பயன்களும் அதனால் ஏற்படும் பொருளாதார முன்னேற்றங்களும் நம் மக்களுக்குப் பிடிபடத் துவங்கியது மிகப் பின்னால்தான். ஆனால் இருபதாம் நூற்றாண்டின் துவக்க ஆண்டுகள் வரையில் பணம் படைத்தவர்களும், நிலவுடைமையாளர்களும் படிக்க வேண்டும் என்ற நினைப்போடு இருந்த்தாகத் தெரியவில்லை. பிராமணர் அல்லாதார் அறிக்கை இந்த நினைப்பை சரியாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. ‘படித்து என் பையன் என்ன செய்யப்போகிறான்?’ என்ற கேள்வி, நான் சிறுவனாக இருந்தபோது கூடக் கேட்கப்பட்டுக் கொண்டிருந்தது. அதன் விடை முதலில் பிராமணர்களுக்கு புரிந்தது என்பது உண்மை. ஆனால் அதற்காக அவர்களைக் கழுவில் ஏற்ற முடியாது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் கல்வி நிலைமை

தாமஸ் மன்ரோ மதராஸ் ராஜதானிக்கு பத்தொன்பதாம் நூற்றாண்டின் இருபதுகளில் கவர்னராக இருந்தார். அவர் அளித்த 1822ம் ஆண்டு குறிப்பில் சொல்லப்படுபவை இவை:

1. பாரம்பரியப் பள்ளிக் கல்வியில் தலையிடுவது என் நோக்கமல்ல. மக்கள் அவர்கள் பள்ளிகளை அவர்களே நட்த்திக் கொள்ள வேண்டும்.

2. எத்தகைய கல்வி சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பதற்கான முழுச் சுதந்திரம் மக்களுக்கு அளிக்கப்படவேண்டும்.

3. பள்ளிகளுக்கும் நம்மால் இயன்ற மானியங்கள் அளிக்கப்பட வேண்டும்.

இது மக்கள் தங்கள் பள்ளிகளை தாங்களே நட்த்திக் கொண்டிருந்தார்கள் என்பதைத் துல்லியமாகக் காட்டுகிறது. பிராமணர்கள் மட்டும் கல்வியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கவில்லை.

ஆங்கிலேய அரசு இரண்டு ஆண்டுகள் முயன்று சேகரித்த தகவல்களின் அடிப்படையில் கிடைத்த புள்ளி விவரங்கள் இவை:

  1. மொத்தம் 12498 பள்ளிகள், 188650 மாணவர்கள்.
  2. 184110 ஆண்கள், 4540 பெண்கள்.
  3. 740 வேத பாடசாலைகள்
  4. மக்கள் தொகையைக் கணக்கிட்டால், சுமார் ஆயிரம் பேர்களுக்கு ஒரு பள்ளி.
  5. அனேகமாக எல்லாப் பள்ளிகளும் மாணவர்களின் பெற்றோர்களால் ஆதரிக்கப்படுபவை.
  6. பொதுப்பணத்தில் நடத்தப்படும் பள்ளிகள் மிகக் குறைவு.
  7. பள்ளிக் கட்டணம் மாதத்திற்கு ஒரு அணாவிலிருந்து நான்கு ரூபாய்கள் வரை. ஆனால் சரசாரி எட்டணா.
  8. ஆசிரியர்கள் ஊதியம் மாதம் ஏழு ரூபாய்க்கும் குறைவு.
  9. மொத்த மாணவர்கள் 188650 முகமதியர்கள் 13561, பிராமணர்கள், 42502, வைசியர்கள் 19669, சூத்திரர்கள் 85400 மற்றையவர்கள் 27518.

இப்புள்ளிவிவரங்கள் பிராமணர்கள் மற்றவர்கள் படிப்பதைத் தடுத்துக் கொண்டிருந்தார்கள் என்று, இன்றுவரை எந்த வெட்கமும் இல்லாமல் பெரியாரிய அடியார்களால் இனவெறியின் மூட்டத்தில் இருந்து கொண்டு தொடர்ந்து சொல்லப்படும் பொய்யை முற்றிலும் தகர்க்கின்றன.

  1. பள்ளிகள் தனியார்களால் நடத்தப்பட்டன. குறிப்பாக மாணவர்களின் பெற்றோர்களால் நடத்தப்பட்டன.
  2. பள்ளிக்கு செல்வதற்கு கட்டணம் செலுத்த வேண்டும். பள்ளிக் கல்வி இலவசம் அல்ல.
  3. பிராமண மாணவர்கள் மொத்த மாணவர்களில் 25 சதவீதம். பிராமணர் அல்லாதார் 75 சதவீதம்.
  4. பிராமண மாணவர்கள் மக்கள் தொகையைக் கணக்கிட்டால் அதிகம் என்பது உண்மை. ஆனால் அவர்கள் இலவசமாகப் பயிலவில்லை. மற்றைய சமூகத்தினரும் விரும்பினால் பயின்றிருக்கலாம்.

அன்றையத் தமிழக்த்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினரிடம் பள்ளிக் கூடங்கள் துவங்க தேவையான முதலீடு இருந்திருக்க முடியாது என்பது உண்மை. ஆனால் பிராமணர் அல்லாத மற்றைய உயர்சாதியினரிடம் முதலீடு செய்வதற்குத் தேவையான பணம் இருந்தும் கல்வியின் மீது அவர்களுக்கு அதிகம் நாட்டம் இல்லை என்பதுதான் உண்மை.

மேலும் இப்பள்ளிகள் சொல்லிக் கொடுக்கப்பட்டவை மொழியறிவும், அடிப்படைக் கணிதம் போன்றவை மட்டுமே. ஒரு மாவட்டக் கலெக்டர் கூறுகிறார்: Every School boy can repeat verbatim a vast number of verses of the meaning of which he knows no more than a parrot which has been taught to utter certain words.

1839 மனு

1839ல் 70,000 பேர்கள் கையெழுத்துகள் கொண்ட ஒரு மனு அன்றைய கவர்னரான லார்ட் எல்ஃபிஸ்டோனிடம் கொடுக்கப்பட்டது – ஆங்கிலவழிக் கல்வியை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி. ஆங்கிலம், தமிழ், தெலுங்கு மொழியில் அது எழுதப்பட்டிருந்த்து. மனுவில் சொல்லப்பட்டிருந்தது இது: We seek not Education which depends on charity. We shall take a pride in contributing according to our means.

இதனால்தான் ஆங்கிலவழிக் கல்வி மதராஸ் மாநிலத்தில் படிப்படியாகத் துவங்கப்பட்டது. 70,000 என்பது மிகப் பெரிய எண்ணிக்கை. எனவே ஆங்கிலக் கல்வி அன்று உயர்சாதியினரால் வரவேற்கப்பட்டது என்பது தெள்ளத் தெளிவு. ஆங்கிலக் கல்வி பிராமணச் சூழ்ச்சியால் கொண்டுவரப் படவில்லை. மனுவில் இதுவும் சொல்லப்பட்டிருக்கிறது: We look to the mental improvement of the Upper classes of the Native community, who have the leisure and means to pursue the higher branches of study; and from them it may be reasonably hoped, that the blessings of knowledge will be gradually spread among the inferior classes of our fellow subjects.

பள்ளிக் கட்டணம்

ஆரம்பகாலத்தில் ஆங்கிலேயர்களால் துவங்கப்பட்ட பள்ளிகளில் கட்டணம் மிக அதிகமாக இருந்தது. மாதம் நான்கு ரூபாய். தங்கம் அன்றைக்கு பவுன் பத்து ரூபாய்க்கும் குறைவாகத்தான் இருந்தது. இன்றைய விலைவாசியில் மாதக் கட்டணம் சுமார் 16000 ரூபாய்! பின்னால் பல பள்ளிகளும் கல்லூரிகளும் திறக்கப்பட்ட பிறகும் கல்லூரிக் கட்டணம் மிகவும் அதிகமாகத்தான் இருந்த்து. உதாரணத்திற்கு பி ஏ படிப்பிற்கு சென்னையில் 1871ல் மாதம் நான்கு ரூபாய் கட்டணம். மெட்ரிகுலேஷன் பள்ளியில் மூன்று ரூபாய். இதில் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது இது. கல்லூரிகளின் எண்ணிக்கை மிகக் குறைவு. பள்ளிகளும் நகரங்களில் இருந்தன. மாணவர்கள் ஹாஸ்டல்களிலேயோ அல்லது வெளியிலேயோ தங்கிப் படிக்க வேண்டிய கட்டாயம் இருந்த்து. மாதம் பதினைந்து ரூபாயாவது இருந்தால்தான் படிக்க முடியும். இன்றைய விலைவாசியில் குறைந்தது 60,000 ரூபாய். எனவே பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் ஏழைகளைச் செல்லவிடாமல் தடுத்தது பிராமணர்கள் அல்ல, கல்விக்காக அதிகம் செலவிட வேண்டிருந்தது என்ற நிலைமைதான் என்பது தெளிவு.

பிராமணர்கள் மட்டும் எவ்வாறு கல்விக்காகச் செலவு செய்ய முடிந்த்து?

படித்தவர்கள் எத்தனை பேர்?

1891 புள்ளி விவரங்களின்படி பிராமண ஆண்களில் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் 28 சதவீதம். எழுதப் படிக்கத் தெரிந்த பிராமண ஆண்கள் பத்தே சதவீதம். எனவே மிகப் பெரும்பான்மையான பிராமணர்கள் கல்விநிலையில் உயர முடியவில்லை என்பதுதான் உண்மை. பெரும்பாலும் பணம் இருந்தவர்களால் மட்டும் படிக்க முடிந்தது. பிராமணர் அல்லாத நிலவுடைமை, வணிக சாதிகளில் பணம் இருந்தும் பிள்ளைகளை படிக்க வைக்கத் தயங்கினார்கள் என்பதும் உண்மை, ‘படித்து என்ன செய்யப் போகிறான்?’ என்ற நிலைப்பாட்டைத்தான் பல பெற்றோர்கள் எடுத்திருக்க வேண்டும். 1885 Manual of Administraion புள்ளி விவரங்களின் படி பிராமணர்களில் 1.7% அரசுப்பணியில் இருந்தவர்கள். அறிவுசார்ந்த வேலைகளில் இருந்தவர்கள் 3.4%.. அதாவது மொத்த பிராமண ஆண்களில் – 5.5 லட்சம் பேர்கள் – சுமார் 9300 மட்டுமே அரசுப் பணியில் இருந்தார்கள். இவர்களில் குறைந்த்து 95% சதவீதத்தினர் சாதாரண வேலைகளின் தான் இருந்திருக்க வேண்டும். 1927-28லேயே அரசிதழ் பதிவு பெற்ற பிராமண அதிகாரிகள் (கெசட்டட் அதிகாரிகள்) 620 பேர்கள்தாம். இன்றைய கேரள, ஆந்திரப் பிரதேசம் ஒரிசா, கர்நாடகா மாநிலங்களில் பல மாவட்டங்கள் அன்றைய மதராஸ் ராஜதானியின் பகுதியாக இருந்தன என்பதையும் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். எனவே அரசு வேலைகள் மட்டும் தமிழ்நாட்டில் பிராமணர்களுக்கு வாழ்வாதாரத்தைத் தந்து விடவில்லை. மிகப் பெரும்பான்மையினர் சுயமாகவும், தனியார் துறைகளிலும் வேலை செய்தனர். தமிழகத்தில் வாய்ப்புகள் குறைந்தவுடன் வெளியில் சென்று வேலை செய்தனர்.

கல்வி என்பதும் பிராமணக் குடும்பங்களுக்கு எளிதாக வந்து விடவில்லை. கிராமங்களிலிருந்து நகரங்களுக்குக் குடி பெயர வேண்டிய கட்டாயம் இருந்தது. பிராமணர்களில் மேற்படிப்புப் படித்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க அவர்கள் நிலவுடைமை குறைந்து கொண்டே போனது. தமிழ்நாட்டின் திருநெல்வேலி, தஞ்சை, திருச்சி, மதுரை பகுதிகளில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிந்தைய ஆண்டுகளில் இருந்த பிராமண நிலவுடைமைப் புள்ளி விவரங்களை 1960களில் இருந்த பிராமண நிலவுடைமைப் புள்ளி விவரங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் உண்மை தெளிவாகும்.

1871 மக்கள்தொகை கணிப்பு அறிக்கை என்ன சொல்கிறது?

பிரிட்டிஷ் அதிகாரிகள் பிராமணர்கள் மீது மாளாக்காதல் கொண்டிருக்கவில்லை என்பது உண்மை. ஆனால் அன்று பிராமணர்களைத் தேர்ந்தெடுப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை என்பதும் உண்மை. அரசுப் பணிக்கு மிகவும் திறமையானவர்கள் மட்டுமே வர வேண்டும் என்பதுதான் வெள்ளையரின் நோக்கம். 1871 மக்கள்தொகை கணிப்பு அறிக்கை சொல்கிறது. The higher the caste or race stands in the social sacle, the better is its educational position and this is mainly the result of the educational tests imposed by the Government as a condition of employment in the public service. எனவே அரசு உயர்சாதியினரை மட்டுமே அரசுப்பணியில் அமர்த்த நினைத்தனர் என்பது தெளிவு. ஆனால் பிராமணர்களை மட்டும் அல்ல. உண்மையில் பிராமணர்கள் படிப்பிலும் அரசுப் பணியிலும் அதிகம் இருப்பதை ஆங்கிலேய அரசு விரும்பவில்லை. 1859ல் 16 பிராமணர்கள் கல்லூரியில் படிக்கத் தகுதி பெற்றிருந்தார்கள் என்பதையும் அவர்கள் எண்ணிக்கை 1872-73ல் 354 ஆகி விட்டது என்பதையும் அறிக்கை பதிவு செய்கிறது. அதே சமயத்தில் பிராமணர் அல்லாதவர்கள் எண்ணிக்கை 144 மட்டும். பிராமணர் முன்னேறிய வேகத்தில் பிராமணர் அல்லாதார் முன்னேறியிருந்தார்கள் என்றால் எண்ணிக்கை 8000த்திற்கு மேல் இருக்க வேண்டும் என்று அறிக்கை சொல்கிறது. The Non-Brahminical castes were slow to understand the position. Many of the Sudra castes were grossly ignorant, and practically slaves to their superiors, and are to this day denied the advanatages of sending their children to Government schools. Others, the great cultivating castes, saw not the advantages of education for their children…”

அறிக்கை மேலும் சொல்கிறது:

…the Brahmans care mostly for their own advancement, and they have no desire to see lower classes educated or improved in social position. Politically it is not to the advantage of the Government that every question connected with the progress of the country should be viewed with through the medium of Brahman spectacles. The contempt which the Brahman evince for the lower classes, is in itself a serious bar to their usefulness in many phases of official life, and the true policy of the State would be to limit their numbers in official position and to encourage a larger proportion of non-Brahmanical Hindus and Mussulmans to enter official service..

எனவே அன்றைய அரசு பிராமணர்களை வருந்தி வருந்தி அரசுப்பணிக்கு அழைக்கவில்லை என்பது தெளிவு. வேறு வழியில்லாமல்தான் அவர்களை வேலைக்கு அமர்த்தினார்கள்.

பிராமணர்கள் மற்றைய சாதிகளைக் குறைவாக மதித்தார்கள் என்று அறிக்கை சொல்வது சரி. எல்லா உயர்ச்சாதிகளும் இருந்த கீழ்மைகளில் அதுவும் ஒன்று. ஆனால் அவர்கள் மற்ற சாதியினரை படிக்க விடாமல் தடுத்தார்கள் என்று சொல்வது முற்றிலும் தவறு. தடுக்க நினைத்திருந்தாலும் தடுப்பதற்குத் தேவையான அதிகாரம் அவர்களிடம் என்றும் இருந்த்தில்லை. பிராமணர்கள் கல்விக்காக தங்கள் வாழ்க்கைமுறையை மாற்றிக்கொள்ளத் தயராக இருந்தார்கள். மற்றைய பிராமணர் அல்லாத உயர்சாதிகள் தங்கள் வாழ்க்கைமுறைகளை கல்விக்காக எளிதில் மாற்றிக்கொள்ளத் தயாராக இல்லை.

இதுதான் பத்தொன்பதாம் நூற்றாண்டின் உண்மை.

பி ஏ கிருஷ்ணன்,

இதை எழுத உதவிய நூல்கள்

  1. Report on the census of Madras Presidency, 1871: Willaim Robert Cornish, 1874,
  2. Political and Social conflict in South India – Irschick (for the Non-Brahmin Manifesto)
  3. Manual of Administration, Madras Presidency, 1885
  4. History of Education in the Madras Presidency, S Satthiyanadhan, 1894
  5. Opening of the Madras University on the 14th April, 1841, University of Madras, 1852.
  6. Anil Seal,Emergence of Indian Nationalism, 1971 Cambridge University Press

One Reply to “கல்வியும் தமிழ் பிராமணர்களும் – பத்தொன்பதாம் நூற்றாண்டு”

  1. நன்றாக ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்டுள்ளது. அரசியல் நோக்கம் இல்லாமல் நடு நிலையில் உள்ளவர் அனைவருக்கும் தெரிந்ததுதான். 1960 களில் நான் ஆரம்ப பள்ளியில் இருந்தபோதுகூட எட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்ற பேச்சு, அறுவடை காலங்களில் பள்ளிக்கு அனுப்பாதது, ஐந்தாம் வகுப்போடு நிறுத்துதல் எல்லாம் நடந்தது. கல்வி இந்த அளவு முக்கியத்துவம் பெறும் என்று யாருமே நினைக்க வில்லை. விழுந்து விழுந்து படித்த பிராமணர்கள் கூட தாசில்தார் ஆபீஸ் குமாஸ்தா, ரயில்வே கார்டு, உதவி போஸ்டு மாஸ்டர் போன்ற வேலையைத்தான் குறி வைத்தார்கள், “பென்சன் தரும் உத்தியோகம்” என்று பெருமையாக குமாஸ்தா வேலையைத்தான் தேடினார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.