இந்தோநேசியக் கவிதை: Chairil Anwar- 3 poems
தமிழாக்கம்: விருட்சன்
அறிவிப்பு
கட்டளையிடுவது என் உள்நோக்கமல்ல
தலைவிதியென்பது பிரிதொரு தனிமைதான்.
மற்ற அனைவர்களுக்கும் மத்தியிலிருந்தே நான் உன்னை தேர்வுசெய்தேன்
ஆனால் ஒரு கணத்தில் மீண்டும் ஒரு முறை நாம் தனிமையின் வலையில் சிக்கிகொண்டோம்.
நான் உன்னை உண்மையாகவே விரும்பிய தருணம் இருந்தது
கோலாச்சும் இருளில் குழந்தைகளாக இருப்பதற்கு,
மேலும் நாம் முத்தமிட்டுக்கொண்டோம், தழுவிக்கொண்டோம், சோர்ந்துபோகவில்லை.
நான் ஒருபோதும்
நீ என்னை விட்டுச் செல்ல விரும்பவில்லை
உன்னுடைய வாழ்வை என்னுடன் பிணைத்துவிடாதே
அதற்காக நான்
மிக நீண்ட காலம் யாருடனும் இருக்க முடியாது.
நான் இப்பொழுது
பெயரில்லாத ஏதோ ஒரு கடலில் இருக்கும்
ஒரு கப்பலின் மீது இருக்கிறேன்.
தொலைதூரத்து பைன் மரங்கள்
தொலைவில் பைன் மரங்கள் அங்குமிங்கும்
அசைகின்றன
பகல் பொழுது இரவாகிக்கொண்டிருக்கும் போது
கிளைகள் சன்னல் கதவின் மீது வழுவற்று
மோதுகின்றன
அவை உணர்ச்சிகளை கிளர்த்தும் காற்றால்
தள்ளப்படுகின்றன
இப்பொழுது உயிர்பிழைக்க முடிந்த ஒரு
மனிதன் நான்
வெகு காலத்திற்கு முன்பாகவே நான் என் பால்யத்தை விட்டு விலகியிருந்தேன்
முன்பொரு முறை எதுவோ ஒன்று அதில்
இருந்திருந்தாலும்
இப்பொழுது அதனால் எந்த ஒரு
பயனுமில்லை.
இதுதான் வாழ்வு ஆனால்
அது
தோல்வியை தள்ளிப்போடுவது
இளமையினுடைய கட்டுப்பாடற்ற காதலிலிருந்து
உருவாகித் தழைத்த ”அந்நியமாதல்”
கடைசியாக நாம் எதிர்ப்பின்றி உடன்படுவதற்கு முன்பாக
எப்பொழுதும் அங்கே வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத எதுவோவொன்று இருக்குமென்ற “அறிதல்.”
சம்மதம்
நீங்கள் விரும்பினால் உங்களை மீண்டும் அள்ளி எடுத்து
என் இதயம் முழுமைக்குமாக நிரப்பிக்கொள்வேன்
நான் இப்பொழுதும் தன்னந்தனியாகவேயிருக்கிறேன்
எனக்குத் தெரியும் இப்பொழுது இருக்கும் நீங்கள் முன்பிருந்தவரல்ல
ஒரு மலரைப் போல் பகுதி பகுதியாக பிய்த்து எடுக்கப்பட்டாகிவிட்டது.
தவழ்ந்து செல்ல வேண்டாம் ! தைரியமாக என்னை உற்றுப்பாருங்கள்
நீங்கள் விரும்பினால் உங்களை மீண்டும் அள்ளி எடுத்துக்கொள்வேன்
எனக்காக மட்டும் ஆனால்
நான் ஒரு போதும் முகம்பார்க்கும் கண்ணாடியுடன் கூட
அதைப் பகிரமாட்டேன்

மூலக் கவிதைகள் வரிசைப்படி:
1.Announcement
2. Pines in the distance
3. Wiilingness
ஹையரில் அன்வார் (Chairil Anwar) ஓர் இந்தோனேசிய கவி. 1922 ஆம் ஆண்டு அந்நாட்டுத் தலைநகரான ஜாகர்த்தாவில் பிறந்தவர். பள்ளிப்படிப்பை பாதியில் கைவிட்டவர். இவருடைய கவிதைகள் அன்றாட வழ்வின் தனி மனித உணர்வுகள் அலைக்கழிப்புக்குள்ளாவதை, தனி மனித இருப்பின் நெருக்கடிகளை அலங்காரமற்ற மொழியில் சொல்பவை.
தமிழாக்கம் செய்த விருட்சன், சபார்டி ஜோகோ தமனோ, ஜோகோ பினர்போ ஆகியோரின் தேர்ந்தெடுத்த கவிதைகளை மொழியாக்கம் செய்திருக்கிறார். தமிழ்ச் சூழலில் அத்தனை தெரியவராத தென்கிழக்கு ஆசிய நாட்டுக் கவிதைகளைத் தொடர்ந்து தமிழில் மொழிபெயர்த்து வருகிறார்.