ஷெர்லி ஹாஸர்ட் (1931-2016) – ஓர் அறிமுகம்

பிரிகீட்டா ஆலுபாஸ்
(தமிழாக்கம்: பஞ்சநதம்)

இந்தியாவிலும் சரி, தமிழ்நாட்டிலும் சரி, நாம் புகழ்பெற்ற மேலை எழுத்தாளர்கள், பெரும் பரிசுகளைப் பெற்றவர்கள், அல்லது நமது அபிமானக் கருத்தியலை உயர்த்திப் பிடிப்பவர்கள் என்றுதான் தேடி அறிகிறோம். படிப்பு ருசிக்காகப் பரவலாகத் தேடுவது அத்தனை புழக்கத்தில் இருப்பதாகத் தெரியவில்லை.

இன்னொரு புறம், இந்த நிலைமை சமீபத்தில் மாறி வருவதாகவும் தெரிகிறது, அது ஒரு முன்னேற்றம்தான். தமிழ் இளைஞர்கள் உலக நாடுகளில் பலவற்றுக்குப் பயணம்போய் அங்கு வேலைகளில் சேர்வதால் அவர்களின் உலகப் பார்வை விஸ்திகரிக்கப்பட்டு, அவர்களுடைய வலைப் பின்னல்களில் தமிழ்நாட்டிலேயே உள்ளவர்களுக்கும் தகவல் பரிமாறப்பட்டு இன்னொரு விதத்திலும் விஸ்திகரிப்பு நடக்கிறது.

அதேநேரம், தமிழ்நாட்டில் பல்கலைகளின் நூலகங்களில் முன்னைவிட மேலான அளவுக்குப் புத்தகங்களை வாங்கி வைக்கிறார்களா என்றும் நான் வியப்பதுண்டு. ஏனெனில் பல முனைவர்கள் சொல்வனத்துக்கு எழுத ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்களில் சிலராவது உலக இலக்கியங்களில் அகலமாகப் பரவிப் படிக்கிறார்கள் என்று தெரிகிறது.

உலக இலக்கியத்தில் அதிகம் வெளிச்சம் போட்டுக் காட்டப்படாதவராக, ஆனால் நல்ல எழுத்தாளர்கள் என்று கருதப்படுகிற சிலரைச் சொல்வனத்தில் அவ்வப்போது அறிமுகப்படுத்தி வருகிறோம். அவர்களின் படைப்புகள் மொழிபெயர்ப்புக் கதைகள், கவிதைகளாக இங்கு வெளியாகியுள்ளன.

அந்த வகையில் நாங்கள் இந்த இதழில் அறிமுகப்படுத்துகிற எழுத்தாளர் ஷெர்லி ஹாஸர்ட் (1931-2016).i

இவர் ஓர் ஆஸ்த்ரேலிய – அமெரிக்கர். பல நாடுகளில் இளம் பிராயத்தில் வசித்திருக்கிறார். ஐக்கிய நாடுகள் என்ற உலக ஸ்தாபனத்தில் தட்டச்சராக ஒரு பத்தாண்டுகள் பணிபுரிந்தவர், தன் கதைகள் பெற்ற வரவேற்பை அடுத்து 1960-இல் முழுநேர எழுத்தாளராக மாறுகிறார்.ii இவருடைய சில நாவல்கள் இவரது வாழ்நாளிலேயே கவனம்பெற்றுள்ளன. ஒன்று காலம் தாழ்த்தி மான் – புக்கர் பரிசைப் பெற்றது – ஆனால் அது கவனிக்கப்படாமல் காணாமல்போன புத்தகங்களுக்குக் கொடுக்கும் ஆறுதல் பரிசு. 2003-இல் அந்தப் பரிசு கிட்டியது. 2010-இல் இன்னொரு நாவலுக்கு அமெரிக்க விமர்சகர்களின் பரிசு கிட்டியது. தன் 29-ஆவது வயதில் இவர் தன் எழுத்து வாழ்வைத் துவங்கி 79 வயது வரையிலும்கூட எழுதி வந்திருக்கிறார்.

இவர் பெற்ற பரிசுகள், இவருடைய பல புத்தகங்கள் பற்றிய விவரங்களை விக்கபீடியாவின் கட்டுரை தருகிறது. கீழே அடிக்குறிப்பில் அந்தச் சுட்டி கிட்டும்.

இந்த இதழில் பிரசுரமாகிற கட்டுரை முன்பு பிரசுரமாகாத ஒரு கதை. இத்தனை நாள்கள் பிரசுரமாகவில்லை என்பதால் அவரது வழக்கமான தரத்தில் இல்லாததா என்று நான் யோசித்தேன். ஆனால் த பாரிஸ் ரிவ்யூ பத்திரிகை தன் 234 ஆம் இதழில் 2020, இலையுதிர் கால இதழில் அதைப் பிரசுரித்திருப்பதால் படித்துப் பார்த்ததில் சொல்வனத்துக்கு மொழிபெயர்க்கலாம் என்ற முடிவுக்கு வந்தேன். அந்தக் கதையைப் பிரசுரிக்கையில், அதையும் ஷர்லி ஹாஸர்டையும் இன்றைய வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் கட்டுரையையும் மொழிபெயர்த்து இங்கே தருகிறேன். அக்கட்டுரையும் த பாரிஸ் ரிவ்யூ பத்திரிகையில் பிரசுரமானதுதான். எழுதியவர், ப்ரிகீட்டா ஆலுபாஸ்.iii இவர் ஆஸ்த்ரேலியாவில் பணி புரியும் ஓர் இலக்கியப் பேராசிரியர். இவர் பல அரிய எழுத்தாளர்களின் கதைகளைத் தொகுத்து வெளியிடுவதில் ஓர் பதிப்பாசிரியராகப் பணிபுரிந்திருக்கிறார்.

1980-இல் ஷெர்லி ஹாஸர்டின் சிறந்த நாவலாகக் கருதப்படும், த ட்ரான்ஸிட் ஆஃப் வீனஸ் பிரசுரிக்கப்பட்டபோது, இந்த நாவலாசிரியர் நியூயார்க் டைம்ஸின் மிச்சிகோ ககுடானியிடம் விளக்கினார், தான் “இடை விட்டுவிட்டு குறிப்புகள் எழுதி வைத்திருந்ததாக.” “அங்குமிங்கும் கேட்ட உரையாடல்கள், கதேயின் ஒரு மேற்கோள் அகஸ்மாத்தாக எங்கோ பார்த்தது, எழுதப்படலாம் என்ற சாத்தியம் உள்ள ஒரு பாத்திரத்தின் வர்ணனை” எல்லாம் சிறு பயிற்சி நோட்டுப் புத்தகங்களில் எழுதி வைக்கப்பட்டிருந்தனவாம், அவருடைய நாவல்கள் இந்த நோட்டுகளில் இருந்து துவங்கினவாம். இந்தக் குறிப்புகளில் சில, உதாரணமாக ஜ்யாகொமோ லியொபார்டியின் புகழ்பெற்ற கவிதையானiv ‘லா ஸேரா தெல் தி தி ஃபெஸ்டா,” போன்றன தலைப்பையும் ஒரு படைப்பை முடிக்கத் தேவையான மனச்சாய்வையும் கொடுத்தன; சில, பெரும் நாடகத்தனமான நிகழ்வில் அனேகமாகக் கவனிக்கப்படாமல் போகிற ஒரு படிமம் அல்லது ஒரு கணத்தைக் கொடுத்தன:

1972 ஜூலை மாதத்தின் கடைசியில் உள்ள இங்கிலாந்து. வில்டனுக்கு ஒரு பயணம். மேடுபோலப் படுத்திருக்கும் சிறு நாய் ஒன்று சுருண்ட செவ்வந்திப் பூபோலத் தெரிகிறது. ஒரு சிறு செவ்வந்திப் பூவான நாய்.

நியூயார்க்கில் ஒரு கட்டடத்தில் அடுக்ககங்கள் தெருக்கள் போன்ற துறைகளில் அசையாமல் நிறுத்தப்பட்டிருக்கும் பெரும் கடற்பயணக் கப்பல்களின் சிறு அறைகளைப்போல இருக்கின்றன.

“குணப்படுத்த முடியாதபடி எப்போதும் நம்பிக்கையோடிருப்பவர்” – ஏதோ சிகிச்சையால் தேறாதவர் என்பதுபோல.

ஹாசர்டின் உரைநடை, பழமொழிகளைப்போலச் சுருங்கச் சொல்வதாகவும், ரத்தினக் கற்களை வெட்டுவதுபோலக் கூர்மையான விளிம்புகளோடும் இருப்பது – அது இத்தகைய குறிப்புகளிலிருந்து உருப்பெற்றது. அக்குறிப்புகள் எங்கோ கேட்டவை, அல்லது கனவாகப் பெறப்பட்டவை, பிறகு எழுதி வைக்கப்பட்டவையாக இருந்தன. ஒரு நாவலை எழுத ஆன மாதங்கள், வருடங்களில் அவர் இந்தக் குறிப்புகளுக்குத் திரும்பத் திரும்பப் போனார். (அவர் ககுடானியிடம் சொன்னாராம், த ட்ரான்ஸிட் ஆஃப் வீனஸ் நாவலின் ”ஒவ்வொரு பக்கமும் சுமார் 20-இலிருந்து 30 திருத்திய வடிவுகளைக் கொண்டது.”) இந்தக் குறிப்புகளில் பல துண்டுகள் அவரை ஒரு கதைக்கு இட்டுச் சென்றிருக்கின்றன. சில நாவல்களாகவும் ஆயினவாம். அவருடைய முதல் நாவல், த ஈவினிங் ஆஃப் த ஹாலிடே இப்படிக் கதைகளின் தொடராக ஆரம்பித்ததாம். இன்னும் இரு நாவல்கள், த ட்ரான்ஸிட் ஆஃப் வீனஸ் மற்றும் த க்ரேட் ஃபயர் ஆகியனவற்றின் அத்தியாயங்கள் சில தனிக் கதைகளாகப் பத்திரிகைகளில் பிரசுரமாயின. பல துண்டுக் குறிப்புகள் எதற்கும் பயன்படவில்லை, மற்றவை சில கதைத் துண்டுகளாக ஆனாலும் முழுதாக உருப்பெறவில்லை, பூர்த்தி செய்யப்படவில்லை.

1966-ஆம் ஆண்டு கோடைப் பருவத்தில், த ஈவினிங் ஆஃப் ஹாலிடே நாவல் வெளியான பிறகு, ஹாஸர்ட் தன் கணவரும் புனைவெழுத்தாளருமான ஃப்ரான்ஸிஸ் ஸ்டீக்முல்லருடன், கணவரின் நண்பர் ஆல்பெர்ட்டோ மொராவியாவைப் பார்க்க ரோம் மாநகருக்குப் போனார். ஹாஸர்ட் தன் நாட்குறிப்பில் மொராவியாவுடைய வலது காது கேட்கும் திறனை இழந்தது என்பதால் “அவரின் கவனம் பெறும்படி ஏதும் செய்தாலேயொழிய அவரோடு பேசுவது கடினம். எப்போதும் புத்திபூர்வமாகப் பேசுகிறார், அபிப்பிராயங்களைச் சொல்ல விரும்புகிறார், எல்லாவற்றுக்கும் மேலாக எழுத்து, விமர்சனம், கருத்துகளைப் பேசுகிறார், ஆனால் ஒருவர் தன்னுடைய அபிப்பிராயத்தை அல்லது ஆளுமையைப் படிப்படியாக வளர்வதாகக் காட்டுவதை அனுமதிப்பதில்லை.” இதில் இங்கிலிஷ் முதியவரும், ஒதுங்கிய வாழ்வை விரும்பியவருமான கவிஞர் ஆஸ்பெர்ட் ஸிட்வெல் எத்தனை வேறுபட்டிருந்தார் என்பதைக் கவனிக்கிறார். ஸிட்வெல்லை ஃப்லாரென்ஸ் நகரத்தின் புறப்பகுதியில் இருந்த அவரது வீட்டுக்குப்போய், தம்பதிகள் இருவரும் முந்தைய மாதம் பார்த்திருந்தனர். ஸிட்வெல் பார்கின்ஸன் நோயால் பீடிக்கப்பட்டிருந்தாராம். அவர் “நேரமெடுத்துக் கொள்கிறார், அனேக நேரம் மௌனமாக இருக்கிறார், முற்றிலும் கனிவாகவும் நமக்கு ஆறுதல் அளிப்பவராகவும் எப்போதும் இருக்கும் அவர், நம்முடைய ஆளுமை தன்னியல்பாக வெளிப்படக் காத்திருக்கிறார், நாம் துளைத்து நோக்கும் கருத்துகளை வெளியிடுவதற்கான அழுத்தத்தை அவர் கொணர்வதில்லை. (அத்தகைய அழுத்தம் அப்படி ஏதும் கருத்து வெளிப்படும் வாய்ப்பைக் குறைக்கிறது.)”

இந்தக் குறிப்புகளில் ஷெர்லி ஹாஸர்ட் மௌனம் எப்படி உண்மையான சமூக உறவுகளைச் சாத்தியமாக்குகிறது என்பதைப் பற்றி யோசிக்கத் தொடங்கி இருந்தார் என்பது தெரிகிறது. அது எப்படிக் கவிதையை, சிந்தனையை சாத்தியமாக்குகிறது என்று ஷெர்லி ஹாஸர்ட் கவனிக்கத் தொடங்கியிருந்தார். சில வாரங்கள் கழித்து, தன் நோட்டுப் புத்தகத்தில் அவர் ஒரு கதையைத் தொடங்குகிறார். அதை அவர் அன்று ‘த ஸாக் ஆஃப் ஸைலன்ஸ்’ என அழைத்திருந்தார். டபிள்யு. எச். ஓடெனின் கவிதையான ‘த கேவ் ஆஃப் மேக்கிங்’ என்பதிலிருந்து அந்த சொற்றொடர் பெறப்பட்டிருந்தது. ஹாஸர்டின் வாழ்நாளில் அந்தக் கதை பிரசுரமாகாமல் தங்கியிருந்தது. அவருடைய கவனம் அப்போது முக்கியமாக ஒன்றோடொன்று தொடர்புகொண்ட சில சிறுகதைகளின் தொகுப்பைக் கொணர்வதில் திரும்பி இருந்தது. அந்தப் புத்தகம் பீப்பில் இன் க்ளாஸ் ஹௌஸஸ் என்ற தலைப்பில் வெளியானது; பிறகு அவர் த பே ஆஃப் நூன் என்ற புத்தகத்தில் கவனம் செலுத்தினார், அதற்குப் பிறகு அவர் சில தனித்தனிக் கதைகளையே பிரசுரித்தார்.

ஓடென் ஹாஸார்டுக்கு முக்கியமானவர். அவருடைய கவிதைகளோடு தான் வளர்ந்ததைப் பற்றி அவர் பேசி இருக்கிறார், பின்னால் இருவரின் நட்பு வட்டங்களும் இடைவெட்டியதன் மூலம் ஷெர்லி ஹாஸர்ட் ஓடனைத் தெரிந்துகொண்டிருக்கிறார். தான் நினைவில் வைத்திருந்த ஏராளமான கவிதைகளிலிருந்து ஷெர்லி ஹாஸர்ட் அவ்வப்போது உரையாடல்களில் மேற்கோள் காட்டுவார், தன் எழுத்திலும் தான் நினைவுகூரும் கவிதைகளின் துண்டுகளையும் அன்றாடப் பேச்சு வழக்கில் புழங்கும் சொற்றொடர்களோடு இணைத்து வர்ணனைகளாகவும் உரையாடல்களாகவும் அமைப்பதில் கவனம் செலுத்தி இருக்கிறார், இந்த முறை அவருடைய உரைநடையை ஒரேநேரம் நகைச்சுவை கொண்டதாகவும் தாக்கமுள்ளதாகவும் ஆக்கி இருந்தது. ஓடெனின் கவிதையிலிருந்து ஹாஸர்ட் எடுத்துப் பயன்படுத்தும் இந்தச் சொல்வழக்கு, ஓடெனின் நண்பர் லூயி மாக்நீஸை முன்னெடுத்து வைக்கிறது. அக்கவிதை கவிஞரின் படிப்பறையில் துவங்குகிறது, ஒரு ரசவாதம் நிகழ்த்தும் அறை அது, அங்கு “மௌனம் தூலப் பொருட்களாக மாற்றப்படுகிறது,” மேலும், அவர்கள் இருவரின் பகிரப்பட்ட பின்புலன், மேலும் இரண்டாம் உலகப் போர் நொறுக்கியவற்றால் கிட்டிய அனுபவங்கள், இரண்டு இளைஞர்களும் அந்த நேரத்தில் எப்படி ‘சுயத்தைப் பற்றிய விழிப்புணர்வைப்’ பெறுகிறார்கள் என்பதை ரோஸி அந்தக் கதையில் ‘அமைதியின் சூறையாடலை,தேவாலயங்கள் வெறுமையாவதை, குதிரைப் படை கடந்ததை, உணர்ச்சிக் குழப்பத்தோடு பார்த்தோம்,’ என்று ஒப்பிக்கும்போது நாம் பெறுகிறோம். கவிஞரின் படிப்பறையில் அத்தனை கவனமாக ஏற்கப்படும் மௌனம், அதுவே ஓடன் வலியுறுத்துவதுபோல, ஸ்டாலினாலும் ஹிட்லராலும் வரலாற்றின் இலக்காக ஆக்கப்பட்டு, அச்சுறுத்தலுக்கு ஆட்படுத்தப்பட்டது. அவர்களுக்குப் பிறகு, “நாம் நம்மை…. ஒருபோதும் நம்ப மாட்டோம்.”

ஹாஸர்டுக்குக்கூட, அந்த விரிதளத்தில் போர் உள்ள உலகம், நம்பிக்கை, மேலும் விளைவு ஆகியன அந்தரங்க வாழ்வுகள்மீது பெரும் சுமையாகின்றன, ஆகவே வீடு என்னும் பதிவேடு எதையும்விட முக்கியமானதாகிறது. “அமைதியின் அழிப்பு” கதையில், வாழ்வறைகளில், மாடிகளின் கைப்பிடிகளில், தொலைக்காட்சிப் பெட்டிகளில், மேலும் காது கேட்க உதவும் எந்திரங்களில் எல்லாம் யுத்தம் நிகழ்கிறது. பெரு, அந்த விசேஷமான ஆணிகளைக் கொடுக்கும் நகர்கூட, தென் அமெரிக்காவில் இல்லை, மாறாக இலினாய் மாநிலத்தில் உள்ளது. அன்றாட வாழ்வு சுத்தியடியாலும் வெடிப்புகளாலும் அவளைச் சுற்றி இயங்கும்போது, ரோஸி இந்த உலைத்தல்களின் தாக்கங்களும் தேவைகளும் அந்தரங்க வாழ்வையே கேள்விக்குரியதாக ஆக்குவதைப் பற்றி யோசிக்கிறாள். ஓடெனின் தேவாலயங்களும் குதிரைப் படைகளும் கதைக்குள் உருவகமாக நிற்கின்றன, ஆனால் நவீன, பொருளியக்கத்தால் ஓடும் உலகம் தப்பிக்க விடாதது. “டமார், டமார். நாம் உயிரோடு இருக்கிறோம்.”

***

i இங்கிலிஷில் இவர் பெயர் Shirley Hazzard என்று எழுதப்படுகிறது. குடும்பப் பெயரில் ஒரே ஒரு z எழுத்து இருந்தால் அது ஒரு ருசிகரமான அர்த்தத்தைக் கொடுத்திருக்கும். இரண்டு z-கள் இருந்தால் அந்த அர்த்தம் மாறிவிடுமா என்று தெரியவில்லை. பெயர் தேடல் முயற்சிகளைச் செய்யும் ஒரு தளம், நார்மன் படையெடுப்பில் இங்கிலாந்தில் வந்திறங்கித் தங்கிவிட்ட சில குடும்பங்கள் இந்தப் பெயரின் மூலம் என்றும் இந்தக் குடும்பங்கள் பின்னர் பல நாடுகளுக்கு குடியேறிகளாகப் போனார்கள் என்றும் சொல்கிறது. அப்படிச் சென்ற நாடுகளில் ஆஸ்த்ரேலியா, நியூஸீலாண்ட், அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகியன சில. ஹாஸர்ட் என்ற பெயரை பலவிதமாக இங்கிலிஷில் எழுதியிருக்கிறார்கள். Hasard, Hassard, Hazard, Hazzard ஆகியன சில.

ii ஷெர்லி ஹாஸர்டின் வாழ்க்கை வரலாற்றை விக்கிபீடியா கருத்தியல் கலப்பு வெளிப்படையாக ஏதும் தெரியாமல் நேராகக் கொடுத்திருப்பதாகத் தெரிகிறது. (கொஞ்சம் இடதுசாரிச் சாய்வு இருக்கிறது, அது விக்கிபீடியாவைப் பீடித்திருக்கும் பல பூஞ்சைகளில் ஒன்று.) அதைப் படித்தால் இவரது வரலாறின் பல முகங்கள் புலப்படும். https://en.wikipedia.org/wiki/Shirley_Hazzard

iii ப்ரிகீட்டா ஆலுபாஸின் விவரங்களை அவருடைய பல்கலையின் வலைத் தளத்திலிருந்தே பெறலாம். அது இங்கே:

https://research.unsw.edu.au/people/professor-brigitta-olubas/publications?type=editedbooks

தவிர< ப்ரிகீட்டா ஆலுபாஸும் ஷெர்லி ஹாஸர்டும் சேர்ந்து மேடையில் தோன்றிய ஒரு நிகழ்ச்சியின் காணொளி இது:

iv விருந்து நாளின் மாலை நேரம் என்பது இந்தக் கவிதைத் தலைப்பின் பொருள்.

One Reply to “ஷெர்லி ஹாஸர்ட் (1931-2016) – ஓர் அறிமுகம்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.