விஞ்ஞானத் திரித்தல்கள் – சக்தி சார்ந்தன

This entry is part 11 of 30 in the series விஞ்ஞான திரித்தல்

ராட்சச எண்ணெய்க் கசிவுகள் –– பகுதி 1

ரவி நடராஜன்

1991 –ல், குவைத் நாட்டிலிருந்து தங்களது நாட்டிற்குத் திரும்பும்முன், இராக்கிய ராணுவம் குவைத் நாட்டின் எண்ணெய்க் கிணறுகளைக் கொளுத்திவிட்டுப் பின்வாங்கியது. உலக சரித்திரத்தில், இதுவே மிகப்பெரிய கச்சா எண்ணெய் எரிப்பு என்று சொல்லலாம். எரியும் கிணறுகளைப் பார்த்தவர்களில், நானும் ஒருவன். பகலில் ஓர் இரவு என்பது, அந்நாள்களில் குவைத்தில் மிகவும் சாதாரணம். எரியும் எண்ணெயின் புகை, சூரியனை முழுவதும் மறைத்துவிடும். எல்லாவற்றையும் இழந்த நிலையில் இருந்த குவைத், எண்ணெய்க் கிணறுகள் எரிந்ததால் நேர்ந்த சுற்றுப்பக்ச் சூழல் தாக்கத்தைப் பெரிதாகப் பதிவு செய்யவும் இல்லை. இந்த எரியும் எண்ணெய்க் கிணறுகளை அணைக்க, அமெரிக்க வல்லுநர்கள் சில மில்லியன் டாலர்களுக்காக வரவழைக்கப்பட்டனர். தீயை அணைத்து, புகையை ஓரளவுக்குக் குறைக்க, நான்கு மாதங்கள் ஆகின. 

இந்தப் பகுதியில் நாம் அலசப்போகும் விஷயம், எண்ணெக் கிணறுகளைப் பற்றிய விஷயம் அன்று. மாறாக, ராட்சச எண்ணெய்க் கசிவுகள் பற்றிய அலசலே நம் நோக்கம். குவைத் பற்றி இங்கு சொல்லக் காரணம், அது ஒரு ராட்சச எண்ணெய் எரிப்பு மட்டும் அன்று, ராட்சச எண்ணெய்க் கசிவும்கூட. கச்சா எண்ணெய் என்பது மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து, ராட்சச டாங்கர்கள் (oil tankers) மூலம் சந்தைக்குக் கொண்டு செல்லப்படுகிறது.  அத்துடன், கச்சா எண்ணெயைச் சுத்திகரிக்கும் சில அமைப்புகளும் கடலுக்கு நடுவே அமைக்கப்பட்டுள்ளன. இவை, உலகின் மிகப்பெரிய தொழில் மையங்கள். கச்சா எண்ணெய் என்பது சரியாகக் கையாளப்படவில்லை என்றால், மிகவும் அபாயகரமானது. கச்சா எண்ணெய் என்றவுடன் நாம் அதன் எரியும் தன்மையையே பெரிதாக நினைக்கிறோம். ஆனால் பெட்ரோலைப் போலல்லாமல் கச்சா எண்ணெய் என்பது மிகவும் கெட்டியானது, கனமானது. பல மில்லியன் காலன்களை ஏற்றிச்செல்லும் டாங்கர்களிலிருந்து, எண்ணெய் கசிந்தால் என்னவாகும் என்று சற்று யோசித்துப் பாருங்கள். அப்படி நேர்ந்தவுடன், பெரிய எண்ணெய் நிறுவனங்கள் என்ன செய்கின்றன? வழக்கம்போல, நாம் விஞ்ஞானத்திற்குப் போவதற்குமுன் எண்ணெய் நிறுவனங்கள் ராட்சச எண்ணெய்க் கசிவு நேர்ந்ததும் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்

.Remember the BP Oil Spill? These Cleanup Workers Are Still ...

 1. எண்ணெய்க் கசிவு நேர்ந்ததும் நாம் டிவியில் என்ன பார்க்கிறோம்?  கடற்கரையோரத்தில், உருகிய தார்போலத் தண்ணீருடன் கரையில் இருக்கும் பாறைகள் மற்றும் மண் எல்லாவற்றையும் ஒட்டிக்கொண்டு பார்ப்பதற்கே அருவருப்பான காட்சிகளை முதலில் காட்டுவார்கள்.https://images.indianexpress.com/2017/07/india-oil-spill-759.jpg?w=759&h=422&imflag=true
 2.  அடுத்தபடியாக, தன்னுடைய உடலெல்லாம் எண்ணெயில் மூழ்கிய, பறக்கத் தவிக்கும் பறவைகளைக் காட்டுவார்கள். https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/fc/Oiled_Bird_-_Black_Sea_Oil_Spill_111207.jpg/220px-Oiled_Bird_-_Black_Sea_Oil_Spill_111207.jpg
 3. இந்த நாடகத்தில் அடுத்த காட்சி, பல தன்னார்வலர்கள் (volunteers) கடற்கரையைச் சுத்தப்படுத்துவதையும் காட்டுவார்கள். 
 4. இதை எல்லாவற்றையும்விட முக்கியமாக, வெள்ளைக் கோட் அணிந்த ஆர்வலர்கள் கச்சா எண்ணெயில் ஊறிய பறவைகளை, சோப்பு நீரில் குளிப்பாட்டி, அவற்றுக்குச் சில மருந்துகளையும் கொடுத்து, எப்படியோ அவற்றைக் காப்பாற்றுவதைப்போலக் காட்டுவார்கள்.
 5. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இது ஒரு பெரிய  எண்ணெய் நிறுவன நாடகம். ஏராளமாக எண்ணெய் கசிந்ததும் ஏதாவது நடவடிக்கை எடுப்பதாகக் காட்டிக் கொள்வார்கள். இதில் வேதனையான உண்மை என்னவென்றால், இதுவரை உலகில் எந்த ஒரு சிறிய எண்ணெய்க் கசிவும், முழுதாகச் சுத்தப்படுத்தப் படவில்லைOil spill fines will pay for 300 new Gulf conservation jobs
 6. கடல் பறவைகள் மற்றும் கடலில் வாழும் உயிரினங்கள் எந்த அளவுக்கு மீட்கப்பட்டுள்ளன என்று ஆராய்ந்தால், இவர்களின் நடவடிக்கைகள் பெரிய வெற்றி என்று சொல்வதற்கில்லை. இத்தனைக்கும் இவர்கள் தொழில்நுட்பம் ஏராளமாக வளர்ந்துவிட்டது என்று மார்தட்டிக் கொள்வது வழக்கமாகிவிட்டது. 

கசிந்த எண்ணெயை இவர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்று முதலில் பார்ப்போம். இதில் நான்கு வகை விஷயங்கள் முயற்சிக்கப் படுகின்றன.

 1. Skimming – இதை முதல் தொழில்நுட்பம் என்று சொல்கிறார்கள்.  அதாவது, மேல் மட்டத்தில் இருக்கும் எண்ணெயை, நீரிலிருந்து ராட்சசப் பம்புகள் (giant pumps) வைத்து இறைப்பது. GULF OIL SPILL - SKIMMERS - Where are they? | GREY GOOSE ...
 2. அடுத்தபடியாக இவர்கள் செய்வது, கடலில் கொட்டிய எண்ணெயை எரிப்பது .
 3. 2010 –ல், மெக்சிகோ வளைகுடாவில் நடந்த பி.பி. (BP or British Petroleum)  நிறுவனத்தின் மிகப்பெரிய எண்ணெய்க் கசிவில் (Deepwater Horizon) வெறும் 25 சதவீதத்தை மட்டுமே இவ்வாறு Skim செய்யவோ அல்லது எரிக்கவோ முடிந்தது. கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் கச்சா எண்ணெய் கனமானது. தண்ணீருக்குள் சென்று, கடலுக்கடியில்  மிக எளிதில் தங்கிவிடும். கசிந்த உடனேயே ஸ்கிம் செய்தால், ஓரளவுக்கு எண்ணெயைப் பிரிக்க முடியும். நேரம் ஆகஆக, எண்ணெய் கடலுக்கடியில் சென்றுகொண்டே இருக்கும். இந்தத் தொழிலில் பொதுவாக, கசிந்த எண்ணெயில் 10 முதல் 15 சதவீதம் வரைதான் இவ்வாறு மீட்கப்படுகிறது. மற்ற 85% முதல் 90% வரை கடலில் கலக்கின்றன. கடலில் வாழும் உயிரினங்களைத் தாக்கி, அவை இறந்து போகின்றன. எப்படியோ அவை பிழைத்துக் கொண்டாலும் அந்த மீன்களை இரைக்காகத் தேடிப்போகும் பறவைகள், மிதக்கும் எண்ணெயில் சிறகுகள் சிக்கி கடற்கரைக்கு எண்ணெயோடு வந்து சேருகின்றன.Ways to Clean - Oil Spills
 4. இதைத்தவிர, சோப்பு போன்ற ரசாயனத்தைப் (இதை டிஸ்பர்ஸன்ட் (dispersants)  என்று சொல்வார்கள்) பயன்படுத்தி, கடல் பரப்பின்மேல் இருக்கும் எண்ணெயை நீக்க முயற்சிக்கிறார்கள்.https://earthjustice.org/sites/default/files/dispersant_oil-spill-commission-800.jpg
 5. டிஸ்பர்ஸன்ட் என்று நாம் சொன்ன விஷயம் எண்ணெயை மிக மிகச் சிறிய துளிகளாகப் பிரித்துக் கையாள்வது. இவ்வாறு பிரித்தல்  ஓரளவிற்குப் பயன் தருகிறது. மற்றபடி, இந்தச் சிறு துளிகள் மிக எளிதாகக் கடல் நீரில் மிதந்துசென்று, அதில் வாழும் உயிரினங்களைக் கொன்றுவிடுகின்றன. கடலை நம்பி வாழும் மீன்கள், மற்ற உயிரினங்கள் மற்றும் பறவைகள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. இதைப்பற்றி இந்தப் பெரிய எண்ணெய் நிறுவனங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. வெள்ளைக் கோட் அணிந்த ஆர்வலர்களை வைத்துக்கொண்டு, தாங்கள் ஏதோ செய்வதுபோல நாடகமாடி எப்படியோ இந்த சூழலில் இருந்து தப்பித்துவிடுகிறார்கள். நாமும் அடுத்த சேனலில் சீரியல் பார்க்கப் போய்விடுகிறோம். வேதனைக்குரிய விஷயம் என்னெவென்றால், வேறு வழியில்லாமல் அரசாங்கங்களும் இதற்குத் துணை போகின்றன. 
 6. கடந்த 100 ஆண்டுகளாக நடந்துவரும் இதுபோன்ற நடவடிக்கைகளை, ஒரு எண்ணெய்த் தொழில் தில்லாலங்கடி என்றே சொல்லவேண்டும். விஞ்ஞான முறைப்படி அணுகினாலும் இவர்களுடைய அணுகுமுறையில் எந்த விதமான பயனும் இல்லை. ஆயினும், இவர்கள் நடத்தும் நாடகம் ஒவ்வொரு முறையும் சற்று வேறுபட்டு இருந்தாலும் கடைசியில் வெற்றி பெற்றுவிடுகிறார்கள். இதை வேறுவிதமாகச் சொல்வதானால், 98 வயது முதியவருக்கு உடம்பு சரியில்லை என்றால் பலவித சிகிச்சை முறைகள் இருக்கின்றன. ஆனால் அவரை எப்படியோ ஓர் ICU அறைக்கு அழைத்துச்சென்று ஒரு மிகப்பெரிய அறுவை சிகிச்சையைச் செய்தால் எல்லோரும் வாயை மூடிக்கொண்டு, மிகவும் சீரியஸாக பார்த்துக்கொண்டு, ஐயோ பாவம் என்று நினைப்பார்கள். முதியவருக்கு இந்த அறுவை சிகிச்சை தேவையா என்று யாரும் கேட்பதில்லை. ஆனால், அறுவை சிகிச்சை நடத்தினால் எல்லோரும் ஏதாவது செய்கிறார்கள்; டாக்டர்கள் மிகப்பெரிய முயற்சி எடுக்கிறார்கள் என்று உடனே தயங்காமல் ஒப்புக்கொள்வார்கள். அதை போன்றதுதான் இந்த நாடகம். 
 7. இப்படி வெள்ளைக் கோட் அணிந்து பாதிக்கப்பட்ட பறவைகளைப் பலவிதமாகக் கழுவி, சோப்பு நீரால் சரிசெய்து, பலவித மருந்துகளை (pepto bismol) கொடுத்துச் சரிகட்டுவது எல்லாம் நாடகமே. தவிர, இதுவரை விஞ்ஞான முறைப்படி இந்தப் பறவைகள் பழைய வாழ்க்கையை மீண்டும் பெறுவதே இல்லை. அத்துடன், இவ்வகை எண்ணெய்க் கசிவுகள் சுற்றியிருக்கும் கடலோரப் பகுதிகளின் வாழ்வாதாரத்தை எப்படிப் பாதிக்கின்றன என்று ஆராய இந்த எண்ணெய் நிறுவனங்கள் யாரையும் விடுவதில்லை. இதுவே வேதனையான உண்மை.

வழக்கம்போல நாம் இந்தப் பிரச்சினையை விஞ்ஞான முறையில் ஆராய்வோம். 1998 –ல் வட சமுத்திரத்தில் (North Sea) ஒரு லட்சம் லிட்டர் கச்சா எண்ணெயை ஒரு எண்ணெய் நிறுவனம் கசியவிட்டது. ஜெர்மனியைச் சேர்ந்த சில்வியா காஸ் (Silvia Gaus) என்ற உயிரியல் விஞ்ஞானி செயலில் இறங்கினார். இந்த எண்ணெய்க் கசிவில் 13,000 பறவைகள் கொல்லப்பட்டுள்ளன என மதிப்பிடப்பட்டுள்ளது. எண்ணெயில் ஊறிய பறவைகளை எவ்வளவுதான் சோப்புப் போட்டுக் கழுவி, Pepto Bismol போன்ற மருந்துகளைக் கொடுத்தாலும் இவற்றின் ஈரல் மற்றும் சிறுநீரகம் முழுவதும் பாதிப்பிலிருந்து தப்புவதில்லை. சொல்லப்போனால், இந்த உடல் பாகங்களில் ஏற்பட்ட பாதிப்பு நிரந்தரமானது. இவருடைய பரிந்துரை, மேலாகப் பார்த்தால் கொடூரமாகத் தோன்றும் –”பறவைகளைக் கொன்றுவிடுங்கள். நம்மிடம் அவற்றைக் காப்பாற்ற எந்த வழியும் இல்லை”. 2010 –ல் BP நிறுவனத்திற்கு இவர் இதைச்சொல்லியும், அது கேட்கவில்லை. டிவியில் அது BP –யின் மதிப்பைக் குறைத்துவிடுமாம்! இதையும்மீறி, 2010 –ல் BP –-யின் ராட்சச எண்ணெய்க் கசிவு ஒரு மில்லியன் பறவைகளைக் கொன்றிருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

1996 –ல் கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஆய்வாளர்கள், எண்ணெயால் பாதிக்கப்பட்ட பெலிகன் (Pelican) பறவைகள் முழுவதும் சரியாகிவிட்டன என்று சொல்லி, அவற்றைக் குட்டைகள் மற்றும் ஏரிகளில் விடுவித்தார்கள். பெரும்பாலான பறவைகள் இறந்தன அல்லது இனப் பெருக்கத்தில் பங்கெடுக்கவில்லை. சில்வியா காஸ், கச்சா எண்ணெயில் தோய்ந்த பறவைகள் மீண்டும் வழக்கமான வாழ்க்கைக்கு திரும்புவதற்கான வாய்ப்பு ஒரு சதவீதத்தைவிடக் குறைவானது என்று கணக்கிட்டுள்ளார்.

கனேடிய அரசாங்கத்தின் ஒரு விஞ்ஞான ஆராய்ச்சி பற்றி இங்கு சொல்லவேண்டும். ஆர்டிக் சமுத்திரத்தில் எண்ணெய் எடுப்போம் என்று எண்ணெய் நிறுவனங்கள் தீவிரம் காட்டத்தொடங்கின. கனேடிய அரசாங்கம், ஒரு 100 விஞ்ஞானிகளைக் களத்தில் இறக்கியது. Beaufort Sea என்ற பகுதியில் இந்த ஆய்வு நடந்தது. வருடத்தில் ஒரு மாதத்தைத் தவிர மற்ற மாதங்கள் பனிக்கட்டிகளால் நிறைந்த ஒரு பகுதி இது. இந்த விஞ்ஞானிகள், 60,000 லிட்டர் கச்சா எண்ணெயைக் கசியவிட்டார்கள். சில கடல் பறவைகளை எண்ணெயில் மூழ்கவும் விட்டார்கள். சில பகுதிகளில் கொட்டிய எண்ணெயை எரியவும்விட்டார்கள். (அதாவது, எண்ணெய் நிறுவனங்கள் வழக்கமாகச் செய்யும் எல்லாவற்றையும் செய்தார்கள்.) என்ன கொடுமை இது என்று தோன்றலாம். விஞ்ஞானிகளுக்கு லாபம்மீது குறியில்லை. ஏதாவது எண்ணெய் கசிந்துவிட்டால்க்ஷ் ஐஸ் நிறைந்த இந்தப் பகுதியில் என்ன செய்யமுடியும் என்பதே இவர்களது ஆராய்ச்சியின் குறிக்கோள். ஸ்கிம்மர்களைப் பயன்படுத்தினார்கள் – கொட்டிய எண்ணெய் பனிக்கட்டியில் உறைந்து விடுவதால், அதில் அதிகப் பயனில்லை. இவர்கள் சில துருவக் கரடிகளை (polar bears) எண்ணெய் சிந்திய இடத்திற்கு விரட்டினார்கள். எண்ணெயை நக்கிய துருவக் கரடிகள், சில மாதங்களில் இறந்தன. பறவைகள் மற்றும் மீன்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். இவர்களது முடிவு – ஆர்டிக் சமுத்திரத்தை மனித லாபத்திலிருந்து விட்டுவிடுங்கள் என்பதே. எவ்வளவு முயன்றும் கனேடிய விஞ்ஞானிகளால் ஆர்டிக் கடலில் எண்ணெய் எடுப்பதைத் தடுக்க முடியவில்லை என்பது ஒரு சோகக்கதை. 

சரி, பல பில்லியன் டாலர்களில் புரளும் எண்ணெய்த் தொழிலைக் கடவுளாலும் கட்டுப்படுத்த முடியாது. மனிதப் பேராசையையும் கட்டுப்படுத்த முடியாது – அதுவும் பல பில்லியன் டாலர்கள் லாபத்திற்கு முன்னால். சரியான விஞ்ஞான முறைதான் என்ன?

 1. சுருக்கமாகச் சொன்னால், கொட்டிய எண்ணெயை முழுவதும் நீக்க விஞ்ஞான முறைகள் எதுவும் இன்றுவரை இல்லை.
 2. விஞ்ஞானிகள், எண்ணெய் கொட்டாமல் இருக்கத் தகுந்த பாதுகாப்பு முறைகளைப் பயன்படுத்துங்கள் என்று சொல்லுகிறார்கள்.
 3. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க, எண்ணெய் நிறுவனங்களுக்கும் விருப்பம்தான். என்னதான் நாடகம் ஆடினாலும் BP –யின் இமேஜ் போனது போனதுதான். அடுத்தமுறை, அதுவும் வட அமெரிக்கக் கண்டத்தின் அருகே நிகழ்ந்தால், இவர்களது பாடு திண்டாட்டம்தான்.
 4. இன்னும் எந்தப் புதிய முறையும் நிரூபிக்கப்படவில்லை என்றாலும் பல புதிய முயற்சிகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. உதாரணத்திற்கு, ஆஸ்த்ரேலியா நாட்டின் குவீன்ஸ்லாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய கரிம (organic) மற்றும் கரிமமற்ற (inorganic) நானோ இழைகள் கலவையில் உருவான ஒரு நுரை, கொட்டிய எண்ணெயை முழுவதும் ஆவியாக்கும் திறமைகொண்டது என்று சொல்லியுள்ளார்கள். ஆனால், இதுவரை எந்த எண்ணெய்க் கசிவிலும் இது நிரூபிக்கப்படவில்லை

அடுத்த பகுதியில், இந்தப் பிரச்னை கடந்த 100 ஆண்டுகளில் எப்படி இவ்வளவு பெரிதானது என்று பார்ப்போம். மேலும், எண்ணெய்க் கசிவு என்பது கடலில் மட்டுமல்லாமல் நிலத்திலும் நிகழும் ஓர் அபாயம். ஏனென்றால், வட அமெரிக்கா மற்றும் யுரோப்பில் நிலத்தின் அடியில் ஏராளமான எண்ணெய்க் குழாய்கள் பல்லாயிரம் மைல் நீளத்துக்குப் புதைக்கப்பட்டுள்ளன.

Series Navigation<< விஞ்ஞானத் திரித்தல் – சக்தி சார்ந்தனராட்சச எண்ணெய்க் கசிவுகள் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.