மனுசி


தெவ்வானைக்கு கண்ண இருட்டிக்கிட்டு வந்திச்சி. ஆசுபத்திரி வராண்டாவுல கெடந்த பெஞ்சில அவ புருசன் செவக்கொளுந்து வெயில்ல புடுங்கிப்போட்ட மள்ளாட்டச் செடியாட்டம் கெடந்தான். காத்தால வந்தவ, புருசங்காரன அங்கன கெடந்த பெஞ்சில உக்கார வைச்சிட்டு சீட்டு எளுதுற பொண்ணுக்கிட்டப் போனா. மொதல்ல ரெண்டு பேரும் மாசுக்க போடுங்கன்னு அது அடுப்புல போட்ட கடலயாட்டம் படபடன்னிச்சி. அதும் போட்டச் சத்தத்துல கையிலருந்த பைக்குள்ள தொளாவுனா. ஆசுபத்திரி அட்ட, மருந்துச்சீட்டு மட்டுந்தேன் இருந்தது. காலம்பற கெளம்புற அவுதியிலயும் தெவ்வானை அந்தத் துணிய எடுத்து பைக்குள்ள வச்சாளே. அத்தப் போட்டு மூக்கையும் வாயையும் மூடாமப் போனா போலீசு புடிக்கும்னு நாலு வாங்கி வச்சிருந்ததுலதான் ரெண்ட எடுத்துக்கிட்டு வந்தா. சேராட்டோவுக்கு காசு குடுக்குற அவசரத்துல பையிலிருந்த சுருக்குப்பைய எடுத்தப்ப கீள வுளுந்திடிச்சோ?

திரும்பிப் பாத்தா. கண்ணுக்கெட்டுன தூரம் வரிச போனது. அவ பின்னாடி இருந்த பொண்ணுகிட்டச் சொல்லிட்டு வரிசையவுட்டுத் தள்ளி வந்தா. கொஞ்சம் மறவாப் போயி சீலயில ஒரு கொசுவத்த தளத்தி முந்தானய நீட்டி சாணளவுக்கு கிளிச்சா. கிளிச்சத குறுக்கால ரெண்டு துண்டாக்கினா. ஒண்ண அவ மூஞ்சில கட்டிக்கிட்டு இன்னொண்ண புருசங்காரனுக்கு எடுத்துட்டுப் போனா. காத்தாட கெடக்குறப்பவே மனுசனுக்கு மேமூச்சி கீள்மூச்சி வாங்குது. இதுல மூக்கையும் வாயையும் மூடி…. ம்… என்னா பண்றது… ஆனானப்பட்ட டாக்டருவளே சவுத்தாள்பையச் சுத்திக்கிட்டு அலையும்போது நாமெல்லாம் எம்மாத்திரம்?

அவள நிமுந்து பாத்த அந்தச் சீட்டு எளுதுற பொண்ணு, இப்புடித் துணியெல்லாம் கட்டிக்கிட்டு வரக்கூடாது, வெளிய விக்குற ஒளுங்கான மாசுக்க வாங்கிப் போடுன்னு கத்திச்சி. அங்கிருந்த கண்ணெல்லாம் தெவ்வான மேலயே மொய்க்கவும் கூசிப்போயிட்டா. சத்தங்கேட்டு அங்க வந்த ஆசுபத்திரியில வேல செய்யுற பையன், அத்த வாங்கி மாட்டுனாதான் இங்க நிக்கணும்னு கண்டிசனா சொல்லிப்போட்டான்.

நொந்துபோன தெவ்வான கால எட்டி வச்சி ஆசுபத்திரிக்கி வெளிய வந்தா. டீ, பளம், கடலன்னு விக்கிற தள்ளுவண்டிக்காரங்க மட்டுமே அங்கன இருந்தாவோ. மூக்க மூடுற துணி எங்க விப்பாங்கன்னு ஒவ்வொண்டியா போய்க் கேட்டா. எல்லாரும் யாவார ஆதாளில இருந்தாவோ. ஆசுபத்திரி செவுத்தோரம் குந்தியிருந்த மனுசன், அத்த விக்கிறவுக இன்னிக்கி வரலன்னு சொல்லவும் தெவ்வானைக்கி நெஞ்சடைச்சாப்ல ஆச்சி.

கையில வச்சிருந்தத நெலவரமில்லாம வுட்ட இந்தப் புத்திக்கெட்டவள என்னென்னு சொல்ல? கடகண்ணின்னு போய்த் தேடி வாங்கிட்டு வர்றதுக்குள்ள ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆனா? ஏதும் புரியாம உள்ள ஓடுனா. புருசங்காரன மட்டுமேது கூட்டிக்கிட்டுப் போயி வைத்தியம் பாருங்கையான்னு ஆசுபத்திரியில வேல செய்யுறவங்ககிட்ட கையெடுத்துக் கும்பிட்டா. ஆரு கண்டுக்கிட்டா அவள…?

அவளாட்டமா நறுங்கிப்போன தேகத்தோட இருந்த அஞ்சல பக்கத்துல வந்தா. நேத்திக்கிதான் எதுக்கும் இருக்கட்டும்னு ரெண்டு மாசுக்கு வாங்கி வச்சேன்னு கட்டப் பையிலிருந்தத எடுத்துக் குடுத்தா. தெவ்வானைக்கி சாமிய கண்டாப்ல ஆச்சி. அத்த மூஞ்சில மாட்டிக்கிட்டு சீட்டு வாங்கப் போனா, முந்தி வந்தவுக இம்புட்டுப் பேரு இருக்காங்கள்ளன்னு அந்தப் பொண்ணு சத்தம் போட்டிச்சி. இந்த அநியாயம் எங்கனா அடுக்குமா? ஆளு அடையாளம் தெரியாம போறதுக்கு, அவ என்ன இவியள மாதிரி மூஞ்சி முளுக்க மூடிக்கிட்டா அலையிறா? பொளுது வெடியங்காட்டியும் மொதோ ஆளா வந்து குந்திக் கெடந்தா. அதுங்கிட்ட என்னத்தச் சொல்றதுன்னு, அவியளுக்கு மூச்சிவுட முடியல தாயின்னு கெஞ்சினா. அல்லாரும் முடியாமதேன் ஆசுபத்திரிக்கி வர்றாங்கன்னு அது கத்தவும் பின்னுக்கு வந்தா. ரேசங்கடைல அரிசி போடறதாட்டமா கீ வரிச அம்புட்டு நீட்டிக்கிட்டு இருந்திச்சி. வரிசைல நின்னவ, கண்ண கட்டுனவன் மேல எட்டிப்போட்டா. நெஞ்சாங்குளி ஏறி எறங்குறத கண்டவளுக்கு வேத்துக் கொட்டுனது. வருசயும் மொள்ளதான் நவுந்திச்சி.

அவளுக்கு முந்தி பத்துப் பேருக்கு மேக்கொண்டு இருக்கையில செவக்கொளுந்துக்கு எறைப்பு கூடிச்சி. வரிசையவுட்டு ஓடியாந்த தெவ்வான ஆம்படையான் தலையத் தூக்கி மடியில வச்சிக்கிட்டு நெஞ்ச நீவிவுட்டா. அப்ப பாத்து ஒரு நர்சம்மா வெளிய வந்திச்சி. அதுங்கிட்டப் போயி, இப்புடிக் கெடக்காகளே… கொஞ்சம் பாரு தாயீன்னா. “வராண்டாவுல வச்சா வைத்தியம் பாப்பாங்க…? சீட்டு வாங்கிட்டு வா” ன்னு எண்ணெ பணியாரமாட்டம் பொரிஞ்சிட்டுப் போனது. அப்ப சீட்டுக் குடுக்குற பொண்ணு ஏன் அப்புடி மொறச்சி பாத்ததுன்னு தெவ்வானைக்கி வெளங்கல.

சித்த முந்திவரிக்கும் ஒண்ணு ரெண்டு வார்த்த மொணங்குன மனுசங்கிட்டயிருந்து இப்பச் சத்தமேயில்ல. மெல்லமா சீட்டு எழுதுற பொண்ணாண்ட போய் நின்னா. அது கையிலிருந்த போன பாத்து சிரிச்சிக்கிட்டு இருந்திச்சி. கூப்புட்டா கோச்சுக்குமோ? அங்க நின்ன வாக்கிலியே திரும்பி ஆம்படையானப் பாத்தா. இரும முடியாம அவுதிப்படுறது தெரிஞ்சது. கீள வுளுந்துடப் போறானோங்கிற கெலியும் அவளுக்குப் புடிச்சது. நல்லவேளயா அஞ்சல அங்கயே நின்னுருந்தா. அந்தப் பொண்ணு பாக்குற மாதிரித் தெரியல. தெவ்வானைக்குப் பின்னாடி ரெண்டு மூணு பேரு வந்து நின்ன பொறவு அவ, தாயீன்னா. தலையத் தூக்கிப் பாத்த அது இவளப் பாத்து மொறச்சதுல வாப்பேச்சிக் கெளம்புவேனான்னது. ஒனக்குப் புண்ணியமா போவுதும்மா… இம்புட்டு நாளிக் காத்துக் கெடக்கேன்னு கண்ணுத் தண்ணியவுட்டா. பொறவு அது சீட்டு எளுதிக் குடுத்திச்சி.

அத்தக் கையில வாங்கிட்டு வெரசா வந்தா. அப்ப அஞ்சல ஆயாம்மாகிட்ட பேசிக்கிட்டிருந்தா. பத்தடி இருக்கப்ப புருசங்காரன் மூஞ்சில ஈ மொய்ச்சதப் பாத்தவளுக்கு கொல நடுங்க, அடிமேலடி வச்சிக் கிட்டப்போனா. கொஞ்சமா நெஞ்சாங்கூடு ஏறி எறங்குனத பாக்கவும் அவளுக்கு உசுரு வந்தாப்ல ஆச்சி. சொருவியிருந்த முந்தானைய அவுத்து ஈய ஓட்டுனா. அஞ்சல காத கடிச்சதுல ஆருமறியாம தள்ளுவண்டிக்கார பயகிட்ட ஒரு கசங்குன நோட்ட நீட்டுனா. பொறவு அவள வெளியவே நிக்கச் சொல்லிட்டு செவக்கொளுந்த வண்டில வச்சித் தள்ளிக்கிட்டுப் போனாவோ.

அஞ்சல புருசன் கலியன இங்கதேன் சேத்துருக்காளாம். வெசாளனோட வெசாளன் இன்னிக்கி எட்டு நாளா ஆசுவத்திரியில கெடக்கேன். நடுவுல ஒருக்கா வூட்டப் போய் பாத்துட்டு வந்தேன்னா. கலியன சொரம்னு பெரியாசுவத்திரிக்கி கூட்டிக்கிட்டு வந்தா மூக்குல குச்சவுட்டு கொடஞ்சிருக்காவோ. பொறவு ஒரு ஊசியக் குத்தி, காய்ச்சலுக்கு குடுக்குற மாத்திரைய குடுத்து, ரெண்டு நாளு களிச்சி வரச் சொன்னாவுளாம். சோதிச்சிப் பாக்குறதுல அந்தச் சீக்கு இருந்தா இஞ்சயே தங்கிடணும். இல்லாங்காட்டி ஊசிப்போட்டுக்கிட்டு வூட்டுக்குப் போயிடலாமுன்னு சொல்லிருக்காவோ. வண்டிவாசியில்லாத இந்த நாளுல ரெண்டு நாள் களிச்சி டவுனுக்கு வர்றது லேசுப்பட்ட வேலையான்னு நெனைச்சேன்னா அஞ்சல.

அவ கதைய கேக்குற நெலயிலயா தெவ்வான இருக்கா?

உள்ளார இட்டுக்கிட்டுப் போயாச்சில்ல… மவராசனுங்க காப்பாத்திடுவாங்க. ஆயாம்மாகிட்ட அப்பப்ப எதுனா குடுத்தா உள்ள இருக்குறவக நெலமைய அப்பைக்கப்ப வந்து சொல்லுவாக. கண்ண தொடைன்னா அஞ்சல.

ஒரு புள்ளாண்டான் வந்து ஒன்ர வூட்டுக்காரர பெட்டுல சேத்துட்டாங்கன்னு தெவ்வானகிட்ட சொல்ல, முந்தானையிலிருந்த இன்னொரு நோட்டு கைமாறிச்சி.

வெளிய இருந்த புள்ளையாருக்கிட்டப் போயி கையெடுத்துக் கும்பிட்டா. தல கிறுகிறுன்னிச்சி. அப்புடியே பைய வந்து வேப்ப மரத்து நெழல்ல குந்துனா. வவுறு ஒட்டிக் கெடக்க, கைகாலெல்லாம் வெடவெடன்னிச்சி. கிட்டக்க வந்த அஞ்சல, எதுனா சாப்புட்டியான்னு கேட்டா. என்னத்தச் சாப்புட்டா? காலையில நீராகாரத்துல உப்பப் போட்டு கையில எடுத்தா. புருசங்காரனுக்கு இருமன்னா இரும அப்பிடியொரு இரும. கையில எடுத்த சொம்ப அப்புடியே அடுப்பு பக்கத்துல மூடி வச்சிட்டு ஆம்படையான கூட்டிக்கிட்டுக் கெளம்பிட்டாளே!

சித்த முந்திதேன் பக்கத்துல இருந்த கடையில சோறு வாங்கியாந்தேன். வா ஆளுக்கு கொஞ்சமா வவுத்துக்குப் போடுவோம்னா அஞ்சல. கட்டப் பையிலிருந்த தண்ணி பாட்டில எடுத்துக் கையைக் களுவிட்டு தெவ்வானகிட்ட நீட்டுனா. பசியில்லன்னு தெவ்வான எம்புட்டுச் சொல்லியும் அவ வுடலயே. சோத்தப் பிரிச்சவொடனே வெளியிலிருந்து ஒரு குட்டி நாய் நொண்டிக்கிட்டே பக்கத்துல வந்து நின்னது. அட… ஒன்ன இன்னிக்கி மறந்துட்டனேன்னு சொன்ன அஞ்சல அதுக்கு ஒரு புடி அள்ளி வச்சிட்டு அவம் புருசனோட கதையத் தொடந்தா.

அந்த ரெண்டு நாளும் அவியளுக்கு காய்ச்சலும் எறங்காமதேன் இருந்திச்சி. நானும் கவசொரம் தண்ணிக் காச்சிக் குடுக்குறது, இஞ்சி சொரசம் பண்ணித் தர்றது, ஆவி புடிக்கிறதுன்னு என்னென்னவோ கைவைத்தியம் செஞ்சிப் பாத்தும் காய்ச்ச வுட்டபாடில்ல. ரெண்டு நா களிச்சி ஆசுபத்திரிக்கி வந்தா அந்த நோவு இல்லன்னு சொல்லிட்டு ஒரு ஊசியக் குத்தி மருந்து மாத்திரை குடுத்து வூட்டுக்குப் போன்னு சொல்லிட்டாவோ. இதென்னாடி அக்குறும்பா இருக்கு? பொறவென்னா பண்றதுன்னு அளைச்சிக்கிட்டு வூட்டுக்குப் போயிட்டேன். அன்னிக்கி மத்தியானம் வரிக்கும் ஒரு மாதிரியிருந்த மனுசனுக்கு கத்திரி வெயில்ல காலு கடுக்க நின்னாப்போல ஒடம்பு கொதிச்சது. அடி வவுருலயிருந்து மூச்சி வாங்க, வெலவெலத்துப் போயிட்டேன். மொன வூட்டு பாண்டியனோட சேராட்டோ அவன் வூட்டு வாசல்ல நின்னிச்சி. அவங்கிட்ட கெஞ்சிக்கூத்தாடி கூட்டியாந்தேன். மனுசன படுக்கயவுட்டு மேக்கெளப்ப ஏலாததால பாண்டியன் ஒத்தாசையில தூக்கிப் போட்டுக்கிட்டு ஆசுபத்திரிக்கி வந்து சேந்தேன்.

பெரியவன் சிங்கப்பூருல வேலக்கிப் போய் இந்தத் தை வந்தா ஒரு வருசம் ஆவப்போவுது. மத்த தேசத்துலயிருந்து அங்க வேலைக்கிப் போனவுகளயெல்லாம் இப்ப வெளியவே வுடலயாமே. சம்பளத்தோட மூணு வேள சாப்பாட்ட குடுத்து, தெம்புக்கு டீ காபின்னும் குடுக்குறாவுளாம். வேலைக்கிப் போய்க் கூட நேரம் வேல செஞ்சா, வரும்படி கூடக் கொஞ்சம் கெடைக்கும். அது இல்லாதது மட்டுமே இப்பக் கொறன்னு மவஞ் சொன்னான். அங்க இந்த நோவால, வேலவெட்டிக்குச் சரியா போவ முடியலன்னா மக்க மனுசா என்னா செய்வாங்கன்னு மாசுக்கு, கையில தடவிக்கிற மருந்துன்னு சும்மாவே தர்றதுமில்லாம கெவுருமெண்டுல காசு பணமும் குடுக்குறாவளாம். இங்க இருக்குறதாட்டம் பணங்கட்டாத ஆசுபத்திரில்லாம் அங்க இல்லையாமே. நோவு பரவுறத நிப்பாட்டணும்னு, இந்தச் சீக்கு வந்தவுகளுக்கு இப்ப எனாமாதான் வைத்தியம் பாக்குறாங்களாம்.

எளயவனும், அதென்னாது… ம்… கம்பிட்டருக்குதான் படிச்சான். அவம் படிச்சி முடிக்கயில வேலைய பெங்களூருல குடுத்துட்டாக. என்னுமோ சொல்லுதுவளே ஆங்… ஈ பாசுன்னு… அது கெடைக்காததுல இந்த நாலு மாசமா வூட்டுக்கு வர முடியல. இது மோசமான ஒட்டுவாரொட்டிச் சீக்கு, ரெண்டுவேரும் வூட்டவுட்டு அங்கயிங்கன்னு எங்கியுமே கெளம்பக்கூடாதுன்னு பயலுவோ கண்டிசனா சொல்லிட்டானுங்க. சொல்லு கேளாது, டீக்கடைக்கின்னு போன மனுசன் அத்த வாங்கிட்டு வந்திருக்கு. பயலுவ அப்பனுக்கு ஒண்ணுன்னா துடிச்சிடுவானுங்க. கண்ணுக்கு மறவா இருக்கப் புள்ளிவோகிட்ட நம்ம வெசனத்த எதுக்குச் சொல்வானேன்?

புள்ளிவுள பத்திப் பேசுறப்ப அஞ்சல மூஞ்சி அத்தத்தண்டி பெருசா தெரிஞ்சது.

தெவ்வானைக்கும் ஆணு ஒண்ணு, பொண்ணு ஒண்ணுன்னு பொறந்திச்சிகதான். பத்த வைக்கத் தெரியாம அடுப்ப பத்த வச்சதுல கண்ணாலம் கட்டுன நாலு மாசத்துலயே பொண்ணு சாம்பலாச்சி. கட்டான கட்டா வளந்த மவன் தண்ணி லாரி அடிச்சிப் போய்ச் சேந்துட்டான். அந்த ஆக்சிரண்டுல செவக்கொளுந்துக்கு காலு போனதுமில்லாம உசுரு இப்பயா அப்பயான்னது. தோட்டந்தொறவுன்னு வாழ்ந்தவ, இருந்த நெலம் நீச்ச வித்து ஆம்படையான் உசுர காவந்து பண்ணா. கைலமடில காசுபணம் இருந்தப்ப தம்புள்ளயாட்டம் ஓப்புடியா புள்ளவுளயும் படிக்க வச்சா. ஒடம்பொறந்தவனுக்கும் கைகொடுத்தா.

நேத்திக்கி பொளுது சாயுற நேரத்துல செவக்கொளுந்துக்கு ஒடம்பு தூக்கிப்போட, ஏலாத மனுசன இட்டுக்கிட்டு ஒத்த மனுசியா டவுனுக்கு வர முடியுமா? நாலு வூடு தள்ளியிருந்த ஓப்புடியா வூட்டுக்குப் போனா. ஆரோ பாட்டுப் பாடுறவுக செத்துட்டாவுளாமே. அத்த போனுல பாத்துக்கிட்டிருந்த பய சித்தாத்தாள நிமுந்துகூடப் பாக்குல. அவன் ஆத்தாக்காரி, மக்க மனுசா வெளிவாசல்ல போனா போலீசு புடிச்சிக்கும்னா. பொறவு, பக்கத்து ஊரிலிருந்த தம்பிக்காரனுக்குப் போன போட்டா, எதாயிருந்தாலும் வெடிய பாத்துக்கலாம்னு அவஞ்சொல்லிட்டான். வெடிய வெடிய கண்ணசராம கெடந்துட்டு கெளக்கு வெளுக்குமுன்ன கெளம்பி வந்தா.

தெவ்வானயோட கதைய கேட்ட அஞ்சல நொந்துட்டா. “பொளுது சாயுங்காட்டியும் இந்தச் சுள்ளான் என்னுமா புடுங்கி எடுக்குது…? சொறிஞ்சி சொறிஞ்சி மேலெல்லாம் தண்டிச்சிக் கெடக்குது. என்னென்னவோ மருந்தும்தான் அடிக்கிறாவோ. எதுக்கும் அசர மாட்டுதுவுளே. பத்தாக் கொறைக்கு இந்தக் கெரகம் புடிச்ச நாயுவளோட தொல்லவேற. ராமுச்சூடும் ஊளவுட்டுக் கொல்லுதுங்க…” ன்னா.

மனசு கிளிஞ்ச சீலயாட்டமா கெடக்க, சளிய சீந்தி வீசுன தெவ்வான முந்தானயால மூஞ்சத் தொடச்சிக்கிட்டா.

கலியன் ஒடம்பு இப்பக் கொஞ்சம் தேறி வர்றதா ஒரு நர்சம்மா அஞ்சலயாண்ட சொன்னிச்சி. அவ புள்ளையார தேடிப் போனா. திரும்பி வந்தவ, மூணு நாளா மேலுக்குத் தண்ணி ஊத்தலையா… ஒரே ஊறலா இருக்கு. ஒரு நட வூட்டுக்குப் போயி மேல களுவி, கூட்டி வாரிக்கொட்டிட்டு அப்புடியே கட்டைய சித்த தரையில சாச்சிட்டு கருக்கல்ல வந்துடறேன். இந்தா… தள்ளுவண்டிக்காரன்கிட்ட ரெண்டு பச்ச வாளப்பளம் வாங்கினேன். ஒங்கதயக் கேட்டதுல அத்த மறந்துட்டேன்னு எடுத்துக் குடுத்துட்டுக் கெளம்பினா.


அஞ்சல பக்கத்துல இருந்த மட்டும் தெவ்வானைக்கித் தெம்பா தெரிஞ்சது. ஆரோ, எவரோ மவராசி நெல்லாயிருக்கணும். ஆம்படையான் நெனப்பு வர அவளுக்கு வெசனம் கூடிச்சி.
அப்ப, நர்சம்மா ஒண்ணு வெளிய வந்து அங்க குந்தியிருந்தவங்கள சுத்திப் பாத்துது. அதுகிட்டப்போயி புருசங்காரன் எப்படியிருக்கான்னு கேக்கலாமுன்னு தெவ்வான நெனச்சா. சித்த முந்தி ஒரு நர்சம்மா வூட்டுக்குப் போவ பேக்குப்பைய தோள்ல மாட்டிக்கிட்டு வெளிய வந்திச்சி. அதுகிட்ட கேட்டப்ப ஆசுபத்திரியில ஒம்புருசன் மட்டும்தான் இருக்காவோ, நாங்க எல்லாம் அவியளுக்கு மட்டுமே வைத்தியம் பாக்குறோம்னு சொல்லிட்டுப் போச்சி. அந்தச் சூடு ஆறுறதுக்குள்ளவான்னு சும்மாயிருந்துட்டா.

கலியனுக்கு வேண்டியவங்க ஆரும் இருக்காவளான்னு நர்சம்மா கேட்டிச்சி. அஞ்சல தோ நாய் கொலைக்குற தொலைவுதான போயிருப்பா.

அந்தம்மா புருசன் செத்துட்டாரு, ஆராவது போய் அத்தக் கூப்புடுங்கன்னு சொல்லிட்டு நர்சம்மா வெடுக்குன்னு உள்ள போயிடிச்சி. தெவ்வானைக்கி ஒடம்பெல்லாம் வெலவெலத்துப் போவ அஞ்சல போனத் திக்குல அரக்கப் பறக்க ஓடுனா.


ஒடம்பு தேறி வருதுன்னு சொன்ன மனுசன் பொசுக்குன்னு போயிட்டானே! துணி மூட்டையாட்டம் சுத்துன பொணத்த ஒரு மணி நேரத்துல தொறக்காம கொள்ளாம அடக்கம் பண்ணிடணும்னு சொல்லியிருக்காவோ. பாளாப்போன நோவு மேல வந்த கோவத்துல தெவ்வான வெத்தல எச்ச வேகமா துப்புனா. அந்தக் குட்டி நாயி அவளையே பாத்துக்கிட்டிருந்தது. பொளுது சாய, புது டாக்டருவுளும் நர்சம்மாங்களுமா ஆசுபத்திரிக்கி உள்ளார போனாவோ. அப்ப ஒரு நர்சம்மா வந்து கலியன் பொஞ்சாதி எங்கன்னு கேட்டிச்சி.

கலியனே போன பொறவு அவம் பொஞ்சாதிக்கி இஞ்ச என்னா வேல?

கலியன் செத்ததா ஆரு சொன்னான்னு அந்த நர்சம்மா கேட்டிச்சி. தெவ்வானைக்கி ஏதொண்ணும் வெளங்கல. அந்த நேரத்துல ஒரு நூத்தியெட்டு வந்து நிக்க, அவுதிபவுதின்னு அஞ்சாறு பேரு எறங்குனாவோ. அட என்னா இது…? அஞ்சல எதுக்கு இங்க வர்றா? கோடிப்பொடவ, மஞ்சப் பூசுன மொவம்னு சாவு சாங்கியம் செஞ்ச கோலத்துல இருந்தவ, எம்புருசன என்னா பண்ணீயன்னா? தெவ்வான நாலு எட்டுல போய் அஞ்சலய அணைச்சிக்கிட்டா. வந்த சனம் பண்ண அதிமிதில உள்ள வெளியன்னு இருந்த மக்கள்லாம் ஆசுபத்திரில கூடிட்டாவோ.

இங்கயிருந்து ஏத்திக்கிட்டுப் போன பொணத்த வண்டியிலிருந்து எறக்கிப் போட்டாவோ. உச்சந்தலையில இருந்து உள்ளங்காலு மட்டும் துணியச்சுத்தி எடுத்துட்டுப் போனப் பொணத்தோட மூஞ்சி தொறந்து கெடந்திச்சி.

அஞ்சலைய வுட்டுட்டு எளுந்து பொணத்துகிட்ட வந்த தெவ்வான, ஐயோ… என்ர ராசான்னு மூஞ்சோட மூஞ்ச வச்சிக் கட்டிக்கிட்டா. பாடிய ஆரும் தொடக்கூடாதுன்னு டாக்டருவளும் நர்சம்மாவும் சொன்னத அவ எங்க கேட்டா? அஞ்சல வந்து தெவ்வனையோட தோள்பட்டையப் புடிச்சி நிமுத்துனா. ஆத்தீ… தெவ்வானை தல தொங்கிப்போச்சே! அங்கிருந்த டாக்டரவுக, அவிய களுத்துல போட்டுருக்கறதால அவ நெஞ்சில வச்சிப் பாத்தாவோ. தண்ணிய கொண்டாங்க, காத்த வுடுங்கன்னு செலரு சத்தம் போட்டுக்கிட்டு அங்கியே நின்னிருக்க, டாக்டருவ எழுந்திட்டாவோ!

ஒரு மள்ளாட்ட உரிக்குற பொளுதுல மவராசி உசுரு இப்புடிப் போயிடிச்சேன்னு அல்லாரும் தெவ்வானயையே வச்சக் கண்ணு வாங்காம பாத்துக்கிட்டிருக்க, மூஞ்சி மட்டும் தெரிஞ்ச பொணத்தோடக் கண்ணு ரெண்டும் மொள்ளமா தொறக்குற மாதிரி தெரியுதே…!


One Reply to “மனுசி”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.