இங்கிலிஷ் மூலம்: லூயிஸ் க்ளிக்
தமிழாக்கம்: வசந்ததீபன்
நான் சிலதைச் சொல்வேன் :ஒவ்வொரு நாளும்
ஜனங்கள் இறக்கிறார்கள்.
அதுவே ஓர் துவக்கம்தான்.
ஒவ்வொரு நாளும் அடக்கத் தலத்தில்,
புதிய விதவைகள் பிறக்கிறார்கள்
புதிய அனாதைகளும். அவர்கள்
கைகள் கட்டி அமர்கிறார்கள்,
இந்தப் புதிய வாழ்வைப் பற்றி யோசிக்க.
பிறகு மயானத்தில் இருக்கிறார்கள், அவர்களில் சிலர்
முதல் தடவையாக. அவர்கள் அழுகையைப் பார்த்துப்
பயப்படுகிறார்கள். சில நேரம் அழாததற்கும்
பயப்படுகிறார்கள். யாரோ அருகில் குனிந்து
அடுத்து என்ன செய்வது எனச் சொல்கிறார்கள்,
அதன் நொக்கம், சில வார்த்தைகளைப் பேசச்
சொல்வதாக இருக்கலாம்,
சில நேரம் திறந்த அடக்கக் குழியில்
பிடி மண்ணைப் போடத் தூண்டலாம்.
அதன் பிறகு, எல்லாரும் வீட்டுக்குத் திரும்புகிறார்கள்
அது வந்தவர்களால் திடீரென நிரம்புகிறது.
இருக்கையில் விதவை அமர்கிறாள், கம்பீரமாக,
எனவே வந்தவர் வரிசையாகிறார் அவளை அணுக,
சில நேரம் அவள் கையைத் தொடுகிறார்கள்,
சில நேரம் அணைக்கிறார்கள்.
அனைவரிடமும் அவளால் ஏதோ சொல்ல முடிகிறது,
அவர்களுக்கு நன்றி சொல்கிறாள், வந்ததற்கு
நன்றி சொல்கிறாள்.
மனதுக்குள் அவள் விரும்புவது, அவர்கள்
போக வேண்டும் என்பதே.
அவள் திரும்ப விரும்புவது
கல்லறைத் தோட்டத்திற்கு, நோயாளியின்
அறைக்கு, மருத்துவமனைக்கு. அவளறிவாள்
அது இயலாதென்று. ஆயின் அது ஒன்றே
அவள் நம்பிக்கை.
பின்னே செல்லும் ஆசை. அதுவும் கொஞ்சமே,
வெகுகாலம் பின்னே, திருமண நாளுக்கோ
முதல் முத்தத்துக்கோ இல்லை.

ஆங்கிலத்தில் : லூயிஸ் க்ளிக் (நோபெல் பரிசு விருதாளர் – 2020 )
தமிழில் : வசந்ததீபன்