பொம்மை விளையாட்டு

ப்பளாத்துருண்டே, விளக்கு வச்சாச்சு. வெளையாண்டது போறும், உள்ளெ வா.

என்று சத்தம் கொடுத்தாள் மாமி. பெற்ற பிள்ளையைவிட என்னை உசத்தியாகக் கருதும் ஒன்றுவிட்ட மாமி. பன்னிரண்டு வயது மருமகனை இன்னமும் மடியில் கிடத்திச் சீராட்டுபவள். 

கைக்கோலால் தட்டி ஓட்டிக்கொண்டிருந்த டயர் வண்டியை நிறுத்திக் கையில் பிடித்தபடி, நான் கிருஷ்ணனைப் பார்த்தேன். அவன் குறும்பாக என்னைப் பார்த்துக் கண்ணடித்தான். வீட்டைப் பார்த்துத் திரும்பிய என் கால்கள் தயங்கின. மாமிக்குக் கழுகுக் கண்கள்; மெல்லிய சினத்தோடு தொடர்ந்தாள்:

அவனெப் பாக்காதே. அவண்ணா வந்து மிதிச்சாத்தான் அவன் உள்ளே வருவான். நீ சமத்தில்லையா. வந்துரு. பூச்சிபொட்டு வர நேரம். ஒன்னை பத்தரமாக் கொண்டு ங்கொம்மாட்டெச் சேக்கணுமேன்னு நாம் படற பாடு பகவானுக்குத்தான் தெரியும். ரெண்டுபேருங் கூட்டுச் சேந்து என்ன ஆட்டம் போடறேள்….

நான் வந்துவிடுவேன் என்ற நம்பிக்கையோடு வீட்டினுள் போகத் திரும்பினாள். என்னை நல்லவன்  என்று நினைத்துக் கொண்டிருக்கிறாள், பாவம். இந்த விடுமுறையில் எனக்கு என்னவெல்லாம் தெரிய வந்திருக்கிறது என்று அவளுக்குத் தெரியாது. ஏன், கிருஷ்ணனுக்கேகூடத் தெரியாது. குறிப்பாக,  மத்தியானம் நடந்தது; எனக்கே அது நிஜமாகவே நடந்ததா, கனவா என்று குழப்பமாய்த்தான் இருக்கிறது. ஆனால், உடம்பிலும் மனத்திலும் கிளர்ந்த  பரபரப்பு இன்னமும் அடங்கவில்லை.

நிலைவாசலில் நின்று திரும்பிப் பார்த்தாள் மாமி. மடிசார் கட்டிய பொம்மை மாதிரி இருந்தாள்.  வடிவாய் இருக்கிறாள்;  முகம் மிகமிக வசீகரமாய் இருக்கிறது என்று முதல் முறையாகத் தோன்றியது எனக்கு. வாலைச் சுருட்டிக்கொண்டு  பின்தொடரும் நாய்க்குட்டி மாதிரி, அவள் ஆணைக்குக் கட்டுப்பட்டேன். வீட்டுக்குள் நுழைந்தவள், ஸ்விட்ச்சைத் தட்டினாள். கிருஷ்ணனை மாதிரியே கண்சிமிட்டிவிட்டு, பிரகாசமாய் ஒளிர்ந்தது குழல் விளக்கு.

லோட்டாலெ காப்பியும் மோர்க்களியும்  வச்சிருக்கேன். மொதல்லெ, கையக் காலை அலம்பி விபூதி இட்டுண்டு வா.

– என்றவாறு என்னைத் திரும்பிப் பார்த்த மாமி, முகத்தை உற்றுப் பார்த்தாள்.

அது சரி, ஒன் மூஞ்சி ஏன் பேயறைஞ்ச மாதிரி இருக்கு? அக்னி நட்சத்திரம் பாழாகாமெ இப்பிடித் தெருச் சுத்தினா…? என்றாள். நல்லவேளை, பதிலை அவளே  சொல்லிவிட்டாள்.  தீவட்டிபோல எரிந்த  சுவாமி விளக்கின் திரியைத் தணிக்க முனைந்தாள். இன்றைக்குக் குளிக்காமல் விபூதி இட்டுக் கொள்ளலாமா என்று குழம்பியபடி முகம் கழுவப் போனேன்.  

ழாம் வகுப்பு விடுமுறையை மறக்கமுடியாததாய் ஆக்கியவை இரண்டு சம்பவங்கள். அல்லது, மூன்றோ? ஒன்று, தென்னந்தோப்பின் மோட்டார் அறைக்குள் வைத்து விநோதினி எனக்களித்த புது அனுபவம். அதை அப்புறம் சொல்கிறேன். 

அந்தக் கோடை விடுமுறை எனக்குக்  கரட்டுப்பட்டியில் கழிந்தது. முழுசாக இரண்டு மாதங்கள். பெரியகுளம் போன்ற சிறுநகரத்தில் இல்லாத வசீகரங்கள் பல அங்கே உண்டு எனக்கு. ’அடிமைப்பெண்’ சினிமாவில் பார்த்த பாலைவனம் மாதிரித் தத்ரூபமாக வறண்டு கிடக்கும் முல்லையாற்றின் மணற்பரப்பு, அதில் அங்கங்கே தோண்டிய நல்ல தண்ணீர் ஊற்றுகள்,  மாமா வீட்டு வளாகத்துக்குப்  பின்புறம் உள்ள   தென்னந்தோப்பின் மறு விளிம்பில் இருக்கும் கொடுக்காப்புளி, நவ்வா மரங்கள், மாமாவுடைய  கூரைவீட்டின் எதிரே இருக்கும் சிமெண்ட்டுக் களமும், அதையொட்டிய மணல் திடலும்,  அரை டவுசரும் வெற்று மேலுடம்புமாக எந்நேரமும் விளையாடத் தயாராயிருக்கும் சிநேகிதர்கள், அவர்களை எனக்கு அறிமுகம் செய்துவைத்து, தானும் விளையாட வரும் என் ஒன்றுவிட்ட மாமா மகன் கிருஷ்ணன்…

கிருஷ்ணன் வழியாக எனக்கு ஏகப்பட்ட விஷயங்கள் கிடைத்தன என்றாலும் குறிப்பாகச் சொல்லச் சில உண்டு. விடுமுறைக்கு வந்த அன்றே  அவன் பரிச்சயப்படுத்திய  ராணுவ வீரர் சின்னக்காளை மாமாவின் மகன் பன்னீர்செல்வமும், டெய்லர் ஸ்ரீராமுலு மாமாவின் மகன் வினோதும். வீட்டுக்குத் தெரியாமல் நாயக்கர் தோட்டக் கிணற்றில், ரப்பர் ட்யூப் மற்றும் கனத்த தாம்புக்கயிற்றின் உதவியோடு நீச்சல் படித்துக் கொடுத்தான் பன்னீர். இந்தியா முழுவதும் கிறுக்குப் பிடிக்க  வைத்திருந்த ’ரூப்தேரா மஸ்தானா, கோரா காகஸ்தா யே மன்னு மேரா’ போன்ற தேவகானங்களை முறையான ஹிந்தி உச்சரிப்புடன் பாடிப் பழக்கிய விநோத். அப்புறம், கிருஷ்ணன் சேகரித்து வைத்திருந்த  முத்து காமிக்ஸ் புத்தகங்கள். இரும்புக்கை மாயாவி என்ற ஒருத்தர் உண்மையாகவே இருந்தார் என்று நாங்கள் நம்பிய நாள்கள் அவை.

கிருஷ்ணன் ஒருதடவை சொன்னான்: மாயாவி தற்சமயம் நியூயார்க்கில் இருக்கிறார். ஆனால், எப்போது வேண்டுமானாலும் இந்தியா வரலாம். யார் கண்டது கரட்டுப்பட்டிக்கேகூட வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. அ கொ தீ க (என்று சுருக்கமாய் அழைக்கப்படும் அழிவு கொள்ளை தீமைக் கழக) ஆட்கள் இங்கே நாயக்கர் தோட்டத்திலோ, நமது தென்னந்தோப்பிலோகூட ஒளிந்திருக்கலாமே. ஆனால், மாயாவி பிஸியான மனிதர். அதிக நேரம் இங்கே இருக்க மாட்டார். மின்னல் மாதிரி வந்துபோகும்போது அவரிடம் ஒரு முத்து காமிக்ஸ் புத்தகத்தில் கையெழுத்து வாங்கிவிட வேண்டும். ஆனால், முழு உருவமாக வராமல், வெறும் இரும்புக்கை மட்டும் வந்ததென்றால், அவரிடம் எப்படிக் கையெழுத்து வாங்குவது என்று குழப்பமாய் இருக்கிறது…

கிருஷ்ணன் பின்னாளில் எழுத்தாளன் ஆனதற்கான அறிகுறிகள் அப்போதே தெரிந்தன என்பதற்காக இதைச் சொன்னேன். 

இந்த முறை இந்தியா வந்தபோது, அவனது சமீபத்திய சிறுகதைத் தொகுப்பை எனக்கு அன்பளித்தான். விமானத்தில் திரும்பும்போதே படிக்க ஆரம்பித்தேன். முதல் கதை முடிந்தவுடன் பெருமூச்சுகளும் ஞாபகங்களும் பீறிக் கிளம்பி, மேற்கொண்டு வாசிக்கவிடாமல் செய்துவிட்டன. 

அந்தக் கதையில், வீடு இருந்த தென்னந்தோப்பு வளாகம், தோப்புக்குள் இருந்த மோட்டார் ரூம் என்று சகலத்தையும் விவரித்திருந்தான். கதையில் வரும் பாவா என்ற அரைக்கிறுக்கன், அவனுக்கும் உள்ளூர் இளம் விதவை ஒருத்திக்கும் அந்த ரூமில் வைத்து நேரும் சம்பவம் என்றெல்லாம் விபரீதமாகப் போனது கதை. அது முழுக்க முழுக்க கிருஷ்ணனுடைய கற்பனையாகக்கூட இருக்கலாம். காலத்தின் துரு ஏறிய மோட்டார் ரூம் கிளப்பிவிடக்கூடிய கற்பனைகள்  ஒரே சாயலில் இருக்க வாய்ப்புண்டு. 

ஆனால், கிட்டத்தட்ட அதே மாதிரியான சம்பவம் நிஜமாகவே எனக்கு நடந்தது – அடுத்த முறை பேசும்போது, ஞாபகமாக கிருஷ்ணனிடம் சொல்ல வேண்டும்.

கிருஷ்ணனின் அப்பா, அதாவது என் மாமா, அர்ச்சகராயிருந்த பிள்ளையார் கோவிலுக்குப் போகும் வழியில்,  வரிசைவீடு ஒன்றில் பன்னீர்செல்வத்தின் குடும்பம் வசித்தது. விநோதின் குடும்பத்தார், எங்கள்  தென்னந்தோப்பு வளாகத்துக்குள்ளேயே குடியிருந்தார்கள். ஸ்ரீராமுலு மாமாவின் தையல்கடை, பன்னீரின் வீட்டையொட்டி இருந்தது. பன்னீரும் விநோதும்தான் நண்பர்கள் – அவர்கள் குடும்பங்களுக்குள் அவ்வளவு சுமுகம் இல்லை என்பது  நான் விடுமுறைக்கு வந்த ஓரிரு நாள்களிலேயே தெரியவந் தது. 

பன்னீரின் அம்மா ஸ்ரீராமுலு மாமாவிடம் ஏதோ தைக்கக் கொடுத்திருந்தார் போலிருக்கிறது. மாதக்கணக்காக அவர் தைத்துத் தரவில்லை. நான் வருவதற்கு முந்தின வாரம் இரண்டு மாத விடுமுறையில் வந்த கணவரிடம் புகார் சொல்லியிருக்க வேண்டும். விசாரிக்கப்போன இடத்தில் தகப்பன்மாருக்கிடையில் தகராறு ஆரம்பித்து, கைகலப்பு வரை போனது. 

ஆனால், அதைக் கைகலப்பு என்று சொல்லக்கூடாது – சின்னக்காளை மாமா கன்னத்திலும் தோளிலும் கொடுத்த அறைகளுக்கு, ஸ்ரீராமுலு மாமா பதிலடி  கொடுக்கவில்லை.  ராணுவ உடம்பு வழங்கிய அடிகளை மற்றவரின்  பூஞ்சை உடம்பு  தாங்கியதே எனக்கு ஆச்சரியம். அதைவிட, ஒவ்வொரு அடி விழும்போதும் அவரிடமிருந்து வெளிவந்த கேலிச் சிரிப்பு இன்னமும் ஆச்சரியமாய் இருந்தது. இவ்வளவு சந்தோஷமாக அடி வாங்க முடியுமென்றால், நானெல்லாம் அவ்வளவு மெனக்கெட்டுப் பாடப் புத்தகங்களைக் கட்டிக்கொண்டு அழ வேண்டாமே என்று தோன்றியது.

அடித்துச் சோர்ந்த சின்னக்காளை மாமா, சரமாரியாகக் கெட்டவார்த்தைகளை அள்ளிக் கொட்டிவிட்டு வீட்டுக்குள் போய்விட்டார். டெய்லர் மாமா கடையை இழுத்து மூடிவிட்டு வீட்டுக்குத் திரும்பினார். விளையாட்டை நிறுத்திவிட்டு சண்டையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த நாங்கள், அவருக்கு ஆதரவாக வருவது மாதிரி அவர் பின்னோடு நடந்து  வளாகத்துக்குத் திரும்பினோம்.

இதில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய இரண்டு செய்திகள் உண்டு; எங்களோடு நின்று வேடிக்கை பார்த்த விநோதின் முகத்தில், தகப்பன் அடிவாங்குவது பற்றிய வருத்தம் துளிக்கூடத் தெரியவில்லை. இரண்டாவது, அவனும் தகப்பனைப்போலவே கேலியாய்ச் சிரித்துக்கொண்டிருந்தான்.

இரண்டே அறைகள் கொண்ட வீடு அவர்களுடையது. இரண்டையும் வெளிப்புறமாய் இணைக்கிற நீண்ட திண்ணை உண்டு.  வாசல் முற்றத்தில் ஃ போல வைத்த மூன்று கற்களில்தான் சமையலே நடக்கும். அடுப்பில் அலுமினியத்  தவலை வைத்து, தானே வெந்நீர் போட்டார் ஸ்ரீராமுலு மாமா. தண்ணீர் கொதிக்கும்வரை  திண்ணையில் உட்கார்ந்து வெறித்துக்கொண்டிருந்தார். அவ்வப்போது தலையை ஆட்டிக்கொண்டார்.

கணுக்காலுக்குச் சற்று மேலே நின்றுவிடும் பாவாடையும் ஆண்கள்போலச் சட்டையும் எப்போதும் அணிந்திருக்கும் விநோதினி செத்தைகளையும், விறகுச் சுள்ளிகளையும் தகப்பனின் கடையில்  விழுந்த எச்சத் துணித் துண்டுகளையும் நீண்ட கோலால் அடுப்புக்குள் திணித்துக்கொண்டிருந்தாள். முழங்காலுக்குமேல் சுருட்டியிருந்தது பாவாடை. சுவாலைகளின் செந்நிறம் எதிரொளித்துப் பளபளக்கும் முன்னங்கால்களில், விலக்கிக்கொள்ள முடியாதபடி  என் பார்வை சென்று ஒட்டியது. அதைவிட, எந்நேரமும் துருத்தித் தெரியும் அந்தக் குமிழ்கள்… 

பின்னர் நான் தங்கியிருந்த நாள்களில் அந்தக் குடும்பம் தொடர்பான விநோதங்கள் ஒவ்வொன்றாகத் தெரியவந்தன. அக்காவுக்கும் தம்பிக்கும் ஒரே மாதிரிப் பெயர்கள். அக்காவை விநோ என்றும் தம்பியை  விநோது என்றும் கீச்சுக் குரலில் சத்தம் போட்டுக் கூப்பிடும் தாயார். அந்த அம்மாள் சமைத்து நான் பார்த்ததேயில்லை. விநோதைவிட மூன்று வயது மூத்தவளும் எட்டாவதோடு படிப்பை நிறுத்திவிட்டவளுமான விநோதினியின் பொறுப்பு அது.

தாய்க்காரி பகல் பொழுதுகளில்  திண்ணையில் ஒருக்களித்துப் படுத்து சும்மா வெறித்துக்கொண்டிருப்பாள். சிலநேரம், பிலாக்கணம் வைக்கிற மாதிரிப் பாடவும் செய்வாள். வண்டி வண்டியாய்த் துயரம் பொங்கும் தெலுங்கு மெட்டுக்கள். சாதாரணமாகவே, தெறிக்கிற மாதிரிப் பிதுங்கிய கண்கள் அந்த அம்மாளுக்கு. பாடும்போது  வெளியில் உருண்டு விடுகிற மாதிரிப் புடைத்திருக்கும். சரியாக உடையாத முட்டையிலிருந்து கசிகிற வெள்ளைக்கரு மாதிரி, கண்ணீர் சதா உருளும். 

வறிய குடும்பம். நூலில் கோர்த்த கருகுமணி தவிர வேறு நகைகள் அணிந்திருக்க மாட்டாள் அந்த அம்மாள். பரட்டையாய் விரிந்த தலையும் அழுக்குப் புடவையும் முறைத்த கண்களும் கடுமையான திக்குவாயும் என பார்க்கும்போதே திகிலூட்டும்  தோற்றம்…

வெந்நீர் ஆகிவிட்டது நானா, என்கிற மாதிரித் தெலுங்கில் ஏதோ சொன்னாள் விநோதினி. அவர் எழுந்து வந்தார். இடுப்புத் துண்டை அவிழ்த்து இரண்டு கைகளாலும் வெந்நீர்த் தவலையை இறக்கி வைத்தார். அழுக்கால் பழுப்படைந்த  கோவணத்தோடு நின்று குளிக்கத் தொடங்கினார். உச்சந்தலையிலிருந்து உடல் முழுக்க ஆவி பறந்ததைப் பார்க்க பயமாய் இருந்தது. அவ்வளவு சூடான வெந்நீரைத் தொட்டாலே எனக்கெல்லாம் தோல் கொப்புளித்துவிடும்.

மாமி சாப்பிடக் கூப்பிட்டாள். குழம்பில் உள்ள முள்ளங்கி வில்லையை எடுத்துக் கண்ணுக்கு முன்னால் உயர்த்திப் பிடித்து, அதில் ஒளி ஊடுருவுவதை வேடிக்கை பார்த்தேன். மாமிக்கு அந்தச் சண்டையை விவரித்துக்கொண்டிருந்தான் கிருஷ்ணன்.

தேவையில்லாத வேலையைப் பாத்திருக்கானே  சின்னக்காளெ. தேன் கூட்லெ போய்க் கையை வைக்கலாமா?… என்று தனக்குத்தானே சொல்லிக்கொள்கிற மாதிரிப் பேசினாள் மாமி.

…அவம் பொஞ்சாதியும்தான், ஊருக்குள்ளெ செல்லம்மாட்டெக் குடுத்துத் தெச்சு வாங்க வேண்டியதுதானே.  பொம்மனாட்டி ரவிக்கையெ ஆம்பளைட்டக் குடுத்துத் தைக்கச் சொல்வானேன்?… ஒர்த்தரும் சரியில்லே…

சாப்பிட்டுவிட்டுக் கையலம்பிக்கொண்டு, கொஞ்சநேரம் உட்கார்ந்திருந்தோம். வாசலில் விநோத் என் பெயரைச் சொல்லிக் கூப்பிடுவது கேட்டது. கிருஷ்ணன் தூங்கப் போகிறேன் என்றான். நான் வெளியில் போனேன்.

விநோத், தான் சேகரித்திருக்கும் தீப்பெட்டிப் படங்களைக் காட்டுகிறேன் வருகிறாயா என்றான். ஆர்வமாக கூடப் போனேன். 

அவர்கள் வழக்கமாகப் புழங்கும் அறைக்கதவு சாத்தியிருந்தது. படுக்கையறையாகப் பயன்பட்ட அடுத்த அறைக்குள், ஒரு ஜாதிக்காய்ப் பெட்டியில் தன் சேகரங்கள் அனைத்தையும் வைத்திருந்தான் விநோத். கடுமையாக ஆக்கர் வாங்கிய பம்பரங்கள், நிறம் வெளிறிய சாட்டைகள், கொத்துக் கொத்தாய்த் தீப்பெட்டிப் படங்கள், டப்பாக்கள் நிறைய பளிங்கு மற்றும் மாவு கோலிக்காய்கள், ஃபிலிம் துண்டுகள், சிகரெட் அட்டைகள், பத்தாயிரக் கணக்கில் இருந்தது மாதிரித் தெரிந்த புளியங்கொட்டைகள்,  அவற்றை வைத்துச் செதுக்குமுத்து விளையாடப் பயன்படும் சப்பட்டைச் சில்லாங்கல் நாலைந்து, கொண்டை கறுப்பாகவும் உடல் சிவப்பாகவும் உள்ள குண்டுமணிகள் ஏகப்பட்டது. இவற்றோடு, பரிட்சை அட்டை ஒன்றும் கிடந்தது. கிருஷ்ணனின் சேகரிப்பு எல்லாமே புத்தகங்களாக இருந்தது நினைவு வந்தது எனக்கு.

எழுந்து கிளம்பினோம் – இரண்டு அறைகளுக்குமான  பொதுச் சுவரில் இருந்த தாழ்வான ஜன்னல் பக்கம் என் பார்வை சென்றது –  அடுத்த அறைக்குள் விநோதின் அப்பா  சம்மணமிட்டு  உட்கார்ந்திருந்தார். சுமார் ஒரு சாண் நீளத்துக்கு மனித பொம்மை போன்ற ஒன்று அவர் கையில் இருந்தது. கறுப்புநிறத் துணிப்பொம்மை. அதன் உடலில் நாலைந்து ஊசிகள் செருகியிருந்த மாதிரிப் பட்டது. ஒரு பார்வைக்குள் இவ்வளவையும் அடக்கிக்கொள்வதற்கு முன்பே என் கையைப் பிடித்து அவசரமாக இழுத்துக்கொண்டு வெளியே வந்தான் விநோத். திண்ணையில் அவனுடைய அம்மா படுத்திருந்தாள் – வழக்கம்போலப் பிலாக்கணம் வைத்தபடி.

றுநாள் சாயங்காலத்தைத்தான் ஆரம்பத்தில் விவரித்தேன். அன்று பன்னீர்  விளையாட வரவில்லை. ராத்திரி சின்னக்காளை மாமாவுக்கு வயிற்றுவலி ஜாஸ்தியாகிவிட்டதாகவும், ஆஸ்பத்திரிக்குப் போயிருக்கிறார்கள் என்றும் அவனுடைய பக்கத்து வீட்டு நாகராஜ் எங்களிடம் சொன்னான். எங்களுடைய புதுப் பம்பரங்களெல்லாம் விநோதின் அரதப்பழைய பம்பரத்திடம் கன்னாபின்னாவென்று ஆக்கர் வாங்கின.  விளையாட்டு சீக்கிரமே போரடித்துவிட்டது.  

முந்தினநாள் சாயந்திரம் மதுரையிலிருந்து சுந்தரம் அண்ணா வாங்கிவந்திருந்த பொன்னி காமிக்ஸைப் படிக்கப் போவதாகச் சொல்லிவிட்டுப் பிரிந்தான் கிருஷ்ணன்.  நாகராஜும் விநோதும் அவர் சைக்கிள் வாடகைக்கு எடுத்து ஓட்டக் கிளம்பினார்கள். என்னையும் கூப்பிட்டார்கள். எத்தனை தடவைதான் விழுவது. முந்தின நாள்களில் முழங்கால்கள் இரண்டிலும் பட்ட காயங்களே இன்னும் வலித்தன. மாமி வேறு கறாராகச் சொல்லியிருந்தாள்:

இன்னிமே சைக்கிள் கிய்க்கிள் ஓட்டப் போனியோ, பொலி வச்சுருவேன் பொலி. ங்கொம்மாக்கு லட்டர் போட்டு வந்து கூட்டிண்டு போகச் சொல்லிடுவேன்.

நான் தென்னந்தோப்புக்குள் போனேன். நவ்வாப்பழம் பொறுக்கலாம். அல்லது, குறிதவறிக் குறிதவறிக் கல்லெறிந்து கொடுக்காப்புளி தட்டலாம்.

நாவல் மரம் பின்புறச் சுற்றுச் சுவரையொட்டி இருந்தது. அதன் இடதுபக்கத்தில், சச்சதுரமான, உட்சுவரில் பதித்த கல் படிகள் கொண்ட மிகப் பெரிய கிணறும், அதனுள்ளிருந்து மேலேறும் பருமனான குழாய்கள் கூர்மையற்ற ’ட’னா போல வளைந்து மோட்டாரில் பொருந்திக்கொள்ளும் அறையும் உண்டு. அறைக்கு இரண்டு தளங்கள். மோட்டார் இருக்கும் கீழ்த் தளம், அதிலிருந்து மரப்படிகள் ஏறி, மரத் தரையாய் விரியும் மேல் தளம். மேலறைக்குக் கதவும் தாழ்ப்பாளும் உண்டு என்றாலும், பெரும்பாலும் திறந்தே கிடக்கும்.  நாவல் பழங்களும் கொடுக்காப்புளியும் சிலநேரம் உதைப் புளியங்காய்களும்  கைகள் நிறைய ஏந்தி வந்து சாவகாசமாக உட்கார்ந்து தின்ன ஏற்ற இடம்.

தோட்டத்தின் நடுவில் சிறு மண்டபம் இருந்தது. நாலு பக்கமும் சுவர்களற்ற, ஓட்டுக்கூரையைக் கற்தூண்கள் தாங்கிய மண்டபம். ஐந்தாறு பேர் நீட்டி நிமிர்ந்து படுக்க வாகான இடவசதி உள்ள, தரையிலிருந்து மூன்று படி உயரத்திலிருந்த, ஆனால் படிகள் இல்லாத, திண்ணை போன்ற மண்டபம்.

அதில் வழக்கம்போலப் பாவாடையை வழித்துக்கொண்டு உட்கார்ந்து தனியாகச் சொட்டாங்கல் ஆடிக்கொண்டிருந்தாள் விநோதினி. நான் தாண்டிப்போவதைக் கவனிக்காத மாதிரித் தொடர்ந்து ஆடியவள், மரங்களுக்கு அருகில் போனதும், வேகமாக எழுந்து வந்தாள்.  

அபாரமாகக் குறிபார்த்து ஏழெட்டுக் கொத்து கொடுக்காப்புளி அடித்து, மடித்துக் கட்டிய பாவாடையில் சேகரித்தாள். என் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு மோட்டார் ரூமுக்கு வந்தாள்.

பாவாடை மடிப்பைத் தளர்த்தி மரத்தரையில் கொட்டினாள். இருவரும் உட் கார்ந்து தின்னத் தொடங்கினோம். அவ்வளவு நேரமும் ஒருவார்த்தைகூடப் பேசிக்கொள்ளவில்லை என்பதை இப்போது நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. கணிசமான அளவு  தின்று, தொண்டையில் கரகரப்பு ஆரம்பித்த நேரத்தில், திடீரென்று என்னை இழுத்துத் தன் மடியில் போட்டுக்கொண்டாள். காத்திருந்த மாதிரி நானும் உடனே ஒத்துழைத்தேன்.

முழங்காலில் பொருக்குத் தட்டியிருந்த சைக்கிள் காயங்களை இதமாக வருடினாள். கைகள் மெல்ல மேலேறி வந்தன. எனக்குக் கூச்சமாக இருந்தாலும் வேண்டியும் இருந்தது. சட்டென்று முடிவெடுத்தவள் மாதிரி, என் ட்ரவுசர் பித்தான்களை அவிழ்த்தாள். எனக்குள் புதுவிதமான விறைப்பு கிளர்ந்தது. தன்னிச்சையாக நான் மோட்டார் ரூம் கதவைக் கவனித்தேன். அது ஒருக்களித்துச் சாத்தியிருந்ததோடு, நாங்கள் அமர்ந்திருந்த இடம் வெளியிலிருந்து பார்வைக்கு மறைப்பாய், கீழறைக்குப் படிகள் இறங்குமிடத்துக்கு அருகில் இருந்தது.

ஒருமுறை என் விறைப்பைத் தொட்டவள், தன் சட்டைப் பித்தான்களை நிதானமாக அவிழ்த்தாள். குமிழ்களை நேருக்குநேர் பார்த்தபோது எனக்கு மூச்சுமுட்டியது. அதற்கப்புறம் நடந்ததையெல்லாம் விலாவரியாகச் சொல்லக் கூச்சமாக இருக்கிறது. சுருக்கமாக இப்படிச் சொல்லலாம்: பெரிதாக எதுவும் நடந்துவிடவில்லை. இப்போதும் மனத்துக்குள் மீந்திருக்கும் காட்சியில் ஆளுக்கொரு ஆளுயரப் பொம்மை வைத்து விளையாடிய, வளர்ந்த குழந்தைகள்போலத்தான் தென்படுகிறது. 

ஆனால், வியர்க்குரு போல என் முன்னங்கைகளிலும், தொடைகளிலும் எழுந்த மயிர்க்கால் புடைப்புகள் அடங்குவதற்கு வெகுநேரம் பிடித்தது. துணிமறைத்த இடங்களை ஒருவருக்கொருவர் சரளமாகத் தொட்டுக்கொண்டோம்.  மெல்ல மெல்ல எங்கள் சுதந்திரத்தின் அளவும், அசைவுகளின் வேகமும் அதிகரித்துவந்தது.

மிகச் சரியாக இந்த நேரத்தில், ‘விநோ…. விநோ…’ என்று அவளுடைய தாயார் உரத்து அழைப்பது கேட்டது. பதறாமல் என்னை விலக்கியவள், அவிழ்த்தது போலவே நிதானமாகத் தன் சட்டைப் பித்தான்களை மூட்டியபடி, இறங்கும் படிகளைக் கண்ணால் சுட்டினாள்.

நான் அவசரமாகக் கீழே இறங்கி, மோட்டாருக்குப் பின்பக்கம் சுவரையொட்டி ஒண்டினேன். இறங்கும் குழாய்களுக்கு நேரெதிரே, கிணற்றின் சுவரில் நீட்டிய கல்படியில் அமர்ந்து என்னையே பார்த்துக்கொண்டிருந்தது ஒரு கொக்கு. அதன் நீட்டிய அலகைப் பார்த்தபடியே ட்ரவுசர் பித்தான்களைப் போட்டுக்கொண்டேன். பாதிப் பரிட்சை எழுதிக் கொண்டிருக்கும்போது, விடைத்தாளைப் பிடுங்கிவிட்ட மாதிரியான உணர்வு எனக்குள் நிலவியது. காதுகளை மேலே குவித்தேன். தாயார் ஏதோ கேட்பதும்,  ‘கொடுக்காப்புளி, பாவாடை..’ என்கிற மாதிரிச் சொற்கள் நிரவிய தெலுங்கில் விநோதினி பதில் சொல்வதும் கேட்டது. 

குரல்கள் இரண்டும் தொலைவுக்கு நகர்ந்து தேய்ந்து மறைந்ததும் நான் மேலேறி வந்தேன். சன்னமான காற்றில் தலையாட்டிக்கொண்டிருந்த மரங்களும் செடிகளும் தமக்குள் மூழ்கியிருந்தன. உடல் மெல்லமெல்ல சமனப்பட்டது. மனம் மட்டும் குதியாட்டத்தை இழக்க விருப்பமின்றித் துள்ளிக்கொண்டிருந்தது.

ஜூலை ஒன்று பள்ளிக்கூடம் திறக்கிறது. குழந்தையை நீங்கள் கொண்டுவந்து விடுகிறீர்களா, நான் வந்து கூட்டிக்கொள்ளட்டுமா என்று அண்ணாவைக் கேட்டு பதில் எழுதவும் என்றும், பிற வர்த்தமானங்களும் கேட்டு என் அம்மா எழுதிய போஸ்ட் கார்டு வந்த அன்றே எனக்கு விடுமுறை முடிந்துவிட்ட உணர்வு வந்துவிட்டது. ஆனால், அடுத்த பதினைந்து நாள்கள் கொடுத்த பரபரப்பில், நாள்கள் ஓடியதே உறைக்காத அளவுக்கு இந்த ஏக்கம் காணாமல் போனது.

அடுத்தடுத்து நேர்ந்த இரண்டு மரணங்களால், கரட்டுப்பட்டியே பரபரத்துக் கிடந்ததை இப்போது நினைத்துப் பார்த்தால், மர்ம நாவல் படிக்கிற மாதிரி இருக்கிறது. 

விடிகாலை வேளையில் க்ரீச்சிட்ட பெரும் அலறல் எங்கள் வளாகத்தை நிரப்பியது. தென்னந்தோப்பு ஆரம்பிக்குமிடத்தில் ரைஸ்மில்லையொட்டிப் புதிதாக எழும்பும் கட்டட வேலைக்காக வந்திருந்த வெளியூர் ஆட்கள், சிமெண்ட்டுக் களத்தில் சாவகாசமாகப் படுத்திருந்தவர்கள், பதறி எழுந்துகொண்டிருந்த அதேநேரம், எங்கள் வீட்டுக் கதவும் திறந்து அத்தனைபேரும் வெளியே பாய்ந்தோம். 

விநோதின் அம்மாதான் அலறிக்கொண்டிருந்தாள். தெலுங்கில் இருந்ததாலும், உச்சஸ்தாயியில் இருந்ததாலும், ஏற்கெனவே திக்குவாய் என்பதாலும் அவள் இன்னதுதான் சொல்லி அலறுகிறாள் என்று யாருக்குமே புரிந்திருக்காது. சகோதரனும் சகோதரியும்  ஆளுக்கொரு பக்கமாய் நின்று அவளுடைய புஜங்களைப் பிடித்திருந்தார்கள். அவர்கள் பிடியை உதறாமலே அவள் ஆகாயத்தைப் பார்த்தும் எதிரிலிருந்த திண்ணையைப் பார்த்தும் மாறிமாறிக் கைகளை நீட்டிக்கொண்டிருந்தாள். கைகளின் அசைவுக்கும் குரலின் ஏற்ற இறக்கத்துக்கும் ஏதோ சம்பந்தம் இருந்ததா, அல்லது எனக்குத்தான் அப்படிப் பட்டதா என்று தெரியவில்லை. 

திண்ணையில் ஸ்ரீராமுலு மாமா அசையாமல் கிடந்தார். பெரியவர்கள் எங்களை விரட்டுவதற்கு முன்பே, ஆசைதீர அவரைப் பார்த்து முடித்துவிட்டோம். மல்லாந்த உடலில் முகம் மட்டும் ஒருக்களித்துத் திரும்பியிருந்தது. நரையும் கருமையும் சரிவிகிதத்தில் கலந்த தலைமுடி கந்தர்கோளமாய்க் கலைந்திருந்தது. எப்போதும் சாதாரணமாய் இருக்கும் அவரது விழிகள், மனைவியின் விழிகளைப்போல் பிதுங்கி வெளிவந்திருந் தன. கோலிக்காய்கள் போல் உதிர்ந்து உருள்வதற்கு இன்னும் கொஞ்சூண்டுதான் பாக்கி என்ற நிலையில் உறைந்துவிட்டிருந்தன. திறந்த வாயிலிருந்து ரத்தக்கோடு இறங்கி, கீழே தேங்கியிருந்தது. இடது காதின் மடல் அந்தச் சிறு குட்டையில் அமிழ்ந்துவிட்டிருந்தது. கைகள் இரண்டும் நெஞ்சிலிருந்து இடுப்புக்குப் போகும் வழியில், தாம்புக் கயிற்றின் பிரிகள் மாதிரி முறுக்கியிருந்தன. கால்கள் அகண்டு,  பாதங்கள் எதிரெதிர்ப்புறமாகப் பக்கவாட்டில் புரண்டு தரையில் படிந்து கிடந்தன.  

தாம் திருப்தியாய்ப் பார்த்து முடித்த மாத்திரத்தில், சுந்தரம் அண்ணாவுக்கு நாங்கள் நின்றிருப்பது நினைவு வந்துவிட்டது போல. 

இங்கே என்ன ஜோலீ? ஓடுங்கடா, என்று கையை ஓங்கினார். இதற்குள் குழுமியிருந்தவர்கள் ஆளாளுக்குப் பேச ஆரம்பித் திருந்தார்கள். 

நாட்டாமெக்காரருக்குச்  சொல்லணுமப்பா, என்று ஒருத்தர் சொன்னார். பணியாரக்கடை ஆச்சி, கொண்டம்மா, சொந்தக்காரவுகளுக்குச் சொல்லியனுப்ப வேணாமா?

– என்று பரிவோடு கேட்டதற்கு, முன்பிருந்த அதே அலறும் குரலில் பதில் சொல்ல ஆரம்பித்துக் கூடுதலாகக் கொன்னினாள் டெய்லர் சம்சாரம். குரல் மட்டுமே வெளிவந்து, சொற்கள் பிடிபடாத சப்தம், அடிபட்ட மிருகத்தின் வீறல்போல ஒலித்தது. அண்ணாவுக்குப் பயந்து நாங்கள் நகரும்போது தாமும் நகர்ந்த ரைஸ்மில் ட்ரைவர் பெரியதம்பியண்ணன்,

இது முனியடிச்ச மாதிரியில்லப்பா இருக்கு.

– என்று அருகில் இல்லாத யாரிடமோ சொன்னார்.

இத்தனை நடந்தபோதும், விநோதினியும் விநோதும்  யாரையுமே கண்ணுக்குக் கண் பார்க்கவில்லை. அவள் என்னையும் பார்க்கவில்லை என்பது, இனம் தெரியாத ஏக்கத்தைக் கிளர்த்தியது எனக்கு. அப்போது மட்டுமல்ல, மோட்டார் ரூம் சம்பவத்துக்குப் பிறகு,  ஸ்ரீராமுலு மாமாவின் மறைவுக்குப் பிறகு, நான் ஊரில் இருந்த பத்துப் பனிரெண்டு நாட்களில், என்னைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. எதிரெதிராய் வந்தாலும், முன்பின் பார்த்தேயிராதவள்போல நேர்ப்பார்வையுடன் தாண்டிப் போனாள். 

முதல் அதிர்ச்சியின் தாக்கம் குறைவதற்கு முன்பே ஊரின் தலையில் அடுத்த இடி விழுந்தது. அன்று சாயங்காலமே என்னையும் கிருஷ்ணனையும் அழைத்துக் கொண்டு பெரியகுளத்துக்கு பஸ்ஸேறிவிட்டாள் மாமி. மாமாவையும் கூடவரும்படி வற்புறுத்தினாள். வளாகத்துக்கு வெளிப்புறம் தார்ச்சாலையை நோக்கி வாசலையும் வீட் டுக்குள்ளிருந்து நேரே போகும்படியான பின்வாசலையும் கொண்டிருந்த காஃபிக் கிளப்பை நடத்திவந்த மாமா,

அப்பிடியெல்லாம் திடுதிப்புனு ஓட்டலைப் பூட்ட முடியுமா? பால்காரன் காய்க்காரனுக்கெல்லாம் சொல்ல வேணாமா. நீங்க முன்னாடி போங்கோ. நாளைக்கி விடிகார்த்தாலே  நான் வந்தர்றேன்.

– என்று சொல்லி பஸ்ஸேற்றிவிட்டார். பஸ்ஸுக்காகக் காத்திருந்தபோது ஊருக்குள் போலீஸ் தலைகள் ஏழெட்டு நடமாடிக்கொண்டிருந்தன…

அன்றைய காலைப்பொழுது ஏகப்பட்ட அமளியோடு விடிந்தது. லேசாய்த் தலை வலிக்கிறது; எட்டு மணிக்கு மேல்தான் ஓட்டலைத் திறக்கப்போகிறேன் என்று சொல்லிக் கொண்டிருந்தார் மாமா. தலைமாட்டில் தலையணை சைஸுக்கு இரண்டு மூன்று புத்தகங்கள் வைத்திருந்தார்.

ஒங்க மாமாவுக்குப் படிக்கிறதுக்கு மூடு இல்லேன்னாத்தான் கடையைத் திறப்பார் பாத்துக்கோ.

என்று முன்னொருதடவை மாமி சொன்னது நினைவு வந்தது. பள்ளிக்கூட நாள்களில் யாராவது எழுப்பினாலும் எழ மனமில்லாமல் புரண்டுகொண்டிருக்கும் நான், கரட்டுப்பட்டி வந்ததிலிருந்து முதல் ஆளாக விழித்து எழும் விந்தையை இதனுடன் பொருத்திப் பார்க்க முடியுமா என்ற யோசனை, மாமி கொடுத்த காஃபியின் ருசியோடு எனக்குள் இறங்கியது. 

மாமாவுக்கும் தனக்குமான காஃபித் தம்ளர்களுடன் வந்த மாமி, அவருக்கருகிலேயே தானும் உட்கார்ந்து பருகிக்கொண்டிருந்தாள்.

ரைஸ்மில் பெரியதம்பியண்ணன் தனது லொடக்கு சைக்கிளோடு வளாகத்துக்குள் வந்தார். முகம் கடுமையாக  இருண்டிருந்தது. மாமா கேட்டார்: 

என்னாப்பா, என்னா எல்லாரும் தெக்கே ஓடுனீங்க?

நம்ம மலையான் வெளிக்கிருக்கப் போன எடத்துலே பாத்துப்புட்டு ஓடியாந்து எல்லாரையும் உசுப்பிப்பிட்டான் சாமி.

ஏன் என்னா கதெ?

அதெ என்னாண்டுங்க சாமி  சொல்ல? 

– என்று மாமியின் முகத்தைப் பார்த்தபடியே தயங்கினார் அண்ணன். விஷயத்தைச் சொல்வதற்கான உரிய வாக்கியங்களைத் தமக்குள் அடுக்கிக்கொண்டிருந்தாரோ என்று இப்போது தோன்றுகிறது. ஒரு முடிவுக்கு வந்தவராக, அவசரமாகச் சொன்னார்:

நம்ம சின்னக்காளை போய்ட்டான் சாமி.

அடடே, என்னப்பா சொல்றே? எப்போ?

நேத்துச் சாயங்காலத்துலேருந்து ஆளக் காணமாம். சரி மருதைக்கு எங்குட்டும் போயிருப்பாருண்டு நெனெச்சேன்ரா அவெம் பொஞ்சாதி.

நீ நல்லாப் பாத்தியா பெரியதம்பீ? என்று பதற்றமாய்க் கேட்டாள் மாமி.

ஆமாங்கம்மா. முனியாண்டி கோயிலுக்கு அங்குட்டு, ஆத்துக் கரெ மேல கெடக்குறான். யாரோ போட்டுத்தள்ளுன மாருதித்தேன் இருக்கு.

வருஷம் பூரா வடக்கெ இருக்குறவனுக்கு இங்கே யாருப்பா விரோதி இருக்கப் போறான்.

அண்ணன் எச்சில் முழுங்கினார். மாமியையும் என்னையும் திரும்பவும் ஒருதடவை பார்த்தார். பிறகு, மீண்டும் இறுகிய முகத்துடன்,

மனுசங்யெ பண்ணுன வேலெ மாருதித் தெரியலே சாமி, என்றார்.

என்னப்பா சொல்றே?

என்று திரும்பவும் கேட்டார் மாமா. இப்போது அவர் குரலிலும் மெல்லிய பீதி இருந்ததை உணர முடிந்தது.

ஆமாங்க சாமி. ஆயுதம் போட்ட மாருதித் தெரியலே. தலையையும் ஒடம்பையும் துணுக்காப் பிச்செடுத்த மாதிரி இருக்கு.

அடடே.

சோளவந்தானுக்கு ஆள் போயிருக்கு. போலீசுலெ சொல்ல.

என்னமோ போ பெரியதம்பி, நம்ப ஊரு நம்ப ஊரு மாதிரியே இல்லாமெ ஆயிருச்சு… ஒரு வா காப்பி குடிக்கறயா?

என்று பெருமூச்சு விட்டாள் மாமி.

இருக்கட்டுங்கம்மா. ஏகப்பட்ட வேலெ கெடக்கு…

என்றவாறு  நிறுத்தியிருந்த சைக்கிளின் ஸ்டாண்டை அகற்றி, கிளம்பத் தயாரானவர், 

…எங்கெ, இவிங்ய வந்ததுக்கப்பறந்தேன் எளவு எல்லாமே மாறிப்போச்சே.

என்று தனக்குள் முணுமுணுத்தபடி சைக்கிளில் உந்தியேறினார். பார்வை ஸ்ரீராமுலு மாமா வீட்டுப்பக்கம் முறைத்துப் பார்த்தபடி இருந்தது… மாமி மாமாவிடம் அறிவித்தாள்:

சாயங்காலக் காருக்கு இவனைக் கூட்டிக் கொண்டுபோய் அவம்மாட்டே விட்டுட்டு வந்துருவோம் ன்னா. 

நாலைந்து நாள் லீவு பாக்கியிருக்கும்போதே போகவேண்டியிருக்கிறதே என்று  ஆதங்கமாய் இருந்தது எனக்கு.

லைக்குமேல் இருந்த ஒலிபெருக்கி கரகரத்து ஓயும்போதுதான் கவனம் திரும்புகிறது. விமானி ஏதோ அறிவித்திருக்கிறார். சுற்றிலும் பார்த்தேன். சகபயணிகள் எதுவுமே காதில் விழாத சாவதானத்துடன் அவரவர் நிலையில் உறைந்திருந்தார்கள்.  எந்த நாட்டுக் கடலுக்குமேல் பறந்துகொண்டிருக்கிறோம் என்றோ எத்தனை ஆயிரம் அடிக்கு மேல்  என்றோ அறிவித்தாரோ என்னவோ. மேகக்கூட்டம்கூடத் தெரியாத இந்த உயரத்தில் எதற்காக இதையெல்லாம் சொல்கிறார்கள். ஒருவேளை ஒரே தினுசில் போய்க்கொண்டே இருக்கும் அலுப்பைத் தவிர்த்துக்கொள்வதற்காக இருக்கலாம்… 

அதுசரி, எது எதுவோ ஞாபகம் வந்து பொழிந்து தள்ளவும் செய்துவிட்டேன். இதையெல்லாம் கிருஷ்ணனிடம் சொல்லவேண்டும் என்று என்னை உந்திய இன்னொரு விஷயத்தைச் சொல்ல விட்டுப்போய்விட்டதே. ஆமாம், அவனுடைய கதைகள் பலவற்றையும் படித்திருக்கிறேனா, சொல்லப்போகும் விஷயம்தான் அவனுடைய எழுத்துக்கு மிகவும் அருகில் இருக்கிறது என்றுகூடப் படுகிறது.

மாமியுடன் ஊருக்குக் கிளம்புவதற்கு முந்தின நாள் சாயங்காலம், சிமெண்ட்டுக் களத்தின் விளிம்பாக அமைந்த திட்டை ஒட்டி ஒரு ’ப’னா வரைந்து நானும் விநோதும் எக்கா விளையாடிக் கொண்டிருந்தோம்.  இரண்டு தாண்டு நீளத்துக்கு இந்தப்புறம் போட்ட வட்டத்தில் நின்று, கட்டத்துக்குள் இருக்கிற, எதிராளியின் சின்ன கோலிக்காய்களை எலுமிச்சம்பழப் பருமன் உள்ள கோலியால் சிதறடித்து, கட்டத்தைவிட்டு வெளியேற்ற வேண்டும். ஒவ்வொரு வெற்றிக்கும் ஒரு ஃபிலிம் பணயம்.

மற்ற நண்பர்கள் இன்னும் வந்திருக்கவில்லை. கிருஷ்ணன்கூட என்னுடன் வரவில்லை – காரணம் ஞாபகமில்லை. விநோதினி சம்பவத்துக்குப் பிறகு, அவன் என்னுடன் வராமல் இருப்பதை நானே விரும்ப ஆரம்பித்திருந்தேன். 

விளையாட்டு மும்முரமாய் நடக்கும்போதும் என்னுடைய ஓரக்கண் விநோதினி  வீட்டுப்பக்கம் அவ்வப்போது போய்வந்து கொண்டிருந்தது. அவள் ஒருதடவையாவது என்னைப் பார்த்துப் புன்னகைக்காவிட்டால், என்னால் சாதாரணமாக இருக்கவே முடியாது என்று உறுதியாய்த் தெரிந்தது. விநோதுக்கு இது எதுவும் தெரியாதா, அவன் ஃபிலிம் மேல் ஃபிலிமாக வென்றுகொண்டிருந்தான்.

அவனுடைய தகப்பனார் மரணத்துக்கு வந்திருந்த ஓரிரு குடும்பங்கள் இன்னும் ஊர் திரும்பவில்லை. அந்த வீட்டிலிருந்து தெலுங்கின் உரத்த பிரவாகம் நாங்கள் விளையாடிய இடம்வரை வந்து பாய்ந்தது. திடீரென்று ஒரு குட்டி உருவம் குடுகுடுவென்று  வேகமாய் வெளிவந்தது. விநோதினியின் குரல் உரத்து ஒலித்தபடி பின்னால் வந்தது. அப்புறம் அவளே ஓடிவந்தாள்.

ஒரேய், ஒரேய். அஸ்வினூ… தொங்க பிடுகா… ரௌடிப் பின்னாண்டு….

அய்யோ, அவனைத் துரத்தி வரும்போதுதான் அவள் எவ்வளவு அழகாய்த் தெரிந்தாள்!

இதற்குள் விநோத் அவனைப் பிடித்துவிட்டான். நாலைந்து வயதிருக்கும் குட்டிப் பையன். அவன் கையில் கறுப்பு நிறத்தில் ஒரு பொம்மை இருந்தது. கிட்டத்தட்ட ஒரு சாண்  நீளம் உள்ள பொம்மை. அன்று ஜன்னல் வழியாக நான் பார்த்த அதே பொம்மை மாதிரித்தான் இருந்தது.

பையன் விடுபடுவதற்காகத் திமிறி அழும்பு செய்தான். விநோத் அவனை விட்டுவிட்டு பொம்மையை இறுக்கிப் பிடித்தான். முந்தினதடவை பார்த்தபோது இருந்த ஊசிகள் எதுவும் இல்லாமல். மொழுக்கென்று இருந்தது பொம்மை. 

இருவரும் ஆளுக்கொரு பக்கம் இழுக்க, எதிர்பாராத ஒரு தருணத்தில், அது நிகழ்ந்தது. விநோதின் கையில் பிடிபட்ட  தலை தனியாகவும் பையனின் கையில் சிக்கியிருந்த முண்டம் தனியாகவும் பிய்ந்தன. நெருப்பைத் தொட்டவர்கள் மாதிரி இருவரும் ஒரே சமயத்தில் அவற்றைக் கீழே போட்டார்கள். தலையில் இரண்டு கையையும் வைத்துக்கொண்டு சட்டடியாக உட்கார்ந்தாள் விநோதினி. விநோத் அந்தப் பையனின் தலையில் ஓங்கிக் குட்டினான். அவன் உடனடியாக அழ ஆரம்பித்தான்.

என் கவனம் விநோதினியிடமிருந்து முழுக்க விலகி, தரையில் உருண்டு கிடந்த பொம்மைத் தலையிடம் குவிந்தது. அதன் கண்களாகப் பதிக்கப்பட்ட பருமனான  குண்டுமணிகள் என்னையே பார்க்கிற மாதிரி உணர்ந்தேன். அப்ப்ப்பா, அவற்றில் என்னவொரு சிவப்பு? அதுசரி, துண்டிக்கப்பட்ட தலை சிரிக்குமா என்ன? ஆமாம், ஒரு கணம் அது உயிரோடு அசைவதாகவும் என்னைப் பார்த்துப் பிரியமாகச் சிரிக்கிற மாதிரியும்   உணர்ந்தேன். அடிவயிற்றைக் கலக்கியது.   

கையிலிருந்த கோலிக்காய்களை வீசியெறிந்துவிட்டு, திரும்பிப் பார்க்காமல் ஓடி எங்கள் வீட்டுக்குள் புகுந்துவிட்டேன். 

இப்போது தோன்றுகிறது, அத்தனை நாளும் என்னைப் பீடித்திருந்த விநோதினியின் பிம்பத்திலிருந்து விடுவித்து என்னைக் காப்பாற்றியது அந்த அறுபட்ட தலையேதான். அதுதான் என்னை இங்கிலாந்துவரை கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. 

ஒலி வடிவில் கேட்க / To Listen to the novel in Audio form:

One Reply to “பொம்மை விளையாட்டு”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.