பெயரில் என்ன இருக்கு?

நான் கல்லூரியில் பயின்று கொண்டிருந்த நேரத்தில், சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் படித்த அக் கல்லூரியில் ‘செல்லப்பா’ என்ற பெயர் கொண்டவன் நான் ஒருவனாகத் தான் இருந்தேன் என்று மங்கலாக ஒரு நினைவு.

சுப்பிரமணியன்களும் ஸ்ரீநிவாசன்களும் கோலோச்சிக் கொண்டிருந்த அந்த வேளையில், ஒரு வித்தியாசமான பெயருடன் இருந்ததால் சிறிது மகிழ்ச்சி. பள்ளியில் படித்த காலத்தில் ‘பால் செல்லப்பா’ என்ற பெயரில் ஒரு மாணவன் ஏழாம் வகுப்பில் என்னுடன் படித்தான். அதே காலத்தில் ‘சாது செல்லப்பா’ என்ற பெயரில் ஒரு மத போதகர், பாவிகளை ரட்சிப்பதற்காக அடிக்கடி பிரார்த்தனைக் கூட்டங்கள் நடத்துவார். சுவரொட்டிகளில் அவர் பெயரைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு சின்ன சந்தோஷம்.

சென்னை மயிலாப்பூரில் ‘செல்லப்பா’ என்ற பெயரில் ஒரு மிகப் பெரிய கல்யாண காண்டிராக்டர் ஒருவர் இருந்தார். கல்யாண மண்டபம் உறுதி செய்வதற்கு முன், அவ்வளவு ஏன், மணமகன் தேடுவதற்கு முன்னதாகவே இந்த காண்டிராக்டரிடம் தேதி வாங்க வேண்டும் என்பது எழுதப் படாத சட்டம். நல்ல உணவில் ஆர்வம் அதிகம் உள்ள எனக்கு இதில் மிகப் பெருமை.

நான் சீர்காழியில் பணி புரிந்த போது, அடிக்கடி செம்பனார் கோவில் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டி இருந்தது. ஒரு பெரிய ஆலை நிறுவதற்காக நிலம் வாங்கிக் கொண்டிருந்தோம். அந்த அலுவலகத்தின் அருகில் ‘செல்லப்பா நகர்’ என்று ஒரு போர்டு இருந்தது. மனைகள் விற்பதற்காக யாரோ நிறுவி இருந்த ஒரு போர்டு. காமிரா இல்லாத மொபைல் வைத்திருந்த நேரம் அது. காமிரா இருந்திருந்தால் அந்த போர்டு அருகே நின்று ஒரு போட்டோ எடுத்திருக்கலாம்.

அதே போல மயிலாப்பூரில் விவேகாநந்தா கல்லூரி அருகில் உள்ள ஒரு சாலையில் ‘செல்லப்பா மெடிகல்ஸ்’ என்ற கடையைப் பார்த்து நம்ம பேரிலும் நாலு மனிதர்கள் இந்த உலகத்தில் இருக்கிறார்கள் என்று சந்தோஷப் பட்டேன்.

அண்டை மாநிலமான கேரளத்தில் ‘செல்லப்பன்’ என்ற பெயர் மிகவும் பிரபலம். நான் எப்பொழுதும் நெற்றியில் சந்தனம் தரித்திருப்பதாலும், தாடியுடன் இருப்பதாலும், சேட்டன்கள் என்னை நாட்டுக்காரன் என்று நினைத்து பிரியத்துடன் செல்லப்பன் என்று அழைப்பார்கள். அன்பைப் பொழிவார்கள். நானும் ஒரு நல்ல மலையாளியைப் போல ‘ஓ’ என்று சொல்லி விட்டு நகர்ந்து விடுவேன்.

திரைப் படங்களில் கதாபாத்திரங்களுக்கு பெயர் வைப்பதிலும் சில எழுதப் படாத விதிமுறைகள் உள்ளது. ஆனால் இயக்குநர் ஸ்ரீதர் ஒரு பெரிய புரட்சியே செய்தார். அவருடைய வெற்றிப் படமான ‘காதலிக்க நேரமில்லை’யில் மாபெரும் நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகரான நாகேஷ் நடித்த கதாபாத்திரத்திற்கு ‘செல்லப்பா’ என்று பெயர் வைத்தார். இந்தப் படத்தின் கதாநாயகன் யார் என்பதில் எனக்கு இன்று வரை குழப்பம்.

இப்படத்தில் நாகேஷ், டி. எஸ்.பாலையாவிற்கு கதை சொல்லும் காட்சி மறக்க முடியாத ஒன்று, திருவிளையாடல் படத்தில் நாகேஷும், சிவாஜி கணேசனும் மோதிக் கொள்வது போல. சிவாஜி கணேசனுக்குப் பிறகு எனக்கு மிகவும் பிடித்தமான நடிகரான கமல ஹாசன், சாப்ளின் செல்லப்பா என்ற பெயர் கொண்ட ஒரு கதாபாத்திரத்தில் ‘புன்னகை மன்னன்’ படத்தில் நடித்திருக்கிறார்.

அதே போலத் தான் நாவல்களிலும். வித்தியாசமான பெயர்கள் தென்படாது. பதின்ம வயதில், வீட்டின் அருகில் இருந்த ஒரு நூலகத்தில், புத்தகங்களைப் புரட்டிக் கொண்டு இருந்த பொழுது, ஒரு புத்தகத்தில் ‘செல்லப்பா’ என்ற பெயர் தென்பட்டது. ஆர்வ மிகுதியால் அந்த புத்தகத்தைப் படித்தேன். ஆதவன் என்ற மகத்தான எழுத்தாளரை அது எனக்கு அறிமுகம் செய்தது. காகித மலர்கள் என்ற அந்த நாவலின் கதாநாயகன் செல்லப்பா ஒரு குழப்ப வாதி. ஆனால் நானோ ஒரு அவசரக் குடுக்கை.

மாலனின் ‘ வழி தவறிய வண்ணத்துப் பூச்சிகள்’ நாவலின் கதாநாயகன் பெயரும் ’செல்லப்பா’ தான். அவனைப் போலவே, நெருக்கடி நிலை அமலில் இருந்த நேரத்தில் எனக்கும் ஒரு கசப்பான சம்பவம் நடந்தது. அது ஒரு தனிக் கதை. எனது அபிமான எழுத்தாளரான சுந்தர ராமசாமி, தனது ‘குழந்தைகள், பெண்கள், ஆண்கள்’ நாவலில் ஒரு சிறிய கதா பாத்திரத்திற்கு செல்லப்பா என்று பெயர் சூட்டி இருந்தார்.

இதை எல்லாம் விட தமிழகத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரும், ’எழுத்து’ பத்திரிகை நடத்திய சி. சு. செல்லப்பாவை இங்கு நினைவு கூர்வதில் எனக்கு மிகவும் பெருமை. இவருடைய ’வாடி வாசல்’ மறக்க முடியாத ஒரு புதினம். ஜல்லிக் கட்டுக்காக போராட்டம் நடத்தியவர்களில் மிகச் சிலர் கூட இந்த புதினத்தைப் படித்திருக்க மாட்டார்கள் என்பது வருத்தம் தரும் விடயம். எழுத்து ‘செல்லப்பா’ தமிழில் நல்ல இலக்கியம் வளர்வதற்காக தன் கைக்காசைச் செலவழித்து வறுமையில் வாடியவர். தமிழ் வளர்ப்பதாகச் சொல்லி, தன்னையும், தன் குடும்பத்தாரையும் வளர்த்துக் கொள்ளும் இந்தக் காலத்தில், அவர் ஒரு பிழைக்கத் தெரியாத மனிதர் என்றே அறியப் படுவார்.

இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன்னால், திருவண்ணாமலை யோகி ராம் சூரத் குமார் அவர்களை, வெகு அருகில் சென்று தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் பணி புரிந்த வங்கியில் இருந்த உயர் அதிகாரி ஒருவர் அவரிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். அந்த அதிகாரி ஹாங்காங்கில் பணி புரிந்த வேளையில் ஒரு தடவை சென்னை வந்திருந்த போது யோகியை தரிசிக்கச் சென்றார். அவருக்கு துணையாக (எடுபுடி வேலை பார்ப்பதற்காக) நானும் சென்று இருந்தேன்.

அந்த அதிகாரி யோகியை தரிசித்து, உரையாடி முடிந்த பின்னர், நானும் யோகியை விழுந்து வணங்கினேன். யோகி திடீர் என ஆங்கிலத்தில் கேட்டார். What is your name ? விழுந்து வணங்கிக் கொண்டே எனது பெயரைச் சொன்னேன். யோகி – My father who is the dearest என்று சொல்லிக் கொண்டே எனது முதுகில் ஓங்கி (வலிக்காத அளவில்) அறைந்தார். அங்கிருந்த அன்பர்கள் தனக்குப் பிடித்தமானவரை யோகி அவ்வாறு முதுகில் அடித்து ஆசீர்வதிப்பார் என்று கூறினார்கள். அப்படி ஒரு ஆசீர்வாதம் கிடைக்க வழி செய்த அந்தப் பெயரை எனக்கு அளித்த எனது பெற்றோருக்கு மனதார நன்றி செலுத்தினேன்.

மிகச் சிறிய வயதில் அம்மாவிடம் ‘எனக்கு ஏன் இந்தப் பெயர் வைத்தீர்கள்’ என்று கேட்டேன். ஐந்து சகோதரிகளுக்கு நடுவே ஆண் பிள்ளையாக நான் தப்பிப் பிறந்தவன். அம்மாவின் விளக்கம் – இது எனது தாத்தாவின் பெயர். எங்கள் குடும்பத்தில் முதல் பிள்ளைக்கு தந்தையின் தந்தையின் பெயரும், இரண்டாவது மகனுக்கு தாயின் தந்தையின் பெயரும் வைப்பது வழக்கம். அதே போலத் தான் பெண் பிள்ளைகளுக்கும். தந்தையின் தாய் பெயரை முதல் பெண் குழந்தைக்கும், தாயாரின் தாய் பெயரை இரண்டாவது பெண் குழந்தைக்கும் வைப்பது வழக்கம்.

பின்னால் பிறக்கும் குழந்தைகளுக்கு விருப்பம் போல பெயர் வைப்பார்கள். குறிப்பாக அந்த ஊர் அம்மன் பெயர். நெல்லையில் வீட்டுக்கு வீடு காந்திமதிகள் இருப்பார்கள். ஆளுக்கு அரை டஜன்களுக்கும் குறையாமல் பிள்ளை பெற்றுக் கொண்ட நேரம் அது. குடும்பக் கட்டுப்பாடு, நிரோத் பற்றி எல்லாம் அதிகம் கவலைப் படாமல், மரம் வைத்தவன் தண்ணீர் விடுவான் என்று மக்கள் நம்பிய காலம் அது.

அம்மாவிடம் எனது அடுத்த கேள்வி – தாத்தாவிற்கு ஏன் இந்தப் பெயர் வைக்கப் பட்டது? தாத்தாவின் அம்மா அடுத்துப் பிறக்கும் குழந்தைக்கு ‘செல்லம்மா’ என்று பெயர் வைப்பதாக வேண்டிக் கொண்டதாகவும், குழந்தை ஆணாக பிறந்ததால் ‘செல்லப்பா’ என்று பெயர் வைத்ததாகவும் அம்மா கூறினார்கள்.

எனது மூத்த சகோதரி பிறந்து எட்டு வருடங்கள் கழித்து நான் பிறந்தேன். எங்கள் வீட்டிற்கு மலையாள ஜோசியர் ஒருவர் எப்பொழுதாவது வருவார். அந்த மாவட்டத்தில் இருந்த பல பெரிய மனிதர்கள், பணக்காரர்கள் அவரிடம் ஜோசியம் பார்ப்பதற்காகக் காத்திருப்பார்கள். எனது தந்தை ஒரு நாளும் அவரிடம் தனது ஜாதகத்தைக் காட்டியதில்லை. ஒரு நாள் எனது தந்தை பூசை முடித்த நேரத்தில் அந்த ஜோசியர் வந்தாராம். அவர் தந்தையின் ஜாதகத்தை கேட்டிருக்கிறார்.

அப்பாவும் விருப்பம் இல்லாமல் தனது ஜாதகத்தை அவரிடம் காட்ட, அந்த ஜோசியர், ‘ உங்களுக்கு ஒரே மகன் தான். இன்னும் ஒரு வருடத்தில் பிறப்பான். இதற்காக அம்மா ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட நாளில், அருகில் உள்ள நாக ஷேத்திரத்தில் (புற்றுக் கோவில்) இதற்காக பூசை செய்ய வேண்டும் என்றும் அந்த மகன் சத் புத்திரனாக (நல்ல மகனாக) இருப்பான் என்றும் கூறினாராம். சங்கரன் கோவிலில் இருந்த புற்றுக் கோவிலுக்கு பூசை செய்து ஒரு வருடம் கழித்து நான் பிறந்ததாக அம்மா கூறியிருக்கிறார்.

அம்மா மிகவும் கண்டிப்பானவர். சிறு வயதில் நான் அதிக சேட்டைக் காரன். தயிர் கடையும் மத்தின் கம்பால் அம்மாவிடன் அதிக அடி வாங்கியிருக்கிறேன். தாத்தாவின் பெயர் சூட்டப் பட்ட நான் இவ்வாறு இருப்பதில் அம்மாவிற்கு அதிக வருத்தம். என்னிடம் அதிகம் பேசாத அப்பா கூட வேடிக்கையாக- ஜோசியன் சத் புத்திரன் (நல்ல மகன்) பிறப்பான்னு சொன்னான். குரங்காக நீ பிறந்திருக்கிறாய் – என்று சொல்லுவார். சின்ன வயதில் சேட்டை பண்ணாத பிள்ளைகளைப் பார்க்க முடியுமா? இதற்காக நான் அடி வாங்குவது தான் அவர்களுக்கு நிஜமான வருத்தம். அதுவும் தாத்தா பெயர் வைத்துவிட்டு அடிப்பதில் கூடுதலான வருத்தம்.

எனது மூத்த சகோதரியின் திருமணம் நடக்க இருந்த நேரத்தில் உறவினர் ஒருவரைப் பார்ப்பதற்காக நானும், அம்மாவும் பேருந்தில் சென்று கொண்டிருந்தோம். அந்த உறவினர் இருந்த இடம் எனது தாத்தா வசித்த கிராமத்திற்கு அருகில் இருந்தது. பேருந்தில் நானும் அம்மாவும் பேசிக் கொண்டே சென்றோம்.

அம்மா தாத்தாவைப் பற்றிய பல தகவல்களைச் சொல்லிக் கொண்டே வந்தார். அவர் மிகவும் நேர்மையானவர் என்றும், அவர் வசித்த கிராமம் மற்றும் அருகில் இருந்த கிராமங்களில் இருந்த எல்லா மக்களுக்கும் உதவி செய்வார் என்றும், அதனால் பல குழந்தைகளுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டிருப்பதாகவும், அந்தப் பெயர் சூட்டப்பட்டிருப்பதால் மட்டுமே அந்த குழந்தைகளை திட்டுவதற்கும், அடிப்பதற்கும் பெற்றோர்கள் தயங்குவார்கள் என்றும் சொன்னார். இது எனக்கு கொஞ்சம் ‘ஓவராக’த் தெரிந்தது. அம்மாவிடம் நான் பட்ட அடிகளின் வலி அப்படி.

இரண்டு நிறுத்தங்கள் தாண்டி ஒரு வயதான பாட்டி தனது பேரனுடன் பஸ்ஸில் ஏறி எங்களுக்கு முன் இருந்த இருக்கையில் அமர்ந்தார். அந்த சிறுவன் சன்னல் வழியாக கைகளை நீட்டுவதும், பெரும் சேட்டை செய்வதுமாக பயணம் செய்தான். சிறுவனது பாட்டி அவ்வாறு பஸ்ஸில் இருந்து கையை வெளியில் நீட்டாமல் இருக்க அவனைக் கெஞ்சிக் கொண்டிருந்தார்.

எரிச்சல் அடைந்த அம்மா, அந்த பாட்டியைத் திட்டினார். – ஏன் கொஞ்சிக்கிட்டுருக்கே. ரெண்டு அடி போடு. அந்தப் பாட்டி வெள்ளந்தியாக கிராமத்து நெல்லைத் தமிழில் – ’பத்தம்பது வருசத்து முன்னால இங்கென இருந்த ஒரு பெரியவர் பெயர் அவனுக்கு வெச்சிருக்கு. அதுனால அடிக்க மாட்டோம், திட்ட மாட்டோம்’ என்றார்.

நான் மெதுவாக பாட்டியிடம் கேட்டேன் – அந்த பையன் பெயர் என்னம்மா?

பாட்டி அமைதியாகப் பதில் சொன்னார் – செல்லப்பா.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.