கு. அழகர்சாமி

பிணி
நெடுநாள் போடாமல் போட்டு
இறுக்கிப் பிடிக்கும் சட்டையைக்
கழற்றக் கஷ்டப்படுவது போல-
தாய் மந்தியின் அடிவயிற்றைக்
கட்டிப் பிடித்த குட்டி மந்தி
அதுவாய்ப்
பிடி விட்டாலன்றி
பிடி விடாதது போல-
நெடுநாட் கழித்து வந்து சேர்ந்த
நீடித்த பிணியின் பிடியில்
நலிந்துடம்பு
வலியில்-
ஒரு நாள்,
பாம்பு உரித்துப் போட்டு விட்டுப் போன சட்டை போல
பிணி விட்டுப் போன போது
மண்ணில்
முளைவிட்ட
மென் நாற்று போல்
மெலிந்த என் உடம்பு,
நெடுநாட் கழித்து
நேர் காணும்
சூரியனின் விசாரிப்பில் குளித்து
தன்
நிழற்சட்டையை
உருவும்
தானே
வீசி
நிலத்தெறிந்து.
**
விசுவாசம்

வெயில்
தகிக்கும்
நீல
நீர்க் கடலில்
நீர்
மூழ்கிக்
குளித்து
கரையேறும்
என்னோடு
நீர்
மூழ்கிக்
குளித்து
கரையேறி,
நீரில்
நனைந்ததால்
தலை துவட்டும்
என்னைப் பார்த்து
நீரில்
நனையாதாயினும்
வெயிலில்
நனைந்ததாய்த்
தலை துவட்டும்
என்
நிழலின்
விசுவாசத்தில்
எப்படி நான்
விசுவாசமில்லாமல்
இருக்க முடியும்?
தீ
தீ
ததும்பி
தீ
யோடையாய்க்
கூழாங்கல் தேகத்துக்குள்
குடைந்து
தீ
யுருகித்
தெறித்து
தீ
தணியத்
தனி மோனத்திருந்து
தீர்ந்தது
தீ
திகம்பரம்
இனி
என
உள்
தேர்கையில்
தீக்
கங்கு
அணையாதாகி
மீத்
ததும்பும்
தீ
யடங்க
நீ
யடங்கும் காலம்
எக்
காலம்?
நா
னடங்கி
நீ
யடங்கும் முன்
எக்
காலம்?
சொல்
மனமே
சொல்!
**
பிணி கழற்றிப் போட்ட சட்டை, நிழலின் விசுவாசம், மற்றும் தீ என்னும் சித்தர் வரிசையில் சேரக்கூடிய தை மூன்று கவிதைகளும் அருமை. அடிக்கடி எழுதுங்கள். சொல்வனம் தேர்வுக்குழுவுக்கும் எனது பாராட்டுகள்… கோரா