பலகை அடித்த ஜன்னல்

அம்ப்ரோஸ் பியர்ஸ்

தமிழாக்கம் : கோரா 

1830-ல்,  இன்றைய சின்சினாட்டி மாநகர் அமைந்திருக்கும் இடத்திற்குச் சில மைல்கள் தொலைவில் ஒரு மிகப்பரந்த, கிட்டத்தட்ட இடையீடற்ற அடர் கானகம் இருந்தது. அந்த கானகப் பகுதி முழுவதிலும் எல்லைப்புற மக்கள் இங்கொன்றும் மிக அரிதாகக் குடியேறி இருந்தனர்– அவர்கள் முதலில் காட்டை அழித்து ஆடம்பரமற்ற வசிக்கத்தக்க வீட்டை அமைத்துக்கொண்டு, நாம் இன்று வறுமை என்று கருதக்கூடிய அளவிலான செழுமையை அடைந்துவிட்ட உடனேயே தமக்கு  இயல்பாகிவிட்ட ஒரு புதிரான உத்வேகத்தால் தூண்டப்பட்டு, தம் உடைமைகள் அனைத்தையும் உதறித்தள்ளிவிட்டுப் புதிய ஆபத்துகள் மற்றும் துன்பங்களை எதிர்கொள்ளவும் முன்பு சுய விருப்பப்படித் துறந்த அதே அற்ப சௌகரியங்களை மீட்டெடுக்கவும் சேய்மை மேற்கு நோக்கி விரைந்த அமைதியற்ற ஆத்மாக்கள் பலர் தொலைதூரக் குடியேற்றங்களுக்காக அந்தக்  காட்டுப் பிரதேசத்தைக் கைவிட்ட நிலையில், முதலில் வந்திருந்தும் அங்கேயே தங்கிவிட்ட ஒரு சிலரில் அவனும் ஒருவன். நாற்புறமும் பெருங்கானகம் சூழ்ந்திருந்த ஒரு மர வீட்டில் தனியாக வாழ்ந்துவந்த அவனை,  புன்சிரிப்பைச்  சிந்தியவாறோ அல்லது  தேவையற்ற வார்த்தை ஒன்றைப் பேசியபடியோ கண்டவர் எவருமில்லை என்று சொல்லப்படும் அளவுக்கு, அவன் கானகத்தின்  இருள் மற்றும் நிசப்தத்தின் ஒரு பகுதியாகவே ஆகியிருந்தான். தேவைப்பட்டால், குழப்பமில்லாத துய்ப்புரிமை கோரிக்கொள்ள முடிகிற நிலச் சொத்து இருந்தும் அதில் எதுவும் விளைவிக்காமல், வனவிலங்குகளின் தோலை  ஆற்றங்கரை நகரில் விற்று அல்லது பண்டமாற்றல் செய்து எளிய தேவைகளை நிறைவேற்றிக் கொண்டான். அவன் இருக்கும் இடத்தில் நிலத்தைச் செம்மையாக்கும் முயற்சியின் தடயங்கள் இருந்தன — வீட்டைச்சுற்றி இருந்த சில ஏக்கர் நிலத்தில் முன்பு எப்போதோ மரங்கள் அகற்றப்பட்டிருந்தன என்பதற்கு ஆதாரமாக, வெட்டிய மரத்தின் உளுத்துப்போன அடிப் பாகங்களைப் பாதி உயரத்துக்கு மூடியுள்ள புது முளைப்புகள் இருந்தன — அவை கோடரியால் உண்டாக்கப்பட்ட அழிவை ஈடு செய்யவேண்டி இயல்பாகத் தாமாகவே முளைத்தெழுந்து இருந்தவை. வெளிப்படையாக, அம்மனிதனின் வேளாண்மை ஆர்வம் அணையும் தீச்சுடராய் எரிந்து, பிராயச்சித்தச் சாம்பலாய்க் காலாவதி ஆகியிருந்தது. 

விறகுக் கணப்பிடம்,  குறுக்குக் கம்பங்களின் பளுவால் தக்கவைக்கப்பட்ட,  வளைந்து உருமாறிய சாரல் தடுக்கிகள்கொண்ட கூரை, அதன்மேல் பொருத்தப்பட்டுக் காற்றில் ஓசை எழுப்பும்  களிமண் ஓடுகள் ஆகியவற்றைக்கொண்ட  அந்த சிறிய மர வீடு ஒரே வாசலையும் அதற்கு நேரெதிரில் ஒரு ஜன்னலையும் கொண்டிருந்தது.  அந்த ஜன்னல், பலகை அடித்து மூடப்பட்டிருந்தது — எப்போது திறந்திருந்தது என்று யாராலும் நினைவுகூர முடியாது. ஏன் இப்படி எப்போதும் அடைக்கப்பட்டிருந்தது எனவும் எவரும் அறிந்திலர்; வெளிச்சம் மற்றும் காற்றின்மீது குடியிருப்பவர் கொண்டுள்ள வெறுப்பே காரணம் என்பது நிச்சயமாகச் சரியில்லை, ஏனெனில் அவன் தேவைக்காக வானம் கதிரொளி வீச்சு தரும்போதெல்லாம், வழக்கமாக இந்தத் தனியர் தன் வீட்டு வாசலில் வெயில் காய்ந்துகொண்டிருப்பதை, அந்த ஆளரவமற்ற இடத்தைக் கடந்து செல்லநேரும் மிக அரிதான சந்தர்ப்பங்களில் ஏதோ ஒரு வேடர் கண்டிருக்கக்கூடும். அந்த ஜன்னலின் ரகசியத்தை  அறிந்துகொண்டவர்களில் இன்று உயிரோடிருக்கக் கூடியவர் மிகச் சிலரே என்று நினைத்துக்கொள்கிறேன். எனக்குத் தெரியும், நீங்கள் பார்க்கப்போகிறீர்கள். 

அந்த மனிதனின் பெயர் மர்லாக் என்று சொல்லப்படுகிறது. எழுபது வயதினனாகத் தோற்றம் கொண்டிருந்தவன். உண்மையில் வயது  சுமார் ஐம்பதுதான். வாழ்ந்த ஆண்டுகளைத் தவிர மற்ற சில விஷயங்கள் அவன் முதுமைக்குக் காரணிகளாக இருந்தன. அவன் தலைமயிர் மற்றும் முழுதாக நீண்டு வளர்ந்திருந்த தாடி அனைத்தும் வெண்மையாக இருந்தன. அவனுடைய சாம்பல் நிற மங்கிய கண்கள் குழிவிழுந்தும் அவனுடைய முகம் இரு குறுக்குவெட்டு அமைப்புகளுக்குரிய சுருக்கங்களை ஒன்றாக்கித் தைத்ததுபோல் காணப்பட்டது. உருவத்தில்  உயரமாக மெலிந்து கூன்விழுந்து சுமையாள் போலிருந்தான். நான் அவனைப்  பார்த்ததில்லை; இந்த விவரங்களை என் தாத்தாவிடமிருந்து அறிந்துகொண்டேன். நான் இளைஞனாக இருந்தபோது எனக்கு அவரிடமிருந்துதான் இந்த மனிதனின் கதை கிடைத்தது. முன்பு அருகில் வசித்துக்கொண்டிருந்தபோது அவருக்கு இவன்  அறிமுகமாகி இருந்தான். 

ஒரு நாள் மர்லாக் தன் வீட்டில் இறந்து கிடப்பதைக் கண்டார்கள். அந்த இடத்திலும் காலத்திலும் பிண ஆய்வாளர் மற்றும் செய்தித்தாள் வசதி ஏதும் கிடையாது. அவன் இயற்கையான காரணங்களால்தான் இறந்தான்  என்று அனைவராலும் ஒப்புக்கொள்ளப் பட்டுவிட்டதாகப் பாவித்துக் கொள்கிறேன் அல்லது அவ்வாறு சொல்லப்பட்டதாக எனக்கு நினைவில் இருக்கிறது. அவனை முந்திக்கொண்டு  பல ஆண்டுகளுக்கு  முன்பே இறந்து விட்ட அவன் மனைவியை (உள்ளூர் மரபு வழியினர் யாரும் அப்படி ஒருத்தி வாழ்ந்திருந்த குறிப்புகளை ஞாபகம் வைத்திருக்க வாய்ப்பில்லை)  வீட்டின் அருகில் புதைத்திருந்த சவக்குழிக்குப் பக்கத்திலேயே அவன்  உடலைப் புதைப்பதுதான் பெரும்பாலும் முறைப்படியானதாக இருக்கும் என்று எனக்குத் தெரிகிறது. இத்துடன் உண்மைக் கதையின் கடைசி அத்தியாயம் முடிகிறது.

உண்மைக்குத் தொடர்புடைய சில சந்தர்ப்பங்கள் நீங்கலாக — பல ஆண்டுகள் கழித்துச் சீரான துணிவும் ஆர்வமும் கொண்டவனாக, நான் அந்த இடத்தை ஊடுருவி அச்சமில்லாமல் அந்தப் பாழடைந்த வீட்டிற்கு வெகுஅருகில் சென்று அதன்மீது கல்லெறிந்துவிட்டு ஓடிவிட்டேன், இறந்தவரின் ஆவியைத் தவிர்க்க — அங்கே ஆவி நடமாட்டம் இருப்பதை அந்தப் பகுதியின் ஒவ்வொரு விவரமான பையனும் அறிந்திருந்தான். ஆனால் கதையில் ஒரு முந்திய அத்தியாயம் இருக்கிறதுந் என் தாத்தா அதையும் தந்திருந்தார். 

மர்லாக்,  மர வீட்டைக்  கட்டி முடித்தபின், வலிமையுடன் மரங்களைக் கோடரியால் வெட்டிவீழ்த்திப் பயிரிடும் நிலத்தை உருவாக்கிக்கொண்டான்– துணைக் கருவியாகத் துப்பாக்கியும் வைத்திருந்தான். அப்போது அவன் இளமையும் கட்டுடலும் நம்பிக்கைமிக்க எதிர்பார்ப்பும் கொண்டிருந்தான். கிழக்கு தேசத்திலிருந்து வந்தபோதே அவ்வூர் வழக்கப்படி அவனுக்குத்  திருமணம் ஆகிவிட்டது. அவனுடைய நேர்மையான அன்புக்கு எல்லா வகையிலும் தகுதியான, அவனைப் போன்ற மக்களின் வாழ்க்கை முறையில் இருக்கும் ஆபத்துகளையும் வசதியின்மைகளையும் மனமுவந்து ஏற்று இளகிய மனதுடன் பகிர்ந்துகொள்ளும் ஓர் இளம் பெண்ணைத்தான் அவன் மணந்து கொண்டிருந்தான். அவள் பெயர் குறித்த பதிவுகள் எதையும் அறிந்தவர் எவருமில்லை; அவள் மன, உடல் வசீகரங்கள் பற்றி வழமை மௌனமாக இருக்கிறது. எனவே சந்தேகப்படுவோர் தாராளமாகச் சந்தேகித்துக் கொள்ளலாம்; நான் அத்தகையவற்றைப் பகிராமல் கடவுள் தடுக்கட்டும்! அவர்களுடைய இல்லறத்தின் பாசம், மகிழ்ச்சி அனைத்தும் அவன் தாரமிழந்து வாழும் காலத்தில், மேலும் அதிகரித்து வருகிற ஒவ்வொரு நாளிலும் அபரிமிதமாக உறுதி செய்யப்பட்டுவிடும்; புனிதமான நினைவுகளின் ஈர்ப்புதானே  அந்த துணிவுள்ள ஆத்மாவை இப்படி தளர்ந்துபோகச் செய்துவிட்டது? 

மர்லாக் ஒருநாள் காட்டின் தூரப் பகுதியில் வேட்டையாடிவிட்டு வீடு திரும்பியபோது, அவன் மனைவி காய்ச்சல் மற்றும் ஜன்னி வந்து செயலிழந்து மிகவும் களைப்பாகப் படுத்துக் கிடப்பதைப்  பார்த்தான். வெகு தொலைவில்தான்  மருத்துவர் இருந்தார்; அக்கம் பக்கம் எவருமில்லை;  உதவிக்கு யாரையாவது அழைத்துவரப் போவதென்றாலும் அவளை இந்த நிலையில் தனியே விட்டுப்போக முடியாது. எனவே அவளுடைய நல மீட்புப் பணிகளைத் தாமே மேற்கொள்ள ஆரம்பித்தான். ஆனால், மூன்றாவது நாள் முடியும் தருவாயில் உணர்விழந்த நிலைக்குப் போய்விட்டாள்; இறந்து போய்விட்டதாகவே காணப்பட்டாள், பிரக்ஞை  திரும்புகிற சிறு மினுங்கல் ஏதுமின்றி.

அவனைப்போன்ற இயல்பினரை நாம் அறிந்து வைத்துள்ளதன்படி,  என் தாத்தா வரைந்த கோட்டோவியத்தில் சில உள்விவரங்களை வரையத் துணியலாம். அவள் இறந்துவிட்டாள் என்பதை நம்பகமாக உணர்ந்த மர்லாக்,  இறந்தவர்கள் புதைக்கத் தயார் செய்யப்பட வேண்டும் என்ற கருத்தையும் நினைவில் இருத்தியிருந்தான். இந்த புனிதக் கடமைகளை நிறைவேற்றுகையில் அடிக்கடிப் பிசகினான், சிலவற்றை தவறாகச் செய்தான், சரியாகச் செய்த பிறவும் அவனால் திரும்பத் திரும்ப செய்யப்பட்டன. சில எளிய வழக்கமான செயல்களை முடிப்பதில் அவ்வப்போது ஏற்படுகின்ற தோல்விகள் அவனைத் திகைப்பில் ஆழ்த்தின — குடிபோதையில் இருக்கும் ஒருவன் வழக்கமான இயற்கை விதிகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கப்பட்டிருப்பதாக நினைத்து வியப்படைவதைப் போன்று. அவனுக்கு ஏன் அழுகை வரவில்லை என்றும் வியப்படைந்தான். வியப்பு மட்டுமன்று, கொஞ்சம் வெட்கமும் அடைந்தான் ; நிச்சயமாக இறந்தவருக்காக அழாமலிருப்பது இரக்கமற்ற கொடிய செயல். “நாளைக்கு நான் சவப்பெட்டியைத் தயாரிக்க வேண்டும்; அத்துடன் சவக் குழியும் தோண்ட வேண்டும்; அப்புறம் அவள் இனி கண்ணில் படமாட்டாள் என்று ஆகிவிட்டபோது நான் அவள் பிரிவால் துயருறுவேன். ஆனால் இப்பொழுது — அவள் இறந்துவிட்டாள், உண்மையாகவே, ஆனால் இது முற்றிலும் சரி — முற்றிலும் சரியாகத்தான் இருக்கவேண்டும், எப்படியோ விஷயங்கள்  இப்போது எனக்குத் தோன்றும் அளவுக்கு மோசமாக இருக்கமுடியாது.”என்று உரத்த  குரலில் தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்.

மங்கிய வெளிச்சத்தில் சவத்தின் அருகே நின்றவாறு அதற்குத்  தலைசீவி, முகம் கழுவி, எளிய முகப் பூச்சால் பொலிவூட்டி, எல்லா இறுதிக் கட்டச் சடங்குகளையும்  எந்திரத்தனமாக ஆத்மார்த்தமான கவனம் செலுத்தாமல் செய்துமுடித்தான். இருப்பினும், எல்லாம் சரியாக நடந்தது ; அவள் என்னிடம் கட்டாயம் திரும்பி வந்துவிடுவாள்; ஒவ்வொன்றுக்கும் விளக்கம் கிடைத்துவிடும்; என்றெல்லாம் அவன் பிரக்ஞை வழியே ஒரு மெல்லிய திட நம்பிக்கை உணர்வு இழையோடியது. இதுவரை அவன் ஆழ்ந்த துக்க அனுபவம் பெற்றிருந்ததில்லை; பழக்கமின்மையால் உணர்வுகள் பெருகவில்லை. எல்லாவற்றையும் அவன் இதயத்தால் அடக்கிக்கொள்ள முடியவில்லை. அவன் கற்பனையும் சரியாக உள்வாங்க உதவவில்லை. தான் எதையுமே யோசிக்க முடியாமல் மனத்தடை கொண்டிருப்பது அவனுக்குத் தெரியவில்லை; அந்த அறிவு பின்னால்தான் வரும், அப்புறம் ஒருபோதும் நீங்காது. துக்கம் ஓர் ஆற்றல்மிகு இசைக் கலைஞன் — இறந்து கிடப்பவருக்காக வெவ்வேறு இசைக் கருவிகளை மீட்டிப்  பல்வேறு சோக ராகங்களை இயற்றுகிறது, அது சிலவற்றிலிருந்து கூரிய கிரீச்சிடும் சுரங்களை வருவித்தும்  பிறவற்றிலிருந்து தீனமான கடுமையான சுரங்களை வெளிப்படுத்தியும்  எழுப்பும்  இசை திரும்பத் திரும்ப வந்து வருந்தி நிற்போரைப் பதறவிடும் — மெலிதாக சீரான தாளகதியில் வரும் தூரத்து மேள ஓசைபோல். சிலரைத் திடுக்கிடச்செய்யும். சிலரை வாயடைத்துப் போகச்செய்யும். ஒருவருக்கு  ஆர்வம் மிகுந்த வாழ்வில் அம்பு பாய்ந்தது போன்ற வலியை உண்டாக்கும். மற்றவருக்குக் குண்டாந்தடியால் அடிபட்டு உணர்விழந்து போனது போலிருக்கும். மர்லாக்கையும்  பாதிக்கப்பட்டவனாகவே கருதலாம், ஏனெனில் (இதற்கு நாம் நிச்சயமான ஆதாரங்களை வைத்திருக்கிறோம்; வெறும் ஊகங்களை அல்ல) தன் இறையுணர்வுமிக்க பணிகளை முடித்த உடனே,  சவம் வைக்கப்பட்டிருந்த மேஜைக்குப் பக்கத்தில் இருந்த நாற்காலியில் சரிந்து  அமர்ந்து, முழுமையடைந்துவரும் அரை இருட்டில் அவளின் பக்கத் தோற்றம் மேலும் வெண்மையாகத்  தெரிவதைக் கவனித்தவாறு, இதுவரை கண்ணீர் வராத நிலையில் சொல்லொணாக்  களைப்புடன் மேஜை விளிம்பில் கைகளைப்போட்டு இடையில் தலையைக் கவிழ்த்தான். அக்கணத்தில் ஜன்னல் வழியே ஒரு நீண்ட புலம்பல் ஒலி வந்தது. இருண்டு வரும் காட்டின் ஆழ்ந்த நடுப்பகுதியில் எங்கேயோ தொலைந்துபோன குழந்தையின் குரல் போன்றிருந்தது அது. ஆனால், அவன் அசைந்து கொடுக்கவில்லை. மீண்டும் முன்பைவிட அருகாமையிலிருந்து அந்த விபரீதமான அழுகை அவனுடைய  குன்றிவரும் புலன்களில் விழுந்தது. ஒருவேளை அது வனவிலங்காக இருக்கலாம். அவன் கனவு  கண்டிருக்கலாம்,  ஏனெனில் அந்த நொடிப்பொழுதில் மர்லாக் தூங்கிவிட்டான்.

சில மணி நேரம் கழித்து, பின்னர் வெளிப்பட்ட விவரங்களின்படி இந்த விசுவாசமில்லாத காவலாளி விழித்துக்கொண்டு கைகளின்மேல் கவிந்திருந்த தலையை உயர்த்தி ஊன்றிக்  கவனமாகக்  கேட்டான் — ஏன் என்று அவனுக்கே தெரியவில்லை. சவத்தின் பக்கத்துக்  கருத்த இருட்டினுள்ளிருந்துகொண்டு, அதிர்ச்சியுறாமல் எல்லாவற்றையும் நினைவூட்டிக்கொண்டு, மிகை முயற்சியால் கண்களை வருத்திக்கொண்டு பார்த்தான் — எதைப் பார்த்தான் என்பதும் அவனுக்குத் தெரியவில்லை. அவன் புலன்கள்  அனைத்தும் எச்சரிக்கை அடைந்தன; மூச்சு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது; நிசப்தத்துக்கு உதவும் வகையில் இரத்த ஓட்டம் அதன் உயர்வுகளைச் சாந்தமாக்கியது எனத் தோன்றியது.  யார் — எது அவனை எழுப்பியது மற்றும் எங்கே இருந்தது அது? 

திடீரென்று அவன் கைகளுக்குக் கீழே மேஜை அதிர்ந்தது. அதே நொடியில் அவன் இலேசான மெதுவான காலடிச் சத்தம் மற்றும் தரையில் வெறும்கால்கள் நடக்கும் சத்தம் — இவற்றைக் கேட்டான் அல்லது கேட்டதாகக் கற்பனை செய்திருந்தான்.

அவன் கத்தவோ நகரவோ வலுவிழந்துபோகும் அளவுக்கும் வெருண்டு போயிருந்தான். இருளில், பல நூற்றாண்டுகளாய்த் தொடர்ந்து கொண்டிருப்பதாகத் தோன்றும் அச்சத்தினூடே  (யாரும் அறிந்திருந்து அதன் பின்னர் அதைச்  சொல்ல வாழ்ந்திருக்க முடியாத மாதிரியான அச்சம்) அவன் கட்டாயமாகக் காத்திருந்தான். வீணாக இறந்த மனைவியின் பெயரைச் சொல்லி அழைக்க முயற்சிசெய்தும், மேஜைக்குக் குறுக்கே கைகளை நீட்டி அவள் அங்கே இருக்கிறாளா என்று அறிய முயற்சிசெய்தும் தோற்றான். அவன் தொண்டை ஆற்றல் இழந்தும் அவன் கைகள் காரீயம்போல் கனத்தும் இருந்தன. பின்னர் மிகப் பயங்கரமான ஒன்று நிகழ்ந்தது. ஒரு கனத்த உருவம் மேஜையின்மீது வீசி எறியப்பட்டதுபோல் தோன்றியது; அதன் உந்து விசை அவன் மார்பை கூர்மையாய்த் தாக்கிக் கிட்டத்தட்ட நிலைகுலைய வைத்தது; அதே நொடியில் தரையில் ஏதோ ஒன்று மிக அதிக உக்கிரமாக விழுந்ததை அவன் கேட்டும் உணர்ந்தும் இருந்தான்; அதன் தாக்கம்  வீட்டையே குலுக்கியது. ஒரு கைகலப்பு தொடர்ந்தது; மற்றும் விவரிக்க முடியாத குழப்பமான சப்தங்களும் தொடர்ந்தன. மர்லாக் எழுந்து நின்றான். மிகுதியான அச்சத்தால் புலன்களின் கட்டுப்பாட்டை முற்றிலும் இழந்திருந்தான். மேஜையின்மேல் தன் கைகளை வீசித் தேடினான். அங்கே எதுவும் இல்லை. 

ஏதோ ஒரு புள்ளியில் திகில் பைத்திய நிலைக்கு மாறிவிடுகிறது; பைத்திய நிலை நடவடிக்கைக்குத்  தூண்டுகிறது. நிச்சயமான குறிக்கோள் ஏதுமில்லாமல், எந்த உத்தேசமும் இல்லாமல்  ஒரு பைத்தியக்காரனின் தாறுமாறான உத்வேகத்தால் உந்தப்பட்டு, மர்லாக் சுவருக்குப் பாய்ந்து இருட்டில் சிறு தேடலுக்குப்பிறகு தன் தோட்டா ஏற்றப்பட்ட துப்பாக்கியைக் கையில் பற்றி இலக்கில்லாமல் தோட்டாக்களை வெளியேற்றினான். அப்போது வெளிப்பட்ட தெளிவான ஒளித்தெறிப்பில், ஒரு மிகப் பெரிய சிறுத்தைப் புலி இறந்த பெண்ணின் கழுத்தில் பற்களைப் பதித்து உடலை  ஜன்னல் நோக்கி இழுத்துச் செல்வதைக் கண்டான்! பின்னர் இருள் முன்பைவிடக் கூடுதலாகி இருந்தது. அவனுக்கு நினைவு திரும்பியபோது, சூரியன் உயரத்துக்கு வந்துவிட்டது, பறவைகளின் கானம் நிறைந்த குரலில் கானகம் ஒலித்துக்கொண்டிருந்தது. 

உடல் ஜன்னல் அருகே கிடந்தது, ஒளித்  தெறிப்பினாலும் துப்பாக்கி வெடிப்பு ஒலியினாலும் பயந்துபோன மிருகம் உடலை அங்கே விட்டுவிட்டுப் போயிருந்தது. அதன் உடுப்பு தாறுமாறாகி இருந்தது, நீண்ட கூந்தல் ஒழுங்கு குலைந்திருந்தது, கைகால்கள் எப்படியெப்படியோ கிடந்தன. பயங்கரமாகக்  கிழிக்கப்பட்ட தொண்டையிலிருந்து வந்த ரத்தம் முழுதும் திரளாமல் குட்டையாகத் தேங்கியிருந்தது. மணிக்கட்டுகளைச் சேர்த்து அவன் கட்டியிருந்த ரிப்பன் அறுந்து கிடந்தது; கை விரல்கள் இறுக மூடியிருந்தன. கிட்டியிருந்த பற்களுக்கிடையில் மிருகத்தின் காதுத் துணுக்கு சிக்கியிருந்தது.

கதை அறிமுகம்

ஆசிரியர் 1891-ல் எழுதிய திகில் சிறுகதை. அவர் குடும்பம் 1846-வரை  வசித்திருந்த ஓஹியோ பகுதியைக் கதையின் பின்புலமாக்கி எழுதியிருக்கிறார். திரவியம் தேடி மேற்கு அமெரிக்காவுக்குப் போகாமல் கிழக்கிலேயே தங்கிவிட்ட ஒருவனது வாழ்க்கையின் சோகமும் திகிலும் இதில் விவரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கக் கல்விப் புலத்தின் இலக்கியப் பாடத்திட்டத்தில் இக்கதை சேர்க்கப்பட்டுள்ளதால் தனிக் கவனம் பெற்றுள்ளது. இதன் கதைக் கருவை தமிழ் எழுத்தாளர் அசோகமித்திரன் தன் சிறுகதையில் பயன்படுத்தியுள்ளார்.

ஆசிரியர் குறிப்பு

அம்ப்ரோஸ் பியர்ஸ் (Ambrose Bierce) (1842-1914)

இவர் ஓர் அமெரிக்கச் சிறுகதை எழுத்தாளர், இதழாளர், கவிஞர் மற்றும் உள்நாட்டுப் போர் முதுவர். இவர் எழுதிய An Occurance at Owl Creek Bridge என்ற சிறுகதை மிக அதிகமான சிறுகதைத்  தொகுப்புகளில் சேர்க்கப்பட்ட  முக்கிய கதை என்கிற பெருமையுடையது.

பின்குறிப்பு: முழுதும் படித்தபின் கதையின் முடிவு குறித்துப் பல கேள்விகள் எழலாம் . அமெரிக்க இலக்கியப் பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டதன் பயனாக இக்கதையின் விரிவான ஆய்வுக் கட்டுரைகளும் வழிகாட்டிகளும் இணையத்தில் கிடைக்கின்றன. கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டி, Bridget M Marshall தயாரித்துள்ள வழிகாட்டிக்கு இட்டுச்செல்லும்.

The Boarded Window is one of the best regarded of Bierce’s stories. For teachers and students, here is a close reading guide by Bridget M. Marshall: Teaching ‘The Boarded Window’

“There is a point at which terror may turn to madness; and madness incites to action.”

மூலக் கதையின் சுட்டி :

https://americanliterature.com/author/ambrose-bierce/short-story/the-boarded-window

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.