நேர்த்திக் கடன்


ம்ம்…ம்ம்…. சீக்கிரம்,. சீக்கிரம் ஆகட்டும். எல்லாத்தையும் மறக்காம எடுத்து வச்சிக்க. அங்க வந்துட்டு அது இல்ல இது நொள்ளங்கக் கூடாது.…ஏதும் வாங்க அக்கம் பக்கம் ஒரு கடை கண்ணியும் கூட கிடையாது …அங்கு… ம்ம். சுருக்கா… வண்டிக்காரன் வந்திடுவான் பாரு…பரபரத்துக் கொண்டிருந்தார், செல்லப்பா.

டேய் …இங்க வந்து இந்த டவுசரை மாட்டிக்கோயேன்டா, சனியன் என் தொண்டத் தண்ணிய வாங்குது பாரு, அம்மணக் குஞ்சியைப் பிடித்தபடி பகடி காட்டியக் கடைக்குட்டித் தம்பியோடு போராடினாள் தங்கம். பேருக்கு ஏத்த மாதிரி அவ தங்கம் தான். அடுத்தவங்க சந்தோஷத்தை தன் சந்தோஷமாக பாவிக்கும் மனது அவளுக்கு வாய்த்திருந்தது. அதேபோல ஊர்ல யாருக்கும் ஏதாச்சும் ஆச்சுன்னா அவதான் முதல்ல உடைந்து அழுவாள். அப்படி மனசு! முணுக்குன்னா எப்படி நமக்கு அழுவ வருதுனு அவளுக்கே கூட ஆச்சரியம் தான்!
ஹாவ்.. ஹாவ்… ஹாவ்..…
யேய்… வண்டி வந்துட்டு பாரு. இன்னும் என்னடீ உள்ள ஆடம்பரம் பண்ற…வாசலில் நின்று கொண்டு வீட்டுள்ளே குரல் அனுப்பினார் செல்லப்பா.

மூத்தவன் மணியும் அவன் தங்கை லட்சுமியும் புது ட்ரெஸ் போட்டு தயாராக இருந்தனர். எங்கு என்பதெல்லாம் அவர்களுக்கு தெரியாது. மாட்டு வண்டியில் போறோம்னு தங்கம் சொன்னதும் கிடு கிடுவென புது டிரஸ் போட்டுக்கிட்டு ரெண்டும் தயாராகியது.

ஒற்றை மாடு பூட்டிய ரெண்டு வண்டிகள் சந்தானத்தின் வீட்டு வாசலில் வந்து நின்றன. அவற்றில் ஒன்று புதிய வண்டி அதில் பூட்டப்பட்ட மாட்டின் பெரிய கொம்புகளில் சிவப்பு வண்ணம் தீட்ட பட்டிருந்தது. அடிவயிற்றில் மொய்க்கும் ஈக்களை விரட்ட பின்னங்காலை உதைத்து கொண்டே இருந்தது.

கூன் விழுந்த முதுகோடு வெத்து உடம்பாய் இருந்தார் வண்டிக்கார தாத்தா. தலையில் உருமா கட்டியிருந்தார். வெள்ளி போன்ற மீசையும் தாடியும் அவர் முகத்தில் குத்தி குத்தி நின்றன.

தாத்தா… இந்த மாட்டுக்கு பெயர் என்ன?

தாத்தா… மாடு என்ன சாப்பிடும்?

தாத்தா …மாடு ஏன் மென்னு கிட்டே இருக்கு?

தாத்தா… மாடு முதுகில் சர் சர் னு என்ன ஓடுது?

தாத்தா… மாட்ட நீங்க அடிப்பீங்களா?

தாத்தா…மாட்டுக்கு கழுத்து வலிக்குமா?

தாத்தா…வெயில்ல நடந்தா அதுக்கு காலு சுடாதா?

… மணி வண்டிக்காரத் தாத்தாவுடன் எதை எதையோ கேட்டுக்கொண்டிருந்தான்.

வண்டிக்காரர் பொக்கை வாயால் சிரித்து கொண்டே எதை எதையோ சொல்லிக் கொண்டிருந்தார். இடை இடையே ‘ஹாவ்’ …’ஹாவ்’…’ஹாவ்’ என்று சத்தமிட்டபடி. அவரின் கைகளில் இருந்த கயிறு எட்டு வைக்கும் மாட்டை இழுத்து பிடித்துக் கொண்டிருந்தது.

அதற்குள்ளே மற்ற வண்டியில் பெத்தம்மா, அக்கா, அப்பயி எல்லோரும் உட்கார்ந்திருந்தார்கள். ஹை ஹை னு வண்டிக்காரர் சத்தமிட தொர்ரென்று மூத்திரம் பெய்து கொண்டே வண்டியை இழுத்தது மாடு. மணல் வெளியில் பாம்பு ஊர்ந்த தடம் போல வளைந்து நெளிந்து மாடு மூத்திரம் பெய்தது ஆச்சரியமாக இருந்தது மணிக்கு.

டேய்…மணி… வாடா நம்ம மாட்டு வண்டிக்கு முன்னாடி சுருக்கா போயிடலாம், சைக்கிளில் தயாராக இருந்தான் சந்தானத்தின் பெரிய மகன் கொளஞ்சி.

நீ போண்ணே…நான் வரல …மணி மாட்டை பார்த்துக் கொண்டே பதில் சொன்னான். மணி வராத வருத்தத்தில் சைக்கிள் கிரிச் கிரிச் னு முக்கிக்க் கொண்டே நகர்ந்தது.

முன்னாடி போகும் வண்டியில் கை காட்டிக்கொண்டே அவர்கள் போவதை பார்த்து திடீரென சாலையில் அழுது புரண்டான் மணி. அவன் புது ட்ரெஸ்ல், இப்போது தான் மாடு பெய்து விட்டு போன மூத்திரமும், சாலை மண்ணும் ஒட்டியிருந்தது.

டேய்…ரோட்டுல உழுந்து புரண்டு, புது ட்ரெஸ் அ அழுக்காக்கி கொள்ளுது பாரு, சனியன்… சனியன். எந்திரி டா… முண்ட்டாட்டிய…. னு எப்போதும் சொல்லும் கெட்ட வார்த்தையோடு செல்லப்பா அடிக்காத குறையா கத்தினாரு.

பிள்ள பெத்து இருக்காளம்…பிள்ள… இன்னும் இவ என்ன பண்ணிக்கிட்டு இருக்கா உள்ளே னு தங்கத்தின் மேல திரும்பினார் அவர்.

வியர்த்து விறுவிறுத்து கட்டியிருந்த புடவை கட்டெல்லாம் கலைந்திருந்தது தங்கத்துக்கு. கட்டவிழ்ந்த கேசம் காற்றில் மிதந்தது. அவள் போராடி அணிவித்த டவுசர் சட்டையில் கடைக் குட்டி தம்பி ஜம்மென்று இருந்தான்.

இன்னும் அழுகை விட்டபாடில்லை. எவ்ளோ சமாதானம் செய்தும் ஓயவில்லை. செருமிக் கொண்டே இருந்தான் மணி.
டேய் …டேய்… பயலே, பாரு …தம்பி தங்கச்சி எவ்ளோ சமத்தா இருக்காங்க பாரு. பெரிய புள்ள இல்ல நீ என் யப்பாவ்…சரி டா சரி டா னு கொஞ்சிக் கொண்டிருந்தாள் தங்கம்.
ஊஹூம். அவன் நிறுத்துவது மாதிரி தெரியவில்லை.

பாரு…பாரு… நாம மாட்டு வண்டியில போக போறோம். புது வண்டி. குஞ்சம் கட்டியிருக்கு பாரு… மாட பாரு எவ்ளோ பெருசு… கொம்ப பாரேன் அதுக்கு சிவப்பா இருக்கு… என்னென்னவோ சொல்லியாகி விட்டது.
ஊஹூம். அவன் நிறுத்துவது மாதிரி தெரியவில்லை. ஒரே சுதியில் அழுதுக் கொண்டிருந்தான்.
எதுக்கு தான் டா அழுவுற…சனியனே… என்னதா வேணும்… சொல்லேன்… சொல்லி தொலையேன்… சனியன் சனியன். பொறுமை இழந்திருந்தாள் அவள்.

அம்…….ம்ம்….ம்மா…அம்…மா…பெத்தம்……மா…. பெத்தம்மா….. வாய திறந்தான் மணி. பெத்தம்மா கூட போகணும்…. ஊ….ம்ம்…
டேய்… ய்ய… கொளஞ்சி……அடேய்.. ! பயலின் ஒட்டாரத்தை பார்த்த செல்லப்பா தொண்டை வறண்டு, வாய் கிழிந்தார்.
தெரு முனையை அடைந்த வண்டியை நிறுத்தி, பெத்தம்மா இறக்கிவிடப்பட்டிருந்தாள். இறங்கி வந்த அவளை ஓடி அனைத்து அவளின் கொசுவ சொருகில் உள்ளங்கையை விட்டுக் கொண்டு தேம்பினான் மணி.

ஓண்டாம் டா ஓண்டாம்… அப்பாவே… சரி …சரி…அம்மா வந்துட்டேன்ல…நம்ம ஒண்ணா போவுமா… அழுத்தி அழுத்தி அவன் கன்னங்களை துடைத்து விட்டாள் பெத்தம்மா.
இத்தனை அலங்க மலங்கலில், அவர்கள் எல்லோரும் குலசாமி கோயிலுக்கு பாதி நேர்த்தி செலுத்த போய்க் கொண்டிருந்தனர். பிள்ளைகளுக்கு மொட்டை போட்டு, காது குத்தி, மாவிளக்கு ஏற்றி, சோறாக்கி போடுவது என்பது தான் நேர்த்தி. ஆனால் காது குத்துவதை மட்டும் தள்ளி வைத்துவிட்டு மிச்சத்தை செய்து விட தான் அவர்கள் போய்க் கொண்டிருந்தார்கள். அப்போ அது பாதி நேர்த்தி தானே!

மாடு மூத்திரம் பெய்தது. வண்டி முன்னே குலுங்கியது.
யெய்யா… நல்ல கனிஞ்ச பழமா ஒரு சீப்பு குடு. அப்படியே வெத்தலை பாக்கு மடிச்சிக்க. உதிரி கொஞ்சம் கட்டு.. கதம்ப பந்து ரெண்டு வச்சிக்க….கனகாம்பரம் கொஞ்சமா தனியா குடு…வீட்டாளுக்கு! சாடையாக ஒரு கண்ணை அடித்து கொண்டே தொடர்ந்தார்.

இது என்ன….மல்லின்னா ஒரு பந்து எடுத்து வையி. தாயிலி!.. காக்ரட்டான மல்லினு குடுத்து ஏமாத்திப்புட்டான் அந்த செல்வராஜி பய..வீட்டுலே ஒரே பேச்சி!என்று லேசாக பூக்கடை ஹஸீன் பாயை சீண்டினார் சந்தானம்.
என்ன ….ஆயிங்.க.. நம்ம பழக்கம். எவ்ளோ நாள் பழக்கம். நம்ம பழக்கம்.…உம்மகிட்ட நான் அப்பிடி செய்வேனா…ஆயிங்க… உம்மை தான் சுலுவா ஏமாத்தி பிடலாமே. ஏன் கஷ்டப்பட்டு கிட்டு…உம்மகிட்ட பப்பாளி பூவ கொடுத்தாலே நீரு மல்லி ம்பெ. காக்ரட்டான குடுத்தா என்ன பண்ணுவீரு….நம்மள்கிட்டே குடுத்து வாங்குது பாரு…. அத்தா.. ஹஸீன் பாய் வெடித்து சிரித்தார்.

ஆயிங்க.. என்ன விசேஷம். பூ, பழம், பாக்கு னு காலையிலேயே…சந்தேகத்தை கேள்வியாக வைத்தார், ஹஸீன் பாய்.
அட அது வேற ஒன்னுமில்லத்தா. நம்ம சின்னவன் பசங்களுக்கு முடி கொடுக்க போகுது குலதெய்வத்துக்கு. அவன் கல்யாணத்துக்கு வேண்டிகிட்டது. அந்த பயலுக்கு தான் கல்யாணத்துக்கு என்ன பாடுன்னு உமக்கு தெரியாதா?…கல்யாணம் முடிஞ்சா முத பிள்ளையோடு மொட்டை போட்டு காது குத்துறேன், அத உன் முன்னாடி செய்யுறேன்னு கிழவி வேண்டிக்கிடுச்சாம். அப்போ இப்போன்னு ஏழு வருஷம் ஆகிப்போச்சு. அவனுக்கும் ஒன்னுக்கு மூனு பிள்ளைகளாச்சி.
காதும் குத்துணும்ங்கிறதுதான் நேர்த்தி. என்ன செய்ய. இப்போதைக்கு முடி மட்டும் போதும்.பிறகு காசு சேர்த்து காது குத்திக்கு சொல்லி பேசி செஞ்சிடலாம்னு சின்னவன் சொல்றான்.

நாயம் தானே?

பாவம் தெய்வ கொறையா என்னன்னு தெரியல, அதுங்க உடம்பு தேரவே மாட்டுது. ஒன்னு பின்னாடி ஒன்னு எதுனா வந்திடுது. அதுக்கு தான். … இந்தாயும்…காசு, சைக்கிளை மிதித்தார் சந்தானம்.
ஆயிங்க, இரிங்க..மடியில் கிடந்த உதிர்ந்த பூக்கள் சிதற எழுந்தார் ஹஸீன் பாய். இந்தாரும்… இதையும் அம்மாளுக்கு சாத்தும் ஆயிங்க, சீக்கிரம் பிள்ளைக உடம்பு தேரி வரட்டும், என்று சொல்லி ஒரு கதம்ப பந்தை தந்தார். கதம்ப பூ பந்து கூடுதலாக மணம் வீசுவது போல இருந்தது சந்தானத்துக்கு.

சந்தானம் -ஹஸீன் பாய் நட்பு, கடை தெருவில் ரொம்ப பிரசித்தம்.பால்ய ஸ்நேகம். ஹஸீன் பாய் அப்போ தான் கடைத்தெருவை ஒட்டிய மசூதி தெருவுக்கு குடி வந்திருந்தார். இள வயது சந்தானம் நான்கு பட்டறைகளை போட்டு கொண்டு வேலை பார்த்த சமயம். சந்தானத்துக்கு குனிந்து நிமிர கூட நேரம் இருக்காது. மூத்திரம் பெய்ய கூட போகாமல் பட்டறையிலே கட்டையை போட்டு உட்கார்ந்திருப்பார். பட்டறை பசங்க எழுந்து வெளியே போகும்போதோ இல்ல அங்கே இங்கே அசஞ்சாலும் அவருக்கு தெரிந்து விடும். மனுஷன் சல்லடை போட்டு அலசுவது போல கண்களாலே துழாவுவார். அவரின் ஒளி கண்களை தாண்டி குண்டுமணி பவுன் என்ன குப்பமண்ணு கூட வெளியே போகாது.

வேறென்ன செய்ய! இடம் அப்படி! தொழில் அப்படி! யோக்கியனையும் இந்த பவுனு, இருக்கு பாரு, பவுனு காசு பணத்துக்கு மயங்கி போகும் அயோக்கியன் ஆக்கிவிடும் டா…தம்பி…பாத்துக்க. பெத்த பிள்ளையாக இருந்தாலும் பட்டறையிலே சந்தேகிக்க வேணும்டான்னு அடிக்கடி சொல்லி கொள்வார்.

அப்படி தான் ஒரு வெயில் நாளில் ஹஸீன் பாய் வீட்டம்மா காலில் அணிந்திருந்த கொலுசு கழந்தது கூட தெரியாம சந்தானம் பட்டறையை கடந்து கடை தெருவில் நடந்து சென்றது.

யம்மா…யம்மா… சந்தானத்தின் சத்தம் பாயம்மா காதுகளுக்கு எட்டவில்லை. டேய் தம்பி…யாரது… புது மனுசாலா இருக்கு, கால் கொலுசு களண்டது கூட தெரியாம போகுது… பட்டறை பையனிடம் விசாரித்தார் சந்தானம்.
ட்டங்.. ட்டங்…பட்டறையில் உறையும் சுத்தியல் சத்தம்…..
உன்ன தாண்டா கேக்குறேன்…வல்லாரை…ஓளி …கடை பையனை செல்லம் கொஞ்சினார்.

…….டங்.. டங்.. ட்டங்.. பட்டறையில் உறையும் சுத்தியல் சத்தம்.
ம்ம் ஹம்.…வெயிலில் மின்னிய கொலுசை எடுக்க முக்கிக்கொண்டே எழுந்தார். மஞ்சளாக இருந்தது. அது!
ஏண்ணே! பாய்மாருங்க தங்கத்துல கொலுசு போடுவாங்களா!என்ன! ஆச்சரியமாய் கேட்டான் பட்டறை பையன்.

……..


தலையை மேலும் கீழுமாக அசைத்து கண்கள் சுருங்கி விரிய உற்று துருவி ஊடுருவினார். அடி தேய்ந்து அறுந்திருந்தது அது. வெள்ளி பொடி வச்சி வெங்காரம் கட்டி உரசி சன்னமாக காற்று கொடுத்து பத்தவச்சி சரி பண்ணினார். ஒரு கண்ணை தெரு சாலையிலும் மறு கண்ணை பட்டறைக்குள்ளும் வைத்திருந்த அவரின் கவனத்தை அத்தர் மணம் கலைத்தது!

நெம்ப நன்னி ண்ணே! நெம்ப நன்னி! ஏதோ ஞாபகத்தில் தவறவிட்டுட்டேன் போல. நல்ல வேலையாக உங்க கண்ணுக்கு அகபட்டுச்சி…..பாயம்மா.

அன்றிலிருந்து அண்ணே அண்ணே னு தான் பாயம்மா சந்தானத்தை வாஞ்சையாக கூப்பிடும். நோம்பு கஞ்சி, நெய் சோறு, யானம் னு எது செஞ்சாலும் சந்தானம் பட்டறைக்கு டான்னு வந்து சேரும். பாயம்மா வீட்டு பவுனு எல்லாம், நகையானது சந்தானம் கைப்பட்டு தான். இப்படியாக தான் சந்தானம் ஹஸீன் பாய் நட்பு வளர்ந்தது.

அது ஒரு பெரிய கதை. அப்போ செல்லப்பாவிற்கு நுப்பது வயதுக்குள்ளார இருக்கும். பெருசா சொல்லிக் கொள்கிற மாதிரி வேலையும் இல்லை. எங்கையவது பொண்ணு இருக்கிறதா ஏதாவது தாக்கல் வந்தா போதும் செல்லப்பாவும் கிழவியும் டவுன் வண்டி பிடிச்சிடுவாங்க. அக்கம் பக்கத்தில் அவர்கள் போகாத ஊர் இல்லை. பாக்காத பொண்ணு இல்லை. எந்த வரணும் அமையல. ஏதோ தடங்க இருந்தது போல. தள்ளி தள்ளி போனது. நிதம் நிதம் பொண்ணு பார்க்கும் படலம் நிகழ்ந்தேறி கொண்டேயிருந்தது அவர்கள் வீட்டில்.

செல்லப்பா அதற்காகவே பிரத்யேகமாக சிமெண்ட் நிறத்தில் ஒரு பெல் பாட்டம் பேண்ட்டும் நீளத்தில் வெள்ளை கோடுப் போட்ட பெரிய காலர் சட்டையும் வைத்திருந்தார். மற்றபடி பட்டறைக்கு போகும்போதெல்லாம் பல நாள் உடுத்திய வேட்டியும், அக்குள் பக்கம் தையல் பிரிந்த அரை கை சட்டையும் தான் அவர் உடுப்பு.

நல்ல வெளுப்பு னு சொல்வது போல செல்லப்பா நல்ல கருப்பு. நெடிய வெடு வெடுத்த உடல். சுட்டுவிரலை பக்கவாட்டில் பாதியாக அறுத்து வைத்தாற்போல புருவங்கள், சிவந்த கண்கள், மேலுதடு தெரியும்படி சன்னமாக சவரம் செய்து கொண்ட கரு கரு தொங்கு மீசை. அவர் மீது எப்போதும் பவுடர் வாசம் வீசிக்கொண்டே இருக்கும். குழாயில் வரும் நல்ல தண்ணியைகூட வடிகட்டி தான் குளிப்பார். அவ்ளோ நரிவிசு!

ஆத்தா….. உன் பிள்ளைக்கு நீதான் நல்ல வழிய காட்டனும் …சாமீ…அவனுக்கு கல்யாண முடிஞ்சா குடும்பத்தோடு வந்து உன் முன்னேலேயே அவன் தல பிள்ளைக்கு மொட்ட போட்டு காது குத்தி, மாவிளக்கு ஏத்தி, சோறாக்கி போடுறேண்டி…ஆத்தா… னு சூடம் ஏத்தி வச்சி சேம்பரம் ஜோசியக்காரன் சொன்னது மாதிரியே வேண்டிகிச்சி கிழவி.
பலன். கல்யாணம் முடிஞ்சி இப்போ ரெண்டு மாசம் முடிந்திருந்தது.
இதுக்கு மூனு மாசம் முன்னே தான் செல்லப்பாவிற்கு அரசு அலுவலகத்தில் அட்டெண்டன்ட் உத்தியோகம் கிடைத்திருந்தது. மாசம் எழுபத்தைந்து ரூ…..பா…..சம்பளம்!

ஆனால் கிழவி மட்டும் உறுதியாக நம்பினாள், சேம்பரம் ஜோசியகாரன் ஏத்தி வைக்க சொன்ன சூடத்தினால் தான் செல்லப்பாவிற்கு மணம் முடிந்தது என்று!
எது எப்படியோ செல்லப்பாவிற்கு ஒருவழியாக கல்யாணம் முடிந்துவிட்டது!

ஹேய்… ஹேய்… மாட்டின் வேகத்தை மட்டு படித்தியபடியே இயக்கினார் வண்டிக்கார தாத்தா. அவரின் அணுக்கத்தில் உட்கார்ந்து இருந்தான் மணி. பின்னங்கால்களில் பட்டு பக்கவாட்டில் அங்கும் இங்கும் அசையும் மாட்டின் வாலுக்கு ஏற்ப ஜல் ஜல் லென சிணுங்கும் சலங்கை மணியோசை லயமாக பொருந்தியது. அது அவன் அக்காவின் ஜடை குஞ்சம் போல் தோன்றியது அவனுக்கு. வைக்கோல் பிரிகள் அவன் டவுசருக்குள் கிச்சு கிச்சு மூட்டின. தாத்தாவின் அக்குள் வீச்சமும், மார்பில் குமுழி இருந்த வியர்வை துளியும் அவனுக்கு ஆச்சரியமூட்டின.

கடை தெருவை கடந்து மணி கூண்டில் திரும்பி லாகடத்தை தாண்டி வண்டி போய்க் கொண்டிருந்தது. கரையின் கடைசி படியை தொட்டப்படி ஓடியது காவிரி. சில பெண்கள் மாரோடு ஏற்றி கட்டிய பாவாடையோடு துணிகளை துவைத்து கொண்டிருந்தார்கள். சோப்பு நுரை காரத்திலும், தொப் தொப் வென குதிக்கும் அம்மண பொடியன்களின் விளையாட்டிலும் கலங்கி ஓடினாள் காவிரி.

கீற்றுக் குடிசையில் ஒற்றை அகல் விளக்கில் ஒளிர்ந்துக்கொண்டிருந்தாள் அம்மாள். ஆத்தா… சாமி… எல்லோரையும் நல்லா வையி… த்தா…..சூடம் கொளுத்தி கும்பிட்டார் சந்தானம். குருக்கள் வந்திருக்கவில்லை. சந்தானம் தெரு நாட்டாண்மையுடன் பேசிக்கொண்டிருந்தார். இருவரும் புகையிலையையும் சுண்ணாம்பையும் மாறி மாறி வாயில் போட்ட படியே இருந்தார்கள். தாடை மேலே இழுத்தபடியே பேசிக் கொண்டார்கள் இருவரும்.

தெரு ஜனங்க வாசல் தெளித்து கோலம் போட்டார்கள். மாவிலை தோரணம் கட்டப்பட்டது. மணி ஓங்கி ஓங்கி ஒலித்தது. சாமி வருவதற்குள்ளே எல்லாத்தையும் முடிங்க சீக்கிரம்…ம்மா…தலையை அண்ணாந்து கொண்டு சொன்னார் தெரு நாட்டாண்மை. கோட்டுவாய் போல தாம்பூலம் அவர் வாயின் இருஓரங்களிலும் வழிந்தது.
சைக்கிளில் வந்திருந்த கொளஞ்சி தெருகார விடலைகளுடன் விளையாடி கொண்டிருந்தான். சவரத் தொழிலாளியை அழைத்து வரும்படி சொல்லப்பட்டிருந்தது அவனுக்கு நினைவில் இல்லை.

ஆடிக் குலுங்கி முதல் வண்டி வந்து சேர்ந்தது. சந்தானம் வாங்கி வந்திருந்த உதிரிகள் மாலையாக மாற்றம் அடைந்து கொண்டிருந்தது அக்காக்களின் கைகளில். ஒருத்தி மட்டும் அடிபம்பில் தண்ணீர் நிறைத்து கொண்டிருந்தாள்.

ஏதோ வாங்க வண்டியை விட்டு இறங்கினார் செல்லப்பா. கண்களை முட்டும் தூரத்தில் மஞ்ச சுண்ணம் பூசிய ப்…பெரிய்ய… ய மணிக்கூண்டு, புத்தாடை அணிந்து நின்ற பொம்மைகள், கசகசவென மனிதர்கள் முண்டியடித்து கொண்டிருந்த ஒரு பெரிய டீக்கடை, பழ வண்டிகள், கூடை கிழவிகள், சந்தனம் மணக்கும் பூ கடைகள், வெள்ளை சட்டை போலீசு, பகலிலே மின் விளக்குகளில் பள பள வென ஒளிரும் நகை கடை, காற்றில் கலக்கும் காரைக்குடி ஓட்டல் சாம்பார் மணம், வெண்பஞ்சு மீசையும் தாடியுமாக கருப்பு சட்டை அணிந்த யாரோ வழுக்கைக் கிழவர் படம் ஒட்டியிருந்த ஒரு சின்ன தகர பெட்டி கடை. ரோட்டில் கலைந்து, குவிந்து கிடந்த துணி கடைகள், அவைகள் புதியனவா அல்லவா என்பதை வங்குவர்கள் தீர்மானிப்பார்கள். கம்பி கொடிகளில் ஆடிய கலர் கலரான தொப்பிகள் என்று விஸ்தாரமாக விரிந்து கிடந்தது ஊர் கடை தெருவு. இத்தாம் பெரிய ஊரா நம்மூரு என்பது அவனுக்கு பிரமிப்பாக இருந்தது. அத்தனை பெரிய கடை தெருவில் தொப்பிகள் மீது மட்டும் அவன் கண் இருந்தது. தொப்பிகளை கண் இரைப்பைகள் விம்ம விழுங்கி கொண்டிருந்தான். மனதில் சட்டென ஒரு ஆசை. ஒரு தொப்பி வேணும்! அதோ அந்த தொப்பி தான். கருப்பு கலர்ல. முகப்பில் சதுரமாக பிளைட் வச்சு கண்ணாடி மாதிரி வெயில் பட்டு தெரிக்குதே அது தான். அதே தான்!

திரும்பி செல்லப்பாவை பார்த்தான் மணி. அவர் யாரிடமோ கோபமாக பேசுவது போல இருந்தது. அவர் சாவதானமாகப் பேசினாலும் அந்த நிமிடம் அவனுக்கு அப்படி தான் தோன்றி இருக்கும். மணிக்குப் பயமாக வந்தது! கிளம்பும் போதே எப்படியோ அடி வாங்காம தப்பிச்சாச்சி. இப்போ இதுக்கு கண்டிப்பாக முதுகு தோல் உரிய போகுது…தனக்குள்ளே சொல்லிக்கொண்டான். வண்டி முன்னே நகர்ந்தது. அவன் கண்கள் தொப்பிகளின் மீது குத்தி நின்றன.

நா… மாட்டேன்.. ப்பா…நா மாட்டவே மாட்டேன். நான் மொட்ட போட்டுக்க மாட்டேன். ஸ்கூலில் எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்க…நான் மொட்ட போட்டுக்க மாட்டேன்…கொஞ்ச நேரத்துக்கு முன்னே, தான் சொன்னது நினைவில் வந்தது மணிக்கு.

அப்போது செல்லப்பா சிரித்தார். ஏன் என்று அவனுக்கு தெரியவில்லை. உன் சம்மதத்தை எவன் கேட்டான் என்பதற்கான பொழிப்புரை தான் அந்த களுக் சிரிப்பு என்றெல்லாம் அவனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

நடுங்கும் கைகளை நெற்றியில் குவித்து பார்த்தார் நாவிதர். யாரும் பக்கத்தில் இல்ல னு அவரை அழைத்து வந்திருந்தான் கொளஞ்சி. இன்னும் சற்று நேரத்தில் களம் காணவிருக்கும் அவரின் ஆயுதங்கள் எல்லாம் அவர் மணிக்கட்டில் காதை குடுத்த அந்த மஞ்ச பையில் தூங்கி கொண்டிருந்தன. சில்வர் வட்டாவில் நிரப்பிய தண்ணீரில் சவரக்கத்தியை அவர் நடுங்கி கொண்டே சுத்தம் செய்தார். இடது கட்டை விரலில் கத்தியை உரசி பதம் பார்த்தார். அவரின் கை நடுக்கம் எல்லோருக்கும் அச்சமூட்டுவதாக இருந்தது.

ஏன்யா…பெரியவரே…பாத்து செஞ்சிடுவியா… கை இப்படி உதறுது, உமக்கு. இந்தா இதை வச்சிக்கோ…டீ சாப்பிடு…
நீங்க கிளம்புங்க… நான் பாத்துகிறேன்…காசை நீட்டினார் செல்லப்பா.

தம்பி…வேலைக்கு தான் கூலி வாங்கும் பழக்கம். சும்மானா வேணாம்…ஒரு தலையக் குடுத்து பாரு…அப்புறம் பேசு…உறுதியாக சொன்னார் நாவிதர்.

வீட்டு பெண்கள் அரிசி மாவுடன் வெல்லம் நெய் சேர்த்து மாவிளக்கு செய்தபடியே குருக்களிடம் பேசி கொண்டிருந்தனர். சக்கரை பொங்கலின் நெய் வாசமும், புளியோதரை வாசமும் காற்றில் கலந்து, பக்தர்களை கோவில் நோக்கி வரவழைத்தது. கோவில் மணி ஓசை பெரும் சத்தமாக கேட்டது. பசித்தவனுக்கு சோற்றை விட பெரிய கடவுள் இருக்கிறதா என்ன!

இரண்டு தலைகளை முடித்துவிட்டிருந்தார் நாவிதர். லட்சுமியும் கடைக்குட்டி தம்பியும் தலையில் சந்தனம் பூசி கொண்டு நின்றனர். லட்சுமி மஞ்சள் சட்டையில் சந்தனம் ஒழுக மஞ்சளாக இருந்தாள். கடைக்குட்டியின் காதோரத்தில் மட்டும் லேசாக சிகப்பு கீற்றல் இருந்தது. அழுத அவனை தங்கம் எதை எதையோ காட்டி சமாதானம் செய்து கொண்டிருந்தாள்.

மாட்டேன் …மாட்டேன். என்று முரண்டு பிடித்து , கோவிலை சுத்தி சுத்தி வந்து போக்கு காட்டிய மணி என்னத்தையோ யோசித்துவிட்டு பிறகு சரி என்று அவருக்கு தலை கொடுத்தான்.

பெத்தம்மாவும் கிழவியும் கைகளை தலைக்குமேலே தூக்கி …அம்மா…தாயீ…அவன் மனச உன் சன்னிதியில் வச்சி மாத்திபுட்டியே…சாமீ… எல்லாம் ஓஞ்செயலு…னு ஆக்ரோஷமாக பரவசமாகி குலவை போட்டனர். மணி அவர்களை ஏளனமாகப் பார்த்து சிரித்து கொண்டான். அவர்களுக்கு தெரியாது செல்லப்பா அவனுக்கு தொப்பி வாங்கி தருவதாக ரகசியமாக சொன்னது!

செல்லப்பா சிரித்தார்.

மணி சிரித்தான்.

கற்பூர ஒளியில் அம்மாளும் சிரித்தாள்.

அவனுக்கு கோவிலை விட்டு எப்போது வீட்டுக்கு புறப்படுவோம் என்றிருந்தது. தொப்பிகள் அவன் கண் முன்னே வந்து வந்து காற்றில் ஆடியது. அதுவும் வெயிலில் மின்னும் அந்த தொப்பி.

அம்மாளுக்கு முன் பரப்பப்பட்ட சுண்டல், புளியோதரை, தேங்காய் பூவில் பிசைந்த மாவிளக்கு மாவு, சக்கரை பொங்கல், வாழைப்பழ பஞ்சாமிர்தம், கொத்தமல்லியிட்ட உப்பிலாத மோர், சின்ன வெங்காயம் வைத்த நெண்ட சோறு பக்தர்களுக்கு அளிக்கப்பட்டது. வண்டி மாடுகள் படையலிட்ட வாழை பழங்களை சவைத்து கொண்டிருந்தன. அதன் பக்கத்தில் ஈக்கள் மொய்க்க கழனி தண்ணீரும் வைக்கப்பட்டிருந்தது.

எல்லாரையும் நல்லா வையிடி …ஆத்தா…கோவிலை சுற்றி வந்து எல்லோரும்
வண்டியில் ஏறி இருந்தனர். ஹாவ்…ஹாவ்… பயணம் தயாரானது. கொளஞ்சி இந்நேரம் வீட்டிற்கே போயிருந்தான்.

மனம் தொப்பி. தொப்பி னு அடித்து கொண்டது மணிக்கு. அந்த கடை…அடுத்த கடை…பக்கத்து கடை… னு ஒவ்வொரு கடையாக பார்த்து கொண்டே இருந்தான். வண்டி மாற்று பாதையில் வீடு சேரப் போவதை பாவம்! அவன் அறியவில்லை.

மாவிளக்கு, நெய்யின் இருப்பில் மின்னி மின்னி சுடர் விட்டது. விளக்கொளியில் அம்மாள் சிரித்தாள். தொப்பி காற்றில் ஆடிக்கொண்டிருந்தது.


Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.