டிம் ஆடம்ஸ்
தமிழாக்கம்: திலகம்
‘Feline Philosophy: Cats and the Meaning of Life’
John Gray
Review: Tim Adams

இந்தப் புத்தகத்தின் ஆசிரியரான ஜான் க்ரே வாழ்வின் கேள்விகளுக்கு எந்த சித்தாந்தத்திலும் பதில் இருப்பதாகச் சொல்லப்படும் கூற்றை மறுக்கும் அதே நேரத்தில், பூனைகள் வழங்கும் அறிவுரைகள் ஏற்புடையன என்கிறார்.
தன் வாழ் நாளில் ஒரு பூனையாக இருப்பது எப்படி என்ற வியப்பில் ஆழ்ந்தவர் அவர். அவரின் ரசிகர்களுக்கு அவர் உடையணிந்த புத்திசாலியான தத்துவப் பூனை; அவரின் விமர்சகர்களுக்கு இரசமளிக்காத முடிப் பந்து; சௌத் ஷீல்ட்ஸ்(South Shields) நகரில் சிறு பையனாக இருந்த போதிலிருந்து அவர் பூனைகளுடன் வாழ்ந்தவர். ஜப்பானின் பழங்காலப் பொருட்களின் வணிகரான மனைவி மீயகோவுடன், பாத் நகரில் தன் எழுபதுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இரு ஜோடிப் பூனைகள்- பர்மீய சகோதரிகளான சோஃபி, சாரா பர்மீய உடன் பிறப்புகளான ஜேமி, ஜூலியன் இவர்களுடன் பெரும்பாலும் வசித்தவர். 23 வயதான ஜூலியன் இவ்வருடத் தொடக்கத்தில் இறந்து விட்டது. இப்போது பூனைகள் இல்லாமல் இருக்கிறார்; அவர் உணர்வுகளின் பீடிப்பில் எழுதுபவரில்லை; இருந்த போதிலும் அவருடைய சமீபத்திய புத்தகம் ‘பூனை தத்துவம்: பூனைகளும், வாழ்க்கைத் தத்துவமும்’ என்பது பூனைகள் பகிர்ந்து கொண்ட நினைவலைகளாலானது.
பல சிந்தனையாளர்களைப் பூனைகள் வியப்பூட்டியிருக்கின்றன. உலகப் புகழ் பெற்ற ஷ்ரோடிங்கர் பூனையை அறியாதார் யார்? மிஷெல் டு மோண்டெய்ன் சொன்னார்: “நான் என் பூனையுடன் விளையாடுகையில், அவள் என்னுடன் விளையாடவில்லை என்பதை நான் எப்படி அறிவேன்?”
க்ரே சொல்கிறார்: “மனிதரல்லாத உயிரினத்தில் அறிவு சார்ந்த விழிப்புணர்வு இல்லை என்று நிரூபிப்பதற்காக, பகுத்தறிவாளரான ஹ்ரெனெ டிகார்த் ஜன்னலின் வழியே ஒரு பூனையை விட்டெறிந்தார்; அந்தப் பூனை பயந்தலறியது; அது அதன் இயந்திரத்தனமான எதிர் வினை என்ற முடிவிற்கும் வந்தார்.”
இந்த நூல் எழுதத் தூண்டுதலாக, தன் சக சிந்தனையாளருடன் நடந்த உரையாடலைப் பற்றிக் குறிப்பிடுகிறார் க்ரே. ‘அந்த நண்பர் சொன்னாராம்: என் பூனையை சுத்த சைவமாகப் பழக்கியுள்ளேன்.(பூனைச் சாமியார்). க்ரேயிடம் ஒரே ஒரு கேள்விதான் இருந்தது- அது, பூனை எப்போதாவது வெளியில் போய் வந்ததா என்பதே! ஆம், அது போய் வந்திருக்கிறது! பூனைகள் தரும் படிப்பினைகளைப் பற்றி நூல் எழுதிக் கொண்டிருப்பதாக மற்றொரு சிந்தனையாளரிடம் சொல்கையில், அவைகளுக்கு வரலாறு இல்லையே என்றாராம் அவர். “அது ஒரு தகுதிக் குறைவா?” என்று க்ரே ஆச்சர்யப்பட்டிருக்கிறார்.
பிறிதொரு இடத்தில் க்ரே எழுதுகிறார், லுட்விக் விட்கென்ஸ்டைன் சொல்வதாக; ‘சிங்கங்களால் பேச முடிந்தால் நம்மால் புரிந்து கொள்ள முடியாது.’ விலங்குக்காட்சியகத்தின் ஜான் ஆஸ்பினால், ‘நீங்கள் சிங்கங்களுடன் தேவையான நேரம் செலவழிக்கவில்லை.’ என்று பதில் சொல்லியிருக்கிறார். பூனைகள் பேசினால் நம்மால் புரிந்து கொள்ள முடியுமா என்று நான் க்ரேயைக் கேட்டேன்.
“இந்தப் புத்தகமே ஒரு வகையில் அத்தகைய பரிசோதனை தான்.” என்றவர் தொடர்ந்தார்- “இது அறிவியல் பூர்வமான ஒன்றல்ல- பூனைகள் எளிதாக நம்புவதில்லை என்பதாலும், தொடர்பு கொள்வதில் தயக்கம் கொண்டவையாக இருப்பதாலும், வெகு காலத்திற்கு அவைகளுடன் நெருக்கமாக வசித்தால், ஒருக்கால் அவை எப்படித் தத்துவயியலாளர்கள் என்பதை நீங்கள் கற்பனை செய்யக்கூடும்.”
குழப்பமும், அச்சுறுத்தலும் நிறைந்த உலகில், கவலையால் பீடிக்கப்பட்டு ஒருவித அமைதியைத் தேடி தமக்குத் தாமே கதைகளைச் சொல்லி மாய அமைதி காண்பதற்காக மனிதர்கள் தத்துவத்தின் பால் செல்கிறார்கள் என்று அவர் நம்புகிறார். பசியுள்ள பொழுதில், அல்லது இருப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் சமயத்தைத் தவிர பூனைகள் இயல்பாகவே தங்கள் சமனிலையில் இருப்பதால், இத்தகைய தேவை அவைகளுக்கில்லை. அவை அறிவுரை வழங்குவதாக இருந்தால் அது அவைகளின் கேளிக்கையின் பொருட்டே.
வளரும் உயிரினங்களில் மேலானதாகவும், இயற்கையின் தடைகளுக்கு அப்பாற்பட்டு வாழ்வதாகவும் நம் இனத்தை மாயத் தோற்றத்தில் காட்டிய மேலைத் தத்துவங்களை நேர்த்தியான முறையில் தகர்த்த, 2002-ஆம் ஆண்டின் சிறப்பாக விற்பனையான அவரது ‘வைக்கோல் நாய்கள்: மனிதனையும், மற்ற விலங்குகளையும் பற்றிய சிந்தனை’(Straw Dogs:Thoughts on Humans and Other Animals) என்ற அவரது புத்தகத்தின் ஒரு பின் இணைவு இந்தப் புத்தகம் என இதை க்ரேயின் வாசகர்கள் உணர்வார்கள். நமது இன்றைய நம்பிக்கையை நோக்கிக் குறி வைத்த நூல் அது. சுதந்திர மக்களாட்சி கொணர்ந்த நிலைத்த மக்கள் முன்னேற்றம் என்ற கூற்றை அது முக்கியப் பொருளாகக் கொள்கிறது. முன்னது வெளி வந்த நேரம், இராக்கில் மாற்று அரசை ஜார்ஜ் புஷ் வலியுறுத்தி வந்ததால், அந்தப் புத்தகம் தான் குறி வைத்த இலக்கை எய்தியது. ஒளி மிக்க பகுத்தறிவுடன் கூடிய மேம்பட்ட எண்ணங்கள், நம் பழங்குடி உள்ளுணர்வுகளுக்கோ, சூழலை அழித்து வரும் நம் செயல்பாடுகளுக்கோ, நம் முட்டாள்தனங்களுக்கோ எதிரான ஒரு நிலைத்த கவசத்தைக் கொடுக்க இயலாமல் போகலாம் என்ற வாக்கு இந்த இருபது ஆண்டுகளில் நிறுவப்பட்டு வருகிறதைக் காண்கிறோம்.
விரக்தியைத் துரத்தும் நூல் என்று இதை அவர் வகைப்படுத்தவில்லை. அவர் சொல்வது அடக்கத்தை; பரந்த மாறுபட்ட கேள்விகளுக்கு சந்தேகம் எதுவுமற்றும், முழுமையாகவும், பதில்கள் இருக்கின்றன என்று சொல்லும் எந்த ஒரு சித்தாந்தத்தையும் அவர் குறி வைக்கிறார். அந்த உணர்வுடன் தான் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. என்னைப் போல் கையில் பென்சிலுடன் நீங்கள் படிப்பவராக இருந்தால், அடிக்கடி மெல்லிய உறுமல் சிரிப்புடனும், ஆச்சர்யக் குறிகளால் அடிக்கடி அலங்கரிக்காமலும் படிக்க முடியாது. ‘தன்னுணர்வு மிகைப் படுத்தப்பட்டுள்ளது’ என்று அசங்காமல் சொல்கிறார். அல்லது பகுத்தறிவின் பிறழ்ச்சி என்பது நாம் ஒரு தேற்றத்தைக் கொண்டு வாழ முடியும் என நம்புவது; அல்லது மனிதர்கள் தங்கள் மனித்தன்மையை விரைவில் இழக்கிறார்கள், ஆனால், பூனைகள், பூனைகளாகவே இருக்கின்றன. தன்னுணர்வு மிக்க, கவலை மிகுந்த, மகிழ்ச்சியற்ற மனிதர்கள் ஓரளவிற்காவது அமைதியுடன் வாழ பூனைகள் சுட்டுவதாக 10 புள்ளிகள் பட்டியல் ஒன்றைத் தந்து அவர் முடிக்கிறார். அவற்றில் சில: மனிதர்களைக் காரண சத்தியங்களை ஏற்று செயல்பட எப்போதும் உந்தாதீர்கள்; நம் கஷ்டங்களுக்கு அர்த்தம் என்ன என்று தேடாதீர்கள்; உறங்கும் மகிழ்ச்சிக்காக உறங்குங்கள்.
அந்த 10 புள்ளிப் பட்டியல், அவரது ‘வைக்கோல் நாய்களை’, அதில் சரியான வகைமையில் சொல்லப்படாத கொள்கைப் பிழைத் திருத்தங்களை விமர்சித்தவர்களுக்கு, பாதி ஊக்கமுள்ள பூனையின் குரலில் சொல்லப்பட்ட ஒன்று என்று அவர் நினைக்கிறாரா எனக் கேட்டேன். வட கிழக்கு உச்சரிப்புடன், ஈர்க்கும் நட்பான குரலில் ‘ஆம்,ஆம்’ என்றார். “பலருக்கு ‘வைக்கோல் நாய்கள்’ பிடிக்கவில்லை. நான் சித்தாந்தங்களைக் கொட்டிக் கவிழ்த்து விட்டேன் என்று விமர்சித்தார்கள். சித்தாந்தவாதிகளாக இல்லாத மூவரிடமிருந்து அருமையான எதிர்வினைகள் வந்தது. போர் செய்தியாளர்கள், அவர்களை மிகவும் பாதித்த நிகழ்வுகளின் தாக்கத்திலிருந்து விடுபட மிகத் துயரப்பட்டிருக்கிறார்கள்; என் நூல் அவர்களுக்கு எப்படியோ உதவியிருக்கிறது.”
அவலமான, அச்சுறுத்தும் விஷயங்களின் அர்த்தங்களைக் கண்டு பிடிக்கும் அழுத்தத்திலிருந்து அவர்களை அது விடுபட உதவியதால் இருக்குமா எனக் கேட்டேன்.
“முற்றிலும் உண்மை; அர்த்தங்களைத் தேடி நாமே நம்மை வதைக்கிறோம். தலை சிறந்த நம்பிக்கை கற்பிக்கும் ஒன்றான, அந்த மற்ற உலகில் எந்த அர்த்தமும் விபத்திலுமிருந்து காக்கப்படும் என்பதான ஒன்றை நீங்கள் ஏற்கவில்லை என்றால் நமக்கு நடக்கும் பெரும்பாலானவை தற்செயலே. கண்டுபிடிக்க வேண்டிய மறைந்துள்ள பொருள் இல்லை என்ற கருத்துடன் நாம் போராடுகிறேம். இவ்வகையில் நாம் பூனைகளாக முடியாது; நம் வாழ்வின் கதைகளை நமக்கு நாமே சொல்லிக் கொள்ளும் மனநிலை நமக்குத் தேவையான ஒன்றாக இருக்கலாம்- சிறுகதைகள் அடங்கிய நூலகம் இவ்வகையில் நாவல்களைக் காட்டிலும் பயனுள்ளது.”
இந்த மூவடுக்கு உரையாடலில் நாங்கள் பாத் நகரில் (அவருக்கு வயது 72) ஒரு கஃபே யில் வெளியே சந்திப்பதாகத் திட்டமிட்டிருந்தோம். ஆனால், வானிலை எங்களைப் பூனைகள் போல் உள்ளே பதுங்க வைத்துவிட்டது- நிகழ் நிலையில் உரையாடினோம். இந்தப் பேராபத்துத் தொற்றுக் காலத்தை பேதம் செய்து எதிர் கொள்ள சில வகைகளில் அவரது இந்தப் புத்தகம் உதவும் என்று நான் நினைக்கிறேன். அவர் எப்படி சமாளித்தார்?
“என்னுடைய அருமையான ஜூலியனைப் பற்றி நான் நினைவு கூறுவனவற்றைப் பின்தொடர நான் முயன்றேன். கற்பனையான எதிர்காலத்தில் வாழ்வதல்ல அது. இது எவ்வகை மாற்றம் கொள்ளும் என்பது நாம் அறியாதது. பல இடங்களில், குறிப்பாக இவ்விடத்தில் அரசின் அணுகுமுறை தாறுமாறாக இருக்கிறது. தெளிவான அரசியல் எதிர்வினைகள் ஏற்படாமல் இருப்பது, என் கருத்தில், மிகவும் ஆழமான ஒன்றாகத் தோன்றுகிறது. மிகத் திறம்பட்ட அறிவுச் செயல்பாடுகள் கூட எப்போதுமே அதிக நிலையின்மையை விட்டுச் செல்கின்றன.”
டாமினிக் கமிங்ஸ் முன்னெடுத்த ‘உச்ச முன்னறிவிப்பு கணிப்பு’ சக்திகள் எச்சரிக்கை மணி ஒலியை இவருக்கு எழுப்பியிருக்கக்கூடும். மறு நாள் என்ன நிகழக்கூடும் என அரசினால் கணிக்க முடியவில்லை.
“ஆம், அவர்கள் செய்தார்கள். மிகக் குறைந்த துறைகளில் மட்டும் தான் ‘உச்சக் கணிப்பு’ செல்லுபடியாகும் என நான் நினைக்கிறேன். என்னுடைய வாழ்நாளில், பெரும் நிகழ்வுகளை யாரும் கணிக்கவில்லை. உண்மையில், மிகப் பெரிதான நிகழ்வுகள் நடக்கும் சாத்தியங்களுள்ளவற்றில் ஒன்றாகக் கூடக் கருதப்படவில்லை என்பது மிகவும் முக்கியமான செய்தி. 2000-ம் ஆண்டு தொடக்கத்தில், பலப் பொருளாதார நிபுணர்களையும், பெருமை மிக்கப் பலரையும் நிதிநெருக்கடிகள் ஏற்படுமா என்று நான் கேட்டதையும், அது முழுமையாக நிராகரிக்கப்பட்டதையும் இப்போது நினைக்கிறேன். ஒரே ஒருவர் சொன்னார்: ‘எனக்கு அப்படித் தோன்றவில்லை; ஆனால், யாரறிவார்?’”
‘எதிர்காலத்தைப் பற்றி நாம் சிந்திப்பவை கவைக்குதவாத போதும், உடனடி நிகழ்கால விசித்திரங்களை புத்திசாலித்தனமாக மறுபரிசீலனை செய்து அது இயல்பானது என்று சொல்வது’ ஏற்புடையதா எனக் கேட்டேன்.
“அது நடந்திருக்கிறது; ஆனால் இயல்பிற்குத் திரும்புவோம் என்ற ஊகத்தில் அது பாதி கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதைத் தோற்றம் போல எனச் சொல்லலாம். ஆறு அல்லது அறுபது வருடங்களில் நிகழக்கூடிய மாற்றங்கள் இந்த ஆறு மாதக் காலத்தில் நடந்திருக்கின்றன. பிரிட்டன் போன்ற பணக்கார (இன்னமும் பணக்கார நாடாகத்தான் உள்ளது பிரிட்டன்) நாடுகளில், இவை நன்மை செய்யக்கூடியவையாக உருவெடுக்கலாம், ஆனால், விளிம்பு நிலை மக்களுள்ள இந்தியா, ப்ரேஸில் போன்றவற்றில் அப்படி இருக்காது.”
“‘ஹை ஸ்பீட் 2’ ரயில் பாதையை எடுத்துக்கொள்ளுங்கள். செலவுகள், சூழல் பாதிப்புகள் ஆகிய பெருங்கேடுகளைத் தாண்டி, ஒன்றை கவனிக்க வேண்டும்- வேலைக்காக முன்னர் பயணம் செய்ததைப் போல இப்போது அதிக மனிதர்கள் பயணம் செய்யப் போவதில்லை. அரசியலில் ஒரு பின்னடைவு எப்போதுமே பின்னப்பட்டிருக்கிறது. தலை கீழாக மாறும் அதிர்ச்சி சூழல்களை, தனி மனிதர்கள், அரசுகளைக் காட்டிலும் மேம்பட தகவமைத்துக் கொள்கிறார்கள்.” எங்கள் பேசு பொருளிற்குத் திரும்பிய அவர், “ஆழ்ந்த ஈடுபாடு கொள்ளத் தக்கக் கதைகள் பூனைகளுக்கில்லை. ஆம், நீங்கள் சொல்லலாம்-அவைகளுக்கு அறிவுத் திறன் இல்லை என்று; ஆனால் அவைகளுக்கு அதில் ஆர்வமில்லை என்று நான் நினைக்கிறேன்.” என்றார்.
குறிப்பிட்ட ஒற்றை நிலைகளில் ஈடுபாடின்மை என்பது அவரை அரசியல் ரீதியாக சில ஆர்வமூட்டும் திசையில் செலுத்தியிருக்கிறது. டைன்சைட் நகரில் உழைப்பாளர் வீட்டில் பிறந்தவர்-அப்பா துறைமுகத்தில் தச்சர், அம்மா வீட்டைக் கவனித்தவர். 1960-ல் அந்த நெருக்கமான சமூகம் உடைக்கப்பட்டது; உழைப்பாளர் கட்சியைச் சேர்ந்த (குற்றவாளி) டி. டேன் ஸ்மித் வளர்ச்சி என்ற பெயரில், கம்பீர வீடுகள் என்று நிழற்கற்பனை செய்து அமைத்த, அழகும் வசதியுமற்ற வீடுகள், விக்டோரிய வீதிகளை இடித்து அழித்து உருவாக்கிய அந்தக் கொடூரம், முன்னேற்றம் என்ற பெயரில் பகட்டாக நடத்தப்படும் செயல் திட்டங்கள், அவரை அக்கட்சியை நம்ப முடியாமல் செய்தது.
நிரந்தரமானதும், தொடர்வதுமான மனிதத் துயர்களுக்கு, அரசியல் என்பது தொடரும், தற்காலிக மற்றும் பகுதித் தீர்வைத்தான் அளிக்கும் என்ற கருத்து அந்த நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு ஏற்பட்டது. அவரது முதன்மையான அறிவு சார்ந்த இருவரிடம்- ஒருவர் ஐசையா பெர்லின், மற்றவர் ஜே.ஜி. பால்லர்ட்; முன்னவர் சோவியத் ரஷ்யாவிலிருந்து புலம் பெயர்ந்த தத்துவ வாதி; இரண்டாமவர் நாவலாசிரியர், தன் இளமைக்காலத்தில் ஜப்பானியச் சிறையில் இருந்தவர்.
எந்த ஒரு அரசியல் இயக்கமும் தங்களிடத்தில் தான் ஏகபோக அறிவுப் பெட்டகம் இருக்கிறதென்று நம்பினால், அங்கே வதை முகாம்களோ, கட்டாய உழைப்புச் சிறை முகாம்களோ உள்ளீடு என்று இவருக்கு எடுத்துச் சொல்லி ஆற்றுப்படுத்தியவர்கள் இவர்கள். (ஜொனாதன் ஸ்விஃப்டை அப்படியே பின்பற்றி நையாண்டியாக இவர் எழுதிய ‘மாடஸ்ட் ப்ரோபோசல்’, மேலை நாடுகளில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக, வன்முறையை மீளவும் கொண்டு வரச் சொன்னது; (அபு க்ரைப் சிறை, அரசே கைதிகளை அந்தந்த நாடுகளின் சட்ட உத்தரவின்றி நாடுகடத்திக் கொண்டு போதல் ஆகியன தொடர்ந்தன.)
எந்த ஒரு அரசியல் இயக்கத்திலும், குறைந்த தீமையெனக் கருதும் கட்சிக்கே அவர் வாக்களித்திருக்கிறார், அதாவது, கண்மூடித்தனமாக ஒன்றை ஏற்றுக்கொள்ளவில்லை. “நான் இருந்திருந்தால் 1945-ல் ஆட்லீயின் அரசைத்தான் ஆதரித்திருப்பேன். ஆனால்,1970களில் யுத்ததிற்குப் பின்னான உழைப்பாளர் தீர்வானது, லஞ்ச லாவண்யங்களால் சூழப்பட்டுவிட்டது.” பல்கலை அறிவாளர்களின் கருத்தோடு இணங்காமல், பிரிட்டனின் அரசியல் வரலாற்றில் தாட்சர், ஒரு தேவையான சரி செய்யும் மாற்ற சக்தி என்றே சொன்னார். ஆனால், அதுவும் 1989 வாக்கில் ‘உலகளாவிய செயல்திட்டம்’ என்றானது; “நான் 1987லிருந்தே விலகத் தொடங்கினேன்”. சிறிது காலம் உழைப்பாளர் கட்சிக்கு ஆதரவாக இருந்தவர், மேற்குறிப்பிட்ட அதே காரணங்களுக்காக அதிலிருந்தும் விலகினார்.
‘ப்ரக்ஸிட்’ நடை பெற வேண்டுமென்ற எண்ணத்தின் பாதி தூண்டுதலால் ‘கன்சர்வேடிவ்’ கட்சிக்கு சென்ற தேர்தலில் வாக்களித்திருக்கிறார்; “ஏமாற்றம் தரும் வேஷதாரிகளான ‘ஜனநாயகவாதிகள்’ கேட்ட மறு வாக்கெடுப்பு ஒரு அவல நகைச்சுவை- ‘அந்தத் தேர்வு இல்லாமலே மக்கள் முதல் முறையே காகித ஓட்டு அளித்துள்ளார்களே.’” அவருடைய பார்வையில் இது சரிவர நிறைவேறப் போவதில்லை- ப்ரும்மாண்டச் செயல் திட்டங்கள் கொண்ட யூரோப்பிய கூட்டமைப்பும் இதைச் சரிவர நிறை வேற்றப் போவதில்லை.
“1990களின் தொடக்கத்தில் ஒரு போலிஷ் செய்தியிதழ் என்னைக் கேட்டது-‘கிழக்கு யூரோப்பாவில் கம்யூனிசம் வீழ்ந்த பிறகு எழுச்சி பெற்றுள்ள புதிய (தாட்சரிஸ) வலதிற்குப் பிறகு என்ன வரும்?’ நான் பதில் சொன்னேன்- ‘அனேகமாகப் பழைய வலது.’ யூரோப் முழுமைக்குமான பொருளாதார வெளி என்பது தொடக்கத்திலிருந்தே ஒரு முதலாளித்துவ நோக்காகும். கம்யூனிசம் உள் வெடிப்பால் சிதறிய பிறகு யூரோப்பியன் யூனியனுக்கு எதிரான போக்கு எங்கிருந்து எழ முடியும்? அது வலதில் இருந்து தான் வர முடியும்-அதுதான் நடந்திருக்கிறது.”
இதைப் போன்ற காரணங்களினால் ட்ரம்ப் 2016-ல் வெற்றி பெறுவார் என அவர் கணித்தார்- “கைவிடப்பட்ட உணர்வும், தொழிலாளர்களில் பெரும்பாலோர் உட்படுத்திய அவமரியாதைகளும்” எங்கேயாவது வெளிப்பட வேண்டும்- இப்போது பைடன் வெற்றி பெற்றாலும் இவ் உணர்வுகளை மௌனமாக்க முடியாது. மனிதர்கள், குறிப்பாகத் தீவிரவாதிகள், பகுத்தறிவுடன் தேர்வு செய்வார்கள் என எதிர்பார்க்க முடியாது. பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் குறிப்பிட்டதைப் போல், முதல் உலகப் போர் தொடங்கிய சமயத்தில், அது சலிப்பைக் குறைக்கும் ஒன்றாகப் பார்க்கப்பட்டது.”
மகிழ்ச்சியாக இருப்பதற்குப் போராட வேண்டும் என்ற தேவை பூனைகளுக்கு இல்லை என்பதால் அவைகளுக்கு சலிப்பு வருவதில்லை என்கிறார் அவர். ஆனால், மனிதர்கள் பாகுபட்ட உயிரினங்கள்-பெயர்த்து எடுப்பதில் வாழ்வைச் செலவிடுபவர்கள். இறப்பைப் பற்றிய திட்டவட்டமான அறிவினால், பூனைத் தோழர்களிலிருந்து முடக்க மாற்ற விளை பொருளாக இந்த இடப் பெயர்ச்சிச் செயல்களின் பெரும் பாகம் அமைகிறது. அவர் மத நம்பிக்கையாளருமில்லை- நாத்திக எதிர்ப்பாளருமில்லை. ரிச்ஸ்ர்ட் டாக்கின்ஸ் போன்றோரை, ‘மதங்களை அழிக்க முடியும்’ எனச் சொல்வோரைச் செல்லமாகக் கடிந்து கொள்பவர்.
“நம்முடைய அழிவுறும் தன்மையையும், நம்முடைய துயரங்களையும் புரிந்து கொள்ள முயற்சிக்கும் நம் உள்ளார்ந்த எண்ணங்களை கற்பனையாலும், மாய வாதத்தினாலும் கட்டமைத்துக் கொள்வது மிக மிக அடிப்படையான ஒன்றுதான். கடவுள் அல்லது வேறொன்று- எதைப்பற்றியும் எனக்குக் கருத்தில்லை-ஆனால், அக்கருத்தை முற்றிலுமாக அழிக்க முடியும் என்பது என்னைப் பொறுத்த மட்டில் கேலி நகைப்பிற்குரியது. ஒரு முறை நான் ஒரு அமெரிக்க கிருத்துவ அடிப்படைவாதியைச் சந்தித்தேன்- சுத்தமான சூழலில் வளர்க்கப்படும் இளைஞர்கள், திருமணம் ஆகும் வரை பாலியல் உந்துதலை அடையமாட்டார்கள் என ஆணித்தரமாகச் சொன்னார்.” இதைச் சொல்லிவிட்டு க்ரே அட்டகாசமாகச் சிரித்தார். “இப்படித்தான் டாக்கின்ஸ் மதங்களைப் பற்றி நினைக்கிறார்; மாயக் கற்பனைகள் மனித வரலாற்றுப் பண்பாடுகள் ஒவ்வொன்றிலும் உண்டு; நம்மிடையே அது இல்லை என நாம் ஏன் கற்பனை செய்ய வேண்டும்?”
தத்துவவாதிகளின் மேலான சிந்தனைகளுக்கும், அவர்களின் விலங்கு உணர்வுகளுக்கும் இடையே இருக்கும் விடாப்பிடியான இடைவெளியைப் பற்றி நூலில் பேசுகிறார். ஆனால், அதை அவரது தன்கதையைப் போல நினைத்து அவரது எண்ணங்களையோ, வாழ்வையோ அறிய முயல்பவர்களை அன்பாகத் தடுத்து விடுகிறார். தனிப்பட்ட கேள்விகளுக்குப் பொருந்தும் பதிலாக “என் வாழ்வில் அப்படி ஒன்றும் ஆர்வக் கூறுகளில்லை” என்று சொல்லிவிடுகிறார். (குத்தலாக, சிந்தனையாளன் தன் வாழ்வைப் பற்றிய எண்ணங்களைப் பிரதிபலிப்பதில்லை என்ற குறுக்கு எண்ணம் ஓடுகிறது நமக்கு.) குழந்தையில்லாமல் இருப்பது அவரது சிந்தனையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறதா எனக் கேட்டேன். பூனையைப் பற்றிய பரவலான இந்த இரண்டு மணி நேர உரையாடலில், ‘என் வாழ்வின் இப் பகுதியைப் பற்றி நான் பேச விரும்பவில்லை.’ என்று கறாராகப் பதில் சொன்னார்.
தன் வாழ்வின் இறுதிப் பத்தாண்டுகளை ஃப்ரேங்க்பர்ட்டில் கழித்த ஷோபென்ஹாவர்சொன்ன “வெள்ளங்களில்லை, நல்ல உணவகங்கள், சிறந்த பல் மருத்துவர்கள்” சொற்றொடரைச் சொல்லி, இவர் ‘பாத்’தைத் தேர்ந்தெடுத்தது இதைப் போன்ற காரணங்களுக்காகவா எனக் கேட்டேன்.
சிரித்தார்; “பல் மருத்துவர்கள் சிறப்பாக இருக்கிறார்கள்.” லண்டன் பொருளாதாரக் கல்லூரியில் யூரோப்பிய சிந்தனைகள் பற்றி கற்பித்த ஆக்ஸ்ஃபர்ட் அரசியல் பேராசிரியர், தன் கல்விப் பணிகளை விட்டுவிட்டு சுயச்சார்பு எழுத்தாளராக உருமாறினார். “நடைக்கு ஏற்ற ஒரு நகரத்தைத் தேடினேன்; நிமிர்ந்து பார்த்தால் மரங்கள் தெரியும்.” பூனையைப் போல, தான் விரும்புவதை எழுத, கல்விப் பணியின் தளையிலிருந்து விடுபட்டிருக்கிறார்.
“நீங்கள் ஒரு கல்வியாளர் எனில், நீங்கள் எதையும் சொல்வதற்கு, 20 முன்னெச்சரிக்கைகளாகவது தர வேண்டியிருக்கும். நான் தொழில் சார்ந்த கல்வியாளனாக இருந்த காலத்தில் இதைச் செய்தேன். ஆனால், இப்போது மாறுபட்ட கோணங்களை எடுக்கிறேன். இதை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன் என்று மட்டும் தான் சொல்கிறேன்; இதை எறிந்து விடாதீர்கள்- ஆக்ஸ்ஃபாமிற்காவது (OXFAM) கொடுத்து விடுங்கள்.”
மோண்டேய்ன், போர்ஹெஸ் போன்ற, சிந்தனைச் சோதனைகளை வடிவமைப்பவர்களை, அவருக்குப் பிடித்திருக்கிறது. “இங்கிலிஷ் பேசும் உலகம், பழமொழிகளை ஆணவம் எனக் கருதுகிறது. வேறு முறைகளில் எழுதினால் மனதை மாற்ற முடியும் என்பதில் எனக்கு உறுதி இல்லை. என்னைப் பின்பற்றுபவர்களை நான் தேடவில்லை. நான் சொல்வதை நிறைய மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்றும் நான் எதிர் பார்க்கவில்லை. சில வாசகர்களின் சிந்தனைச் செயல் பாடுகளைத் தூண்டுவது(விளைவு நிச்சயமற்று இருந்த போதிலும்) தான் என் குரலின் நோக்கம்.”
‘மனிதர்கள் கூட்டாக அடைந்த பெரும் வெற்றிகளில் கவனம் செலுத்தாமல், அவர்களின் குறைவு பட்ட, மிருகத்தனமானவற்றைப் பதிவு செய்கிறீர்கள்’ என்ற விமர்சகர்களுக்கு அவருடைய பதில் என்ன என்று கேட்டேன்.
“சிலந்தி வலையை அழிப்பது சுலபம், கட்டுவது சிரமம் என்று என்னைப் போலவே நீங்களும் நாகரீக வாழ்வைப் பற்றி நினைப்பவராக இருந்தால்,
நான் சொல்வது ஒரு எச்சரிக்கை எனப் புரிந்து கொள்வீர்கள். நான் மிகுப் பெருமையை ஒத்துக் கொள்பவனில்லை.”
‘வைக்கோல் நாய்களின்’ கடைசி வரியில் கவலையுடன் அவர் ஒரு கேள்வி கேட்டிருப்பார்: “வாழ்க்கை வாழ்வதற்கே என்று எளிமையாகப் புரிந்து கொள்ள மாட்டோமா?” அந்த அனுபவ வாழ்வு எப்படி இருக்குமென்று அறிய இந்தப் புத்தகம் அவருக்கு உதவியதா எனக் கேட்டேன்.
“பூனைகள் வாழும் உணர்வினைக் கொண்டு வாழ்கின்றன; சாதிப்பதும், சாதிக்காமல் இருப்பதும் பொருட்டல்ல. மேலதிகக் குறிக்கோளுடன் நம்மை இறுக்கி இணைத்துக் கொண்டால் நாம் வாழ்வதின் இன்பத்தை இழந்து விடுகிறோம். அனைத்து சித்தாந்தங்களையும், மதங்களையும் ஒரு புறம் ஒதுக்கி விடுங்கள்- மீதமிருப்பது என்ன? அருமையான் வாழுணர்வு.

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு
இந்தக் கட்டுரை பூனையைப் பற்றிய பல நினைவுகளைக் கொண்டு வந்தது.
‘பிள்ளைகள் பெற்றதப் பூனை’ என்று கம்பீரமாக ஒற்றுமையை எடுத்துக்காட்டி பாடுகிறார் கவிஞர்.
மூட நம்பிக்கையைச் சாடி தன் ‘கீதப் பூங்கொத்து’ பாடல் நூலில் பிரும்ம ராயர் இப்படிச் சொல்கிறார்:
‘போகும் வழியிலோர் பூனைதான்
எந்தப் புறம் சென்றால் உனக்கென்ன?
அந்தந்த ஜீவன் இயற்கையாம்-இதில்
அச்சங் கொண்டேகுதல் ஏனடா?’
நாம் அறிந்த பூனைச் சாமியார் கதை ஒன்றுண்டு. காட்டில் தவம் செய்யப் போனார் அவர். அவரது ஒரே சொத்தான கௌபீனத்தை எலிப்படை சேதப்படுத்தியது; எலியைப் பிடிக்க பூனை வளர்த்தார். எலிகள் ஓடிவிடவே பூனை பசியால் வாடியது. அதற்கு பால் கொடுக்க பசு வாங்கி, பசுவைப் பராமரிக்க கல்யாணம் செய்து கொண்டதாக அந்தக் கதை போகும்.
சென்ற தலைமுறையினர் இந்தியாவில் பெரும்பாலும், ஆடு, மாடு, கோழி, பசு, எருது இவற்றை வளர்த்தனர். பூனை ரோமம் உதிர்த்தால் வீட்டு மனிதர்களின் உடல் நலம் கெடும் என்று பெரும்பான்மையினர் நம்பினார்கள். அதனாலோ என்னவோ ‘குறுக்கே பூனை வந்தால் அபசகுனம்.’ என்றார்கள். ‘புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டதாம்’ என்று பழமொழி வேறு! திருட்டுப் பூனை, கள்ளப் பூனை என்றெல்லாம் வசவுகள் உண்டு. ஆனால், புனுகுப் பூனை பிடித்தமானது மக்களுக்கு, குறிப்பாக அழகியல் நோக்கம் கொண்டவர்களுக்கு. ஆனாலும், பல பறவைகள், விலங்குகள், ஊர்வன முதற்கொண்டு வாகனங்களாக இருக்கும் இந்துக் கடவுள்களுக்கு பூனை வாகனமாக உள்ளதாகத் தெரியவில்லை.
நம் முன்னோர்கள், பூனைகளை அணுகி ஆராய்ந்து பார்த்து யோகாசனங்களை அமைத்துள்ளார்கள். பூனையைப் போல் நெகிழும், வளையும் உடல் வளத்திற்காக ‘மார்ஜாராசனம்’ செய்வார்கள்.
பக்தியும், தர்க்கமும் இணைந்த நியாய வாதத்தில் மார்ஜார கிசோர நியாயம், மற்றும் மர்க்கட கிசோர நியாயம் என்ற இரண்டு உண்டு. முன்னது பூனை, குட்டியைக் கவ்வி எடுத்துச் செல்வது; பூனைக்குட்டி தன் முயற்சியின்றி தாய் விட்ட வழி என்றிருக்கும். பின்னது, குரங்குக் குட்டி தான், தாயின் வயிற்றை இறுக்கமாகப் பிடித்துக் கொள்ள வேண்டும்.
(நன்றி: த கார்டியன் )