ட்ரம்ப் விட்டுச் செல்லும் எச்சங்கள்

பழமை விரும்பும் நீதிமன்றத்தை அமைத்துச் சென்ற டிரம்ப்

பரபரப்புக்கு பஞ்சமில்லாத அமெரிக்க அதிபர் தேர்தலுக்குச் சில தினங்களே இருந்த நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதி நியமனத்தில் ட்ரம்ப் அரசு காட்டிய ஆர்வமும் அவசரமும் ஜனநாயக கட்சியினரிடையே பல கேள்விகளை எழுப்பியது. மறைந்த உச்ச நீதிமன்ற நீதிபதி ரூத் கின்ஸ்பெர்க்கின் பதவிக்கு நீதிபதி ஏமி கோனி பாரெட்டை நியமிப்பது தவறு என்றும் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு வெற்றி பெரும் கட்சியினரே அதனை தீர்மானிக்க வேண்டும். அதுவே மக்களின் விருப்பமான தேர்வாக இருக்கும் என்ற ஜனநாயக கட்சியினரின் கோரிக்கையை 2016 தேர்தலில் மக்கள் தீர்மானித்து விட்டதாக ட்ரம்ப் பதிலளித்தது மட்டுமில்லாமல் தன்னுடைய செனட் உறுப்பினர்களைக் கொண்டு ஏமியை உச்சமன்ற நீதிபதியாகவும் பதவிப்பிரமாணம் செய்து விட்டார்.

பிப்ரவரி 13, 2016ல் மறைந்த நீதிபதி ஆண்டனின் ஸ்கேலியாவின் பதவிக்கு அன்றைய அதிபர் ஒபாமா நீதிபதி ஒருவரை நியமனம் செய்ய முற்பட்ட பொழுது அதனை தீவிரமாக எதிர்த்தது செனட் பெரும்பான்மை கொண்ட குடியரசுக்கட்சி. 2017ல் ட்ரம்ப் அதிபராக பொறுப்பேற்றவுடன் தான் அப்பதவிக்கு நீதிபதி நீல் கோர்ஸட்ச் நியமனம் செய்யப்பட்டார். 


அமெரிக்க அரசின் சட்டமன்றத்தையும், அதிபரின் அரசாங்கத்தையும், சமூக உரிமைகளையும், சுதந்திரத்தையும் பாதுகாக்கும் வல்லமை கொண்டதால் மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருப்பது மட்டுமில்லாமல் அதிகாரமிக்க அரசியலமைப்புகளில் உச்சநீதிமன்றமும் ஒன்று. இன்று ஒரு தலைமை நீதிபதியும் எட்டு இணை நீதிபதிகளும் கொண்ட உச்சநீதிமன்றத்தின் பதவிக்காலம் ஆயுள் வரை தொடரும் என்பதால் நீதிபதிகளின் தேர்வும் பல்வேறு விசாரணைகளுக்குப் பின் செனட் ஒப்புதலுடன் அரங்கேறுவது வழக்கம். உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை காங்கிரஸ் தீர்மானிக்கிறது. அடுத்த வருடம் இந்த எண்ணிக்கையில் மாற்றம் வரலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. 

25 வருடங்களுக்கும் மேலாக உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் ரூத் பேடர் கின்ஸ்பெர்க். 1980ல் அன்றைய அதிபர் ஜிம்மி கார்ட்டரால் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நியமனம் செய்யப்பட்டு 1993ம் வருடம் அதிபர் கிளிண்டனால் உச்ச நீதிமன்றத்தில் பொறுப்பேற்றவர். உயரிய இப்பதவியில் நியமிக்கப்பட்ட முதல் யூத, இரண்டாவது பெண் நீதிபதி என்ற பெருமைகளுக்கும் உரியவர். அரசியலில் மத தலையீட்டை விரும்பாத, பெண்களின் உரிமைகளுக்காகவும் பாலின பாகுபாடுகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து பலரின் நன்மதிப்பையும் பெற்றிருந்த ரூத், தன்னுடைய 87வது வயதில் செப்டம்பர் 18, 2020ல் புற்றுநோய் பாதிப்பால் மரணமடைந்தார். 2000ம் வருட அதிபர் தேர்தலில் புஷ்-அல்கோர் இடையே யார் அதிபர் என்பதை தீர்மானித்த ஃப்ளோரிடா வாக்குகளின் மறுஎண்ணிக்கையில் உச்ச நீதிமன்றம் தலையிட, பெரும்பான்மை நீதிபதிகள் அதிபராக ஜூனியர் புஷ்ஷுக்கு ஆதரவு நிலைப்பாடுகளை எடுத்த போதிலும் தன்னுடைய அதிருப்தியையும் கருத்து வேறுபாடுகளையும் தைரியமாக வெளிப்படுத்தி மக்களிடையே பிரபலமானவர். “ஒபாமாகேர்” மருத்துவ காப்பீட்டு திட்டத்தைச் செயற்படுத்த அரசிற்கு அளித்த ஆதரவும், அனைத்து மாநிலங்களிலும் ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்களின் திருமணத்தைச் சட்டபூர்வமாக அங்கீகரிக்க வைத்ததிலும் இவருடைய பங்குகள் அதிகம். வயதான நீதிபதிகளை ஓய்வெடுக்க ட்ரம்ப் அரசு வற்புறுத்திய போதும் தொடர்ந்து பணியாற்றி 2020 தேர்தலுக்குப் பிறகே தன்னுடைய பதவியில் இருந்து விலகுவதாக இருந்தவரின் எதிர்பாராத மரணத்திற்குப் பிறகு அவருடைய இடத்தில் அவசரகோலமாக நீதிபதியைத் தேர்வு செய்தார் அதிபர் ட்ரம்ப். 

தனக்குச் சாதகமாக பழமைவாதியான நீதிபதி ஏமி கோனி பேரட்டை நியமிக்க ட்ரம்ப் பரிந்துரைத்து நான்கு நாட்கள் மட்டுமே நடந்த செனட் உறுதிப்படுத்தல் விசாரணைக்குப் பின்  52 குடியரசுக்கட்சி செனட் வாக்குகளின் ஆதரவுடன் தேர்தலுக்கு முன்பாகவே பதவி நியமனம் செய்யப்பட்டார். பதவிக்கு வருவதற்கு முன்னும், இவ்வருட தேர்தலுக்கு முன்னும் தங்களிடமிருந்து இரு நீதிபதிகளின் பதவிகளையும் ட்ரம்ப் பறித்துக் கொண்ட அதிருப்தியில் 48 ஜனநாயக கட்சி செனட் உறுப்பினர்களும் இப்பதவி உறுதிப்படுத்தல் முறைகேடானது என வாக்கெடுப்பில் பங்கு கொள்ளவில்லை. அனுபவம் குறைந்த, மதக்கொள்கைகளைத் தீவிரமாக பின்பற்றும் நீதிபதி ஏமியின் நியமனத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை.

யார் இந்த ஏமி?

2017ல் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக அதிபர் ட்ரம்ப்பால் நியமிக்கப்பட்டவர் 48 வயது ஏமி. சட்டக்கல்லூரியில் பேராசிரியராகவும் மறைந்த முன்னாள் நீதிபதி ஆண்டோனின் ஸ்கேலியாவுடனும் பணிபுரிந்தவர். தீவிர கத்தோலிக்கரும் வலதுசாரிக் கொள்கையாளருமான ஏமி, ஏழு குழந்தைகளுக்குத் தாயும் ஆவார். இரு குழந்தைகள் ஹெய்டி நாட்டிலிருந்து தத்தெடுக்கப்பட்டவர்கள். தன்னுடைய மதக்கோட்பாடுகளில் தீவிரமாக இருந்தாலும் சட்டத்தின் படி செயல்படுவதாக செனட் விசாரணையில் கூறியுள்ளார். கருக்கலைப்பை எதிர்க்கும் அடிப்படை கிறிஸ்தவர் கூட்டம் இவரை ஆதரிக்க, LGBTQ மற்றும் பெண்களின் கருக்கலைப்பு உரிமைகள் தொடர்பான அவருடைய கருத்துகளுக்கு மக்களிடையே பலத்த எதிர்ப்பும் உள்ளது. வன்முறையில் ஈடுபடாத குற்றவாளிகள் துப்பாக்கி வாங்கும் உரிமையைத் தடை செய்யக் கூடாது என்று வாதிட்டவர். துப்பாக்கி உரிமம் குறித்தான சட்ட மாற்றங்களுக்கு இவருடைய ஆதரவு இருப்பதால் மீண்டும் அந்த வழக்கில் தங்களுக்குச் சாதகமான முடிவுகளை குடியரசுக்கட்சி கொண்டு வரும் சாத்தியங்களும் உள்ளது.


உச்சநீதிமன்றத்தில் ஆறு நீதிபதிகள் குடியரசுக்கட்சி அதிபர்களாலும் மூவர் ஜனநாயக கட்சி அதிபர்களாலும் நியமிக்கப்பட்டவர்கள். ட்ரம்ப் அதிபராக பொறுப்பேற்ற பின் மூன்று நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். தற்பொழுது நிலுவையில் இருக்கும் ஒபாமாகேர், துப்பாக்கி உரிமம், கருக்கலைப்பு உரிமைக்கான மாற்றுச் சட்டங்களுடன் சட்டத்திற்குப் புறம்பாக குடியேறியவர்களின் குடியுரிமை வழங்கும் சட்ட திருத்தம் , ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள், இருபாலினத்தார், திருநங்கைகளுக்கான அங்கீகாரங்கள்(LGBTQ), சமத்துவம், வாக்குரிமைகளில் எடுக்கப்படப் போகும் உச்சநீதிமன்ற தீர்மானங்கள், மக்களிடையே பகைமையையும் பிரிவினையையும் ஏற்படுத்தும் என்ற அச்சம் நிலவி வருகிறது. ஆதிக்க மனோபாவ அமெரிக்கர்களின் அதிகாரம் ஓங்கும் நிலை ஏற்பட்டால் இன, நிறவெறிப் போராட்டங்கள் தொடரும். வெள்ளையரல்லாத சிறுபான்மையினர் அஞ்சி வாழும் நிலைமையும் ஏற்படலாம். 

தங்களுடைய ஒட்டு வங்கிகளுக்காகவே குடியரசுக்கட்சியினர் திட்டமிட்டு நீதிமன்ற பதவிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். மக்களின் அடிப்படை உரிமைகளை முடக்க நினைக்கும் சட்ட மாற்றங்களால் தற்பொழுது ஜனநாயக கட்சியினரும் விழித்துக் கொண்டுள்ளனர். காங்கிரஸில் ஜனநாயக கட்சியினர் பெரும்பான்மை அமைந்தால் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரித்து சமநிலையை ஏற்படுத்தும் வாய்ப்புகளும் உள்ளது.

தேர்தல் வாக்குகளின் மறு எண்ணிக்கையில் உச்ச நீதிமன்றம் தலையிட நேர்ந்தால் தனக்குச் சாதகமாக முடிவுகள் இருக்கும் என்பதும், தான் பதவியில் இல்லாவிட்டாலும் தன்னுடைய அதிகாரத்தால் நியமிக்கப்பட்டவர்கள் குடியரசுக்கட்சியின் திட்டமிட்ட சட்டங்களை (மக்களைப் பாதித்தாலும்) இயற்றுவார்கள் என்பது தான் ட்ரம்ப்பின்/குடியரசுக்கட்சியின் கனவு. அதனை நிறைவேற்றவே தீவிர வலதுசாரிகளை நீதிபதிகளாக நியமித்துளார்கள். பெண்கள், சிறுபான்மையினரின் உரிமைகளுக்காகவும், துப்பாக்கி உரிமம் தொடர்பான சட்ட மாறுதலுக்கும், பல லட்சம் மக்களுக்கு அனுகூலமாக இருக்கும் ஒபாமாகேர் செயல்படுத்த அரசிற்கு ஆதரவாகவும், அரசியலில் மதத்தின் தலையீட்டை விரும்பாத நீதிபதி ரூத்தின் பதவியில் நியமிக்கப்பட்டிருக்கும் ஏமி முற்றிலும் எதிரானவர். ஜனநாயக கட்சியின் எதிர்ப்பிற்கும் , பெரும்பாலான மக்களின் அச்சத்திற்கும் இதுவே காரணம். 

நாட்டின் அதிமுக்கியமான முடிவுகளை எடுக்கும் நீதிமன்றத்தில் ஆயுட்காலம் வரை நீடிக்கும் பதவியில் தற்பொழுது வலதுசாரிக் கொள்கைகள் கொண்ட குடியரசுக்கட்சியினரின் ஆதிக்கம் அமெரிக்க மக்களுக்கும் நாட்டிற்கும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பது எதிர்வரும் காலங்களில் தான் தெரிய வரும். 

அமெரிக்க தேர்தல் முடிவுகள்

இது அமெரிக்க ஜனநாயகத்தின் இருண்ட காலம்! 

இக்கட்டான நேரத்தில் வரலாறு காணாத நிகழ்வுகளைக் கடந்து அமெரிக்காவில் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. கோவிட் அச்சுறுத்தலால் அதிபர் வேட்பாளர்களின் மக்கள் சந்திப்புகள், வாக்குச் சேகரிப்பு, விவாத மேடைக்கூட்டங்கள் கூட இத்தேர்தலில் முறையான வரவேற்பை பெறவில்லை. குழப்பமான அரசியல் சூழலில் நவம்பர் 3ந் தேதி நடந்து முடிந்த அதிபர் தேர்தலின் இறுதி முடிவுகள் வெளியாகும் நாளுக்காக காத்திருந்த மக்களுக்கு 
நவம்பர் 7ந் தேதி விடை கிடைத்திருக்கிறது!

ஊடக கணிப்புகளைப் புறக்கணித்து 2016 தேர்தலைப் போலவே இவ்வருட தேர்தலும் அதன் முடிவுகளும் இருக்குமென குடியரசுக்கட்சியினர் தீவிரமாக நம்பியிருந்தார்கள். பல வருட அரசியல் அனுபவம், வெவ்வேறு உயர் பதவிகள், பொறுப்புகளை வகித்திருந்தாலும் ஹிலரி மீதிருந்த அதிருப்தியும், தேர்தலுக்கு முன்பாக விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஈமெயில் கலவரங்களும், தேசிய புலனாய்வு விசாரணை அதிகாரியின் பேட்டிகளும் அவர் மீதான நம்பிக்கையைக் குலைத்தது. பாப்புலர் வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருந்தும் எலக்டோரல் வாக்குகளில் தோல்வியைத் தழுவினார் ஹிலரி க்ளிண்டன். அமெரிக்காவின் முன்னேற்றம் மட்டுமே தனது குறிக்கோள், ‘மேக் அமெரிக்கா க்ரேட் அகைன்’ போன்ற உணர்ச்சிகரமான மக்களை வசீகரிக்கும் அதிரடிப் பேச்சுகளும், அரசியலைச் சாராத ரீகனின் ஆட்சியைப் போன்றதொரு அரசு மீண்டும் அமையும் என்ற நம்பிக்கையும் ஜனநாயக கட்சியினரால் கோமாளியாக சித்தரிக்கப்பட்டிருந்த ட்ரம்ப்பிற்கு எதிர்பாராத அமோக வெற்றித்தேர்தலாக அமைந்தது 2016. ஆனால், தற்போதைய தேர்தலில் ட்ரம்ப்-ன் நான்கு வருட ஆட்சியில் நாட்டின் போக்கில் ஏற்பட்டிருக்கும் மாறுதல்கள் தான் அவருடைய வெற்றி தோல்வியை தீர்மானித்திருக்கிறது.

முந்தைய தேர்தலில் நடந்த தவறுகள் மீண்டும் நிகழாத வண்ணம்  ஜனநாயக கட்சியினரின் தீவிர உழைப்பில் வெற்றி தமக்கே என்ற நம்பிக்கையும் பைடனின் கட்சியினரிடையே இருந்தது. 2016 கருத்துக்கணிப்பில் ஹிலரி இருந்த நிலையை விட 2020ல் பைடனின் எலெக்டோரல் வாக்குகளின் எண்ணிக்கையும், மாநிலங்கள் வாரியாக ட்ரம்ப்பை விட அதிக வித்தியாசங்களில் முன்னிலை வகிப்பதிலும் பெரும் வேறுபாடுகள்இருந்தன. அதுவே பைடனின் வெற்றிக்குரிய அறிகுறியாக இருந்தாலும் இறுதி நேர மாறுதல்கள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளதால் வாக்குகளின் எண்ணிக்கை முடிவுகள் வெளிவரும் வரை இரு கட்சியும் பதட்டத்துடனே இருக்கும் நிலை தொடர்ந்தது. 

தேர்தலுக்கு முன்

தொற்றுப்பரவல் நிகழாதிருக்க அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் நாளுக்கு முன்கூட்டியே வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிக்கவும், தபால் மூலமாக வாக்குகளை அனுப்பவும் அரசாங்க நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டன. பல மாநிலங்களிலும் குறிப்பாக சில ‘ஸ்விங் ஸ்டேட்ஸ்’களில் தேர்தல் முடிந்த மூன்று நாட்கள் வரை தபால் ஓட்டுகளை கணக்கில் சேர்த்துக் கொள்கிறார்கள். பல மாநிலங்களில் தேர்தல் நாள் முடிவதற்குள் வந்து சேரும் தபால் வாக்குகளை மட்டுமே எண்ணிக்கையில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. வரலாறு காணாத வகையில் வாக்களிக்கும் முறைகளும் எண்ணிக்கை வேலைகளும் இத்தேர்தலில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு குழப்பங்களும் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. இறுதி தேர்தல் முடிவுகள் வெளிவரும் நாட்கள் கூட ஒத்தி வைக்கப்படலாம். அப்படியே வெளிவந்தாலும் தனக்குச் சாதகமாக இல்லாத பட்சத்தில் தற்போதைய அதிபர் ட்ரம்ப் நீதிமன்றம் நாடலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. தேசிய அளவிலும், ஸ்விங் ஸ்டேட்ஸ்களிலும் ட்ரம்ப்பை விட பைடன் முன்னிலையில் இருப்பதும் அதிக வாக்குகளுடனும்பிரதிநிதிகள் சபை, செனட் பெரும்பான்மையுடன் அவரே வெற்றிவாகை சூடி அதிபராவார் என கருத்துகணிப்புகள் வெளிவருவதும் ஜனநாயக கட்சியினரை உற்சாகப்படுத்தியுள்ளது. அது உண்மையென நிரூபணமும் ஆகிக்கொண்டிருக்கிறது.

இரு கட்சியின் தீவிர விசுவாசிகளும் அந்தந்த கட்சிக்கே வாக்களித்தாலும் . வாக்களிக்க விரும்பாதவர்களின் முடிவு தான் இந்த தேர்தலை தீர்மானிக்கும் காரணியாக இருக்கப் போகிறது. 2016ல் நடந்தது போல வாக்களிக்காதவர்களின் வாக்குகள் ட்ரம்ப்புக்கு ஆதரவாக மாறி விடும் வாய்ப்புகளும் அதிகம் என்பதால் அனைவரையும் வாக்களிக்க அதிபர் ஒபாமா முதல் அனைத்து ஜனநாயக கட்சித்தலைவர்களும் கேட்டுக்கொண்டார்கள். புதிதாக இந்த வருடம் வாக்களித்தவர்களும், “ஸ்விங் வோட்டர்ஸ்” எனும் கடைசி நிமிட ஆதரவை அளிக்கும் வாக்காளர்களும் தங்கள் அதிபர் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க வேட்பாளர்களிடையே நடந்த மேடை விவாதங்கள் உதவியிருக்கும். சட்டப்படி இந்த விவாதங்கள் அவசியமில்லை என்றாலும் சமீப காலங்களில் தேர்தலின் அங்கமாகவே மாறியிருக்கிறது. வேட்பாளர்களின் கொள்கைகள், கருத்துப் பரிமாற்றங்கள், அதிபர்களாக தங்களை வெளிப்படுத்திக் கொள்ளும் தகுதிகள் என பலவும் வெளிப்படும் சாராம்சங்கள் மக்களைச் சென்றைடையச் செய்வதே இவ்விவாதங்களின் நோக்கம். அதிபர் வேட்பாளர்களிடையே மூன்று விவாதங்களும், துணை அதிபர் வேட்பாளர்களிடையே ஒரு நேருக்கு நேர் விவாதமும் மக்கள் முன்னிலையில் நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் அதிபரின் கொரோனா தொற்று காரணமாக இரண்டு விவாத மேடைக்கூட்டங்களில் மட்டுமே அதிபர் வேட்பாளர்கள் பங்கேற்றனர்.

இரண்டு விவாத மேடைகளிலும் நாடு தற்போது எதிர்கொண்டிருக்கும் தொற்றுநோய்ப்பரவல், சரிந்து வரும் பொருளாதாரம், தொடரும் இனப்போராட்டம், குடியேற்ற சீர்திருத்த சட்டங்கள், உச்சநீதிமன்ற நீதிபதியின் நியமனம், மருத்துவ காப்பீட்டுத்திட்டம் பற்றின அதிபர் வேட்பாளர்களின் கருத்துக்களை மக்கள் அறிந்து கொள்ளும் வண்ணமே கேள்விகள் அமைந்திருந்தது. 

மறைந்த உச்ச நீதிமன்ற நீதிபதி ரூத் கின்ஸ்பெர்க்கின் பதவிக்கு நீதிபதி ஏமி கோனி பாரெட்டை நியமிப்பது தவறு என்றும் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு வெற்றி பெரும் கட்சியினரே அதனை தீர்மானிக்க வேண்டும். அதுவே மக்களின் விருப்பமான தேர்வாக இருக்கும் என்ற ஜனநாயக கட்சியினரின் கோரிக்கையை 2016 தேர்தலில் மக்கள் தீர்மானித்து விட்டதாக ட்ரம்ப் பதிலளித்தது மட்டுமில்லாமல் தன்னுடைய செனட் உறுப்பினர்களைக் கொண்டு ஏமியை உச்சமன்ற நீதிபதியாகவும் பதவிப்பிரமாணம் செய்து விட்டார். இன்றைய நிலவரப்படி உச்சநீதிமன்ற நீதிபதிகளில் பலரும் குடியரசுக்கட்சியினரால் நியமிக்கப்பட்டவர்கள். இதுவே ஜனநாயக கட்சியினரின் அச்சத்திற்கு காரணமும் கூட. இந்த நிலையில் பல குழப்பங்களுடன் நடக்கும் தேர்தலின் முடிவுகள் உச்சநீதிமன்றத்தின் தலையீட்டால் ட்ரம்ப்பிற்கு சாதகமாக அமைந்து விடும் சாத்தியக்கூறுகளும் இருக்கிறது. தற்போதைய வாக்களிக்கும் முறையில் முறைகேடுகள் பல நடக்க வாய்ப்புள்ளது என்பதை அதிபர் ட்ரம்ப் கூறியதும் தேர்தல் முடிவுகள் வெளிவர தாமதமாகும் என்பதை ஊர்ஜிதப்படுத்துகிறது. 

நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கும் தொற்றுநோய்ப்பரவலை கட்டுக்குள் கொண்டு வராமல் பல்லாயிரம் உயிர்கள் பலியாக ஆளும் அரசின் அலட்சியப்போக்கும், மெத்தனமும், அறிவியலில் நம்பிக்கையின்மையுமே காரணம் என பைடன் கூறியதற்கு தன்னுடைய ஆட்சியில் இருந்ததை விட நிலைமை இன்னும் மோசமாகவே பைடனின் ஆட்சியில் இருந்திருக்கும் என்று அவருடைய பாணியில் ட்ரம்ப் பதிலளித்தது பொறுப்பற்றத்தனமாகவே இருந்தது. தன்னுடைய நிர்வாகம் அலட்சியமாக இருந்ததை ஒப்புக்கொள்ளாமல் சீனாவின் தவறு என்று பேசியதை மக்கள் எப்படி எடுத்துக்கொண்டார்கள் என்பதும் தேர்தலின் முடிவுகளில் எதிரொலிக்கலாம். 

கொரோனோவினால் அதல பாதாளத்திற்குச் சென்ற நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப்பாதையில் செல்வதாக ட்ரம்ப் கூறிய கருத்தை மறுத்தார் பைடன். பைடன் வெற்றி பெற்றால் வைரஸை கட்டுப்படுத்த நாட்டையே முடக்கும் அவருடைய முயற்சியால் பொருளாதாரம் சிதைந்து விடும். தன்னுடைய ஆட்சியில் பொருளாதாரம் முன்னேறுவதாக ட்ரம்ப் கூறியதில் சிறிது உண்மை இருப்பதும், பெரும் லாபங்கள் ஈட்டும் நிறுவனங்கள் அவருக்கு ஆதரவாக இருப்பதும் பலம். தேர்தலின் மிக முக்கிய அம்சமாக கருதப்படும் பொருளாதாரம் ட்ரம்ப்பிற்கு சாதகமாகவே இருக்கிறது. அமெரிக்காவின் அரசியல் கட்டமைப்பு என்றும் பெருஞ்செல்வந்தர்களுக்கு ஆதரவாகவே இருந்துள்ளது. $400,000 டாலருக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு வரி விதிக்கப்படும் என்ற பைடனின் புதிய கொள்கைக்கு ஆதரவு கிடைக்குமா? 

மக்களை இணைக்கும் தன்னுடைய அரசில் ஜனநாயக கட்சியினரின் தூண்டுதலினாலே போராட்டங்கள் தொடர்வதாகவும், காவல்துறையினருக்கான நிதியைக் குறைக்கும் திட்டங்களால் குற்றங்கள் அதிகரிக்கவே செய்யும் என்று எதிர்க்கட்சியினரைக் குறை கூறிய ட்ரம்ப்பிற்கு, தன்னுடைய ஆட்சியில் இதற்கான தீர்வைக் கையாளும் விதத்தில் குற்றங்களும், போராட்டங்களும் குறையும் என்றார் பைடன். அரசியலாக்கப்பட்ட இனக்கலவரம் ஜனநாயக கட்சியினருக்குச் சாதகமாகலாம் என்ற கணிப்பும் ட்ரம்ப்பிற்கு பாதகமே. பைடன் கூறுவது போல் “சிஸ்டெமிக் ரேசிஸம்” என்பது காலம்காலமாக தொடர்ந்து வருகிறது. ஒபாமா, க்ளிண்டன் அரசில் கூட ஒழிக்கவோ அதற்கான முயற்சிகளோ நடைமுறைப்படுத்தவில்லை. இன்று அதற்காக வாதாடும் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் கலிஃபோர்னியா அட்டர்னி ஜெனரலாக பதவி வகித்த காலத்தில் கறுப்பர்களுக்கு எதிராகவே நடந்து கொண்டதாக அவர் மேல் விமரிசனங்களும் உண்டு. புதிய அரசில் இதற்கான அதிரடி மாற்றங்கள் வருமா என்பதும் கேள்விக்குறி தான்!

இயற்கையை பாதிக்கும் கரி, கச்சா எண்ணெய் மற்றும் புதைபடிம எரிபொருள் பயன்பாடுகளைக் குறைத்து மாற்று வழிகளின் மூலம் ஆற்றலைப் பெருக்கி வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் கொள்கைகளுக்கு ஆதரவாக பைடன் அரசு செயல்படும் என்பதை பொய்ப்பிரச்சாரம் என்றார் ட்ரம்ப். இயற்கை ஆர்வலர்களின் வாக்குகள் சத்தமில்லாமல் ஜனநாயக கட்சியினருக்கே சென்றாலும் தொழிற்சாலைகளுக்கு எதிரான பருவநிலை மாற்றங்கள் குறித்தான பைடனின் கொள்கைகள் “ஸ்விங் ஸ்டேட்ஸ்”களில் அவருக்குப் போதிய ஆதரவைப் பெற்றுத் தந்திருந்தால் இந்நேரம் அவரே வெற்றியாளராக அறிவிக்கப்பட்டிருப்பார். 

அமெரிக்காவில் சட்டத்திற்குப் புறம்பாக குடிபெயர்ந்த குடும்பங்களின் குழந்தைகளையும் பெற்றோர்களையும் பிரித்தது மட்டுமில்லாமல் தற்போது குழந்தைகளின் பெற்றோர்களைக் கண்டறியும் வழிகளைத் தேடிக்கொண்டிருக்கும் ட்ரம்ப் அரசின் செயல்கள் மனிதாபிமானமற்றது என்று கூறிய பைடன், தன்னுடைய அரசு அவர்களுக்கு குடியுரிமை வழங்கும் சட்டங்களை நிறைவேற்றும் என கூறியதால் மெக்சிகன் அமெரிக்கர்களின் வாக்குகள் ஜனநாயக அரசிற்கு வலு சேர்க்கும் என்பதில் ஐயமில்லை. தங்கள் நாட்டை ‘சோஷியலிஸ்ட்’ நாடாக மற்ற நினைக்கும் பைடன்-பெர்னி அரசியலை எதிர்க்கும் அமெரிக்கர்களின் வாக்குகள் ட்ரம்ப்பிற்கே. 

23 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஒபாமா அரசால் கொண்டு வரப்பட்ட ‘ஒபாமாகேர்’ திட்டத்தில் பலனடைந்து வருகிறார்கள். அத்திட்டத்தை எதிர்த்து வரும் ட்ரம்ப் அதனை முற்றிலும் ஒழித்து அதற்கு மாற்றாக கொண்டு வரப்போகும் புதிய திட்டம் மக்களுக்குப் பலனளிக்கும் என்று கூறினாரே ஒழிய அதன் சாதக பாதகங்களைத் தெளிவுப்படுத்தவில்லை. இதனால் பலரும் பாதிக்கப்படுவார்கள் என்பதால் பலத்த எதிர்ப்பும் உள்ளது. ஒபாமாகேரில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு மக்களுக்கு உதவும் வகையில் குறைந்த செலவில் ‘பைடன்கேர்’ மருத்துவ காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று பைடன் கூறியது கவனத்தைப் பெற்றுள்ளது.

தேர்தலைப் புறக்கணிக்காமல் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று பைடன் வேண்டுகோள் விடுக்க, வாக்காளர்களின் தகவல்களை முறையாக பரிசோதிக்காமல் வாக்களிக்க அனுமதிப்பதில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பிருப்பதாகவும், தேர்தல் முடிவுகள் சாதகமாக இல்லாத பட்சத்தில் ட்ரம்ப் அரசு பிரச்னைகளைக் கிளப்பலாம் என்ற எதிர்பார்ப்புடனும் தேர்தல் முடிவுகளுக்காக காத்திருக்கிறது அமெரிக்கா.

அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால் கோவிட் வைரஸ் காலத்திற்கு முன் இருந்த அமெரிக்காவை நோக்கி நாட்டை வெற்றிகரமாக வழிநடத்துவேன் என ட்ரம்ப்பும், தனக்கு வாக்களிக்காதவர்களுக்காகவும் சேர்த்து அமெரிக்காவின் அதிபராக நாட்டை முன்னேற்றும் திட்டங்களை செயல்படுத்துவேன் என பைடனும் விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள்.

2020 தேர்தலில் வாக்களிக்கும் வெள்ளை அமெரிக்கர்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் குறைந்து சிறுபான்மை மக்களின் எண்ணிக்கை அதுவும் லட்டினோ, மெக்ஸிகன், ஆசியர்களின் வாக்குகள் ஃப்ளோரிடா, அரிசோனா, டெக்சாஸ்,நெவாடா, கலிஃபோர்னியா மாநிலங்களில் அதிரிகரித்திருப்பது தேர்தலின் முடிவுகளை மாற்றக்கூடிய சக்திகளாகி இருக்கிறது. கறுப்பர்களும், மெக்ஸிகன் அமெரிக்கர்களும், லட்டினோக்களும், ஆசியர்களில் பெரும்பாலோனோர் ஜனநாயக கட்சிக்கு ஆதரவளிப்பதாகவும் , கியூபன் , இந்திய அமெரிக்கர்களும் குடியரசுக்கட்சிக்கு ஆதரவாளர்களாக இருப்பதாக கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளது. மாறி வரும் இந்த எண்ணிக்கைகள் அமெரிக்க அரசியலில் வெள்ளை அமெரிக்கர்களின் எலெக்டோரல் வாக்குகளையும் குறைத்துக் கொண்டு வருவது எதிர்கால அரசியல் மாற்றங்களுக்கு வழிவகுக்கும். இந்த தேர்தலிலும் எதிரொலிக்கும். 

தேர்தலுக்குப் பின்

நான்கு வருடங்களாக அதிபராக இருப்பவருக்கும் எட்டு வருடங்கள் துணை அதிபராக ஒபாமா அரசில் பதவி வகித்தவரும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் இருப்பவருக்குமான போட்டி இது. என்ன தான் அரசியலில் மதங்களின் தலையீடு இல்லை என்று கூறினாலும் தற்போதைய அரசியலில் அதிபரைத் தீர்மானிக்கும் மறைமுக அங்கமாகவே மதங்களும் இருந்து வருகிறது என்பதே இத்தேர்தலின் முடிவுகள் தெளிவுப்படுத்துகிறது. 
வரலாறு காணாத அளவில் அதிக மக்கள் இந்த தேர்தலில் வாக்களித்துள்ளனர். தங்களுடைய நாட்டை வழிநடத்திச் செல்லும் அதிபர் வேட்பாளர்களின் வலிமையையும் பலவீனத்தையும் ஒப்பிட்டு “ஸ்விங் வோட்டர்ஸ்” தீர்மானிக்கப் போகும் அதிபர் யார் என்பதை அறிவித்து விட்டது இந்த தேர்தல். 

கொரோனா தொற்று அச்சம் காரணாமாக தபால் மூலமாகவும், தேர்தலுக்கு முன்பாகவும் அதிகமான அளவில் வாக்களித்தவர்கள் ஜனநாயக கட்சியினரின் ஆதரவாளர்கள். தேர்தல் அன்று வாக்களித்தவர்களில் பெரும்பாலோனோர் குடியரசுக்கட்சியினர். அன்று நடந்த எண்ணிக்கையில் ட்ரம்ப் முன்னேறியதும் அதன் தொடர்ச்சியே. தேர்தல் முடிவுகள் முற்றிலுமாக வெளிவரும் முன்னரே தன்னை வெற்றியாளராக அறிவித்துக் கொண்ட ட்ரம்ப் , தொடரும் தபால் வாக்குகளின் எண்ணிக்கைகளில் பைடன் முன்னேறியதும் மோசடி நடந்திருப்பதாக வழக்கு தொடுத்திருக்கிறார். ஆளும் அரசின் நடவடிக்கைகள் 2000 வருட தேர்தலை நினைவுறுத்தினாலும் நீதிமன்றத்தின் தலையீடும் முடிவுகளும் ட்ரம்ப்பிற்குச் சாதகமாக இருக்குமா என்பதே இன்றைய நாளின் விவாதமாக மாறியிருக்கிறது. 

நாட்டைத் துண்டாடும் விதத்தில் பேச்சுகளும் நடவடிக்கைகளும் உள்ள தற்போதைய அதிபர் ட்ரம்ப் மீது மக்கள் அவநம்பிக்கை கொண்டுள்ளார்கள். நான்கு வருட மோசடி அரசியல், கொரோனா தொற்றுப்பரவலால் 233,000 மக்களுக்கு மேல் உயிரிழப்பு, தொடரும் இனவெறிப் போராட்டத்தால் அமெரிக்கா முழுவதும் தங்களுக்குச் சாதகமாக நீல அலை வீசும். எளிதில் வென்றுவிடலாம் என்ற ஜனநாயக கட்சியினரின் கணக்கு இத்தேர்தலில் சற்று பொய்த்துத்தான் போயிருக்கிறது!  இன்றும் சிகப்பு அலை வீசும் பல மாநிலங்களும், குடியரசுக்கட்சி மற்றும் டிரம்ப்ன் மீதும் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையும் ஜனநாயக கட்சியினரிடையே பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது. தேர்தலில் பலத்த சரிவைச் சந்திப்பாரென எதிர்க்கட்சியினர் எதிர்பார்த்திருந்த வேளையில், 48 சதவிகித பாப்புலர் வாக்குகளையும் 2016 தேர்தலை விட கூடுதலாக ஐந்து மில்லியன் வாக்குகளையும் பெற்று வலிமையான குடியரசுக்கட்சித் தலைவராக உருவெடுத்திருக்கிறார் ட்ரம்ப். சிறுபான்மையினருக்கு எதிரானவர், இனவெறியைத் தூண்டுபவர் என எதிர்க்கட்சியினரால் உருவகம் செய்யப்பட்டிருந்த போதும் முந்தைய தேர்தலை விட கருப்பர், கியூபன், லட்டினோ மக்களின் ஆதரவு கூடியுள்ளது. ஃப்ளோரிடாவில் சிறுபான்மையினரின் ஆதரவில் வெற்றியைப் பெற்றிருந்தாலும், மெக்ஸிகன் அமெரிக்கர்களின் ஆதரவு குறைந்த நிலையில் அரிசோனாவில் தோல்வியைத் தழுவியுள்ளார். 24 வருடங்களாக குடியரசுக்கட்சியின் கோட்டையாக இருந்த அரிசோனாவின் இழப்பு ட்ரம்ப்பிற்கும் கட்சிக்கும் எதிர்பாராத சரிவை ஏற்படுத்தியுள்ளது. எதிர்ப்புகள் பல இருந்தும் தற்போது கிடைத்திருக்கும் ஆதரவில் மாபெரும் சக்தியாக நாட்டைச் சீர்குலைக்கும் அபாயமும் உள்ளதோ என அச்சப்பட வைத்திருக்கிறார். 

2016 தேர்தலில் ட்ரம்ப்பிற்கு வெற்றியைத் தேடித்தந்த சில மாநிலங்கள் இன்று பைடனுக்கு வெற்றிவாய்ப்பை அளித்திருக்கிறது. பைடனின் வெற்றியால் தன்னுடைய தோல்வியை ஒத்துக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறார் அதிபர் ட்ரம்ப். வாக்கு மோசடிகளால் ட்ரம்ப் வெற்றி பெறவில்லையென தீவிரமாக நம்பும் மக்கள் அவருடைய குற்றச்சாட்டுகளுக்கும் ஆதரவாக இருக்கிறார்கள். அதிகளவில் மக்களின் ஆதரவைப் பெற்ற எதிர்க்கட்சித் தலைவராக வெற்றி பெற்றிருக்கிறார் ட்ரம்ப் . இன்று, நாளை என தொடரும் தேர்தல் கலாட்டாவினால் உலக அரங்கில் தலைகுனிந்து நிற்கிறது ‘சூப்பர் பவர்’ அமெரிக்கா!

கொரோனா வைரஸ் நாட்டின் தலையெழுத்தை மாற்றி விட்டது!

அமெரிக்காவின் மூன்று தூண்களில் ஒன்றான சட்டமன்றத்தில் செனட் பெரும்பான்மை கொண்ட கட்சியால் மட்டுமே சமூக நலத்திட்டங்களில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வர முடியும். பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மை கொண்ட ஜனநாயக கட்சி செனட்டையும் கைப்பற்றவில்லை எனில் அடுத்த நான்கு வருடங்கள் செனட் அதிகார ஆட்சிக்காலமே தொடரும் என்பதில் ஐயமில்லை. குடியரசுக்கட்சியின் கொள்கைகள் சார்ந்த நீதிபதிகளின் பெரும்பான்மையால் மூன்றாவது தூணான உச்ச நீதிமன்றமும் ஜனநாயக கட்சிக்குச் சாதகமாக செயல்படும் சாத்தியக்கூறுகள் குறைவு. இந்நிலைமையும் விரைவில் மாறலாம் என்ற நம்பிக்கையுடன் நாடு முழுவதும் மக்கள் கொண்டாடும் தினமாக மாறியிருக்கிறது முடிவு வெளியான இந்நாள்!
அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக கறுப்பின, இந்திய வம்சாவளிப் பெண் துணை அதிபராக பொறுப்பேற்கும் கமலா ஹாரிஸுக்கும், பிளவுபட்டு நிற்கும் நாட்டை இணைக்கும் சக்தியாக மக்களின் அமோக ஆதரவைப் பெற்று 46வது அதிபராக பதவியேற்கும் ஜோ பைடனுக்கும் வாழ்த்துகள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.