அயாத் அக்தர் – ஹோம்லாண்ட் எலிஜிஸ்

இந்த நாவல், “உணர்ச்சிகரமாகவும் மனதை உரசிப் பார்ப்பதாகவும் கீழே வைக்க முடியாததாகவும்” இருப்பதாக சல்மான் ருஷ்டி கூறுகிறார். “மாந்திரீக எதார்த்தம்” (மேஜிகல் ரியலிசம்) பாணியில் இந்தப் புனைவு அமையாவிட்டாலும் ருஷ்டியின் பிரதேசங்களான – குடும்பம், இடம் பெயர்தல், மதம், முதலாளித்துவம் – எல்லாமே சரியான விகிதங்களில் இடம்பெற்றுள்ளது. அயாத் அக்தரின் சுயசரிதையா அல்லது கற்பனையில் அமைந்த புனைவா என்னும் குழப்பம் அவ்வப்போது எழுமளவு உருமாறிப் பாய்ந்தோடுகிறது.

விஸ்கான்சின் என்னும் வெள்ளையர் மிகுந்த, நகரமல்லாத மாநிலத்தில் பிறந்தவர் – நாவலின் நாயகன் “அயத் அக்தர்”; நியு யார்க் போன்ற நவீன உலகிற்குள் இந்தக் காலத்தைத் தள்ளுகிறார். அவருடைய அப்பாவின் வார்த்தையிலே, அயாத்தின் அப்பாவைப் பற்றி சொல்வதானால், “அவர் ஒருபோதும் பாகிஸ்தானில் வசிப்பதை நேசிக்கவில்லை.” ஆனால், அம்மாவிற்குச் சோவியத் ருஷியாவிற்கு எதிராகப் போரிடச் சென்ற லதீஃப் என்பவரிடம் சற்றே மையல். உலக வர்த்தக மையம் தகர்க்கப்பட்ட 9/11 தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு அம்மா சொல்வார்: “அவர்கள் எதைப் பெற்றார்களோ, எதையெல்லாம் பெறப் போகிறார்களோ – எல்லாவற்றுக்கும் அவர்கள் தகுதியானவர்கள்.” “அவர்கள்” என்று அமெரிக்கர்களை, தான் வாழும் நாட்டை, தான் குடியுரிமை பெற்ற நாட்டைச் சொல்லும் தாயின் மனப்பான்மை கொண்டோரை நிறையவே பார்த்திருக்கிறோம்.
கதையின் நாயகன் பெயரும் எழுதியவரின் பெயரும் ஒன்றே. சல்மான் ருஷ்டி எழுதிய “ஜோசப் ஆண்டன்” நினைவுக்கு வரலாம். அக்தர் உருவாக்கும் கதாபாத்திரங்கள் உண்மையானவை; விவகாரமானவை. கதையில் வரும் அத்தைகளும் மாமாக்களும் அமெரிக்க முதலியத்தில் திளைந்துக் கொழிக்கும் சித்தப்பா / பெரியப்பாகளும் இஸ்லாம் மீண்டும் தலைதூக்கும் என்று தீவிரமாக நம்புகிறார்கள். அக்தரின் பெற்றோர்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. அக்தரினால் பயனடையும் ரியாஸைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. இவர்கள் நடுவே கோமாளிகள் பலர் உலாவுகிறார்கள். கூடவே டொனால்டு ட்ரம்ப்கூட வந்து போகிறார்.
தன்னுடைய நாவல் “முஸ்லிம்” என்று வகைப்படுத்தப்படுவது, அல்லல்படுத்தும் ஒன்றாக இருப்பதாக அக்தர் நேர்காணலில் சொல்லியிருக்கிறார். நாம் எந்த நாவலையும் கருப்பினப் புனைவு, ஹிஸ்பானிக் புனைவு என்று சுருக்குவதில்லை. இது அமெரிக்க நாவல்.
- Homeland Elegies by Ayad Akhtar
- கோப்பு அளவு: 1362 KB
- பக்கங்கள்: 368
- வெளியான நாள் : செப்டம்பர் 8, 2020
- அச்சு நீளம் : 369 pages
- பதிப்பகம் : Tinder Press (September 8, 2020)
- வெளியீட்டாளர்: Little, Brown and Company
- மொழி : ஆங்கிலம்
- ASIN : B0855ZBQHK
- ISBN : 0316496421
- ISBN-13: 9780316706483
சிவசங்கரி – இனி

வெளிநாட்டில் வாழும் இந்தியரை மையமாகவைத்து மிகவும் குறைவான புனைவுகளே வருகின்றன. இந்தச் சமயத்தில் இந்த நாவல் கண்ணில்பட்டது. இது உண்மைக்கு அருகிலா, இந்த மாதிரிக் கதை எங்கு வேண்டுமானாலும் நிகழலாமா, இதில் அமெரிக்கப் பின்புலம் எந்த அளவிற்குத் தேவை என்பதை விரிவாக அலசவேண்டும்.
பதிப்புக் குறிப்பில் இருந்து:
பணி மேற்கொண்டு அமெரிக்கா போகிறான் தமிழன். அங்கேயே அந்த நாட்டின் குடிமகனாகி, மனைவி மக்களோடு நிரந்தரமாகத் தங்கிவிடுகிறான். தன் தாய்நாட்டின் நினைப்பையும், கலாச்சாரங்களையும், பழக்க வழக்கங்களையும் அவன் மறப்பதில்லை. இது பழைய தலைமுறை.
வேற்று நாட்டில் போய் வேரூன்றி வாழும் நிலையில் புதிய தலைமுறையினரின் நிலை என்ன? இதை மையமாகக் கொண்டு, மக்களின் மனோபாவங்களையும் வாழ்க்கைப் பிரச்சினைகளையும் அலசி ஆராய்ந்து, பண்பட்ட எழுத்தாளராகிய திருமதி. சிவசங்கரி அவர்கள் ஓர் அற்புதமான சித்திரத்தை உருவாக்கிக் காட்டி இருக்கிறார். ‘இனி…?’ என்ற நாவலில் அமெரிக்க நாட்டில் தங்கி உயர்ந்த பதவிகளில் பணியாற்றும் இந்தியக் குடும்பங்களின் பிரச்சினைகளை, அவர்கள் மனோபாவங்களை, வாழ்க்கை முறையை ஜன்னல் வழியே பார்ப்பதுபோல் தத்ரூபமாக்கிக் காட்டியுள்ளார். அமெரிக்க நாட்டின் நவீன வாழ்க்கை வசதிகளை விவரிக்கும்போது ஒரு சிறந்த பயண நூலைப் படிப்பது போன்ற பிரமை ஏற்படும் உங்களுக்கு.

வெங்கட் – மைதிலி தம்பதிகளும் அவர்களுடைய இரு குழந்தைகளும்தான் இந்த நாவலின் முக்கியக் கதாபாத்திரங்கள். அதிலும் நாவல் நாயகி பிரச்சினைகளுக்குக் காரணமான மைதிலியின் மகள் கெளரி. அமெரிக்கப் பிரஜையாகிவிட்ட மைதிலி தான் வளர்ந்த தமிழ்நாட்டுக் குடும்பச் சூழ்நிலையை அடிக்கடி ‘ஃபிளாஷ் பேக்’ பாணியில் நினைவுபடுத்திக்கொள்வது நாவலுக்குச் சுவையூட்டி விறுவிறுப்பைத் தருகிறது. வயதுக்கு வந்துவிட்ட தங்கள் மகள் கெளரியை அமெரிக்க நாகரிகச் சூழலில் இந்தியப் பண்பாட்டுப்படி வளர்க்க வேண்டும் என்று ஆசைப்படும் மைதிலி – வெங்கட் தம்பதிகளின் மனப்போராட்டமே ‘இனி’யின் ஆணிவேர். இதேபோன்ற பல இந்தியக் குடும்பங்களின் பல்வேறு பிரச்சினைகளும் இந்த ஆணிவேருக்குச் சல்லிவேர்களாக அமெரிக்க மண்ணில் வேர் விட்டுள்ள ஆலமரத்தின் விழுதுகளாக்கி இருக்கிறார் ஆசிரியர்.
- வெளியான தேதி : December 18, 2016
- கோப்பு நீளம் : 663 KB
- அச்சு நீளம் : 395 பக்கங்கள்
- ASIN : B07KMCBNR4
பொன் மகாலிங்கம் – அங்கோர் வாட்
நாஞ்சில் நாடன் முன்னுரையுடன் இந்த பயணக்கட்டுரை நூல் வெளியாகி இருக்கிறது. அவரின் அறிமுகம்:
அங்கோர் வாட் ஆலயத்தின், மீகோங் நதியின், புனோம் பென் அரண்மனையின், அருமையான நிழற்படங்கள் வெளியாகியிருக்கின்றன இந்த நூலில். நூலாசிரியரின் தொழில் அனுபவமும் தேர்ச்சியும் புலப்படுத்தும் பல நிழற்படங்கள் உண்டு. இயற்கையையும் சிற்பங்களையும் வரலாற்றையும் பேசும்போது பொன் மகாலிங்கம் ஆழமான புரிதலோடு சமகால நிகழ்வுகளையும் குறிப்பிடுகிறார். வரலாற்றுக் குறிப்புகளையும் தருகிறார் நூலாசிரியர். பாடம் கேட்பது போல இருக்கிறது.

அங்கோர் வாட் வளாகத்தில் தலை உள்ளதும் இல்லாததுமான புத்தர் சிலைகள், கருவறை, ஆயிரம் ஆண்டுகளாக அங்கு நடந்த சேதங்கள், அழிவுகள், ஊனப்படுத்துதல்கள், சிதைவுகள் என மனத்தைக் கனக்கச் செய்யும் விவரணைகளும் படங்களும், பற்பல இந்நூலில்.
ஓப்பீட்டளவில் அங்கோர் வாட் சிற்பங்களுடன் தஞ்சைப் பெருவுடையார் கோயில் சிற்பங்களும் பேசப்பட்டுள்ளன. நிழற்படங்களும் தாராளமாகத் தரப்பட்டுள்ளன. மும்மூர்த்திகளின் உருவம் தாங்கிய கம்போடியக் கல்வெட்டு, அன்னப் பறவை மீதமர்ந்த வருணன், மன்னரின் ஈமத்தாழி போன்ற அற்புதமான படங்களும் உண்டு. அங்கோர் வாட் ஆலய வளாக அமைப்பு, கட்டுமானக் கலை, சிற்பக்கலை நுட்பங்கள் என விரிவாகப் பேசப்பட்டுள்ளது.
- பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ்
- வெளியீடு : 1 ஜனவரி 2018
- பக்கங்கள் : 216
- ASIN : B07TF5VF76
- ஐ.எஸ்.பி.என்: 978-93-86555-59-5
- விலை : ரூ. 200/-