குரங்காட்டம்

நா. வேங்கட ராகவன்

அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம் உண்டபின் சோபாவில் அயர்ந்துவிட்டேன். பெங்களூரில் சற்று ஊருக்கு வெளியே அமைந்த அடுக்கு மாடி வீட்டுக்கு குடிவந்து இரண்டு வாரமாகி இருந்தது அப்போது. வினோதமான ஒலிகள் கேட்டு சட்டென்று விழித்து பார்த்தால் மேஜைக்கு பக்கத்தில் என்னை திரும்பி பார்க்கிறது ஒரு குரங்கு. இவ்வளவு அருகில் குரங்கை கண்டதில்லை வெகு காலத்தில். இருபது வருடமாய் வெளிநாட்டில் காங்கிரீட் காட்டில் வசிக்கையில் பார்த்தது எல்லாம் குரங்கு சேட்டை செய்த சகாக்கள் தாம். சற்று சுதாரித்து பார்க்கையில் இன்னொரு குரங்கு ஒய்யாரமாய் நடந்து சமையல் கட்டில் மேடைக்கு தாவுகிறது . நான் சட்டென்று குதித்து ஒலி எழுப்பியதும் அவைகளில் சிறியது என்னை முறைக்க அடுத்தது வெகுவிரைவாய் வந்தவழியே வெளியேறுவது உசிதம் என்பது போல ஓட சிறியதும் அதனை தொடர்ந்தது. பார்த்தால் மேஜையில் வைத்து இருந்த நொறுக்கு தீனி உருளைசீவல் இறைந்து கிடந்தது. சாப்பிட்டு பிடிக்கவில்லையோ என்னமோ அதற்கு?

அதற்கு மறுநாள் காலை வீட்டை சுத்தம் செய்யும் பெண்மணி வந்து பால்கனியை பெருக்கும்போது சொன்னேன். உள்ளே வந்தவுடன் உடனே பால்கனி கண்ணாடி கதவை மூடும்படி . முன்தினம் நடந்த குரங்கு நிகழ்வை கூறி. இந்த குடியிருப்பில் இது வெகுசகஜம் என்றாள் அவள். இந்த கட்டிடத்தில் கொஞ்சம் குறைவு தான். காட்டை பார்த்திருக்கும் பின் கட்டிடங்களில் அதிக தொல்லையாம் சொன்னாள் அவள். முந்தைய வாரம் ஏழாவது பிளாக்கில் இவள் வேலை செய்யும் இன்னொரு வீட்டில் ஏக துவம்சமாம். அந்த வீட்டில் டிவியை குரங்கு கவிழ்த்து கீழே விழுந்து உடைந்து போனதாம். ஒரு லட்சம் ரூபாய் விலை சாமானாம் அது. சமையல் அறையில் குளிர்சாதனப்பெட்டி திறந்து எல்லாம் களேபரமாய் கிடந்ததாம். ஏன் அவர்கள் வெளியே செல்கையில் பால்கனி கதவை சரியாக அடைக்கவில்லையோ என்று கேட்டேன். வீட்டில்தான் பெண் இருந்தாளாம். குளியறையில் இருந்து வந்தவள் குரங்கு குளிர்சாதன பெட்டியில் இருந்து உணவுப்பொருட்களை இழுத்து போடுவதை பார்த்தவள் நடுங்கி விட்டு சத்தம் போட்டு இருக்கிறாள். அப்போதும் அந்த குரங்கு விலகாமல் இவளை பார்த்து பல்லைகாட்டி பயமுறுத்தியதாம். இவள் இன்னும் சத்தம் போட மேஜைக்கு தாவி அங்கிருந்து டிவி மேல் தாவி பால்கனி செல்ல டிவி கீழே விழுந்து உடைந்தது. பெரிய குரங்காம். பணி செய்பவள் மேலும் சொன்னாள். இதுவே அந்த பெண்ணின் கணவன் வீட்டில் இருந்திருந்தால் குரங்கு உடனடியாய் வெளியேறி இருக்கும். அல்லது நுழைந்து இருக்காது. இந்த குரங்குகள் பெண்களை தான் பயமுறுத்துகின்றன. இதை மகள் வீட்டுக்கு சென்று இருக்கும் மனைவியிடம் சொல்லவேண்டும் என்று நினைத்துகொண்டேன். குரங்குக்கு தெரிகிறது மரியாதை என்று. அப்போதிருந்து நான் ஜன்னல்களில் இருந்து அனைத்தையும் சரியாக தாழிட்டு வந்தேன். அவ்வப்போது பால்கனிக்கு வரும் குரங்கு அப்படியே சென்றுவிடும்.

அதெல்லாம் ஆறு ஏழு மாதத்துக்கு முன்பு வரை. இப்போது எல்லாம் குரங்குகளே இல்லை. எக்காலமும் குடியிருப்பில் அவ்வப்போது தென்படும் குரங்கு ஓரிரண்டு மாதங்களாக தென்பட வில்லை என்பதே நாங்கள் முதலில் உணரவில்லை . அந்த கொரோனா முழு அடைப்பு ஆரம்ப காலத்தில் கொரோனா செய்தியும் அதை பற்றிய ஸ்மரணை மட்டுமே இருந்தது. குடியிருப்பில் ஏகத்துக்கும் கெடுபிடி வேறு. அரசாங்க நிர்வாக கெடுபிடியே எவ்வளவோ மேல். கிட்டத்தட்ட ஆயிரம் குடும்பங்கள் வசிக்கும் பரந்த அடுக்குமாடி வளாகத்தில் ஓரளவு உள்கட்டுப்பாடுகள் தேவைதான். ஆனால் வளாகத்தின் உள்ளே உடற்பயிற்சியாக நடப்பதை கூட தடை செய்து விட்டார்கள். ஏற்கெனவே வளாகத்தில் இருந்த உடற்பயிற்சிக்கூடமும் மூடப்பட்டு விட்டது. நடக்க கூட இல்லை என்றால் எப்படி சாப்பாடு செரிக்கும்.

வளாக சுற்றில் இருக்கும் பெரு வாயிலில் இருந்து ஆரம்பித்தது இந்த கட்டுப்பாடுகள். வெளி ஆட்கள் யாருக்கும் உள்ளே அனுமதி இல்லை. வாயிலில் இப்போது இரட்டிப்பு எண்ணிக்கையில் பாதுகாவலர்கள். வெளிஆட்களுக்கு உள்ளே அனுமதி இல்லை. வளாக குடிமாந்தர்கள் வெளியில் சென்று வரும்போது உடல் வெப்ப பரிசோதனைக்கு பிறகே அனுமதி. யாராவது செருமினால் கூட அனைவரின் சந்தேக பார்வைகள். இருமினால் போச்சு. ஆம்புலன்ஸ்க்கு சொல்லிவிடுவார்கள். வளாக வசிப்பாளர்களுக்கு இருந்த மின்னஞ்சல் மற்றும் வாட்ஸாப் குழுக்களில் தினசரி கட்டுப்பாடு செய்திகள், பயமுறுத்தல்கள் என்றே சொல்லலாம், வளாக நிர்வாக குழுவின் செயலாளர் என்ற பெயரில் வரும். தொலைக்காட்சியிலும் சமூக ஊடக காணொளியிலும் காவலர்களின் அத்துமீறல்கள் மற்றும் அடக்குமுறை செய்தி பார்க்கும்போது வியப்பு மேலிடவில்லை. நிர்வாகத்தில் இருப்பவர்களுக்கு கோவிட்-19 ஒரு அதிகார வாய்ப்பு. தங்களின் உள்கிடக்கை அதிகார இச்சையை, பலத்தை முழு வீச்சில் காட்ட அருமையான சந்தர்ப்பம். பொதுநல நோக்கில், இந்த அறிவிலி மக்களை காப்பாற்றும் பொறுப்பில் தாங்கள் ஒரு வேள்வி செய்வதாக தங்களை ஏமாற்றிக்கொண்டு அதிகார இச்சையை தீர்த்துக்கொள்ள சிறந்த தருணம். கொஞ்சம் வசதியான நடுத்தர வர்க்கம் வசிக்கும் கொஞ்சம் படித்த இந்த வளாக குடிமாந்தர்களிடையே இயங்கும் அடிப்படையில் அவசியமற்ற வளாக வசதி நிர்வாகமே இப்படி செய்யும்போது, இரவு பகல் பாராது கடும் பணியாற்ற கடமைப்பட்ட அரசாங்கத்தை எப்படி குறை கூறுவது?

அத்தனை குடியிருப்பில் வெகு சிலரே வெளியில் வேலை பார்க்க சென்றனர். மற்றவர்கள் எல்லாம் என்னை போல வீட்டிலிருந்து வேலைதான். கணினி முன்பு அமர்ந்து காணொளியில் தான் அலுவல் கூட்டங்கள், ஆலோசனை கலந்தாய்வுகள். எட்டு மணிக்கு அலுவலகத்துக்கு வெளியே கிளம்பும் வழக்கம் மாறி ஒன்பது மணிக்கு கணினி முன் ஒழுங்கான சட்டை பேண்டுடன் முழு தயாராக தான் முதலில் ஆரம்பித்தது இந்த காணொளி கூட்டங்கள். நாட்கள் செல்ல செல்ல அனைவரும் காணொளியை முடக்கி கேமரா ஆஃப் செய்து வெறும் பேச்சை மட்டுமே கேட்கும் வழக்கம் ஆரம்பிக்க நானும் சட்டை பேண்டு சட்டை செய்யாமல் பனியன் லுங்கியில் அமர ஆரம்பித்தேன். காணொளியில் அவரவர் நேரிடை முகங்களுக்கு பதிலாக அவர்களின் நிழற்படங்கள். மென்பொருளில் ஒப்பேற்றிய ஒப்பனை செய்த படங்கள். சில சமயம் அவளா இவள் என்றும் வியக்கச்செய்வது.. கோவிட்-19 க்கு முன்பு சமூக நிழல் வாழ்க்கையில் தான் இப்படி ஒப்பேற்றுதல்கள். இப்போது அலுவலிலும் இது புகுந்து விட்டது. நாம் பேசும் போது ஒருவர் கேட்கிறாரா என்று கூட சந்தேகமாய் இருக்கும். அவர் தேநீர் தயாரித்துக்கொண்டு இருக்கலாம். குழந்தைக்கு டயாபர் மாற்றிக்கொண்டு இருக்கலாம். கிரிக்கெட் பார்த்துக்கொண்டு அல்லது சல்லாபித்துக்கொண்டும் இருக்கலாம். முகப்பு படம்தான் இருக்கிறதே எல்லாவற்றையும் மறைத்து. கழுதையை பொலிவான குதிரையாக காண்பிக்கும் படம். குரங்குகள். குரங்கை மறந்தே விட்டேன் ஸ்ரீராமை பார்க்கும்வரை.

ஸ்ரீராம் வளாகத்தில் பின்னால் இருக்கும் காடு பார்த்த பிளாக்கில் வசிப்பவர். மெட்ரோ ரயிலில் காலையில் ஒரே நேரத்தில் பயணத்தில் அறிமுகம் ஆகி தொடர்ந்து மெட்ரோவில் தினசரி பேச்சு வழக்கமாய் எனக்கு வளாகத்தில் முதலில் பழக்கமான நண்பர். அன்று வளாக மளிகை கடையில் பார்த்தவர் “இங்கே தான் இருக்கிறீர்களா? சென்னை போய் விட்டீங்களோன்னு நினைத்தேன்” என்றார்.

“இல்லை இங்கேதான்” என்றேன் .

“ஆமாமாம். மாஸ்க் போடறதுல சில சமயம் பக்கத்துல இருந்தா கூட ஆள் யாருன்னு தெரிவதில்லை” என்று சிரித்துவிட்டு “வாங்க இங்க பார்க் ல உக்காந்து பேசுவமே. இந்த வைரஸ் லாக்டௌன் ஆரம்பிச்சு பாக்கலை . மூணு மாசம் ஆச்சா?” என்று மேலும் தொடர்ந்தார் “சோசியல் டிஸ்டன்சிங், நீங்க அந்த பெஞ்ச் நான் இங்க. இன்னொரு நண்பரும் வருவார் இப்ப” என்றார்.
“குரங்குகள் காணாம போச்சே, பார்த்தீங்களா?” என்று ஆரம்பித்தார்.

“நானும் யோசிச்சேன்” என்றேன். உண்மையில் அவர் சொன்ன பிறகுதான் எனக்கு அந்த யோசனையே வந்தது. “ஏன் வர்றதில்லை இப்ப?” என்றேன்.

“வர்றதில்லை இல்லை, குரங்குகள் இல்லை” என்றார் ஸ்ரீராம். அவர் எப்போதுமே ரொம்ப தீர்மானமாக பேசுவார்.

“கொரோனா வணக்கம் ஸ்ரீராம்” என்று வந்தார் இன்னொருவர். ஸ்ரீராம் “வா வேலா, இவர் என்னுடைய மெட்ரோ நண்பர்” என்று என்னை அறிமுகப்படுத்தினார். “வேலாயுதன் என் பிளாக் தான், நெடு நாள் நண்பர், வீட்டில் தான் சந்தித்து பேசுவோம் . இப்போது கொரோனா புண்ணியத்தில் இங்கே வெளியில் சந்திக்கிறோம் மாலையில். அது கூட இந்த வாக்கிங் மற்றும் பார்க் கெடுபிடிகளை தளர்த்திய ஒரு வாரமாக தான். ஜூன் மாதம் இப்ப, மூன்று மாதம் லாக்டௌனில் ஓடிவிட்டது” என்றார் ஸ்ரீராம். வேலாயுதன் ஸ்ரீராம் இருந்த பெஞ்சில் மற்றொரு ஓரத்தில் அமர்ந்தார். ஸ்ரீராம் முகக்கவசம் பின்னாலிருந்து சற்று உரக்க பேசினார் “குரங்குகள் ஏன் இல்லை என்பது பத்தி தான் பேசிக்கொண்டு இருக்கிறோம்” என்று என்னை பார்த்தார் .

நான் யோசித்து “ஒரு வேளை மக்கள் எல்லாரும் வீட்டிலேயே இருப்பதால் குரங்குகள் வருவதில்லையோ” என்றேன். ஸ்ரீராம் எங்கள் இருவரையும் பொருள் பதிந்த பார்வையுடன் பார்த்து ஐந்து வினாடிகள் எடுத்து புருவத்தை உயர்த்தி சொன்னார் “குரங்குகள் எல்லாம் இறந்து விட்டன கொரோனவில்”.

வேலாயுதன் உடனே வியப்புடன் கேட்டார் “நீ பார்த்தாயா, இறந்த குரங்குகளை” “அவைகள் இங்கே இறப்பதில்லை மக்கள் மத்தியில். காட்டுக்குள் சென்று நோயினால் செத்துவிட்டன. பிழைத்த குரங்குகள் காட்டிலேயே உள்ளன”. .வேலாயுதன் இப்போது சும்மா இருந்தார், முகத்தில் அவநம்பிக்கை தெரிந்தது.

நான் கேட்டேன் “குரங்குகளை இந்த வைரஸ் தாக்குமா?” இப்போது வேலாயுதன் சொன்னார் “ஹிந்து வில் சென்ற வாரம் பார்த்தேன். குரங்குகளுக்கு உணவிட வேண்டாம். நெருங்க வேண்டாம். அவைகளுக்கு நோய் தோற்றும் அபாயம் இருக்கிறது என்று” இப்போது ஸ்ரீராம் நான்தான் சொன்னேனே என்ற பார்வை பார்த்தார். “சரி எப்படி இந்த கொரோனா இந்த குரங்குகளுக்கு வந்தது? நம் குடியிருப்பில் தான் யாருக்கும் இதுவரை வரவில்லையே?” என்று நான் கேட்கும்போதே ஸ்ரீராம் உடனே மறித்து “குரங்குகள் இங்கு மட்டுமா வருகின்றன? அரை கிலோமீட்டர் தூரத்தில் சுரபி குடியிருப்பில் நான்கு பேருக்கு இருக்கிறது. அதே காடு தான் பின்னால். அப்புறம் இன்னொன்று” என்று மீண்டும் பொருள் பதிந்த பார்வை வீசி நிதானித்து சொன்னார் “நம் அபார்ட்மெண்ட் காம்ப்ளெக்ஸில் இல்லை என்று எப்படி சொல்கிறீர்கள். இருக்கிறது. யாரும் சொல்வதில்லை, டெஸ்ட் எடுப்பதில்லை”.

நான் எழுந்தேன் “நான் வருகிறேன் சார். ஏதாவது சமைச்சு சாப்பிடணும். மனைவி லாக்டௌனில் பொண்ணு வீட்டில் மாட்டியிருக்காங்க”. ஸ்ரீராம் மெலிதாக கண்ணடித்து “இன்னும் ஒன்று சொல்லவா. எனக்கு கொரோனா வந்து போய்விட்டது. ஒரு மாதத்துக்கு முன்பே. வீட்டிலேயே நாட்டு வைத்தியம். யாருக்கும் தெரியாது” அவர் முகத்தில் ஒரு வெற்றி தெரிந்தது. அப்புறம் பாக்கலாம் என்றார். நான் நகர்ந்தேன். .


இன்னொரு மாதத்தில், ஜூலையில் கொரோனா குடியிருப்பில் வந்துவிட்டது. முதலில் ஒன்று இரண்டு என்று பெரிய செய்தியாக பிரமாதப்படுத்தி அந்த தளங்களையே தனிமை படுத்தலில் ஆரம்பித்து பத்தொன்பது இருபது என்று எண்ணிக்கை வளர வளர கொஞ்சம் ஆர்ப்பாட்டம் குறைந்து மக்கள் நிதானமானார்கள். ஒரு 70 வயது பெரியவர், முன்னம் இதய அறுவை சிகிச்சை செய்தவராம் இறந்து போனதில் இருந்து அனைவரும் கொஞ்சம் தெளிவாக இருப்பது போல தோன்றியது. ஸ்ரீராமை நடை பயிற்சியில் பார்த்தபோது “நான் தான் சொன்னனே. நிறைய இருந்தது. இருக்கு. இப்ப ஒருத்தர் சொல்ல ஆரம்பிச்சதால எல்லாரும் சொல்கிறார்கள்” என்றார்.

நகரம் ஆகஸ்ட் மாதத்தில் முழுவதும் திறக்கப்பட்டுவிட்டது. திரை அரங்குகள் மற்ற கேளிக்கைகள் தவிர. ஆனால் கடைகளில் கூட்டம் இல்லை. முக்கிய சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. நான் அலுவலில் யாராவது நேர்காணல் சந்திப்புக்கு கூப்பிட்டால் செல்ல ஆவலாக இருந்தேன். இந்த ஜூம் மீட்டிங்குகள் அலுத்துப்போயின. ஆனால் ஒருவரும் கூப்பிடுவதில்லை. என்னுடைய மனிதவளத்துறை ஆலோசனை வேலைக்கு என்னுடைய வாடிக்கையாளர்களுக்கோ அல்லது பார்ட்னர்களுக்கோ அது தேவையாகவே இல்லை.

ஒரு நிறுவனத்தில் நேர் சந்திப்புக்கு அழைத்தபோது மலர்ச்சியோடு சென்றேன். முழு உடை நேர்த்தியாக அணிய ஒரு வாய்ப்பு நீண்ட நாட்களுக்கு பிறகு. போக்குவரத்து இல்லாததால் சீக்கிரமாக சென்றுவிட்டேன். என்ன ஆயிற்று இந்த பெங்களூருக்கு தோன்றியது. வாடிக்கையாளர் கூப்பிட்டு அரை மணி நேரம் தாமதாகும் என்றார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழிக்க வேண்டும். பக்கத்தில் மால் ஒன்று இருந்தது. உள்ளே சென்று காபி குடிக்க தோன்றியது. கடைகள் எல்லாம் திறந்திருந்தன. ஆனால் ஆட்களே இல்லை.

காபி கடை சிப்பந்தி சொன்னார். இன்று கடை திறந்து மூன்று மணி நேரத்தில் நான்தான் முதல் வாடிக்கையாளராம். நேற்று முழுவதும் இரண்டே பேர்கள். அதற்கு முந்திய தினம் ஒருவரும் இல்லையாம். காபி முடித்து இன்னும் நேரம் இருந்தது.

பக்கத்தில் இருந்த கடையில் தள்ளுபடி விற்பனை. நான் எப்போதும் வாங்கும் சட்டை ப்ராண்ட் இரண்டு வாங்கினால் மூன்று இலவசம். இரண்டுக்கு காசு கொடுத்தால் ஐந்தா? ஆடி தள்ளுபடியில் மிஞ்சி மிஞ்சி போனால் இருபது அல்லது இருபத்தி ஐந்து சதவீதம்தான் பார்த்திருக்கிறேன். அந்த அளவுக்கு ஸ்திரமான ப்ராண்ட். இப்போது அறுபது சதம் வருகிறதே என்று ஆச்சர்யமாக இருந்தது. ஒரு நிமிடம் வாங்கலாமா என்ற யோசனை வந்தது. சில சட்டைகளை பார்த்தேன். ஆனால் நாள் முழுவதும் லுங்கி பனியனில் தானே இருக்கிறோம், இதை வாங்கி என்ன செய்ய. அப்புறம் முக்கிய வாடிக்கையாளரின் பேமெண்ட் வராதது மனதில் தோன்றி கொஞ்சம் நிதானம் அப்பா என்றது.

நேர் சந்திப்பில் வந்த அலுவல் முடித்தவுடன், கடைகளிலும், சாலைகளிலும் இருக்கும் வெறுமை பற்றி அந்த பெரிய அதிகாரியை கேட்டேன். மக்கள் கொரோனா பயத்தால் வெளியே வர தயங்குகிறார்களா என்று. அவர் சொன்னார். “தேவை இல்லை அதனால் மக்கள் வருவதில்லை என்பதுதான் உண்மை. உங்களுக்கு தெரியுமா? பெங்களூரில் ஐந்தில் இருவர் ஐடி துறையில் பணியாற்றுகிறார்கள். அதாவது 15 லட்சம் பேர்கள். இவர்களில் கிட்டத்தட்ட தொண்ணூறு சதவீதம் வீட்டில் இருந்து பணியாற்றி ஆறுமாதமாய் அவர்களுக்கும் சரி நிர்வாகத்துக்கும் சரி பழகிவிட்டது. சொல்லப்போனால் இது முன்னை விட அதாவது கொரோனா முந்திய நிலையை விட தேவலை என்றே நினைக்கிறார்கள். எல்லாம் நன்றாக போய்க்கொண்டு இருக்கிறது. மால் இல் நீங்கள் பொதுவாக பார்க்கும் கூட்டத்தில் முக்கால்வாசி இந்த ஐடி மக்கள்தான். அவர்கள் வேலை முடிந்த பின்னரோ, அல்லது இடையிலோ அங்கே செல்வது. ஐடி தான் 24 மணி நேரம் இருக்கிறதே. பெங்களூரு இனி இப்படித்தான் இருக்கும்” என்றார்.

“அப்ப மற்ற நகரங்கள் ஓரளவுக்கு சகஜ நிலைமை திரும்பி விடும் என்று சொல்லுங்கள். சென்னையை பார்த்தால் அப்படிதான் தெரிகிறது” என்றேன் நான்.

“இல்லை இல்லை. சென்னை கூடத்தான். அங்கேயும் ஐடி இதே நிலைமை தான். இன்னொன்று. ஐடி மட்டுமில்லை, இன்னும் நிறைய துறைகள் மாறுகின்றன. இன்னும் மாறும். வங்கித்துறை, மற்றும் எந்த எந்த துறைகளில் அலுவலகத்தில் கணினி முன்பு மட்டும் வேலையோ, எங்கே நீங்கள் தொழில் பரிவர்த்தனையில் புதிதாக ஒரு நிஜ வஸ்துவை, தொழிற்சாலையில் போன்று உருவாக்கவில்லையோ அங்கே மக்கள் வீட்டிலிருந்து வெளியே செல்ல தேவையில்லை” என்றார். நான் உடனே அந்த துணிக்கடை தள்ளுபடி பற்றி சொன்னேன். மக்கள் வராததற்கு வாங்கும் எண்ணம் குறைந்துவிட்டது ஒரு சிறிய காரணம்தான். எல்லாரும் ஆன்லைனில் வாங்க ஆரம்பித்துவிட்டார்கள் என்றார்.

சற்று பேச்சை நிறுத்தி கணினியில் ஒரு இணைப்பை திறந்தார். நான் இப்போது சென்ற அதே ப்ராண்டின் இணைய விற்பனைத்தளம். உங்கள் சட்டை சைஸ் என்ன என்றார். பின்னர் காண்பித்தார் வரிசையாக. இந்த சட்டை பாருங்கள் எனக்கு பிடித்திருக்கிறது என்றார். எனக்கும் அந்த டிசைன் பிடித்திருந்தது. ஆனால் என்னுடைய அரைவாசி சட்டைகள் நீலவண்ணத்தில். இதுவும் நீலம். இப்போது வேறு கலருக்கு மாற வேண்டும் போல தோன்றியது.

என் மனதில் இருப்பதை படிப்பவர் போல அவர் கேட்டார் “உங்களுக்கு இது பிடித்திருக்கிறது ஆனால் என்ன யோசனை” என்றார். வேறு வண்ணத்தில் பார்க்கலாம் என்றேன். “இப்போதே” என்று இரண்டு மூன்று கிளிக் செய்தவர் “இந்த ஊதா எப்படி” என்றார். பார்த்தால் என்னை அப்படியே கவர்ந்துவிட்டது. எல்லா வண்ணத்திலும் இந்த டிசைன் இருக்கிறதா என்றேன் சற்று தயங்கியபடி.

அவர் சொன்னார் “அது தெரியாது. இந்த வண்ணம் இல்லை என்றால் அவர்கள் தயாரித்து தருவார்கள். வண்ணம் மற்றும் வடிவம் எல்லாமே நீங்களே அமைக்கலாம். இப்போது சொல்லுங்கள், ஏன் கடையில் சென்று இருப்பதற்குள் ஒன்றை சமரசம் செய்து வாங்குவது?”.

அவர் சொல்வது எனக்கு மனதில் பட்டாலும் முழுமையாக ஏற்றுக்கொள்ள மனம் இடம் கொடுக்கவில்லை. அதை காட்டிக்கொள்ளாமல் அவருக்கு நன்றி நவின்று விடை பெறுவதாக சொன்னேன். கைகூப்பி எழுந்தோம். இப்போதெல்லாம் கைகுலுக்குவது மறந்துவிட்டது.

கடைசியாக இன்னொன்று என்று சொன்னார் அவர். “வெளியில் சென்று வேலை செய்யும் நிமித்தம் இப்போதைக்கு நிச்சயமாக இருவருக்கு தான். ஒன்று நிலத்தில் இறங்கும் விவசாயி. இன்னொன்று களத்தில் இறங்கும் ஸ்விக்கி ஸ்மோட்டோ டெலிவரி மக்கள். இரண்டுமே உணவுக்காக. ஒன்று ஆதி உற்பத்தி. இன்னொன்று அந்தம். இறுதியில் வயிற்றுக்குள் போக” என்று சொல்லி உரக்க சிரித்தார். எல்லாம் பரிணாம வளர்ச்சி. குரங்கிலிருந்து மனிதன் வந்த அந்த பரிணாம வளர்ச்சிக்கு பிறகு மிக வேக பரிணாம வளர்ச்சி கொரோனா வால்தான் என்று அவர் சொன்னபோது மீண்டும் குரங்குகள் எங்கே என்ற யோசனையோடு வண்டியை எடுத்தேன். .

பக்கத்து வீட்டு ஆளை லிப்ட்டில் பார்த்தேன். மனைவி மற்றும் இரண்டு சிறு வயது குழந்தைகள். உத்திரப்பிரதேசத்துக்காரர் என்று தெரியும். ஏதோ ஸ்ரீவஸ்தவா என்று பெயர். அமேசான் கம்பனியில் நல்ல வேலை. அதிகம் பேசியது இல்லை. இன்று பேசினார். நான் ஊருக்கு போகிறேன் வீட்டை காலி செய்கிறோம் என்றார். “ஏன், வேலை மாற்றமா” என்றேன். “இல்லையில்லை, அதே வேலைதான். ஆனால் இனிமேல் எங்கிருந்து வேண்டுமானாலும் வேலை செய்யலாம். இரண்டு மாதத்துக்கு ஒருமுறை தலைமையகம் வந்தால் போதும். கிராமத்துக்கு போகிறேன். இப்போது அங்கே நெட்ஒர்க்குக்கு உத்திரவாதம் இருக்கிறது….படிப்பு முடித்ததில் இருந்து பெங்களூருதான். பதினாலு வருடம். ஆனால் கிராமத்தில் பெரிய வீட்டில் அனைத்து குடும்பத்தினருடனும் இருக்க விருப்பம்” என்று புன்னகைத்தான். இது என்ன தலை கீழ் பெயர்ச்சி என்று நினைத்தேன். கிராமத்திலிருந்து நகரம் வருவது மாறி, நகரத்திலிருந்து மக்கள் எல்லாரும் கிராம வாழ்க்கைக்கு திரும்புவார்களோ என்று யோசித்தேன். அல்லது இவர்கள் எல்லாம் கிராமத்துக்கு நகரை கொண்டு போய் சேர்த்து விடுவார்கள்.


அன்று காலை ஸ்ரீராமிடமிருந்து ஒரு போன். என்ன உங்களை நடைப்பயிற்சியில் பார்ப்பதில்லை என்றேன். அவர் சொன்னார் “இந்த அக்டோபர் இல் கூட இந்த தடவை பெங்களூரில் மழை பெய்து கொண்டிருக்கிறது. நடை பயிற்சி இப்போது வீட்டிலேயே ட்ரெட் மில் செகண்ட் ஹாண்டில் குறைந்த விலையில் கிடைத்தது” என்றார். அத்யாவசியமற்ற பொருட்கள் எல்லாம் இனிமேல் மலிவுதான் என்று நினைத்துக்கொண்டே கேட்டேன் “ஏன் சார், கொரோனா போகவே போகாது என்று முடிவு செய்து விட்டீர்களா, ஜிம் திறக்காதா என்ன? இன்னும் ஆறு மாதத்தில் தடுப்பூசி வந்துவிடும்” என்றேன். “யார் சொன்னது கொரோனா போகாது என்று. தடுப்பூசி எல்லாம் வருவதற்கு முன் கொரோனா போய் விடும். இந்தியாவில் பாதி பேருக்கு தொற்று வந்து போயாகிவிட்டது. செய்தியில் பார்த்தால் இரண்டு கோடி பேர் என்று இருக்கும். ஆனால் இருபது கோடிக்கு வந்து போய் விட்டது. ஜனவரி 2021இல் மக்கள் முக கவசம் அணியமாட்டார்கள். நான் பந்தயம் வைக்க தயார்” என்றார். எப்போதும் போல தீர்மானமாக அழுத்தமாக தான் பேசுகிறார். இப்போது அவரை கொஞ்சம் நம்ப தோன்றியது.

புதிய தொற்று எண்ணிக்கை பத்து நூறு என்றிருந்து ஆயிரக்கணக்கில் லட்சக்கணக்கில் ஆக, மக்கள் பொருளாதாரம் பற்றிதான் நிறைய பேசினார்கள். நேரில் இல்லை. வாட்ஸப்பிலும் முகநூலிலும். திருமணங்கள் ஆன்லைனில் நடப்பதை சிலாகித்து பேசினார்கள். விஜய் படம் அரங்குகளில் வெளியிடாமல் நெட்டில் வெளியாவது ஒரு விதிவிலக்கா அல்லது இனிமேல் இதுதான் புது விதியா என்ற சர்ச்சை. நோய் பற்றி நோயாளிகள் பற்றி யாரும் பேசுவதில்லை.

நம் நாட்டின் பிரதான கேளிக்கை மற்றும் பொழுதுபோக்கான திரை அரங்குகள் திறக்கப்படாதது ஒரு ஏமாற்றமாகவோ அல்லது ஒரு இழப்பாகவோ யாரும் கருதாதது எனக்கு பெரும் வியப்பாக இருந்தது. நான் இந்த உலகத்தை அறியவில்லை. நாம் அறிந்துவிட்டோம் என்று நினைப்பது எவ்வளவு முட்டாள்தனம் என்ற எண்ணம் உதித்தது.

அமெரிக்காவிலிருந்து ஒரு நண்பன் கூப்பிட்டான். “ஏய், இந்த வாரம் சேர்ந்து ஒரு படம் பார்க்கலாமா, கல்லூரி நாள் படம். நான் மற்ற நண்பர்களையும் கூப்பிடுகிறேன். உன் ஓட்டு சகலகலாவல்லவனா அல்லது முரட்டு காளையா என்று நான் அனுப்பியிருக்கும் லிங்கில் பதிவு செய்” என்றான். இப்போது வார இறுதியானால் நண்பர்கள் கூட்டம் ஜூம் தளத்தில். நேரத்துக்கு தகுந்த, பழக்கத்துக்கு தகுந்த வகையில் பலர் கையில் பானங்களுடன். இது தான் முதல் தடவை படம் ஒன்று சேர்ந்து பார்ப்பது. ஜூம் தளத்தில் நெட்ப்ளிக்ஸோ, யுட்யூபோ இணைத்து படம் காண்பித்தான் சூர்யா. ஸ்ரீகி, பாண்டி, தேவன், கணேஷ், ரவி, ஜோ, நிஸார், ஈஸ்வரன் என்று பல ஊர் பலதேச வாசிகள் ஒன்றாய் பார்த்தோம். படம் ஓட ஓட சாட் செக்ஷனில் நிலா காயுது பாட்டையும் சிலுக்கின் நேத்து ராத்ரிக்கும் பறந்தன கமெண்ட்களும் எமோஜிகளும். சில சமயம் படம் நிறுத்தி ஆரவாரமாய் பேச்சும். திரையரங்கில் பொதுஇடத்தில் அரை நூற்றாண்டை தாண்டிய கனவான்கள் செய்யமுடியாதது இது எல்லாம். .

அன்று காலை விழித்தேன். மார்கழி குளிர் போல ஜில்லென்று. இன்னும் ஒரு வாரம் தான் மார்கழிக்கு. நாள் டிசம்பர் 10. இந்த உலகத்தில் எதுவுமே பழையபடி இருக்கப்போவதில்லை என்று தோன்றியது. எல்லாமே மாறிவிட்டது. இன்னும் மாறும்.

திடீரென்று கடமுடா சத்தம். எழுந்து சென்று பார்த்தால் பால்கனியில் குரங்குகள்!!

***

9 Replies to “குரங்காட்டம்”

  1. பிள்ளையார் பிடிக்க குரங்காக முடிந்தது என்பார்கள். நீங்கள் குரங்கையே பிடித்து விட்டீர்கள். கொரோனாவும் குரங்கும் சரியான விகிதத்தில் கலந்து தந்த 20-20 போட்டி போல விறுவிறுப்பான நடை. ஸ்ரீராமரும் வேலரும் கதைக்கு சரியான பக்க பலம். ஒரு பத்து நிமிடத்துக்கு பெங்களூர் குடியிருப்பு, மால் என சுற்றி காட்டி விட்டீர்கள். கதை படித்து முடித்ததும் எனது ஹோசிமின் வீட்டின் பால்கனியிலும் குரங்குகளின் காட்சி! இதுவே எழுத்தாளர் வேங்கடவனின் வெற்றி ✌️🤝✅✅👍👍👏👏🐵🙈🙉🙊🐒

  2. குரங்காட்டம் – ஒரு விதத்தில் கொரோனா கால யதார்த்த சித்தரிப்பு . இன்னொரு விதத்தில் தற்கால வாழ்கையின் தத்துவம். ஒரு சமூகத்தின் நனவோடை. முத்தாய்ப்பாக குரங்குகள் திரும்பி வந்ததில் முடியும் அருமையான சிறுகதை, பாராட்டுகள் !

  3. நல்ல முயற்சி. கொரானாவின் விளைவுகளை ஒரு புறமும் மனித மனங்களின் குரங்காட்டத்தை மறுபுறமும் நன்றாக படம் பிடித்துக் காட்டினீர்கள். ஒரு காலப் பதிவாகவும் கொள்ளலாம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.