கதை கதையாய்; கடுந்துறவு; தோன்றாத் துணை- கவிதைகள்

வ. அதியமான்

இக்கணம்

கைக்கு எட்டா
உச்சிக்கிளை
அடையின்
சிற்றறைகளில்
நிரம்பி கனத்து
கசியும்
போதுமல்ல

கைக்கு எட்டும்
கண்ணாடி
குவளைக்குள்
அடர்பொன்
திரவமாய்
ததும்பி
நுரைக்கும்
போதுமல்ல

குவிந்த
உள்ளங்கைக்
குழியில்
ஊறி வழிந்து
மொட்டுக்கள்
பூத்த
நா வனம்
பற்றி
எரியும்போதே
நீ
எனக்கு
தேன் தேன்


கடுந்துறவு

எதையும்
கடுகளவும்
இழப்பதில்லை
அந்த கிளைகள்

உலர உலர
அத்தனையும்
உதிர்க்கிறது
அவ்வளவு தான்

நுனி நாக்கு கூசும்
புளித்த காய்களை
அடி நாக்கு
இனிக்க இனிக்க
கனியாக்கி தருவது
எவனுடைய எச்சில்?
எந்த கவலையும்
இல்லை அதற்கு

பூத்து
காய்த்து
கனிந்து
காம்புதிர்த்தால் தான்
என்ன?

ஒரு கணமும்
ஓய்வதில்லை
தலைக்கு மேல்
வானத்தைச்
சூடிக்கொண்ட
அந்த கிளைகளின்
நடனம்


சொல்

இன்று
ஏன்
இத்தனை
கூடுதலாக
பற்றி எரிகிறது
இந்த
நட்சத்திரங்கள்?

இருள் முழுத்த
இந்த இரவு
விடிவதற்குள்
எதையாவது
யாருக்காவது
சொல்லி
தீர்த்துவிட
அவைகளுக்கு
ஆணை
இடப்பட்டிருக்கிறதா
என்ன?

ஒரு சொல்
கொண்டு
எரிந்து
முடித்து
கரிந்து
மரிக்கவா
இத்தனை
மினுக்கும்?


தோன்றாத் துணை

எந்த
ஞானியரின்
ஒளியும்
உடன் வரவில்லை

கட்டக் கடைசியாக
இந்த கணத்தில்
துணிந்துவிட்டேன்
தன்னந்தனியே
நானொரு
சாகரத் தோணி

என்னிலும்
நீ இன்று
துணிந்துவிட்டாய்
திருவிழாவின்
பெருந்திரளோடு
நீ அதில்
சாகசப் பயணி


கள் அவிழ்

ஒவ்வொரு
கணுவிலும்
யாரோ
முடிச்சிட்டு
வைத்திருக்கிறார்கள்

அவிழாதவரை
அவை
தேன் கூடுகள் தான்

யாரேனும்
ஒரு
தேர்ந்த
முடிச்சவிக்கியை
கேட்டறிய
வேண்டும்

அவிழ்ந்த
பிறகு
கணு கணுவாய்
இனித்ததெல்லாம்
என்னவாகும்?


கதை கதையாய்

இத்தனை
நாளாய்
கதை சொன்ன
கிளி
இன்று
இன்னும்
கிளை திரும்பவில்லை

கதைகள்
உண்ணாத
கிளை
இன்று
அசைந்தாடவும்
இல்லை

விடிவதற்குள்
விழுதுகள்
இறங்கி
வேராகி
மரமாகி
வனமாகி
விரிந்திருக்க
வேண்டுமில்லையா?

ஒளியின்
கனி கொத்தும்
அந்த
கிளிகளுக்கு
இதை
யார் சொல்வது?


5 Replies to “கதை கதையாய்; கடுந்துறவு; தோன்றாத் துணை- கவிதைகள்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.