ஒரு பேரரசரின் மகனாகப் பிறந்தவன் அவன். பிறக்கும்போதே அந்தப் பேரரசின் அடுத்த அரசனாகவும் சுட்டிக்காட்டப்பட்டவன். ஆதலால் சீருக்கும் சிறப்புக்கும் ஒரு குறையுமில்லை அவனுக்கு. அரனுக்குரிய ஆதிரை நட்சத்திரத்தில் பிறந்ததால் சிவபெருமானின் அம்சமாகவே அவனைக் கருதிப் போற்றியவர் உண்டு. சிற்றப்பனின் பெயரான மதுராந்தகன் என்ற பெயரையே அவனுக்கும் வைத்தார் அவனது தந்தையான அருண்மொழித்தேவர். திண்தோள் வீரரான ராஜராஜராலும் அறிவாளியான அத்தை குந்தவையாலும் வளர்க்கப்பட்டதால் வீரமும் விவேகமும் கொண்டே வளர்ந்தான் மதுரன். செல்லமாக வளர்க்கப்பட்டதால் சீர்கெட்டுப்போன பிள்ளைகள்போல் இல்லாமல் ஒரு துடிப்பான புலிக்குட்டியைப்போல திறமைசாலியாக வளர்ந்து வாலிபப் பருவத்தை அடைந்தான் அவன். குல வழக்கப்படி இளவரசுப் பட்டம் சூட்டித் தன்னோடு அரியாசனத்தில் சரியாசனம் அளித்தார் அவனது தந்தை. தகப்பன் தஞ்சையில் இருக்க இளவரசன் வடதிசை நோக்கிப் படையெடுத்துச் சென்றான். அவனுக்குச் சென்ற இடமெல்லாம் வெற்றி. ராஜாக்களுக்கெல்லாம் பெரிய ராஜாவான இந்திரனைப்போல விளங்கியதால் ராஜேந்திரன் என்ற அபிஷேகப் பெயரும் வந்தது அவனுக்கு.
ஒருநாள் தந்தையுடன் சோழர்களின் குலதெய்வங்களின் ஒன்றான திருவாரூர் ஈசன் கோவிலுக்குச் சென்றான் ராஜேந்திரன். அங்கே அபிஷேக ஆராதனைகள் முடிந்த பிறகு நிர்வாக விவகாரங்களைக் கவனிக்கத் தந்தை அதிகாரிகளோடு வேறிடத்திற்குச் சென்றார். கோவிலின் ஒரு மூலையில் கண்மூடி ஆரூரானைப் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தான் ராஜேந்திரன். கண் விழித்ததும் அவன் கண்ணில் ஒரு மின்னல். எதிரே ஒரு பாவை அவனைப் போலவே கண்மூடி இறைவனைத் தியானித்துக்கொண்டிருப்பதைக் கண்டான். அவன் பார்த்த மாத்திரத்தில் ஏதோ உணர்வு தோன்ற அவளும் கண் விழித்தாள்.
கண்ணொடு கண் இணை கவ்வி ஒன்றை ஒன்று
உண்ணவும். நிலைபெறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்
என்று பின்னாளில் கவிச்சக்கரவர்த்தி எழுதிய பாடலுக்கான காட்சி அங்கே அப்போதே விரிந்தது. ஆனால் மின்னெலெனத் தோன்றிய பெண் மின்னல்போலவே மறைந்தும்விட்டாள். தவித்த ராஜேந்திரனின் காதில் “இளவரசே தந்தை தங்களை அழைக்கிறார். நடனம் ஆரம்பமாகப் போகிறது,” என்ற குரல் விழுந்தது. மண்டபத்திற்கு விரைந்து, தந்தையின் அருகில் அமர்ந்தான் ராஜேந்திரன்.
கரையுங் கடலும் மலையுங் காலையும் மாலையும் எல்லாம்
உரையில் விரவி வருவான் ஒருவன் உருத்திர லோகன்
என்ற சுந்தரர் தேவாரத்தை ஒருவர் பாட நடனம் ஆரம்பமாயிற்று. ஆடுபவர் யார் என்று உற்றுப் பார்த்தான் ராஜேந்திரன். ஆகா, இது நம் முன்னே நின்ற பெண் அல்லவா என்று வியந்தான். அவள் சுழன்று நடனம் ஆடியபோது அவன் உள்ளம் கழன்று அவனிடமிருந்து விடைபெற்றுக்கொண்டுவிட்டது. அவனோ சோழப் பேரரசை ஆளப்போகும் சக்கரவர்த்தி; அவளோ கோவிலில் நடனமாடும் தேவரடியார்களில் ஒருவர் என்பதெல்லாம் அவன் கருத்தில் பதியவில்லை. திரு ஆரூரின் திருத்தொண்டரான சுந்தரமுர்த்தி நாயனாரின் துணைவியான பரவையின் பெயரையே அந்த நடனமணிக்கும் சூட்டியிருந்தாள் அவள் தாய்.
அதன்பின் அடிக்கடி திருவாரூர் சென்று அவளைச் சந்திக்க ஆரம்பித்தான். ஆடல்மகளான பரவை முதலில் அவனை அந்தஸ்து கருதி ஏற்க மறுத்தாலும், அவனிடம் இருந்த அளவற்ற காதலைக் கண்டு உருகி மையல் கொண்டாள். இளவரசர் அடிக்கடி காணாமல் போவது நாட்டை மேம்படுத்துவதில் மும்முரமாக ஈடுபட்டிருந்த ராஜராஜனுக்குத் தெரியாவிட்டாலும் அந்தப்புரத்திலிருந்தே அனைத்தையும் கவனித்துக்கொண்டிருந்த அத்தையின் செவிகளுக்கு எட்டியது. மதுரனை அழைத்து விசாரித்தாள். வழக்கம்போல, மணந்தால் பரவையைத்தான் மணப்பேன் என்று அடம்பிடித்தான் இளவரசன். விட்டுப்பிடிக்கலாம் என்ற நினைப்பில் அப்போதைக்கு அந்தப் பேச்சை முடித்துக்கொண்டாள் குந்தவை. தன் இளவலைக் கூப்பிட்டு இளவரசனின் காதல் விவரத்தைச் சொன்னாள். அந்தப் பருவம் அடக்கினால் அதை மீறும் பருவம் என்பதை அறிந்துகொண்ட இருவரும் ராஜேந்திரனிடம் நிலமையைப் பொறுமையாக விளக்கினர். நீயோ நாடாளப்போகின்ற மன்னன், கோவிலில் ஆடும் நங்கையைக் கைப்பிடித்தால் அது குல கௌரவத்தைப் பாதிக்கும். அவளால் மற்ற மன்னர்கள் வந்து வணங்கும் அரியணையில் உன்னோடு சரிசமமாகப் பட்ட மகிஷியாக அமர முடியாது என்றெல்லாம் சொல்லிப்பார்த்தனர். காவிரிக்கு அணை போடலாம். காதலுக்கு அணையிட முடியுமா? ஆனாலும் ராஜேந்திரன் அறிவாளியல்லவா. உணர்ச்சிகள் கரைபுரளாவண்ணம் அவன் நிதானமாக யோசித்தான். இந்தச் சிக்கல் தீருவது தன்னுடைய சொந்த வாழ்க்கைக்கு மட்டுமல்லாது நாட்டிற்கும் முக்கியமானது என்று அவனுக்குத் தெள்ளத்தெளிவாக விளங்கியது. பட்டத்திற்கு வேண்டுமானால், அரசியல் ரீதியாக மற்றவர்களை மணந்து கொள்வதில் எனக்கு ஆட்சேபணையில்லை. ஆனால் என் இதயராணி என்றுமே பரவைதான் என்று உறுதியாகச் சொல்லிவிட்டான் அவன். ஏதோ இதுவரைக்கும் அவன் சம்மதித்தானே என்ற காரணத்தால் அரசரும் அவர் அக்கையும் வற்புறுத்தவில்லை.
அடுத்த நாள் திருவாரூர் சென்ற ராஜேந்திரன் பரவையிடம் நடந்ததைச் சொன்னான். பரவைக்கு இதில் ஆச்சரியமேதுமில்லை. தன்னுடைய குலமே சோழ நாட்டின் அரசியாவதற்கான எதிரி என்பதை உணர்ந்தே இருந்தாள் அவள். ஆனால் அவனிடம் தான் திருவாரூரை விட்டுத் தலைநகருக்கு வர முடியாது என்று உறுதியாகச் சொல்லிவிட்டாள். ஆரூரானுக்குச் சேவை செய்வதே தன்னுடைய முதற்கடமை என்று சொன்ன அந்த ஆடலரசி, இளவரசன் தன்னைக் காண இங்கு வருவதே சரியென்று வாதிட்டாள். இளவரசனும் அதற்குச் சம்மதித்தான்.

காலம் உருண்டோடியது. ராஜேந்திரனுக்கு அடுத்தடுத்து முறைப்படித் திருமணங்கள் நடைபெற்றன. சிவபாத சேகரனான தந்தை சிவபதவி அடைந்தவுடன், அடுத்து அரியணை ஏறினான் ராஜேந்திரன். போர்ச்செயப்பாவான வெற்றிச் செல்வி அவனைச் சென்ற இடமெல்லாம் தொடர்ந்தாள். அண்டை நாடுகளான பாண்டியர்களையும் சேரர்களையும் சாளுக்கியர்களையும் வென்ற கையோடு கங்கையை நோக்கிப் புலிப் பாய்ச்சலை நடத்தின அவனது படைகள். பகீரதன் தவ வலிமையால் கங்கையைப் பூமிக்குக் கொண்டுவந்ததுபோல போர் வலிமையால் கங்கையைத் தமிழ்நாட்டிற்குக் கொண்டுவரவேண்டும் என்பது ராஜேந்திரனின் எண்ணம். அது பலித்ததோடு அல்லாமல் சோழ நாட்டின் வணிகத்திற்கு முட்டுக்கட்டைபோட்ட ஶ்ரீவிஜயத்தின் மீதும் ‘அலைகடல் நடுவே பலகலம் செலுத்திச்’ சென்ற சோழற் கடற்படை அந்த சாம்ராஜ்யத்திற்குத் தக்க பாடம் புகட்டியது. இப்படிப் பூர்வ தேசமும் கங்கையும் கடாரமும் கொண்ட பேரரசனான ராஜேந்திரன் அன்று திருவாரூர் கோவிலுக்கு வந்திருந்தான். பரவையும் அவனும் சென்று ஈசனைத் தரிசித்தனர். கோவிலைச் சுற்றி வரும்போது, அவர்கள் இருவரும் முதலில் சந்தித்துக் காதல் கொண்ட இடம் வந்தது. அதே இடத்தில் நின்று ஆரூரானைத் தியானித்துக் கொண்டனர் இருவரும். ராஜேந்திரனின் உள்ளத்தில் அப்போதைய நிகழ்வுகள் மீண்டும் பிம்பங்களாக வந்து சென்றன. அந்த நினைவுகளை எப்போதும் மறவாதிருக்க எண்ணிய அவன், அருகிலுள்ள அதிகாரிகளை அழைத்தான். அங்கே ஒரு குத்துவிளக்கை வைக்குமாறு ஆணையிட்டான்.
‘உடையார் ஸ்ரீ ராஜேந்திர சோழ தேவரும் அணுக்கியார் பரவை நங்கையாரும் நிற்குமிடன் தெரியும் குத்துவிளக்கொன்றும்’
என்று அங்கே உள்ள கல்வெட்டு அதன் புகழைச் சொல்கிறது.
அரசன் ஆணையைக் கேட்டு அகமகிழ்ந்த பரவை, அரசனிடம் தன் உள்ளக்கிடக்கையை மெல்ல வெளியிட்டாள். பல காலமாகக் செங்கல் தளியாக, அங்கங்கே பழுதுபட்டுக் கிடந்த வீதிவிடங்கரின் ஆலயத்தை கற்றளியாகச் செய்யவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தாள் ஈசனின் பரம பக்தையான பரவை. அதற்கு இசைந்த ராஜேந்திரன், அதற்கான ஆணையையும் உடனே அதிகாரிகளிடம் அளித்தான்.
பொயு 1,029ல் வீதிவிடங்கர் ஆலயம் கற்றளியாக மாற்றப்பட்டது. ஶ்ரீவிமானத்திற்கும் கருவறையின் சுவர்களுக்கும் பொன்வேய்ந்தாள் பரவை. 26,643 கழஞ்சுப் பொன் தகடுகள் இதற்காகப் பயன்படுத்தப்பட்டன.
“உடையார் வீதிவிடங்கத் தேவர் குடத்திலும் வாய்மடையிலும் நாலு நாசியிலும் உள் குடத்திலும்” பொன்வேய்ந்ததாக அக்கோவில் கல்வெட்டு தெரிவிக்கிறது.
தவிர 42,000 பலம் எடையுள்ள செம்புத் தகடுகளால் கருவறை மண்டபத் தூண்கள் அலங்கரிக்கப்பட்டன. 15,579 பலம் எடையுள்ள 28 குத்துவிளக்குகள் தானமாக அளிக்கப்பட்டன. நவரத்தினங்களாலும் பொன்னாலும் ஆன எண்ணற்ற ஆபரணங்கள் இறைவனுக்கு அளிக்கப்பட்டன. ராஜேந்திரனும் தன் பங்குக்கு பச்சைப் பாவை உமை நங்கை, பாவை சரியாமுலை நங்கை என்ற பெயரில் பரவையின் பிரதிமையான இரு பாவை விளக்குகளைத் தானமாக அளித்தான். திருப்பணி செய்யப்பட்ட இந்த ஆலயத்திற்கு பொயு 1,031ல் குடமுழுக்கு நடைபெற்றது. அதுவரை பரவை நங்கைக்கு எந்தச் சிறப்பையும் அளிக்கவில்லை என்ற எண்ணம் கொண்டிருந்த ராஜேந்திரன் அதற்கு ஈடு செய்யும் விதமாக குடமுழுக்கு நாள் அன்று அவளை தனக்குச் சரிசமமாக இருத்தி தேரில் ஊர் முழுவதும் பவனி வந்தான். பட்டமகிஷியாக அவள் அமரவில்லை என்றாலும் அதற்குரிய பெருமையை அந்த நன்னாளில் அளித்துச் சிறப்பித்தான் கடாரம் கொண்ட பேரரசன். இன்றளவும் பரவை அளித்த நிவந்தங்கள்தான் ஆரூர் பெருமானுக்கு அதிகமாக அளிக்கப்பட்ட கொடைகளாகும்.
அதன் பின்னால் சில ஆண்டுகள் கழித்து, வடக்கே சாளுக்கியர் மீதான போர் மீண்டும் துவங்குவதை அடுத்து காஞ்சி நோக்கிப் பிரயாணம் செய்துகொண்டிருந்தான் ராஜேந்திரன். வழியில் இளைப்பாறுவதற்காக ஓரிடத்தில் தங்கியபோது, அருகில் சிதிலமடைந்த சிவன் கோவில் ஒன்று இருப்பதாக அவ்வூரார் தெரிவித்தனர். பனங்காடுகள் நிறைந்த அந்த இடத்தின் ஒரு பகுதியில் சம்பந்தப் பெருமானால் பாடப்பெற்ற பனங்காட்டேஸ்வரர் என்ற பெயர் கொண்ட சிவபெருமான் கோவில் கொண்டிருந்தார். ஒரு காலத்தில் பாடல் பெற்று புகழ்கொண்டு விளங்கிய அந்தத் தலத்தின் தற்போதைய நிலை கண்டு ராஜேந்திரன் இதயம் கலங்கியது. கோவிலைப் புனர்நிர்மாணம் செய்ய உத்தரவிட்டான். தவிர அந்தப் பணியை தன்னுடைய அணுக்கியான பரவையே முன்னின்று நடத்தவேண்டும் என்றும் ஆணை பிறப்பித்தான். பனங்காட்டேஸ்வரரான ஈசன் ‘பரவை ஈஸ்வரமுடையார் மகாதேவர்’ என்ற பெயராலும் அந்த ஊர் பரவை புரம் என்ற பெயராலும் அழைக்கப்படட்டும் என்று ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. தன் அணுக்கியின் பெயர் இன்று மட்டும் இல்லாது என்றும் நிலைக்கவேண்டும் என்ற அரசனின் ஆசை இறைவனின் அருளால் இப்படி நிறைவேறியது. அதற்கு மேலும் சிறப்பு அளிக்கும் விதமாக, சித்திரை முதல் நாளன்று கதிரவனின் கதிர்கள் லிங்கத் திருமேனியின்மேலும் அம்பிகையான சத்யாம்பிகைமேலும் விழுமாறு கருவறையை அமைக்க சிற்பிகளிடம் உத்தரவிட்டான் மன்னன். இன்றும் இந்த அதிசயத்தை அக்கோவிலில் நாம் காணலாம்.
பெரும் சக்கரவர்த்தியாகிப் பேரும் புகழும் பெற்றாலும் ‘முடிசார்ந்த மன்னரும் முடிவில் பிடிசாம்பராகத்’ தானே ஆகவேண்டும். தன்னுடைய அந்திமக் காலம் நெருங்குவதை உணர்ந்த ராஜேந்திரனுக்கு, சோழப் பேரரசைப் பற்றிய கவலை அதிகமில்லை. தன்னுடைய வீர மகன்கள் அதைக் கண்ணும் கருத்துமாக மேலும் உன்னத நிலைக்கு இட்டுச் செல்வார்கள் என்பதை அவன் உணர்ந்திருந்தான். அவனுடைய கவலையெல்லாம் பரவையைப் பற்றித்தான். தனக்குப் பின்னால் அவளை அனாதையாக எல்லாரும் விட்டுவிட்டால் என்ன செய்வது என்று விசனப்பட்டான் அவன். மகன்களை தன் அருகில் அழைத்து அவர்களிடம் தன்னுடைய கோரிக்கையை வைத்தான். தனக்குப் பின்னால் பரவைக்கு எந்தக் குறைவும் இருக்கக்கூடாது என்றும் இப்போது போலவே அவள் மரியாதையோடு வாழவேண்டும் என்றும் அவர்களைக் கேட்டுக்கொண்டான். தந்தை சொல்லைத் தட்டாத மைந்தர்களும் அப்படியே நடப்பதாகவும் பரவையை தங்களின் தாய்க்குச் சமமாகவே நடத்துவதாகவும் உறுதியளித்தனர். அதன்பின்னரே நிம்மதியாக கண்ணை மூடினான் ராஜேந்திரன்.
தன் நாயகன் இவ்வுலகை நீத்ததை அறிந்து அழுது புலம்பினாள் நங்கை பரவை. அவளுக்கு ஆறுதலளித்தனர் அவளின் பெறாத பிள்ளைகள். அவளுடைய சிவப்பணிகளுக்கு உறுதியாக இருப்பதாகவும் வாக்களித்தனர். நாளடைவில் சோகத்திலிருந்து மீண்ட பரவையின் விருப்பத்திற்கேற்ப அடுத்து சோழ சாம்ராஜ்யாதிபதியாகப் பொறுப்பேற்றிருந்த ராஜாதிராஜன் அவளுடன் சேர்ந்து பல தர்மங்கள் செய்தான். எப்படித் தன்பெயரில் ராஜேந்திரன் ஒரு கோவிலை நிர்மணித்தானோ அதைப் போல பரவையும் தன்னுடைய நாயகனின் பெயரில் ‘ராஜேந்திர சோழன் திருமண்டபம்’ என்ற மண்டபத்தைத் திருவாரூர் ஆலயத்தில் கட்டி (பொயு 1,045) அதற்குப் பல நிவந்தங்கள் அளித்தாள். அதன்பின் சில நாள்களில் அவளும் சிவபதவியை அடைந்தாள். ராஜாதிராஜன், அவளுக்கும் தன் தந்தைக்கும் தகுந்த மரியாதைகள் செய்தான். அவர்களின் சிலைகளைத் திருவாரூர் ஆலயத்தில் செய்வித்தான்.
ராஜாதிராஜனுக்கு அடுத்து அரியணை ஏறிய இரண்டாம் ராஜேந்திரனும் தன் தந்தையான ராஜேந்திரன், தாயைப் போன்ற பரவை ஆகிய இருவருக்கும் திருமேனிகள் செய்து பரவை ஈஸ்வரமுடையார் கோவிலில் பிரதிஷ்டை செய்தான். (பொயு 1,060.) அவர்கள் பிறந்த நாள்களில் விழாக்கள் எடுக்கப்பட்டன. அதற்கான நிவந்தங்களையும் அவன் அளித்தான். அதன்பின் வந்த வீர ராஜேந்திர சோழனும் இதே போன்று பரவையின் பெயரில் பல நிவந்தங்களை செய்தான். மகன்களை விடுங்கள், பின்னாளில் வந்த அதிராஜேந்திரனும் முதல் குலோத்துங்க சோழனும்கூட பரவைபுரம் ஈசன் ஆலயத்திற்குப் பல நிவந்தங்கள் அளித்துப் பரவைக்குப் பெருமை சேர்த்தனர்.
இப்படியாகத் தேவரடியார் குலத்தில் பிறந்தவர், தன்னுடைய திறமையால் உயர்ந்து, பேரரசனான ராஜேந்திரனின் இதயம் கவர்ந்து அரசியாகும் வாய்ப்புப் பெற்றாலும், நாட்டு நலனுக்காக அதைத் தியாகம் செய்து, சிவத்தொண்டு புரிந்து வரலாற்றில் அழியா இடம்பெற்ற நங்கை பரவை, பெண் மரபைத் தெய்வமாகப் போற்றும் நமது மரபுச் சங்கிலியின் சிறந்த கண்ணிகளில் ஒருவர் என்பதில் சந்தேகமே இல்லை.
I have read about this Paravai Nachchiyaar. thanks for writing a detailed history in the form of a nice story.
மிகவும் அருமையான கட்டுரை. தெரியாதனவற்றை தெரிந்து கொண்டேன்