நான் 1982இல் கர்நாடகத்துக்கு வந்தேன். தொலைபேசித் துறையில் பெல்லாரி மாவட்டத்தில் ஹொஸபேட் என்னும் ஊரில் இளநிலைப் பொறியாளராக பணியில் அமர்ந்தேன். ஆர்வத்தின் காரணமாக கன்னட அரிச்சுவடி நூல்களை வாங்கி நண்பர்கள் உதவியுடன் படிக்கக் கற்றுக்கொண்டேன். ஓராண்டு இடைவிடாத பயிற்சிக்குப் பிறகு பத்திரிகைகளில் சிறுகதைகள் படிக்கத் தொடங்கி மெல்ல மெல்ல நாவல்களை நோக்கிச் சென்றேன். கர்நாடகத்துக்குள் வரும் முன்பே நான் சிவராம காரந்த் எழுத்துகளால் ஈர்க்கப்பட்டிருந்தேன். தமிழ் மொழிபெயர்ப்பில் அவருடைய மண்ணும் மனிதரும் நாவலைப் பலமுறை படித்திருந்தேன். பாண்டிச்சேரி திரைப்படக் கழகம் ஏற்பாடு செய்திருந்த திரைப்பட விழாவில் சோமனதுடி திரைப்படத்தையும் பார்த்திருந்தேன். அன்றுமுதல் என் நெஞ்சில் சிவராம காரந்த் ஆழமாக வேரூன்றிவிட்டார்.
கன்னடத்தில் படிக்கத் தொடங்கிய காலத்தில் கன்னடத் திரைப்படங்களிலும் ஆர்வம் கொண்டிருந்தேன். ஒருமுறை நானும் நண்பர்களும் வம்சவிருட்சம் என்னும் திரைப்படத்தைப் பார்த்தோம். படம் முடிந்து அறைக்குத் திரும்பியதும் மறுமணம் ஏற்பு, மறுப்பு என்கிற கோணத்தில் மட்டுமே அப்படத்தைப் பற்றி நண்பர்கள் விவாதிக்கத் தொடங்கினர். அது ஒரு முக்கியமான கோணம் என்பது உண்மைதான், ஆனால் அதையும் கடந்த இன்னொரு முக்கியமான கோணம் அந்தக் கதையில் இருப்பதாக நான் அவர்களிடம் கூறினேன்.

தூய மரபு என ஒன்று உலகில் உள்ளதா என்பதும் அந்த மரபில் வம்சத் தூய்மைக்கு உள்ள இடம் என்ன என்பதும்தான் கதை எழுப்பும் வினாக்கள். சீனிவாச ச்ரோத்ரி இவ்வினாக்களால்தான் அலைக்கழிக்கப்படுகிறார். இந்த வினாக்களுக்கான விடை தெரியாததாலேயே அல்லது விடையே இல்லை என்னும் எண்ணத்தாலேயே அவர் மறுமணத்தை ஏற்கமுடியாமல் திண்டாடுகிறார். இறுதியில் மரபு என்பது தனியொரு விருட்சமன்று, அது ஒரு காடு என்னும் தெளிவை அடைகிறார். ஒவ்வொரு மரமும் இந்த நிலத்தில் நிற்கத் தேவையான ஆற்றலை வேர்கள் வழியாகத் தன்னிச்சையாகத் தேடி அடைந்து உறுதிபெறும் இயற்கை விசையைத் தனக்குள்ளேயே கொண்டிருக்கிறது. மேலும் காடுகூட தன்னைத்தானே பெருக்கி அடர்ந்து ஓங்கி வளரும் ஆற்றல் கொண்டது. தன் பிறப்பைப்பற்றி தன் தந்தை எழுதிவைத்திருக்கும் ரகசியக் குறிப்பை அவர் வாசிக்கும் தருணத்தில் அவருக்கு அத்தெளிவு பிறக்கிறது.
தனித்துவமல்ல, காடாக தழைத்துப் பெருகி நிற்பதே மரபின் வலிமை என்னும் உண்மையை அவர் அத்தருணத்தில் கண்டடைகிறார். அந்தத் தெளிவின் பிரகாசத்தில் அவர் நெஞ்சில் அதுவரை அடர்ந்திருந்த இருள் அகன்று அன்பென்னும் ஒளி பரவுகிறது. அவர் வெறுத்த கார்த்தியாயினியை அவர் மனம் அப்போது ஏற்றுக்கொள்கிறது. காட்டுக்குள் ஒருவராக தனக்கு இடமிருக்கும் மண்ணில் கார்த்தியாயினிக்கும் இடமுண்டு என்பதை அவர் புரிந்துகொள்கிறார்.

என் சொற்கள் நண்பர்களுக்கும் ஒரு புதிய கோணத்தைக் கொடுத்தது. அந்தப் படத்தின் கதை ஒரு கன்னட நாவலை மையமாகக் கொண்டது என்றும் அதைப் படித்தால் இன்னும் தெளிவைப் பெறமுடியும் என்றும் நண்பர்கள் சொன்னார்கள். அடுத்த வாரமே அந்த நாவலை வாங்கி அனைவரும் மாற்றிமாற்றிப் படித்தோம். அப்படித்தான் நான் எஸ்.எல். பைரப்பா என்னும் எழுத்தாளரை வாசிக்கத் தொடங்கினேன். நாவலில் உணர்ச்சிப்பெருக்கான பல தருணங்கள். திரைப்படம் தனக்குத் தேவையான சில பகுதிகளை மட்டுமே எடுத்துக்கொண்டது. நாவலை வாசிக்கும்போது என் கருத்து மேலும் வலுப்பெற்றது. மரபு எழுப்பும் வினாவுக்கு அல்லது மரபால் எழும் சிக்கலுக்கு அந்த மரபிலேயே எங்கோ ஓரிடத்தில் விடையும் மறைந்திருக்கிறது. அந்த விடையைக் கண்டுபிடிக்க அலசி ஆராயும் ஒரு விவேகம் மட்டுமே நமக்குத் தேவை. மரபை எதிர்ப்பதாலோ அல்லது வெறுப்பதாலோ அதை ஒருபோதும் கண்டடைய முடியாது. மாறாக, மரபின் ஆழத்தை அறியும் பயணம் அது. உடனே ஒரு நண்பர் பைரப்பா மரபைப் போற்றித் தூக்கிப் பிடிக்கிறாரா என்று கேட்டார். நான் உடனே அதை மறுத்தேன். அவர் இந்த மரபை ஆழமாக அறிந்துகொள்ளும் ஆர்வத்தை நோக்கி நம்மைச் செலுத்துகிறார் என்று சொன்னேன். இப்படிப்பட்ட உரையாடல்களாலும் எண்ணற்ற எடுத்துக்காட்டுக் கதைகளுமாகவே அன்றைய நாள் கழிந்தது. வம்ச விருட்சம் நாவல் வாசிப்பு என்னளவில் ஒரு நல்ல அனுபவம் என்றே சொல்லவேண்டும்.
1984இல் எனக்குத் திருமணமானது. திருமணத்துக்கு என் நண்பர்கள் யாரும் வரவில்லை. என்.டி.ராமாராவ், சந்திரபாபு நாயுடு பிரச்சினையை ஒட்டி போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்த நேரம் அது. அதனால் மணம் முடித்து ஊரிலிருந்து திரும்பி வந்த பிறகு நண்பர்கள் பார்க்க வந்தனர். அவர்கள் எனக்காக ஒரு புத்தகத்தைப் பரிசாகக் கொடுப்பதற்காக எடுத்து வந்திருந்தனர். ஆனால் அப்புத்தகத்தைக் கொடுக்காமலேயே தமக்குள் குசுகுசுவென்று ஏதோ பேசிவிட்டு சென்றுவிட்டனர். வேறொரு தருணத்தில் அவர்களைச் சந்திக்க அவர்களுடைய அறைக்குச் சென்றிருந்தபோது, உறை பிரிக்கப்படாத அந்தப் புத்தகப் பரிசைப் பார்த்தேன். ஏதோ ஆர்வம் உந்த அந்த உறையைக் கிழித்து புத்தகத்தைப் பார்த்தேன். எஸ்.எல். பைரப்பாவின் நாவலான கிருஹபங்க. அன்பளிப்பாக அதைக் கொடுக்க எடுத்துவந்திருந்த போதும், திடீரென புதியதாக இல்வாழ்க்கையைத் தொடங்க இருக்கும் ஒருவனுக்கு அந்தத் தலைப்புள்ள புத்தகம் கொடுக்கலாமா வேண்டாமா என்னும் தயக்கத்தால் கொடுக்காமலேயே சென்றுவிட்டதாக அவர்கள் சொன்னார்கள். தாராளமாக நான் அதை எடுத்துக்கொள்ளலாம் என அன்று ஒரு பையில் போட்டுக் கொடுத்தார்கள்.
நான் வீட்டுக்கு எடுத்து வந்தேனே தவிர, உடனடியாகப் படிக்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமாகப் படித்துமுடிக்க சில மாதங்கள் பிடித்தன. அடுத்த இரண்டு மூன்றாண்டுகளில் அந்த நாவல் தமிழிலேயே மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது. நான் அந்தப் பிரதியையும் வாங்கி உடனடியாகப் படித்தேன். எச்.வி.சுப்ரமணியம் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகம். நாவலின் தொடக்கக் காட்சிகளில் இடம்பெற்ற ஒரு சித்திரம் என் மனத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டது. அப்பணய்யா, சென்னிகராயன் என்னும் பெயர்களைக் கொண்ட இரு அசட்டைப் பிள்ளைகள் தன் வீட்டையே கடப்பாறையால் இடிக்கும் வேலையைச் செய்கிறார்கள். அதைக் கண்ட அவர்களுடைய தாய் “உங்க வீடு பாழாப் போகட்டும்” என்று சபித்து வசைபாடுகிறாள். இப்படிப்பட்ட தாயையும் பிள்ளைகளையும் எந்தக் கணக்கில் சேர்ப்பது என்று புரியாமல் திகைத்துவிட்டேன். ஒரு குடும்பம் சிதைவதற்குத் தாயும் பிள்ளைகளுமே எப்படிக் காரணமாக விளங்குகிறார்கள் என்பதைக் கச்சிதமாக உணர்த்தும் காட்சி அது. அவர்களை வெளியே இருந்து யாரோ வந்து அழிக்கவில்லை. அவர்களை அவர்களே அழித்துக்கொள்கிறார்கள். சிறுகச்சிறுக நேரும் அந்த அழிவின் கதையே நாவலின் களம். எதிர்பாராத விதமாக அக்குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு வரும் நஞ்சம்மா தன் கருணையாலும் அன்பாலும் அழிவிலிருந்து அக்குடும்பத்தை எப்படியாவது மீட்டுவிட வேண்டும் என்று ஆனமட்டும் முயற்சி செய்கிறாள். தொடர்ச்சியாகப் பல ஆண்டுகள் போராடியும் அந்த அழிவை அவளால் தடுக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் அது நிலைகுலைந்து விழுந்து மண்ணோடு மண்ணாகிறது. துரதிருஷ்டவசமாக நஞ்சம்மாவும் அழிந்துபோகிறாள். இறுதியாக அவள் பிள்ளையை ஊரில் வசிக்கும் மகாதேவய்யர் அங்கிருந்து மீட்டெடுத்துக்கொண்டு கிராமத்தைவிட்டே வெளியேறுகிறார்.
மலையுச்சியிலிருந்து ஒரு பாறை உருண்டு வந்து நசுக்கிவிட்டுச் செல்வதுபோல அழிவு நஞ்சம்மாவின் குடும்பத்தைச் சிதைத்துவிட்டுச் சென்றுவிடுகிறது. நஞ்சம்மாவின் துயரமும் தியாகமும் படித்து முடித்த பிறகு நெஞ்சில் ஆழமாகப் பதிந்துவிடுகின்றன. இந்தியர்களின் ஆழ்மனத்தில் பதிந்திருக்கும் சீதை என்னும் புராணப் பாத்திரத்தின் சாயலை நஞ்சம்மாவில் காணமுடியும். நஞ்சம்மாவின் மரணமும் குடும்பத்தின் சிதைவும் இந்த நாவலை வாசிக்கும் ஒவ்வொருவரையும் அதிர்ச்சியிலும் துயரத்திலும் ஆழ்த்திவிடுகிறது. மரபில் நம்பிக்கை உள்ளவர்கள் அந்தச் சிதைவை விதியின் விளையாட்டு என்று எடுத்துக்கொள்ளலாம். நவீனத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் அந்தச் சிதைவை வாழ்வின் நிச்சயமின்மைக்கு ஓர் எடுத்துக்காட்டாக வைத்துக்கொள்ளலாம்.
இந்த இரு நாவல்களை வாசித்ததன் அடிப்படையில் பைரப்பாவின் எழுத்தாற்றலை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. மரபை முழுக்கத் தெரிந்தவர் என்றபோதும், மரபை அவர் ஒருபோதும் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளவும் இல்லை, ஆதரிக்கவும் இல்லை. மாறாக அதன் ஒவ்வொரு அம்சத்தையும் விரிவான பின்னணியில் விமர்சிக்கவே செய்கிறார். ஆனால் அந்த விமர்சனத்தை முன்வைப்பதற்காக அவர் மரபைவிட்டு வெளியேறிவிடவில்லை. மாறாக, அந்த மரபின் வளையத்துக்குள் நின்றுகொண்டே அதைச் செய்கிறார். அதுவே அவர் எழுத்துகளுக்குள்ள வலிமையும் புதுமையும்.
ஒன்பது ஆண்டுகள் கர்நாடகத்தின் வெவ்வேறு பகுதிகளில் பணியாற்றிய பிறகு பெங்களூருக்கு வந்து சேர்ந்தேன். இலக்கிய ரசனை உள்ள சிலருடைய நட்பு என் அலுவலகச் சூழலிலேயே அமைந்தது. அது எனக்குக் கிட்டிய நற்பேறு. எங்கள் அலுவலக மனமகிழ் மன்றத்தினர் நூலகத்துக்காக ஆண்டுதோறும் ஒரு தொகைக்குப் புத்தகங்கள் வாங்கிவந்து வைப்பார்கள். அந்தக் குறிப்பிட்ட ஆண்டில் அவர்கள் பைரப்பாவின் பர்வ நாவலை வாங்கி வந்து வைத்தார்கள்.
நான் அன்றே அந்தப் புத்தகத்தை வீட்டுக்கு எடுத்துச் சென்றேன். ஒவ்வொரு நாளும் சில பக்கங்கள் மட்டுமே படிக்க முடிந்தது. முழுப் புத்தகத்தையும் படித்து முடிக்க மூன்று மாதங்கள் பிடித்தன. அது ஒரு மகத்தான அனுபவம். அந்த நாவலை ஓர் இதிகாசக் கதையின் மறு ஆக்கம் என சாதாரணமாகச் சொல்லிவிட முடியாது. அதன் இடைவெளிகளை பைரப்பா தன் கற்பனையால் நிரப்பிச் செல்கிறார். அவர் எதார்த்தவாத அழகியல் கலைஞர் என்பதால், எல்லாப் புராணப் பாத்திரங்களையும் எதார்த்தக் கதைகளின் பாத்திரங்கள் போலவே செதுக்க முயற்சி செய்கிறார். எங்கும் அதீதம் என்பதே இல்லை. எங்கும் புனிதமாக்கும் அல்லது உன்னதமாக்கும் முயற்சி இல்லை. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு கதைக்கருவை, இன்று கண்முன்னால் நிகழும் நிகழ்ச்சிபோல மாற்றி நிகழ்த்திக் காட்டுகிறார்.
ஒரு தருணத்தில் எனக்கு பர்வ இன்னொரு கிருஹபங்க என்றே தோன்றத் தொடங்கியது. கிருஹபங்க நாவலில் வீட்டின் அழிவைத் தடுக்கமுடியாமல் மனம் கலங்கும் நஞ்சம்மாவை நாம் காண்கிறோம். பர்வ நாவலில் அஸ்தினாபுரத்தின் அழிவைத் தடுக்கமுடியாமல் மனம் கலங்கும் குந்தி, திரெளபதி, உத்தரை எனப் பல பாத்திரங்களை நாம் காண்கிறோம். இரண்டுமே அழிவின் சித்திரங்கள். கிருஹபங்க தனிப்பட்ட ஒரு குடும்பத்தின் அழிவை முன்வைக்கிறது. பர்வ நாவல் ஒரு மாபெரும் ராஜ்ஜியத்தின் அழிவை முன்வைக்கிறது. இந்த அழிவுக்கு அகங்காரம், ஆணவம், அலட்சியம், மூர்க்கம், வெறுப்பு எனப் பல காரணங்கள். அதை நம்பத்தகுந்த விதத்தில் படைத்திருப்பது பைரப்பாவின் படைப்பாற்றல்.
பைரப்பா இந்த நாவலை மகாபாரதத்தின் மரபான தொடக்கத்துடன் எழுதவில்லை. குருச்சேத்திரப் போரிலிருந்து தொடங்குகிறார். போர் நடக்கவிருக்கிறது என்னும் செய்தி நாட்டின் பல பகுதிகளுக்கும் வாய் வழியாகவே பரவிவிடுகிறது. கெளரவர் அணியின் தலைவனான துரியோதனன் தன் ஒற்றர்களையும் சகோதரர்களையும் சேனைத் தலைவர்களையும் நாடெங்கும் உள்ள பல இடங்களுக்கும் அனுப்பிச் செய்தியைத் தெரிவித்து ஆதரவு திரட்டும் முயற்சியில் ஈடுபடுகிறான். சில இடங்களுக்கு அவனே செல்கிறான். அவ்வாறே பாண்டவர்களும் செயல்படுகிறார்கள். இறுதியில் ஒரு குறிப்பிட்ட நாளில் போர் தொடங்கி முடிவடைகிறது. பாண்டவர்கள் வெற்றி கொள்கிறார்கள். கெளரவர்கள் அழிகிறார்கள்.
நாவலின் இறுதி அத்தியாயம் மிகமிக முக்கியமானது. அந்த அத்தியாயத்தில் பல குரல்கள் கூடி ஒலிக்கின்றன. வலிமையான மழையின் பின்னணியில் அரச பரம்பரையினரின் குரல்கள், பொதுமக்களின் குரல்கள், காட்டில் வசிப்பவர்களின் குரல்கள், பெண்களின் குரல்கள் என ஒரே தருணத்தில் வெவ்வேறு இடங்களில் ஒலிக்கின்றன.
ஒரு வண்டி தானியம் வேண்டி கிராமத்து மக்களை நாடி வந்து குரல் கொடுக்கிறான் அர்ஜுனன். அவன் தம்மைத் தாக்கி அழித்துவிடக் கூடுமோ என அஞ்சி நடுங்குகிறார்கள் மக்கள். பிள்ளைப்பேற்றில் வலி தாள முடியாமல் அழும் உத்தரையின் குரல் கேட்கிறது. வம்சம் தொடர்வதற்காக மீண்டும் நியோக முயற்சியில் இறங்கலாமா என யோசனையில் ஆழ்ந்து போகிறாள் குந்தி. கடோத்கஜன் பின்னால் காட்டில் வாழும் வீரர்கள் அனைவரும் அணிதிரண்டு வந்துவிட, அந்தத் தருணத்தைப் பயன்படுத்திக் காட்டுக்குத் தீவைத்துப் பொசுக்கி விளைநிலமாக மாற்ற முனைகிறார்கள் நிலம்வாழ் மக்கள். கடோத்கஜனின் தாயும் அந்தத் தீயில் பொசுங்க்ச் சாம்பலாகிவிடுகிறாள். போர் வீரர்களை மகிழ்ச்சிப்படுத்த அழைத்துச் செல்லப்பட்ட பெண்கள் அனைவருமே கருவுற்று, தமக்குப் பிறக்கப்போகும் பிள்ளைகளுக்கு தந்தை என யாரைச் சுட்டிக்காட்டுவது என அரசரைச் சந்தித்து முறையிடுகிறார்கள். கடல் பொங்கி வழிந்து துவாரகையை மூழ்கடிக்கிறது. வெள்ளத்தின் அளவு மெல்ல மெல்ல உயர்ந்தபடி இருப்பதை அரசன் கையறு நிலையில் மெளனமாகப் பார்த்தபடி அமர்ந்திருக்கிறான்.
இறுதிக் காட்சியின் மழையும் வெள்ளமும் மிக வலிமையான படிமங்களாக நாவலுக்கு வலிமை சேர்க்கின்றன. மழை இயற்கையின் கொடை. அதே சமயத்தில் அது அழிக்கும் ஆற்றலையும் தன்னகத்தே கொண்டுள்ளது. ஆக்க சக்தியும் அழிவின் சக்தியும் ஒன்றாகக் கொண்ட பேராற்றல் அது. கிட்டத்தட்ட மழையைப் போன்றதே போர். தன் இருப்பையும் புகழையும் நிறுவ மானுடன் முதலில் போரை ஓர் ஆயுதமாகக் கையில் எடுக்கிறான். போரைத் தொடங்கும் வரை, ஒவ்வொருவரும் தான் என்னும் ஆணவத்தைப் பற்றி மட்டுமே யோசிக்கிறார்கள். ஆனால் தொடங்கிய பிறகு அவர்களின் கட்டுப்பாட்டை மீறிக் கடந்து சென்றுவிடுகிறது போர். அந்த உக்கிரத்தில் எங்கெங்கும் அழிவே நேர்கிறது. அழிவிலிருந்து மீட்சியே இல்லை. யாருக்காக ஒரு போர் தொடங்கப்பட்டதோ, அவருக்கு அந்தப் போரின் முடிவில் அவர் எதிர்பார்த்த பயன் கிடைக்கிறதா என்பதுதான் நாவல் எழுப்பும் அடிப்படையான கேள்வி. இல்லை என்னும் விடையையே நாவல் கண்டடைகிறது.
எனக்கு அந்தக் கேள்வியும் பதிலும் பிடித்திருந்தது. ஒரு வாசகனே உய்த்துணரும் வகையில் அந்தப் பதில் அமைந்திருக்கும் விதம் மேலும் பிடித்திருந்தது. பிறகுதான் நான் அந்த நாவலை மொழிபெயர்க்கத் தொடங்கினேன். அதன் முழுப் பிரதியையும் மொழிபெயர்த்து, சரிபார்த்து, செம்மைப்படுத்தி ஒழுங்குபடுத்தி முடிக்க ஓராண்டுக் காலம் பிடித்தது. அப்போதெல்லாம் கையால்தான் எழுதவேண்டும். கணிப்பொறி பழகாத காலம்.
இயற்கையிலேயே மகாபாரதக் கதையின் மீது எனக்கிருந்த ஆர்வமே பர்வ நாவலை மொழிபெயர்த்ததற்கான முதல் காரணம். பைரப்பாவின் கதைப்பின்னல் எப்போதும் உணர்ச்சிகரமானதும் வேகமும் கொண்டது. அதன் மீது எனக்கு எப்போதும் விருப்பமுண்டு. எங்கோ நடைபெற்ற கதையாக அன்று, நம் கண் முன்னால் நடைபெறுகிற ஒரு கதையாக நம்பகத் தன்மையுடன் அவர் படைப்புகளைப் படிக்கலாம். அந்தப் படைப்புகளுடன் வாசகர்களாக நாம் விரைவில் தடையின்றி நெருங்கிவிட முடியும். பர்வ நாவல் இதிகாசத் தன்மை உள்ள கதை என்றாலும் நான் தினமும் கண்ணெதிரே காணக்கூடிய ஒரு கதை என்பதைபோல பைரப்பா உணர வைத்துவிடுகிறார். அதில் ஒரு துளியும் சிந்தாமல் சிதறாமல் மொழிபெயர்ப்பிலும் தக்கவைத்திருப்பதில் எனக்கு எப்போதும் மகிழ்ச்சியுண்டு.
பருவம் நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு 2002இல் முதன்முதலாக வெளிவந்தது. இன்றளவும் அந்த நாவல் தமிழ் வாசகர்கள் விரும்பிப் படிக்கும் நூலாக அமைந்திருக்கிறது.வம்சவிருட்சம், கிருஹபங்க நாவல்கள் வழியாக ஒரு வாசகனாக மட்டுமே பைரப்பாவை நெருங்கிய நான் பர்வ நாவல் வழியாக அவரை மொழிபெயர்க்கும் அனுபவத்தையும் அடைந்தேன். அந்த அனுபவம் இன்றளவும் நினைத்து நினைத்து மகிழத்தக்க இனிய நினைவாக நிலைத்திருக்கிறது.
****
One Reply to “இனிய நினைவு”