கோன்ராட் எல்ஸ்ட்டின் ‘இந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும்’

இப்புத்தகத்தின் ஆசிரியர் கொன்ராட் எல்ஸ்ட் பெல்ஜிய நாட்டைச் சேர்ந்தவர். இந்திய, சீனக் கலாசாரங்களிலும் தத்துவத்திலும் முதுநிலைப் பட்டம் பெற்றபின், கீழை நாட்டுப் படிப்பில் இந்துக்களின் தேசியப் பற்றையொட்டி எழுதிய ஆராய்ச்சி விளக்கவுரைக்காகப் பெனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்திலிருந்து முனைவர் பட்டம் பெற்றவர். இவ்வாராய்ச்சிக் கட்டுரையைத் தழுவி, இவர் எழுதிய புத்தகம், இந்துக்களின் மனத்திலிருந்து காலனியப் பற்றை அகற்றுவதைப் பற்றியது. (Decolonizing the Hindu Mind.) இப்புத்தகம் இவரை இந்துக்களிடமும் அயல்நாட்டினரிடமும் பிரபலப்படுத்தியது. சிறிது காலம் அரசியல் பத்திரிகையாளராகவும் பெல்ஜிய நாட்டு மேற்சபை அங்கத்தினராகவும் பதவி வகித்தபின் திரும்பவும் ஆராய்ச்சியுலகத்தில் நுழைந்தார். இவரது சீரிய ஆராய்ச்சி இவருக்குப் புகழையும் வெறுப்பையும் அள்ளித்தந்தன. ஆசியதத்துவம், மொழிப் பிரச்சினைகள், ஜனநாயகம், இந்திய ஐரோப்பியத் துவக்கம், வேத வரலாறு, அரசியல் -மதம் இவற்றின் இடைமுகம், அயோத்தியா தகராறு போன்றவற்றைப் பற்றி ஏராளமான கட்டுரைகளை எழுதிக் குவித்துள்ளார்.

2012-லிருந்து 2018-வரை இவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்புதான் Hindu Dharma and the Culture Wars என்ற தலைப்புடன் 2019-ல் புத்தகமாக வெளிவந்துள்ளது.

இப்புத்தகத்திற்கு ஒரு சிறிய விமர்சனம் எழுதலாம் என்றுதான் எண்ணினேன். ஆனால், இப்புத்தகம் பல கட்டுரைகளின் தொகுப்பாக இருப்பதாலும் இந்து மதத்தையும் அம்மதத்தினரையும் கிண்டல் செய்தும் இழிவுபடுத்தியும் பேசும் அல்லது எழுதும் நபர்களுக்குப் பதிலடி கொடுப்பதுபோல் அமைந்துள்ளதாலும் இக்கட்டுரைகளைப் பற்றிய விரிவான விமரிசனம் தேவைப்படுகிறது, ஆகவே, இதை ஒரு தொடராக எழுதலாம் என்றெண்ணினேன்.

முகவுரை

முகவுரையே ஒரு கட்டுரையாக அமைந்துள்ளது. இக்கட்டுரை, புத்தகத் தலைப்பை ஆசிரியர் தேர்ந்தெடுத்ததின் காரணங்களை விரிவாக எடுத்துரைக்கிறது. ஆட்டோ வான் பிஸ்மார்க்தான் ஜெர்மனியில் கிறிஸ்துவ தேவாலயத்திடமிருந்து கல்வியாதிக்கத்தைக் கலாசாரப் போர் (kulturkampf) என்ற பெயரிட்டுப் பறிக்க முயன்று தோல்வியடைந்தார். அதுமுதல், பொருளாதாரத்தைத் தவிர்த்து மற்ற அனைத்து சச்சரவுகளுமே கலாசார யுத்தமாகவே எல்லா நாடுகளிலும் கருதப்படுகிறது. சச்சரவுகள் சிலசமயம் ஒரேவிதமாக இருந்தாலும் வெவ்வேறு நாடுகள் வெவ்வேறு விதமாக அவற்றை அணுகுகின்றன. கருச்சிதைவுத் தடைகளை அமெரிக்க உச்ச நீதிமன்றம் நீக்கிப் பல வருடங்களாயினும் அதையெதிர்த்து நடக்கும் போராட்டங்கள் இன்னும் நிற்கவில்லை. உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்காக அமெரிக்க ஜனாதிபதி பரிந்துரைத்துள்ள கத்தோலிக்கப் பெண்மணியை ஜனநாயகக் கட்சி தோற்கடிப்பதற்கான முயற்சிகளைக் கைகொண்டுள்ளது. ஆனால், இந்து மதம் கருச்சிதைவை மிகப்பெரிய பாவமென்று வன்மையாவும் வெளிப்படையாகவும் கண்டனம் செய்தபோதும், பாரதீய ஜனதா கட்சி உட்பட எந்த ஒரு கட்சியோ மக்களோ இதில் அக்கறை காட்டியதாகத் தெரியவில்லை. ஜனத்தொகை மிகுந்த நாடாக இருப்பது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

மற்றொரு போர்முனை கருணைக் கொலை. (Euthanasia.) ஆசிரியரின் நாடான பெல்ஜியம் 2002-லேயே இதை ஆதரிக்கும் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. ஆனால், மரணத்தைக் கடவுளின் செயலாகக்கருதும் கிருத்துவ நாடுகள் இதை முழுமையாக ஆதரிக்கவில்லை. இந்து மதங்கள் இதை ஒரு பெரிய விஷயமாகக் கருதவில்லை. நானறிந்த புற்று நோய்வாய்ப்பட்ட ஒரு ஜைனப் பெண்மணி இறப்பதற்கு 3 வாரங்கள் முன்பே உண்பதையும் நீரருந்துவதையும் நிறுத்திவிட்டார். அவரது வீட்டாரும் சுற்றத்தினரும் அதைத் தடைசெய்யவில்லை. அவரது மரணம் நான் பார்த்ததிலேயே மிக அமைதியான ஒன்று. சந்தாரா என்று சொல்லப்படும் இப்பழக்கம் ஜைனர்களிடம் வழக்கமாயுள்ளது என்பது எனக்குப் பிறகுதான் தெரியவந்தது.

சாவர்க்கர் 1966லும் வினோபா பாவே 1982லும் இம்முறையைப் பின்பற்றியே மரணமெய்தினர். பிரதமர் இந்திரா காந்தி இவரைப் பார்க்கவந்த சமயம், மதங்களை மதியாத பத்திரிகைகள் இவர் பிரதமரின் மரியாதைக்குரியவர் அல்லர். இவர் செய்வது சட்டவிரோதமானது; இவரை உடனே சிறையில் அடைத்து வலுக்கட்டாயமாக உணவை உட்செலுத்தவேண்டும் என எழுதின. இதில் வேடிக்கை என்னவென்றால் இச்சட்டம் கிருத்துவ பிரிட்டிஷ் அரசாங்கத்தால் அமல்படுத்தப்பட்டதாகும். மதச்சார்பற்றவர்களின் கூட்டம் இந்துக்களைத்தான் குறி வைக்கின்றதென்பது இச்சம்பவத்தால் வெளிப்படையாகத் தெரிகின்றது. சமீபத்தில் இது உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. , பலகாலமாக இதைக் கடைபிடித்து வந்துள்ள ஜைன சமூகம் இதைக் கடுமையாக எதிர்த்தது உச்ச நீதிமன்றமும் இவ்வழக்கத்தை ஆதரித்துத் தீர்ப்பு வழங்கியது.

மூன்றாவது கலாசாரப் போராட்டம் ஓரினச் சேர்க்கை சம்பந்தப்பட்டதாகும். இது இந்தியாவில் தண்டனைச் சட்டத் தொகுப்பின் 377-வது பகுதியின் விலக்கிற்கு எதிர்ப்பாக அமைந்தது. இத்தடுப்புச் சட்டமும் கிருத்துவ ஆங்கிலேய அரசாங்கத்தால் அமல்படுத்தப்பட்டது ஆகும். இச்சட்டத்தை ஆதரித்தவர்கள் இவ்விலக்கினால் சமுதாயம் சீர்குலையும் என்றனர். 19ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் இயற்றிய சட்டம் இந்தியர்களின் பாரம்பரியத்தை எவ்வாறு குலைக்கும் என்று ஆசிரியர் வியப்படைகிறார். பல இந்தியர்கள் இந்து மதம் ஓரினச் சேர்க்கையை ஏற்றுக்கொள்கிறது என்கிறார்கள். இதுவும் தவறே என்கிறார் ஆசிரியர். இந்து மதம் இஸ்லாமிய மதத்தைபோல் இவர்களைக் கல்லால் அடித்துக் கொல்லவில்லை. கிருத்துவ மதத்தைப்போல் சிறையில் அடைக்கவில்லை என்றாலும் 8 விதமான திருமணங்களை விவரிக்கும் இந்து சாத்திரம், ஓரினச் சேர்க்கையாளார்கள் திருமணம் செய்துகொள்ளலாம் என்று எங்குமே சொல்லவில்லை. அவ்வினத்தவர் கோரும் சலுகைகளையும் உரிமைகளையும் மரபு சார்ந்த சமுதாயங்களும் ஏற்பதில்லை.

நான்காவது, பெண்ணுரிமை. அமெரிக்க ராணுவத்தில் பணிபுரியும் பெண்மணிகள் ஆண்களுக்குச் சரிசமமான வேலைகளைச் செய்யலாம் என்று அனுமதி பெற்றுள்ளனர். போர் முனைக்கும் செல்ல அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. பெண்ணுரிமையின் முன்னணியில் நிற்கும் இஸ்ரேல் நாட்டு ராணுவ வீராங்கனைகள்கூட போர் முனைக்குச் செல்வதில்லை. இந்திய ராணுவமும் இதுவரை இதை அனுமதிக்கவில்லை.

இக்கலாசாரப் போராட்டங்கள் கிருத்துவ மத ஆதிக்கம் அதிகமாயுள்ள மேற்கத்திய நாடுகளைப்போல் இந்திய மக்களைப் பாதித்ததாகத் தெரியவில்லை. கலாசாரப் போராட்டங்கள் பெரும்பான்மையான இந்துக்களையே குறி வைக்கின்றன என்று சொன்னால் மிகையாகாது. மரபு சார்ந்த இந்துக்கள் ஒரு பக்கம்; மதச் சார்பற்ற இந்துக்கள் மற்றொரு பக்கம். தேசிய அல்லது மதச் சின்னங்கள், இந்து மதம், ஜாதி, இந்திய வரலாறு, கல்வித் திட்டம் ஆகியவை இப்போர்களில் முக்கியப் பங்கு வகிக்கின்றன இப்போராட்டங்களில் பங்கேற்கும் நபர்கள் பெரும்பாலும் தீவிரவாதிகளாகவும் பிரிவினைவாதிகளாகவும் இருப்பதால் உள்நாட்டுக் கலகங்கள் மூலம் இந்தியாவின் கட்டமைப்பே சிதையக்கூடிய வாய்ப்புள்ளது என்கிறார் ஆசிரியர்.

இந்தியாவின் மதச்சார்பின்மை அசாதாரணமானது. இந்தியக் கிருத்துவர்களும் இஸ்லாமியர்களும் மற்ற நாட்டவரைப் போலல்லாமல் தங்களை மதச்சார்பற்றவர்கள் என்று கூறிக்கொள்கிறார்கள். நேருவின் வழி வந்தவர்களும் மதச்சார்பற்றவர்களாகவே தங்களை நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இந்துத்துவக் கொள்கைக்ச் சேர்ந்தவர்களும் தாங்கள்தான் உண்மையான மதச்சார்பற்றவர்கள் என்று கூறுகின்றனர். ஆசிரியரோ, பிரதமர் நரேந்திர மோடி உட்பட இவர்கள் எல்லோருமே தெரிந்தோ தெரியாமலோ நேரு முன்வைத்த கொள்கைகளைத்தான் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்; இந்துக் கொள்கைகளை அல்ல என்கிறார். ஆனால் நேருவின் வழியைப் பின்பற்றுகின்றவர்களும் அவர்களுடைய வெளிநாட்டு நட்பினரும் இதை மூடிமறைத்தும் இந்துத்துவர்களைப் பற்றிய தவறான செயதிகளையும் பரப்பி வருகின்றனர். இந்த வாக்குவாதங்களில் எந்த அளவு உண்மையுள்ளது என்பதை எடுத்துரைப்பதுதான் இந்தக் கட்டுரைத் தொகுப்பின் நோக்கம் என்கிறார். இதில் எந்த அளவிற்கு வெற்றிபெற்றுள்ளார் என்பதைப் பின்வரும் இதழ்களில் பார்க்கலாம்.

(தொடரும்)

Series Navigationஇந்துக்கள் கோழைகளா? >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.