ஆவரேஜ்

இந்தியப்பரப்பில் இயங்கும் ஒரு விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் நான் ஒரு ட்ரெய்னி (trainee).

இன்னும் சொல்லப்போனால், அரியர் இல்லாமல் படித்திருந்தால் ஒரு வேளை நிரந்தர உத்தியோகம் கிடைத்திருக்கலாம்.

இரண்டொரு பாடங்களில் அரியர் இருக்கப்போய் நிறுவனத்தார்களுக்கு என் மீது நம்பிக்கை வராமல் என்னைத் தற்காலிகமாக வேலைக்கு எடுத்திருக்கிறார்கள். தற்காலிகம் என்றால் சுமார் மூன்று மாதங்கள். இந்தக் கால அவகாசமும் கூட இன்றே முடிந்திருக்க வேண்டும். பணியில் சேர்ந்த முதல் நாள், பின் மாலையில் தான் சேர முடிந்தது. காரணமும் நான் வைத்திருந்த அரியர்கள் தான். அதற்குக் காரணம் என் ஆவரேஜ் அறிவுதான்.

அரியர் தேர்வை அரசாங்கம் தள்ளி வைக்க, தேர்வு முடிவு வரும் வரை நான் காத்திருக்க, நிறுவனத்தில் அவசரப்படுத்த, நிறுவனம் குறிப்பிட்ட நாளும் என் தேர்வு முடிவு வெளியாகும் நாளும் ஒருங்கே துரதிருஷ்டவசமாய் சங்கமித்ததில் அன்று மாலை தான் நிறுவனத்தில் சேர முடிந்தது.

சேர்ந்த அன்றே பணியாளர் எண் உருவாக்க வேண்டும் என்பது விதி. அதற்கு ஒரு முழு நாள் ஆகும். பின் மாலையில் சேர்ந்ததால் அடுத்த நாள் தான் அந்த எண் கிடைத்தது. அதன் படி, சேர்ந்து இன்றோடு மூன்று மாதங்கள் நிறைவுற்றாலும், டெக்னிக்கலாகப் பார்த்தால் நாளை தான் அது முடிவுக்கு வருகிறது என்று எனக்கு இன்று தான் தெரிய வந்தது. இத்தனைக்கும் வெளியேறுமுன் செய்யவேண்டிய நடவடிக்கைகளை முடித்தும் விட்டேன். ஒரேயொரு சந்திப்பு பாக்கி இருந்தது. அதை நானும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அது நிறுவனத்தின் ஐம்பது ஆராய்ச்சியாளர்களும் பங்குபெறும் ஒரு சந்திப்பு. நான் பங்குபெற இருக்கும் கடைசி சந்திப்பு என்பது என் ஊகம். சந்திப்பு மாலை சுமார் ஐந்து மணிக்குத் துவங்கியது. நாட்டின் மிக்கச்சிறந்த மூளைகளுக்கு நடுவே ஆவரேஜ் அறிவுடன் நானும் அமர்ந்திருந்தேன்.

“நன்றாகக் கேளுங்கள்.. பூமி உடனே அழிந்துவிடும் என்று சொல்வதற்கில்லை என்றாலும் அழிவு வெகு தூரத்தில் இல்லை என்பது தெரிந்துவிட்டது. சனி கிரகத்தைச் ஐ சுற்றி வரும் நிலவான Titanல் மனிதர்கள் குடியேற புறச்சூழல் நிலவுகிறது. அந்த நிலப்பரப்பை ஆராய்ந்து அதில் colony அமைக்கும் பணி ரகசியமாக நடந்துகொண்டிருக்கிறது. இப்போது நம்மிடமிருக்கும் சவால், பூமியிலிருப்பவர்களில் யாரெல்லாம் புதிய உலகத்தில் குடியேற வேண்டும் என்பதைக் கண்டுபிடிப்பது தான். பூமியில் தற்போது ஏழு பில்லியன் மக்கள் வாழ்கிறார்கள். இவர்களில் யாரெல்லாம் புதிய உலகின் பிரஜைகளாக முழுத்தகுதிவாய்ந்தவர்கள் என்பதை கண்டுபிடிக்கும் வேலை நம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு ஏதேனும் வடி கட்டும் முறைகளைத் தயார் செய்திருக்கிறீர்களா?” என்றார் ரத்தன்.

“எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. இந்த அறையில் நாம் ஒரு ஐம்பது பேர் இருக்கிறோம். ஏழு பில்லியன் மனிதர்களின் தலையெழுத்தை பத்து பேர் நிர்ணயிப்பானேன்? பேசாமல், மக்களிடமே ரேடியோ மூலம் அறிவித்துவிட்டால், அவர்களே ஒரு ஐடியா தருவார்கள். இல்லையா? நமக்குத் தேவையான பொருளாதார உதவியையும் அவர்கள் மூலம் நாம் பெற்றுவிடலாம்” என்றேன் நான்.

“டேனி, விண்வெளிப்பயணம் என்பது மிக மிக செலவு பிடிக்கும் வேலை. ஏழு பில்லியன் மனிதர்களை அப்படியே புதிய கிரகத்துக்குக் கடத்துவது என்பது லேசுபட்ட காரியமில்லை. இப்போது அவர்களிடம் போய், உங்களில் ஒரு சிலர் மட்டும் தான் புதிய உலகில் பிழைப்பீர்கள் என்று சொன்னால் எத்தனை பெரிய கலகம் உருவாகக்கூடுமென்று உன்னால் கற்பனை செய்ய முடிகிறதா? அதையெல்லாம் யோசித்துப் பார்த்துவிட்டுத்தான் கேட்கிறாயா?” என்றார் ரத்தன்.

“மன்னிக்கவும். குடியேற்ற அமைப்பை ஒரே நாளில் அமைத்துவிட முடியாது. ஒவ்வொரு கட்டமாக அமைந்து, இறுதியில் ஏழு பில்லியன் மக்களும் இடம்பெயர்வார்கள் என்றும், யாரெல்லாம் priority ஆக முதலிலேயே புதிய கிரகத்துக்குக் குடியேற வேண்ம் என்பதற்குத்தான் வடிகட்டும் முறைகளைக் கேட்கிறீர்கள் என்று எண்ணிவிட்டேன்” என்றேன் நான்.

ஏதேனும் சொல்வார் என்று தான் எதிர்பார்த்தேன். ரத்தன் எதுவும் சொல்லவில்லை.

“அப்படியானால், உண்மையிலேயே எல்லோரும் புதிய உலகம் போகப்போவதில்லையா?” என்றேன் நான்.

இல்லை என்பதாய் இட வலமாகத் தலையசைத்தார் ரத்தன்.
“நான் ஏற்கனவே சொன்னது போல் விண்வெளிப்பயணம் என்பது அதீதமாக செலவு பிடிக்கும் வேலை டேனி. எல்லோரையும் அழைத்துச்செல்ல இடமில்லை. போதுமான கலன்கள் இல்லை. இன்னும் என்னென்னவோ இல்லை. விரிவதாகச் சொல்வதானால், என்னென்னவெல்லாம் இல்லை என்று பெரிய பட்டியலே இட வேண்டும்” என்றார் ரத்தன்.

“இது அநியாயமாக இருக்கிறது. பெருத்த ஏமாற்றமாக இருக்கிறது. இவர்கள் அனைவருக்கும் வாழ உரிமை இருக்கிறது. நாம் கடவுள் இல்லை என்னும் போது, இவர்களில் யார் ஜீவிக்க வேண்டும், யார் சாக வேண்டும் என்று முடிவெடுக்க நாம் யார்?” என்றேன் நான்.

“டேனி, எங்களை குற்றஉணர்வு கொள்ள வைக்க முயல வேண்டாம். ஏனெனில் அதற்கு நாங்கள் முழுக்கத் தகுதியானவர்கள் இல்லை. இது நிர்பந்தம். வேறு வழியில்லை. வேண்டுமானால் ஒன்று செய். ஏழு பில்லியன் பேரும் டைட்டன் செல்வதற்கான மார்க்கத்தை நீ கண்டுபிடித்துச் சொல். செலவு குறைவாக இருப்பின் அதையே மகிழ்ச்சியுடன் பரீசிலிக்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம்” என்றார் ரத்தன்.

அந்த சந்திக்கும் அறையில் அமர்ந்திருந்த அத்தனை பேரும் என்னையே பார்த்தார்கள். ஒவ்வொருவர் முகத்திலும் கலவையான உணர்வுகள். இயலாமை, ‘ நீ என்ன செய்யப்போகிறாய்?’ என்பதான கேள்வி, ‘வேறென்ன பெரிதாக நடந்துவிடப்போகிறது’ என்கிற ஸ்திதி.

எனக்கு உண்மையிலேயே என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஒரு மனிதாபிமான அடிப்படையில் குரல் உயர்த்திவிட்டேனே ஒழிய, என் மனதில் அதுகாறும் தீர்வென்று எதுவும் இல்லை. எந்தத் தீர்வையும் முன்னிருத்த அப்படி குரல் உயர்த்தவில்லை என்பதை அந்த அறையில் இருந்த சொற்ப ஆராய்ச்சியாளர்களுக்கு எப்படிப் புரியவைப்பது என்று தெரியாமல் விழித்தேன்.

“எனக்கு யோசிக்கக் கொஞ்சம் நேரம் வேண்டும்” என்று மட்டும் சொன்னேன்.

அந்த அறையில் இருந்த பலரின் முகத்திலும் ‘இதுக்குதான் இவ்ளோ பில்டப்பா’ என்கிற ஸ்திதி தெரிந்தது அல்லது நான் அவ்விதம் புரிந்துகொண்டேன்.

“சரி. நம்மில் ஒருவருக்கு மாற்றுக் கருத்துக்கள் இருப்பினும், நாம் தொடர்ந்து இயங்க இயலாது. டேனி ஒரு தீர்வைக் கொண்டு வருவதாகச் சொல்கிறான். ஏழு பில்லியன் மனிதர்களும் புதிய உலகம் செல்ல வேண்டும் என்பது நம் அனைவரின் உள் நோக்கமும் தான் என்பதை வெளிப்படுத்திக்கொள்ள கிடைத்த வாய்ப்பாக இதைக் கருதிக்கொள்ளலாம். ஆக டேனிக்கு ஒரு நாள் கால அவகாசம் அளிக்கப்படுகிறது. டேனி உருப்படியாக ஒரு தீர்வை கொணரும் பட்சத்தில் நாம் ஏழு பில்லியன் மனிதர்களும் பிழைக்க ஏதுவாகும்” என்றார் ரத்தன்.

எனக்கு முதன் முறையாக உள்ளுக்குள் நாக்கு, நாடி, நரம்புகள் அனைத்தும் தந்தி அடிப்பதைப் போல் உணர்ந்தேன். ஏழு பில்லியன் ஜனமும் புதிய உலகம் செல்லப்போவதில்லை என்பதைக் கேட்டதும் இயல்பாக வெளிப்பட்ட ஏமாற்றத்தைப் பகிர்ந்தது தவறோ என்று அடுத்து வந்த சில மணி நேரங்கள் எனக்குப் புரிய வைத்தது. எத்தனை யோசித்தும் ஒரு உருப்படியான தீர்வும் தோன்றவில்லை. நான் அந்தக் கேள்வியை அந்த சந்திப்பில் எழுப்பியபோது ஏன் அத்தனை பேரும் என்னை ஒரு விதமாகப் பார்த்தார்கள், அவர்களின் மனத்திலெல்லாம் என்ன ஓடிக்கொண்டிருந்திருக்குமென்று என்னால் ஊகிக்க முடிந்தது.

ஆனால், அது ஏதோ என் தோல்வியை, இயலாமையை நானே பகிரங்கமாக ‘எனக்கு ஒரு இயலாமை இருக்கிறது’ என்று தண்டோரா போட்டு அறிவித்துவிட்டோமோ என்று தோன்றியபோது வெகுவாகத் தாமதமாகிவிட்டதையும் என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது.

மறு நாள், அடுத்த சந்திப்பில் என்னிடம் தீர்வு குறித்து எல்லோரும் கேட்கையில், எப்படியெல்லாம் சமாளிக்கலாம் என்று யோசிக்கலானேன். எழவு, அதற்கும் கூட ஒரு உருப்படியான ஐடியாவும் கிடைக்கவில்லை.

காலனியாக்க எதை எதையெல்லாம் தீர்வாக்கியாக்கியிருக்கிறார்கள் என்பதையெல்லாம் என் மடிக்கணிணியில் வருவித்து சோகமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

செவ்வாய் கிரகம். கிட்டத்தட்ட பூமி போன்ற ஒரு கிரகம். மார்க் வாட்னி என்பவர் அதில் தொலைந்து போய் பின் பல மாதங்கள் கழித்து உயிருடன் மீட்கப்பட்ட கிரகம். அவரால், உருளைக்கிழங்கு விளைவிக்கப்பட்ட கிரகம்.

அதற்கு அடுத்தபடியாக ஸீரீஸ். அது சந்திரனை விடவும் மிக மிக சிறியது. இன்னும் சொல்லப்போனால் அது ஒரு கிரகம் கூட இல்லை. ஒரு குறுங்கோள் அதான். அதாவது சிறு கோள். பனிக்கட்டியாக நீர் இருக்கிறது. ஆனால் ஈர்ப்பு விசை இல்லை. சுத்தமாக இல்லை என்றில்லை. மிக மிக லேசாக இருக்கிறது. இதே காரணத்தால், அங்கு வளிமண்டலமும் இல்லை.

இதற்கும் அடுத்தபடியாக சனி கிரகம். அதன் நிலவான டைட்டன். டைட்டனில் சந்திரனில் இருப்பதை விடவும் லேசான ஈர்ப்பு விசையும், அடர்த்தியான வளிமண்டலமும் காணப்படுகிறது. இது செவ்வாய் கிரகத்துக்கு நேர் எதிரானது. இதனாலேயே மனிதப்பரவலுக்கு செவ்வாயை விட டைட்டன் உகந்ததாகப் பார்க்கப்படுகிறது. நீராதாரம், நைட்ரஜன் மற்றும் இதர ஹைட்ரோ கார்பன் இருப்பு போன்றவைகள் டைட்டனையே சாதகமான இடமாக்குக்கின்றன.

எதையெதையோ யோசித்துக்கொண்டிருந்தபோது அது என் மண்டைக்குள் எங்கோ ஒரு தீப்பொறி போல் பற்றிக்கொண்டது.

“ஈர்ப்பு விசை இல்லை….வளிமண்டலமும் இல்லை…..”

மண்டைக்குள் இனம் தெரியாத, பூர்வீகம் அறியாத ஒர் ஒளி சட்டென வேர் விட்டு, கிளை பிரிந்து, இலைகள் விரித்து மரமாகி, அகலவாக்கில் விரிந்துகொண்டே போய் பெருஞ்சோதி ஆனது. அலுவலகத்தை அடைந்து ஆராய்ச்சிப்பகுதியில் இருந்த சூப்பர் கம்ப்யூட்டர்களில் எனது ஐடியாவை உள்ளீடு செய்து சோதித்துப் பார்த்தேன். ‘அப்படி ஒன்றும் மோசமில்லை’ என்றே பதில் வந்தது. அலுவலகத்தின் ஜிம்மில் இருந்த குளியலறைக்கு சென்று குளித்துவிட்டு வர விடிந்திருந்தது.


அன்று அலுவலகத்தின் சந்திப்பறையில், சுமார் ஐம்பது விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் முன் “ஸீரீஸ் ஐ பயன்படுத்திக்கொள்ளலாம்” என்று நான் சொன்னபோது அரை உறக்கத்திலிருந்த ஐம்பது பேரும் எழுந்தமர்ந்தார்கள்..

“நீ உனக்கு வரும் மின்னஞ்சல்களை சரியாக வாசிப்பதில்லை என்றே கணிக்கிறேன், டேனி. ஸீரீஸ் குறுங்கோள், குடியேற்றத்துக்கு உகந்ததல்ல என்பதை விவாதித்து முடித்து, அதை தீர்வுகள் பட்டியலிலிருந்து கூட தற்காலிகமாக விலக்கி வைத்தாகிவிட்டது. நீ அதையெல்லாம் பார்க்காமல்…………” என்றவர் சற்றே இடைவெளி விட்டு,

“அதைப் பற்றி ஏற்கனவே ஆயிரம் முறை பார்த்தாகிவிட்டது. அதில் ஈர்ப்பு விசை மிக மிக பலவீனமான அளவில் தான் இருக்கிறது. நிறைய நீர் இருக்கலாம். அது ஒரு முறையான கோள் கூட இல்லை. அதில் குடியேற்றத்தைப் பரப்பும் திட்டம் ஒரு காலத்தில் இருந்தது. சனி கிரகத்தைச் சுற்றி வரும் நிலவான டைட்டனில் மனிதர்கள் குடியேற சாத்தியக்கூறுகள் அதிகம் இருக்கின்றன என்று தெரிந்துவிட்ட பிறகு ஸீரீஸ் ஒரு பொருட்டாக இல்லை. நமக்கு இப்போது அது பிரச்சனை இல்லை டேனி. ” என்றார் ரத்தன்.

“ஸீரீஸில் குடியேற்றம் அமைப்பதைப்பற்றிப் பேசவில்லை நான்,” என்றேன்.

ரத்தன் என்னைக் கேள்வியாய்ப் பார்த்தார்.

“உன்னைப் பற்றிய ரிப்போர்ட் பார்த்தேன். எங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம். செவ்வாய் கிரகத்துக்கும், வியாழன் கிரகத்துக்கும் இடையில் சூரியனை மையமாகக் கொண்டு சுற்றிவரும் குறுங்கோளையா சொல்கிறாய்.?” என்றார் ரத்தன்.
“அதுவே தான். ஆனால், நாம் அதைக் குடியேற்றத்துக்குப் பயன்படுத்தப் போவதில்லை. மாறாக, அதை ஒரு போக்குவரத்து முனையமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று நம்புகிறேன்” என்றேன் நான்.

“போக்குவரத்தா? எதற்கும் எதற்கும் போக்குவரத்து?”

அந்த அறையிலிருந்த ஏனைய விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் ரத்தனையும் என்னையும் மாறி மாறிப் பார்த்தார்கள். தங்களுக்குள் எதையோ கிசுகிசுத்துக்கொண்டார்கள்.

‘இவன் என்ன சொன்னாலும் நிறுவனம் இவனை வேலைக்கு எடுக்க வாய்ப்பே இல்லை’ என்று அவர்கள் பேசிக்கொள்வதை, டெலிபதி திறன் இல்லாமலேயே என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.

“விளக்குகிறேன். ஏழு பில்லியன் மனிதர்களையும் டைட்டன் கிரகத்திலிருந்து பூமியிலிருந்து கடத்தத் தடையாக இருப்பது போக்குவரத்துச் செலவுகள். விண்வெளிப்பயணம் சுமார் ஆறு முதல் ஏழு மாதங்களாகும். இந்தச் செலவினங்களைக் குறைக்க செக்கு மாடு போல் பூமிக்கும், சனி கிரகத்திற்கும் சென்று வரக்கூடிய இடையூர்தி போன்ற ஏற்பாட்டைச் செய்ய ஸீரீஸ் குறுங்கோள் பொருத்தமான ஒன்று என்பது என் அவதானம்” என்றேன் நான்.

“எதை வைத்து அப்படிச் சொல்கிறாய்?” என்றார் ரத்தன்.

“கவனியுங்கள். ஸீரீஸ் ஐ காலனி ஆக்கவிடாமல் தடுப்பது அதன் மிக மெல்லிய ஈர்ப்பு விசை. ஆனால் போக்குவரத்துக்கு அதுதான் கச்சிதமான தேவை. ஸீரீஸ் பூமிக்கும் சனி கிரகத்துக்கும் இடையில் சென்று வருமானால், அதன் மீது மனிதர்களுக்கு நீள் உறக்கக் குடுவைகளைக் கட்டமைக்க முடிந்தால் போதுமானது. ஈர்ப்பு விசை இல்லாதிருப்பதால், எந்த ஒரு கலனையும் கொண்டு ஸீரீஸ் மீது இறக்கி ஏற்றலாம். செவ்வாயைப் போன்ற கிரகங்களில் இது சாத்தியமில்லை. செவ்வாய் கிரகத்தின் அதிக ஈர்ப்பு விசைக்கு தரையிறக்கி, ஏற்ற நாம் அதிகமான எரிபொருளைச் செலவிட வேண்டி வரும். ஸீரீஸ்ல் அந்தப் பிரச்சனை இல்லை.”

“சரி. ஆனால் நீ அடிப்படையை மறந்துவிட்டுப் பேசுகிறாய். நீ ஏன் ட்ரெய்னியாக சேர்ந்தும் வேலைக்குத் தேர்வாகவில்லை என்பதை மீண்டும் ஒருமுறை அழுத்தம் திருத்தமாக நிரூபிக்கிறாய் டேனி. ஸீரீஸ் செவ்வாய் கிரகத்துக்கும், குரு கிரகத்துக்கும் இடையில் சூரியனை மத்திமமாகக் கொண்டு சுற்றி வருகிறது. பூமிக்கும், சனி கிரகத்துக்கும் இடையில் இல்லை. முதலில் அடிப்படைகளைத் தெரிந்து கொள்.” என்றார் ரத்தன்.

குரலில் லேசான எகத்தாளம். அதை நான் புறக்கணித்தேன்.

“ஒவ்வொரு முறையும் ஒரு தேடல் கோள் பூமியை விட்டகன்று வேறொரு கிரகத்திற்கு செல்கையில், பூமியை அதன் சுற்றுவட்டப்பாதையிலிருந்து தள்ளி வைக்கக் கூடுமொரு உந்து விசையை வெளிப்படுத்தித்தான் செல்கிறது. என்ன ஒன்று, அந்த உந்துவிசை அத்தனை திடமானதாக இல்லை என்பதால் அது பூமியை எதுவும் செய்வதில்லை. ஸீரீஸ் பூமியை விடவும், அவ்வளவு ஏன் பூமியைக் கிடையாகச் சுற்றிவரும் சந்திரனை விடவும் மிகவும் சிறிய குறுங்கோள். சுற்றளவு வெறும் அறு நூறு மைல் தான். நாம் செய்ய வேண்டியதெல்லாம், ஸீரீஸ்ஐ பூமியின் ஈர்ப்பு விசைக்குள் நகர்த்திவந்து, சனி கிரகத்தை நீள் வட்டப்பாதையில் எப்போதும் சுற்றி வரும் ஒன்றாக மாற்றவேண்டும். அதற்கு நம்மிடம் வழிமுறைகள் இருக்கிறது. அதை பலமுறை நாம் செயற்கைக்கோள்களில் வெற்றிகரமாக பயன்படுத்தியிருக்கிறோம்” என்றேன் நான்.

அதன் பிறகு சில மணித்துளிகளுக்கு ரத்தன் உள்பட யாருமே பேசவில்லை. அவர்களுக்கு நான் சொன்னது புரிந்ததா இல்லையா என்பது எனக்கு தீர்மானமாகத் தெரியவில்லை. அதற்கு மேல் என்ன சொல்வது என்று தெரியாமல் நானும் அமைதியானேன்.

“நீ இந்த சந்திப்பில் பகிர்ந்து கொண்டதை நான் மேலிடத்துக்குக் கொண்டு செல்கிறேன்” என்றார் ரத்தன்.

அது விதி. சந்திப்பில் யார் என்ன சொன்னாலும் அதை MOM எனப்படும் குறிப்பில் குறித்து மேலிடத்திற்கு ஆவணப்படுத்துவது. அதைத்தான் அவர் செய்வதாகச் சொன்னார். அன்று எனக்கு இறுதி நாள். அதன் பிறகு அந்த ஆராய்ச்சிக் கூடத்துக்கும் எனக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. ரத்தன் நான் பார்த்துக்கொண்டிருக்கும் போதே என் கருத்துக்களை அப்படியே பதிவு செய்தார்.

அன்றைய சந்திப்பு அதன் பிறகு சில நிமிடங்களில் முடிந்தது.

நான் நம்பிக்கை இழந்தவனாய் என் இருக்கைக்கு வந்து என் பொருட்களை எடுத்து பேக் செய்யத் துவங்கினேன்.அப்போது எனக்கு ஒரு அழைப்பு வந்தது. நிறுவனத்தின் நிர்வாக உயர் அதிகாரியும், பங்குதாரருமான நாதன் ஹாக்லே என்னைத் தன் அறைக்கு வரப்பணித்தார். நானும் சென்றேன். அங்கே ரத்தனும் இருந்தார்.

“உன் அறிக்கையைப் படித்தேன். அதை நிராகரிக்க எனக்கு வெகு நேரம் ஆகாது” என்றார் நாதன்.

“ஏன்? காரணம் என்ன?” என்றேன் நான்.

“உன் கவலை எனக்குப் புரிகிறது. உனக்கு ஏழு பில்லியன் மக்களும் காப்பாற்றப்பட வேண்டும். நீ அதிகமாக உணர்வுக்குவியலான திரைப்படங்களைப் பார்ப்பாய் என்று நம்புகிறேன். உன் தீர்வு உன்னை எங்களில் ஒருவராகக் கருத வைக்கிறது. ஆனால் உன் தீர்வில் இருப்பது, நிறுவனத்திற்கு எதிராக இருக்கிறது. இப்போது எங்கள் முன் உள்ள கேள்வி, உன்னை இந்த நிறுவனத்தில் வேலைக்கு எடுப்பதா வேண்டாமா என்பது. ஆனால், நீ எங்களில் ஒருவனாக இருந்தால் மட்டுமே அது சாத்தியம். எதிர்காலத்திற்கு, ஏழு பில்லியன் மக்களுள் தலை சிறந்த சில ஆயிரம் மனிதர்கள் போதாதா, ஏழு பில்லியன் மக்களும் ஏன் தேவை என்பதை தர்க்க ரீதியாக நீ என்னைக் convince செய்துவிடு. உன்னை நான் இந்த நிறுவனத்தில் அனுமதிப்பதோடு மட்டுமல்லாமல், உன் தீர்வையும் ஏற்கிறேன்.” என்றார் நாதன்.

நான் அவரையே பார்த்தபடி அமர்ந்திருந்தேன்.

“உனக்கே தெரியும். ஒரு பள்ளிக்கூட வகுப்பறையை எடுத்துக்கொள். அறுபது பேர் படிக்கிறார்கள் என்றால் அறுபது பேரும் விண்வெளி ஆராய்ச்சிக்குத் தயாராவதில்லை. அந்த அறுபதில் பாதி, எவ்வித நுண்ணறிவுக்கும் பொருத்தமானவர்களாகக் கூட இருக்க மாட்டார்கள். என் கேள்வி இதுதான். இவர்களை சிரமேற்கொண்டு புதிய உலகத்திற்கு அழைத்துச்செல்வதில் என்ன பலன் இருக்கப்போகிறது? இவர்கள் எங்கும் ஒரு ஒழுங்குக்குக் கட்டுப்பட மாட்டார்கள். இவர்கள் இருக்கும் இடததில் ஒழுங்கீனங்கள் மிகுக்கும். ஒழுங்குடன் இயங்குபவர்களின் ஒட்டுமொத்த வினைப்பயன் இவர்களால் சிதைவுறும். நுண்ணறிவுடன், ஓர் ஒழுங்குடன் செயல்பட்டவர்களால் தான் மானுடம் படிப்படியாக முன்னேறி இப்போதிருக்கும் இடத்திற்கு வந்திருக்கிறது. நுண்ணறிவு கூடியவர்களால் உருவானது தான் இந்த நிறுவனமும் கூட. இல்லையா?” என்றார் நாதன்.

“இந்தக் கேள்விகளுடன் நீங்கள் எங்கே செல்கிறீர்கள் என்பது புரிகிறது. ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் எப்போது பிறந்தார்?”

“1879ல் ஜெர்மனியில்”

“அவர் பத்தாம் நூற்றாண்டிலேயே பிறந்திருக்கலாமே?

“பிறந்திருக்கலாம். ஆனால், அப்போது பிறந்திருந்தால், அவருடைய இலக்கு, ஈர்ப்பு விசையைக் கண்டுபிடிப்பதாக இருந்திருக்கும். அதிலேயே அவரது காலமும் கழிந்திருக்கும். சார்பியல் கோட்பாட்டை அவரால் கனவில் கூட கண்டிருக்க முடியாது”

“எக்ஸாக்ட்லி! அப்படியானால், கண்டுபிடிப்புகள் காலத்தின் பொருட்டு, நிலைத்தன்மை வாய்ந்தவைகளாகத்தான் இருக்கின்றன என்று கொள்ளளாமா? நியூட்டனுக்கு முன் ஐன்ஸ்டைன் பிறந்திருந்தால், ஈர்ப்பு விசையை ஐன்ஸ்டைனும், சார்புக்கோட்பாட்டை நியூட்டனும் கண்டுபிடித்திருக்க சாத்தியப்பட்டிருக்கும். அல்லவா?”‘

நாதனும் ரத்தனும் ஏதும் பேசாமல் என்னையே பார்த்தபடி அமர்ந்திருந்தார்கள்.

“இருவருக்குமே காணக்கிடைத்தது, ஒழுங்கற்றவைகள் தாம் என்பது என் அவதானம். நியூட்டன் ஈர்ப்பு விசையை மட்டுமேயும், ஐன்ஸ்டைன் சார்பியல் கோட்பாட்டை மட்டுமேயும் கண்டுபிடித்திருக்கப் பிறந்தவர்களல்ல. அவர்கள் தங்கள் முன் இருந்த ஒழுங்கற்றவைகளை ஒழுங்கு செய்யக் கிளம்பித்தான் நியூட்டனும், ஐன்ஸ்டைனும் ஈர்ப்புவிசையையும், சார்பியல் கோட்பாட்டையும் முறையே கண்டுபிடித்தார்கள். ஆனால், கண்டுபிடிப்புகள் காலத்தின் பொருட்டு நிலைத்தன்மை வாய்ந்தவைகளாகத்தான் எப்போதும் இருந்திருக்கின்றன. தேவைகள் எல்லாக்காலத்திலும் எழுந்திருக்கின்றன. அவைகளே கண்டுபிடிப்புகளுக்கு அடிப்படைகளாக இருந்திருக்கின்றன. இந்த ஒட்டுமொத்த நாடகத்திலும் உள்ள ஒரே மாறிலி, ஒழுங்கும், ஒழுங்கற்றவைகளும் தான். ஆக, மானுட மேன்மைக்கு கண்டுபிடிப்புகள் தேவை எனில், கண்டுபிடிப்புகளுக்கு ஒழுங்கமைதல் நோக்கமாக இருக்க வேண்டுமெனில், ஒழுங்கற்றதும் அங்கே இருக்க வேண்டும். ஒழுங்கற்றது இல்லாமல் ஓர் ஒழுங்கு உருவாக வாய்ப்பில்லை. ஒழுங்கே ஒழுங்கற்றவைகள் உருவாகக் காரணமாகும் ஒரே உந்துவிசை. ஒழுங்கற்றைவைகளின் மத்தியில் தான் ஒழுங்குக்கென ஓர் அர்த்தம் பிறக்கிறது. ஆக, நமக்கு ஒழுங்கும், ஒழுங்கற்றைவைகளும் சமமான அளவில் தேவை, நாதன். ” என்றேன் நான்.

“இன்னும் சொல்லப்போனால், சுமார் இருபத்தி ஐந்து ஆண்டுகாலமாக விண்வெளி ஆராய்ச்சியில் இருக்கும் உங்கள் நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான வல்லுனர்கள் பணியாற்றியிருக்கிறார்கள். நான் சொன்ன இந்தத் தீர்வை, அதாவது ஸீரீஸ்ஐ போக்குவரத்துக்குப் பயன்படுத்திக்கொள்ளும் தீர்வை இதற்கு முன் எத்தனை பேர் சொல்லியிருக்கிறார்கள்?” என்றேன் தொடர்ந்து.

நாதன் ரத்தனைக் கேள்வியாய் ப் பார்க்க, ரத்தன், “பூஜ்யம்” என்றார்.

“வேடிக்கையைக் கவனித்தீர்களா? இந்த நிறுவனத்தில் இன்றெனக்கு இறுதி நாள். எனினும், இந்தத் தீர்வு இங்கிருக்கும் எல்லோரைவிடவும் குறைவாக மதிப்பெண் வாங்கியிருக்கும் என்னிலிருந்து தான் உதித்திருக்கிறது என்பதை உங்களால் மறுக்கவே முடியாது” என்றேன் நான்.

நாதன் என்னை அர்த்தமாய்ப் பார்த்தார்.


ஆறு மாதங்களுக்கு பிறகு, என் முன்னே இருக்கும் மாபெரும் திரையில் ஸீரீஸ் குறுங்கோளை உந்து கருவிகளைக் கொண்டு பூமியின் ஈர்ப்பு விசைக்குள், சனிக்கிரகத்தைச் சுற்றிவரும் நீள் வட்டப்பாதையில் நிலை நிறுத்துவதை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருக்கிறேன் நான். இனி இந்தக் குறுங்கோள் ஒரு போக்குவரத்து இடை நிலையம் ஆகப் பயன்பட இருக்கிறது. இதன் மீது மனிதர்கள் நீள் உறக்கத்தில் பயணம் செய்யக்கூடிய நீள் உறக்கக் குடுவைகள் பொருத்தப்படும். இனி இந்தக் குறுங்கோள், பூமியை மையமாகக் கொண்டு சனியைச் சுற்றி ஒரு நீள்வட்டப்பாதையில் செக்குமாட்டைப்போல் சுற்றுவர இருக்கிறது. அதனை நாங்கள் எங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, பூமியிலிருக்கும் ஏழு பில்லியன் மக்களையும் பகுதி பகுதியாக சனிக்கிரகத்தின் நிலவான டைட்டனிற்கு இடம்பெயரச்செய்ய இருக்கிறோம்.

இனி வரும் காலங்களில் பூமி மனிதர்கள் வாழ இயலாத ஒரு வெற்று கிரகமாகவும், டைட்டன் மனிதர்களின் புதிய கிரகமாகவும் இருக்கப் போகிறது.

இதுகாறும் எவ்வித பயனுமற்றிருந்த ஒரு நிலா, மனித உயிர்களுக்கான இருப்பிடமாக பிரபஞ்ச இருப்பில் ஒரு அர்த்தத்தை உருவாக்கப்போகிறது. இதுகாறும் சூரியக்குடும்பத்தில் உயிர் இருப்பு தனக்கு மட்டுமேயென்றிருந்த பூமி இனி வரட்டு மண்ணாக இருக்கிறது.

என்னைப் பொறுத்தமட்டில் இந்த ஆராய்ச்சி நிறுவனத்தில் எனக்கு முன்னால் பணியிலிருந்த எல்லோரின் கண்களுக்கும் தென்படாத ஒன்றை தென்பட வைக்க என் ஆவரேஜ் அறிவுதான் ‘லென்சாக’ உதவியது எனலாம். ஸீரீஸ் ஐ காலனியாக்கவே எல்லோரும் யோசித்தார்கள். ஸீரீஸ்இன் மெல்லிய ஈர்ப்புவிசை, வளிமண்டலமின்மை ஒரு பெரும் குறையாகத் தெரிந்தது அவர்களுக்கு. ஆனால், இவைகள் ஏன் எனக்கு குறையாகத் தெரியவில்லை? என்னை, இவைகளை சாதகமான அம்சமாகப் பார்க்க வைத்தது எது?

இதையெல்லாம் வைத்து யோசித்துப் பார்க்கும் போது, ஆவரேஜ் அறிவுகளின் கண்களில் படவெனவே சில தீர்வுகள் காத்திருக்குமோ என்று தோன்றுகிறது. நியூட்டனும், ஐன்ஸ்டனும் மாறினாலும், எப்படி தீர்வுகள் நிலைத்தன்மை வாய்ந்தவைகளாக இருக்குமோ, அது போல், ஆவரேஜ் அறிவுகளின் கண்களில் படவெனவே காத்திருக்கும் தீர்வுகளும் நிலைத்தன்மை வாய்ந்தவைகளாக இருக்குமோ என்று தோன்றுகிறது. வாழ்க்கையில் வெற்றி பெற சில நேரங்களில் நாம் ஆவரேஜ் அறிவுக்கு நம்மை நாமே சிதைத்துக்கொள்வதும் ஒரு தீர்வுதான் என்றே புரிந்துகொள்கிறேன்.


3 Replies to “ஆவரேஜ்”

 1. ஆவெரேஜ் – அல்டிமேட்

  கதையில் எத்தனை ஆவெரேஜ். ஒரு ஆவெரேஜ் கதாநாயகன், ஒரு ஆவெரேஜ் கிரகம், உலகின் சமன்பாடுகிளில் சரிபாதி நிறைந்திருக்கும் ஆவெரேஜ் இனக்குழுக்களுக்கான உரிமைக்குரல், அருமை.

  ஆவெரேஜின் அவசியத்தை நியூட்டன் ஐன்ஸ்டன் கொண்டே நிறுவி கோட்பாட்டுக்கு வலுசேர்த்து புத்திசாலித்தனம்.

  நிறைவான கதை.
  வாழ்த்துக்கள் ராம்பிரசாத்

 2. “ஆவரேஜ்” என்ற தலைப்பு, அதிலும் அறிபுனைக் கதைக்கா? இத்தலைப்பே ஆவரேஜான என்னை இக்கதையை உடனே படிக்கத் தூண்டியது.

  அளவான அறிவியலுடன், குழப்பம் இல்லாமல் எளிதில் புரியும் வண்ணம் எழுதப்பட்ட நடை முழுமூச்சுடன் கதையைப் படித்து முடிக்கச் செய்தது.

  யாரும் அதிகம் சீந்தாத குறுங்கோளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வித்தியாசமாகச் சிந்தித்துக் கதையைப் படைத்திருப்பது சிறப்பு!

  இடையிடையே கூறப்பட்டிருக்கும் “ஒழுங்கற்றைவைகளின் மத்தியில் தான் ஒழுங்குக்கென ஓர் அர்த்தம் பிறக்கிறது. ஆக, நமக்கு ஒழுங்கும், ஒழுங்கற்றைவைகளும் சமமான அளவில் தேவை” போன்ற சமநிலைக் கருத்துகள் சிந்திக்க வைக்கின்றன.

  வாழ்த்துகள் ராம்!

 3. ஒரு அறையை/தோட்டத்தை பராமரிக்காமல் விட்டால் அது ஒழுங்கின்மையை(?) நோக்கியே செல்லும். எது ஒழுங்கு? எது ஒழுங்கின்மை?

  ஒழுங்கு/ஒழுங்கின்மை என்பதே நாம் உருவாக்கிய கோட்பாடு தானே. விதிவிலக்குகள் எல்லாம், ஒருவேளை நம்முடைய ஒழுங்கு என்னும் கோட்பாட்டுக்குள் வேண்டுமானால் சிக்காமல் இருக்கலாம்.

  ஆனால், இயற்கையின் அத்தனை கூறுகளும் அதினதின் ஒழுங்குடனேயே இருக்கிறது. (எ.கா கோல்டன் ரேஷியோ).
  இயற்கை அதற்கான நியாயத்தை அப்படைப்புடன் ஒரு ரகசியமாகவே வைத்திருக்கிறது!

  ஆசிரியர், கதையின் தலைப்பிற்கு வெகுவாக நியாயம் செய்ததோடல்லாமல், ஒட்டு மொத்த மனிதத்தின் மீதும் உள்ள அன்பை, ஒரு ஆவரேஜ் மூளையினால் மட்டுமே சிந்திக்க முடியும் என்பதை உணர்த்தியிருக்கிறார். ஏனெனில் மூளைவீங்கிகளுக்கு ஆவரேஜின் மீது எப்போதுமே ஒவ்வாமை இருக்கிறது. பாஸாக முடியாத, தம் பள்ளிக்கு பேர் எடுத்து தராத மாணவர்களை இடைநீக்கம் செய்வதன் வழியேதானே 100 சதவீத ரிசல்ட்டைப் பெறுகிறார்கள்.

  கல்வி ஒட்டு மொத்த மானுடத்தையும் நேசிக்க கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை கதையின் நாயகன் மூலம் உணர்த்தியது வெகுசிறப்பு.

  உங்களால் தள்ளப்பட்ட கல்லே மூலைக்குத் தலைக்கல்லாயிற்று!
  -பைபிள்

  கதையை தந்த ஆசிரியருக்கு வாழ்த்துகள்!
  ❤️

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.