அமைதியின் அழிப்பு

ஷெர்லி ஹாஸர்ட்

தமிழாக்கம்: பஞ்சநதம்

[ஆங்கில மூலம்: நன்றி: த பாரிஸ் ரிவ்யூ; இதழ் #234- ஃபால், 2020]

“கொஞ்சம் பொறுங்க, இதை நான் அணைக்கிறேன்.”

 “அந்தச் சத்தம். என்னது அது?”

“ஹூவர் வாக்குவம் ஓடிட்டு இருந்தது.”

“என்னது?”

“அந்த வாக்குவத்தை ஓட்டிட்டு இருந்தேன்னு சொன்னேன்.”

“அதைச் சொல்லலை. வெளியில. கேளுங்க.” ரோஸி கைப்பிடிச் சுவருக்கு மேல் எட்டிப் பார்த்தாள்.

“ஓ, அது அந்தத் தேனீ, டியர்.”

“தேனீ எல்லாமில்லை. ஆயிரம் மரங்கொத்திங்க ஒரு தகர டப்பாவை வச்சுக் குடையுதுங்க.”

“அது வீதியில வேலை செய்யற (எந்திரத்) தேனீ. நீங்க கீழே இறங்கி வந்தீங்கன்னா தெரியும்.” திருமதி பீல் முன் கதவைத் திறந்தார். “எல்ம் மரங்கள்லே ஆணிகளை அடிக்கறது. ஊர் முழுக்க இதுதான்.”

“ஐயோ, கடவுளே!”

“மரத்தைச் சுத்தி வட்டமா ஆணிங்களை அடிக்கணும். அது அந்த எல்ம் மரங்களுக்கு வர வியாதியை நிறுத்திடும்னு கதை.”

“அப்படியா.”

“அறிக்கையைச் சுற்றுக்கு விட்டாங்களே, அதை நீங்க படிக்கல்லியா? ஆளுங்க வீடு வீடா வாசல் வாசலா நின்னு, ஒரு சுத்து சுத்தி வந்தாங்களே. ஆனா, நீங்க போன வாரக் கடைசில இங்கே வந்திருக்கல்லை.”

“இல்லை. நீங்க சொல்றது சரி. அப்ப நாங்க நகரத்துலேயே இருந்துட்டோம்.”

“வாரக் கடைசீலே இங்கே வந்து இருந்து, அமைதியா இருக்கறது நல்லாத்தான் இருக்கும். கவனம், அந்த ஒயர்லெ தடுக்கி விழுந்துடாதீங்க.”

ரோஸி முன் கதவை மூடினார், கூடத்தைக் குறுக்காகக் கடந்து வந்தார். “கொஞ்சம் காஃபி வேணுமா, தயாரா இருந்தா?”

“தேங்க்ஸ், ஆனா இப்பத்தான் நான் ஒரு கப் டீ போடன்னு கெட்டிலை ஏத்தினேன். அதை முடிச்சப்பறம், என்னோட மகளோட பசங்களுக்கு கொஞ்சம் குக்கிகளைச் செய்யப் போறேன்.”

அந்தப் பெர்கோலேட்டர், மயக்க மருந்து கொடுக்கப்பட்ட நோயாளி கஷ்டப்பட்டு மூச்சு விடுகிற மாதிரி சத்தம் போட்டுக் கொண்டிருந்தது.

“திருமதி பீல், அந்தப் பசங்க இப்ப நல்லா வளர்ந்திட்டிருப்பாங்களே. அவங்களுக்கு டெட்டியை விட வயசு கூடவாச்சே.”

“உங்களுக்கு அவங்களை நினைவிருக்கும், ஹாலோவீன் போது இங்கே கூட வந்தாங்களே.”

“அவங்களைப் பார்த்ததா எனக்கு நினைவில்லையே.”

“ஓ, இங்கேதான் இருந்தாங்க. நீங்க நினைவு வச்சிருப்பீங்க. ஒருத்தன் சாத்தான் மாதிரி வேஷம் போட்டான், இன்னொருத்தன் எலும்புக் கூடு மாதிரி வேஷம் போட்டிருந்தான். நீங்க அவங்களுக்கு மார்ஷ்மெல்லோங்களைக் கொடுத்தீங்க.”

“ஆமாமில்லே.”ரோஸி காஃபி குடித்துக் கொண்டே, சமையலறை ஜன்னலருகே நின்றார்.

அந்தக் கெட்டில் சத்தமிட்டது.

“நெஞ்சளவு உசரம்.” திருமதி பீல் உதட்டைப் பிதுக்கினார்.

“என்னது அது?”

“ஆணிங்க. அதுங்களை நெஞ்சளவு உசரத்துல அடிக்கணும். பெருவுலேர்ந்து அந்த ஆணிங்க வந்திருக்கு.”

“பெருவிலேருந்தா? ஆச்சரியமா இருக்கே.” சரிதான் – தகரச் சுரங்கங்கள், இன்கா இந்தியர்கள், அதெல்லாம்தான்: ஏன் இருக்கக் கூடாது?

“ஆமாம், பெரு, இலினாய் மாநிலத்தில் இருக்கு. நீங்க அந்த கோப்பையை அப்படியே வச்சுடுங்க. நான் எப்படியும் தட்டு கழுவற எந்திரத்தை ஓட்டப் போறேன்.”

மேல்தளம். ரோஸி படுக்கைகளைச் சீர் செய்ய மறந்து போயிருந்தார். போர்வைகளை கீழே இழுத்தாள், பிறகு மறுபடி மேலே விரித்தார், தலையணைகளைக் அடித்துக் குத்திச் சமமாக்கினார். கீழே தட்டுகளைக் கழுவும் எந்திரம் சத்தமாக இயங்கியது, கார்கள் பெருஞ்சாலையில் இரைச்சலோடு விரைந்தன. திருமதி பீல் மறுபடி வாக்குவம் எந்திரத்தை ஓட விட்டார். கணப்பு உலை ஒரு கக்கலுடன் மறுபடி பற்றிக் கொண்டது, தரைத் தளம், மேலும் சுவர்களூடே இலேசாகவும் வேகமாகவும் பதறித் துடித்தது, ஏதோ மொத்த வீட்டுக்கே மோசமான பயம் வந்தாற்போல இருந்தது.

ரோஸி நினைத்தார், மொத்த நேரமும் அமைதி நொறுக்கப்படுகிறது.

அமைதி, ரோஸி பள்ளிக்கூடத்தில் சேர்ந்தபோது முதலில் உடைக்கப்பட்டது, அதற்கு முன்பு அது ஒரு நீண்ட பிற்பகலாக தோட்டங்களில் கழித்த பொழுதாக இருந்தது, அல்லது அவள் படுக்கைகளில் அமர்ந்து பொம்மை ஒன்றை வைத்துக் கொண்டு, சுவற்றுப் பூச்சான காகிதத்தில் உருவங்களை வரைந்த பொழுதாக. ஆனால், பள்ளிக் கூடத்தில் அவளுடைய எண்ண ஓட்டம் நிரந்தரமாக குலைக்கப்பட்டது. அங்கே, குரல்கள், கூர்மையாக வெட்டின, எப்போதும் கேள்விகள் கேட்டன, எப்போதும் விடைகளை எதிர்பார்த்தன- ஏதோ அவர்களுக்குத்தான் கல்வி தேவை, அவளுக்கில்லை என்பது போல இருந்தது. “அது என்ன ஆகிறது?” என்னும் கேள்விக்கு, அவள் பதில் சொன்னாள், “நாலு”, பிறகு நிரந்தரமாக அடிபணிந்து விட்டாள். பிறகு அவள் வேறு பல பதில்களைக் கொடுத்தாள் – “லண்டனின் பெரிய தீ விபத்து,” “இட்ரெஹ்ட் ஒப்பந்தம்,” “ட்ரைடென்” ; அல்லது “எனக்குத் தெரியாது”- இந்தக் குறிப்பிட்ட பதில் அமைதியோடு சம்பந்தப்படாதது அல்ல. அவள் மற்றவர்களின் மௌனத்துடைய விளைவுகளை உரக்க ஒப்பித்தாள். அங்கு கேள்விகள் சில, தாமே பதில்களைத் தந்தன, சில பதில்கள் கேள்விகளாக மட்டுமே இருந்தன- இப்படி ஒரு சங்கிலித் தொடர் போன்ற விசாரணை தெறித்துத் தெறித்து வந்த வண்ணம் பல வருடங்களுக்கு நீண்டது.

அந்தக் கால கட்டத்தில் அமைதிக்கு அதிகார பூர்வமான அங்கீகாரம் இருந்தால்தான் அது பொறுத்துக் கொள்ளப்பட்டது: “சைலன்ஸ், பெண்களா,” யாரோ உரக்கச் சொன்னார்கள். தன் மனதின் நிலைக்குள் நுழையாமல், ஒரே ஒரு பக்கத்தைப் பார்த்து வெறித்துக் கொண்டு இருக்கும், அல்லது படிக்கும் திறன் ஒருத்திக்கு அப்போது வளர்ந்தது. ஒவ்வொரு நவம்பரிலும், காலையில் சமூகக் கூட்டம் விதிப்படி இரண்டு நிமிட மௌனத்தோடு துவங்கும் – அந்த மௌனத்தின்போது மட்டும்தான் எந்தப் பெண்ணும் கிளுகிளுத்துச் சிரிக்காமல் எப்படியோ கட்டுப்பாடாக இருந்து விடுவார்கள், அவர்கள் அப்போது உலகப் போர் மற்றும் பெரும் பொருளாதாரச் சரிவு ஆகிய இரண்டின் நிழலில் வளர்ந்தவர்கள், இப்படி இரண்டு பெரும் நிகழ்வுகள் தமக்கு நேர அனுமதித்ததற்கு பெருமளவு குழப்பமான அவமான உணர்வுக்கு ஆட்பட்டவர்களாக எல்லாரும் அப்போது இருந்தனர்.

திருமதி பீல் ஓடிக் கொண்டிருந்த வாக்குவத் துடைப்பத்தை நிறுத்தினார். ரோஸி தன் குழந்தையின் படுக்கை மீது அமர்ந்தார். அவருடைய உடல் சதையெல்லாம் நூற்றுக் கணக்கான சுத்தியல்கள் பெருவிய ஆணிகள் மீது அடித்த் அடிகளின் ஒலியால் அதிர்ந்து கொண்டிருந்தது. இரண்டு நிமிட மௌனம்- அமைதி. அதென்ன இரண்டு நிமிடங்கள்? முதல் உலகப் போரைப் பற்றி நினைத்துக் கொண்டு நிற்க யாராலும் இரண்டு நிமிடங்களுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாது என்ற நினைப்பா? அந்த நிமிடங்களைக் கூட்டினால் அதெல்லாம், இறந்தவர்களுக்கு அளிக்கப்பட்ட அஞ்சலி ஆகி விடுமா? அப்படியானால் இந்நேரம் நாம் எல்லாருமே நிரந்தரமாக பேச்சிழந்தவர்களாக ஆகி, நடந்த பயங்கரங்களால் ஊமைகளாகி இருக்க வேண்டாமா?

ஆனால், ரோஸி நினைத்தாள், நியாயமாக யோசித்தால், அப்போது அது அமைதியென்று இருக்காது, நிஜமாகவும் இராது. முன் கதவு திறந்தது, ஒரு இடிப்புச் சத்தத்தோடு இறுக்க மூடிக் கொண்டது. “வாங்க, டார்லிங்,” என்றார் ரோஸி.

“இங்க உட்கார்ந்திருக்கியா. என்ன யோசிக்கிறே?”

“நான் யோசிச்சுகிட்டு இருக்கேன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?”

“ஒரு சாமர்த்தியமான ஊகம்தான்.”

“அது அமைதியின் அழிப்பைப் பத்தி.”

“அழிப்புன்னா, என்ன அர்த்தத்துல?”

“அதைச் சூறையாடறதா. கொள்ளை அடிக்கிறதா புரிஞ்சுக்கணும். அதை ஒரு கவிதையில படிச்சேன். நம் தலைமுறை எப்படி ‘அமைதியின் சூறையாடலை,தேவாலயங்கள் வெறுமையாவதை, குதிரைப்படை கடந்ததை, உணர்ச்சிக் குழப்பத்தோடு பார்த்தோம்.’ அந்தக் குதிரைப்படைங்கறது கொஞ்சம் அதிகப்படி, இங்கே.”

“ஊருக்குள்ளே குதிரைகள் இருந்ததெல்லாம் எனக்கு நினைவு இருக்கு.”

“ஆ, எனக்கும்தான் நினைவு இருக்கு. வண்டிகளை இழுத்துப் போகும் குதிரைகள். காலில் நிறைய முடியோடிருக்கும் க்ளைட்ஸ்டேல் குதிரைகள். எப்போதும் ஜோடிகளாகவே இருக்கும். அதை, குதிரைகளைப் பற்றிச் சொன்னேன். எல்லா உற்பத்தியும் தொழில் மயமாவதற்கு முன்பு நாம் எத்தனை நல்ல காலத்தை அனுபவித்தோம்.” ரோஸி சாய்ந்து உட்கார்ந்தார், அவருடைய கைகள் முழங்காலைச் சுற்றிப் பிணைந்தன. “டெட்டி எங்கே?”

“டன்ஸ்டனுடைய பையனோடு இருக்கான். ப்ளாஸ்ட் ஆஃப் விளையாடறாங்க.”

“இங்கெ பாருங்க, ஆணிங்களைப் பத்திக் கேட்டீங்களா?”

“அதோட போச்சா. என்னையும் இழுத்துப் போட்டாங்க. நானும் கொஞ்சம் ஆணிங்களை இப்பவே அடிக்கணும், அப்பத்தான் நாம சமூகத்துல தலையைத் தூக்க முடியும்.”

“அதெல்லாம் பெருவுலேர்ந்து வர்றது.”

“அப்டீன்னா இலினாய்லெ அந்தப் பகுதியிலெ சுரங்கம் இருக்கணும். அந்தப் பகுதியிலதானே ஈயத்துக்குப் போட்டி இருந்தது?”

“ஈயத்துக்குப் போட்டியா? தங்கத்துக்குப் போட்டி போட்ட கேவலமே போதாதா என்ன?”

ஒரு ஆணின் குரல் உரக்கக் கேட்டது. “உள்ளமைதி, உள்ளமைதி-” அந்தக் குரல் பேரிரைச்சலாக, அவதியோடு அவர்களை நோக்கி வந்தது. ”வேறேதும் வழியில்லை-”

“பிஷப் ஷீன் (ரேடியோவுல) போடப்பட்டிருக்கிறார்.”

“அவருடையதைக் கேட்கலாம் என்று அவளிடம் சொன்னேன். நான் உள்ளே வந்தபோது என்னைக் கேட்டார்.”

“உள்ளமைதி!”

“இது டெட்டியைப் பயமுறுத்தும்னு எனக்கு அச்சமா இருக்கு.”

“ப்ளாஸ்ட் ஆஃப் விளையாடினப்புறமா? எதுவும் ஒண்ணும் செய்யாது.”

“இன்னிக்கிக் காலைல நான் கார்டினல் ஒண்ணைக் கேட்டேன். அது லைலாக்குகளில் இருந்தது.[i]

“ஆணிகளால பயந்திருக்கும்.”

அவர்கள் இருவரும் மௌனமாக இருந்தார்கள். ரோஸி சொன்னாள், “நாம் எங்கே அமைதியாக இருந்திருக்கிறோம்?”

“இங்கே இல்லை.” அவர் கீழே இருந்து வந்த சத்தத்துக்கு மேலே குரலை உயர்த்திப் பேச வேண்டி இருந்தது. “நகரத்திலியும்தான் அப்படி இல்லை.”

“வேற எங்கே, அப்போ?”

“செஜெஸ்டா, ஒலிம்பியா…”

“பாஸாய், ஒலையிலி, டார்க்வினியா…” அவளுடைய திருமணத்துக்குப் பிறகு ரோஸி மத்திய தரைக் கடல் பகுதிகளில் ஒரு சுற்றுப் பயணம் போயிருந்தார்.  “எல்லாமே பாழான இடங்கள். சத்தம் போய் அங்கே மரிக்க அந்த இடங்களில் கால அவகாசம் இருந்தது. நாம அத்தனை காலம் வாழ முடியுமானால், கலவரமும் இரைச்சலும் செத்துப் போகின்றன.  அப்புறம், ஸ்ட்ராட்டன் மலையடியில் இருந்த குறுங்காட்டில்.”

“அது பாழான இடம் இல்லையே. வெர்மாண்ட் இல்லையா?”

“இல்லை. ஆனா அங்கே அத்தனை பனி கொட்டி இருந்தது. பனி ஒரு மாதிரி காலத்தைக் கூட்டும். அமைதிங்கறது வெண்மை.”

“அமைதிங்கறது பொன்னானது.”

“ஏன் ஈயமான அமைதியும் உண்டே.”

அவர் எழுந்து நின்றார். “பெருவுக்குப் போகணும்.”

“ஒரு தடவை நான் மௌனத்தைக் கேட்டேன். ஒரு ராத்திரி, ஒரு தோட்டத்துல.”

“எப்படி இருந்தது அது?”

“காதைக் கிழிக்கற மாதிரி இருந்தது.” ரோஸி எழுந்து கைகளைத் தலைக்குப் பின்னே நீட்டி முறித்தார். “புல்வெளியில இந்தக் கோடிக்கு வந்தால், அவங்களுக்கு நான் டீ கொடுக்கணுமா?”

“கடவுளே, நீ கொடுத்தாகணுமா?”

“அதானெ நான் கேட்கிறேன்.”

“காது கொடுத்துக் கேளு, என்ன விரும்பறாங்கன்னு பாரு. நானாயிருந்தா கண்ல படாமப் படுத்துடுவேன்.”

கண்ணில் படாதபடி, காலை நீட்டிப் படுத்துக் கொண்ட ரோஸி, அவர் கீழ்த்தளத்துக்குப் போவதைக் கேட்டிருந்தார். வெளியே கணவர் கூப்பிட்டார், “டெட்டி, டெட்டி.” சில குரல்கள், சில சத்தங்கள் – இசை, சிரிப்பு, கடலின் சத்தம்- அவை எல்லாம் அத்துமீறல்கள் இல்லை; தமக்குள்ளேயே மௌனத்தின் கூறுகளைக் கொண்டவை அவை. இயற்கையின் ஒரு பகுதியாக அமைதியை நாம் கூறுவது போலத்தான்: “நான் மௌனம் காத்தேன்,” “நான் அமைதியாக இருந்தேன்.” எத்தனை குரல்கள் இருந்தன முன்பு- மிக நேசிக்கப்பட்ட குரல்கள், நாம் கேட்பதற்கு மிகவும் ஏங்கிய குரல்கள், ஒருத்தரின் பெயரைச் சொல்லிக் கூப்பிடும் குரல், கோடை மாலைகளில் உரக்கப் படிக்கும் குரல், நெளிவு சுளிவுகளோடு ஏறி இறங்கும் குரல்கள், அசை அழுத்தங்கள், அனைத்துக்குள்ளும் சொந்தமான மௌனங்கள். மற்ற எல்லாக் குரல்களும்- தன்னிலை துறந்து, சீற்றமும், மனக்கசப்பும் கொண்ட குரல்கள்- மேலும் உலோகத் தொல்லைகள் கொண்ட அலுவலக வாழ்வு: கோப்புகளை வைக்கும் இழுப்பறைகளின் இடிப்புச் சத்தம், தட்டச்சு எந்திரங்களின் ஓசைகள், தொலைபேசிகள், அழைப்பு மணிகள், ”மேலே போகிறோம்,”  “கீழே வருகிறோம்”, “நான் இதைப் பொறுக்க மாட்டேன்,” என்றெல்லாம் அறிவிக்கும் குரல்கள்,…. இன்னாருடைய குரலுக்குப் பெரிய மதிப்புண்டு, மற்றவர் குரலை யாரும் மதிப்பதில்லை. மேலும் எத்தனை கார்கள், ரயில்கள், விமானங்கள், ஒலிபெருக்கிகள், ரேடியோக்கள்…

“போகறீங்களா திருமதி பீல்? நான் இப்போதே கீழே வருகிறேன்.”

“அப்ப நான் போகிறேன்.”

“அடுத்த வாரம் நான் உங்களைப் பார்க்கிறேன்.”

“ஆமா, எல்லாம் சரியா இருந்தால்.”

எல்லாரும் புழங்கும் அறையில் தொலைக்காட்சி ஒலி குறைத்து வைக்கப்பட்டிருந்தது, ஆனால் அணைக்கப்படவில்லை. ஒரு ஜோடி நபர்கள் மௌன நாடகத்தால் காலை உணவைப் பற்றி ஏதோ நாடகம் போல நடத்தினர். கிளியின் கூண்டைப் போர்த்தி மூடிவிடுவதைப் போல, தொலைக்காட்சிப் பெட்டியை மௌனமாக்க சும்மா போர்த்தினால் போதுமானதாக இருக்க வேண்டும் என்று நினைத்தார் ரோஸி. ஒரு ஸ்விட்சைத் திருப்பி அந்த மௌன நாடகத்தை ஒலியற்ற வெற்றிடம் உறிஞ்சிப் போகச் செய்து, திரை ஒரு வெள்ளை ஒளிப் புள்ளியாகிப் போய், அணையும்படிச் செய்தார் அந்த தொலைக் காட்சிப் பெட்டியை. பாத்திரங்களைக் கழுவும் எந்திரம் தன் இயக்க வேகத்தை மாற்றியது, திடீரென நின்றது. ஈரத்தைக் காய வைக்க, அதில் உள்ள சூடுபடுத்தும் பகுதி, குப்பை அகற்றும் ஹூவர் எந்திரத்தைப் போலவே, வேலை செய்யாமல் போய் வெகுநாட்களாகி இருந்தன. ரோஸி ஒரு சோஃபாவில் புத்தகம் ஒன்றுடன் படுத்துக் கொண்டார்.

“அட, என்னது இது. இங்கே வந்து ஒளிஞ்சுகிட்டு இருக்கீங்க?”

“திருமதி லோடெர்! கதவை யாரோ தட்டின மாதிரி எனக்குக் கேட்டது. உள்ளே வாங்க, திருமதி.லோடெர்.”

“சுண்டெலி மாதிரி சத்தம் போடாம இருக்கீங்க, நாங்களெல்லாம் பாடுபட்டுக்கிட்டிருக்கோம். ஆனா, நான் உங்களைக் காட்டிக் கொடுக்க மாட்டேன்.”

“டீயும் கேக்கும் கொடுக்கட்டுமா?”

“ஒரு சிறு கோப்பை மது,” என்றார் திருமதி லோடர்

“திருவாளர். லோடெர்?”

“நீங்க கர்ஜிக்க வேண்டி இருக்கும்.” திருமதி லோடர் சாய்ந்து, தன் கணவரின் முழங்கால் மீது தன் கையை வைத்தார். “அப்பா. நீங்க அதை ஆன் செய்திருக்கீங்களா, அப்பா?”

“இத்தனை சத்தம் போடாதே,” என்றார் கிழவர்.

ரோஸி கண்ணாடிக் கோப்பைகளில் விஸ்கியை ஊற்றினார், திரு. லோடெர் தன் காது கேட்க உதவும் கருவியைச் சீர் செய்த போது அதிலிருந்து எழுந்த கூர்மையான ஊதல் சத்தம் அவளுடைய நெஞ்சைத் தாக்கியது. “ஸோடா?”

“அப்பாவுக்குக் கொஞ்சம் சேருங்க. எனக்கு ஐஸ் போதும். அப்ப நீங்க வந்தது, நேத்தி ராத்திரிலெயா?”

“ரொம்ப நேரம் கழிச்சு வந்தோம், ஆமா, நியூயார்க்லேர்ந்து.”

“நீங்க எனக்குப் பணம் கொடுத்தாக் கூட அங்கே நான் வாழ மாட்டேன்.” திருமதி லோடெர் ஐஸ் கட்டிகளைத் தன் கோப்பையில் குலுக்கி இடித்தார். “எங்களுக்கு அமைதியா வாழறதுதான் பிடிக்கிறது.”

ரோஸி கத்திக் கேட்டார், “க்ராக்கர் பிஸ்கட் வேணுமா?”

அந்தக் கிழவர் தலையை அசைத்து மறுத்தார், தன் காதைத் தொட்டார். “சாப்பிடும்போது சத்தம் போடறது.”

“எல்லாரும் சுத்தியலாலெ அடித்துக் கொண்டிருக்கிறார்கள்,” அவருடைய மனைவி சொன்னார். “ஒரே ரகளை. ஜெனரல் கூட வந்து தலையைக் காட்டி விட்டு, கொஞ்ச நேரம் ஆணியடிச்சார்: ஒண்ணு ரெண்டு சின்ன மரங்கள்ல தான். பெரிசா அலட்டிக்க ஏதுமில்லை.”

“இது அந்த எல்ம் மரங்களுக்கு உதவறதா?” ரோஸி கேட்டாள். “உண்மையாகவா?”

“ஓ, நிச்சயமான்னுதான் அவங்க சொல்றாங்க.”

“அந்தப் பெரிய மரம், இந்தப் புல்வெளியிலே கோடியிலே இருக்கே?”

திருமதி லோடெர் கொஞ்சம் யோசித்தார். “அது மேபிள்.”

ரோஸி தன் மறுப்பைச் சொன்னாள். “ஆனால், அதுக்கு நோய் இருக்கே.”

திருமதி லோடெர் ஒரு மிடறு விழுங்கினார், தலையை அசைத்து மறுத்தார். “அதோட வேர்கள் நெரிபட்டுப் போச்சு.”

“திடமில்லாத மரம்.”

“ஓ, அது நிச்சயம் கவனிக்கப்பட வேண்டியது. எல்லாரும் இதைத் தவிர வேறெ எதையும் அந்தப் பார்ட்டில பேசல்லை. ஒரு நாள் அது விழப் போறது.”

“நல்லா எகிறுது,” அந்தக் கிழவர் சொன்னார், தன் கோப்பையை உயர்த்தியபடி.

“அதைப் பத்தி ஏற்கனவே புகார் கொடுத்தாச்சு. ஆனா அந்த விஷயத்தை நல்லா அடிச்சுச் சொல்லி உள்ளே ஏத்தணும்.”

ரோஸி தன் விஸ்கியில் கொஞ்சம் சோடாவை ஊற்றிக் கொண்டார். “இப்ப என்னது அது? அந்தச் சத்தம்?”

“அது அந்தப் பெரிய வாக்குவம், அதுதான் அந்தச் சத்தம்.” திருமதி லோடெர் காது கொடுத்துக் கேட்டார். “ரஸ்ஸலோட நிலத்தருகே வந்திருக்கணும். இந்த இலையுதிர் காலத்துல நீங்க அதை நிறைய கேட்பீங்க. நான் உறுதியாச் சொல்றேன்.”

“இலைகளுக்கு ஒரு எந்திரம், அதானே?”

“என்ன சொல்றது, அது இலைகளை உறிஞ்சற விதம் இருக்கே, அது பிரமாதமானது. ஊஷ்.. எல்லாம் முடிஞ்சது. நான் என்ன சொல்றேன்னா, அப்பா- அந்தப் பெரிய வாக்குவம் பத்தி.”

“என்ன ஒரு மாற்றம், இல்லையா அம்மா?”

“இந்த மாதிரி,” ரோஸி சொன்னாள், “நாங்க நியூயார்க்ல கேட்கறதில்லெ.”

“நியூயார்க்,” கிழவர் சொன்னார். “நீங்க எனக்குப் பணம் கொடுத்தாக் கூட நான் அங்கே வசிக்க மாட்டேன். ஏகப்பட்ட அமளி.”

திருமதி.லோடெர் ஒரு க்ராக்கர் பிஸ்கட்டை இரண்டாக உடைத்தார்.”அப்ப நீங்க திங்கட்கிழமை திரும்பி ஓடிடுவீங்களா?”

“விடிகாலைல,” என்றாள் ரோஸி.

“அமளிங்கறது இரண்டு அர்த்தத்திலெயும்,” கிழவர் சொல்லி விட்டு, பெரிதாகச் சிரித்தார்.

“அடடா. அங்க பாருங்க. மழை மாதிரி சத்தம் கேட்கறது, அப்பா.”

ரோஸி ஜன்னலை நோக்கிச் சென்றாள். “டெட்டி, டெட்டி.”

ஒரு குரல் அவளை நோக்கி வந்தது. “டுமீல் டுமீல்! நீங்க செத்துட்டீங்க!”

“இந்தப் பசங்க இருக்காங்களே,” என்றார் திருமதி லேடெர்.

“டெட்டி,” ரோஸி சொன்னாள்.

“இருந்தா நல்லாத்தான் இருக்கும். ஆனா அமைதியாவே இருக்காது. என்ன பண்ணறீங்க நீங்க,.. அப்பா?”

கிழவர் தன் காது கேட்க உதவும் எந்திரத்தைக் கழற்றி அதைச் சோதித்துக் கொண்டிருந்தார். தன் நாற்காலிக்கு அருகில் இருந்த ஒரு விளக்கிடம் துழாவினார்.

“அதை இழுக்கணும், அப்பா. இழுக்கணும் அப்பா.. இப்ப (விளக்கு) வந்துடுத்து. கேளுங்க அதை. இன்னும் இடிக்கறது. நாம ஓடிப் போயிடணும்.”

“நீங்க எந்த வழியிலே போவீங்க?”

“ரோரிங் ப்ரூக் ரோட்ல மேலே ஏறிப் போகணும். அங்கேருந்து நேரே போக வேண்டியதுதான். கத்தி..ன்னு ஒரு வார்த்தை சொல்றதுக்குள்ளே வீட்டுக்குப் போயிடலாம். வாங்க அப்பா. சட்டுன்னு எழுந்திருங்க.”

“மின்னல்,” என்றாள் ரோஸி, வாயிலருகே நின்றபடி. “கொஞ்சம் பொறுத்துப் போங்களேன்?”

“நன்றி, ஆனால் வேண்டாம். சட்டுன்னு சாப்பாட்டுக்கு ஏதாவது தயார் செய்யணும். நண்பர்கள் வரேன்னு சொல்லி இருக்காங்க.”

“அது எப்படி இடிக்கறதுன்னு கேளுங்க.”

திருமதி லோடெர் கையை ஆட்டி அதைப் புறம் தள்ளினார். “அதுக்கெல்லாம் ஆடிப் போகக்கூடாது.”

“ரோஸீ.”

ரோஸி ஓடிக் கீழே இறங்கினார்.

“நான் கூப்பிட்டது உனக்குக் கேட்கலியா?”

“நான் டெட்டிக்கு பாத் டப்ல தண்ணியை ரொப்பிக் கிட்டிருந்தேன். ஆணி விஷயம் என்ன ஆச்சு?”

“அந்த ஆணிங்க.. ஆமா, லோடெர் தம்பதிகள் இங்கே என்ன பண்ணிகிட்டு இருந்தாங்க?”

“சும்மா அரட்டை அடிச்சாங்க. ஓ- அங்கெ கேளுங்க.”

“டெலிஃபோன் மணிதானே, அடிக்கட்டும்.”

அவர்கள் மாடிப்படிகளின் கடைசிப் படியில் சேர்ந்து அமர்ந்தார்கள். எரிஉலை அதிர்ந்தது. நெடுஞ்சாலையில் கார் ஹாரன் அடித்தபடி இருந்தது, ப்ரேக்குகளின் அலறல் கேட்டது. ரோஸி சொன்னார், “டமால் டுமீல், நாம உசிரோட இருக்கோம்.”

“அங்கே என்ன நடந்துகிட்டிருக்கு?”

“அந்தப் பெரிய வாக்குவம்.”

“நீ லோடெர் தம்பதிகளைப் பத்தி ஒண்ணும் எனக்குச் சொல்லல்லை.”

“நாம காசு கொடுத்தாக் கூட அவங்க நியூயார்க்ல வசிக்க மாட்டாங்களாம்.”

“அப்டீன்னா கொடுக்கறதுல உபயோகமில்லை. நீ என்ன சொன்னே?”

ரோஸி சொன்னாள், “நான் அமைதி காத்தேன்.”


கதையின் இங்கிலிஷ் மூலத்தை இங்கே காணலாம்: https://www.theparisreview.org/fiction/7575/an-unpublished-story-shirley-hazzard-brigitta-olubas

தமிழாக்கம்: பஞ்சநதம் (நவம்பர் 2020)

(இக்கதையின் ஆசிரியர் ஷெர்லி ஹாஸர்ட் பற்றிய ஓர் அறிமுகம் தனியான கட்டுரையாக இந்த இதழில் பிரசுரமாகியுள்ளது. அதை இந்தக் கதையின் பதிப்பாசிரியரும், ஷெர்லி ஹாஸர்டின் படைப்புலகு பற்றிய ஒரு புத்தகத்தை எழுதியவருமான ப்ரிகீட்டா ஆலுபஸ் எழுதியுள்ளார்.)


[i] இந்த வாக்கியத்தில் ஒரு சிறு அங்கதம் உண்டு. முந்தைய பேச்சில் பிஷப் ஒருத்தரின் பிரசங்கம் பற்றிப் பேச்சு இருக்கிறது. இந்த வாக்கியத்தில் திடீரென்று ரோஸி, தான் ‘கார்டினலின்’ குரலைக் கேட்டதாகச் சொல்கிறார். கார்டினல் என்பது கதோலிக்கச் சர்ச்சின் உயர்பதவியில் உள்ள ஒருவரைக் குறிக்கும். அடுத்த வாக்கியத்தில் அவர் என்று தொனிக்கும் விதமாக ‘ஹி’ என்ற இங்கிலிஷ் சொல்லைப் பயன்படுத்தினாலும், ‘இன் த லைலாக்ஸ்’ என்று முடிக்கும்போது லைலாக் என்ற புதர் அது என்பது புரிகிறது. புதர் என்பதால் இந்த கார்டினல் என்பது ஒரு பறவை என்று புரியும். (இங்கிலிஷின் இரட்டைப் பொருளைத் தமிழில் கொண்டு வர வாக்கிய அமைப்பு அதே மாதிரி இருக்க வேண்டும். உதாரணமாக, பறவையையும் அவன் என்பது போல ஹி என்று இங்கிலிஷில் சொல்ல முடியும். தமிழில் அது அல்லது அவன்/ அவர் என்று ஆக்க வேண்டி இருப்பதால், அது என்று சொல்லும்போதே பறவை என்பது புரிந்து விடும். )

ஒலி வடிவில் கேட்க / To Listen to the novel in Audio form:

One Reply to “அமைதியின் அழிப்பு”

  1. சத்தங்களில் இழந்த அமைதியைச் சொல்லும் அதே நேரத்தில்,அசை அழுத்தங்களில், கோடை மாலையில் படிக்கும் குரலின் ஒலியை, ஒருவரின் பெயர் சொல்லி அழைக்கும் போது உள்ளே அமைந்து வரும் மௌனத்தை எத்தனை இயல்பாகக் காட்டிச் செல்கிறார் ஆசிரியர். பாழான இடங்களில் மட்டும் அல்லது பலர் வராத குறுங்காடுகளில் மட்டுமே அமைதி கிட்டும் என்றால்,வளர்ச்சியின் பெயரில் எதை இழந்து கொண்டிருக்கிறோம் நாம்? அருமையான கதை, திறமையான மொழியாக்கம். நன்றி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.