அமெரிக்கா உண்மையில் உலகில் எவ்வளவு நல்லது செய்திருக்கிறது?

தழுவல் / மூலம்: How much good has the United States really done in the world? – The Boston Globe – By Stephen Kinzer

தமிழில்: பாஸ்டன் பாலா

சமீபத்தில் எனக்கொரு கடிதம் வந்திருந்தது. கோவிட்-19 காலத்தில் கடிதத்தைப் பிரிக்கப் பயப்பட வேண்டும். போதாக் குறைக்கு, அமெரிக்காவின் ஜனாதிபதி – போலி வாக்குகளை மடல் மூலமாகப் போட்டு நிரப்புகிறார்கள்; எனவே அஞ்சல் துறையைக் கண்டு ஜாக்கிரதையாகத் தள்ளி இருக்கவும் என்று முழங்கிக் கொண்டிருக்கும் காலம் இது. இருந்தாலும் பிரித்தேன். அந்தக் கடிதம் சர்ச்சைக்குரிய சிந்தனையைத் தூண்டும் கேள்வியைக் கொண்டிருந்தது:

“உங்களின் நீண்டகால பரந்துபட்ட அனுபவத்தின்படி பார்த்தால், உங்களின் ஆயுட்காலத்தில், நம் அமெரிக்க எல்லைகளுக்கு அப்பால், ஏதாவது ஒரு ஒழுக்கமானதோ, கௌரவமானதோ அல்லது நல்ல நோக்கத்துடனோ – ஏதேனும் ஓர் ஆக்கபூர்வமான செயலை இதுவரை அமெரிக்கா மேற்கொண்டு முன்னெடுத்து, நல்ல முறையில் முடித்தது — என்று சொல்ல இயலுமா?”

இது ஒரு சுவாரஸ்யமான சவால். தற்போதைய “அரசாங்கச் செயலாளர்” / அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர், (இந்தப் பதவி இந்தியாவின் உள்துறை +வெளியுறவு மந்திரி போன்று சக்தி வாய்ந்த அமைச்சகம்) மைக் பாம்பேயோ, இவ்வாறு வலியுறுத்திக் கூறுகிறார்: “நாம் செல்லும் ஒவ்வொரு இடத்திலும், அமெரிக்கா நன்மைக்கான பலம் தரும் சக்தியாகும்.”

இந்த உறுதியான கணிப்பிலிருந்து, எப்போது நீங்கள் துல்லியமாக மாறுபடுவீர்கள்? ஒரு ஈரானியராக, அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளினால், உணவுப் பொருட்களையும் மருந்துகளையும் வாங்க முடியாதவராக இருந்தால்; ஒரு சிரிய நாட்டினராக, அமெரிக்காவினால் முன்னெடுக்கப்பட்ட உள்நாட்டுப் போரில் இருந்து தப்பிக்க முயற்சிப்பவராக இருந்தால்; அமெரிக்காவின் ஆசீர்வாதத்துடன் கொடுங்கோல் நாட்டின், சவுதி அரேபியா, ஹொண்டூராஸ் போன்ற அடக்குமுறை ஆட்சியின் கீழ் வாழ்பவராக இருந்தால்; யேமன் நாட்டில், அமெரிக்க ஏவுகணை உங்களின் வீட்டை நள்ளிரவில் தாக்கி சின்னா பின்னமாக்குமோ என்னும் அச்சத்தில் வசிப்பவராக இருந்தால்…

மிகைப்படுத்தலை விட்டுவிட்டுப் பார்த்தால் கடந்த சில தலைமுறைகளில் உலகிற்காக அமெரிக்கா சாதித்தவற்றை, நியாயமான பெருமையோடு சுட்டலாம்.

1961ல் அப்போதைய ஜனாதிபதி ஜான் எஃப் கென்னடி, “அமைதி அணி”யை ஸ்தாபிக்கிறார். ஒப்புக்கொள்கிறேன். அது பனிப்போர் காலகட்டத்தில் சோவியத் ரஷியாவின் செல்வாக்கை வளரும் நாடுகளில் இருந்து தடுப்பதற்காகவும் வெள்ளையின மனிதனின் சுமையைக் குறைப்பதற்காகவும் துவக்கப்பட்டது. எனினும், இளம் அமெரிக்கர்களின் ஆதர்சக் கொளகைகளை நேர்மையாகவும் பெரிய அளவிலும் நிரூபிக்க நெடுந்தொலைவில் உள்ள ஏழை மக்களுக்கு உதவ கைகொடுத்தது.

மனித உரிமைகளுக்கான அமைச்சகத்தை 1977ல் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் அமைக்கிறார். அதுவரை அதற்கென தனிப்பட்ட மந்திரி பதவி கிடையாது. வெளியுறவுக் கொள்கைகளைத் தீட்டும்போது மனித உரிமைப் பிரச்சினைகளையும் கணக்கில் கொள்ளவேண்டும் என்கிறார் கார்ட்டர். ஒப்புக்கொள்கிறேன். அந்த அமைச்சரவை துவக்கப்பட்டபின், சிற்சில காலகட்டங்களில், ஆக்கிரமிப்புகளுக்காக அது பாசாங்குத்தனமான நியாயம் கற்பிக்க உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. எனினும், மந்திரி சபையில் ஓர் அங்கமாக, மனித உரிமைகள் பிரச்சினைகளுக்கும் கண்காணிப்புகளுக்கும் குரல் எழுப்பச் சந்தர்ப்பம் கிடைத்ததால் பல எண்ணற்ற உயிர்களை அர்ஜெண்டினா முதல் ஃபிலிப்பைன்ஸ் வரை காப்பாற்ற முடிந்தது.

அதன் அடுத்த தலைமுறையில், ஜனாதிபதி பில் க்ளிண்டன் வடக்கு அயர்லாந்து பிரதேசத்திற்கு தன் தூதுவரை அனுப்புகிறார். அயர்லாந்துக்கும் இங்கிலாந்து நாட்டிற்கும் இடையே நிலவிய குறுங்குழுவாத வன்முறைக்குச் சமாதானம் பேச முன்னாள் செனேட்டர் ஜார்ஜ் மிட்சேல் என்பவரை 1995ல் பிரத்தியேகமாக நியமிக்கிறார். பல தசாப்தங்களாக நிலவிய சுதந்திரப் பிரகடனச் சண்டைக்குப் பேச்சு வார்த்தைகளின்மூலம், மூன்றாண்டுகளில் அமைதி ஒப்பந்தம் உருவாக்க அது வழிவகுக்கிறது. கத்தோலிக்கக் கிறித்தவர்களும், கத்தோலிக்கக் கொள்கையை மறுத்துப் பிரிந்துசென்று போப்பாண்டவரின் ஆட்சிக்கு எதிரான கொள்கையைப் பின்பற்றுகிற பிராடஸ்டன்டுகளும் உடன்படிக்கையில் கையெழுத்திடுகிறார்கள். குண்டு வெடிப்புகளும் தீவிரவாத அச்சுறுத்தல்களும் மறைந்து அரசியல் போட்டி உருவாகிறது.

அவரின் வழித்தோன்றல் ஜார்ஜ் டபிள்யூ புஷ் (மகன் புஷ்). அவர் 2003ல் எயிட்ஸ் நிவாரணத்திற்காக, ஜனாதிபதியின் அவசரத் திட்டத்தை (President’s Emergency Plan for AIDS Relief – PEPFAR) முன்வைக்கிறார். பதினைந்து பில்லியன் உதவித் தொகையைப் பதினைந்து நாடுகளுக்கு ஒதுக்கி, துவங்கப்பட்ட இந்தத் திட்டம் இப்போது ஐம்பது உலக நாடுகளில் எண்பது பில்லியன் டாலர் நிதிகொண்டு இயக்கப்படுகிறது. கோடிக்கணக்கானோரின் உயிரைக் காப்பது மட்டுமல்லாமல், நவீன காலத்தின் மானுட நேயமிக்க திட்டமாக இது இருக்கிறது.

அவருக்கு அடுத்தபடியாக ஜனாதிபதி ஆனவர் பராக் ஒபாமா. இவர் கியூபா நாட்டின்மீது இருந்த பொருளாதாரத் தடைகளைத் தளர்த்துகிறார். அதன்மூலம் சிறு முதலீட்டு வர்த்தகம் பெருகுகிறது. ஒபாமா கியூபாவின் ஹவானா நகருக்கு வருகைபுரிந்தது ஒரு வரலாற்றுத் தருணம். அதன் பிறகு இரான் நாட்டுடன் ஒப்பந்தம் ஒன்றைக் கையெழுத்திடுகிறது அமெரிக்கா. அணு ஆயுதம் உற்பத்தி செய்யாததை நிரூபித்து, அந்த அணுத்திறன் ஆற்றலை விட்டுவிட்டால், வர்த்தகத் தடைகளை மெல்லமெல்ல நீக்கும் சமாதான உடன்படிக்கையைப் பேசி ஒப்புக்கொள்ள வைக்கிறது ஒபாமா நிர்வாகம். ஒப்புக்கொள்கிறேன். இந்த இரண்டு உடன்படிக்கைகளுமே ஒபாமா பதவி விலகிய பிறகு வந்த ஆட்சியின்கீழ் குப்பையில் போடப்பட்டுவிட்டது. எனினும், நீண்ட காலமாக எதிரிகளாகக் கருதிய நாடுகளுடன் நல்லிணக்கத்தைத் தொடரும் அமெரிக்கத் திறனுக்கு இவை முக்கியமான எடுத்துக்காட்டுகள்.

செயல்பட மறுப்பதன்மூலம் சில சமயம் அமெரிக்கா சமாதானத்தை நிலைநாட்டுகிறது. லெபனான் நாட்டில் 1983ல் அமெரிக்கச் சிறப்புப் படையினர் தங்கும் இடத்தில் குண்டு வெடித்து இருநூற்றுக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் இறந்தனர். ஜனாதிபதி ரொனால்டு ரீகன் பழிக்குப் பழிவாங்குவேன் எனச் சூளூரைக்கிறார். எனினும், அந்தப் போரில் ஈடுபட்டால் முடிவில்லா உள்நாட்டுப் போரில் அமெரிக்கப் போர்வீரர்கள் மாட்டிக்கொள்வார்கள் என்பதை உணர்கிறார். எனவே, முடிவை மாற்றிப் பின்வாங்கிவிடுகிறார்.

அதேபோல், அவரை அடுத்துவந்த வந்த ஜனாதிபதி ஹார்ஜ் எச். டபிள்யு. புஷ் (தந்தை புஷ், ரேகனின் துணை ஜனாதிபதியாக இருந்தவர்) உணர்ச்சியைவிடச் சிந்தனை சார்ந்த காரணங்களைக்கொண்டு முடிவெடுத்தார். 1989ல் பெய்ஜிங்கின் தியானன்மென் சதுக்கத்தில் நடந்த ஜனநாயக ஆதரவு மாணவர் போராட்டங்களை நசுக்கச் சீனா தனது ராணுவ வல்லமையைப் பயன்படுத்தியதைக் கண்டு கொதித்ததை வெளிப்படுத்துகிறார். எனினும், இரு நாடுகளுக்கும் இடையே அரும்பிவந்த நல்லுறவைப் பலப்படுத்தினார்.

இந்த நடவடிக்கைகள் நமக்கு அமெரிக்காவை, நாம் நம்ப விரும்பும்படி காட்டின: உலகளாவிய ஸ்திரத்தன்மை மற்றும் அமைதிக்கான ஒரு சக்தியாகப் பிரகடனப்படுத்துகின்றன. இந்தப் பிரலாபங்கள், அந்தப் பக்க பேரேட்டுக் கணக்கைத் துடைத்துச் சுத்தமாக்கவில்லை.

1961-ஆம் ஆண்டில் ‘பன்றிகள் விரிகுடா ஆக்கிரமிப்பு’ (Bay of Pigs invasion) என்ற பெயரில் கியூபாமீது போர்தொடுத்து, காஸ்ட்ரோவின் ஆட்சியை அகற்ற, சிஐஏ எனப்படும் மத்திய புலனாய்வுத் துறையின் உதவியோடு கென்னடி முயற்சி செய்கிறார். வியட்நாம் நாட்டின் ஆக்கிரமிப்பில் இராணுவ விரிவாக்கத்தைக் கென்னடி முன்னெடுக்கிறார்.

அதன் பிறகு வந்த ஜிம்மி கார்ட்டருக்கு ஆப்கானிஸ்தானில் இருந்து சோவியத் படைகளை வெளியேற்றுவது முக்கியமாகப்பட்டது. அவருடைய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் “ஸிக்னீவ் பிரஸின்ஸ்கி” (Zbigniew Brzezinski) – அவர்களின் ஆலோசனையால் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ மூலம் இடதுசாரி எதிர்ப்பாளர்களான முஜாஹிதீன்களுக்கு உதவி அளித்தது. நாம் இந்த இடியாப்பச் சிக்கலிலிருந்து இன்றளவும் வெளிவரவில்லை.

மத்திய அமெரிக்காவில் போர் மேகங்களை உலவவிட்டார் ரொனால்டு ரேகன். கிரெனடா நாடுமீது நடத்திய வெற்றிகரமான போர், உலகெங்கும் நடத்திய எண்ணற்ற பதிலிப் போர்கள், ரஷ்யாவுடனான ஆயுதக் குவிப்புப் போட்டிகள் ஆகியவற்றின் மூலம் அமெரிக்காவைத் தலை நிமிரச்செய்யக் கொலைகாரக் கொடுங்கோலர்களுடன் ஜனாதிபதி ரேகன் கை கோர்த்தார்.

நாட்டோ படைகளை ருஷியாவின் வாயிற்படியில் கொண்டுபோய் நிறுத்தி அணு ஆயுதப் பதற்றத்தை உச்சகட்டத்திற்குக் கொண்டுசென்றார் பில் கிளிண்டன். சொமாலியா நாட்டில் உள்நாட்டுப் போரை முழுவீச்சில் வளர்க்கவும் செய்தார். அது அமெரிக்க விமானத்தை வீழ்த்திப் 19 அமெரிக்க வீரர்களை மடியவும் வைத்ததில் கொண்டுபோய் முடிந்தது.

1989ல் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் H.W. புஷ், பனாமாவில் ஜெனரல் மானுவல் நொரீகாவின் ஆட்சியைத் தூக்கிவீசப் படையெடுத்தார். சவூதி அரேபியாவில் இராணுவ தளங்களுக்குக் கால்கோள் இடுகிறார். தன் தீவிரவாதத் தாக்குதலுக்கு மிக முக்கியக் காரணமாக ஒசாமா பின் லாடன் இதைக் குறிப்பிடுகிறார்.

அப்பா புஷ்ஷின் பதவிக் காலத்தில் நடத்த குவைத் களங்கத்தையும் இன்னபிற போர்ச் சறுக்கல்களையும் துடைத்தெறிய மகன் புஷ் இராக்மீது போர் தொடுக்கிறார். ”பயங்கரவாதத்திற்கு எதிரான உலகப் போர்” என்று நாமகரணமிடப்பட்ட இந்தச் சண்டைக்கு இதுவரை ஆறரை ட்ரில்லியன் (லட்சம் கோடி) டாலர் பணம் செலவழிந்து இருக்கிறது. பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் இறந்திருக்கிறார்கள். மூன்றரை கோடி மக்கள் வீடு வாசல் இழந்து நாடிழந்து அகதியாகி இருக்கிறார்கள்.

ஏழு நாடுகளின்மீது ஒபாமா குண்டு வீசித் தாக்குதல் நடத்துகிறார். அமெரிக்காவின் ஒரு மூலையில் உட்கார்ந்தபடியே, ஆளில்லா விமானங்கள்மூலம் ஐநூறுக்கும் மேற்பட்ட டிரோன் தாக்குதல்களில் நாலாயிரத்துகும் மேற்பட்ட அயல்நாட்டவரை வீட்டில் இருந்தே கொல்லும் தாக்குதல்களுக்கு ஆணை பிறப்பித்தார். உலகளாவிய ஒருங்கிணைந்த பிரசாரத்தைக் கையாண்டு, வளமான லிபியா நாட்டில் உள்நாட்டுக் குழப்பமும் துக்கமும் துயரமும் நிம்மதியின்மையும் பெருக வழிவகுத்தார்,

அமெரிக்கா உலகிற்கு மிகவும் உன்னதத்தைக் கொண்டுவந்துள்ளது. அதே சமயம் சொல்லவொண்ணா அழிவையும் ஏற்படுத்தியுள்ளது. எது மற்றதைவிட அதிகமாக உள்ளது? நாம் ஒவ்வொருவரும் நமது சொந்த அளவுகோலுக்கும் மதிப்புகளுக்கும் ஏற்ப பதிலளிக்க வேண்டிய கேள்வி இது. வருங்கால ஜனாதிபதிகள் எந்தப் பாதையைத் தேர்வு செய்தாலும், அவர்கள் பக்கத்தில் ஏராளமான வரலாறும் உள்ளது.

மேலும்:

தமிழில்: பாஸ்டன் பாலா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.