ஆலியட் டு பொடார்(ட்)*
தமிழாக்கம்: மைத்ரேயன்

காலையில் இப்போதெல்லாம், நீ யார் என்பது உனக்கு உறுதியாகத் தெரியமாட்டேன் என்கிறது.
கண்ணாடியின்முன் நீ நிற்கிறாய்- அது நடுங்கி இடம்பெயர்கிறது, நீ என்ன விரும்புகிறாயோ அதையே – கண்கள் அளவுக்கு அதிகமாக விசாலமாகத் தோல் மிகவும் அதிகமாக வெளுத்து இருப்பதாகக் காட்டுகிறது, இந்த அறையின் சூழலில் உள்ள வாசனை தூப வாசனையும் இல்லை, பூண்டின் மணமும் இல்லை, ஆனால் வேறேதோ, முன்னொரு காலத்தில் உனக்குத் தெரிந்திருந்த வாசனைபோல, இப்போது உனக்குத் தட்டுப்பட மறுக்கிறது.
நீ ஏற்கெனவே முழுதும் தயாராக உடையணிந்து இருக்கிறாய் – உன் தோலில் இல்லை, ஆனால் புறத்தே, எங்கே அது முக்கியமோ அங்கே, உன் அவதாரம், நீலம், கருப்பு மற்றும் தங்க நிறங்களில் ஒயிலான ஆடைகள் அணிந்து, பல ஊர்களுக்குப் பயணம் செய்த அனுபவசாலியைப் போலவும், முக்கியமான இடங்களில் எல்லாம் தனக்கு வேண்டியவர்களைக் கொண்ட பெண்ணின் தோற்றம். ஒருக்கணம், கண்ணாடியிலிருந்து நீ விலகித் திரும்பும்போது, அந்தக் கண்ணாடி மின்னி குவிமையம் இழக்கிறது; மங்கலான பட்டு மேலங்கி அணிந்த ஒரு பெண் உன்னை உற்று நோக்குபவளாகத் தெரிகிறாள்: சிறியவளாக, அகன்று தடித்தவளாக, எல்லா விதங்களிலும் குறைந்தவளாக – ஓர் அன்னியளாக, மிகப் பழைய நினைவாக, இப்போது எந்த அர்த்தமும் இல்லாத ஒன்றாகத் தெரிகிறாள்.

ஒய் தரையிறங்கு தளத்தில் இருந்தாள், விண்கலங்கள் வருவதைப் பார்த்திருந்தாள். ‘தீர்க்காயுஷ்’ நிலையத்தில் எங்கே வேண்டுமானாலும் அவள் இருந்திருக்கலாம், அங்கிருந்து பிணையத்தின் தகவல் ஓட்டத்தைத் தன்னுடைய வழிப்படுத்திக்குச் செலுத்தும்படி கேட்டுக் கொண்டிருக்கலாம் – அதன் வழியே, பிறப்பு என்பது தலைகீழாக ஆனாற்போலத் தோற்றமளிக்கும் விதமாக விண்கப்பல்கள் மெல்ல நடனமாடியபடித் தம்முடைய தொட்டில் போன்ற கூடுகளுக்குள் நழுவிப் பொருந்துவதை, அவளுடைய விழிகளின் காட்சிப் புலத்தின்மீது ஓடவிட்டுப் பார்த்திருந்திருக்கலாம். ஆனால் இப்படி விண்கலத் தளத்தின் பயணிகளுக்கான விசாலமான கூடத்தில் நிற்பதில் ஏதோ இருந்தது – பொன் கெண்டை மீன் பூங்காவிலோ, ஆகாயத்து நீலநிற ட்ராகன் கோவிலிலோ நின்றால் கிட்டாத ஒரு நெருக்கமான உணர்வு இங்கு அவளுக்குக் கிட்டியது. ஏனெனில் இங்கு – இங்கு சில அடிகளே தடித்த உலோகத் தகடுகள்தான் அவளை அந்த கூண்டுத் தொட்டில்களிலிருந்து பிரித்தன, அவளால் வெற்றிடத்தின் விளிம்பில் தான் தடுமாற்றத்தோடு நிற்பதாக, காற்றையோ அல்லது பிராண வாயுவையோ சுவாசிக்காமல் அந்தக் குளிர்ச்சியில் மூழ்கியிருப்பதாக உணர முடிந்தது. தான் வேரற்று, தொடர்புகள் ஏதுமற்று, அனைத்துக்கும் மூலாதாரமான ஒன்றிடம் திரும்பிவிட்டது போலவேகூடக் கற்பனை செய்யமுடிந்தது.
இப்போதெல்லாம் அநேகக் கலங்கள் நட்சத்திர மண்டலப் பயணக் கலங்களாக இருந்தன – தீர்க்காயுஷ் நிலையத்தின் சுதந்திரத்தைப் பார்த்து அதன் முன்னாள் எஜமானர்களுக்கு மனவருத்தம் இருக்கும் என்று நீங்கள் நினைத்திருக்கலாம், ஆனால் போர் இப்போது நின்றுவிட்டதால், தீர்க்காயுஷ் நிலையம் கணிசமான லாபத்தைக் கொணர்ந்தது. கலங்கள் வந்தன; நதிபோலத் தொடர்ச்சியாகச் சுற்றுலாப் பயணிகள் வந்து போனார்கள்- அவர்களின் கண்கள் மிகவுமே உருண்டையாக, நேராகவும், தாடைகள் மிகவுமே சதுரமாகவும் இருந்தன; முகங்களின் நிறமோ நோய்ப்பட்டவர் முகங்கள்போலத் தோற்றம் தரும் ரோஜா நிறத்தில் இருந்தது, சரியாக வேக வைக்கப்படாத மாமிசம் வெகு நேரம் வெய்யிலில் விடப்பட்டதுபோல இருந்தது. தயக்கமேதும் இல்லாமல் அவர்கள் நடக்கும் விதத்தில், அமிழ்த்திகளோடு உள்ளவர்களின் சுயநம்பிக்கை புலப்பட்டது: சுட்டிக் காட்டப்பட்டவற்றின் முக்கியமான அம்சங்களை ஒரு வினாடிபோல நிதானித்துப் பார்த்த பிறகு உள்நகரத்துப் பயண ஊர்திகளின் நிலையத்துக்கு அவர்கள் சென்றது, பள்ளிக்கூடப் பாடப் புத்தகத்து ராங் பாஷையில் அவர்களுக்குச் சிபாரிசு செய்யப்பட்ட ஹோடெல்களுக்குப் போக வாடகை ஊர்திக்காரர்களோடு பேரம் பேசுவது – பூரான்களோ இல்லை அட்டைகளோ படையெடுத்து வந்தமாதிரி நிலையத்தில் வந்து குவியும் அயலார்கள் நடத்தும் இந்த நாடகங்களைப் பார்த்தாலே குமட்டுகிற மாதிரி இருந்தாலும் இவற்றை ஒய் அவளுடைய வாழ்நாள் பூராவும் பார்த்திருக்கிறாள்.
இருந்தாலும் ஒய் அவர்களைக் கவனித்து வந்தாள். ‘முதன்மை’யில் இருந்த அவளுடைய நாள்களை அவர்கள் நினைவூட்டினார்கள். அந்தப் பள்ளிநாள்கள் ஆரவாரமான மதுக்கடைகள், கோலாகலமான வார இறுதி நாள்கள், பரீட்சைகளுக்காகக் கடைசி நேரத்து மீள்வாசிப்புகள் ஆகியவற்றால் நிரம்பியவை, எந்தக் கவலையும் இல்லாத அந்த நாள்கள் அவளுடைய வாழ்வில் ஒருபோதும் திரும்பிவர வாய்ப்பில்லாதவை. அந்த நாள்களை மீண்டும் பெற அவள் மிகவும் ஆசைப்பட்டாள், அந்தப் பலவீனத்துக்காகத் தன்னை வெறுக்கவும் செய்தாள். ’முதன்மை’யில் அவளுடைய கல்வி, அவளுக்கு நிலையத்துச் சமூகத்தின் மேல்தட்டுக்குப் பாதையாக இருந்திருக்க வேண்டும், மாறாக அது அவளுக்குத் தன் குடும்பத்தோடு தொடர்பறுந்த உணர்வைக் கொணர்ந்ததைத் தவிர வேறெதுவும் செய்யவில்லை; மேலும் அவளால் வார்த்தைகளில் விளக்க முடியாத தனிமை, மகிழ்ச்சியின்மை, இலக்கில்லாமல் வாழும் உணர்வு ஆகியன மேன்மேலும் வளர்ந்துவந்தன.
அவளுடைய வழிப்படுத்தி எந்திரம், அவளின் பார்வை வெளியின் ஓரத்தில் ஓர் இலச்சினையை மின்னிக் கொண்டிராவிட்டால் – அன்று முழுநாளும் அவள் சிறிதும் அசைந்திருக்கமாட்டாள். அவளுடைய இரண்டாவது மாமாவிடமிருந்து ஒரு செய்தி.
“குழந்தே.” அவருடைய முகம் வெளுத்து, நைந்துபோய்த் தெரிந்தது, கருவட்டங்கள் கண்களின் கீழே, அவர் உறங்கவே இல்லை என்பதுபோல இருந்தது. அநேகமாக அவர் உறங்கி இருக்க மாட்டார் – கடைசியாக அவரை ஒய் பார்த்தபோது அவர் ஒய்யின் சகோதரி ‘தாம் ‘-உடன் ஓர் அறையில் பேசிக் கொண்டிருந்தார், ஒரு திருமணத்துக்கான பொருட்களை – ஐநூறு குளிர்கால முலாம் பழங்கள், ‘வெற்றி’ நிலையத்தின் ஆகச்சிறந்த மீன் குழம்பில் ஆறு பீப்பாய்கள் – நேரத்தில் கொண்டுகொடுக்க ஏற்பாடு செய்ய முயன்றுகொண்டிருந்தார். ”ரெஸ்டாரெண்டுக்குத் திரும்பி வா.”
“இது எனக்கு ஓய்வு நாள்,” என்றாள் ஒய்; அது அவளுக்கே சிறுபிள்ளைத்தனமாகவும், சிணுங்குவது போலவும் ஒலித்தது, அதுவன்று அவள் தெரிவிக்க விரும்பியது.
இரண்டாம் மாமாவின் முகம் கோணலாகியது, அவர் கொஞ்சம் சிரிக்க முயன்றிருப்பாரோ என்னவோ, ஆனால் அவரோ கொஞ்சமும் நகைச்சுவை உணர்வே இல்லாதவர். சுதந்திரப் போரில் அவர் பெற்றிருந்த தழும்பு அந்தக் கரடு முரடான பின்புலத்தில் பளிச்சென்று தெரிந்தது – இப்படி அப்படி நெளிந்ததால் அந்தத் தழும்பு அவருக்கு இன்னமும் வலிப்பதுபோலத் தெரிந்தது. “எனக்குத் தெரியும், ஆனால் எனக்கு நீ இப்போது வேண்டி இருக்கு. நமக்கு ஒரு முக்கியமான வாடிக்கைக்காரர் வந்திருக்கிறார்.”
“நட்சத்திர மண்டலத்து ஆளா,” ஒய் கேட்டாள். அவர் அவளைக் கூப்பிட அது ஒன்றுதான் காரணமாக இருக்கும், இல்லையேல் அவர் அவளுடைய சகோதரர்கள் அல்லது ஒன்றுவிட்ட சகோதரர்களில் ஒருத்தரைத்தான் கூப்பிட்டிருப்பார். அவள் ‘முதன்மை’ நிலையத்தில் பெற்ற கல்வி அவளுக்கு நட்சத்திர மண்டலத்துக்காரர்களின் சிந்தனை முறைகளைப் புரிந்துகொள்ளும் திறனைக் கொடுத்திருந்தது என்று அவளுடைய குடும்பத்தினர் நினைத்தார்கள் – அவர்கள் எதிர்பார்த்த வெற்றிகளை அவள் கொணராவிட்டாலும், இது ஒன்றாவது பயனுள்ளதாக இருந்தது என்பது அவர்கள் நினைப்பு.
“ஆமாம், ஒரு வர்த்தக நிறுவனத்தின் தலைவர், முக்கியமான ஆள்.” இரண்டாவது மாமா அவளுடைய பார்வைப் படலத்திலிருந்து அகலவில்லை. ஒய் விண்கலங்கள் நகர்வதை அவருடைய முகத்தின்மீது பார்த்தாள், அவை மெதுவாகத் தம் கூடுகளுக்குச் சரி நிகராக நகர்ந்து பொருந்த முயன்றன, அவற்றுக்கு முன்னிருந்த பெரும் திறப்பு, ஒரு மந்தாரைப் பூவைப் போலத் திறந்துகொண்டிருந்தது. தன் பாட்டியின் ரெஸ்டாரெண்ட் பற்றி அனைத்தும் அவளுக்குத் தெரிந்திருந்தது; என்ன இருந்தாலும் அவள் தாமுடைய சகோதரியாயிற்றே; மேலும் அவள் எல்லாக் கணக்கு வழக்குகளையும் பார்த்திருந்தாள், அவர்களுடைய வாடிக்கையாளர்களில் நாசூக்கானவர்கள் நாளாவட்டத்தில் நிலையத்தின் மேலான இடங்களுக்குக் குடிபெயர ஆரம்பித்ததால் ரெஸ்டாரெண்டில் வருவோரின் எண்ணிக்கை குறையத் தொடங்கியிருந்தது; அருமையான மூலப் பொருட்களைக்கொண்ட விலை அதிகமான உணவுப் பண்டங்களை வாங்கத் தயாராக இல்லாத, சிக்கனமாகச் செலவழிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையே பெருகிவந்தது.
”நல்லது” அவள் சொன்னாள். “நான் வரேன்.”

காலை உணவின்போது நீ மேஜையின்மீது பரப்பப்பட்டுள்ள உணவுப் பண்டங்களைப் பார்க்கிறாய்: பிரெட் – ஜாம், வண்ணமான ஒரு திரவம் – ஒரு கணம் உனக்கு ஏதும் தோன்றாமல் இருக்கிறது, அது உன் அமிழ்த்தி இயங்கத்துவங்கி, அது கடுமையாக, கருப்பாக, நீ எப்போதும் அருந்துகிற மாதிரி வைக்கப்பட்டிருக்கிற காஃபி என்று நினைவூட்டுமுன் இருந்த கணம்.
ஆமாம், காஃபி.
நீ அந்தக் கோப்பையை உதடுகளைப் பார்க்க உயர்த்துகிறாய் – அமிழ்த்தி உனக்குச் சொல்லிக் கொடுக்கிறது, எங்கே அதைப் பிடிக்க வேண்டும், எப்படி உயர்த்த வேண்டும், ஒயிலாக இருப்பவர்களுக்கெல்லாம் ஒரு முன்மாதிரியாக, சிரமப்படாது ஒயிலாக இருப்பது எப்படி என்று, நினைவூட்டுகிறது.
“இது கொஞ்சம் கடுமையாக இருக்கிறது,” உன் கணவர் மன்னிப்புக்கோரும் விதமாகச் சொல்கிறார். மேஜையின் மறுபுறமிருந்து உன்னை அவர் கவனிக்கிறார், இன்னதென்று சொல்லமுடியாத ஒரு பாவம் அவர் முகத்தில் தெரிகிறது – அது வினோதமாக இல்லையா, ஏனெனில் முகபாவங்களைப் பற்றித் தெரிய இருக்கிற எல்லாம் உனக்குத் தெரிந்திருக்க வேண்டாமா – அமிழ்த்திக்கு நட்சத்திர மண்டல வாசிகளின் பண்பாடுளைப் பற்றிய அனைத்தும் அதன் தகவல் சேமிப்பில் பதிவாகி இருக்க வேண்டாமா, அது உனக்குச் சொல்லிக் கொடுத்திருக்க வேண்டாமா? ஆனால் அது விசித்திரமாக மௌனமாக இருக்கிறது, வேறு எதையும்விட, இது உன்னை அச்சுறுத்துகிறது, அமிழ்த்திகள் ஒருபோதும் கைவிடுவதில்லை.
“நாம போகலாமா?” உன் கணவர் கேட்கிறார் – ஒரு கணம், உனக்கு அவர் பெயர் நினைவு வரமாட்டேன் என்கிறது, பிறகு கிடைக்கிறது – காலென், அது காலென், பண்டை பூமிக் கிரகத்தின் ஏதோ ஒரு மருத்துவரின் பெயரைப் பின்பற்றி வைக்கப்பட்ட பெயர். அவர் கருப்பு முடியும், வெளுத்த தோலும்கொண்டு உயரமானவராக இருக்கிறார் – அவருடைய அமிழ்த்தியின் அவதாரம் அவருடைய இயல்பான தோற்றத்திலிருந்து அதிகம் வேறுபடவில்லை, நட்சத்திர மண்டலவாசிகளின் அவதாரங்கள் பெரும்பாலும் அப்படித்தான், அதிகம் வேறாக இருப்பதில்லை. உன்னைப் போன்ற மக்கள்தான் ஒத்துப்போகக் கடினமாக உழைக்க வேண்டியிருக்கிறது, ஏனெனில் உன் தோற்றத்தில் எல்லாமே உடனே கவனத்தை ஈர்ப்பதாக இருக்கிறது – இழுக்கப்பட்டதால் மடியும்போது அந்துப் பூச்சிகளைப்போலச் சுருங்கித் தெரியும் கண்கள், சற்றுக் கருமை படர்ந்த தோல், கட்டையாகத் தெரியும் சற்றுச் சிறிய வடிவம், அது பனை ஓலைபோல விரியாமல் பலாப் பழம்போலத் தோற்றம் தரும். ஆனால் அதெல்லாம் ஒரு விஷயமே இல்லை: உன்னைக் கச்சிதமாக ஆக்கிவிடலாம்; அமிழ்த்தியை அணிந்து கொள், நீ வேறு நபராகி விடலாம், வெளுத்த தோலுடன், உயரமாக, மிக அழகாக ஆகிவிடலாம்.
ஆனால், உண்மையில், நீ அமிழ்த்தியை அகற்றாமல் அணிந்து வாழ்ந்து வெகு நாள்கள் ஆகிவிட்டன இல்லையா? இது கூட – ஓட்டமில்லாமல் நிற்கும் சிந்தனையாக இருந்தது ஒருக்கணம்தான், சீக்கிரமே இது அமிழ்த்தியால் தொடர்ந்து கொட்டப்படும் தகவல் ஓடையால் அழிக்கப்பட்டுவிடும், அந்த ஓடையில் சிறு அம்புக்குறிகள் தொடர்ந்து உன் கவனத்தைப் ப்ரெட், சமையலறை, மேஜையின் பளபளப்பான உலோகம் ஆகியவற்றின்பால் ஈர்க்கின்றன – எல்லாவற்றின் பின்புலன் பற்றிய தகவலை அளிக்கின்றன, மொத்தப் பேரண்டத்தையே தாமரைப் பூவைப்போல உனக்கு அவிழ்த்துக் காட்டுகின்றன.
“ஆமாம்,” நீ சொல்கிறாய், “நாம் போகலாம்.” உன் நா அந்தச் சொற்களில் தடுக்குகிறது – செதுக்கப்பட்ட வைரம் போன்ற அந்த நட்சத்திர மண்டலத்துச் சொற்களுக்குப் பதிலாக நீ ஒரு மாற்றுக் கட்டமைப்பைப் பயன்படுத்தி இருக்கவேண்டும், அங்கு ஒரு சுட்டுப் பெயரைப் பயன்படுத்தி இருக்கவேண்டும். ஆனால் எதுவும் எழவில்லை, அறுவடைக்குப் பிறகு எங்கும் வெட்டும் விளிம்புகளோடு,சிறிதும் இனிமை உள்ளே இல்லாது, எரித்துத் தீய்க்கப்பட்டு நிற்கும் கரும்பு வயல்போல உணர்கிறாய்.

வேறென்ன, இரண்டாவது மாமா வற்புறுத்தினார், ஒய் அந்த பேட்டிக்காக அமிழ்த்தியைக் கொண்டுவர வேண்டுமாம் – எப்போதும்போல் வாசாலகமாகவும், இடையூறுகளைத் தவிர்த்து வழுக்கிக்கொண்டு செல்லும் விதமாகவும் பேசுபவராகச் சொன்னார், ‘தேவைப்பட்டால் இருக்கட்டுமேன்னுதான்.’ இதில் தொல்லை என்னவென்றால், ஒய் அதை விட்டுப்போன இடத்தில் அது இல்லை. குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் செய்திகளை அனுப்பி விசாரித்த பிறகும், ஒய்-க்குக் கிட்டியதில் ஒன்றுவிட்ட சகோதரன் க்ஹான் கொடுத்ததுதான் உபயோகமாக இருந்தது, அவன்தாம் அவர்கள் இருப்பிடங்கள் எல்லாவற்றிலும் புகுந்து, நட்சத்திர மண்டலத்தின் தொழில்நுட்பம் கொண்டவை எதெல்லாம் அவளுக்குக் கிடைத்தனவோ அவற்றை எல்லாம் வாரிச் சுருட்டிக் கொண்டுபோனதைப் பார்த்ததாகத் தன் நினைவு என்று தெரிவித்தான். க்ஹான் குடும்பத்தின் தொடர்புப் பாதையில் தெரிவித்ததைப் பார்த்த மூன்றாவது அத்தை, கண்டனம் தெரிவித்துச் சூள் கொட்டினாள், ”தாம். அந்தப் பெண்ணோட புத்தி எப்பவும் மலை உச்சீலயே தொலைஞ்சு போயிடுது. சொப்பனத்தை வச்சுகிட்டு அரிசி புடைக்க முடியுமா என்ன?”
ஒய் ஒன்றும் சொல்லவில்லை. முதன்மையிலே இருந்து திரும்பி வந்தபின், தீர்க்காயுசின் மாண்டரின் பரீட்சைகளில் அவள் தோல்வி அடைந்தபின், அவளுடைய சொந்தக் கனவுகள் எல்லாம் வாடிப்போய் செத்துவிட்டன; ஆனால் தாம் அண்மையில் இருப்பது – ரெஸ்டாரெண்டுக்கு அப்பால் பார்க்கக்கூடிய ஒரு நபர், குடும்பத்தின் நலன் என்ற குறுகிய எல்லைகளைத் தாண்டி யோசிக்கக்கூடிய ஒருத்தராவது அப்படி இருப்பது நன்றாகவே இருந்தது. அது தவிர, அவளுடைய சகோதரியோடு ஒட்டுறவாக அவளே இல்லை என்றால், வேறு யார் அப்படி இருப்பார்கள்?
தாம் மேல் தளங்களில் இருந்த குடும்பச் சமூகக் கூடங்களில் இல்லை; ஒய் தன் பாட்டியின் மூடப்பட்ட அறைகளுக்குப் போகும் உயர்த்தியை ஐயத்தோடு நோக்கினாள். தாம் பாட்டிக்குத் தன் மரியாதையைத் தெரிவிப்பதற்காக, நட்சத்திர மண்டலத் தொழில்நுட்பக் கருவிகளைச் சேகரித்திருப்பாள் என்று அவளுக்குத் தோன்றவில்லை. மாறாக, அவள் அடித்தளத்திற்குப் போனாள், அவளும் தாமும் தங்கள் தலைமுறைக் குழந்தைகளோடு பகிர்ந்துகொண்ட தளம் அது.
அது சமையலறைக்கு அடுத்தாற்போலவே இருந்தது, பூண்டும் மீனும் கலந்த குழம்பின் நெடி எங்கும் பரவி இருந்தாற்போல இருந்தது – இளைய தலைமுறைக்கு எப்போதுமே கீழ்த்தளம்தான் கொடுக்கப்பட்டது, பரிசாரகப் பெண்களின் பட்டாளம் சாப்பாட்டு அறைகளுக்கு எடுத்துப்போன சாப்பாட்டுப் பொருட்களின் எல்லா நெடிகளும் வாசனைகளும் பாத்திரங்களின் சத்தங்களும் அங்கு எப்போதும் இருக்கத்தான் செய்யும்.
அந்தத் தளத்தின் கூடும் இடமாக இருந்த ஒரு சிறு அறையில் தாம் உட்கார்ந்திருந்தாள். எல்லாத் தொழில் கருவிகளையும் தரையில் பரப்பி இருந்தாள் – இரண்டு அமிழ்த்திகள் (தாமுடையதும், ஒய்யுடையதுமாகத்தான் இருக்கும், எல்லாக் குடும்ப உறுப்பினர்களிலும் இவர்கள்தான் தங்களுடைய அமிழ்த்திகளை அப்படி எங்காவது போட்டுவிட்டுப் போகும் பழக்கமுள்ளவர்கள்), தொலைவிலிருந்து இயக்கப்படக்கூடிய ஒரு கேளிக்கை சாதனம், பூமண்டலம்போல மாற்றி அமைக்கப்பட்ட வேற்றுக் கிரகங்களில் ஓடி விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகள் பற்றிய சில கதைகளை ஒலிபரப்பிக் கொண்டிருப்பதில் மும்முரமாக இருந்தது, தவிர ஒய்யால் அவை இன்னதென்று அறியமுடியாத சில சாதனங்களும் கிடந்தன, தாம் அவற்றை அக்கக்காகப் பிரித்துச் சிறு உப பகுதிகளாகப் போட்டிருந்தாள்: துப்புரவு செய்யப்பட்ட மீனைப்போலப் பிரிக்கப்பட்டு எல்லாம் உலோகப் பாகங்களும் கண்ணாடிப் பாகங்களுமாகக் கிடந்தன.
ஆனால், ஏதோ ஒரு கட்டத்தில், தாம் இந்த வேலையில் ஈடுபாட்டை இழந்திருந்தாள். ஏனென்றால் இப்போது அவள் தன் காலையுணவை முடித்துக்கொண்டிருந்தாள், தன் சூப் கிண்ணத்திலிருந்த நூடுல்களை உறிஞ்சி விழுங்கிக்கொண்டிருந்தாள். சமையலறையின் மிச்சம் மீதியிலிருந்து அதை அவள் வாங்கிக் கொண்டிருக்கவேண்டும், ஏனெனில் ஒய்க்கு அந்த வாசனை நன்கு தெரியும், அந்தச் சாற்றின் வாசனைப் பொருட்களுடைய ருசியைத் தன் நாக்கில் அவளால் கற்பனையில் உனர முடிந்தது – அம்மாவுடைய சமையல், அவள் ஏற்கெனவே சோற்று உருண்டைகளாகக் காலை உணவை சாப்பிட்டிருந்தாள் என்றாலும், அவளுடைய வயிறு அந்த ருசியை உணர்ந்து இரைச்சலிட்டது.
“மறுபடியும் ஆரம்பிச்சுட்டியா நீ?” என்று பெருமூச்சு விட்டாள் ஒய். “தயவு செய், உன்னோட சோதனைகளுக்கு என்னோட அமிழ்த்தியை எடுத்துண்டு போகாமல் இருக்கியா?”
தாம் அவள் குரலைக் கேட்டுச் சற்றும் வியப்படையவில்லை. “அக்கா, நீ அதைப் பயன்படுத்தற மாதிரியே தெரியல்லியே?”
“நான் அதை உபயோகப்படுத்தலைங்கறதாலெ அது உன்னோடதா ஆயிடாது,” என்றாள் ஒய், ஆனால் அது நிஜமான காரணம் இல்லை. தாம் அவளுடைய பொருட்களைக் கடன் வாங்குவதை ஒய் பொருட்படுத்துவதில்லை, அமிழ்த்தியை மறுபடி போட்டுக் கொள்ளாமல் இருப்பதில் அவளுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை – அவை அவளுக்குக் கொடுத்த உணர்வுகளை, குறிப்பாக அதன் கட்டமைப்பு அவளுக்கு ஏற்ற மாதிரி யோசனைகள் கொடுக்க அவளுடைய மூளையில் துருவி நோக்குகிறது என்ற உணர்வை அவள் அடியோடு வெறுத்தாள். ஆனால் சில நேரங்களில் அவள் அந்த அமிழ்த்தியை அணியத்தான் வேண்டி இருந்தது: வாடிக்கையாளர்களோடு பழகும்போதும், சாப்பிடுவோருக்கு மேஜைகளில் உணவு பரிமாறுகிற வேலைக்கும், பெரிய நிகழ்ச்சிகளில் தயாரிப்புக்கான சந்திப்புகள் நடக்கும்போதும் அது தேவையாக இருந்தது.
தாம், ஒருபோதும் உணவு பரிமாறும் வேலையைச் செய்ததில்லை – எல்லாவற்றையும் திட்டமிட்டுச் செய்வதிலும், அந்த நிலையத்தின் கட்டமைப்பில் செய்யும் எல்லா வேலைகளிலும் அத்தனை திறமையை அவள் வளர்த்துக் கொண்டிருந்ததால், நாளின் பெரும்பாலான நேரத்தை அவள் கணினித் திரைகளின் முன்னேதான், அந்த நிலையத்தின் வலைத் தொடரமைப்போடுதான் கழித்தாள்.
”தங்கச்சிப் பொண்ணே?” என்று ஒய் விளித்தாள்.
தாம் தன் சாப்ஸ்டிக்குகளைக் கிண்ணத்தின் பக்கத்தில் வைத்தாள், தன் கைகளை அகல விரித்துச் சைகை செய்தாள். “சரி போ. திரும்ப எடுத்துக்கோ. எப்பவாவது வேணுமானா என்னோடதை நான் உபயோகப்படுத்திக்கலாம்.”
ஒய் மேஜையில் பரப்பி இருந்தவற்றைப் பார்த்தாள், தவிர்க்க முடியாத அந்தக் கேள்வியைக் கேட்டாள். “இதெல்லாம் எத்தனை தேறி இருக்கு?”
தாமின் வேலை அந்த ரெஸ்டாரண்டின் வலைத் தொடர்புகளையும், வலை அமைப்பையும் விடுதிக்குள் பராமரிப்பதுதான்; அவளுடைய பொழுதுபோக்கு தொழில் நுட்பம். அதுவும் நட்சத்திர மண்டலத்துத் தொழில் நுட்பம். அவள் எல்லாக் கருவிகளையும் பிரித்துப்போட்டு அவை எப்படி இணைகின்றன, எப்படி வேலை செய்கின்றன என்று சோதிப்பாள்; அவற்றை மறுபடி தொகுப்பாள். கேளிக்கை சாதனங்களில் அவள் பெற்றிருந்த திறமையால், அந்த ரெஸ்டாரண்ட் சூழல் ஒலியமைப்பைக் கட்டமைக்க முடிந்தது – நட்சத்திர மண்டலத்துப் பயணிகளுக்காக பழைய மாதிரி ராங் இசை, உள்ளூர் வாடிக்கையாளர்களுக்கு தற்காலக் கவிதை வாசிப்புகள்.

ஆனால் அமிழ்த்திகளிடம் அவள் தோற்றாள்: அதில் மோசமான பாதுகாப்புத் தடுப்புகள் இருந்தன. அவற்றைப் பாதியாகப் பிரித்துவிடலாம், பாட்டரியை மாற்றலாம்; ஆனால் அதற்குமேல் நாம் எதையும் செய்யமுடியாது. தாம் முன்னர் செய்த முயற்சிகளில் கிட்டத்தட்ட அவளுடைய கைகளையே பயன்படுத்த முடியாத நிலைக்கு வந்திருந்தாள்.
தாமின் முகத்தைப் பார்த்தால், அவள் மறுபடி முயற்சி செய்யத் தயாராக இல்லை என்று தோன்றியது. “தர்க்கமென்னவோ அதேதான் இருக்கணும்.”
“எதைப் போல?” ஒய்யால் கேட்காமல் இருக்க முடியவில்லை. அவள் தன்னுடைய அமிழ்த்தியை மேஜையிலிருந்து எடுத்துத் தன்னுடைய சீரியல் எண் அதில் இருந்ததா என்று துரிதமாகச் சோதித்தாள்.
தாம் மேஜையில் பரப்பிக் கிடந்த உதிரி பாகங்களைக் காட்டினாள். “இலக்கியம் எழுதச் செயற்கை உதவி. இலேசான மனமகிழ் நாவல்களைப் படைக்கும் ஒரு கருவி.”
“அதுவும் இதுவும் ஒண்ணில்லையே -” ஆரம்பித்த ஒய் நிறுத்திக்கொண்டாள், தாம் விளக்கட்டும் என்று காத்திருந்தாள்.
“இருக்கிற பண்பாட்டு நியதிகளை எடுத்துக்கொண்டு, செறிவாக இணைந்து, மனதுக்கு நிறைவு தரும் ஒரு கதையைத் தயார் செய்கிறது. ஜனங்கள் தங்களுடைய பாதையை வகுத்துக்கொண்டு, ஒரு கிரகத்தை அடைவதற்காக வேற்றுக் கிரக உயிரினங்களோடு போரிடுவதுபோல ஒரு கதை, தீர்க்காயுசு நிலையத்தில் இருக்கும் நமக்கு அதெல்லாம் ருசிப்பதில்லை. அதாவது நாம என்ன, ஒரு கிரகத்தைக்கூடப் பார்த்ததில்லைங்கறேன்.” தாம் வேகமாக ஒரு பெருமூச்சை விட்டாள் – அவள் கண்களின் பார்வை பாதி பிரித்துப் போடப்பட்ட இலக்கியம் எழுதும் செயற்கை உதவியின் மேலிருந்தது, இன்னொரு பாதி அவள் பார்வையின்மீது எழுதப்பட்ட வேறெதையோ நோக்கியது.
“அமிழ்த்திகள் எப்படி ஒரு பண்பாட்டை எடுத்துக்கொண்டு நமக்குப் புரிகிற மாதிரி உருவில் அதைக் கட்டுக் கட்டாகக் கொடுக்கின்றனவோ அதே போலத்தான்: மொழி, சைகைகள், பழக்க வழக்கங்கள், அந்த மொத்த மூட்டையையும்தான் சொல்றேன். அதுகள்லேயும் இந்தக் கட்டமைப்பேதான் இருக்கணும்.”
“இதை வச்சுகிட்டு நீ என்ன செய்ய நினைக்கிறேங்கறது எனக்கு இன்னும் தெளிவா இல்லை.” ஒய் தன் அமிழ்த்தியைப் போட்டுக்கொண்டாள், அதன் மெல்லிய உலோக வலையைத் தன் தலையைச் சுற்றி அணிந்து அது சரியாகப் பொருந்தும்வரை சரி செய்தாள். அதன் இடையூடு அவளுடைய மூளையோடு ஒருங்கிணைகையில் அவள் முகத்தைச் சுளித்தாள். தன் கைகளை அசைத்தாள், சில முன்தயாரிப்பு வைப்பு நிலைகளைத் தொழிற்சாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையைவிடக் குறைத்து வைத்தாள் – அந்தச் சனியன் எப்போதும் தொழிற்சாலையில் பொருத்திய வைப்பு நிலைகளுக்கே திரும்பிப் போய்விடும், அது தற்செயலானதோ, விபத்தோ இல்லை என்பது அவள் ஊகம். பளபளக்கும் வலை ஒன்று அவளைச் சுற்றிக் கவிழ்ந்தது: அவளுடைய அவதாரம் அவளைச் சுற்றி உருவாகிக் கொண்டிருந்தது. அவளால் தன் அறையை இன்னமும் பார்க்க முடிந்தது – அந்த வலை இலேசாகத்தான் ஒளி புகாமல் தடுத்தது – ஆனால் மூதாதைகளே, அங்கே இல்லாதது போன்ற அந்த உணர்வை அவள்தான் எத்தனை வெறுத்தாள். “நான் இப்ப பார்க்க எப்படி இருக்கேன்?”
“பயங்கரம். உன்னோட அவதாரம் செத்துப் போயிட்ட மாதிரித் தெரியறது.”
“அய்யே .. ரொம்பதான் சிரிச்சுடாதே,” என்றாள் ஒய். அவளைவிட அவள் அவதாரம் வெளுத்துப் போயிருந்தது, உயரமும்கூட: அவளை மிக அழகாகக் காட்டியது, அவளுடைய வாடிக்கைக்காரர்கள் அதை ஒத்துக்கொண்டார்கள். அந்த மாதிரிக் கணங்களில் ஒய் தன்னிடம் ஓர் அவதாரம் இருந்ததற்க்ச் சந்தோஷப்பட்டாள், அது இருந்ததால் அவள் எத்தனை ஆத்திரப்பட்டாள் என்பதை அவர்கள் பார்க்க முடிந்திராது. “நீ என் கேள்விக்கு இன்னும் பதில் சொல்லல்லை.”
தாமின் கண்கள் பளீரிட்டன. “நம்மால என்னல்லாம் செய்ய முடியல்லைங்கறதை யோசிச்சுப் பார். நட்சத்திர மண்டலக்காரங்க நம்மிடம் கொடுத்திருக்கறதுலேயே இதுதான் ஆகச் சிறந்த தொழில் நுட்பம்.”
ஆனா அது ஒண்ணும் பெரிய விஷயமே இல்லை, ஆனால் ஒய் இதை உரக்கச் சொல்லத் தேவை இருக்கவில்லை. ஒய் நட்சத்திர மண்டலத்துக்காரர்களையும் அவர்களுடைய உறுதிமொழிகளின் உளுத்த உள்ளீட்டையும் பற்றி எப்படி உணர்கிறவள் என்பதை தாம் துல்லியமாக அறிந்திருந்தாள்.
“இதுவே அவங்களோட ஆயுதமும்தான்.” தாம் அந்த மனமகிழ் எந்திரத்தைத் தள்ளினாள். “அவங்களோட புத்தகங்க, ஹோலோக்கள், நேராப் பார்க்கிற விளையாட்டுங்க எல்லாமே அப்படித்தான். அவங்களுக்கு ரொம்ப ஏத்ததா இருக்கலாம் – அவங்க அமிழ்த்திகளைச் சுற்றுலாப் பயணிங்களோட வைப்பு நிலையில வச்சுக்கிடறாங்க, அதை ஏதோ ஒரு முட்டாள் ,ராங் எழுத்துல அந்தக் கருவிக்கு எழுதிக் கொடுத்ததை வச்சுகிட்டு அது அவங்களுக்கு ஓர் அயல் பிரதேசத்துல சுத்தறதுக்கு என்ன தேவையோ அதை அந்தக் கருவி கொடுத்துடுது. ஆனால் – நாம, அவங்களை வாழ்த்தி வணங்கி நிற்கிறோம். இந்த அமிழ்த்தியை எப்பப் பார்த்தாலும் போட்டுகிட்டிருக்கோம். நம்மளை அவங்களைப்போல ஆக்கிக்கிடறோம், ஏன்னு கேட்டா அவங்க அப்படி நம்மைத் தள்றாங்க, நாமளும் விட்டுக்கொடுக்கற அளவுக்கு விவரம் தெரியாதவங்களா இருக்கோம்.”
”ஆனா, உன்னால இதை இன்னும் மேலானதா ஆக்கிட முடியும்னு நினைக்கிறியா?” இப்படிக் கேட்காமல் இருக்க ஒய்யிற்கு முடியவில்லை. தாம் இப்படி விளக்கி அவளை நம்பவைக்க வேண்டுமென்று ஏதும் இருக்கவில்லை: முதன்மை-யில் அவள் அமிழ்த்திகளை எங்குமே பார்த்ததில்லை. அவை எல்லாம் சுற்றுப் பயணிகளுக்கான கருவிகள், அப்போதும் ஒரு நகரத்திலிருந்து இன்னொன்றுக்குப் பயணம் போகும்போது அங்கு குடிமக்கள் தமக்குப் பயணித்துத் திரும்பிவரப் போதுமானது தெரியும் என்று நம்பினார்கள். ஆனால் அவர்களின் முன்னாள் காலனிகளான நிலையங்களில் அமிழ்த்திகள் கொட்டிக் கிடந்தன.
தாமின் கண்கள் மின்னின, வரலாற்று ஹோலோ காட்சிகளில் வருகிற போராட்டக்காரர்களின் ஆவேசமான கண்களைப்போலத் தெரிந்தன. “இவற்றை என்னால் பிரித்துப் போட்டுவிட முடிந்தால், இவற்றை நான் திருப்பிச் சேர்த்துப் பொருத்தி, இவற்றின் தர்க்கப் பாதைகளுக்கான இணைப்புகளை அறுத்து விடுவேன். என்னால் மொழிகளையும், கருவிகளையும் கொடுக்க முடியும், இவற்றால் நாம் மூழ்கடிக்கப்படாமல் இவற்றைப் பயன்படுத்தும் வழியைக் காண முடியும்.”
மூன்றாவது அத்தை சொல்லி இருந்தாள், மலை முகடுகளில் வழி தவறிய புத்தி என்று. இதுவரை தாம் சிறு அளவில் யோசித்தாள் என்று யாரும் பழி சொன்னதில்லை. அல்லது கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், அவள் மனது வைத்தது எதையும் அவள் அடையாமல் இருந்தாள் என்றும் யாரும் சொல்ல முடிந்ததில்லை. ஒவ்வொரு புரட்சியும் எங்காவது துவங்கித்தான் தீர வேண்டும் – தீர்க்காயுசின் சுதந்திரப் போர் ஒரு கவிதையால், அதை எழுதிய கவிஞன் சிறையிடப்பட்டதால்தானே துவங்கியது?
ஒய் தலையை அசைத்து ஆமோதித்தாள். அவள் தாமை நம்பினாள், ஆனால் எத்தனை தூரம் அவளால் நம்ப முடிந்தது என்று ஒய்யிற்குத் தெரியவில்லை. “சரியான கருத்துதான். சரி, எனக்கு இப்பப் போகணும், இல்லே இரண்டாவது மாமா என்னைத் தோலை உரிச்சுடுவார். தங்கச்சி, உன்னை அப்புறம் பார்க்கிறேன்.”

உன் கணவருடன் நீ ரெஸ்டொராண்டின் அகன்ற நுழைவாயில் வளைவுக்குக் கீழே நடக்கையில், நிமிர்ந்து மேலே பார்க்கிறாய், அதன் பெயர்ப் பலகையில் உள்ள சித்திர எழுத்துகளின் வேலைப்பாட்டைக் கவனிக்கிறாய். உன் அமிழ்த்தி அதைச் “சகோதரி ஹாயின் சமையலறை” என்று மொழிபெயர்த்து உனக்குக் கொடுக்கிறது. அந்த இடத்தின் பின்னணியைப் பற்றிய விரிவான விவரணையை உனக்குக் கொடுக்கத் தொடங்குகிறது: அதன் சாப்பாட்டுப் பொருள் பட்டியல், மிகவும் பரிந்துரைக்கப்பட்ட குறிப்பிட்ட பதார்த்தங்கள் – பல மேஜைகளைத் தாண்டி நீ நடந்து போகையில், உனக்குப் பிடிக்குமென்று அது கருதுகிற சிலவற்றை அது குறிப்பிட்டுச் சொல்கிறது, உருட்டப்பட்ட சோறு நிறைந்த கொழுக்கட்டைகளிலிருந்து பொறிக்கப்பட்ட இறால் வரை. மிகவும் வினோதமான சில பதார்த்தங்களைப் பற்றி உன்னை எச்சரிக்கிறது, உப்புக் கண்டமாக்கப்பட்ட பன்றிக் காதுகள், புளிக்க வைக்கப்பட்ட மாமிசம் (இதைப் பற்றி நீ எச்சரிக்கையாக இருக்கவேண்டியதன் காரணம், அது நிலையத்தின் வெவ்வேறு வட்டார மொழி உச்சரிப்புகளுக்கேற்ப மாறிவிடும் பதார்த்தம் என்பதுதான்) அல்லது உள்ளூர் மக்களுக்குப் பிடித்ததும் மோசமான வாடை வீசுவதுமான டூரியான் என்று ஒரு பழம்.
இது…. ஏதோ சரியாகவே இல்லை, என்று நீ நினைக்கிறாய், ஏற்கெனவே அதிக தூரத்திற்குப் போய்விட்ட காலெனை எட்டிப் பிடிக்க நீ சற்றுத் திணறுகிறாய், அவரோ எப்போதும் வெளிக்காட்டுகிற நம்பிக்கையோடு கிடுகிடுவென்று முன்னேறிக் கொண்டிருக்கிறார்; ஜனங்கள் அவர்முன் விலகி வழிவிடுகிறார்கள்; அழகான அவதாரம் அணிந்த இளம்பெண் ஒருத்தி அவர் முன் தலைகுனிந்து வரவேற்கிறாள், ஆனால் காலென் என்னவோ அதைக் கவனிக்கக்கூட இல்லை. அந்த மாதிரி பணிவு அவரைக் கலங்கடிக்கிறது; காலம் கடந்து நீடிக்கும் பழக்கவழக்கங்களைப் பற்றி, ஏற்றத்தாழ்வுகள் பற்றி, ஜனநாயக அரசு இல்லாததையும் பற்றி அவர் எப்போதுமே புலம்பி வந்திருக்கிறவர் – நட்சத்திர மண்டல சமூகங்களில் பொருந்துவதற்காக எல்லா இடங்களும் இன்னும் கொஞ்ச நாள்களில் மாறிவிடும் என்று நம்புகிறவர். உனக்கு – அவரோடு இதுபற்றி வாக்குவாதம் புரிந்த நினைவு இலேசாக இருக்கிறது, அது பல ஆண்டுகள் முன்பு நடந்தது, ஆனால் இப்போது உன்னால் அந்த வார்த்தைகளையோ, அல்லது காரணத்தையோகூட நினைவுகூர முடியவில்லை – அவர் சொல்வது சரியாகப்படுகிறது, அதெல்லாமே சரி என்று தோன்றுகிறது. நட்சத்திர மண்டலக்காரர்கள் பண்டை பூமியின் கொடுங்கோலாட்சிக்கு எதிராக எழுந்தனர், தம் விலங்குகளை உடைத்தெறிந்தனர், தம் எதிர்காலத்தைத் தாமே தீர்மானிக்கும் உரிமையைப் பறித்துக்கொண்டனர்; ஒவ்வொரு நிலையமும், கிரகமும் இதையே செய்யும், முன்னேற்றத்தைத் தடுத்துக் கொண்டிருக்கும் சர்வாதிகார ஆட்சிகளுக்கு எதிராக எழுந்து அவற்றை வீழ்த்தும். அது சரியானது; அது எப்போதுமே சரியாகத்தான் இருந்திருக்கிறது.
அழைக்கப்படாமலேயே நீ ஒரு மேஜையருகே நிற்கிறாய், இளம்பெண்கள் இருவர் ஒரு கோழிப் பதார்த்தத்தைச் சாப் குச்சிகளைக்கொண்டு பிரித்து உண்பதைப் பார்க்கிறாய் – மீன் குழம்பும் எலுமிச்சைப் புல்லும் கலந்த வாசனை காற்றில் எழுகிறது, அழுகிய மாமிசம் போன்ற தாங்க முடியாத, கடுமையான வாடை அது – இல்லை, இல்லை, அப்படி இல்லை, உனக்கு ஒரு கருத்தநிறத் தோல்கொண்ட பெண், சமைக்கப்பட்ட சோற்றை அந்த மேஜைக்குக் கொணர்வதான பிம்பம் தோன்றுகிறது, அவளுடைய கைகளும் அதே வாசனையால் மூடப்பட்டிருக்கின்றன, உன் வாயில் எதிர்பார்ப்பில் எச்சில் ஊறுகிறது….
அந்த இளம்பெண்கள் உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்: இருவரும் சாதாரணமாகக் கிடைக்கும் அவதாரங்களை அணிந்திருக்கிறார்கள், கிட்டுவதில் மிக மலிவான வகை அது – அவர்களின் உடுப்புகள் கண்ணைக் குத்தும் வகையிலான சிவப்பும் மஞ்சளும் கலந்த நிறத்தில் உள்ளன, அவை நேர்த்தியற்ற வடிவமைப்புக் கொண்டவை, மலிவான வடிவமைப்பாளர் ஒருவரின் தயாரிப்பாக இருக்கவேண்டும்: அவர்களின் முகங்கள் அலைப்புறுகின்றன, அவர்களின் கன்னங்களில் தெரியும் சிவப்புப் பூச்சுக்குக் கீழே சற்றுக் கருத்தநிறத் தோல் இருக்கிறது என்பதைக் கோடிகாட்டுகின்றன. மலிவாகவும், போலிப் பகட்டோடும் உள்ளவை, முற்றிலும் விலக்கத்தக்கவை; நீ அவர்களில் ஒருத்தி இல்லை என்பதற்கு மகிழ்வாக உணர்கிறாய்.
“உங்களுக்கு நான் உதவலாமா, அக்கா?” அவர்களில் ஒருத்தி கேட்கிறாள்.
அக்கா, முன்பு நீ தேடிக்கொண்டிருந்த சுட்டுப் பெயர்; உன் புத்தியிலிருந்து மறைந்துவிட்டதாகத் தோன்றுகின்றவற்றில் அதுவும் ஒன்று. நீ வார்த்தைகளைப் பெறப் போராடுகிறாய்; ஆனால் அந்த அமிழ்த்தி உனக்குக் கொடுப்பவை எல்லாம் நடுவாந்திரமாக, தொடர்பறுந்த வகைச் சுட்டுப் பெயர்களாகவே உள்ளன, அவற்றில் ஒன்று உனக்கு உள்ளுணர்வால் உடனே தெரிகிறது, தவறான சொல் என்று – அதை வெளிதேசத்தவரும், அன்னியரும்தான் இந்த மாதிரிச் சூழல்களில் பயன்படுத்துவார்கள். “அக்கா,” நீ அந்தச் சுட்டுப்பெயரை, இறுதியில், திரும்பச் சொல்கிறாய், ஏனெனில் உனக்கு வேறெதுவும் சொல்லத் தோன்றவில்லை.
”ஆக்னெஸ்!”
காலெனின் குரல், தூரத்திலிருந்து உன்னை அழைக்கிறது – ஒரு சுருக்கமான கண நேரம், உன் அமிழ்த்தி மறுபடி தவறுகிறது, ஏனெனில் உனக்குத் தெரியும் உனக்குப் பல பெயர்கள் உண்டு என்பது, ஆக்னெஸ் என்பது நட்சத்திர மண்டலத்தின் பள்ளியில் அவர்கள் உனக்குக் கொடுத்த பெயர், அதை காலெனோ அவரது நண்பர்களோ உச்சரிக்கச் சிரமப்படும் பெயர். உன் அம்மா தீர்க்காயுஷ் நிலையத்தில் உனக்குக் கொடுத்திருந்த ராங் மொழிப் பெயர் உனக்கு நினைவிருக்கிறது, அவர் உன்னை ஆசையாக அழைத்த விதமும், வளர்ந்தபின் உனக்கு இருந்த பெயரும்கூட நினைவிருக்கிறது. ந்யோ-பெ, பெ- யூ, தூ – இலையுதிர் காலம், நீ ஒருநாளும் இனி அறிய வாய்ப்பில்லாத ஒரு கிரகத்தின் சிவந்த மேபிள் இலைகளின் நினைவு.
நீ அந்த மேஜையிலிருந்து சிரமத்தோடு அகல்கிறாய், உன் கைகளில் இருக்கும் நடுக்கத்தை மறைத்தபடி.

ஒய் வந்து சேர்ந்தபோது, இரண்டாவது மாமா காத்துக் கொண்டிருந்தார்; வாடிக்கையாளர்களும்தான்.
“நீ நேரம் கழிச்சு வந்திருக்கே,” தனி அலைவரிசையில் மாமா செய்தி அனுப்பினார், அவர் அந்தக் குறிப்பை அரை மனதோடுதான் சொன்னதுபோல இருந்தது, அவர் ஏற்கெனவே இதை எதிர்பார்த்திருக்க வேண்டும். ஏதோ அவளை நம்பி இருப்பது உதவாது என்று அவர் நினைப்பதுபோல இருந்தது – அது அவளுக்குக் குத்தலாக இருந்தது.
“என் மருமகள் ஒய்- ஐ உங்களுக்கு அறிமுகம் செய்ய விரும்புகிறேன்,” இரண்டாம் மாமா நட்சத்திர மண்டல மொழியில், தன் அருகே இருந்த மனிதரிடம் சொன்னார்.
“ஒய்,” அந்த நபர் சொன்னார், அவருடைய அமிழ்த்தி அவளுடைய பெயரின் ஒலி நுட்பங்களைக் கச்சிதமாக அவருக்கு எடுத்துக் கொடுத்திருந்தது. அவள் எதிர்பார்த்த எல்லாம் அவரிடம் இருந்தன; அவதாரத்தின் மேலடுக்கு மெல்லியதாகப் படர்ந்து, ஏதோ ஒரு வகையில் அவருடைய தாடையையும், கண்களையும் குறுக்கி, மார்பைச் சற்றே விசாலமாக்கி இருந்தது, உயரமாக இருந்தார். ஒப்பனை மூலம் மேம்பட்ட தோற்றம்: நட்சத்திர மண்டல வாசியாக இருந்தாலும் எல்லாவற்றையும் சேர்த்துப் பார்த்தால், பார்வைக்குத் தேறினார். அவர் நட்சத்திர மொழியில் மேலும் சொன்னார், “என் பெயர் காலென் ஸாண்டோஷ். உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. இவர் என் மனைவி, ஆக்னெஸ்.”
ஆக்னெஸ். ஒய் திரும்பி அந்தப் பெண்ணை முதல் முறையாகப் பார்த்தாள் – சற்றுப் பின்வாங்கினாள், இங்கு யாருமே இல்லை: ஓர் அவதாரத்தின் தடித்த அடுக்கு, அத்தனை அடர்த்தியாக, சிக்கலாக இருந்தது, அதற்குப் பின்னே ஓர் உடல் மறைந்திருப்பதை அவளால் கற்பனைகூடச் செய்யமுடியவில்லை.
“உங்களைச் சந்தித்ததில் மகிழ்கிறேன்.” ஓர் உந்துதலில் ஒய் தலை குனிந்து வணங்கினாள், இளையவள் முதியவளுக்குச் செய்யும் வணக்கம், இரு கரங்களையும் சேர்த்துக் கூப்பி- ராங் பாணியில், நட்சத்திர மக்கள் பாணியில் இல்லை- ஒரு நடுக்கம் ஆக்னெஸின் உடலில் ஓடியதைப் பார்த்தாள், அது மிக நுட்பமாகக் கவனித்தால்தான் தெரிந்திருக்கும்; ஆனால் ஒய் கூர்மையாகக் கவனிப்பவள், எப்போதுமே அப்படித்தான் இருந்திருக்கிறாள். அவளுடைய அமிழ்த்தி அவளிடம் இரைச்சலிட்டது, இரு கரங்களையும், உள்ளங்கைகள் மேல் நோக்கித் திறந்து, நீட்டச் சொல்லியது, அது நட்சத்திர சமூகப் பாணி. அவள் அதைச் சட்டை செய்யவில்லை: அவள் இன்னும் தன் எண்ணங்களை அமிழ்த்தியின் கருத்துகளிலிருந்து பிரித்தறியக்கூடிய கட்டத்தில்தான் இருந்தாள்.
இரண்டாம் மாமா மறுபடி பேசினார் – அவருடைய அவதாரம் அவரைப் போலவே ஆனால் சற்று வெளுத்த நிறத்தில் இருந்தது. “நீங்கள் ஒரு விருந்துக்கான இடத்தைத் தேடுகிறீர்கள் என்று நான் கேள்விப்பட்டேன்.”
“ஆமாம், நாங்கள் தேடுகிறோம்,” காலென் ஒரு நாற்காலியை இழுத்து, அதில் வசதியாக அமர்ந்து கொண்டார். அவர்கள் எல்லாரும் பின்தொடர்ந்தார்கள், ஆனால் அந்த அளவு லாகவத்தோடோ, அதிகாரத்தோடோ இல்லை. ஆக்னெஸ் அமர்ந்தபோது, ஒய் அவள் சற்று துணுக்குற்றதைக் கவனித்தாள், ஏதோ அவள் விரும்பத்தகாத ஒன்றை நினைவுகூர்ந்தது போல இருந்தது. “நாங்கள் எங்களுடைய மணவாழ்வின் ஐந்தாம் ஆண்டு முடிந்ததைக் கொண்டாட விரும்புகிறோம், அதற்கு ஏற்ற ஒரு நிகழ்ச்சியால் அதைக் குறிக்கலாம் என்று இருவருமே நினைக்கிறோம்.”
இரண்டாம் மாமா தலையசைத்து ஏற்றார். “தெரிகிறது,” என்று தன் தாடையைச் சொறிந்தார், “உங்களுக்கு என் வாழ்த்துகள்.”
காலென் தலையசைத்து ஏற்றார். “நாங்கள் நினைத்தோம் –” அவர் நிறுத்தினார், தன் மனைவியை ஒரு தடவை பார்த்தார், ஒய்யால் அதை இன்னதென்று புரிந்துகொள்ள முடியவில்லை – அவளுடைய அமிழ்த்தி வெற்றாக இருந்தது, ஆனால் அதில் ஏதோ வினோதமான வகையில் தெரிந்ததாக இருந்தது, அது என்னவென்று அவளுக்குப் பெயர் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும். “அது ஏதாவது ராங் பாணியில் இருக்க வேண்டும்,” கடைசியில் அவர் சொல்லிவிட்டார், “நூறு பேருக்கு, மரபு வழிப் பதார்த்தங்களோடு, பெரிய விருந்தாக இருக்க வேண்டும்.”
ஒய்யால் இரண்டாம் மாமாவின் திருப்தியை கிட்டத்தட்ட உணர்ந்துவிட முடிந்தது. அத்தனை பெரிய விருந்து எக்கச்சக்கமான தயாரிப்பு வேலைகளைக் கொண்டிருக்கும், அவர்கள் கொடுக்கத் தயாரான விலை சரியாக இருந்தால், அது ரெஸ்டொராண்டை ஓரிரு வருடங்களாவது ஓட்டுவதற்குப் போதுமான வருமானம் கொடுக்கும். ஆனால் ஏதோ… – ஏதோ சரியாக இல்லை.
“நீங்க என்ன நினைக்கிறீங்க?” ஒய் கேட்டாள், காலெனிடம் இல்லை, அவருடைய மனைவியிடம். அந்த மனைவி – ஆக்னெஸ், அனேகமாக அவள் பிறந்தபோது அவளுக்கு அந்தப் பெயர் இருந்திருக்காது – தடிமனான அவதாரத்தை அணிந்திருந்தவள், பதிலேதும் சொல்வதாகவோ அல்லது பேசுவதாகவோகூடத் தெரியவில்லை. ஒய்யின் மனதில் ஒரு விபரீதமான சித்திரம் எழுந்தது.
ஆக்னெஸ் பதில் சொல்லவில்லை. எதிர்பார்த்தது போலவே.
இரண்டாம் மாமா இடை மறித்தார், அந்தக் கணத்தின் சங்கடத்தை நீவிச் சரிசெய்த மாதிரி கைகளைப் பெரிதாக விரித்தார். “என்ன எல்லாம் உண்டோ அத்தனையும், அப்படித்தானே?” இரண்டாம் மாமா சொன்னார். அவர் தன் உள்ளங்கைகளைத் தேய்த்துக் கொண்டார். அவர் அப்படி ஒரு வினோதமான சைகைசெய்து ஒய் முன்பின் பார்த்ததில்லை – அது திருப்தியைக் குறிக்கும் நட்சத்திரவாசிகளின் சைகை. “கசப்புப் பூசணி சூப், ட்ராகன் – ஃபீனிக்ஸ் தட்டுகள், பன்றி வதக்கல், மலையடி மரகதம்…” அவர் மரபு வழித் திருமணப் பதார்த்தங்களைப் பட்டியலிட்டார் – இந்த அயல்நாட்டார் எத்தனை தூரம் அவற்றை எல்லாம் எடுத்துக் கொள்வார்கள் என்பது பற்றிய சந்தேகத்துடன். மிகவும் வினோதமான சிலவற்றைச் சொல்லாமல் விட்டுவிட்டார் – சுறா மீன் துடுப்பு அல்லது சிவப்பு அவரைத் தித்திப்பு சூப் போன்றவற்றை.
“ஆமாம், அதெல்லாம்தான் நாங்கள் வேண்டுவது. இல்லையா, டார்லிங்?” காலெனின் மனைவி நகரவோ, பேசவோ இல்லை. காலென் தலையைத் திருப்பி அவளைப் பார்த்துக்கொண்டிருந்தார், ஒய் கடைசியில் அவரது முகபாவத்தைப் புரிந்துகொண்டாள். அது இகழ்ச்சியாகவோ வெறுப்பாகவோ இருக்குமென்று அவள் நினைத்தாள்; ஆனால் இல்லை; அது மன வெதும்பலைக் காட்டியது. அவர் அவளை உண்மையிலேயே விரும்பினார், அவளுக்கு என்ன நேர்கிறது என்று அவருக்குத் தெரியவில்லை.
நட்சத்திரக்காரங்களே இப்படித்தான். அமிழ்த்தியின் போதையில் சிக்கிய ஒருத்தியைப் பார்த்த உடனே அவருக்குத் தெரிய வேண்டாமா? ஆனால் நட்சத்திரவாசிகள், தாம் சொன்னதுபோல, பிரச்சினைகளைப் பார்க்காதவர்கள் – அவர்கள் அமிழ்த்திகளை தாழ்வான நிலையில் அதன் வைப்பு நிலைகளை நிறுத்திக்கொண்டு, ஒரு சில நாள்களுக்கு மேல் அணிவதில்லை, அதுவும் அத்தனை தூரம் அவர்கள் போனால்தான். பெரும்பாலானவர்கள் தம் நட்சத்திர மண்டல மொழி தங்களுக்கு எங்கும் செல்லுபடியாகும் என்று தீவிரமாக நம்பினார்கள்.
இரண்டாம் மாமாவும் காலெனும் விலைகளையும் உருப்படிகளையும் பற்றிப் பேரம் பேசிக்கொண்டிருந்தனர். இரண்டாம் மாமா அந்த உரையாடல் சிறிது நேரம் தொடர்ந்தபின், முன்னெப்போதையும்விட நட்சத்திரவாசிகளைப் போலவே ஒலிக்கத் தொடங்கியிருந்தார், மிகச் சிறு லாபத்துக்கு மேன்மேலும் பிடிவாதத்தோடு பேரம் பேசினார். ஒய் இனிமேல் அதையெல்லாம் பற்றி கவலைப்படவில்லை. அவள் ஆக்னெஸ்ஸைப் பார்த்தபடி இருந்தாள். துளைக்க முடியாதபடி அடர்ந்த அந்த அவதாரத்தைக் கண்காணித்தாள் – முதன்மை நாகரீகத்தின் தற்போதைய பாணியில், சிவப்பு முடி கொண்ட ஒரு பெண் உருவம் அது, தோலில் நிறம் மங்கிய புள்ளிகளுடன், முகத்தில் நட்சத்திர ஒளியால் கிட்டும் இலேசான பழுப்பு நிறத்துடன்கூடிய தோற்றம். ஆனால் உள்ளே இருக்கும் அவள் அதல்லள்; அதுதான் அந்த அமிழ்த்தி அவளுடைய மனதிலிருந்து அகழ்ந்தெடுத்த தோற்றம்.
அது சற்றும் அவள் போன்றதே அன்று. தாம் சொன்னது சரி; எல்லா அமிழ்த்திகளையும் அக்கக்காகப் பிரித்துவிட வேண்டும், அவை வெடித்துச் சிதறினால்தான் என்ன, அதை ஏன் பொருட்படுத்த வேண்டும்? ஏற்கெனவே அவை வேண்டிய அளவு சேதம் விளைவித்துவிட்டன.
ஒய் எழுந்து போய், தன்னுடைய அமிழ்த்தியைப் பிய்த்தெறிய விரும்பினாள், ஆனால் அவளால் முடியாது, அதுவும் ஒப்பந்தம் போடப் பேச்சுவார்த்தை நடக்கிறபோது செய்ய முடியாது. மாறாக, அவள் எழுந்தாள், ஆக்னெஸ்ஸுக்கு அருகில் சென்றாள், இரண்டு ஆண்களும் அவள் பக்கமே திரும்பவில்லை, விலைகளை ஒப்புக்கொள்வதில் முனைந்திருந்தார்கள். “நீங்க மட்டும்தான் தனின்னு இல்லை,” என்றாள் அவள், அதை ராங் மொழியில், கீழ் ஸ்தாயியில் அது எட்டக் கேட்காதபடி சொன்னாள்.
மறுபடி, அந்த விசித்திரமான, தொடர்பறுந்த மின்வெட்டு. “நீங்க அதைக் கழட்டிடணும்,” ஒய் சொன்னாள், ஆனால் அதற்கும் எந்தப் பதிலும் கிட்டவில்லை. ஏதோ ஓர் அவசரத் தூண்டுதலில், அவள் மற்ற பெண்ணின் கையைப் பற்றினாள்; தன் கைகள் அந்த அமிழ்த்தியின் அவதாரத்தைக் கடந்து உள்ளே போவதை உணர்ந்தாள், போய், உஷ்ணமான, தூலமான உடலோடு தொடர்பு கொண்டன.
“நீ என்ன நினைச்சு என்ன பண்றே, பொண்ணே?”
இரண்டாம் மாமா எழுந்து விட்டார், ஒய்யை நோக்கித் திரும்பி இருந்தார் – அவருடைய அவதாரம் கோபத்தால் சிவந்திருந்தது, அந்த வெள்ளைத் தோலில் புள்ளி புள்ளியாகப் பார்க்கச் சகிக்காத சிவப்புத் திட்டுகள். “வளர்ந்தவங்க நாங்க முக்கியமான பேச்சு வார்த்தை நடத்தறதுல பாதியில இருக்கோம். கொஞ்சம் சும்மா இருக்கியா?”
மற்ற நேரங்களில் இது ஒய்யை நடுங்கச் செய்திருக்கும், ஆனால் அவருடைய குரலும், உடல் மொழியும் முற்றிலும் நட்சத்திரவாசிகளுடையதுபோல இருந்தது; அவர் அவளுக்கு முற்றிலும் ஓர் அன்னியராகத் தெரிந்தார் – அவருடைய சாப்பாட்டுக்கான தேவையை அவள் தவறாகப் புரிந்துகொண்டதால் கோபம் கொண்ட அயல் தேசத்தவர் போல – அப்புறமாகத் தாமின் அறையில் மடியில் ஒரு கோப்பைத் தேநீரோடு அமர்ந்து கொண்டு, இந்த அன்னியரை அவள் கேலி செய்வாள், அவளுடைய சகோதரியின் வழக்கமான யோசனைகளின் பொழிவும் தொடரும்.
“என்னை மன்னிச்சுடுங்க,” என்று ஒய் சொன்னாள், ஆனால் அப்படிச் சொல்வது அவளுடைய நோக்கமாக இல்லை.
“அதனால பரவாயில்லை,” காலென் சொன்னார். “நான் இப்படிச் செய்யணும்னு நினைக்கல்ல ” – அவர் தயங்கினார், மனைவியைப் பார்த்தார். “அவளை இங்கே அழைத்து வந்திருக்கக் கூடாது.”
“நீங்கள் அவரை ஒரு மருத்துவரைப் பார்க்க அழைத்துப் போயிருக்க வேண்டும்,” ஒய் சொன்னாள், அவளுக்கே தன் துணிச்சல் ஆச்சரியமாக இருந்தது.
“நான் அதையெல்லாம் செய்ய முயற்சிக்கலன்னு நினைக்கிறீங்களா?” அவர் குரலில் கசப்பு தெரிந்தது. “முதன்மையில் இருக்கும் சிறந்த மருத்துவமனைகளுக்குக்கூட அழைத்துப் போயாச்சு. அவர்கள் அவளைப் பார்த்துவிட்டு அதைக் கழற்ற அவர்களால் முடியாது, அந்த அதிர்ச்சி அவளைக் கொன்றுவிடும் என்கிறார்கள். அது அப்படிக் கொல்லாவிட்டாலும்….,” அவர் தன் கைகளை விரிக்கிறார், அவற்றுக்கு இடையே உள்ள காற்று தூசிகள் விழுவதுபோல விழுகிறது. “அவள் திரும்பி வருவாளான்னு யாரால சொல்லமுடியும்?”
ஒய்யின் முகம் சிவந்தது. “நான் வருந்துகிறேன்.” இந்த முறை அவள் சொன்னது நிஜம்.
காலென் கையை ஆட்டிப் பரவாயில்லை என்பதுபோலச் சுட்டினாலும், அவர் இலேசாக எடுத்துக் கொண்டதன் பின்னே அவர் தன் வலியை மறைக்க முயல்வதை அவள் பார்க்க முடிந்தது. நட்சத்திர மண்டலக்காரர்கள் ஆண்கள் கண்ணீர் சிந்துவது தகாது என்று நினைப்பவர்கள், அவளுக்கு அது நினைவுவந்தது. “அப்ப, நாம ஒத்துப் போகிறோமா?” காலென் இரண்டாம் மாமாவைக் கேட்டார். “பத்து லட்சம் க்ரெடிட்கள்தானே?”
ஒய் அந்த விருந்தை நினைத்துப் பார்த்தாள்; மேஜைகளின்மீது உணவுப் பண்டங்கள், அவை ஆக்னெஸுக்குத் தன் பிறந்த வீட்டை நினைவூட்டும் என்று காலென் நினைப்பது பற்றி. கடைசியில் எப்படியும் இதெல்லாம் தோல்வியில்தான் முடியும், ஏனெனில் ஆக்னெஸ்ஸின் அமிழ்த்திதான் எல்லாவற்றையும் வடிகட்டி அவளுக்குக் கொடுக்கும். ஆக்னெஸ்ஸுக்குக் கிட்டுவது பழக்கமில்லாத சுவைகள்தான் என்றாகும். “நான் வருந்துகிறேன்,” என்றாள் அவள் மறுபடியும். ஆனால் யாரும் அவள் சொன்னதைக் கேட்கவில்லை; அவள் ஆக்னெஸ்ஸிடமிருந்து திரும்பும்போது அவளுடைய மனதில் ஆத்திரம் சீறிப் பொங்கியது – எல்லாம் எப்படி இறுதியில் ஒரு விளைவும் இல்லாமல் வீணாகும் என்ற எண்ணம் அவளுக்குள் வளர்ந்து வந்தது.

”நான் வருந்துகிறேன்,” அந்தப் பெண் சொல்கிறாள் – நின்றபடி இருக்கிறாள், உன் கையிலிருந்து தன் கையை எடுத்துவிடுகிறாள், நீ உன்னுள்ளே ஏதோ அறுபடுகிற மாதிரி உணர்கிறாய், ஏதோ உன் உடலிலிருந்து விடுபடத் துடித்து நகங்களால் கிழிக்கிற மாதிரி உணர்கிறாய். போகாதே என்று சொல்ல விரும்புகிறாய். தயவுசெய்து போகாதே, என்னை இங்கே விட்டுப் போகாதே.
ஆனால் அவர்கள் எல்லோரும் கை குலுக்கிக் கொண்டிருக்கிறார்கள்; சிரித்தபடி இருக்கிறவர்கள், தாம் ஓர் உடன்பாட்டுக்கு வந்தது பற்றி மகிழ்வு கொண்டிருக்கிறார்கள் – சுறா மீன்களைப்போல, என்று நீ நினைக்கிறாய், புலிகளைப்போல. அந்த ராங் பெண்கூட உன்னை விட்டுத் திரும்பிக் கொண்டுவிட்டாள்; நீ தேறாதவள் என்று கைவிட்டவள் போலத் தெரிந்தாள். அவளும் அவளுடைய மாமாவும் அங்கிருந்து நடந்து அகல்கிறார்கள், ரெஸ்டொராண்டின் உள்புறத்தில் வெவ்வேறு பகுதிகளை நோக்கி, தங்கள் வீடுகளை நோக்கி வெவ்வேறு பாதைகளில் பிரிகிறார்கள்.
தயவு செய்து போகாதே.
ஏதோ வேறு ஒன்று உன் உடலின்மீது கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்கிறார்போல உணர்கிறாய்; இப்படி ஒரு வலு உன்னிடம் உள்ளது என்பது உனக்கே தெரிந்திருக்கவில்லை. காலென் ரெஸ்டோராண்டின் மைய அறையை நோக்கி, அங்கு நிலவும் ஆரவாரத்துக்குள், நாவூற வைக்கும் சாப்பாட்டு வாசனைகளுக்குள் – எலுமிச்சம் புல்லும் கோழியும் நீராவியில் வேகவைத்த அரிசிச் சோற்றுடைய வாசனை, உன் அம்மா முன்பு செய்வாளே அதே போன்ற வாசனையை நோக்கி – போகையில், நீ உன் கணவரிடமிருந்து திரும்பி அப்புறம்போய், அந்தப் பெண்ணின் பின்னே போகிறாய். மெதுவாக, சிறிது தூரத்தில் பின்தொடர்கிறாய்; பின்னர் ஓடத் துவங்குகிறாய், வேறு யாரும் உன்னைத் தடுத்து நிறுத்தக்கூடாது என்பதற்காக. அவள் வேகமாக நடந்து போய்க்கொண்டிருக்கிராள் – அவள் தன் அமிழ்த்தியைத் தன் முகத்திலிருந்து உரித்து எடுப்பதையும் அதை ஒரு பக்கவாட்டு மேஜையில் வெறுப்போடு அடித்துப் போடுவதையும் பார்க்கிறாய். அவள் ஓர் அறையில் நுழைகிறாள்; நீ அவள் பின்னே உள்ளே போகிறாய்.
அங்கே இரண்டு இளம் பெண்களும் உன்னை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறார்கள், நீ பின்தொடர்ந்த ஒரு பெண்ணும், இன்னொருத்தி, அவளைவிட இளையவள் அவளும். இந்த இன்னொரு பெண் அவள் அமர்ந்திருந்த மேஜையிலிருந்து எழுந்து கொண்டிருக்கிறாள் – இருவரும் அடியோடு அன்னியப் பெண்களாகவும், அதே நேரம் மிகவும் பரிச்சயமானவர்களாகவும் தெரிகிறார்கள். அவர்களின் வாய்கள் திறந்திருக்கின்றன, ஆனால் ஒலியேதும் வெளிவரவில்லை.
அந்த ஒரு கணத்தில் – பரஸ்பரம் உற்று நோக்கிக்கொண்டிருக்கையில், ஸ்தம்பித்த காலத்தில் நிற்கிறீர்கள் – அந்த நட்சத்திர மண்டலக் கருவி மேஜைமீது அக்கக்காகக் கழற்றிப் போடப்பட்டிருப்பதை நீ பார்க்கிறாய். அங்கு கொட்டிக் கிடக்கும் பழுது பார்க்க உதவும் பல கருவிகளைப் பார்க்கிறாய்; கழற்றிப் போடப்பட்ட எந்திரங்களையும்; அமிழ்த்தி ஒன்றை, அவர்கள் முன்னே பாதிப் பிரித்த நிலையில் இருக்கிறது, அதன் இரு பாதிகள் உடைத்த முட்டையைப்போலத் திறந்திருக்கின்றன. அவர்கள் அதைப் பிரித்து, தலைகீழாக அதன் கட்டமைப்பைப் புரிந்துகொள்ளப் பார்க்கிறார்கள் என்பது உனக்குத் தெரிகிறது; அவர்கள் ஒருபோதும், என்றுமே அதில் வெல்ல மாட்டார்கள் என்பது உனக்குத் தெரியும். அதில் உள்ள பாதுகாப்புத் தடுப்புகளால் இல்லை, அல்லது நட்சத்திர மண்டலங்களின் அறிவுச் சொத்தைப் பாதுகாக்கும் சங்கேதங்களின் கட்டமைப்புடைய வலுவாலும் இல்லை; ஆனால் அதை எல்லாம்விட மிக அடிப்படையான ஒன்றால் அவர்கள் வெல்ல வாய்ப்பு இல்லை.
இது ஒரு நட்சத்திர மண்டலத்து கேளிக்கைப் பொருள், நட்சத்திர மண்டல அறிவால் யோசித்து அமைக்கப்பட்டிருக்கிறது- அதன் ஒவ்வொரு அடுக்கும், உள்ளே இருக்கும் ஒவ்வொரு தர்க்க இணைப்பும் ஒரு மனப்பாங்கை வெளிக்காட்டுகிறது, அது முழுதுமே இந்தப் பெண்களுக்கு அன்னியமானதாக இருக்கும். ஒரு மொத்தப் பண்பாட்டையும் எடுத்துக்கொண்டு அதைச் சில படிமுறைகளில் சுருக்கிவிட முடியும்; ஒரு மொழியும் அதன் பழக்க வழக்கங்களும் ஓர் அடுக்கு விதிகளுக்குள் அடக்கப்பட்டுவிட முடியும் என்று நம்ப நட்சத்திர மண்டலக்காரர்களால்தான் முடியும். இந்தப் பெண்களுக்கு விஷயங்கள் எல்லாம் அதையெல்லாம்விட மிகச் செடுக்கானவை, செறிவானவை; அவர்கள் அமிழ்த்தி எப்படி வேலை செய்கிறது என்று ஒருபோதும் புரிந்துகொள்ள மாட்டார்கள், ஏனெனில் அவர்கள் ஒரு நட்சத்திரவாசியைப்போலச் சிந்திக்க முடியாது, ஒருநாளும், என்றும் அப்படிச் சிந்திக்க முடியாது. அந்தப் பண்பாட்டில் நீ பிறந்து வளர்ந்தாலொழிய நட்சத்திரவாசிபோலச் சிந்திக்க முடியாது.
அல்லது நீ உன்னையே வருடக்கணக்கில் அந்தப் போதையில் ஆழ்த்திக்கொண்டு, சுயபுத்தியை இழந்தாலொழிய முடியாது.
நீ ஒரு கையை உயர்த்துகிறாய் – அதைத் தேனில் நகர்த்துவதுபோல உணர்கிறாய். நீ பேசுகிறாய் – அடுக்கடுக்காகப் படிந்த அமிழ்த்தியின் சிந்தனைகளூடே வார்த்தைகளை உருவாக்கச் சிரமப்பட்டுக்கொண்டு பேசுகிறாய்.
“எனக்கு இதைப் பற்றி எல்லாமே தெரியும்,” நீ சொல்கிறாய், உன் குரல் கொரகொரப்புடன் கம்மி வெளிவருகிறது, வார்த்தைகள் லேசர் கற்றை வீழ்வதுபோல ஒவ்வொன்றாக அவற்றின் இடங்களில் விழுகின்றன, அவை மிகச் சரியானவைபோல உணர்கிறாய், கடந்த ஐந்தாண்டுகளில் ஒருபோதும் எவற்றிலும் அப்படி நீ உணர்ந்ததில்லை. “உங்களுக்கு உதவ என்னை அனுமதியுங்கள், தங்கச்சிகளா.”

ஆலியட் டு பொடார்(ட்)

இந்தக் கதையின் இங்கிலிஷ் மூலத்தை இங்கே காணலாம்: https://aliettedebodard.com/short-stories/immersion/
இந்தக் கதை க்ளார்க்ஸ்வோர்ல்ட் மாகஸீனில், ஜூன் 2012 இதழில் பிரசுரமானது. மீள் பிரசுரமாக, த மாம்மத் புக் ஆஃப் எஸ்.எஃப் ஸ்டோரீஸ் பை விமன்’ என்ற தொகுப்புப் புத்தகத்தில் 2014 ஆம் ஆண்டு பிரசுரமாகியது. அதன் பதிப்பாசிரியர் அலெக்ஸ் டாலி மக்ஃபார்லேன் என்பவர். பிரசுரகர் : ராபின்ஸன் (நிறுவனம்)
இங்கிலிஷ் மூல ஆசிரியர்: ஆலியட் டு பொடார்(ட்) – ஃப்ரான்ஸ் நாட்டில் வசிக்கிறார். இந்தப் பெண் எழுத்தாளர், ஓர் அமைப்புப் பொறியாளர். (Systems Engineer.) ஓய்வு நேரத்தில் அதி புனைவுகளை எழுதுகிறார். ஆஸ்டெக் சமூகத்தை மையமாகக்கொண்டு அவரால் எழுதப்பட்ட மர்ம நாவல்கள் மூன்று – ஒப்ஸிடியன் அண்ட் ப்ளட் என்ற அந்த வரிசை நாவல்களை ஆங்ரி ரோபாட் என்ற பிரசுர நிறுவனம் பிரசுரித்துள்ளது. இவரது சிறுகதைகள் க்ளார்க்ஸ்வோர்ல்ட் மாகஸீன், பினீத் ஸீஸ்லெஸ் ஸ்கைஸ் மற்றும் கார்ட்னர் டோஸாயின் ‘இயர்ஸ் பெஸ்ட் சைன்ஸ் ஃபிக்ஷன்’ தொகுப்புப் புத்தகங்களிலும் பிரசுரமாகியுள்ளன. இவர் ஒரு லோகஸ் பரிசு, நெபுலா பரிசு, ப்ரிட்டிஷ் ஸைன்ஸ் ஃபிக்ஷன் அஸோசியேஷன் பரிசு ஆகியவற்றைப் பெற்றவர். இவருடைய ப்ளாகின் முகவரி மேலே கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் வியத்நாமிய சமையல் குறிப்புகளைப் பகிர்கிறார். இவர் வியத்நாமிய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதை நாம் குறிப்பால் உணரலாம்.
தமிழாக்கம்: மைத்ரேயன்
