
Any sufficiently advanced technology is indistinguishable from magic.
– Arthur C. Clarke
தீபாவளி சமயத்தில் ஒவ்வொரு வருடமும் அந்தக்காலத்தில் இந்தப் பண்டிகையை எப்படிக் கொண்டாடுவோம் என்று விவரித்து ஒரு சிறுகதையோ கட்டுரையோ வந்து சேரும். அந்தக்காலம் என்று கருதப்படுவது ஒரு நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முந்தைய சமயமாக இருக்கும். போனவருடம் நான் பார்த்த ஒரு பதிவின் ஒரு பகுதி ஏறக்குறைய இப்படி விரிந்தது:
ஏதோ த்ரேதா யுக சரித்திரம் சொல்லப் போகிறேன் என்று நினைக்க வேண்டாம். இதோ, ஒரு நாற்பது வருடங்களுக்கு முந்தின கொண்டாட்டம் பற்றித்தான் இந்தப் பதிவு. அளவான குடும்பங்களுக்கே நாலு குழந்தைகள் இருக்கும். தாத்தா, பாட்டி, சித்தப்பா, அத்தை, பெரிய பாட்டி என்று பெரிய குடும்ப வட்டம். அப்பா மட்டுமே சர்க்கார் வேலை பார்ப்பவர். அம்மா சென்னயில் வளர்ந்திருந்தாலும், கல்யாணம் ஆன பிறகு கிராமம், நகரம் இல்லாத ரெண்டுங்கெட்டான் டவுன் (தாராபுரம்) வாழ்க்கைக்கு தானும் பழகிக்கொண்டு, எங்களையும் அதற்கு ஏற்ற மாதிரி வளர்த்தவர்.
செம்பு பாய்லர்தான் வெந்நீர் போட பயன்படும் அடுப்பு. மொத்தம் பத்துப்பதினைந்து பேர் குளித்து, இட்லி, சட்னி டிபன் சாப்பிட இட்லி மாவு, சட்னி, வெந்நீர் இதெல்லாம் ரெடி செய்வது அக்காவின் பொறுப்பு. முழங்கால் தொடும் தலைமுடி என் சகோதரிகளுக்கு. நிறைய வாசனை சாமான்கள் சேர்த்து அரைத்த சீக்காய் பொடி (மெஷினில் கொடுத்து அரைக்கும் வேலை என்னுடையது) கரைத்து, எண்ணெய் தலையில் தேய்த்து குளித்து வருவதற்குள், ரெண்டு தம்பிகளும் முதலில் குளித்து, பட்டாசும் வெடித்து விடுவார்கள் (ஆண் பிள்ளைகளுக்கு நிறைய சலுகைகள்). அடுத்தது, தடபுடல் சமையல். சாம்பார், ரெண்டு கறி, பாதாம்கீர், வடை, மோர்க்குழம்பு, அப்பளம். மத்தியானம் சாப்பாட்டுக் கடை ஓயும். பிறகு காபி, முறுக்கு, மிக்சர் என்று நொறுக்குத் தீனி. சாயங்காலம் மீதி பட்டாசு வெடிப்பது, கோவிலுக்குப் போவது இதெல்லாம் இருக்கும்.
ஒரு நடுத்தர குடும்பத்தின் தீபாவளியில் பெரிய ஆடம்பரம், அமர்க்களம் எல்லாம் இருந்ததில்லை. ஆனால், ஆனந்தமும், திருப்தியும், அன்பும் நிறைந்து இருந்தது. எந்த வேலையும் கடினம் இல்லை. பக்கத்து வீட்டோடு ஒப்பீடு இல்லை. கூடி, குலாவி மகிழ்ந்த அந்தக் காலம் இனி வருமா!

இது போன்ற பதிவுகளும், பழைய ஆனந்தவிகடன் ஜோக்குகளும் வளைய வந்து கொண்டிருக்க, அதே சமயத்தில் செயற்கை நுண்ணறிவு, சிங்குலாரிட்டி பற்றி நான் படித்துக்கொண்டிருந்த டிம் அர்பனின் கட்டுரை வேறு ஏதோ பேசிக்கொண்டிருந்தது. அதன் விளக்கத்தின்படி மனித மூளைக்கு exponential rise என்ற வளர்ச்சியை சரியாக புரிந்து கொள்ளும் சக்தியோ பழக்கமோ கிடையாது. Linear Rise என்ற சாதாரண வளர்ச்சிதான் தொன்றுதொட்டு நமக்கு பழகிய தெரிந்த விஷயம். எனவே, இன்னும் நாற்பது வருடங்கள் சென்றபின் நமது வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கேட்டால், நாம் உடனே நாற்பது வருடங்களுக்கு முன் நம் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை மேலே பார்த்த பதிவைப் போல் யோசித்து, அப்போதிலிருந்து இப்பொழுதுவரை என்னென்ன முன்னேற்றங்கள் வந்துள்ளனவோ அதே போல் இன்னொரு மடங்கு முன்னேற்றங்கள் வந்தால் நம் வாழ்வு எப்படி இருக்கும் என்று ஊகித்து, அப்படித்தான் நம் வாழ்க்கை இன்னும் நாற்பது வருடங்களில் இருக்கும் என்று சொல்லி விடுவோம். ஆனால் உண்மையில் மாற்றங்கள் அதைவிட பல மடங்கு அதிகமாக இருக்கும் சாத்தியக்கூறுகள் மிகவும் அதிகம். ஏன் என்ற கேள்விக்கு இப்படி பதில் சொல்லலாம்.
தலைகீழாக நின்று தண்ணீர் குடித்து எப்படியோ நாம் ஒரு காலயந்திரத்தை உருவாக்கி விட்டோம் என்று வைத்துக்கொள்வோம். அந்த இயந்திரத்தை உபயோகித்து இருநூற்றைம்பது வருடங்களுக்கு மேல் பின்னால் போய், 1750 வாக்கில் உலகம் எப்படி இருக்கிறது என்று பார்க்கிறோம். அந்தக்காலத்து டெக்னாலஜி எல்லாம் ரொம்பவே ஜுஜுபியாக இருப்பதால், நாம் அந்தக்கால மனிதர்கள் மேல் பரிதாபப்பட்டு, ஒரே ஒரு 1750 விஞ்ஞானிக்கு மட்டும் டிக்கெட் கொடுத்து காலயந்திரத்தில் ஏற்றி 2020க்கு கூட்டிக்கொண்டு வந்து விடுகிறோம். உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் வரும் விஞ்ஞானி முருகன் போல, 1750ல் அவர்தான் மிகப்பெரிய சயின்டிஸ்ட். பெயர் குமரன். தமிழ் சினிமா வழக்கப்படி குறுந்தாடி எல்லாம் கூட வைத்திருக்கிக்கிறார் என்பதால், அவர் பெரிய விஞ்ஞானிதான் என்பதில் ஏதும் சந்தேகமில்லை. அவரை அப்படி நாம் அழைத்து வந்ததற்கு காரணம், நம் காலத்து டெக்னாலஜி எல்லாவற்றையும் அவருக்கு காட்டி பெருமை அடித்துக்கொள்ளவோ அல்லது இந்த எக்ஸ்போஷர் மூலமாக சில விஷயங்களை குமரனுக்கு காட்டி, கற்றுக்கொடுத்து, அப்புறம் அவர் காலத்திற்கே அவரைத் திரும்ப அனுப்பி, அந்தக்கால மக்களுக்கு கொஞ்சம் உதவி செய்யும் நல்லெண்ணத்தினாலோ, என்று எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்.
மின்சாரம் என்றால் என்னவென்றே தெரியாத விஞ்ஞானி குமரனுக்கு, குதிரைகளுக்கு பதில், பளபளக்கும் உலோக பெட்டிகளில் அமர்ந்து கொண்டு மக்கள் சகஜமாக இங்கும் அங்கும் பயணிப்பதும், தேவைப் படும்போது இன்னொரு பெரிய நீண்ட உலோக குழாயில் ஏறி உட்கார்ந்துகொண்டு பறவைகள் போல் வானிலே பறப்பதும், எல்லோரும் கையில் உள்ள ஒரு சிறு பெட்டி மூலம் உலகின் அந்தப்பக்கதில் இருப்பவர்களை நினைத்தபோது அழைத்து பார்த்து பேசிக்கொள்வதும், 1000 கி.மீ. தொலைவில் நடக்கும் கிரிக்கெட் மாட்ச்சையோ, கச்சேரியையோ உடனுக்குடன் தொலைகாட்சி வழியே பார்க்கமுடிவதும், மந்திரக்கோல் போல் ரிமோட் கண்ட்ரோலை வைத்துக்கொண்டு குழந்தைகள் கூட சேனல்களை மாற்றுவதும், காலம் சென்ற SPB 40 வருடங்களுக்கு முன் பாடிய பாடல்களை நினைத்தபொழுது கேட்க முடிவதும், ஸ்மார்ட்போனில் போட்டோ எடுத்து வேண்டியவர்களுக்கு அனுப்ப முடிவதும் சாதாரண பிரமிப்பூட்டும் மாற்றங்களாக இருக்காது. அவர் பைத்தியம் பிடித்து தலையைப் பிய்த்துக்கொள்ளும் அளவுக்கு அதிர்ச்சி தரும் மாறுதல்களாக இருக்கும். இதென்ன மந்திரமா, மாயமா, பில்லி சூனியமா? அதெல்லாம் கடந்து பகுத்தறிவுக் கருத்துக்களை நோக்கி போய்க் கொண்டிருக்கிறோம் என்று நினைத்த சமயத்தில், இதென்னடா குழப்பம் என்று அவர் கவலைப் படக்கூடும். குமரனுக்கு இன்னும் MRI மெஷின், இன்டர்நெட், இண்டெர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷன் மாதிரி விஷயங்களைக் காட்டினீர்களானால் அவர் கடும் அதிர்ச்சியில் மாரடைப்பினால் இறந்துவிடக்கூடும்.
ஆனால் இதையெல்லாம் விட இன்னும் சுவாரஸ்யமான நிகழ்வும் புரிதலும் வேறெங்கோ இருக்கின்றன. நமது உலகையும் விஞ்ஞான முன்னேற்றங்களையும் அவருக்கு காட்டிமுடித்தபின், பத்திரமாக உங்கள் காலத்துக்கு போய்ச்சேருங்கள் என்று அதே காலயந்திரத்தில் குமரனை அமர்த்தி, தாம்பூலப் பையைக் கொடுத்து, பை பை சொல்லி அனுப்பிவிடுகிறோம். இயந்திரத்தோடு அவர் காலத்துக்குப் போய் சேர்ந்த விஞ்ஞானி குமரன், அதென்ன 21ஆம் நூற்றாண்டுக் காரர்கள் மட்டும்தான் இப்படி பீற்றிக்கொள்ள வேண்டுமா? நானும் அதையே செய்யப்போகிறேன் என்று சொல்லிவிட்டு அதே கால யந்திரத்தை வைத்துக்கொண்டு இன்னொரு 250 வருடங்கள் பின்னோக்கி கி.பி. 1500க்கு போகிறார். அங்கிருந்த ஒரு பெரிய விஞ்ஞானி ரமணனை 1750க்கு கூட்டிவந்து அவரை பிரமிக்க வைப்பதுதான் அவருடைய பிளான்.

ஆனால் அந்தோ பரிதாபம். 1500இல் இருந்து 1750க்கு கொண்டுவரப்பட்ட விஞ்ஞானி ரமணன் நிச்சயம் சில பல புதிய முன்னேற்றங்களைப் பார்த்து ஆச்சரியப்படுவார். உலக வரைபடம் நிறைய மாறி இருக்கும், ஐரோப்பா உருண்டையான பூமியின் பல பகுதிகளில் அடித்து உதைத்து கோலோச்சிக் கொண்டிருப்பதை அவர் கொஞ்சம் பயம் கலந்த ஆச்சரியத்துடன் தெரிந்து கொள்வார். மற்றபடி தினப்படி வாழ்க்கை ஏறக்குறைய அவர் காலத்தை ஒத்திருப்பதால் ரமணனுக்கு மாரடைப்பு வருமளவுக்கு பெரிய மாற்றங்கள் ஏதும் கண்ணில் படாது. எனவே குமரனுக்கு 2020இல் கிடைத்த அளவுக்கு அதிர்ச்சியளிக்கும் மாற்றங்களை அவர் 1750இல் ரமணனைப் போன்ற ஒருவருக்குக் காட்ட விரும்பினால், குமரன் சுமார் 14,000 ஆண்டுகள் பின்னால் போய் அங்கிருந்து யாரையாவது கொண்டு வந்தால்தான் உண்டு. கி.மு. 12,000 வாக்கிலிருந்து வந்து சேரும் ஒருவர் பேசும்/எழுதும் மொழிகள் எதுவும் அறிந்திராத, கிடைப்பதை பொறுக்கி சாப்பிட்டு வாழும் சமயத்தவராக இருப்பார். அவருக்கு வேண்டுமானால் 1750 காலத்து பெரிய தேவாலயங்களும், கடலில் போகும் கப்பல்களும், எழுதிப்படித்து கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்ளும் மனிதர்களும் பைத்தியம் பிடிக்க வைக்கும், மாரடைப்பு தரும் மாற்றங்களாக தோன்றலாம். நூறு இருநூறு வருடங்கள்தான் பயணிக்க வேண்டியிருக்கும் என்று நினைத்தேன். 14,000 வருடங்களா? என்று அசந்து போய் காலயந்திரம் பாதி வழியில் நின்று போகாமல் இருந்தால் சரி. அந்த 14,000 வருடங்களுக்கு முந்தைய ரமணன், தன் காலத்துக்கு திரும்பப் போனபின் இதே போல் யாரையாவது பிரமிக்க வைக்க முயலும்போது, இன்னும் 14,000 வருடங்கள் பின்னால் போய் கி.மு. 26,000 வருடத்திலிருந்து யாரையாவது கூட்டி வந்தால் போதாது. அவர் சுமார் ஒரு லட்சம் வருடங்கள் பின்னால் போய் யாரையாவது கொண்டுவந்தால்தான் கொஞ்சமாவது பீற்றிக்கொள்ள முடியும்!
இந்த விதத்தில் காலம் செல்லச்செல்ல சமுதாயத்தின் முன்னேற்றங்கள் அதிக வேகம் பெறுவதை பிரபல எதிர்காலவாதி (Futurist) ரே கர்ஸ்வைல் (Ray Kurzweil) போன்றவர்கள் மனித வரலாற்றின் விளைவுகளை விரையவைக்கும் விதி (Law of Accelerating Returns) என்று சொல்கிறார்கள். இந்த acceleration நம் காலத்திலும் தொடர்வதால், இன்னும் 40 ஆண்டுகளுக்குப் பின் அது நம்மை எங்கே கொண்டு நிறுத்தியிருக்கும்? யோசித்தால் இன்னும் 40 ஆண்டுகளில் தமிழ் கூறும் நல்லுலகில் இதைப் போன்ற ஒரு பதிவு சுற்றிவந்தால் ஆச்சரியப் படுவதற்கில்லை.

அந்தக் காலத்து தீபாவளி – 2060ல் இருந்து!
இது ஏதோ இருபதாம் நூற்றாண்டு தீபாவளியைப் பற்றி என்று நினைக்க வேண்டாம். சும்மா ஒரு 40 வருடங்களுக்கு முன்னால் 2020 வாக்கில் நாம் கொண்டாடிய தீபாவளி பற்றிதான் இந்தப் பதிவு!
அப்போதெல்லாம் எல்லா வீட்டிலும் ஓரிரண்டு குழந்தைகள் இருக்கும். அதைத்தான் சரியான சைஸ் குடும்பங்கள் என்று நினைத்திருந்தோம். இப்போது மாதிரி Child-free குடும்பங்களை அப்போதெல்லாம் childless என்று குறையாகச் சொல்லி கேலி செய்வார்கள். அதனால் தீபாவளி குழந்தைகளுக்கு மகிழ்வூட்டும் கொண்டாட்டம் என்றுதான் பொதுவாக கருதி வந்தோம்.
2040களில் அணுஇணைவு (Nuclear Fusion) மூலம் ஆற்றல் பெறுவதும், க்வாண்டம் கம்பியுடிங் இரண்டும் வந்ததில் உலகம் தலை கீழாக மாறிவிட்டது. எல்லோருக்கும் எப்போதும் எவ்வளவு வேண்டுமானாலும் இலவசமாக power என்று இப்போது வந்து விட்டதாலும், க்வாண்டம் கம்பியுடிங் வாயிலாக எதை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் உடனே செய்து கொள்ள முடிவதாலும், எல்லார் வீட்டிலும் இப்போது universal oven வைத்துக்கொண்டு நினைத்த சாப்பாட்டை நினைத்த மறு நிமிடம் செய்து வாங்கி சாப்பிடுகிறோமே, அதெல்லாம் அப்போது கிடையாது. எனவே வீட்டில் இருக்கும் பெண்கள் நாட்கணக்கில் பிளான் செய்து, பருப்பு, அரிசி என்று தண்ணீரில் ஊற வைத்து அரைத்து சிற்றுண்டிகளும், சாப்பாடும் தயார் செய்வார்கள். இப்போது மாதிரி rejuvenation சேம்பருக்குள் நுழைந்து ஒரு செகண்டில் வெளியே வந்தவுடன் தேவையான செல்களை புதுப்பித்துக் கொள்வது கூட கடந்த பதினைந்து வருடங்களில் வந்திருக்கும் உயிரியல் தொழில் நுட்பம். அதற்கு பதில், ஒவ்வொரு வீட்டிலும், Geiser என்று ஒன்று வைத்துக்கொண்டு அதில் வெந்நீர் போட்டுக் குளிப்போம். இந்தக் குளியலுக்கு தீபாவளி கொண்டாட்டத்தில் ஒரு முக்கியத்துவம் கொடுக்கப்படும். ஒருவருக்கொருவர் “கங்கா ஸ்நானம் ஆச்சா?” என்று கேட்டு வாழ்த்திகொள்வார்கள்.
இப்போது எல்லார் வீட்டிலும் தொலைதொடர்புத் தள அறை (Communication Deck Room) இருப்பது சாதாரணமாகி விட்டதால், வேண்டும்போது வேண்டியவர்களை பிரமிக்க வைக்கும் VR டெக்னாலஜி வழியே பார்த்துக்கொள்ள முடிகிறது. அதே போல் எல்லாரிடமும் 4D transporters இருப்பதால், பூமியில் இருக்கும் வெவ்வேறு இடங்களுக்கு போவது எல்லாம் ரொம்ப சாதாரணமாகி பயணம் செய்வதில் நமக்கு ஆர்வம் குறைந்து விட்டது. அப்போதெல்லாம் அதிகப்பட்சம் Whatsapp என்று போனில் வேலைசெய்யும் ஒரு செயலி இருக்கும். அதன்வழியே எல்லோரும் ஒருவருக்கொருவர் தீபாவளி வாழ்த்து சொல்லிக் கொள்வார்கள். அதன் மூன்று அங்குல குட்டித் திரை வழியே ஒருவரை ஒருவர் பார்த்து பேசிக் கொள்ளவும் முடிந்ததில் எங்களுக்கு வாழ்க்கையில் வெகு தூரம் வந்து விட்டதாய் தோன்றும்.

இப்போதைய நியுராலிங்க் வழியாக தேவையான பாஷைகளையோ, விஷயங்களையோ ஓரிரு செகண்டில் மூளையில் ஏற்றிக் கொள்கிறோமே அதெல்லாம் அப்போது கிடையாது. எல்லோருக்கும் ஓரிரு பாஷைகள்தான் தெரியும். புதிய மொழியை கற்றுக்கொள்ள பல வருடங்கள் கூட ஆகும் என்பதால், மூன்று, நான்கு மொழி தெரிந்தவர்கள், வேறு நாடுகளுக்கு சென்று வந்தவர்கள் எல்லாம் திறமைசாலிகள் என்று கருதுவதுண்டு! அப்படி அடுத்தவர்கள் மொழி, இடம், மதம் எதுவும் நமக்கு புரியாததால், என் மொழி, மதம், நாடுதான் பெரியது என்று எக்கச்சக்க சண்டைகள் உலகெங்கும் நடக்கும். ஆனால் அந்த புரியாத நிலைமையினால், ஒவ்வொரு பகுதிக்கும் பண்டிகைகள், அவற்றை கொண்டாடும் முறைகள், அதற்காக நாங்கள் செய்து சாப்பிட்ட உணவு வகைகள் எல்லாம் ரொம்பவே மாறுபடும். எல்லாவற்றையும் simulation டெக்கில் பார்த்துக்கொள்ளலாம் என்று அசாத்தியமாக இருந்து விட முடியாது. ஒவ்வொரு பண்டிகைக்கும் ஏகப்பட்ட உழைப்பை கொட்டி நிஜ பௌதீக உலகில் நிகழ்சிகளை நடத்தி மகிழ்வதுதான் வழக்கமாக இருந்தது. செய்ய வேண்டிய வேலைகள் மன நிறைவைத் தந்தன. அதே நியுராலிங்க்கை உபயோகித்து நமது மூளை மற்றும் எண்ணங்களை டவுண்லோட் செய்து பேக்அப் செய்து கொள்ளும் வசதியெல்லாம் அப்போது கிடையாது. எனவே வயதானவர்களுக்கு நிறைய விஷயங்கள் மறந்து போய்விடும். இது பல சமயங்களில் இடைஞ்சலாக இருந்தாலும், தீபாவளி போன்ற சமயங்களில் பழைய பகைகளை மறந்து உறவுகளை புதுப்பித்துக்கொள்ள அந்த மறதி உதவியது. இப்போது பேக்அப்பில் இருந்து சற்றும் கலையாத நினைவுகளை திரும்பப் பெற முடிவதால், தேவை இல்லாத பல விஷயங்களை முடிவில்லாமல் சுமந்துகொண்டு சிரமப்படுகிறோம். தேவை இல்லாத நினைவுகளை பேக்அப்பிலிருந்து அழித்துவிட டெக்னாலஜி இருந்தும், யாரும் அதை அதிகம் பயன் படுத்தாமல், பழைய பகைகளை விடாமல் அசை போட்டுக் கொண்டிருப்பது வருத்தம் கலந்த ஆச்சரியம் தரும் ஒரு இன்றைய நிலைமை. இருபதாம் நூற்றாண்டிலேயே ஒரு கவிஞர் “இரண்டு மனம் வேண்டும், இறைவனிடம் கேட்டேன். நினைத்து வாட ஒன்று, மறந்து வாழ ஒன்று” என்று எழுதிய பாட்டு இன்றைக்கும் பொருந்துவது விந்தைதான்!
2020 வாக்கிலேயே கையடக்க திறன்பேசிகளில் தங்களுக்குப் பிடித்த ஆயிரக்கணக்கான பாடல்களை எல்லோரும் தூக்கிக்கொண்டு அலைவது சகஜமாகிவிட்டது. ஆனால் அதற்கு இன்னும் 20, 30 வருடங்களுக்கு முன்னாலெல்லாம் பாடல்களைக் கேட்க சென்னை வானொலி நிலையத்திலிருந்து வாரம்தோறும் ஞாயிறு மாலை நான்கு மணிக்கு வரும் ஒலிபரப்புக்காக ரசிகர்கள் காத்திருப்பார்கள். இப்போதெல்லாம் எந்தப் பாட்டையும் எப்போது வேண்டுமானாலும் நியுராலிங்க் வழியாக கேட்க, இல்லை உணர்ந்து கொள்ள முடியும் என்றாலும், எப்போது வேண்டுமானாலும் கிடைக்கிறது என்பதினாலேயே, அனுபவங்களின் மவுசு குறைந்து, அந்தக் காலம் போல் விழுந்து விழுந்து பாட்டுக் கேட்கும் பழக்கங்கள் அழிந்தொழிந்து விட்டன. காத்துக் கிடப்பதில் இன்பம் உண்டு; காக்க வைப்பதில் சுகம் உண்டு என்றெல்லாம் கவிதை வரிகள் உலவி வந்தன. அதற்கெல்லாம் இப்போது எப்படி விளக்கம் சொல்வது? வேண்டுமானால் ஸிமுலேஷன் டெக் பக்கம் போய் 2019வாக்கில் மக்கள் 40 வருடங்களுக்கு ஒருமுறை வெளிவரும் அத்திவரதரை தரிசிக்க மணிக்கணைக்கில் க்யூவில் நின்ற நாட்களை அனுபவித்து விட்டு வரலாம். போன வருடம் அதே அத்திவரதர் தரிசனம் எப்படி நடந்தது என்பதுதான் உங்களுக்கே தெரியுமே!
இதையெல்லாம் சொன்னால் என் பேரக் குழந்தைகள் தலையை சொரிந்து கொண்டு முழிக்கிறார்கள். உலகில் வறுமை எல்லாம் காணாமல் போய், எல்லோரும் வசதியாக வாழ்ந்தாலும், நாங்கள் அந்தக் காலத்தில் வளர்ந்தவர்கள் என்பதால், 2020 தீபாவளி கொண்டாட்டத்தை 40 வருஷம் கழித்து இப்போது நினைத்துப் பார்த்தால், அந்த எளிமையான நாட்களின் நினைவு சுகமாய்த்தான் இருக்கிறது!
-சுந்தர் வேதாந்தம்.
நவம்பர் 14, 2060.
வெகு சிறப்பாக உள்ளது. சுந்தர் வேதாந்தம் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி சமுதாயத்தை எல்லோருக்கும் சமமாக இல்லா விட்டாலும் ஓரளவாவது கிடைக்கிறதா என்று பல சொற்பொழிவுகள் செய்திருக்கிறார். Ohio State University Future of Technology பட்டறை ஒன்றில் அவரைப் பார்த்திருக்கிறேன். வளர்ச்சியால் பாதிக்கப்படுபவர்கள் பற்றி கவிஞர்களும் கம்யூனிஸ்டுகளும் மட்டும்தான் கவலை படுவார்கள் என்றில்லாமல் விஞ்ஞானிகளுக்கும் அந்த கவலை உண்டு என்பதற்கு இவரே சான்று, (நினைத்து வாட ஒன்று மறந்து வாழ ஒன்று என்று கேட்டதாக ஞாபகம். என்ன செய்ய மறந்து விட்டது )
அன்புள்ள ரவி,
Good catch. 2060ல் 75 வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்ட பாடலை நியுராலிங்க் வழியாக டவுண்லோட் செய்தபோது ஏதோ தகராறு என்று நினைக்கிறேன். இருபதாம் நூற்றாண்டைப் போல் கட்டுரை காகிதத்தில் பிரசுரிக்கப் படாமல், 2020ல் சொல்வனம் இணைய தளத்தில் வந்துள்ளதால், உடனே பிழையைத் திருத்த முடிந்தது! தப்பித்தேன்.
-சுந்தர்.
உண்மையான பதிவு .அருமை.முதலில் சுஜாதா அவர்கள் எழுதுவதைப் போல் ஏனப் பிறரும் எழுத ஆரம்பித்து விட்டதால், அதே போல இருக்குமோ என்ற ஐயத்துடன் படிக்க ஆரம்பித்தேன். 2060 -இதிலுள்ள டெக்னாலஜி இப்பொழுது பின்னோக்கி அல்ல முன்னோக்கி சென்று பார்க்க தூண்டியது….
மிக அருமை
எல்லா தரப்பு வாசகர்களும் புரிந்து, ரசிக்கும் படியான அருமையான கட்டுரை.
கசப்பான நினைவுகளை டெலீட் செய்யும் வசதிவந்தபின்னும் அதை உபயோகிக்காமல் மக்களை பற்றிய வரிகளை மிகவும் ரசித்தேன்!
Super.
நடிகரில் ஒரு பாத்திரப் படைப்பு நன்றாக வந்தால் அதில் சிவாஜி சாயல் கொஞ்சம் தெரிகிறது எனச் சொல்லாமலிருக்க முடியாது. அதே போல் விஞ்ஞானச் சிந்தனை என்றால் ராஜிக்கு நினைவில் வருவது போல் சுஜாதாவை நினைப்பது இயல்பு. காலச் சக்கரத்தை முன்னோக்கி, பின்னோக்கி வைத்துப் பார்த்து ஓரிரு வருடங்களுக்கு முன்னால் திரைப்படம் வந்தது.
2060ல் 2020 தீபாவளியை நினைத்துப் பார்த்தது அருமை.
புதிய அனுபவம்.
அருமையான நடை. என் போன்ற அறிவியல் தற்குறிகளும் ஒரே மூச்சில் படிக்கமுடிந்த அறிவியல் நகைச்சுவைக் கட்டுரை.
“The greatest shortcoming of the human race is our inability to understand the exponential function.”
இதைச் சொன்னவர் ஏ ஏ பார்ட்லெட். The Essential Exponential! For the Future of Our Planet.
எக்ஸ்போனென்ஷியல் இறங்குமுகமாகவும் நிகழலாம். அதற்கு என் 2084 (1984 + 100) கதையைப் படித்தப்பாருங்கள்! (சொல்வனம் இதழ் 210).
அருமையான பதிவு. காலச்சக்கரம் குறித்த நகைச்சுவை ரசிக்கும்படி இருந்து.