அடைக்கும் தாழ்

அந்தப் பூங்காவில் ப்ரியாவுடன் நான் தனியாக நடந்தேன். சரவணன் போனில் பேசியவாறே சற்றுப் பின்னால் வந்தான். சற்று நேரத்தில் அவனை ஆளைக் காணோம். 

ஒரு திருப்பத்தில் சிறு குளம். சுற்றிச் சில பெஞ்சுகள். அவற்றில் ஒன்றில் ஒரு பெரியவர் மட்டும் தனியாக அமர்ந்திருந்தார். 

சற்றுப் பக்கத்தில் போனபோது அது ராமநாதன் தாத்தா என்று தெரிந்தது.

அவர்தானா? ஆறு வருடங்களுக்கு முன்னால் தாம்பரத்தில் வீடு காலி செய்யும்போது  பார்த்தது. நாங்கள் சொல்லிக் கொள்ளாமல் அதிகாலையில் கிளம்புகையில், ஜன்னலில் அவர் முகம் தெரிந்தது. 

அவர் இன்னும் எங்களைப் பார்க்கவில்லை. குளத்து மீன்களுக்கு பொரி போட்டுக்கொண்டிருந்தார். 

                                                            *

ப்ரியாவுக்கு அப்போது இரண்டரை  வயதிருக்கும். பேசத் தொடங்கவில்லை. அம்மா, அப்பா என்று மட்டும் சொல்வாள். மற்றபடி சொற்கள் எதுவும் சொல்வதில்லை. 

சரவணனுக்கு அதைக் குறித்துக் கவலை இருந்தது. தாம்பரத்தில் வீடு பார்க்கும்போது மாலை நேரமாகப் போவோம். பிளாட்களில் குழந்தைகள் இருக்கிறதா என்று பார்க்கச் சரியான நேரம் அது. அழுது வடிந்துகொண்டிருந்தால் அப்படியே திரும்பி வந்துவிடுவோம்.

வைகையில் இருபது வீடுகள் இருந்தன. எல்லோரும் ஒரே நேரத்தில் குழந்தை பெற்றார்களோ என்னவோ தெரியவில்லை – தெருவில் நுழையும்போது ஒரே இரைச்சல். நண்டும் சிண்டுமாக ஏகப்பட்ட பேர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள். எங்களுக்கு உடனேயே பிடித்துவிட்டது.

வீடு நன்றாக இருந்தது. முதல் மாடி. எல்லா வீட்டுக் கதவுகளும் திறந்திருந்தன – எங்களுக்கு நேர் எதிர் வீட்டைத் தவிர. 

தண்ணீர் பற்றி வழக்கமான கேள்விகள் கேட்டு வெளியே வரும்போது நிமிர்ந்து பார்த்தேன். எதிர் வீட்டுச் சன்னல்கள் எல்லாமே சாத்தியிருந்தன.

“வயசானவங்க. இந்தச் சத்தம் தாங்க முடியலைபோல,” என்றார் வீட்டைக் காண்பித்தவர்.

உண்மையில் வீட்டிற்கு வந்த பிறகும் எதிர் வீடு அடைத்தே இருந்தது. அது மட்டுமல்ல – வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளும் மறைந்துவிட்டனர். பள்ளித் தேர்வு நேரம் என்று எல்லாம் வீட்டிற்குள் அடைந்து கிடந்தன.

ஒவ்வொரு நாளும் சரவணன் ப்ரியாவை வெளியே அழைத்துப் போவான். அவனே இயற்கையில் அதிகம் பேசும் பழக்கம் கொண்டவன் அல்லன். பெண்ணிற்குப் பேச வரவேண்டும் என்று வலிந்து அக்கம் பக்கத்தாரிடம் பேச முயற்சி செய்தான். இந்த முயற்சியில் ப்ரியாவைவிட அவனே அதிகம் கஷ்டப்பட்டதாகத் தோன்றியது.

நான் ஒரு நாள் மாடியில் இருந்து பார்த்தபோது பிளாட்டிற்குக் கீழே இருந்த முற்றத்தில் பிரியாவுடன் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தான். வெளியே யாருமே இல்லை. பரிதாபமாக இருந்தது.

                                                                           *

ஹாலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது வாசலில் ஒரு நிழல் படிந்தது. நான் நிமிர்ந்து பார்த்தேன். தலைவிரி கோலமாக யாரோ ஒரு பாட்டி நின்று கொண்டிருந்தாள்.

நான் திடுக்கிட்டு எழுந்து நின்றேன்.

“யாரு?” என்றேன்.

அந்தப் பாட்டி ஒன்றும் பதில் சொல்லவில்லை. வீட்டைச் சுற்றிப் பார்த்தாள். 

“என்ன வேணும்?” என்றேன், துணிவை வரவழைத்துக்கொண்டு. 

பாட்டிக்குப் பின்னால் எதிர் வீட்டுக் கதவு திறந்திருந்தது. 

“சேஷன் இல்லையா?” என்றாள் பாட்டி. அவள் கண்களில் ஒரு தெளிவு இல்லை.

எதிர் வீட்டில் இருந்து விடுவிடுவென்று ஒரு தாத்தா வெளியே வந்தார். 

“இங்க என்ன பண்ணறை – கதவை ஒரு நிமிஷம் திறக்க முடியாது,” என்றார். பாட்டி, “சேஷன் இருக்கானோ பாத்தேன்,” என்றாள்.

“சேஷன் போய்ச் சேர்ந்து பத்து வருஷமாச்சு. ஆத்துக்கு வா.”

நான் திருதிருவென்று முழித்துக்கொண்டு நிற்பதைப் பார்த்துவிட்டு அந்தத் தாத்தா, “பயப்படாதீங்கோ. கொஞ்சம் மறதி. அலஸைமர் பேஷண்ட்,” என்றார்.

மெதுவாகப் பாட்டியை அழைத்துப்போய் வீட்டிற்குள் விட்டார். நான் வாசலில் நிற்பதைப் பார்த்து, “சாரி,” என்றார்.

“சேஷன் யாரு?” என்றேன். “ரொம்ப க்ளோசா?”

“இவள் அண்ணா. காலமாயிட்டார்.”

உள்ளே போவதற்கு முன்னால் திரும்பி, “ “கவலைப்படாதீங்கோ, அவன் இங்கல்லாம் சுத்திண்டிருக்க மாட்டான்,” என்றுவிட்டுக் கதவைச் சாத்தினார்.

எனக்குச் சிறிது நேரம் பொறுத்துத்தான் ஜோக் அடித்திருக்கிறார் என்று புரிந்தது.

                                                                           *

ராமநாதன் தாத்தாவின் வினோதமான நகைச்சுவை உணர்வு அந்த பிளாட்டில் பலருக்குப் பிடிக்கவில்லை. வீட்டு உரிமையாளர்கள் சங்கத்தில், சும்மா இருக்கிறாரே என்று அவரைத் தலைவராக்கி ஒரு வருடம் படாத பாடு படுத்தி எடுத்துவிட்டார் என்று சொன்னார்கள். 

“பில்டர்கூட சண்டைக்குப் போயிட்டார்,” என்று கீழ் வீட்டில் இருந்த காயத்ரி சொன்னாள். “ஒரு நாள் அவன் ரெண்டு குண்டங்களோட வந்து மிரட்டினான். இந்த ராமநாதன் அவன்கிட்ட போய் மாமிதான் எல்லாம் சொல்லிக் கொடுத்தா. அவள வேணா அடிங்கோன்னு  சொல்லியிருக்கார். அவனே வெறுத்துப்போய் விட்டுட்டுப் போயிட்டான்.”

பாட்டியும் அவரும் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தார்கள். இது எவ்வளவு தூரம் நல்லது என்று எனக்குத் தெரியவில்லை – அவர் ஆரோக்யமாகத்தான் தெரிந்தார். அந்தப் பாட்டியும் தானாக நடக்கும் நிலையில்தான் இருந்தாள்  – நோய் இன்னும் மிக மோசமாகவில்லை. 

ஒரு நாள் நான் உள்ளே இருந்தபோது, ப்ரியா அவர்கள் வீட்டுக் கதவைத் தட்டிவிட்டாள். அந்தத் தாத்தா கதவை திறந்துவிட்டு என்னைக் கூப்பிட்டார்.

“வெளிய வந்துட்டா. இறங்கிப் போயிடப் போறா,” என்றார்.

பிறகு ப்ரியாவைப் பார்த்து, “உன் பேர் என்ன?” என்றார்.

அவள் சும்மா இருந்தாள். 

“வாட் இஸ் யுவர் நேம்?” என்றார். அதற்கும் அவள் எதுவும் சொல்லாமல் இருந்தவுடன், “வெக்கப்படறா,” என்றார்.

“இன்னும் பேச வரல, “ என்றேன் நான்.

“நல்ல வேளை…என்னத்தான் பிடிக்கலையோ பார்த்தேன்,” என்றார். 

எனக்கு அவர் சொன்னது ஒரு மாதிரி இருந்ததால் உள்ளே அவளை அழைத்து வந்து கதவைச் சாத்தினேன். ஆனால் இரவு சரவணனிடம் சொன்னபோது அவன் சிரித்தான். 

“அவளா வெளிய போனா பேசுவாளோ என்னமோ. ஃப்ரீயா விடு,” என்றான்.

மறுநாள் எதிர் வீட்டுக் கதவு திறந்திருந்தது. அந்தப் பாட்டி குளித்து முடித்து உட்கார்ந்திருந்தாள். என்னைப் பார்த்து, “புதுசா குடி வந்திருக்கேளா?” என்றாள்.

“ஆமாம் ஆன்டி.”

“குழந்தை பேர் என்ன?”

“ப்ரியா,” என்றேன் நான்.

“வா, உள்ள வா,” என்று கை நீட்டிப் ப்ரியாவை அழைத்தாள். ஆச்சரியமாக, ப்ரியா உள்ளேபோய் நின்றுகொண்டாள்.

 “ஏன்னா, உள்ள அந்த ஜாங்கிரி இருக்கே, கொண்டாங்கோ,” என்றாள் பாட்டி, உள்ளே பார்த்து.

ப்ரியா அன்று காலை முழுவதும் அவர்கள்  வீட்டில் கழித்தாள். தாத்தாவும் பாட்டியும் வீட்டில் தேன்குழல், முறுக்கு என்று வாங்கி வைத்துக்கொண்டு தின்று தீர்ப்பது தெரிந்தது.

நான் அவர்கள் வீட்டில் சுற்றிப் பார்த்தேன். சில புகைப்படங்கள் சுவரில் மாட்டப்பட்டிருந்தன. ஒன்றில் அவர்கள் ஓர் இளம் பெண்ணுடன் நின்று கொண்டிருந்தார்கள். ஒரு பெரிய குடும்பப் புகைப்படம். 

“சேஷன் இருக்கான் அதுல,” என்றார் ராமநாதன், அந்தப் புகைப்படத்தைக் காட்டி. “அல்சேஷன்னு பேர் வச்சிருக்கணும். அவனை மீறித்தான் எங்க கல்யாணம்.”

பாட்டி சற்று மங்குவது தெரிந்தது. ப்ரியாவைப் பார்த்து, “குழந்தை பேர் என்ன?” என்றாள் மறுபடி.

“கிளம்பிடுங்கோ,” என்றார் தாத்தா. “கொஞ்ச நேரத்துல லங்கிணி ஆயிடுவள்.”

எனக்கு அவர் பேசுவது இன்னும் முழுக்கப் புரியவில்லை. லங்கிணி என்றால் என்ன? கீழ் வீட்டில் கேட்டேன். 

“ராமாயணத்துல அனுமார் தலையில குட்டுவரே, லங்கையோட காவல் தெய்வம்,” என்றாள்  காயத்ரி. 

எனக்கு இன்னும் புரியாததால், “பாட்டி சாமியாடுவாள்னு அர்த்தம்,” என்றாள்.

“பார்த்தா  அவ்ளோ அமைதியா இருக்காங்க?”

“அந்த வியாதி அப்பிடியோ என்னமோ.”

                                                                           *

ஒவ்வொரு நாளும் எதிர் வீட்டுக் கதவு காலையில் திறந்தது. ப்ரியாவுக்கு நங்கநல்லூர் ஜாங்கிரி, மடிப்பாக்கம் அல்வா என்று கிடைத்து வந்தது.

ஒரு நாள் டாக்டரிடம் ப்ரியாவை அழைத்துப் போனோம். அவர் பரிசோதித்தபின் வெளியே வந்து ஐஸ்க்ரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.

“நீதான் பார்க் எங்கயாவது கூட்டிப் போகணும். எனக்கு நைட் வரைக்கும் வேலை இருக்கு,” என்றான் சரவணன். 

“அங்க எல்லாம் பெரிய பசங்களா இருக்காங்க,” என்றேன் நான். 

“அக்கம் பக்கத்துலையாவது ஃபிரெண்ட்  பிடிக்கணும். ஒண்ணுமே பண்ண மாட்டேன்னா அவ எப்பிடிப் பேசுவா?”

நான், “நான்தான் ஏதோ காரணம் மாதிரி சொல்ற?” என்றேன்.

அவன் கோபத்துடன், “வேலைய விட்டுர்றேன். போதுமா?” என்றான்.

திடீரென்று பார்த்தால் ப்ரியா மற்றொரு ஐஸ்க்ரீமுடன் பக்கத்தில் வந்து நின்றுகொண்டிருந்தாள்.

“ப்ரியா, ஒண்ணு போதும்,” என்றேன் நான்.

சரவணன், “இரு,” என்றான். “யாரும்மா ஐஸ்க்ரீம் கொடுத்தாங்க?” 

அவள் கடையின் உள்ளே கைகாட்டி, “மாமா,” என்றாள்.

நாங்கள் அவளை ஆச்சரியத்துடன் பார்த்தோம். 

“திரும்பச் சொல்லு?” என்றான் சரவணன்.

அவள் மறுபடித் தெளிவாக, “மாமா,” என்றாள். 

                                                                           *

சரவணன் லீவ் போட்டு வீட்டிலேயே இரண்டு நாள்கள் இருந்தான். ப்ரியா எங்களுக்குத் தெரியாமல் வேறு பல சொற்கள் கற்று வைத்திருந்தாள் என்று கண்டுபிடித்தோம். அது மட்டுமல்ல – அவளுக்கு மழலைப் பேச்சும் இல்லை. பெரியவர்கள்போல அழுத்தம் திருத்தமாகப் பேசினாள். 

“ஒவ்வொரு நாளும் அவங்க வீட்டுக்குப் போ,” என்றான் சரவணன். “அவளுக்குப் பாட்டி தாத்தா இல்லாத குறையோ என்னமோ.”

அவன்  எப்போது எதிர் வீட்டுக் கதவு திறப்பார்கள் என்று காத்திருந்தான். எனக்கு இது அவ்வளவாகப் பிடிக்கவில்லை. இருந்தாலும் ப்ரியாவை அங்கு அழைத்துப் போனேன். தேர்வு நேரம் முடிந்து அக்கம் பக்கத்துச் சிறுவர்கள் எல்லோரும் வெளியூர் போய் விட்டார்கள். பிளாட் வெறிச்சோடிக் கிடந்தது. எனவே தாத்தா வீட்டையே நம்பி அவளை அனுப்பவேண்டி இருந்தது.

“அவங்களுக்குப் பொண்ணு உண்டோ?” என்று காயத்ரியிடம் ஒரு நாள் கேட்டேன். “வீட்டுல போட்டோ இருக்கு?”

“வெளிநாட்டுல இருக்காங்கபோல,” என்றாள் அவள். “நான் இங்க வந்து பார்த்ததேயில்லை. வெள்ளைக்காரனைக் கல்யாணம் பண்ணிடிச்சோ என்னமோ.”

சரவணன் சகஜமாக அவர்கள் வீட்டிற்குப் போய்வந்தான். வீட்டுக் கூரையில் லீக் ஆவது முதல் பள்ளிகளின் நிலை வரை தாத்தாவிடம் பேசுவான். அவன் அவ்வளவு தூரம் வெளியாட்களிடம் பேசி நான் பார்த்ததே இல்லை.

ஒரு நாள் இரவு எல்லோரும் படுக்கும் நேரம், தாத்தா எங்கள்  கதவைத் தட்டினார்.

“மருந்து ஒண்ணு வேணும். திடீர்னு தீர்ந்து போச்சு – இவளை விட்டு எப்பிடிப் போறது தெரியலை,” என்றார்.

சரவணன் சட்டையை மாட்டிக் கொண்டு கிளம்பினான். நான் ப்ரியாவுடன் எதிர்வீட்டில் நுழைந்தேன்.

தாத்தா உள் அறையில் இருந்தார். 

“என்ன பண்றது நான், சொல்லு?” என்று அவர் சொல்வது கேட்டது. “உன்னையும் கூட்டிண்டு நடு ராத்திரிக்கு மருந்து வாங்கப் போகவா?”

“ஏதுக்கு இவ்வளவு ஆங்காரம்?” என்று பாட்டியின் குரல் கேட்டது. “மருந்து தீர்றதுனு முன்னாடியே தெரியாதா? இனிமே நான் வேணா ஞாபகப்படுத்தறேன்.”

“அது சரி,” என்றார் தாத்தா. பிறகு சிறிது நேரம் பேச்சு இல்லை.

“அந்தப் பொண்ணு தனியா இருக்கப்  போறது. நீங்க அவாத்துல போய் இருங்கோ. இப்பிடியா வெளி மனுஷாளப் படுத்தி எடுப்பா?”

தாத்தா வெளியே வந்தார். என்னை பார்த்துவிட்டு, “இனிமே உங்களைத் தொந்திரவு செய்ய வேண்டாம். இவளே மருந்து எல்லாத்தையும் ஞாபகம் வச்சுப்பா,” என்றார்.

எனக்குச் சிரிப்பு வந்தது. 

                                                                           *

மே மாத வெயிலில் சரவணனின் அக்கா தன் பிள்ளைகளுடன்  வீட்டிற்கு வந்தாள். நான்கைந்து மாதங்களுக்கு முன்னால் இவளுக்குப் பேசத் துணைவேண்டும் என்று அவளை அழைத்திருந்தோம். அக்கா வந்து இறங்கி ஹாயாகச் சோபாவில் உட்கார்ந்து டி.வி பார்த்தாள். அந்தப் பிள்ளைகள் ஆளுக்கொரு போனை வைத்துக்கொண்டு உட்கார்ந்தன.

ப்ரியா காலையில் எழுந்து டக் டக்கென வெளியே போவதைப் பார்த்து, “ஏய், இங்க வாடி. பக்கத்துல வந்து உக்காரு,” என்றாள் அக்கா.

“மாட்டேன்,” என்று ப்ரியா திருத்தமாகச் சொல்லிவிட்டு எதிர் வீட்டிற்குப் போய்விட்டாள்.

அக்கா ஆச்சரியத்துடன், “என்னடி பேசுது? பேபேனு சொல்லிட்டிருந்தா முன்னாடி?” என்றாள்.

எனக்கு கோபம் வந்தது. ஆனால் சரவணன், “இங்க வந்த பிறகு கொஞ்சம் பேசுறாக்கா,” என்றான்.

“சொல்லிருந்தா என் புருஷனை விட்டு வந்திருக்க மாட்டேனே,” என்றாள் அக்கா.

ப்ரியா எதிர் வீட்டிலேயே சாப்பாடு, தூக்கம் எல்லாம் முடித்து மதியம் வந்த நேரம், அக்கா அவளை அழைத்தாள்.

“அத்தை வந்திருக்கேன்ல. அண்ணனுங்க வேற இருக்கானுங்க. இத்தனை நேரம் எங்கடி போயிருந்த?”

“அவா ஆத்துக்கு,” என்றாள் ப்ரியா.

“இங்க எங்கடி இருக்கு ஆறு?”

“எதிர் வீட்டைச் சொல்றாக்கா. அவங்க ப்ராமின்ஸ்,” என்றான் சரவணன்.

அப்போதுதான் நானும் கவனித்தேன். ப்ரியா பேசுவதில் எதிர்வீட்டு பிராமண பாஷை கலந்திருந்தது.

“வீடு சொல்லு,” என்றாள் அக்கா. “ஆத்துக்குலாம்  வேண்டாம்.”

“வீடு,” என்றாள் ப்ரியா.  

“கரெக்ட்.”

அக்கா ஒரு வாரம் இருந்தாள். ஒரு வாரமும் ப்ரியாவின் பேச்சைச் சரி செய்ய முயன்று தோற்றாள். அவள் பிள்ளைகள் சில சமயம் சேர்ந்துகொண்டன.

“கொஞ்ச நாள்ல நோக்கு நேக்குன்னு பேசத் தொடங்கிறப் போறா. ரொம்ப அவங்ககூட பழக விடாதே,” என்று சரவணனிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினாள் அக்கா.

                                                                           *

பள்ளிகள் திறந்து விட்டன. பிளாட்டில் பிள்ளைகள் திரும்பிவந்து முற்றத்தில் விளையாடும். ப்ரியாவை கீழே ஒரு வாரம் அழைத்துப் போனான் சரவணன்.

ஒரு நாள் கோபத்துடன் மேலே வந்தான்.

“நாளைல இருந்து அவங்க வீட்டுக்கு அனுப்பாத.  கீழயும் போய் அப்பிடியே பேசுறா,” என்றான்.

“கீழ பாதி பசங்க அப்பிடித்தான் பேசுது,” என்றேன் நான்.

“அவங்க பேசினா வேற. நாளையில இருந்து அனுப்பாதனு சொன்னா கேளு.”

நான் சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல் விட்டுவிட்டேன். ஆனால் மறு நாள் மாலை வந்தவுடன் அவன் ப்ரியாவைக் கூப்பிட்டான்.

“பாப்பா இன்னைக்கு எங்க போனீங்க?”

“தாத்தாவாத்துக்கு,” என்றாள் ப்ரியா.

அவன் என்னை முறைத்தான்.

“நிறுத்தப் போறியா இல்லையா? அங்க அனுப்பிவிட்டு இங்க உக்கார்ந்து சீரியல் பாக்குறியா?”

எனக்கு அவன் கோபத்தின் தீவிரம் புரியவில்லை.

“ஸ்கூலுக்குப் போனா தானா பேச்சு மாறிடும் விடுங்க,” என்றேன். “பிராமின் பசங்களே  ஸ்கூலுக்குப் போனா நம்மள மாதிரித்தான் பேசுறாங்க.”

அவன் எழுந்து நின்றான்.

“நான் ஒரு நாலு நாளைக்கு வீட்ல இருக்கேன். எப்படிப் போறா பாத்திடறேன்.”

மறுநாள் காலை ப்ரியா கிளம்பியபோது சரவணன் வாசல் கதவைத் தாழிட்டான்.

“பாப்பா இன்னைக்கு இங்கயே இருக்கலாம்.”

“தாத்தா?” என்றாள் அவள்.

“தாத்தா இன்னைக்கு இல்ல. நாம விளையாடலாம் வா.”

அவன் சொன்னதுபோலவே இரண்டு, மூன்று நாள்கள் வீட்டிலேயே இருந்து வெளியே போகாமல் பார்த்துக் கொண்டான்.

எதிர் வீட்டில் இருந்து ராமநாதன் தாத்தா எட்டிப் பார்ப்பது தெரிந்தது. வெளியே சற்று நேரம் வந்து நின்று கொண்டிருந்தார். அவர் பாட்டியுடன் பேசுவது கேட்டது.

“ஆத்துலதான் இருக்கா. ஏதோ வேலையா இருக்கா போலிருக்கு,” என்று உள்ளே பார்த்துச் சொன்னார்.

“நாளைக்கு வருவா. நீ சித்த உள்ள போய்ப் படுத்துக்கோ.”

மூன்றாவது நாள் இரவு வாசல்  மணி அடித்தது. சரவணன் ஹாலில் அமர்ந்து டி.வி பார்த்துக் கொண்டிருந்தான். நான் போய்க் கதவைத் திறந்தேன்.

வாசலில் தாத்தா.

“ப்ரியாவுக்கு உடம்பு ஏதாவது சரியில்லையா?” என்றார்.

“இல்ல அங்கிள். அவர் வீட்ல இருக்காருல்ல. அதான் கூடயே இருக்கா,” என்றேன்.

அவர் புன்னகைத்தார். “சரி, அவரைச்  சீக்கிரமா ஆபீஸ் போகச்  சொல்லுங்கோ. இவள் குழந்தையைத்  தேடிண்டே  இருக்கா. ”

சரவணன் எழுந்து வந்து, “மருந்து எதுனா வாங்கணுமா சார்?” என்றான்.

“அதுக்கு ஆள் கண்டுபிடிச்சிட்டேன். கடையிலேயே ஒரு பையன் கொண்டு வந்து தரேன்னு சொல்லிட்டான். இனிமே உங்ககூட முகம் கொடுத்துப் பேசணும்னு அவசியமில்லை.”

சரவணன் சிரித்தான்.  

                                                                           *

குழந்தைகளுக்கு மறக்க அதிக நாள் எடுப்பதில்லை. ப்ரியாவை அந்த ஒரு வாரத்தில் வேறு பழக்கத்திற்குக் கொண்டுவந்து விட்டோம். காலையில் சமையலைச் சட்டென்று முடித்துவிட்டுப் பார்க் ஒன்றுக்கு அழைத்துப் போவேன். அங்கேயே வெயிலில் சுற்றிவிட்டு மதியத்திற்குத் திரும்பி வந்தால் குளிப்பாட்டுவது, தூக்கம். அருகில் ஒரு சிறு பள்ளியும் பார்த்துவிட்டோம். 

அந்த ஒரு மாதத்தில் ப்ரியாவின் பேச்சும் சற்று மாறியிருந்ததாக எங்களுக்குத் தோன்றியது. 

ஆனால் ஒரு நாள் மாலை, நான் கீழே போய் வரும்போது  ராமநாதன் தாத்தா வாசலில் நின்று கொண்டிருந்தார். கதவு முழுவதும் திறந்திருந்தது.

“ப்ரியா, வரியா? மைசூர்பாக் வந்திருக்கு,” என்றார். 

அவளை நான் நிறுத்தும் முன்னால்  உள்ளே ஓடிப் போய் விட்டாள். வேறு வழியில்லாமல் நானும் வாசலில் நின்று கொண்டேன்.

உள்ளே பாட்டி அவளுக்கு முத்தம் கொடுப்பது தெரிந்தது. நான்கைந்து பொம்மைகள் வாங்கி வைத்திருந்தார்கள். வீடு வெளிச்சமாக இருந்தது. முன்பு இருந்ததைவிடச் சுத்தமாக ஆக்கியிருந்தார்கள்.

தாத்தா என்னிடம் வந்து, “உள்ள வாம்மா. உக்கார்ந்துக்கோ,” என்றார்.

எனக்கோ சரவணனை நினைத்து மனம் நடுங்கியது.

நான்கே நாளில் நடப்பதை அவன் கண்டுபிடித்து விட்டான். என்னிடம் எதுவும் பேசவில்லை. 

ஒரு நாள் மாலை அவன் வீட்டிற்கு முன்பாகவே வந்துவிட்டான். உள்ளே வந்தவுடன், “ப்ரியா எங்க?” என்றான்.

“தாத்தா வீட்ல,” என்றேன்.

அவன் நேராக லேப்டாப் பையோடு எதிர் வீட்டுக்குள் போனான். “வீல்” என்று ப்ரியா அழுவது கேட்டது. அவளுடன் உள்ளே வந்து படீரென்று கதவைச் சாத்தினான்.

ப்ரியா புரண்டு புரண்டு சற்று நேரம் அழுதுவிட்டுத் தூங்கிவிட்டாள்.

இரவு ஒன்பது மணிக்கு கதவு தட்டும் சத்தம் கேட்டது. சரவணன் போய்க் கதவைத் திறந்தான். பிறகு ஒன்றும் பேசாமல் உள்ளேவந்து உட்கார்ந்து கொண்டான்.

ராமநாதன் தாத்தா அவன் பின்னால் வந்து சோபாவில் அமர்ந்தார். டி.வி ஓடிக் கொண்டிருந்தது. 

“ஏதோ கோபம்போல இருக்கு உங்களுக்கு,” என்றார் தாத்தா. 

சரவணன் எதுவும் சொல்லவில்லை.

“குழந்தை வந்து போயிண்டிருந்தா பாட்டி கொஞ்சம் நார்மலா இருக்கா. சாமியாடுறது குறைஞ்சிருக்கு. நான்தான் ஏதோ அசட்டு ஜோக் அடிச்சிட்டதா அவள் என்னைப் பிடிச்சுத் திட்டிண்டிருக்கா. என் ஜோக் பிடிக்கலைன்னா சிரிக்க வேண்டாம்,” என்றார்.

சரவணன் என்னைத் திரும்பிப் பார்த்தான். பிறகு அவரிடம்,

“இந்த மாதிரி மெண்டல் பேஷண்ட் கிட்டல்லாம்  பொண்ணைத் தனியா விடமுடியாது சார்,” என்றான்.

ராமநாதன் தாத்தா திகைத்துப் போனார். மெதுவாக எழுந்து நின்றார். அவர் கைகால்கள் ஆடின.

அவர் வாசலைத் தாண்டும்போது, சரவணனுக்கு ஒரு மாதிரி இருந்திருக்க வேண்டும். எழுந்து நின்றான்.

“உங்க கல்ச்சர் வேற, எங்களுது வேற சார்,” என்றான்.

                                                                           *

ஆறு வருடங்கள் ஆகிவிட்டன. சென்னையைவிட்டு எங்கெங்கோ போய்வந்து கடைசியாகப் பெங்களூரில் இப்படி ராமநாதன் தாத்தாவைப் பார்ப்போம் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

குளத்தில் பல வண்ண  மீன்கள் இருந்தன. அவை துள்ளித் துள்ளி வந்து பொரிகளைத் தின்றன.  நான்  அவற்றையே  பார்த்துக் கொண்டிருந்தேன். 

ராமநாதன் தாத்தா எங்களைப் பார்த்து  விட்டார். சற்று முகம் சுருக்கி கவனித்து, “ப்ரியா அம்மாவா?” என்றார். 

நான் அவளை அழைத்துக்கொண்டு பக்கத்தில் போனேன். 

“எப்பிடி இருக்கீங்க அங்கிள்? ஆன்டி எங்க?”

அவர் மேலே கை காட்டினார்.

“போய்ச் சேர்ந்து மூணு வருஷம் ஆச்சு.”

“பெரிய பொண்ணாயிட்டாளே,” என்றார் ப்ரியாவைப் பார்த்து. 

சரவணன் ஃபோன் பேசி முடித்துப் பின்னால் வந்து கொண்டிருந்தான். சற்றுத் தள்ளி அவரைப்  பார்த்துவிட்டு அவன் நடை மெதுவானது. தாத்தாவை உற்றுப் பார்த்தான். ஒன்றும் பேசாமல் கையை மட்டும் உயர்த்திக் காட்டினான்.

“நாங்க வரோம், அங்கிள்,” என்றேன் நான்.

அவர் தலையாட்டினார்.

“Daddy, where were you all this time? I am bored,” என்றாள் ப்ரியா, சரவணனைப் பார்த்து.

ராமநாதன் தாத்தாவின் கண்கள் ஒரு நொடி மின்னின. என்னைப் பார்த்துச் சிரித்தார்.


                                **************************************************

ஒலி வடிவில் கேட்க / To Listen to the novel in Audio form:

3 Replies to “அடைக்கும் தாழ்”

  1. பிராமணர்களும் பிராமண பேச்சு வழக்கும் நமக்கு அந்நிய ‘கல்ச்ச’ராகி விட்டது. ஆங்கிலம் சொந்த ‘கல்ச்ச’ராகி விட்டது. இதுதான் நம் முற்போக்கு சாதித்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.