விஞ்ஞானத் திரித்தல் – சக்தி சார்ந்தன

This entry is part 10 of 30 in the series விஞ்ஞான திரித்தல்

பாதாள நீரழுத்த நிலமுறிவுப் பிரச்சினை

Hydraulic Fracturing அல்லது Fracking  என்ற சொற்களுக்குத் தமிழில் சரியான சொற்கள் இல்லை. நான் இங்கு முன்வைக்கும் சொற்கள், ‘பாதாள நீரழுத்த நிலமுறிவு.’ இதை, பா. நீ. நி. என்று சொன்னால் ஏதோ இசைக் குறிப்புபோலத் தோன்றலாம். முதலில் ஒரு எச்சரிக்கை. இந்தப் பகுதி கொஞ்சம் தார் மண் விஞ்ஞானத் திரித்தல் பகுதி போலவே இருப்பது தவிர்க்க முடியாதது. இரு முயற்சிகளும், பூமிக்கடியே இருக்கும் இயற்கை வாயு மற்றும் கச்சா எண்ணெயை வெளியே எடுப்பதைக் குறிக்கோளாகக் கொண்டவை. பாதாள நீரழுத்த நிலமுறிவு விஷயத்தில் பெரும்பாலும் இயற்கை வாயுவை வெளியே எடுக்கிறார்கள். இதைத்தவிர, சில நூறு அடிகளுக்குள் பாறைகளின் இடையே சிக்கியிருக்கும் ஷேல் எண்ணை (shale oil) என்பது ஒரு வகை கச்சா எண்ணெய். இதற்கும் ஏராளமான வியாபாரப் பயனுண்டு.

பாறைகளைத் தகர்த்து, நீராவியைப் பாய்ச்சி, இயற்கை வாயுவை வெளியே எடுப்பது அப்படி என்ன பெரிய குற்றம் என்று தோன்றலாம். தமிழ்ப் பத்திரிக்கை முறைப்படி, ”கார்பரேட் ஹைட்ரோகார்பன் சதி” என்று தூய தமிழில் உங்கள் ரத்தக் கொதிப்பை அதிகரிக்கும் வகையில் இந்தப் பிரச்னையை அணுகுவதில் எந்தப் பயனும் இல்லை. முதலில் விஞ்ஞானம் – பிறகு இயற்கை மற்றும் சுற்றுச்சூழல், கடைசியாக மக்களின் வாழ்வாதாரம் என்று படிப்படியாக இந்தப் பிர்ச்சினையை அணுகுவோம்.

பாறைகளை, மிகவும் சூடான அதிக அழுத்த நீராவியால் தகர்ப்பது ஒன்றும் புதிய தொழில்நுட்பம் அன்று. தமிழ்நாட்டில் வேண்டுமானால் இது புதுசு. இந்த முறை முதலில் 1947 –ல் கன்சாஸ் மாநிலத்தில் பின்பற்றப்பட்டது. ஆனால், அதிக வெற்றி கிடைக்கவில்லை. 1949 –ல் ஹாலிபர்டன் என்ற அமெரிக்க நிறுவனம், இந்த முறையை வெற்றிகரமாகப் பயன்படுத்தி உலகிற்கு இது பயனளிக்கும் என்று காட்டியது. அதற்குப்பின், பல்லாண்டு காலமாக இயற்கை வாயுவை வெளியே கொண்டுவரப் பயன்படுத்தும்  இத்தகைய ஒரு தொழில்முறை மேற்குலகில் பயனுக்கு வரத்தொடங்கியது. அமெரிக்காவில் தொடங்கிய இந்தத் தொழில்முறை யுரோப், கனடா என்று எங்கும் பரவியது. 1990 –கள் வரை, இதைப்பற்றி யாரும் பெரிதாகப் பேசவில்லை. 

1980 –கள் வரை இந்தத் தொழிலில் தரைக்குச் செங்குத்தாகத் தோண்டி (vertical drilling) நீராவி மற்றும் சில பல ரசாயனங்களை உயரழுத்தத்தில் பாய்ச்சி இயற்கை வாயுவை வெளியே எடுத்தார்கள். 1980 –களில் கிடைமட்டத் தோண்டல் (horizontal drilling) முறை டெக்ஸாஸ் மாநிலத்தில் அறிமுகமானது. இதனால் இந்தத் தொழிலுக்கு ஏராளமான பயன்கள் கிடைத்தன. அதாவது, ஒரே ஒரு கிணற்றிலிருந்து (வெளித் தோற்றத்திலிருந்து) ஏராளமான இயற்கை வாயு மற்றும் கச்சா எண்ணெய் கிடைக்கத் தொடங்கியது. 2008 –க்குப் பிறகு, இவ்வகைக் கிணறுகளைத் தோண்டுவது தொழில்நுட்ப வளர்ச்சியால் எளிதானது. தேனை எடுத்தவன் புறங்கையை நக்குவதுபோல, இது ஒரு புயலாக மேற்கத்திய எண்ணெய்த் தொழிலில் பரவத் தொடங்கியது. இந்தக் கிடைமட்டத் தோண்டல் பரவத் தொடங்கியபின், பல வித சர்ச்சைகளும் எழுந்தன. இன்று இது ஒரு பூதாகாரமான அரசியல் பிரச்சினையாக மாறிவிட்டது. சமீபத்தில் பிரிட்டன், பாதாள நீரழுத்த நிலமுறிவிற்குத் தடை என்று அறிவித்துள்ளது. அமெரிக்காவில் நியு யார்க் மாநிலமும் இந்தத் தொழிலைத் தடை செய்துள்ளது. தமிழ்நாட்டில் இது ‘ஹைட்ரோகார்பன் பிரச்னை’ என்று தூய தமிழில் பரவலாக அலசப்படுகிறது! இந்தப் பிரச்சினையை அரசியல் ரீதியாக அணுகத் தொடங்கினால், முழுவதும் புரிந்துகொள்வது கடினம். நாம் வழக்கம்போல, பாரபட்சமற்ற விஞ்ஞானத்தோடு  முதலில் ஆரம்பிப்போம்.

Fracking Wells in Western Wyoming

விஞ்ஞானம்

  1. முதல் விஷயம் – இவ்வகைப் பாதாள நீரழுத்த நிலமுறிவுக் கிணறுகள் 6,000 முதல் 10,000 அடிகள்வரை தோண்டப்படுகின்றன. பெரும்பாலும் நிலத்தடி நீர் 500 அடிக்குள் இருக்கும். சரி, 500 அடிக்கும் 6,000 அடிக்கும் நடுவில் என்ன இருக்கிறது? பெரும்பாலும் கடினமான பாறைதான். இந்தத் தொழிலால் பலவகைச் சுற்றுப்புறச் சூழல் பிரச்சினை இருப்பது உண்மையாக இருந்தாலும் நிலத்தடி நீர், பாறைகளைத் தாண்டி  5,500 அடி முதல் 9,500 அடிவரை சென்று ரசாயனங்களுடன் கலக்கும் என்ற பிரச்சாரம் உண்மையன்று.
  2. முதல் படியாக, தகுந்த இடத்தில் ஒரு கிணறு தோண்டப்படுகிறது. இந்தக் கிணற்றுக்குள் உலோகத்தால் உருவாக்கப்பட்ட குழாய் ஒன்று செலுத்தப்படுகிறது. கிணறு பயன்படத் தொடங்கியவுடன், அதன்வழியே அனுப்பப்படும் ரசாயனங்கள் மண்ணுடன் கலக்காமல் இருக்க உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பே உலோகக் குழாய்.
  3. உலகில் உள்ள சமீபத்திய கிணறுகள் செங்குத்தாக ஆரம்பித்து, பின்னர் கிடைமட்டக் கிணறுகளாக மாறியவை. டெக்ஸாஸ் கிணறுகள் சில 1,500 அடி ஆழத்தில் செங்குத்துப் பாதையைவிட்டுக் கிடைமட்டத்துக்கு மாறுகின்றன. வட டெக்கோட்டாவில் உள்ள பாக்கன் கிணறுகள் (Baaken fields) இந்தப் பாதை மாற்றத்தை 10,000 அடிக்குக் கீழ் மேற்கொள்கின்றன. கிடைமட்டத்தில் ஒரு மைல் முதல் இரண்டு மைல் அளவுக்கு இந்தக் கிணறு நீளும். ஷேல் கிண்றுகளில் (பென்சில்வேனியா, வட டெக்கோடா) இதுவே வழக்கம்.
  4. மேலோட்டமாகப் பார்த்தால், இந்தக் கிணறுகள் வெறும் உயரழுத்த நீராவியால் உருவாக்கப்படுகின்றன. சற்று ஆழமாக ஆராய்ந்தால், அது ஓரளவே உண்மை. பாறைகளைத் தகர்க்க உயரழுத்த நீராவி மட்டுமே போதாது. சிலிகா என்ற மணலும் இந்த உயரழுத்த நீராவியுடன் முதலில் பயன்படுத்தப்பட்டது. 
  5. அடுத்த முயற்சியாகப் பாறைகளில் முறிவு ஏற்படுத்துவதற்கு உயரழுத்த  நீராவி மற்றும் சிலிகா கலவையுடன் ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அமிலம், ரசாயன உப்புக்கள், சாராயம் என்று ஏராளமான விஷயங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதை வேறு விதமாகச் சொல்லப்போனால், அமிலம் மற்றும் ரசாயனங்கள் கொண்டு பாறைகளைத் தடாலடியாகக் கரைக்கும் முறை இது.
  6. இந்தத் தொழில்நுட்பத்தில் உள்ள மிகப் பெரிய சிக்கல், பாறைகள் வழிவிட்டபின்பு, இந்த ரசாயனக் கலவை என்னவாகிறது? எவ்வாறு அப்புறப்படுத்தப்படுகிறது என்பதே மிகப் பெரிய சுற்றுப்புறச் சூழல் பிரச்சினை.
  7. எவ்வளவு ஆழம் / தூரம் கிணறு தோண்டப்பட்டுள்ளது என்பது ஒரு முக்கியமான அளவு. இதைக் கண்காணிக்க ரசாயனங்களோடு கதிரியக்க ரசாயனங்களும் (radioactive materials) கிணற்றுக்குள் பாய்ச்சப்படும். கதிரியக்கத்தைக் கொண்டு, இத்தனை அடி தோண்டப்பட்டுள்ளது என்று தெரியவரும். கிணற்றில் பாய்ச்சிய கதிரியக்க ரசாயனங்கள் எப்படிக் கையாளப்படுகின்றன என்பதும் இன்னொரு சுற்றுச்சூழல் கேள்வி.
  8. மற்ற தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களுக்கு வருவோம். தோண்டப்பட்ட கிணற்றைச் சுற்றி சில முறிவுகளை உருவாக்க வெடிமருந்துகளும் பயன்படுத்தப்படும்.
  9. கிணற்றின் முடிவு நிலை (fracking completion) மிகவும் முக்கியமானது. இவ்வாறு தோண்டப்பட்டக் கிணற்றில் ஏராளமான அழுத்தத்துடன் நீராவி, மணல், ரசாயனங்கள் பாய்ச்சப்படுகின்றன. இந்தத் தாக்குதலில் ஷேல் பாறைகள் பிளக்கின்றன. அனுப்பப்படும் மணல், விரிசல்கள் மீண்டும் ஒன்றாக இணையாமல் பார்த்துக் கொள்கின்றன.
  10. விரிசல்களிலிருந்து எண்ணெய் மற்றும் இயற்கை வாயு கிணற்றின் வழியாக வெளிவருகின்றன.
  11. வெளிவரும் இயற்கை வாயு மற்றும் எண்ணெய், ராட்சசக் குழாய்கள் மூலம் சுத்திகரிப்பு மையங்களுக்கு அனுப்பப்படுகின்றன.
  12. கடைசியாக, கிணற்றுக்குள்ளே அனுப்பிய நீர் மற்றும் ரசாயனங்களை வெளியே எடுப்பது. இது, மிகவும் சிக்கலான விஷயம். இதில் கவனிக்க வேண்டிய விஷயம், படிகள் 1 முதல் 10 வரை, பல முறை முயற்சிக்கப்படுகின்றன. ஒவ்வொரு முறையும் ஏராளமான நீர் மற்றும் ரசாயனங்களைக் கிணற்றிலிருந்து வெளியே எடுக்கவேண்டும்.
  13. வெளியே எடுக்கப்பட்ட கழிவு நீர், செயற்கைக் குட்டைகளில் தேக்கி வைக்கப்படுகின்றது. (Tail ponds.) இந்தச் செயற்கைக் குட்டைகள் பற்றி விரிவாக நாம், ‘தார் மண்’ பகுதியில் பார்த்தோம். ஆல்பர்டாவின் பிரச்சினைகள் இதிலும் உண்டு. மிகவும் மாசுபட்ட ரசாயன நீர் இது.
  14. இவ்வாறு, பல முயற்சிகளுக்குப்பின் படிகள் 10, 11 நிகழ்கின்றன. இப்படி வெற்றிபெற்ற கிணறுகள் 20 முதல் 40 வருடங்களுக்கு இயற்கை வாயுவை அளித்த வண்ணம் இருக்கும்.

பொருளாதார வாதங்கள்

  1. பாதாள நீரழுத்த நிலமுறிவு உலகின் இயற்கை வாயு விலையை மலிவாக்கியுள்ளது. குறிப்பாக, அமெரிக்கா மற்றும் கனடாவில் இது முற்றிலும் உண்மை. இந்தத் தொழில்நுட்ப வெற்றிக்குமுன், இயற்கை வாயுவின் விலை ஏராளமாக வேறுபடும். பல இயற்கை வாயு சில்லரை வியாபாரிகள் இதில் லாபம் பார்த்தார்கள். இன்று, இவர்கள் இருந்த இடம் தெரியவில்லை.https://energytransition.org/wp-content/uploads/2019/08/michael-28.8.jpg
  2. பாதாள நீரழுத்த நிலமுறிவுத் தொழில் வட அமெரிக்காவில் சில இடங்களில் (வட டெக்கோடா, பென்சில்வேனியா, டெக்ஸாஸ், ஆல்பர்டா) நிறைய வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.
  3. கரியினால் இயங்கும் பல அனல் மின் நிலையங்கள், இயற்கை வாயுவிற்கு மாறியுள்ளன. இயற்கை வாயு, கரியைவிடக் குறைவாகவே கரியமில வாயுவை உருவாக்குகிறது. இதனால், புவிச் சூடேற்றம் ஓரளவிற்குக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பது ஒரு வாதம்.
  4. சல்லிசாக இயற்கை வாயு கிடைப்பதால், தயாரிப்புத் தொழில் மீண்டும் வட அமெரிக்காவில் மலர்ச்சி பெற்றுள்ளது என்பது இன்னொரு வாதம். இதனால், சைனாவிற்குச் சென்ற உற்பத்தித் தொழில் மீண்டும் வட அமெரிக்காவிற்கு வந்துள்ளது என்பது சிலரின் வாதம்.
  5. அரபு நாடுகளை இயற்கை வாயு மற்றும் கச்சா எண்ணெய்க்காக நம்பியிருந்த அமெரிக்காவின் இறக்குமதிப் பளு ஓரளவு இதனால் குறைந்துள்ளது என்பதும் ஒரு வாதம்.

சுற்றுப்புறச் சூழல்

எல்லாம் சரியாக இருப்பதாகத் தோன்றலாம். இத்தனை நல்ல பொருளாதார நன்மைகளைத் தரும் தொழில்நுட்பத்தில் அப்படி என்ன குறை இருக்க முடியும்? உலகின் கடந்த 100 ஆண்டு காலத் தொழில் வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் எண்ணெய் மற்றும் எரிவாயு என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஒவ்வொரு தொழில்நுட்பத்தின் ஆரம்ப காலங்களிலும் அதனால் விளையும் கெட்ட விளைவுகளை மனித குலம் தவிர்த்தே பார்த்து வந்துள்ளது. இந்தத் தொழில்நுட்பத்திலும் அதையே செய்துள்ளது. 

shale drilling timeline. Photo credit: Claudine Hellmuth/E&E News(graphic); Tim Evanson/Flickr(photo)

  1. பாதாள நீரழுத்த நிலமுறிவுத் தொழிலின் மிகப் பெரிய எதிர்ப்பு, இந்தத் தொழிலில் பயன்படுத்தப்படும் கிணறுகள் நிலத்தடி நீரைக் கெடுத்துவிடும் என்பது. இதற்கான காரணங்களைச் சரியாகப் புரிந்து கொள்ளாமலே இந்த எதிர்ப்பு தொடர்கிறது. முதலில், மிக முக்கியமான விஷயம் நிலத்தடி நீர் 500 அடிக்குள் இருக்கும் என்பதே. இந்தக் கிணறுகள் 1,500 அடி முதல் 10,000 அடி வரை ஆழமானது. அத்துடன் உலோகக் குழாய்கள் மூலமே ரசாயனங்கள் கீழே அனுப்பப்படுவதால் நேரடியாக நிலத்தடி நீருக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.
  2. சரி, மறைமுகமாக நிலத்தடி நீருக்கு என்ன ஆபத்து? முன்னமே தொழில்நுட்பப் பகுதியில் சொன்னதுபோல, செயற்கைக் குளங்களில், கிணற்றில் பயன்படுத்தப்பட்ட ரசாயனக் கழிவு நீர் தேக்கப்படுகிறது. இதிலிருந்து கட்டாயம் நிலத்தடி நீருக்குள் பல வித ரசாயனங்கள் கலக்க வாய்ப்புண்டு. எந்த அளவிற்குக் கழிவு நீர் தேக்கப்படுவதற்குமுன் ரசாயனங்களிலிருந்து விடுவிக்கப்படுகிறது என்பதே மிக முக்கியச் சுற்றுச்சூழல் கேள்வி.
  3. ஒரு பாதாள நீரழுத்த நிலமுறிவுக் கிணறு, சராசரியாகத் தம் வாழ்நாளில் 9.6 மில்லியன் கேலன் தண்ணீரைப் பயன்படுத்தும். அல்லது, 36 மில்லியன் லிட்டர் தண்ணீர். சென்னை நகரில், சராசரி நாளொன்றுக்கு 830 மில்லியன் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. அதாவது, 23 கிணறுகளின் தண்ணீர்த் தேவை ஒரு நாளைய சென்னை அளவு. இதை இன்னொரு விதமாகவும் பார்க்கலாம். நெல் பயிரிட, ஒரு ஏக்கருக்கு நாளொன்றுக்கு 10,000 முதல் 12,000 லிட்டர்கள் தேவை. இதை வேறு விதமாகச் சிந்தித்தால், 3,000 ஏக்கருக்கான நெல்லுக்குத் தேவைப்படும் நீரை இந்தத் தொழில், ஒரு கிணற்றுக்குப் பயன்படுத்துகிறது. இவ்வளவு நீர் கிணற்றுக்குத் தேவையானால், அருகில் உள்ள நதி மற்றும் நிலத்தடி நீரைக் காலி செய்துவிடும். அதுவும் தமிழ்நாடு போன்ற நீர்வளம் குறைந்த பகுதிகளில், இது ஒரு பெரிய பிரச்சினை.
  4. அடுத்த முக்கிய கேள்வி, வெளிவரும் இயற்கை வாயு முழுவதும் குழாய்களுக்குள் அனுப்பப்படுகிறதா? பெரும்பாலும், இது 100% இல்லை என்றுதான் சொல்லவேண்டும். இந்தக் கிணற்றிலிருந்து கொஞ்சம் மீதேன் வாயு காற்று மண்டலத்தில் கலக்கத்தான் செய்கிறது. மீதேன், புவியைச் சூடேற்றும் ஒரு வாயு.
  5. தொல்லெச்சப் பொருட்களிலிருந்து உலகம் விடுதலை பெற்றால்தான் புவிச் சூடேற்றத்தைக் குறைக்கமுடியும். இத்தனை இயற்கை வளங்களைக்கொட்டி, இன்னொரு தொல்லெச்ச வாயுவை வெளியே எடுத்துப் பயன்படுத்துவது எந்த வகையில் நியாயம்?
  6. இந்தத் தொழில் 2,500 ரசாயனங்களைப் பயன்படுத்துவதாக, ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டது.  இதில் 650 ரசாயனங்கள் விஷத் தன்மை கொண்டவை. சில அமெரிக்க மாநிலங்களில் மற்றும் கனடாவில் இவ்வகைக் கிணறுகள் பயன்படுத்தும் ரசாயனப் பட்டியலை வெளியிடவேண்டும். மற்ற மாநிலங்களில் இது தேவை இல்லை. இது வழக்கமான அமெரிக்கச் சிக்கல்.
  7. இந்தத் தொழில் சார்ந்த இன்னொரு வதந்தி, பல சிறிய அளவிலான நில நடுக்கங்களைப் பாதாள நீரழுத்த நிலமுறிவு உருவாக்குகிறது என்பது. தோண்டும் கிணற்றினால் நிலநடுக்கம் வராமல் பார்த்துக் கொள்வது இந்த தொழிலில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு மிக முக்கியம். பல கோடி டாலர் மதிப்புள்ள உபகரணங்களைக் காப்பதற்காகவே புவியியல் வல்லுனர்கள் வேலை செய்கிறார்கள். வேறு எங்கிருந்து நில நடுக்கங்கள் உண்டாகும்? பல நிறுவனங்கள் கழிவு நீரைச் சமாளிப்பதற்கு, எண்ணெய் / வாயுக் கிணற்றுக்கருகில், இன்னொரு கிணற்றைத் தோண்டுகிறார்கள். எண்ணெய்க் கிணற்றுக் கழிவு நீரைப் பூமியில் பல்லாயிரம் அடிகளுக்குள் மீண்டும் பாய்ச்சுகிறார்கள். இந்தக் கழிவு நீர்ப் பாய்ச்சலால் நிலநடுக்கம் உண்டாகும் என்பது பல சுற்றுச்சூழல் குழுக்களின் வாதம். 2011 –ல் ஓக்ளஹோமா மாநிலத்தில் உருவாகிய நிலநடுக்கத்திற்கு இவ்வகைக் கழிவு நீர்க் கிணறு காரணம் என்று அமெரிக்கப் புவியியல் கழகம் சொல்லியுள்ளது.
  8. பல இயற்கைச் சூழல்களில் எண்ணெய் / வாயு கிணறு வெட்டக்கூடாது என்று சட்டங்கள் இருந்தன. உதாரணத்திற்கு, அலாஸ்கா மாநிலத்தில் இந்தச் சட்டங்களை ட்ரம்ப் அரசு ரத்துசெய்து அங்கு இத்தொழில் அதிகரிக்கப் பலவித எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இது தார் மண்ணிலிருந்து எண்ணெய் எடுக்கக் காடுகளை அழிப்பதைப் போன்றது.

ஆக, இத்தொழிலில் பலவித சர்ச்சைகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன.

  • விஞ்ஞானம் ஒருபுறமிருக்கப் பொருளாதாரம் மற்றும் வேலை வாய்ப்புகள் உருவாக்க இவ்வகை முயற்சிகள் தேவை என்பது ஒரு சாராரின் வாதம். 
  • தொல்லெச்ச எரிபொருளிலிருந்து முழுவதும் விடுதலை என்பது இன்னும் தூரத்துக் கனவாகவே இருப்பதால் (ஒரு கோணத்தில், இது எண்ணெய்த் தொழிலின் சதித் திட்டம் என்று சொல்பவர்கள் உண்டு), குறைந்த பட்சம் சர்வாதிகார அரபு நாடுகளிடமிருந்து இறக்குமதியைக் குறைக்க இது ஒரு சிறிய விலை என்பதும் இன்னொரு சாராரின் வாதம். 
  • சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தைக் கெடுத்துப் பல பில்லியன் டாலர்களைக் கொட்டி இந்தத் தொல்லெச்ச எரிபொருளை வெளியே எடுக்கவேண்டுமா என்பது இன்னொரு வாதம்.
  • பொது மக்களின் அன்றாடத் தேவையான தண்ணீரை முதலில் அவர்களுக்கே வழங்க வேண்டும், பிறகே இவ்வகை முயற்சிகளுக்கு வழங்க வேண்டும் என்பதும் இன்னொரு வாதம்.
  • பல லட்சம் மக்கள் வாழும் பகுதிகளில் இவ்வகை முயற்சிகள் (இந்தியா) எதிர்பாராத தீமைகளை விளைவிக்கக்கூடும் என்பது இன்னொரு வாதம்.
  • நச்சு ரசாயனங்கள் இவ்வகைக் கிணற்றருகே வாழும் மக்களுக்கு உடல்நலத் தீங்கு விளைவிக்கலாம் என்பதும் இன்னொரு வாதம்.
  • குழப்பமடைந்த அமெரிக்க மாநில அரசுகள் சில, இவ்வகைக் கிணறுகள் தோண்டுவதைத் தடைசெய்துள்ளன. சில யுரோப்பிய நாடுகளும் செய்துள்ளன. இத்தொழிலின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதைக் கணிப்பது கடினம். 

இவ்வாறு, விஞ்ஞானத்தை ஒவ்வொரு தரப்பினரும் தங்களுக்கு வேண்டிய வழியில் வளைத்து, வாதங்களை முன்வைப்பது வேதனைக்குரியது. அத்துடன் பொருளாதாரத்தை ஒரு காரணமாக்கி இயற்கையை அழிப்பது விஞ்ஞானத் திரித்தல் குழுக்களுக்கே உள்ள தந்திரம். பொது மக்களின் அன்றாட வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் என்பது மிகவும் சிக்கலான விஷயம். இந்த விஷயத்தில், சரியான அணுகுமுறை மிகவும் அவசியம். இல்லையேல், சக்தி மற்றும் வியாபார லாபம் கருதி மட்டுமே இயங்கினால் பன்னாட்டு விண்வெளி மையத்திலிருந்து பார்க்கையில் இந்தப் பூமியே பொத்தலான ஒரு கிரகமாகத் தோன்றும். தமிழ்க் கவிஞர்கள் நிலவில் கறையைப் பார்த்துக் கவிதை எழுதத் தேவை இருக்காது. நாம் வாழ்வதே கறை படிந்த கிரகமாக மாறிவிடும்.

அடுத்த பகுதியில் கச்சா எண்ணெய், கடல் மற்றும் குழாய்களிலிருந்து கொட்டி எப்படித் தீங்கு விளைவிக்கின்றன மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் எப்படி விஞ்ஞானத் தில்லாலங்கடி செய்கின்றன என்று பார்ப்போம்.

(தொடரும்)

Series Navigation<< விஞ்ஞானத் திரித்தல் – தார் மண்ணிலிருந்து பெட்ரோல்விஞ்ஞானத் திரித்தல்கள் – சக்தி சார்ந்தன >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.