சொல்வனம் தன் 12 ஆண்டுக் கால இயக்கத்தில் பல மொழிபெயர்ப்புகளைக் கொடுத்திருக்கிறது. ஒரு பருந்துப் பார்வையில் கவனித்தால், அவற்றில் பெருமளவும் இங்கிலிஷிலிருந்து பெறப்பட்டவையாகவே இருப்பது தெரியும். இந்தியாவைப் போன்ற முன்னாள் காலனிய நாடுகளின் ஒரு பேரவதி என்ன என்றால், அவற்றின் நெடுங்கால காலனியாதிக்கத்தின் சுவடுகள் வரலாற்றில் துவங்கி சமூகத்தின் இறுதிக்கோடு வரை எங்கும் பரவியிருக்கும். நம் பாரம்பரியம், பண்பாடு என்று நாம் நம்புவன எல்லாம்கூட காலனியத்தின் நச்சால் ஊடுருவப்பட்டு, நம் மக்களிடையே ஏராளமான பகைமைகள், மன வேற்றுமைகள், ஒவ்வாமைகளுக்கான வித்துக்கள் ஊன்றப்பட்டிருக்கும். எத்தனைக்கு நாம் யூரோப்பியத்தையும் மேற்கின் பண்பாடுகள், சிந்தனை முறைகளையும் நமக்கு வழிகாட்டிகள் என்று நம்பிக்கொண்டு மெத்தனமாக இருக்கிறோமோ, அத்தனைக்கு நாம் நிரந்தர அடிமைகளாகவே இருப்போம். யூரோப்பியம் மட்டுமா நம்மை அடிமைப்படுத்தியது? அந்தக் கேள்வியையும் நாம் கேட்டுக்கொண்டு அதற்கும் விடை காணவேண்டும்.
இந்தியச் சிந்தனை, இந்தியப் பண்பாட்டுப் பாரம்பரியம், இந்திய வரலாறு, இந்தியரின் நாகரீகத்தின் பாதை ஆகியன காலனியர் ஆட்சி இருந்த காலத்தில் பற்பல சிந்தனையாளர்களால் அகழ்ந்தெடுக்கப்பட பெரும் முயற்சிகள் நடந்திருக்கின்றன. காலனியர் அகன்ற உடனேயே நாம் அசட்டையோடு இருந்து, காலனியத்தின் தொடர்ச்சியையே, நீட்சியையே சுதந்திரம் என்ற பெயரில் நுகர்ந்து வந்திருக்கிறோம்.
நாம், இந்தியரிடையே மறுபடி ஒற்றுமையை வளர்க்க நம்மிடம் உள்ள ஒரு பெரும் சக்திவாய்ந்த கருவி என்று நம் இலக்கியங்களைக் கருதலாம். நம் பண்டைய இலக்கியங்கள் மட்டுமல்ல, நம் வாழ்வு முறைகள், நம் உணவுப் பழக்கங்கள், நம் உறவு முறைகள் என்று நம்மிடையே ஏராளமான ஒற்றுமைக்கான சின்னங்கள் எங்கும் காணக்கிட்டும். நாடெங்கும் பயணிக்க முடியாத பெரும் கூட்டத்துக்கு இந்த ஒற்றுமைச் சின்னங்களை உடனே காணவும் ஸ்பரிசிக்கவும் உணரவும் கொடுக்கவல்லவை இலக்கியங்களும் பண்பாட்டுப் பொருட்களும்தான்.
சொல்வனம் தன் பெயருக்கேற்ற வகையில் இந்திய இலக்கியத்தின் பெரும் வளங்களைத் தமிழுக்குக் கொண்டுவரத் தன்னாலான அணில் முதுகு மண் போன்ற முயற்சியைச் செய்து இன்னொரு சேதுபந்தனத்தை நடத்த முயலலாம் என்று நாங்கள் கருதுகிறோம். அந்தப் பாலத்தின் ஒரு தொடக்க முயற்சியாக இதழ் 240-ஐ, 2021-ஆம் வருடத்தின் ஃபிப்ரவரி மாதத்தின் முதல் இதழை, வங்க இலக்கியச் சிறப்பிதழாகக் கொணரத் திட்டமிட்டிருக்கிறோம்.
இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் பெரும் பங்குவகித்த மக்கள் கூட்டத்தைக் கொண்ட மாநிலம் வங்கம் என்பதோடு அங்கிருந்து அகில இந்தியாவில் புகழ்பெற்ற பேரிலக்கியம் பெருமளவில் படைக்கப்பட்டும் இருக்கிறது. இன்றும் வட இந்தியச் செவ்வியல் இசைக்கு முக்கியமான நகரங்களில் ஒன்றாக கொல்கத்தா உள்ளது. இந்தியாவின் தொழில்மயமாதலுக்குத் துவக்கம் இந்த மாநிலத்தில் ஆரம்பித்தது. இன்னும் பற்பல வளங்கள் அங்கு உண்டு. இந்தியாவுக்கு ஆபத்தைக் கொணர்ந்த பல இயக்கங்களும், நசிவுப் போக்குகளும்கூட அங்கு பிறந்தவை, அதை மறுப்பதற்கில்லை.
ஆனால் நாம் இப்போதைக்கு ஆக்கபூர்வமான விஷயங்களில் கவனம் செலுத்துவோம். ஸ்ரீ அரவிந்தர், ரவீந்திரநாத் தாகுர், சரத் சந்திரர், சத்யஜித் ராய், மிர்ணாள் சென், பாதல் சர்க்கார் என்று என்னென்னவோ துறைகளில் எல்லாம் பெரும் தாரகைகளை இந்தியாவுக்குக் கொடுத்த மாநிலம், பண்பாடு, மக்களைக்கொண்டது வங்கம். மேலும் வரலாற்றாளர்கள், அறிவியலாளர்கள், கணிதத் துறை / புள்ளியியல் துறை வல்லுநர்கள் என்றும் அளித்த மாநிலம் அது.
இந்தச் சிறப்பிதழுக்கு நம் படைப்பாளிகள், கவிஞர்கள், சிந்தனையாளர்கள், இசைக் கலைஞர்கள், திரைப்படங்கள் குறித்துச் சிந்திப்பவர்கள், மேலும் வரலாற்றியலாளர்கள் தம்மால் இயன்ற படைப்புகளைக் கொடுத்து உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
எல்லாப் படைப்புகளும், ஃபெப்ரவரி 10ஆம் தேதிக்குள் எங்களுக்குக் கிட்டவேண்டும். படைப்புகளை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி solvanam.editor@gmail.com

உங்கள் ஆதரவை எதிர்பார்க்கும்
பதிப்புக் குழு
சொல்வனம்.
திரு பதிப்பாசிரியர் அவர்களுக்கு இனிய காலை வணக்கம்
நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். உங்களின் நலம் மிக நாடுகிறேன்
சொல்வனம் 233 ம் இதழ் மிக அழகாக அமைந்திருந்தது
குறிப்பாக என் கவிதைகளுக்கான வடிவமைப்பு மிக நேரத்தியாக அழகிய படங்களுடன் இடதும் வலதுமாக அச்சாகி ஒரு ஓவியம் போல இருந்தது
வடிவமைப்பாளருக்கு என் வாழ்த்துக்கள்
முன்னோடி எழுத்தாளர் திரு நாஞ்சில் நாடன் அவர்களின் தமிழ் இசை கீர்த்தனைகள் குறித்த அவரது நேர்த்தியான கட்டுரை மிகச் சிறப்பு. உடன் இணைந்த இசை கானொளி சுட்டிகளும் மிக இனிது
2020 ம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற கவிஞர் திருமதி லூயிஸ் க்ளிக் அவர்களை பற்றியும் அவர்களின் படைப்புகளை பற்றியும் முழுமையான அறிமுகமும் அவரது 12 கவிதைகளின் மொழி பெயர்ப்பும் மிக மிக பயனுள்ள கட்டுரை
திரு கு. அழகர்சாமி அவர்களுக்கு நன்றி
சொல்வனம் 240 ம் வங்காள சிறப்பு இதழிற்கான அறிவிப்பு தலையங்க கட்டுரை இந்த இதழின் சிகரமாக இருக்கிறது
இந்திய மண்ணின் அறிவுச் செல்வங்களை இலக்கிய புதையல்களை வெளிக்கொணர சொல்வனம் காட்டும் ஆர்வமும் அதன் முயற்சியும் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது. மற்றைய இதழ்களுக்கு முன்னோடி நடவடிக்கை இது
சொல்வனம் பதிப்புக் குழவினருக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும் வணக்கங்களும்
தங்களின் தீராத இலக்கிய பயணத்தில் சக பயணியாக உடன் இணைவதில் பெருமிதமும் உவகையும் கொள்கிறேன்
சொல்வனம் அடுத்த இதழின் பிரசுரத்திற்கென என் புதிய சில கவிதை படைப்புகளை அனுப்புவதில் உளம் நிறைகிறேன்
தாங்கள் தரும் இடையறாத ஊக்கத்திற்கும் பெருங்கனிவிற்கும் என் தீராத நன்றிகள் ஆசிரியரே
தீரா அன்புடன்
வ. அதியமான்
பல வங்க இலக்கியங்களை தமிழில் மொழிப்பெயர்த்த திரு.சு.கிருஷ்ணமூர்த்தி அவர்களைப் பற்றி எழுதி அனுப்பலாமா?
அனுப்பலாம். இதழ் ஃபிப்ரவரி இரண்டாம் ஞாயிறு அன்று வெளியாகும் என்று நினைவூட்டுகிறோம்.
பதிப்புக் குழு