
அதிகபட்ச சமூக இடைவெளி இடைவிடாது பேணப்படும் இடமாகையால், அரசு நூலகங்களைப் பொருத்தவரை நோய்த் தொற்றுக்கால ஊரடங்கேகூட அவசியமில்லாத ஒன்றே. ஊரடங்கு முடிந்து நூலகம் திறந்தவுடனே புத்தகம் மாற்ற ஆவலாகச் சென்றேன். செய்தித்தாள்களுக்கு அனுமதி இல்லை. ஒரு முழு அறையைச் சுத்தம் செய்து நடுவிலே மூன்று நாற்காலிகளைப் போட்டிருந்தார்கள். கையைக் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தபின் அங்கே போய் உட்கார வேண்டுமாம். புத்தகங்களைத் தொட அனுமதியில்லை. நாம் நூல்களைக் கொடுத்துவிட்டு ‘அய்யாவுக்கு நல்ல ஒரு சீட்டெடுத்துப் போடு’ ரீதியில் அவர்கள் எடுத்துத் தருகிற நூல்களை வாங்கி வரவேண்டுமாம். நான் நூல்களைக் கொடுத்துவிட்டு ‘டோக்க’னை வாங்கி வந்துவிட்டேன். இனி போவதில்லை என்று பிரசவ வைராக்கியமாகச் சொல்லிக்கொண்டேன். இதோ இங்கு வந்து புத்தகங்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன். இது வேறு உலகம்.
‘டேய் தயாளா, வீடியோ எடுறா, இவனை அடிக்கற ஒவ்வொரு அடியும் தெளிவாத் தெரியணும்…’ என்று பாதி தயாளனிடமும் பாதி நம்மிடமும் சொல்லிவிட்டு, ‘எனக்காகத் தயாளன் எத்தனை வீடியோ எடுத்திருக்கான் தெரியுமா? சும்மா கண்ணுல ஒத்திக்கிற மாதிரி எடுப்பான்’ என்று தயாளனுக்குப் பாராட்டும் தெரிவித்துக்கொண்டார் அந்தக் குடும்பத் தலைவர். இந்த மாதிரி தொலைக்காட்சிக் குடும்பத் தொடர்கள் பின்னணியில் ஒலிக்க ஒலிக்கத்தான் இங்கு கடந்த ஒரு வருடமாக இங்கு புத்தகங்களை எடுத்துவருகிறேன். கீழே வீடு. மேலே நூலகம். நான்கு அறைகள் கொண்ட பெரிய நூலகம். ஆங்கிலத்திற்கு மட்டும் ஓர் அறை. ‘ஏய், வெளிய போயிட்டு வருவேன். என்ன நடந்துச்சுன்னு பாத்து வைங்க, நான் வந்தோண்ண சொல்லணும்’ என்று அந்தப் பெண்களிடம் செல்லமாகக் கட்டளையிட்டுவிட்டு முகக் கவசத்தை மாட்டிக்கொண்டு வெளியே கிளம்பிவிட்டாள் ‘பேகம்’. ‘ஒளரங்கசீப்’ – அவர் அப்பா வைத்த பெயர்தான் – இல்லாதபோது இவள்தான் பொறுப்பு. இந்த ரெண்டு பெண்களும் இங்குதான் வேலை செய்கிறார்கள். அரசு நூலகர்களாக எல்லாத் தகுதியும் கொண்டவர்கள். அதாவது புத்தகங்களைப் பற்றிய அடிப்படை அறிவுகூடக் கிடையாது. ஒருத்தி பெயர் வேணி. இவள் உடல் மொழியும், சிரிப்பும், பேச்சும் சில சமயங்களில் ஏதோ ஒரு நடிகையை நினைவுபடுத்தும். எப்போதும் சினிமா, தொலைக்காட்சித் தொடர்களைப் பற்றியோ, ‘ரியாலிட்டி ஷோ’க்களைப் பற்றியோதான் பேச்சு. முதலாளியம்மா வெளியே போய்விட்டு வந்தவுடன் கதை சொல்லும் கூடுதல் பொறுப்பு இப்போது. ஜெயகாந்தனை ஜெயமோகனிலும், வண்ணதாசனை வண்ணநிலவனிலும் அடுக்கி வைத்த நேரம்போக, டிவி திரையில் தெரியும் காட்சிகளுக்கேற்ப மெய்ப்பாடுகளைக் காட்டியபடி ‘புக் என்ட்ரி’ போடுவது, முதலாளியம்மாவின் பிள்ளைகளை ‘ஸ்கூட்டி’யில் பள்ளிக்குக் கொண்டுபோய் விடுவது, கூட்டி வருவது, கடைகளுக்குப் போய் வருவது என்று பரபரப்பான ‘ஆல் இன் ஆல்’ அழகு ராணிகள். நான் தேடுகிற புத்தகம் போன வாரம் யாரோ எடுத்துச் சென்றிருந்தார். அது வந்துவிட்டதா என்று கேட்க வேண்டும். பதைபதைத்த முகத்தோடு அவர்கள் எஜமானி கொடுத்துவிட்டுப் போயிருந்த முக்கியமான வேலையில் ஆழ்ந்திருந்தததைக் கண்டவுடன் எதுக்குத் தொந்தரவு செய்யவேண்டும் என்று விட்டுவிட்டேன்.
கடந்த இருபது வருடங்களாக, ஷாஜஹான் – அதாவது தணிகாசலம் – காலத்திலிருந்தே வருகிறேன். அதோ மினுக் மினுக்கென்று அணைந்தணைந்து எரியும் அலங்கார விளக்குகள் பொருத்தப்பட்ட புகைப்படத்திலிருந்து சிரித்த முகத்தோடு தயாளன் வீடியோ எடுப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறாரே அவர்தான் தணிகாசலம். நல்ல மனிதர். வங்கியிலிருந்து ஓய்வு பெற்றவர். எப்போது பார்த்தாலும் ஒரு புத்தகத்தைத் தைத்துக் கொண்டிருப்பார். போன வருடம் இறந்துபோவதற்கு ஒரு வாரத்திற்கு முன்புகூட தைத்துக்கொண்டுதான் இருந்தார். எந்தப் புதுநூல் வந்தாலும் நெகிழி அட்டை வைத்துத் தைத்துத்தான் அடுக்கில் ஏற்றுவார். ‘நான் பேங்குல ஜாயின் பண்ணதே பைண்டராதானே?’ ஆரம்ப காலத்தில் ஆங்கிலத்தில் ஜெஃப்ரி ஆர்ச்சர், சிட்னி ஷெல்டன், டாம் க்ளான்சி, டேனியல் ஸ்டீல் போன்ற ‘டெம்ப்ளேட்’ எழுத்தாளர்களைப் படித்துக் கொண்டிருந்தவன், தமிழில் அபுனைவுகளைப் படிப்பதைப் பார்த்து ‘இங்கிலிஷ்லயும் நான்-பிக்க்ஷன் நல்ல கலெக்சன் இருக்கு’ என்று என்னை, அருண் ஷோரி, அமிதவ் கோஷ், சஷி தரூர் என்று ஆற்றுப்படுத்தியவர். எந்த நல்ல புத்தகமும், ஏன் சுமாரான அல்லது மோசமான புத்தகமும்கூட இவர் கண்ணிலிருந்து தப்பமுடியாது. பெண்ட்அவுஸ், பிளேபாய் சிறப்பு வெளியீடுகளில் இருந்து சாமர்செட் மாம், டி.எச்.லாரன்ஸ், ஹெமிங்வே, ஹெர்மன் ஹெஸ், சார்லஸ் டிக்கன்ஸ்சிலிருந்து அத்தனை அமெரிக்க, ஐரோப்பிய, ரஷ்ய, ஆப்ரிக்க எழுத்தாளர்களையும் வாங்கி அடுக்கியிருப்பார். சிறார்களுக்குக் காமிக்ஸ், எனிட் பிளைட்டனில் இருந்து ஹாரி பாட்டர் வரை என்று தனி வரிசை. சென்ற உலகப் புத்தக நாளன்று கையிலிருந்த நூற்றுக்கணக்கான ‘நேஷனல் ஜியாகரபிக்’ புத்தகங்களைப் பக்கத்திலுள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆளுக்கொன்றாக இலவசமாகக் கொடுத்தார். எந்த ஒரு எழுத்தாளரையாவது சுமார் என்று சொன்னால் அவரோட ‘இந்தப் புத்தகத்தைப் படிங்க’ என்று பெயர் சொல்வார். அது நிச்சயம் நம்மை ஏமாற்றாது. நூலகத்தின் பெயரைக் குறித்துக் கேட்டபோது ‘லா.ச.ரா. புடிக்கும்தான். ஆனா இவர் அவர் இல்ல. லா.ச.ராஜகோபால், எங்க ஜி.எம். இதில வேடிக்கை என்னன்னா, அவரோட பேவரிட் லா.ச.ரா. இவருக்கும் அவரோட ஊர்தான். இங்க இருக்குற புத்தகத்துல முக்காவாசி அவரோடதுதான். இப்ப ரிட்டையர் ஆகி ஊரோட போய்ட்டாரு. போறப்ப ஆன்மீகப் புத்தகங்களை மட்டும் எடுத்துக்கிட்டு மத்த எல்லாத்தையும் குடுத்துட்டுப் போய்ட்டாரு. ஏன்னா, நான் ‘லைப்ரரி’ வைக்கப் போறேன்னு சொல்லியிருந்தேன் அவர்ட்ட. காசு வாங்கிக்க மாட்டேன்னுட்டாரு. திறப்பு விழாவுக்கு கூப்பிட்டுருந்தேன். லைப்ரரி பேரப்பாத்த ஒடனே ‘சர்ப்ரைஸ் ஷாக்’ அவருக்கு. நான் ஆரம்பிச்சிருந்தா என்ன பேர் வெச்சிருப்பேனோ, அதே பேர வெச்சிருக்க? னு ரொம்ப சந்தோஷம் அவருக்கு. இவ்வளவு குடுத்தவருக்கு இதுகூடச் செய்யலேன்னா…, என்ன சொல்றீங்க?’ என்றார். ஒருமுறை தணிகாசலம் தன் பெற்றோர்களுக்குத் திதி கொடுப்பதற்காகக் காசி சென்றபோது, இரண்டு வாரம் நூலகப் பொறுப்பை, படித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருந்த என் கையில் ஒப்படைத்துவிட்டுச் சென்றார். நூலகத்தில் நான் உட்காரும் இடத்தில் இருந்து பக்கத்து பிளாட் வீட்டு படுக்கையறை ‘சீலிங்’ தெரியும். அப்போது தூக்கு மாட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொள்ள இருந்த ஒரு பெண்ணை, சத்தமிட்டு எல்லோரையும் கூட்டி, காப்பாற்றிய அனுபவமும் எனக்குண்டு.
மதுரை மாவட்டத்தின் அழுக்குப் படிந்த, வட்டார நூலகங்களை மட்டுமே பார்த்திருந்த எனக்கு, பிடித்த எழுத்தாளர்களின் செம்பதிப்பான புத்தம் புது நூல்களையும், எழுத்தாளர் வாரியாக நூல்கள் அடுக்கிவைக்கப் பட்டிருக்கும் அழகையும் இந்த நூலகத்தில் பார்த்தபோது ‘சீனிக்குள்ள எறும்பு மாட்டிக்கிட்ட கணக்கு’ என்ற பாடல் வரிதான் ஞாபகத்திற்கு வந்தது. இப்போது ஒரு சொடுக்கில் இணையத்தில் நூல் வாங்குவது போலவெல்லாம் அப்போது இணைய வசதிகள் வந்திருக்கவில்லை. புத்தகச் சந்தையில் வாங்கினால்தான் உண்டு. வாரம் தவறாமல் விடுமுறை நாள்களில் பெரும்பாலும் மாலை நேரம் அங்கே போய்ச்சேரும்போது ‘கடை’க்குள் நுழையும் ஒரு குடிமகனின் ஆனந்தப் பரவச நிலையில்தான் இருப்பேன். வாரம் ஒரு புத்தகம் நிச்சயம் படித்துவிடுவேன். போனவாரம் எடுத்த புத்தகத்தைப் படித்து முடிக்காவிட்டாலும் சும்மாவாவது போய் அடுத்தடுத்து படிக்க வேண்டிய புத்தகங்களைத் தேர்வு செய்து வைப்பது, வரிசை கலைந்த புத்தகங்களைச் சரிசெய்து அடுக்கிவைப்பது என்று ஏதாவது செய்துவிட்டுத் தணிகாசலத்திடம் சிறிது நேரம் பேசிவிட்டு வந்தால் போதும் அந்த வாரம் நிறைவு பெற்றுவிடும். இதிலே இந்த புத்தகம் தேடுவது, படிப்பதற்கு இணையாகவே ஒரு சுகானுபவம். அந்த சுகானுபவம் அரசு நூலகங்களிலேயே அதிகமாகக் கிடைக்கும். புத்தகங்களின் தண்டுவடத்தில் மேல்பாதியில் புத்தகத்தின் பெயர், கீழ்ப்பாதியில் எழுத்தாளரின் பெயர் என்று ஒரே மாதிரி எல்லாப் பிரசுரக்காரர்களும் அச்சிட்டால் தேடுவது எவ்வளவு எளிதாக இருக்கும் என்று அப்போது நினைத்துக் கொள்வேன். எழுத்தாளர் வாரியாக இவர் அடுக்கி வைத்திருப்பதால் அதற்கான தேவை இங்கே குறைவுதான். அப்போதுகூட ஒரு மூன்று ‘ரேக்’குகளில் ஓரிரு நூல்கள் மட்டுமே எழுதிய எழுத்தாளர்கள் நூல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள், சுய முன்னேற்ற நூல்கள் என்று கலந்து கட்டி இருக்கும். நான் அடுத்த வாரம் எடுக்கவேண்டிய நூலை இங்குதான் ஒளித்துவைப்பது வழக்கம்.
அரசு நூலகங்களின் கதை வேறு. அரசு நூலகர்களைப் பொருத்தவரை நூல்களின் விலையை வைத்துத்தான் அதைக் குறிப்புதவி நூல்களில் சேர்ப்பதா, பொதுவாக எல்லோரும் படிக்கும் நிரையில் வைப்பதா? என்று முடிவு செய்வார்கள். ஒரு நூலைக் கொண்டுபோய்க் குறிப்புதவி நூல்களில் சேர்த்துவிட்டால் அந்தப் புனைக்கதை எழுத்தாளனைக் குழி தோண்டிப் புதைத்த மாதிரிதான். அந்த நூல்களை வீட்டுக்கும் கொடுக்க மாட்டார்கள். குறிப்புதவி நூல்களைப் படிக்க எல்லோருக்கும் அனுமதி கிடையாது. ஐநூறு, ஆயிரம் பக்க நாவலை என்று அரை அரை மணிநேரமாகப் படித்துமுடிக்க. அவை அங்கேயே மட்கி அழிய வேண்டியதுதான். ‘சீல்’ செய்யப்பட்ட கண்ணாடி பாட்டிலில் இருக்கும் திருநெல்வேலி அல்வாவைப் பார்ப்பதுபோல எனக்குப் பிடித்த எழுத்தாளர்களின் நூல்களைப் பார்த்துவிட்டு வெறுப்போடு திரும்பியிருக்கிறேன். அசையாமல் தூங்கிக்கொண்டிருக்கும் தன் ஐந்து வயதுப் பேரனைப் பார்த்து ‘புஸ்தகமாத் தூங்கறான்’ என்பார் என் அத்தை. இந்த நூல்களைப் பார்த்தால் அதுதான் நினைவுக்கு வந்தது. நாலு பேர் படித்துக் கிழிபடக் குடுப்பினையில்லாத நூல்கள். இத்தனைக்கும் அந்த நூலின் விலையைப்போல ஐந்து மடங்கு பணம் கொடுக்கிறேன், நூலைக் கொடுக்கும்போது வாங்கிக் கொள்கிறேன் என்று கேட்டுப் பார்த்தேன். மறுத்துவிட்டார் அந்த நேர்மையான அதிகாரி.
நான் புத்தகக் கண்காட்சிகளில் பணம் கொடுத்து வாங்கும் நூல்களைப் பொதுவாகப் படித்து முடித்தவுடன் அரசு நூலகத்திற்கு இலவசமாகக் கொடுத்து விடுவேன். முக்கியக் காரணம் வீட்டில் வைக்க இடமில்லை என்பதே. அப்படிக் கொடுக்கும் நூல்களைக் குறிப்பாக குறிப்புதவி நூல் வரிசையில் வைக்கவேண்டாம் என்று சொல்லித்தான் கொடுப்பேன். இதுபோல இலவசமாகக் கொடுப்பது கிட்டத்தட்ட நமக்கான ஒரு பிரத்தியேக நூலகத்தை அரசு நூலகத்திற்குள் வைத்துக்கொள்வது போலத்தான் என்பது எனக்கு மெதுவாகத்தான் புரிந்தது. இவ்வாறு நான் கொடுத்த ஓ.வி. விஜயனின் ‘கஸாக்கிண்டே இதிகாசம்’, மைத்ரேயி தேவியின் ‘கொல்லப்படுவதில்லை’, பிரமிளின் கவிதை நூல்கள் உட்பட்ட பல நூல்கள் பல வருடங்களாக யாராலும் படிக்கப்படாமலிருப்பதைக் கண்டு மனம் வருந்தி முடிவை மாற்றிக்கொண்டேன். அதாவது நான் ஒன்றுக்கு இரண்டு தடவை படித்து முடித்தபின் தணிகாசலத்திடம் பாதி விலைக்கு விற்றுவிடுவேன். பணம் காரணமில்லை. அங்கு வருகிற தேர்ந்த வாசகர்களின் பார்வை விழாமல் நூல் தப்பாது என்ற நம்பிக்கை. வாசகனுக்காகக் காத்திருக்கும் என் நூல்களைக் காண மனம் பதைக்கும். நூலின் விலையில் பத்து சதவீதம் வாடகை. நூலின் பின்பக்கம் உள்ளே ஒரு வெள்ளைத்தாள் ஒட்டப்பட்டிருக்கும். அதில் நூலைத் திருப்பிக் கொடுக்கும் தேதி முத்திரையிடப் பட்டிருக்கும். ஒரு ஐந்து பேர் படிக்கிற வரை, அதாவது ஐந்து முத்திரைகளைப் பார்க்கிறவரை கொஞ்சம் மனக் கவலையாய்த்தான் இருக்கும். நான் இது பற்றி மெதுவாகக் கேட்டபோது ‘சனி, ஞாயிறு சாயங்காலம் நான் புக் என்ட்ரி போடும்போது பாருங்க, தெரியும்’ என்றார்.
அடுத்த ஞாயிறு மாலை நூலகத்தில் பழைய ஆங்கில நூல் பிரிவில் படித்தது, படிக்காதது என்று பார்த்து வைத்துக் கொண்டிருந்தேன். நல்ல கூட்டமிருந்தது. தணிகாசலம் ‘ரிட்டன் என்ட்ரி’, புதுநூல் விநியோகம் என்று பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார். நான் எடுத்த நூலை அவரிடம் கொடுத்துவிட்டு அவரிடம் ஏற்கெனவே கேட்டிருந்த என் சந்தேகத்தைக் கேட்டேன். எதிரே இரண்டு சதுர ‘பக்கெட்டுகள்’ நிறைய புத்தகங்களைக் காண்பித்து ‘இதெல்லாம் ‘ரிட்டன்’ வந்தது. எல்லாம் முக்கால்வாசி லேடி ரைட்டர்ஸ்தான். இவங்களுக்கு இருக்குற ‘ரீச்’ நீங்க நெனைச்சுக்கூட பாக்க முடியாது. ஜென்ஸ்ல சுஜாதா, பாலகுமாரன் இந்த ரெண்டு பேர்தான் இவங்க அளவு ‘கிரேஸ்’ உள்ளவங்க. இந்த புக்க எடுங்க, பின்னால பாருங்க எத்தனை ‘சீல்’ இருக்குன்னு, ஐம்பதுக்கு மேலயே இருக்கும். அத்தனைபேர் படிச்சிருக்காங்கன்னு இல்ல, அத்தனை முறை புத்தகம் வெளில போயிருக்கு. புத்தகத்தோட வெலையென்ன பாருங்க, வெறும் நூறு ரூபா. எனக்கு ஐம்பது பெர்சன்ட் டிஸ்கவுண்ட் உண்டு. நான் ஒரிஜினல் வெலைலதான் பத்து பெர்சன்ட் ரேட் வெப்பேன். பத்து ரூபா வாடகை. நான் குடுத்துக்கு மேல பத்து மடங்கு சம்பாதிச்சுக் கொடுத்திருக்கு இந்தப் புஸ்தகம். இன்னும் சம்பாதிச்சுக் குடுக்கும். நீங்க என்ன புத்தகம் எடுத்திருக்கீங்க? என்று பார்த்தார். ‘பேச்சு – மறுபேச்சு’ , பிரேம் – ரமேஷ், இங்க வாங்க, பாருங்க! என்று அவர் உட்கார்ந்திருக்கும் கூண்டுக்குள் வரச்சொல்லிக் கணினித் திரையைக் காட்டினார். ‘இந்தப் புத்தகம் நான் வாங்கி அஞ்சு வருஷம் ஆச்சு. நீங்கதான் மொத ஆளா எடுத்திருக்கீங்க? இது என்ன பிரமாதம், யாருமே எடுக்காத புத்தகம் ஒரு நூறு புத்தகமாவது இங்க இருக்கும், தெரியுமா? என்றவர் ‘இதெல்லாம் பிரசுரம் பண்றவன் கதியை நினைச்சுப் பாருங்க?’ என்றார். அந்தப் புத்தகங்களைக் காண்பித்து ‘உங்களை மாதிரி அவங்களுக்கும் எதாவது ஒரு ‘எஸ்கேப் ரூட்’ இருக்கும்?’ என்றேன்.’அப்பிடீங்கறீங்க? நான் அப்பவும் ‘சீரியஸ் லிட்டரேச்சர்’ வாங்கறத நிறுத்தலை. யாராவது வருவாங்க? எப்பவா…வது? எங்க ஜி.எம்.முக்கு நான் குடுக்க வேண்டிய பணத்திலிருந்து செய்யறதா நெனைச்சுக்கிறேன். அதுல ஒரு ஆத்ம திருப்தி எனக்கு. என்ன சொல்றீங்க? ஆனா அப்பிடிச் செய்யத் தெம்பு குடுக்கறதென்னவோ இவங்கதான். சொன்ன நம்பமாட்டீங்க? எனக்கு வர வருமானத்துல எண்பது சதவீதம் இவங்ககிட்டேந்துதான் வருது’ என்று முன்னால் குவிந்து கிடந்த புத்தகங்களைக் காண்பித்தார்.’ பெரும் புத்தகப் பிரியரான பாம்பே சந்துரு மாமாவிடம் சொன்னபோது ‘எல்லாம் அம்பாள் பேரான்னா சொல்ற. மாஞ்சு மாஞ்சு எழுதினாரோன்னோ, இப்ப இவா மொறை. திரும்பச் செய்யறாபோல’ என்றார். மாமாவிற்கு நூலக வரலாறை ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். வயது காரணமாக மறதி அதிகமாகிவிட்டது. நானும் ஏதும் சொல்லவில்லை.
நான் செய்த ஒரு நல்ல காரியம் பிரபல வார இதழ் ஒன்றில் நிருபராக வேலை செய்யும் நண்பனை, இவரைப் பேட்டி எடுக்க வைத்தேன். புத்தகத்தில் போட்டோவோடு பேட்டி வந்ததும், ‘என்ன பெரிய ஹீரோ மாதிரிப் பண்ணிபுட்டீங்க… ஊர்லேர்ந்து சொந்தக்காரங்கள்லாம் ஒர்ரே போனு… ‘ என்று வாயெல்லாம் பல்’செட்’ அவருக்கு. அவருடைய சிறுவயது அனுபவங்களைக் கூறியிருந்தார் பேட்டியில். ‘அப்பாவுக்கு அம்மா தொடர்கதையெல்லாம் வாசிச்சுக் காண்பிப்பாங்க. அன்னைக்கெல்லாம் நான் இருந்த சின்ன ஊர்ல ஒருத்தர் ‘உங்கள் நண்பன்’ ன்னு ஒருத்தரு வீட்டுக்கு வீடு புக்ஸ் கொண்டுவந்து குடுப்பாரு. அவர் எப்ப வருவார்னு தவம் கிடப்பேன். அந்தச் ‘சைக்கிள் பெல்’ சத்தம் கொடுக்கிற பரவசம் இன்னைக்கும் ஞாபகம் இருக்கு. அம்புலிமாமா, பாலமித்ரா, ரத்தினபாலா, முத்து காமிக்ஸ், பொன்னி காமிக்ஸ், ராஜாஜியோட ராமாயணம், வியாசர் விருந்துன்னு அந்தச் சின்ன வயசுக்கான புத்தக உலகம் என்னை மயக்கி உள்ளே இழுத்தது. அந்தந்த வயசுக்கான புத்தகங்களைத் தேடித் தேடிப் படிக்கிறதுக்கான உத்வேகத்தைக் கொடுத்தது அந்த வயசுல அறிமுகமான வாசிப்புதான்.’ எதிர்காலத் திட்டங்கள் பற்றிய கேள்விக்குச் சங்கிலித் தொடர்போல நூலகங்களை ஏற்படுத்தவேண்டும் என்று கூறியிருந்தார். ஆனால் நேர்ப் பேச்சில் ‘பியூச்சர் பிளான்’ என்ன சார்? என்ற போது, ‘நீங்க வேற? அதை நெனைச்சாதான் பயமா இருக்கு.. ஷாஜகானுக்கு ஔரங்கசீப் மாதிரி நமக்கும் ஒத்தன் வாச்சிருக்கான். என்ன நடக்குமோ பாப்போம்..?’ என்று முடித்துக்கொண்டார்.
ஒளரங்கசீப் ‘அலைஸ்’ முருகானந்தம் ‘ஷேர் டிரேடிங்’ கில் தீவிரமாக ஈடுபடுவதால் பொதுவாகப் பகல் நேரங்களில் காணப்படமாட்டார். எல் ஐ சி ஏஜெண்டும்கூட. சாயங்காலம்தான் வருவார். அரிக்கிற இடத்தை சொறிய முடியாத அவஸ்தை உறைந்துவிட்ட முகம். கி.ரா.வின் கடிதங்கள் பெரிய தொகுப்பாக வந்திருக்கிறதா? என்று ஒருமுறை கேட்டபோது ‘அதெல்லாம் யாரு படிக்கிறா? வாங்கி வெச்ச புத்தகமெல்லாம் அப்பிடியே இருக்கு. அதான் வாங்கல’ என்றார். தணிகாசலத்தை நினைத்துக்கொண்டேன். அவரிடம் ஒரு புத்தகத்தை பற்றி விசாரித்தால் அடுத்த வாரம் அங்கே இருக்கும். எல்லாப் புத்தகங்களையும் படித்துவிட்டோம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதெல்லாம் புதிது புதிதாக நூல்களை வாங்கி இன்ப அதிர்ச்சி கொடுப்பார் தணிகாசலம் . அது இறந்த காலம். ம்ம்… பொருந்தாத இடங்களில் பொருந்தாத மனிதர்களை வைத்து அவன் ஆடுகிற ஆட்டம்?
தீவிர இலக்கியத்தைப் பரப்ப தன்னாலான முயற்சிகளைச் செய்தார் தணிகாசலம். பரவலாக எல்லோரும் வாசிக்கும் எழுத்தாளர்களை – வேண்டுமென்றேதான் – நூலகத்தின் கடைசி அறையில் வைத்திருப்பார். அங்கு வருபவர்கள் முன்னறையில் நிரம்பி வழியும் தீவிர இலக்கியப் புத்தகங்களைத் தாண்டித்தான் வரவேண்டும். ‘எத்தன நாளைக்குத்தான் ராஜேஷ்குமாரையே படிப்ப, சுஜாதால்லாம் எப்பப் படிக்கப்போற’ என்றும் ‘இனிமே சுஜாதா எடுத்தன்னு வையி, என்ட்ரி போடமாட்டேன். என்னைக்கி எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன்லாம் படிக்கப்போற?’ என்று எத்தனையோ பேரை எனக்குத் தெரிந்தே ‘மேலே’ கொண்டுவந்திருக்கிறார். குறிப்பாக இந்தப் புத்தகம் என்றில்லாமல் தேடிக்கொண்டிருந்தவன் நூலகத்தின் கடைசி அறைக்கு வந்துவிட்டிருந்தேன். நாலைந்து பேர் நூல்களைத் தேடிக்கொண்டிருந்தனர். அங்குதான் நூலகத்தின் ‘ஸ்டார்’ எழுத்தாளர்களின் நூல்கள் வரிசையாக எட்டு ரேக்குகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு நூலும் குறைந்தது நூறு பேராவது படித்து, இன்னும் நூறு பேர் படிக்கக் காத்திருப்பவை. தணிகாசலத்தால் நெகிழி அட்டை வைத்து அருமையாகத் தைக்கப்பட்ட நூல்கள். அப்போதுதான் கவனித்தேன், நூலின் தண்டுவடத்தின் கீழ்ப்பகுதியில் ஒவ்வொரு எழுத்தாளருக்கும் பிரத்தியேக நிறத்தில் வண்ணக் காகிதத்தை வட்டமாகப் பெரிய ‘ஸ்டிக்கர்’ பொட்டுபோல ஒட்டியிருந்தார். பெண் எழுத்தாளர்களுக்குப் பொட்டு. சரிதான். பொட்டு கலரைப் பார்த்தே பிரித்து அடுக்கி வைத்துவிடலாம். இந்தப் பெண்கள்கூட தப்பாக அடுக்க முடியாது. ஒரு நூலை எடுத்துப் புரட்டிப் பார்த்தேன். அந்தத் தொலைக்காட்சித் தொடரில் ஒலிக்கும் அதே வசனங்கள். அல்லது இவர்களைத்தான் படமாக்குகிறார்களோ என்னவோ. அந்த நூல்களில் இரண்டை எடுத்துக் கொண்டேன். தணிகாசலம் பார்த்திருந்தால், ‘இதென்ன வேண்டாத வேலை.. உங்களுக்கு..’ என்று சிரித்திருப்பார்.
நான் வெளியேறும்போது தொலைக்காட்சித் தொடர் முடிந்துவிட்டிருந்தது. ‘பேக’மாகத்தான் இருக்கவேண்டும். ‘தயாளன் வீடியோவை எடுத்து, ‘பென் ட்ரை’வை மேகாட்ட குடுத்துட்டான்க்கா…’ என்று போனில் பேசிவிட்டு என்னைப் பார்த்துச் சிரித்தாள் வேணி. ‘குடுத்த வேலையைக் கரெக்டா முடிச்சுட்ட.. ம்ம்…’ என்று சிரித்த என்னைப் பார்த்துக் கழுத்தைச் சொடுக்கிக்கொண்டு, ‘நாங்கல்லாம் ஒர்க்குல பெர்பெக்ட்டுல்ல….’ என்று முகவாய்க் கட்டையை கழுத்தோடு அழுத்திக்கொண்டு ஒரு சிரிப்பு. ஞாபகம் வந்துவிட்டது. பழைய நடிகை லட்சுமி மாதிரி இருக்கிறாளோ? ‘அதான்.. பாக்கறேனே’ என்றபடி வெளியே இறங்கினேன். ‘ஜீஜி சாரு கிண்…டல் பண்றாரு, பாருடி..’ என்ற சத்தம் கேட்டது. வெளியே தூறல்போட ஆரம்பித்திருந்தது.
***