
காற்றுக்காக அழகன் வீட்டிற்கு வெளியே வேம்பின் அடியில் நின்றார். வானம் அடைத்துக்கொண்டு புழுங்கியது. ஒரு வாரமாக மனதிற்கு ஊசலாட்டமாக இருக்கிறது. மரத்தில் தேனீக்களின் ரீங்கரிப்புகள் பதட்டம்கொண்டன. பக்கத்து மச்சிலிருந்து மணீஷ் பயல் விட்டெறிந்த குச்சி கீழே விழுந்தது. வேம்பு பூத்து நிறைந்த இந்தக் கோடையில் கட்டிய கூடு.
தான் சேர்த்த அமுதத்தைக் காக்க கொடுக்குகள் நீட்டிச் சுழன்று பறந்து தவிக்கும் அணு அணுவான விஷங்கள் என்று மனதிற்குள் தோன்றியது. சட்டென்று இப்படித்தான் சென்னையின் பேரரவமான சாலைகளில், வேலைசெய்யும் சந்தடிகளில் வார்த்தைகள் காதுகளுக்குள் ஒலித்துச் சங்கடத்தை விளைவிக்கும். தேனீக்களின் ரீங்காரம் நின்றபாடில்லை.
மரத்திலிருந்து தள்ளி கம்பி வேலிப்பக்கம் சென்றார். “வணக்கண்ணே… தேன் கூட்டுக்குத் தீய வைங்க. வூட்டுக்கு முன்னாடி நல்லதில்ல,” என்றபடி கையில் தூக்குவாளியுடன் சைக்கிள் கேரியரிலிருந்து சாமி கையுயர்த்தினான். தலையாட்டிப் புன்னகைத்தார். மஞ்சு ஆரஞ்சுப் புடவையில் இன்றைய புது ஒப்பனையில் வெளியில் வந்தாள். காதலித்த அன்று இருந்த மெலிந்த உடலிற்கு வந்திருக்கிறாள். ஆனால் அவளில்லை.
அர்ச்சனா ஓடிவந்து மஞ்சுவிடமிருந்து ஸ்கூட்டி சாவியை வாங்கி முன்பக்கம் அமர்ந்து சாவியைக் கைகளில் உருட்டினாள்.
“அப்பாகூட இருடீ… வேல எடத்துல நீ என்ன பண்ற…”
“போம்மா… வீட்ல மாசக்கணக்கா போர் அடிக்குது…”
இருவரும் சென்றபின் அங்கு கிடந்த பலகைக் கல்லில் அமர்ந்தார். இத்தனை ஆண்டுகளாக வந்துசென்ற சொந்த ஊரில் இவர்களுக்குத் தெரிந்தவற்றில் கால்வாசிதான் எனக்குத் தெரிகிறது.
சென்னையில் இருக்கும்போது உணராத ஒன்று மனதில் முட்டிக்கொண்டிருக்கிறது. வீட்டிற்குச் சென்று ஒரு மாதம் இருக்கமுடிந்தால் எப்படி இருக்கும்? என்பது எத்தனை எதிர்பார்ப்பாக இருந்தது.
கம்பி வேலியின் வாயிலை இழுத்துவிட்டபின் நூலகத்தை நோக்கி நடந்தார். அது ஊரின் கடைசிக் கோடியில் யாருமறியாத மலைக்காட்டுச் சுனைபோல கிடக்கிறது. ஊரடங்குத் தளர்விற்குப்பின் இதாவது திறந்திருக்கிறது. இந்த வாரத்தில் சென்னைக்கு வருமாறு முதலாளி சொல்லியிருக்கிறார்.
முப்பது வயதில் முதன்முறையாக ஊரைவிட்டுப் பிழைப்பிற்காக திருப்பூருக்குக் கிளம்பிய அதிகாலையில் கைக்குழந்தையாக அச்சு தொட்டிலில் உறங்கிக்கொண்டிருந்தாள். ஊரில் இருக்கக்கூடாது என்பது மட்டுமே அப்போது மனதின் ஒரே எண்ணம். படிப்பை வைத்து பனியன் கம்பெனியில் வேலை கிடைத்தது. மாறி… மாறி… இன்றிருக்கும் வேலை என்ன? என்பதைவிடச் சம்பளம் எவ்வளவு என்பது முன்நிற்கிறது. மீண்டும் கிளம்ப வேண்டும்.
மஞ்சுவும் அர்ச்சனாவும் இந்த ஐந்து மாதங்களில் எனக்கு யாரோபோலத் தெரிகிறார்கள். அவர்களின் அன்றாடத்திற்குள் திடீரென்று நுழைந்து அவர்களுக்கு நானும் யாரோவாகிவிட்டேனா? இந்த ஐந்து மாதங்களில் எத்தனை விதமான புரியவில்லைகள். மஞ்சுவுக்குச் சந்தவம் சாப்பிடப் பிடிக்காமலாகியிருக்கிறது! இவர்களுக்கு நான் விருந்தாளியா?
நேற்று முழுவதும் அச்சு மௌனமாக இருந்தாள். என்ன கேட்டும் விடை கிடைக்கவில்லை. சாயங்காலம் மஞ்சு வந்ததுமே கண்டுகொண்டாள்.
“சக்தி வீட்டுக்குப் போறதுன்னா போயிட்டு வாயேன்.”
அதை என்னிடம் சொல்வதற்கு என்ன? சக்தி வீட்டிற்கு என்றால் நான் எதாவது நினைப்பேன் என்றா! அம்மாவிடமே அனைத்திற்கும் அனுமதி வாங்கும் வழக்கமா?
நேற்று இரவு தோசை வார்த்துக் கொண்டிருந்த மஞ்சுவிடம் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த அச்சு வேகமாக,
“அம்மா. . இங்க வந்து பாரேன், ” என்றாள்.
மஞ்சு, “ஸ்ஸ்… ”என்று வாயில் கைவைத்துக் காட்டுகிறாள். அச்சுவின் சிரிப்பு மாறியது.
“நீயேம்மா எப்பவும்போல ஜாலியாவே இருக்க மாட்டேங்கிற…”
நூலகத்தில் யாருமில்லாத அழுத்தமான அமைதி. உள்ளே நுழைந்ததும் நூலகர் நிமிர்ந்து ஒரு பார்வைக்குப் பிறகு குனிந்துகொண்டார். கையெழுத்திடும் ஏடு உள்ள மேசை, முதன்முதலாகக் கால்சட்டைப் பையனாக வந்த அன்று மிக உயரமாகத் தெரிந்த அதே மேசை.
ராமுசார்தான் காரணம். அவர் அத்தனை அழகாக வெள்ளைச் சட்டையில் கையில் புத்தகத்துடன் தெருவில் நடந்து வருவதைக்கண்டு உண்டான ஈர்ப்பால் அவனும் நூலகத்திற்குள் நுழைந்தான். அங்கே வரிசையாகக் கிடந்த பச்சை நிற இரும்பு நாற்காலிகள் ஒன்றில் அமர்ந்தான். அதை சுற்றிச் சுற்றிப் பார்த்த அழகனைக் கண்ட நூலகர் சாமிநாதன், “படிடா…” என்று முதுகில் தட்டினார்.
அழகன் புத்தக அடுக்குகளுக்குள் நுழைந்து ஒரு சுற்று சுற்றிவந்தார். செய்தித்தாளை திருப்பிவிட்டு வெளியேறி வயல் பாதையில் நடக்கத் தொடங்கினார். சென்னையில் நூலகங்கள் எங்கிருக்கின்றன என்று தேடத் தோன்றாத மனதிற்கு ஊருக்கு வந்த மறுநாளே நூலகம்தான் நினைவிற்கு வரும்.
“அழகு அந்த டேபிளுக்கு என்ன ஆடர்ன்னு கேளு…”
“காப்பில சக்கர வேணாம்ப்பா… ”
பின்னிருந்து எங்கோ தொலைவில் குரல்கள் கேட்டன. பதமான மண்தரை. செருப்பு காலடிகளை வாங்கி அழுந்தி நின்றது. வேட்டியின் வலது ஓரத்தை ஒரு கையால் பற்றிக்கொண்டு தன்னேரி வயல் திருப்பத்தில் திரும்பிப் பார்த்தார். காலடிச் சுவடுகள் தூரம் வரைக்கும் தனித்துப் பாதையில் நீண்டிருந்தன.
சற்றுத் தொலைவில் மாசிக்குன்று எழுந்து நின்றது. நாற்றுப் போட்டிருந்த வயல் காற்று சட்டை வேட்டிக்குள் புகுந்து வெளியேறியது. அங்கங்கே இளம்பச்சை நிறத்தில் அலையடித்துக் கிடந்தன வயல்கள். தொலைவிலிருந்தே செல்வம் புன்னகைப்பது தெரிகிறது. பனியனும் சிவப்பு நிறக் கால்சட்டையும் சேறு அப்பிய உடலும் தலைப் பாகையுடன் நீர் ஊறிச் சேறு குழம்பிய வயலுக்குள் நிற்கிறார். சதைப் பிடிப்பில்லாத சுக்கான உடல்.
“என்னப்பா இம்புட்டு தொலவு நடந்தே…. ”
“வரப்புல எறங்கி குறுக்கப்புடிச்சு வந்தா… இதெல்லாம் தூரமா…”
“பெரிய ஊர்ல கசகசன்னு கிடந்துட்டு… இங்கன கஸ்ட்டமா இருக்கா…”
அழகன் புன்னகைத்து வரப்பில் பக்கவாட்டில் திரும்பி நின்றார்.
“நம்ம வயலா செல்வம்?”
அவர் கொஞ்சம் வெட்கப்பட்டதைப்போலத் திரும்பிச் சிரித்துத் தலையாட்டினார்.
“நாத்து வுட்டாச்சு போலயே…”
“ஆமாமா… மூணு குழி… இத வாங்கறதுக்குள்ள இந்த சென்மம் மாஞ்சு போச்சு…”
“ஒடம்பு நல்லாருக்கா…”
“நல்லாருக்கேன்… முன்ன மாதிரி கூலிக்குப் போகமுடியல… நம்ம வயலோட சரி…”
“கோயில் வரைக்கும் போயிட்டு வர்றேன்…”
“இப்ப மேடு காடெல்லாம் திரியற வயசில்ல… செருப்பு போட்டிருக்கியா… சரி… சரி…. போனமா வந்தமான்னு இரு…”
தலையாட்டி நடந்தார். பச்சை இங்கிருக்கிறது என்ற சொல் மனதினுள் ஓடிக்கொண்டே இருந்தது.
குன்றின்கீழ் எப்போதும் காத்துக்கிடக்கும் கரும்பாறையில் அமர்ந்தார். வழவழ என்று ஆள்கள் அமரும் பாறை. புழுக்கம் கசகசத்தது. நீராவி எழுந்து பரவி நின்றது. எழுந்து மலையாங் காட்டிற்குள் நுழைந்தார். மழைக் காலப் பட்டாம் பூச்சிகள் கருப்பு, மஞ்சள், ஊதா, வெள்ளை, காப்பியின் வண்ணங்களில் எழுந்து பறந்து சுற்றின. பெரிய பெரிய புளிய மரங்கள் செறிந்திருந்தன.
திருமணமான பத்து நாள்களில் இங்கு மஞ்சுவை அழைத்து வந்தார். வீட்டுக் கோபதாபங்கள், சொந்த பந்தங்களின் அலட்சியம், முறைப் பெண்களின் நெற்றிச் சுருக்கங்கள் எனக் காதல் திருமணம் அத்தனை பக்கங்களிலும் இண்டுமுள்ளெனப் பற்றி இழுத்தது. அனைத்தையும் சகித்த ஆசுவாசத்திற்குப் பிறகு, மஞ்சுவுடன் இங்கு இப்படிப் சுதந்திரமாக வரவேண்டும் என்ற நீண்ட நாளைய எதிர்பார்ப்பு நிறைவேறியது.
“என்னப்பா… எப்படி இந்த இடம்…”
“சினிமாவுக்குக் கூட்டிட்டு போவேன்னு பாத்தேன்… கால் வலிக்குது,” என்று அவள் சலித்துக்கொண்டாள்.
ஏதோ ஒரு நடமாட்டச் சந்தடி கேட்டது. பக்கத்திலிருந்த யானைப் பாறை மீது ஏறி நின்றார். ஓசை நெருங்கி வந்ததும் பக்கவாட்டில் நீட்டிக்கொண்டிருந்த புளிய மரத்தின் வழுவான கிளைப் பக்கம் சென்று நின்றார். குன்று மேலேறிய ஒற்றையடிப் பாதையில் இருந்துதான் சலசலப்பு கேட்டது. மீண்டும் பாறையில் அமர்ந்தார்.
“இங்க என்ன பண்றண்ணே…”என்ற அதட்டலான குரலுடன் முத்தய்யா கலாக்காய்ப் புதர்களுக்குப் பின்னிருந்து வந்தான். மறந்தும் பதறியும்கூட எவர் முன்பாகவும் அண்ணன் என்று அழைக்காதவன்.
“வீட்லயே இருக்க ஒரு மாதிரி இருக்கு…”
“அதுக்கு கோயில்ல போய் ஒக்கார வேண்டியதுதானே… இவ்வளவு தூரம் எதுக்கு வர்ற…” என்றபடி வலது கையிலிருந்த காகிதப் பெட்டியை இடது கைகளுக்கு மாற்றினான்.
“மலை ஏறலான்னு வந்தேன்… மூச்சுப்புடிக்குது…”
“வயசாவுதுல்ல… எதுக்கு எங்கியோ போய்க் கிடக்கற. அப்பன் பெரியாளுன்னா அவங்களோட. நம்ம நிம்மதியப் பாரு.… அவுங்க செத்து இருபது வருஷம் ஓடிப்போச்சு. புள்ள பொண்டாட்டியோட இருக்காம என்ன பொழப்பு. அறுப்பு சீசன்ல நம்ம ஊரு சீரக நெல்ல வாங்கி வச்சு வித்தாக்கூட சம்பாதிக்கலாம், ”
“பாக்கலாம்…”
“கண்ணு பாக்க ஆளாச்சும் இருக்கணும்… பாக்கறேன் பாக்கறேன்னு இழுக்காத. அதான் அஞ்சு மாசமா வேலையில்லயே… அப்பிடியே இங்கியே இருந்துட்டா என்ன?”
பருத்த மரத்தைப்போலத் திறமாகக் காலூன்றி இடையில் கைவைத்து நின்றான். தலையில் இருந்த தலைப்பாகைத் துண்டை அவிழ்த்துக் கழுத்தை முகத்தைத் துடைத்துக்கொண்டான்.
கையிலிருந்த செங்காய்களை நீட்டி, “இந்தா… மலைக்காட்டு கொய்யா… ஒடம்ப ஓடம்பாவா வச்சிருக்க… தேஞ்சுபோன சந்தனக் கட்டையாட்டம், ” என்றபடி நகர்ந்தான். அழகன் தன்னையறியாமல் புன்னகைத்துக் கொண்டிருந்தார். கொய்யாவைப் பாறையில் தட்டித் திறந்தார். அப்பாவுக்குப் பிடித்த பழம்.
“எதுக்கு அவனத் தண்ணியடைக்க அனுப்பின…” என்றபடி அப்பா பின்பக்கமிருந்து வீட்டிற்குள் நுழைந்தார்.
“சொந்த வயலுக்குத் தண்ணிவிட்டா என்ன?”
“சேத்துல எறக்கியிருக்க…”
“பின்ன எப்படித் தண்ணி கட்டறது?” என்று அம்மா முகவாயில் கைவைத்துச் சிரித்தாள்.
“அவன் தப்பிப் பெறந்தவன்… படிக்கணும்…”
“இனிமே வயப் பக்கம் பாக்கக்கூடாது,” என்று அம்மாவிடம் சொல்லிவிட்டு அவனைப் பார்த்தபடி சென்றார்.
“சோறு தின்னுட்டுப் போலாமில்ல…”
“கட்சி வேலையா போறேன்… போற எடத்துல பாத்துக்கறேன்…”
தலை நிமிராமல் கம்மஞ் சோறை மோர் வெங்காயத்துடன் கரைத்துக் குடித்தான். பின்புறம் கொட்டகையில், “ஆத்து மணல எண்ணுனாலும் அர்ஜுனரு பொண்டாட்டிய எண்ண முடியாதாம்…” என்று மாடுகளுடன் சின்னம்மா பேசிக்கொண்டிருந்தாள்.
புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் எம்.ஏ. முடித்து பி.எட். படிக்கும்போது, அப்பா யார் வீட்டிலோ மாரடைப்பால் உயிர்விட்டார். கருக்கலின் மெல்லிய இருளில் அரவமின்றி நான்கு ஆள்கள் வயல் பாதையில் தூக்கிக்கொண்டு வந்தார்கள். வீட்டின் நடுமுற்றத்துக் கயிற்றுக் கட்டிலில் போட்டப்பின்தான் அம்மா குரலெடுத்து அழுதாள்.
தன் மார்பில் தலைவைத்துக் கட்டிக்கொண்ட அவள் உடலின் பதறலில்… நடுக்கத்தில் தன் உடல் அதிரும்போதுதான் அழகனுக்கு இந்த வாழ்விற்கு மஞ்சு மட்டும் போதுமென்று தோன்றியது. அப்பாவின் முகம் காண வாய்க்காமல் குமுறும் குரல்கள் மனதில்கேட்டன.
அன்று பாடையைத் தூக்கும்போது வலது தோள் இறங்கியது. முடியாமல் திணறிய நேரத்தில் கூட்டத்திலிருந்து முத்தய்யா தோள் கொடுத்தான். பின்புற முதுகைத் தாங்கி நடந்தான்.
வயது மூப்பு அடிப்படை என்று சில ஆண்டுகள், தேர்வின் அடிப்படையில் வேலை, தனியார் பள்ளிகள் மீதான ஒவ்வாமை என்று ஆசிரிய வேலை தட்டிப் போய்க்கொண்டிருக்க திருப்பூர் , ஈரோடு, கோயம்புத்தூர் , சென்னை என்று நினைத்துப் பார்க்காத எத்தனை வேலைகள். அப்பாவிற்குப்பின் இருந்த கடனிற்கு வயல் போனது. யாருக்கும் தெரியாமல் கொடுத்தனுப்பிய அப்பாவின் அர்ஜுனக் கணக்குகளுக்கு வீடு போனது.
“ரெண்டு பூரி செட்… ஒரு காப்பி…”
“யோவ்… எவ்வளவு நேரம்…”
டம்ளர்… தட்டுகளின் ஓசைகள் காதுகளுக்குள் பலமாகக் கேட்டன.
எழுந்து ஒற்றையடிப் பாதையில் நடந்து இறங்கி பெரியண்ணசாமி களத்தில் நுழைந்தார். யாரோ ஆடு பலியிட்டிருந்தார்கள். குருதி ஊறிக் கறுத்திருந்த மண்ணைப் பார்த்தபடி அந்த மிகச்சிறிய ஆலமரத்திற்கு அடியில் நின்றார். ரத்தம் குடிக்கும் மரம் என்ற எண்ணம் வரவும் தலையைக் குலுக்கிக்கொண்டார்.
“அட… அழகண்ணணா… வாங்க…” என்று பூசாரி தேவன் அழைத்தான். உயரமாக நின்ற பெரியண்ண சாமியின் தோள்களில் கிளி ஒன்று நடந்து கொண்டிருந்தது. பூசைக்காக ஆணும் பெண்ணும் குழந்தைகளுமாகப் பத்து ஆள்கள் நின்றார்கள்.
“தப்பா நெனக்காதீங்க. கோயிலுக்கு மூத்த குடியாளு அவர்… வெளியில நிக்கக்கூடாது…”
ஆள்கள் இடம்விட்டார்கள். கொடுவாள் மீசையும் அதனடியில் மதுரமாய் ஔிர்ந்த புன்னகையும் கருத்த பளபளப்புமாகக் கற்பூர ஒளியில் பெரியண்ணசாமி மின்னினார். திருநீறு கொடுக்கும்போது சட்டைப் பையைத் துளாவினார். நல்ல வேளை நூறு ரூபாய் நோட்டு இருந்தது.
ஆள்கள் கலைந்தப்பின் தேவன் ஒரு பையில் வெற்றிலை பாக்கு தேங்காய் கொடுத்துக் கும்பிட்டான்.
“நீதான் பூச பண்றியா தேவா…”
“ஆமாண்ணே… அய்யாவுக்கு முடியல. இந்த லாக்டவுன்ல வேறென்ன வேல…”
“என்ன பண்ற…”
“இந்த வருசந்தான் பி. எச். டி. முடிச்சேன்… கண்ணனூர் காலேஜ்ல வேல பாக்கறேன்…”
ஆல மரத்தடிக்கு வந்திருந்தார்கள். இடையில் கட்டியிருந்த துண்டால் மின்னும் கருத்த உடலைத் துடைத்துக்கொண்டான். கிளையில் தொங்கவிட்டிருந்த சட்டையை எடுத்து மாட்டினான். அவனைப் பார்த்தபடியிருந்த அழகனின் முகம் மலர்ந்திருந்தது.
“எழுத்தாளராகணுன்னு சொல்லிக்கிட்டே இருப்பீங்களாமே…”
“ஆமாமா…” என்று சிரித்தார்.
“உங்கள நெனச்சுக்கிட்டு மாமா அடிக்கடி சொல்லும்…”
நெற்றியைச் சுருக்கியபடி அவன் முகத்தைப் பார்த்தார்.
“ஜெயபால் மாமா…”
“ஓ…” என்று அவன் தோளில் தட்டினார்.
“அப்ப வரட்டா…” என்று திரும்பினார். சிவந்த புடவையில் வாட்டசாட்டமான அந்த அம்மாள், “அடைசல் போட்டிக்கோம்… சாப்பிட்டுப் போலாம்… எல விரிச்சாச்சு… ரெண்டு பேரும் வாங்க,” என்றாள்.
இலை கழுவப்பட்டுப் பளபளத்தது. ஒரு பிள்ளை ஓடிவந்து தண்ணீர் வைத்தது.
“ந்நா… சீக்கிரம்… உக்காந்திருக்காங்க…”
ஒருவர் பெரிய அன்னக் கரண்டியில் சோற்றை அள்ளுவதைப் பார்த்ததும் அழகன், “பாத்து வைங்க… தாங்காது…” என்றார்.
பின்னால் அந்த அம்மாள் பெரிய அகப்பை நிறைய கறியை அள்ளிவைத்தாள். கொஞ்சம் தள்ளி பக்கத்தில் அமர்ந்துகொண்டாள். தேவன் குனிந்த தலை நிமிரவில்லை.
“எல்லாத்துக்கும் எலைய விரிங்க… தனியா திங்க சங்கட்டமா இருக்குமுல்ல…” என்று கூட்டத்தைக் கலைத்தாள்.
“பொழுது கெடக்கு… மெதுவா தின்னுங்க தம்பி…” என்றபடி வேறு புறம் திரும்பிக்கொண்டு இலையில் ஒரு கண் வைத்துக்கொண்டாள்.
குழம்பு வாளியை வாங்கி அகப்பையை விட்டுத் துளாவி இருவருக்கும் எடுத்து வைத்தாள்.
“போதுங்க்கா…”
“அட… எலும்ப ஒதுக்குங்க. மெதுவானதா திங்கற ஆளுன்னு வைக்கறப்ப தெரியல…” என்று அழகனைப் பார்த்துச் சொன்னாள். மீண்டும் வாளியைத் துளாவினாள்.
“ஒரப்பு கூடுதலோ… தண்ணி கொஞ்சமா குடுச்சிக்கிங்க…. ” என்று சிரித்தாள். அவர் குனிந்தபோது அலைபேசி அழைத்தது.
அந்தம்மாள், “ இங்க குடுங்க. பசியாறிட்டுப் பேசலாம். இந்த எழவு எதையும் ருசிக்க விடுதில்ல…” என்று அலைபேசியை உரிமையாக வாங்கி வைத்துக்கொண்டாள். ஆள்கள் எந்தப் பேச்சும் இன்றி உண்ணும் ஓசை மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது.
களத்தில் பத்து புளியமரங்களுக்குமேல் நின்று நிழல் கூட்டியிருந்தன. சுற்றி வயல்காட்டின் சத்தமின்மையில் ஐயாற்றின் கர்ஜனை மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது.
இரு சக்கர வண்டி ஒன்றின் வருகை அவர்கள் கவனத்தையும் திருப்பியது. சுடிதார் பெண்ணை இறக்கிவிட்டு வண்டி திரும்பியது. அவள் ஆல மரத்தடிக்கு முன்னால் கோயில் முகப்பில் நின்றாள்.
தேவன் சத்தமாக, “சமூ… உள்ள போய் நில்லு வாறேன்…” என்றான்.
சாமிக்குத் தீபம் காட்டித் தீருநீற்றுத் தட்டுடன் வந்தான். அவள் குவித்த கைகளுடன் முதுகைச் சற்றுக் குனித்து நின்றாள். திருநீறை எடுத்து அவள் நெற்றியில் இட்டபின், “ய்யா… இந்த பிள்ளைக்கு நாலு பேரு மாதிரி நம்மளும் நல்லா பொழக்கணுங்கற எண்ணத்தக் குடு…” என்றபோது அவன் குரல் இளகியது. சமுத்ரா புன்னகைத்தாள்.
தேவனும் சமுத்ராவும் களத்தில் வந்து நின்றபோது அழகன் சிரித்தபடி வந்தார்.
“அந்த அக்கா உன்ன சாப்பிட வரச் சொன்னுச்சு…”
“பழக்கமில்லங்கய்யா…”
“அய்யாவா….?!”
“அப்ப பி. எட். படிச்சிட்டிருந்தேன் தேவா… வீட்டுக்கு வந்த சமுத்ரா, “ய்யா, ” புத்தகம் வேணும்ன்னு சொன்னுச்சு. அய்யாவா! மாமான்னு கூப்பிடுனேன். எங்கம்மா… மொதமொதலா சின்னப்பிள்ள தகப்பனா நெனச்சிருச்சு. வெளஞ்ச காடு… நெறஞ்ச கெணறாட்டம்ன்னுச்சு…”
“இன்னுமும் இப்படித்தாண்ணே. . கிறுக்குத்தனமா யார எப்படி கூப்பிடறதுன்னு ஒரு மண்ணும் தெரியாது…” என்று புருவங்களை ஆட்டிச் சிரித்தான்.
“ய்யா… இவன் லேடிஸ் காலேஜ்ஜிக்கு செமினார்ன்னு ஒருதரம் போனான்…”
“விடேன்… ப்ளீஸ்… வயல் வரைக்கும் போயிட்டு வர்றேண்ணா. இந்நேரம் வூட்டுக்காரி கோயிலுக்குப் போனமா, பூசய முடிச்சமா, தின்னமா, வந்தமான்னு இல்லாமையா இருக்கும் ஒரு பொழக்கிற ஆம்பள. படிச்ச மாப்பிள்ளன்னு தலையில கட்டிடாங்க… என்னத்துக்குப் புண்ணியம்ன்னு வாயிலபோட்டு மென்னு துப்புவா…” என்று அவசரமாகக் கிளம்பினான். எதுவும் பேசாமல் அவர் சிரித்துக்கொண்டிருந்தார்.
“எங்கடா இன்னும் தம்பியக் காணும்?”
“ஆத்துல தண்ணி பாக்க வந்தோம்… வயலுக்குப் போயிருக்கான்…”
“நானும் பாக்கணும்…”
“வாங்க போலாம்…” என்று நடந்தாள். மலையாங்காட்டின் ஓரத்து ஒற்றையடிப் பாதை. பத்து நிமிட நடையில் நீண்ட பாறைகளை ஏறி இறங்கினார்கள். பெரிய புளியமரத்திற்குக் கீழே குயின்ஸ்பெரி சாமியார்களின் சிவலிங்கத்தை அடுத்து ஐயாறு தெரிந்தது. சத்தம் காதைத் துளைத்தது.
மேட்டுக் கல்லில் அமர்ந்தார்கள். இரண்டு குன்றுகளுக்கிடையே புகுந்து கட்டறுத்த கன்றென செந்நிறத்தில் பாய்ந்து ஓடியது ஐயாறு.
“என்னா பாய்ச்சல்…”
“ஆமாய்யா… வேகத்தப் பாருங்க… என்னதுக்காக இத்தன ஆவேசம்…”
“இதென்ன புதுசா… தண்ணின்னா பாயதான் செய்யும்…”
அவள் உதட்டை பிதுக்கிக்கொண்டாள். ஐயாற்றின் ஈரம் கண்களில் படர்ந்தது.
கால்களை நீட்டிக் கையை விரித்து மூச்சை இழுத்துவிட்டார். அவர்கள் முன்னால் ஆறு வேகமகச் சுழிப்புகளும் எம்புதல்களுமாகத் துமிகள் தெறிக்கப் பசுமரக் கிளைகளைக் காய்ந்த கட்டைகளை அடித்துக்கொண்டு நொடியும் நிற்காமல் பாய்ந்துகொண்டிருந்தது.
இந்த நாள் முழுவதும் தன் முகம் மலர்ந்திருந்தை உணர்ந்த அழகன் விசுக்கென்று எழுந்து பாறையிலிருந்து கீழே குதித்தார். மலையேறிவிட முடியும் என்று தோன்றியது. அவள் கண்கள் விரியப் பார்த்தாள். அவர் திரும்பி குயின்ஸ்பெரிகளின் தளத்தைப் பார்த்தார். காற்றில், மழையில், வெயிலில், பனியில் கிடக்கும் சிவன்.
“எங்கியோ வெளிநாட்டுல பிறந்த குஞ்சுபொறி சாமிகளுக்கு இந்த கொல்லிமலை அடிவாரத்துல வந்து சிவத்தைத் தேடணுன்னு இருந்திருக்கு…”
“இத ஒரு வரியில பெரியாளுங்க சொல்லியிருக்காங்க…”
“…?!”
“மழ பெய்யறதையும் பிள்ளப் பேறையும் மகாதேவனே அறியமாட்டானாம். மனசு எங்க தெறக்குன்னு யாருக்குத் தெரியும்?”
அவள் அவரைப் பார்த்தாள். அன்று முற்றத்தில் கையில் புத்தகத்துடன் அமர்ந்திருந்த அய்யாவேதான். இங்க அலையறதா சொல்ற சித்தர் யாராவது இவர்மீது ஏறிட்டாங்களா என்று தோன்றியது. வானம் தெளிந்து வெயில் பரவிக்கொண்டிருந்தது.
ரீங்கரிப்பு ரீங்காரம் அருமையாக இருந்தது
கமலதேவி எழுதிய ரீங்கரிப்பு இன்னும் கொஞ்சம் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்க வேண்டும். தேனீக்களின் ரீங்கரிப்பு அழகரின் காதில் இன்னும் ஒலித்துக் கொண்டே இருப்பது போல அவர் மனத்தில் கிராமத்தின் பழைய எண்ணங்கள் ரீங்கரித்துக் கொண்டே இருந்திருக்க வேண்ண்டும். நூலகங்களை நான் சென்னை சென்று தங்கியபோது தேடி அலைந்து இருக்கிறேன். ஆனால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. யாருக்குமே தெரியவில்லை. இக்கதையிலும் நூலகம் யாரும் அறியாத மலைக் காட்டு சுனை போல இருப்பது நல்ல உவமை. அதேபோல தேஞ்சு போன சந்தனக்கட்டை நல்ல உவமை. பி.எச்.டி முடித்த அவன் கோயிலில் பூசாரியாய் வேலைபார்க்கும் அவலத்தையும் கதை பதிவு செய்திருக்கிறது. புது உத்தியாய் நினைவுகளை மாற்றி மாற்றிச் சொன்னாலும் சில இடங்களிலில் வாசகனுக்குப் புரிந்து கொள்வதில் சிரமம் ஏற்படத்தான் செய்கிறது.
நன்றிங்கய்யா.முனைவர் பூசாரியாக இருப்பது என்பது நேர்மறையாகச் சாெல்லப்பட்டது.கல்லூரி ஆசிரியராக இருந்தாலும் தன் தந்தைக்கு உதவுவதற்காக அவர் வேலையை எந்தவித மனத்தடையும் இன்றிச் செய்பவராக இருக்கிறார்.தன் ஆளுமையைப் பகுத்துக்காெள்ளும் முதிர்ச்சிகாெண்ட இளைஞர்.